நாம் சில காலமாக எதிர்பார்த்திருந்தபடியே நமது தொண்டிற்கு ஸ்ரீமான்கள் வரதராஜுலுவும், கல்யாணசுந்தர முதலியாரும் வெளிப்படையாய் வந்து எதிர்க்க நின்று விட்டார்கள். இனி இதில் ரகசியம் ஒன்றும் இல்லை. இவர்களை மூடி மூடி வைத்து எவ்வளவு தூரம் சரிப்படுத்த பார்க்கலாம் என்று நினைத்தோமோ அவ்வளவுக்கவ்வளவு அஸ்திவாரத்துடன் எதிர்க்க சவுகரியம் செய்து கொண்டு ஆரம்பித்து விட்டார்கள்.
ஸ்ரீ வரதராஜுலு வழக்கம்போல் ஒரு கொள்கையும் இல்லாமல் வாயில் வந்த வார்த்தைகளை உளறிக் கொண்டு தேசீயம் என்கின்ற ஆயுதத்தின் மூலமாய் மறுபடியும் வெளியாய்விட்டார். ஸ்ரீ முதலியார், அவருக்கு அண்ணனாய் சமயம் சீர்திருத்தம் என்னும் ஆயுதத்தைக் கொண்டு வெளியாய்விட்டார். எனவே இவைகளுக்கு பதில் சொல்லித் தீர வேண்டியது நமது கடமையாய் போய்விட்டது. இருவரும் தாங்கள் ஆத்திரப்படும் விஷயம் இன்னது என்பதைக் குறிப்பிடாமலும் நமது பெயரையும் நமது பத்திரிகையின் பெயரையும் நாம் என்ன சொல்கின்றோம் என்பதையும் குறிப்பிடாமலும் நமக்கும் நாம் எழுதினவைகளுக்கும் தாங்கள் என்ன சமாதானம் சொல்லுகிறார்கள் என்பதைக் குறிப்பிடாமலும் ஜாடை பேசும் குணத்தை மாத்திரம் கையாண்டு வருகிறார்கள். வரதராஜுலுவின் குட்டிக்கரண விஷயமாயும் அவர் அய்யங்காரானதையும் வெளிப்படையாய் சென்ற வாரம் விவரமாய் குறிப்பிட்டோம். அதில் ஒன்றுக்காவது ஒழுங்கான பதில் இல்லை. மறுக்கவும் இல்லை. அன்றியும் அவர் இப்போது விளம்பரமடையப் பிடித்திருக்கும் ராயல் கமிஷன் பகிஷ்காரப் புரட்டையும் புட்டுப்புட்டு வெளியாக்கினோம்.
அவைகளிலும் ஒன்றுக்காவது பதில் இல்லை. ஆனால் என்ன பதில் என்றால் வெகு பயங்காளித்தனத்துடன் சந்துகளிலும் பொந்துகளிலும் முட்டாள்கள் என்றும், இழிகுணத்தவர்கள் என்றும் எழுதுவதுடன் தனக்கு உள்ள ஆத்திரத்தை மாத்திரம் கொட்டிவிட்டு அய்யங்கார் அடிமையாகப் பார்க்கிறார். ஸ்ரீமுதலியாரோ தனது கல்வி, பழக்கம், ஒழுக்கம், ஆராய்ச்சி என்பவைகள் இவ்வளவையும் அடியோடு மறந்துவிட்டு ‘கயமை’, ‘இழிதுறை’ என்கின்ற பேச்சைக் கட்டிக்கொண்டு பார்ப்பனர்களை அபயம் கொள்ளுகிறார். இவ்விருவரின் நிலைமைக்கும் இரங்குகின்றோம்! இரங்குகின்றோம்!
