கோவாவின் தலைநகர் பனாஜியில் 2013 சூன் 8, 9 ஆகிய நாள்களில் நடைபெற்ற பாரதிய சனதாக் கட்சியின் தேசிய செயற்குழுவின் கூட்டத்தின் முடிவில், நரேந்திர தாமோதரதாஸ் மோடி, 2014ஆம் ஆண்டு ஏப்பிரல் - மே மாதங்களில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பா.ச.க.வின் தேர்தல் பரப்புரைக் குழுவின் தலைவராக அமர்த்தப்பட்டுள்ளார் என்று பா.ச.க தலைவர் இராஜ்நாத் சிங் அறிவித்தார். இதன்மூலம் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ச.க. வெற்றி பெற்று, மோடி தலைமை அமைச்சராக முடிசூட்டிக் கொள்வது உறுதியாகிவிட்டது போன்றதோர் நம்பிக்கையை மக்கள் மனதில் பதியவைக்க பா.ச.க. முயல்கிறது.

ஆனால் அடுத்தநாளே பா.ச.க.வின் மூத்த தலைவர் அத்வானி, கட்சிப் பொறுப்புகளிலிருந்து விலகுவதாக அறிவித்தார். 85 அகவையினரான அத்வானிக்குத் தலை மையமைச்சராக வேண்டுமென்ற பெருவிருப்பம் இன்னும் தணியவில்லை. தலைமையமைச்சராகாமல் செத்தால் அத்வானியின் ‘நெஞ்சு’ வேகாது; ‘ஆன்மா’ சாந்தியடையாது.

ஏனெனில் 1984இல் இரண்டு உறுப்பினர்களை மட்டுமே நாடாளுமன்றத்தில் கொண்டிருந்த பா.ச.க.வை, தில்லியில் ஆளும் கட்சியாக அமர்த்தியதில் உண்மையில் அத்வானிக்கே பெரும் பங்கு உண்டு. அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடம் இராமன் பிறந்த இடம்; எனவே பாபர் மசூதியை இடித்து, இராமனுக்கு மாபெரும் கோயில் கட்ட வேண்டும் என்ற இந்துமதவெறி முழக்கத்தை முன்வைத்து, இராம இரதம் ஓட்டியும் மற்றும் பலவகைகளிலும் இந்தியா முழுவதும் பரப்புரை செய்தவர் அத்வானி.

1980க்குப்பின் இந்துக்களில் சாதாரண மக்களிடமும் முசுலீம் பகை உணர்ச்சி உருவாவதற்கு வித்திட்டவர் அத்வானி. பாபர் மசூதியைச் சங்பரிவாரங்கள் தகர்ப்பதற்குத் தலைமை தாங்கியவர். இந்துப் பாசிசக் கோட்பாடு, பா.ச.க.வை ஆளும் கட்சி நிலைக் குக் கொண்டு சென்றது. ஆனால் இந்துத்துவ அரிதாரத்தைப் பூசிக் கொண்டதாலேயே, தலைமை அமைச்சர் பதவியை அத்வானியே தங்கத்தட்டில் வைத்து வாஜ்பாய்க்குத் தர வேண்டிய அவலநிலை ஏற்பட்டது. அந்த ஏமாற்றம் - மனப்புண் இன்னும் அத்வானிக்கு ஆறவில்லை!

ஆயினும் இந்துத்துவத்தின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் கட்டளையின் படி, அத்வானி பா.ச.க. பொறுப்புகளிலிருந்து விலகுவதான அறிவிப்பைத் திரும்பப் பெற்றார். இந்நிகழ்வு இரண்டு செய்திகளை உணர்த்துகிறது.

பா.ச.க., மன்மோகன் சிங்கை வலிமையற்ற, உறுதி யற்ற, தானாக எந்தவொரு முடிவையும் எடுக்கும் துணிவற்ற பிரதமர் என்றும், வெளியிலிருந்து கொண்டு சோனியா காந்திதான் முதன்மையான முடிவுகளை எடுக்கிறார் என்றும் குற்றஞ்சாட்டி வந்தது. ஆனால் ஆர்.எஸ்.எஸ். தலைமையின் முடிவின்படியே மோடி தேர்தல் பரப்புரைத் தலைவராக அமர்த்தப்பட்டார் என்பதும், அத்வானி தன் விலகலைத் திரும்பப் பெற்றார் என்பதும் அம்பலமாகிவிட்டது.

