கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

கோவை ‘விடியல் பதிப்பகம்’ வெளியிட்டுள்ள ‘இந்துத்துவத்துக்கு எதிரான 5 நூல்’ தொகுப்பில் இடம் பெற்றுள்ள தந்தை பெரியாரின் ‘பெண் ஏன் அடிமையானாள்?’ நூலுக்கு க.வி. இலக்கியா எழுதிய நீண்ட முன்னுரையின் - ஒரு பகுதி.

periyar feminism“மனிதன் ஏன் பிறந்தானோ, ஏன் சாகிறானோ என்பது வேறு விஷயம். அது புறமிருந்தாலும் மனிதன் இருக்கும்வரை அனுபவிக்க வேண்டியது இன்பமும் திருப்தியுமாகும்.”

இது பெரியாரின் வார்த்தைகள். ‘கல்யாண விடுதலை’ என்ற கட்டுரையின் இறுதி பத்தி களில் இருந்து எடுத்துள்ளேன். பெரியார் என்றாலே பலருக்கும் நினைவிற்கு வரும் வார்த்தையாக இருப்பது ‘வெங்காயம்’ என்பதுதான். ஆனால், எனக்கு நினைவிற்கு வருவது ‘இன்பமும் திருப்தியும்’ என்ற வாக்கியமே. இரண்டு வார்த்தைகளை உடைய இந்த அழகான வாக்கியம், “பெண் ஏன் அடிமையானாள்?” புத்தகத்தில் மட்டும் பல இடங்களில் இடம் பெற்றுள்ளது. மக்கள் அனைவரும் சுயமரியாதையுடனும், பகுத்தறிவுடனும் சுதந்திரமாக வாழ வேண்டும் என்று மட்டும் பெரியார் நிற்கவில்லை. அப்படிப்பட்ட வாழ்க்கையில் இன்பமும் திருப்தியும் இருக்க வேண்டும் என்றார். “கல்யாண விடுதலை” கட்டுரையில் மேற்கண்ட வாக்கியத்தின் மூலம் பெரியார் கூறியது, “திருமணம் என்பதே ஆணும் பெண்ணும் இன்பத்துடனும் திருப்தியுடனும் வாழவேண்டும் என்பதில்தான் இருக்கிறது. இவை இரண்டும் இல்லையெனில் திருமண வாழ்விலிருந்து வெளியேறுவதற்கான உரிமையைத் தான் கல்யாண விடுதலையின் மூலம் கோரியிருந்தார்”. ‘காதல்’ என்ற தலைப்பின் கீழ் பெரியார், “அன்பும், ஆசையும், நட்பும் மற்றும் எதுவானாலும் மன இன்பத்திற்கும் திருப்திக்குமேயொழிய, மனதிற்குத் திருப்தியும் இன்பமும் இல்லாமல் அன்பும், ஆசையும், நட்பும் இருப்பதாகக் காட்டுவதற்காக அல்ல” என்று உறவின் எதார்த்தத்தை விளக்கியிருந்தார்.

சமூகத்தில் உள்ள அனைவரும் இன்பத்துடனும் திருப்தியுடனும் தங்கள் வாழ்க்கையை வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டவர் பெரியார். அதைச் சுற்றியே அவருடைய பகுத்தறிவுக் கொள்கையும், சுயமரியாதையும் அதை ஒட்டிய சமதர்மமும், சாதி ஒழிப்பு, பெண்ணடிமைத்தன ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு என மனிதர்களை சுதந்திரத்தையும், மகிழ்ச்சியையும் அனுபவிக்க முடியாமல் செய்த அனைத்து சமூகக் கூறுகளுக்கு எதிராகவும் குரல் கொடுக்கச் செய்தது. எனவே பகுத்தறிவுவாதியையும் தாண்டி, பெரியாரை நான் மிகுந்த மனிதநேயமிக்கவராகவே பார்க்கிறேன்.