இருவரும் நம்மை குற்றம் கூறும் தத்துவம் முடிவில் ஒன்றேதான். அதாவது “ஜாதி மத வேற்றுமைகளை கிளப்பிவிட்டு தலைவர் பட்டம் சூட்டி தாண்டவமாடும் முட்டாள்கள்” என்று ஒருவரும், “இயற்கை நோக்கை உணரும் அறிவாற்றல் வாய்க்கப் பெறாத .......சிலரால் நிகழ்த்தப் பெறும் சீர்திருத்தத்தால் உலகில் அமைதி இன்மையும் பிறவும் ஏற்படும்” என்று மற்றொருவரும் எழுதுவதின் மூலம் எதிரிகளுக்கு நம்மைக் காட்டிக் கொடுக்க வேண்டும் என்பதுதான். இப்படி இவர்கள் நம்மைக் காட்டிக் கொடுப்பதன் மூலம் பார்ப்பனர்களை தஞ்சமடைய கருதுவதுதான் இவர்களது தற்கால தொண்டின் தன்மையாய் முடிந்துவிட்டது. மற்றபடி இவர்கள் உண்மையிலேயே பொது நலத்தில் கவலை கொண்டவர்களானால் இன்னார் இன்னது சொல்கின்றார். இன்ன பத்திரிகை இன்னபடி எழுதுகின்றது. அதனால் இன்னது நடந்துவிட்டது என்று சொல்லி இவ்வளவு ஆத்திரப்பட்டார்களானால் அதில் மனிதத்தன்மை உண்டு. பெயரையும் பத்திரிகையையும் வெளியிடுவதிலும் கூட பயந்துகொண்டு இவர்களை குற்றம் சொல்லும் பத்திரிகையையும் ஆசாமியையும் அறிந்தால் அதன் மூலம் தங்கள் யோக்கியதையின் உண்மை வெளியாகி விடுமோ என அஞ்சி பொதுவாக யாரையோ பேசுவதுபோல் பேசுகின்றார்கள். இதிலிருந்தே இவர்களது நிலைமை விளங்கலாம்.
நிற்க, ‘தமிழ்நாடு’ டிசம்பர் 14 -ந்தேதி பத்திரிகையில் “சர்க்கார் தயவை சம்பாதிக்கவோ வயிற்றுப்பாட்டிற்காகவோ ஜாதி மத வேற்றுமைகளை கிளப்பி விட்டு தாண்டவமாடும் முட்டாள்களுக்கு அமீர் உபதேசம் ஆலகால விஷம் போல் தோன்றலாம்” என்று எழுதி இருக்கின்றார். அதிலேயே பிறிதோர் இடத்தில் “தென்னாட்டில் இரண்டொரு பிராமணரல்லாதார் தேசீயத்தையும் தேசபக்தர்களையும் தாக்கி என்னதான் வசை புராணம் பாடினாலும் காட்டிலிட்ட கூச்சலாகவே முடியும்” என்கின்றார்.
இதில் “ஜாதி மத வேற்றுமைகளை கிளப்பிவிட்டு தாண்டவமாடும் முட்டாள்கள் “யார்” என்றும், எதனால் முட்டாள்கள் ஆனார்கள் என்றும் நாம் கேட்கின்றோம். ஜாதி மத வித்தியாசத்தை ஏற்படுத்தினவர்களா அல்லது அதை அழிக்க வேண்டுமென்று மண்டையை உடைத்துக் கொள்ளுகின்றவர்களா? அல்லது திருத்தத்திற்கு குறுக்கே நிற்பவர்களா? அன்றியும் அவைகள் ஒழிய வேண்டுமா? வேண்டாமா? என்று கேட்கின்றோம். ஜாதி, மத, பேதம் கிளப்புவதாகவும் இதனால் வயிறு பிழைப்பதாகவும் இவர் யாருடைய எந்த வாக்கியத்தில் கண்டார். அப்படி கண்டதற்கு என்ன சமாதானம் சொல்லி இந்த புத்திசாலி அவர்களை கண்டிக்கிறார் என்று கேட்கின்றோம். ஆகவே அவைகளை குறிப்பிடாமலும் சமாதானம் சொல்லாமலும் பாமர மக்களை ஏமாற்ற இம்மாதிரி விஷமம் செய்து காரியத்தைக் கெடுத்து எதிரியின் காலுக்குள் நுழைவது யோக்கியமானதா அயோக்கியமானதா என்று கேட்கின்றோம்.