காங்கிரசை நேரு குடும்பம் ஆட்டிப்படைக்கிறது ; பா.ச.க. வை ஆர்.எஸ்.எஸ். இயக்குகிறது. ஆர்.எஸ்.எஸ். ‘தான் ஒரு கலாச்சார அமைப்பு; அரசியலில் தலையிடுவதில்லை’ என்று கூறுவதெல்லாம் பித்தலாட்டப் பேச்சு! மன்மோகனைச் சோனியா இயக்குவதுபோல , ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் இயக்கப்படும் நரேந்திர மோடி மட்டும் பிரதமர் என்ற நிலையில், சுயேச்சை யாகத் துணிவுடன் முடிவுகளை எடுத்துச் செயல்பட முடியுமா?

அத்வானி தன் விலகல் மடலில், “பாரதிய சனதாக் கட்சி யின் நடப்புச் செயல்பாடோ, அது சென்று கொண்டிருக்கும் திசைவழியோ உவப்பாக இல்லை என்ற எண்ணமே சிறிதுகாலமாக எனக்கு இருந்து வருகிறது. இன்று நம் தலைவர்களில் பெரும்பாலோர் தத்தமது சொந்தத் திட்டங் களை நிறைவேற்றிக் கொள்வதிலேயே குறியாக உள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்வானி பதவி விலகலைத் திரும்பப் பெற்றுக்கொண்டாலும், இம்மடலில் உள்ள கருத்தை அழிக்க முடியாது. பா.ச.க. தன்னலத் தலைவைர்களின் கூடாரமாகிவிட்டது என்பதற்கு அத்வானியே சான்றளித்திருக் கிறார். எனவே காங்கிரசும், பா.ச.க.வும் எல்லாவகையிலும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே!

மற்ற அரசியல் கட்சிகளிலிருந்து மாறுபட்ட கட்சி பா.ச.க.; (a party with a difference) உயர்ந்த நெறிகளைக் கொண் டொழுகுவது என்று பா.ச.க. பெருமிதத்துடன் முன்பு கூறி வந்தது. ஆனால் மாநிலங்களிலும், நடுவண் அரசிலும் ஆட்சியில் அமர்ந்த பிறகு, காங்கிரசைப் போலவே, பா.ச.க. விலும் உள்கட்சி மோதல்களும் ஊழல்களும் இருப்பது அம்பலமாகிவிட்டது. வாஜ்பாய் ஆட்சியில் கார்கில் போரில் சவப்பெட்டி ஊழல் முதல், இறுதியாக 2011-2013காலத்தில் கர்நாட கத்தில் நடந்த ஊழல்கள் வரை இதைப் பறைசாற்றுகின்றன.

1995 முதல் குசராத்தில் பா.ச.க. ஆட்சியில் இருந்து வருகிறது. 1998இல் கேசுபாய் பட்டேல் முதலமைச்சரானார். அவருடைய ஆட்சியில் கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. 2001ஆம் ஆண்டு பூஞ்ச் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் பேரழிவு ஏற்பட்டது. அங்கு துயர் துடைப் புப் பணிகளில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று அரசு மீது மக்களுக்குக் கடும் வெறுப்பு உண்டாயிற்று. 2002 சட்டமன்றத் தேர்தலின் போது கேசுபாய் பட்டேல் முதலமைச்சராக இருந்தால், பா.ச.க. தோற்றுவிடும் என்று கட்சி கருதியது. அதனால் 2001 அக்டோபரில் கேசுபாய் பட்டேலைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, நரேந்திர மோடியை ஓர் இடைக்கால ஏற்பாடாக முதல்வர் பதவியில் அமர்த்தியது பா.ச.க.

மோடி பல ஆண்டுகள் ஆர்.எஸ்.எஸ்.இல் ‘பிரச்சாரகராக’ வேலை செய்தவர். அதற்கு முன் அமைச்சராகக் கூட இல்லாத மோடி ஆர்.எஸ்.எஸ். இன் ஆணைப்படி முதலமைச்சரானார்.