இன்றைய மக்கள், இன்பத்துடனும் திருப்தியுடனும் உண்மையாகவே வாழ்கின்றனரா என்று கேட்டால் பதில் கூற முடியாது. பெரியார் காலத்தில் இருந்த ‘இன்பமும் திருப்தியும்’ கூட இன்று இல்லை. முதலாளிய சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பின் சுரண்டலில் மக்கள் தங்கள் வாழ்க்கையை முழுவதுமாக இழந்து வருகின்றனர். இந்தக் கட்டமைப்பு சமூக உருக்குலைவையும் நிகழ்த்தி, வாழ்க்கை நெருக்கடிகளையும் மன நெருக்கடிகளையும் கொடுத்து மனிதர்களை உருக்குலைத்து வருகிறது. பொருள் வேட்கைக்கும் நுகர்வியத்திற்கும் பிழைப்பிற்கும் தங்களுக்கு இணையான வேகத்தில் ஓட்டிக் கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு போலியான பேரின்பத்தையே முதலாளியம் வழங்கிக் கொண்டிருக்கிறது. நோய்களும், இயற்கைச் சீரழிவுகளும் மனிதனை தள்ளாட வைக்கிறது. நம் குழந்தைகளுக்கு விஷத்தையே தாய்ப்பாலாகக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம் என்று தெரியாமலேயே பெற்றோர்கள் தாய்மையையும், மக்கட் பேறுவையும் பேரின்பமாகக் கருதிக் கொண்டு போலியான இன்பத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

மேற்சொன்ன, நான்கு கூறுகளிலிருந்தும் நாம் புரிந்து கொள்ள வேண்டியது இதுதான்: பெண்கள் உரிமைகளைப் பெற்று விடுதலை அடைந்துள்ளார்கள். ஆனால், பெரியார் கண்ட பெண் விடுதலை இன்னும் நடக்கவில்லை. “பெண் ஏன் அடிமையானாள்?” - புத்தகத்தை மேலோட்டமாகப் படித்தால் இன்றைய பெண் சமூகத்திற்கு இதுப் பொருந்தாது என்றே தோன்றும். நான்கு கூறுகளின் வழி ஆழமாகப் படித்தால் பெரியாரின் பெண் விடுதலை இன்றும் நிறைவேறவில்லை என்பது விளங்கும். பெரியார் தொலைநோக்குடைய நவீனத்துவவாதி. அவர் ஆசைப்பட்ட சமூக விடுதலை இன்று நடைபெறாவிட்டாலும் வரும் காலங்களில் பெரியார் நமக்குத் தேவைப்படுவார். ஏனெனில், தலைவராக கொள்கையோடு மட்டும் நிற்காமல், அந்தக் கொள்கையை சமூக இயக்கமாக மாற்றி வெவ்வேறு தளங்களில் வெற்றி கண்டவர் பெரியார். மனிதாபிமானத்துடன் பரிதாபப்படுவதோடு மட்டும் நின்று விடாமல், அந்த மனிதாபி மானத்தை தன் மனசாட்சிக்கு விரோதமில்லாமல், நேர்மையுடன், எந்த சமரசமும் இன்றி, தைரியமாக, மக்களின் மொழியில், மிகவும் அறிவடக்கத்துடன், நடைமுறைப்படுத்தியிருப்பவர் பெரியார் என்ற மாமனிதர்.

இந்த மாமனிதரின் கருத்துகளுக்கும் கொள்கை களுக்கும் என்னை நெருக்கமாக அழைத்துச் சென்ற வாழ்க்கை அனுபவத்தை இவ்விடத்தில் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நான் படித்தது ஒரு கிறித்துவத் தொண்டு நிறுவனம் நடத்திய பெண்களுக்கான பள்ளியில் தான். இந்தப் பள்ளியில், இந்தியாவின் பின் தங்கிய மாநிலங்களி லிருந்து ஆதரவற்ற அல்லது வறுமையும் வாய்ப்பற்றச் சூழலும் நிலவிய, குடும்பங்களிலிருந்து அழைத்து வரப்பட்ட பெண் குழந்தைகளும் பெண்களும் இலவசமாகத் தங்கி கல்வி பயின்றனர். இவர்கள் பள்ளிக் கல்வியையோ கல்லூரிக் கல்வியையோ முடித்துவிட்டு வெளியே சென்று தங்கள் வாழ்க்கையை தொடரலாம். நான் பன்னிரெண்டாம் வகுப்பு முடிக்கும் பொழுது, பல மாநிலங்களிலிருந்தும் வந்திருந்த என்னுடைய தோழிகள் கல்லூரிப் படிப்பிற்கு வெளியே செல்வதென்று முடிவெடுத்தார்கள். இதற்காக, வெளியே இருக்கும் தங்களின் உறவுகளுடன் தொடர்பை ஏற்படுத்தி, அவர்களே வந்து அழைத்துச் செல்லும்படியாக ஏற்பாடுகளைச் செய்தனர். ஏனெனில் இவர்களுள் பலர் 12 வருடங்களுக்கு மேலாக இந்தப் பள்ளியிலேயே படித்திருந்தனர்.