மூடத்தனம் என்பது அநேகமாய் மன்னிக்கக்கூடியதாகி விடும். அயோக்கியத்தனத்தை மன்னிக்க முடியுமா? தேசீயத்தையும், தேச பக்தர்களையும் இரண்டொரு பிராமணரல்லாதார் வைகிறார்கள் என்பதில் எந்த தேசீயத்தை, எந்த தேசபக்தரை, எந்த பிராமணரல்லாதார் எப்படி வைதார் என்பதை இப்போதாவது சொல்லட்டும். அதைச் சொல்ல தைரியமில்லாதவர்கள் முக்காடிட்டு மூலையில் உட்கார்ந்து கொண்டு ஒப்பாரியிட்டு அழுவதில் பயன் என்ன? யோக்கியமும் தைரியமும் மனிதத் தன்மையும் இருந்தால் தைரியமாய் வெளியில் வந்து விஷயங்களை சொல்லி வாதாடி மக்களிடை மெய்ப்பிக்கட்டும். அப்போது நாம் சந்தோஷமாக பின்பற்றத் தயாராயிருக்கின்றோம். அஃதில்லாமல் இம்மாதிரி விஷமத்தனம் செய்யும் காரியங்களை ஒருக்காலும் விட்டு வைக்க முடியாததற்கு வருந்துகின்றோம்.
பஹிஷ்காரத்தைப் பற்றி ‘குடி அரசில்’ நாம் சுமார் 5, 6 தலையங்கங்கள் எழுதியும், பலவிடங்கள் 10,12 உபந்நியாசங்களில் செய்துமிருக்கிறோம். அவற்றுள் எதற்காகவாவது எந்த பத்திரிகையாவது எந்த தலைவர்களாவது பதில் சொன்னார்களா? என்று கேட்கின்றோம். நாமும் நமது பத்திரிகையும் பதில் சொல்லக்கூடிய யோக்கியதை உடையவைகள் அல்ல என்று கருதியதாக சொல்லப்படுமானால் அலக்ஷியம் செய்துவிட்டு பேசாமல் வாயை மூடிக் கொண்டு வேறு வேலை பார்க்க வேண்டுமேயல்லாமல் ஜாடையாக நம்மைப் பற்றி வயிற்றுச் சோற்றுக்காரர், சுயநலக்காரர், உத்தியோக ஆசை பிடித்தவர்கள், சர்க்கார் மனுஷர்கள் என்பதான அற்பத்தனமான வார்த்தைகளை ஏன் உபயோகப்படுத்த வேண்டும் என்று கேட்கின்றோம். இம்மாதிரி நடந்து தீர வேண்டிய ஒரு அவசியம் வந்தவர்கள் வயிற்றுச் சோற்றுக்காரர்கள் முதலியவர்களாயிருக்கக் கூடுமா அல்லது உண்மை என்று பட்டதை எழுதுகிறவர்களும், பேசுகிறவர்களும் வயிற்றுச் சோற்றுக்காரர்களாயிருக்க முடியுமா? என்பதை பொது மக்களே யோசித்துப் பார்க்கட்டும்.
தற்கால நிலையில் சுயமரியாதைக்கென்றோ தேசத்தின் நன்மைக்கென்றோ ராயல் கமிஷனை பகிஷ்கரிக்க வேண்டுமென்று சொல்லுகின்றவர்கள் யோக்கியர்கள் என்றும் அவர்களை பின்பற்ற வேண்டுமென்றும் கடவுள் சொல்வதானாலும் அதை ஒன்று முட்டாள்தனமென்றோ இல்லாவிட்டால் அயோக்கியத்தனமென்றோதான் சொல்லத் தயாராயிருக்கின்றோம். கல்லிலும் எழுதத் தயாராயிருக்கின்றோம். காரணங்கள் ‘குடி அரசில்’ ஒன்றரை மாதகாலமாய் காட்டி வந்திருக்கின்றோம். இனியும் கேட்டால் சொல்லத் தயாராயிருக்கின்றோம்.