முதலமைச்சரான பின், மோடி, இந்துத்துவக் கொள்கை யைத் தீவிரமாகச் செயல்படுத்தினார். 2002 பிப்பிரவரி 27 அன்று கோத்ரா தொடர் வண்டி நிலையத்தில், சபர்மதி தொடர் வண்டியின் பெட்டி எரிக்கப்பட்டது. இதில் அயோத்தியில் கரசேவைக்குச் சென்று திரும்பிய சங்பரிவாரத் தொண்டர்கள் உட்பட 59 பேர் இறந்தனர். இன்றுவரையில், தொடர் வண்டியின் பெட்டி தீப்பற்றியதற்கான காரணம் திட்டவட்ட மாகத் தெரியவில்லை. ஆனால் சங்பரிவார ஆட்கள் இறந்த தைக் காரணமாகக் காட்டி - இதற்கு இசுலாமியர்களே பொறுப்பு என்ற பொய்யைப் பரப்பி - ‘முசுலீம்களுக்குச் சரியான பாடம் புகட்ட வேண்டும்’ என்று முசுலீம்கள் மீது கொடுமை யான தாக்குதல்களை இந்துத்துவ வெறியர்கள் நடத்தினர்.

இந்துக்களின் சினம் தணிவதற்காக மூன்று நாள்களுக்கு ஆட்சி நிர்வாகமும், காவல் துறையும் இத்தாக்குதல்களைக் கண்டுங்காணாமல் இருக்க வேண்டும் என்று மோடி வாய்மொழியாக உயர் அதிகாரிகளுக்கு ஆணையிட்டார். பெண்கள், குழந்தைகள் உட்பட இரண்டாயிரத்துக்கு மேற் பட்ட முசுலீம்கள் கொடூரமான முறைகளில் கொல்லப்பட்டனர். அவர்களின் வீடுகளும், கடைகளும், சொத்துகளும் சூறை யாடப்பட்டு, விரட்டியடிக்கப்பட்டனர். அமைச்சர்கள், காவல் துறை உயர் அதிகாரிகளின் கட்டுப்பாட்டு அறைகளில் அமர்ந்து கொண்டு இத்தாக்குதலை முன்னின்று நடத்தினர்.

முசுலீம்கள் மீதான கொடிய தாக்குதல்கள் இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தின. நரேந்திர மோடியின் முதல்வர் பதவி பறிபோகாமல் அப்போது அத்வானிதான் காப்பாற்றினார்.

பெரும்பாலான குற்றவாளி கள் மீது வழக்குகளைப் பதிவு செய்ய காவல்துறை மறுத்தது. பதிவு செய்யப்பட்ட வழக்குகளிலும் பலவற்றை உரிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி குப்பைத் தொட்டியில் போட்டது மோடி அரசு. சாட்சியம் கூறிய முசுலீம்களைப் பலவகையிலும் மிரட்டிப் பணிய வைத்து, ‘முன்பு கூறியது பொய்’ என்று பிறழ்சாட்சியம் கூற வைத்தது. ஆயினும் முசுலீம்கள் உயிரோடு கொளுத்தப்பட்ட பெஸ்ட் பேக்கரி வழக்கில் மனிதஉரிமைப் போராளிகள் அயராது பாடுபட்டு குசராத் அரசின் மோசடிகளை அம்பலப்படுத்தினார்கள்.

‘தெகல்கா’ இதழுக்காக இளம் புலனாய்வுச் செய்தியாளர் அசீஷ் கேத்தன், தன்னை முனைவர் பட்ட ஆய்வாளர் என்று கூறிக்கொண்டு, முசுலீம்கள் மீது தாக்குதல்களை நடத்திய விசுவஇந்து பரிஷத், பஜ்ரங்தள் குண்டர்களிடம் பேட்டி கண்டார். அவர்களுக்குத் தெரியாமல் இரகசிய கேமராவில் பதிவு செய்தார். அவர்கள் மகிழ்ச்சி பொங்க, எவ்வாறெல்லாம் கொடுமையான முறைகளில் கொன்றனர் என்று விளக்கிக் கூறினர். அவை இந்துத்துவ-பாசிச குண்டர்களின் குற்றங் களுக்கு மறுக்க முடியாத சான்றுகளாக இருக்கின்றன.

200 முசுலீம்களுக்கு மேல் கொல்லப்பட்ட நரோடா பாட்டியா வழக்கில் பஜ்ரங்தள் தலைவன் பாபி பஜ்ரங்கிக்கும், பா.ச.க. சட்டப் பேரவை உறுப்பினர் மாயாபென் கொத்னானி என்ற பெண்ணுக்கும் 28 ஆண்டுகள் சிறைத் தண்டனை அண் மையில் வழங்கப்பட்டது. முசோலினி, இட்லர் ஆகியோரின் மீது படிந்த இரத்தக்கறை வரலாற்றில் நிலைத்துவிட்டது போல், நரேந்திரமோடியின் உடல் முழுவதும் படிந்துள்ள இசுலாமியரின் இரத்தக் கறையை, பிரதமர் பதவியால் கூடக் கழுவிவிட முடியாது.