என் தோழிகளில் ஒருத்தி ஒடிசா மாநிலத்தில் இருந்து ஐந்து வயதிலேயே அழைத்து வரப்பட்டிருந்தாள். கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு மேலாக தன் குடும்பத்தாருடன் எந்தத் தொடர்பும் இல்லாமல் தான் இருந்திருக்கிறாள். வெளியே செல்ல வேண்டும் என்பதற்காக எப்படியோ தொடர்பை ஏற்படுத்தினாள். அவளைக் கூட்டிச் செல்ல தந்தையும் வந்திருந்தார். மிகவும் பின்தங்கிய பகுதியில் இருந்து வந்திருக்கிறார் என்று பார்த்தவுடனேயே கூறிவிடலாம். என் தோழி தாய்மொழியையே மறந்து போயிருந்தாள். ஆங்கிலம் மட்டுமே அவளுக்கு நன்றாகத் தெரிந்த ஒரே மொழி. தந்தைக்கோ தாய்மொழியைத் தவிர வேறு எதுவும் தெரியாது. ஹிந்தியை ஓரளவு புரிந்து கொள்வார் என்பதால் இருவரும் பேசிக் கொள்ள ஆங்கிலத்தையும், தந்தையின் தாய்மொழியையும் சற்று அறிந்திருந்த என் இன்னொரு தோழியின் உதவி தேவைப்பட்டது. இப்படி தந்தையும் மகளும் பேசிக் கொண்டது மிகவும் அரிதான காட்சியாக எனக்கு பதிந்தது.

இத்தனை காலம் கழித்துத் தன்னை வீட்டிற்கு அழைத்துச் செல்ல வந்த தந்தையிடம் என் தோழி ஒரு கோரிக்கையை வைத்தாள். கோரிக்கை என்பதைவிட நிபந்தனை என்றே சொல்லலாம். “வீட்டில் கழிப்பறை வசதி ஏற்படுத்தினால்தான் உங்களுடன் வருவேன்” என்பதே அது. இது நிபந்தனை அல்ல, “சுயமரியாதையின் தவிப்பு” என்று தோன்றியது. ஒரு பக்கம் இந்தியா விண்வெளித் துறையில் சாதித்துக் கொண்டிருப்பதாக பெருமையடித்துக் கொண்டும் நவீனக் கலாச்சாரத்தின் உச்சமாகக் கருதப்படும் திருமணமின்றி சேர்ந்து வாழும் வாழ்க்கையை ஏற்றுக் கொண்டும் வாழும் மக்கள் இருக்கும் இதே இந்தியாவில்தான், என் தோழியைப் போன்று பல கோடிப் பெண்கள் குறைந்தபட்ச சுயமரியாதைக்கு ஏங்கிக் கொண் டிருக்கின்றனர் என்பது விளங்கியது. மனிதனின் அன்றாட வாழ்வியலில் தேவைப்படும் நாகரிகம் மற்றும் சுயமரியாதையை, அனைத்துத் தளங்களிலும் பல தலைமுறைக்கு முன்பே தமிழகத்தில் தட்டியெழுப்பிய பெரியாருக்கு அவர் கூறிய சமூக விடுதலையின் மூலமாக நாம் செய்ய வேண்டிய மரியாதையை செய்யத் தவறுகிறோம். அதைவிடக் கொடுமையாக, இந்த மாமனிதரை, சில அற்பவாதிகளும், பிற்போக்குவாதிகளும், பிழைப்புவாதிகளும், துரோகிகளும் தூற்றிக் கொண்டிருப்பதை அனுமதித்துக் கொண்டிருக்கிறோம்.

சமீபத்தில் செய்தித்தாள்களில் என் தோழியின் கதைபோல் பல பெண்களின் செய்திகள் வந்தன. ஒவ்வொரு முறையும் என் சுயமரியாதைத் தோழியே நினைவிற்கு வருவாள். ஒடிசாவையும் தமிழகத்தையும் ஒப்பிட்டுப் பார்த்து பல விசயங்களைப் புரிந்து கொள்ள இச்சம்பவம் ஒரு சிறு புள்ளியே. பெரியாரைக் கொச்சைப்படுத்தும் அறிவாளிகள் சமூக விடுதலையின் நுண்ணிய கூறுகளை வசதியாகப் புறந்தள்ளுவது, உறங்குவது போல் நடிப்பவரையே நினைவுபடுத்துகிறது.