சுயமரியாதையும் தேசாபிமானமும் ராயல் கமிஷன் பகிஷ்காரத்தில் இல்லை. இருப்பதாக சொல்ல வருவார்களானால் இதைவிட அதிகமாகவும் கவனிக்க வேண்டியதாயுமிருக்கின்ற இடத்தை இக்கூட்டத்தார் கவனிக்காமல் மறைத்து வைத்துக் கொண்டு பித்தலாட்டங்கள் செய்து வேண்டுமென்றே மக்களை ஏமாற்றிப் பிழைக்கின்றார்கள். அந்த பித்தலாட்டங்கள்தான் இதைக் கொண்டுவந்து விட்டிருக்கின்றது. ராயல் கமிஷன் நியமனத்தினால் தங்கள் சுயமரியாதையை இழந்து விட்டதாகக் கருதிக் கொள்ளும் மக்கள் தேசத்தில் மிகச் சிலரேயாவர். பல ஆண்டுகளாக வேறு பல வழிகளில் சுயமரியாதையை இழந்து தவிக்கும் ஜனங்கள் கோடிக்கணக்காக இருக்கிறார்கள். எனவே இக்கோடிக்கணக்கான மக்களுக்கு சுயமரியாதையைத் தேடிக் கொடுப்பதுதான் உண்மை தேசீயமாகும்.
இனி சீர்திருத்தத்தைப் பற்றி உபதேசம் செய்யும் ஸ்ரீ முதலியாரைப் பற்றி யோசிப்போம். இதுவும் அதே டிசம்பர் 14 ந்தேதி ‘நவசக்தி’யில் கண்டதையே குறித்து சமாதானம் சொல்லுகின்றோம். இருவரும் ஒருமித்து இக்கருமம் ஏற்றார்களோ என்று சந்தேகப்பட வேண்டியதானாலும் நமக்கு அதைப்பற்றிக் கவலையில்லை. சீர்திருத்தத்தைப் பற்றி உபதேசம் செய்ய முன் வந்தவர்கள் தங்களது சீர்திருத்தம் இன்னது என்றும், அதற்காகத்தான் இன்னது செய்து வந்திருக்கின்றேன் என்று குறிப்பிட்டு விட்டு மற்றவர்களைக் கண்டிக்கவோ தண்டிக்கவோ முன்வரட்டும். அதில்லாமல் எவராவது ஏதாவது செய்தால் அதைக் குறிக்கிட வருவது எப்படி யோக்கியமாகும். தவிர மேற்படி தேதி ‘நவசக்தி’ தலையங்கத்தின் இறுதியில் “இன்று பொது முறைபற்றி எழுதலானோம். சிறப்பு முறைபற்றி சமயம் நேர்ந்துழி எழுதுவோம்” என்று குறிப்பிட்டிருக்கின்றது. ஆதலால் அதை விரைவில் எதிர்பார்க்கின்றோம்.
இப்பொழுது எழுதி இருப்பது வழ வழவென்று “வெண்டைக்காய் குழம்பு” போல் இருக்கின்றதேயல்லாமல் குறிப்பு இல்லை. ஆனாலும் அதற்கும் சமாதானம் சொல்லுவோம். பொதுவாக மக்கள் சீர்திருத்தம் சமய சீர்திருத்தம் என்பவற்றுள் நாம் தற்காலம் ஆசைப்படுவது மக்கள் சீர்திருத்தமேயொழிய எவ்வித சமய சீர்திருத்தமுமல்ல வென்பதையும் இம்மக்கள் சீர்திருத்தத்திற்கு இடையூறாயிருக்கும் எந்த சமயமோ சமூகமோ திருந்தவோ, அழியவோ நேரிடக்கூடுமானால் அதைப் பற்றியாம் கொஞ்சமும் பின்வாங்கப் போவதில்லை என்பதையும் நம்மை எதிர்ப்போர்கள் உணர வேண்டுகின்றோம்.
மக்களுக்காக சமயமேயொழிய சமயத்திற்காக மக்களல்ல என்பதே நமது முடிவு. ஆகவே, நம்முடைய இம் முயற்சிக்கு பாமர மக்களின் அறியாமையால் ஏற்படும் எவ்வித இடையூறை யும் பொறுமையுடன் ஏற்று சமாளிக்க எப்போதுமே தயாராயிருக்கின்றோம். ஆனால் சமயங்களின் பேரால் என்று சொல்லிக் கொண்டு பண்டிதர்கள் என்றும், ஆராய்ச்சிக்காரர்கள் என்றும், சமயவாதிகள் என்றும், சமய ஆச்சாரியார்கள் என்றும் சொல்லிக் கொண்டு வரும் எதிர்ப்பு களுக்கு ஒரு சிறிதும் பொறுமை காட்ட இணங்கோம் என்பதை அவரவர்கள் உணரட்டும். ஏனெனில் காலம் போதாது. அன்றியும் இந்தக் கூட்டங்களேதான் இப்போது நமது நாட்டு மக்களின் உண்மை விடுதலைக்கு எமனாய் இருப்ப வைகள், இருந்தும் வந்தவைகள் என்பது நமது அபிப்பிராயம்.
உண்மையான சீர்திருத் தங்கள் தோன்றும்போது இக்கூட்டத்திற்குத்தான் முதல் முதல் ஆபத்து வரும். ஏனெனில் அப்படிச் செய்த நாடுதான் இன்று பரிபூர்ண விடுதலை அடையும் வழியில் போய்க் கொண்டிருக்கின்றது. ருசியாவில் பாதிரிகளைத் தூக்கில் போட்ட பிறகே அந்நாடு இன்று உயர்வு, தாழ்வு, முதலாளி, தொழிலாளி என்ற வித்தியாசம் இல்லாத நிலைக்கு போய்க்கொண்டிருக்கின்றது. சீர்திருத்தக்காரனுக்கு முக்கியமாய் அறிவு வேண்டுமே ஒழிய ஆராய்ச்சி வேண்டியதில்லை. சமயம் என்பதை எந்த அர்த்தத்தில் ‘நவசக்தி’ உபயோகப்படுத்துகின்றது என்பது நமக்கு விளங்காமையால் நாம் இப்போது அதைப்பற்றி எழுத முடியவில்லை. ஆனால் நம்மிடம் கோபமும் வெறுப்பும் இருப்பதாகவும் இதனால் கேடு வரும் என்றும் அது எச்சரிக்கை செய்கின்றது. இதை நாம் ஒரு சிறிதும் லக்ஷியம் செய்யவில்லை. ஏனெனில் உலக மக்களுக்கு கோபமும் வெறுப்பும் மனித இயற்கை என்பதை முதலியார் அறியட்டும். அஃதில்லாதவன் மனிதனல்ல என்பதையும் மனிதனுக்கு அது அவசியம் வேண்டும் என்பதையும் ஸ்ரீ முதலியார் உணரட்டும். அன்றியும் தான் உள்பட இன்ன மனிதனிடத்தில் கோபமும் வெறுப்பும் இருந்ததில்லை என்றாவது அல்லது முதலியாரின் சமயத்தின் பேரால் காணும் இன்ன தெய்வத்தினிடம் கோபமும் வெறுப்பும் இருந்ததில்லை என்றாவது ஸ்ரீமான் முதலியார் எடுத்துக் காட்டட்டும். அஃதின்றி வீணே நம்மை காட்டிக் கொடுப்பதற்கும் சில பார்ப்பனர்களுக்கு தான் நல்ல பிள்ளை ஆவதற்கும் மாத்திரம் இதைச் சொல்லி குற்றம் சுமத்தப் பார்ப்பது நேர்மையல்ல வென்றே சொல்லுவோம்.
மனிதத் தன்மையும் பகுத்தறிவும் உடையவன் அன்புகாட்ட வேண்டிய இடத்தில் அன்பும், கோபம் காட்ட வேண்டிய இடத்தில் கோபமும், விருப்பு காட்ட வேண்டிய இடத்தில் விருப்பும், வெறுப்பு காட்ட வேண்டிய இடத்தில் வெறுப்பும் காட்டித்தான் தீரவேண்டும். இது இயற்கை. உதாரணமாக எவ்வளவு பசியோடிருப்பவனானாலும் அவனுக்கு சகலவித பலகார பக்ஷணங்களை இலையில் பரிமாறி உட்கார வைத்து அவ்விலையின் ஒரு மூலையில் கழற்சிக் காயளவு மலம் வைத்தால் வைத்தவனிடம், கோபமும், மலத்தினிடம் வெறுப்பும் உண்டாகாதா என்று கேட்கின்றோம். மனிதனுடைய ஒவ்வொரு அவயவங்களுக்கும் கோபமும் வெறுப்பும் இருப்பது ஸ்ரீ முதலியார் அறியாரா என்று கேட்கின்றோம். மூக்கு நல்ல வாசனையை எப்படி முகர்கின்றது துர்வாசனையை எப்படி வெறுக்கின்றது. இதுபோல் ஒவ்வொரு அவயவத்தையும் கவனித்துப் பார்க்கட்டும் என்று வேண்டு கின்றோம்.
ஸ்ரீமான் முதலியார் நாம் இன்ன இடத்தில் உபயோகித்த கோபமும் வெறுப்பும் கூடாது என்று சொல்ல முன்வராமல் அவ்வார்த்தையைச் சொல்வதால் உலகத்தை ஏமாற்றலாம் என்கின்ற கருத்துக்கொண்டு பழிசுமத்த வந்தது யோக்கியமா என்று மறுபடியும் கேட்கின்றோம். அன்றியும் ஸ்ரீ முதலியாரும் யோக்கியமான எண்ணத்துடன் கண்டிக்கப் புறப்பட்டால் அவர் கண்டனங்களுக்கு நாம் சொல்லும் குறிப்புகளை தனது பத்திரிகையில் போட முன்வரட்டும். அப்படிக்கில்லாமல் அன்னியருக்கு கையாளாய் இருந்து கொண்டு வெறும் எதிர்ப்பு வேலைகளை மாத்திரம் முறை தவறிய வழியில் ஆற்ற முன்னிற்பது அழகாகுமா? என்று கேட்கின்றோம். நியாயமான எதிர்ப்புகளை மனப்பூர்வமாய் வரவேற்கின்றோம்.
குரானையும் ஒதுக்கி உண்மையைக் கடைபிடிக்கும் கமால் பாஷா வீரனையும், முல்லாக்களையும் ஒதுக்கி சமத்துவத்தை காண விரும்பும் அமீர் வீரனையும், பாதிரிகளை தூக்கிலிட்டு சுதந்திரமளிக்கும் ருஷிய வீரனையும் கண்டபிறகு அழுக்கு மூட்டைகளுக்கு பேச வாயேது என்று கேட்கின்றோம்.
காந்தியடிகள் என்றும், மகாத்மா என்றும் இவர்களால் தற்காப்புக்காகக் கொண்டாடப்பட்ட ஸ்ரீமான் காந்தி அவர்களே ஒரு சமயம் என்ன சொன்னார் என்றால் ஒரு சமயம் ஒரு இந்து என்பவன் தன்னுடைய மனைவியை ஒரு மகமதியன் தன் எதிரில் கற்பழித்து விட்டதாக வேதனைப்பட்டு வந்து தன்னிடம் பிராது சொல்லும்போது அவர் அளித்த பதில் என்னவென்றால், “அட பாவி! இங்கு வந்து சொல்லும்வரை உனக்கு உயிர் வைத்திருக்க இஷ்டம் இருந்ததா?” என்றுதான் கேட்டாராம். இதன் கருத்து என்ன? தற் கொலை செய்து கொள்ள சொன்னாரா என்றால் இல்லவே இல்லை. மற் றென்னவென்றால் அங்கேயே உன் மனைவியை கற்பழித்த கொடியவன் மீது ஒரே பாய்ச்சலாய்ப் பாய்ந்து அவனைக் கொன்றிருக்க வேண்டும். அப்படிக் கில்லாத பட்சம் அம் முயற்சியில் உன் உயிரை இழந்திருக்க வேண்டும் என்பதுதான் அதன் அர்த்தம். இந்நிலையில் காய்தல், உவத்தல், முனைதல், எறிதல் ஆகியவைகள் கூடாது என்பது போன்றதெல்லாம் எங்கே போயிற்றென்று கேட்கின்றோம்.
முடிவாய் ஒன்று சொல்லுகின்றோம். உண்மைச் சீர்திருத்தமும் சமத்து வமும் ஏற்பட்டு மக்கள் ஒன்றுபட வேண்டுமானால் மதம்,சமயம், வேதம், புராணம் என்கின்ற அழுக்கு மூட்டைகள் ஒழிய வேண்டும். அவைகளை தூக்கி திரிந்து கொண்டிருக்கும் வரை ஒருக்காலமும் வெற்றியடைய முடியாது.
எப்படியோ பல மதங்கள், பல சமயங்கள், பல வேதங்கள், பல தெய்வங்கள் கற்பிக்கப்பட்டாய்விட்டது. அவைகள் ஒவ்வொன் றினாலும் மக்களை அடிமைப்படுத்தியாய்விட்டது. குரங்கு பிடியாய் இவற்றைப் பிடித்துக்கொண்டு சமய ஞானம் பேசுகிறவர்களிடம் காலத்தை கழிப்பது வீண் வேலையேயாகும். மக்கள் மிருகப் பிராயத்திற்குப் போய்க் கொண்டே இருக்கின்றார்கள். மண்ணையும் சாம்பலையும் குழைத்து பூசிக் கொள்வதே சமயமாய்விட்டது.
பார்ப்பானுக்கும் பாஷாண்டிக்கும் அழுவதே தர்மமாகிவிட்டது.
கூடா ஒழுக்கங்களும், அண்டப் புரட்டுகளும், ஆகாயப் புரட்டுகளும் நிறைந்த புராணக் குப்பைகளை திருப்பித் திருப்பிப் படிப்பதே காலட்சே பமாய்விட்டது.
அன்புமயமான உண்மைக் கடவுளை அடியோடு மறந்தாய் விட்டது.
ஒழுக்கத்தினிடத்திலும் சத்தியத்தினிடத்திலும் மக்களுக்குள்ள கவலையே அடியோடு நீங்கிவிட்டது.
வலிவுள்ளவன் வலிவில்லாதவனை இம்சிப்பதே தர்மமாய் விட்டது.
பணக்காரன் ஏழைகளை அடிமைப்படுத்துவதே முறையாய் விட்டது.
தந்திரசாலிகள் சாதுக்களை ஏய்ப்பதே வழக்கமாய்விட்டது.
அயோக்கியர்கள் யோக்கியர்களை உபத்திரவப்படுத்துவதே நீதியாகிவிட்டது.
வலிவுள்ளவனாகவோ, பணக்காரனாகவோ, தந்திரசாலியாகவோ, அயோக்கியனாகவோ இல்லாதவன் வாழ்வதற்கு உலகத்தில் இடமே இல்லாமல் போய்விட்டது.
இவைகளைச் சீர்திருத்த காலத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமா? இதனால் கலகம் உண்டாவதானால் அதற்கு பின் வாங்க வேண்டுமா? யாராவது மதம், சமயம், புராணம், சாஸ்திரம், தேவாரம், திரு வாசகம், பிரபந்தம் என்கிற நிழலில் போய் ஒளிந்து கொண்டு எதிர்ப்பாரானால் அதற்காகப் பயந்துகொண்டு ஓட வேண்டுமா என்று கேட்கிறோம். அக்காலம் மலையேறிவிட்டது என்பதை ஸ்ரீ முதலியார் நன்றாய் உணரட்டும். பாட்டி கதை இனி பலிக்காது என்பதை முதலியார் கூட்டங்கள் நன்றாய் அறியட்டும். திருந்தினால் திருந்தட்டும் இல்லாவிட்டால் அழியட்டும் என்கின்ற இரண்டி லொரு கொள்கையிலேதான் இறங்கி இருக்கின்றோம். மானங்கெட்ட மத்திய வாழ்வு இனி வேண்டியதில்லை. ராஜி பேசுவதற்கும் இனி இடமில்லை, கண்ணியமாய் குறிப்பாக வரும் எதிர்ப்புகளை ஆவலோடும், பணிவோடும் வரவேற்று சமாதானம் சொல்ல முயலுகின்றோம்.
(குடி அரசு - தலையங்கம் - 18.12.1927