குசராத்தில் இந்துத்துவ வெறி தாண்டவமாடிக் கொண்டி ருந்த சூழலை நன்கு பயன்படுத்திக் கொள்வதற்காக, 2012 திசம்பரில் நடைபெறுவதாக இருந்த சட்டமன்றத் தேர்தலை முன்கூட்டியே நடத்துமாறு தேர்தல் ஆணையத்திடம் மோடி கோரினார். தேர்தல் ஆணையம் இதை ஏற்க மறுத்து விட்டது. கோத்ரா இரயில் பெட்டி எரிப்பின் எதிர்வினை என்ற பெயரில் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட முசுலீம்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான கண்டனங்களையும் எதிர்ப்புகளையும் முறியடிக்க மோடி ஒரு புதிய ஆயுதத்தைக் கண்டுபிடித்தார். அதுதான் ‘சுயமரியாதை’ (குசராத்தி மொழியில் asmita) என்ற சொல். காந்தியார் தான், இந்திய அரசியலில் ‘சுயமரியாதை’ என்ற சொல்லை ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து விடுதலை பெறவேண்டும் என்ற கருத்தில் முதன்முதலில் பயன்படுத்தினார்.

பெரியாரும் மேதை அம்பேத்கரும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான கருத்தியல் ஆயுதமாக ‘சுயமரியாதை’த்தத்துவத்தைப் பயன்படுத்தினர். ஆனால் மோடியோ இந்துத்துவ ஆதிக்கத்தை நிலைநிறுத்திட - இசுலாமியர்களை இரண்டாந்தரக் குடிமக்களாக்கிட ‘சுய மரியாதை’ என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். குசராத்தில் முசுலீம்கள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டிப்பது என்பது ஆறு கோடி குசராத்தியரின் சுயமரியாதையை - சுயகவுரவத்தை - பெருமையை இழிவுபடுத்துவதாகும்; இதைக் குசராத்தியர் இனிப் பொறுத்துக்கொள்ளமாட்டார்கள் என்று உரத்து முழங்கினார். 2002 திசம்பர் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று மீண்டும் முதலமைச்சரானார்.

அதன்பிறகு, ஒருபுறம் இந்துத்துவத்தை நடைமுறைப் படுத்திக் கொண்டே, மறுபுறம் குசராத்தின் பொருளாதார வளர்ச்சி என்ற முழக்கத்தை முன்வைத்தார். 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற குசராத் சட்டமன்றத் தேர்தலில் ‘பொருளாதார வளர்ச்சி’(Development) என்பதை மட்டுமே முதன் மைப்படுத்தி வெற்றி பெற்றார். தன்னை தன்னேரிலாத் தனிப்பெருந்தலைவராகக் காட்டிக் கொள்வதில் மோடி கைதேர்ந்தவர்.

அதனால் குசராத் மாநிலத்தில் மற்ற பா.ச.க. தலைவர்களை ஓரங்கட்டினார். கட்சியிலும் ஆட்சியிலும் அவர் வைத்ததே சட்டம் என்ற நிலை ஏற்பட்டது. தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வில் செயலலிதா அருகில் யாரும் நிற்கவும் மறுத்துப் பேசவும் முடியாதோ, அதேபோல் மோடியின் ‘ஆளுமையும்’ கட்சியிலும் ஆட்சியிலும் சனநாயக நெறிமுறைகளைத் தன் காலின் கீழ்ப் போட்டு நசுக்கிக் கொண்டிருக்கிறது. அதனால் தான் மோடியும் செயலலிதாவும் நெருங்கிய நண்பர்களாக இருக்க முடிகிறது.

2007 தேர்தல் வெற்றிக்குப்பின், மோடிக்கு இந்திய அளவில் பா.ச.க.வில் வாஜ்பாய், அத்வானி போல் மாபெரும் தலைவராக வேண்டும்; தலைமையமைச்சராக வேண்டும் என்ற ஆசை பிறந்தது. அதற்கேற்ப செயல்படத் தொடங்கினார். இந்தியப் பெருமுதலாளிகளின் நம்பிக்கையையும் ஆதரவை யும் பணத்தையும் பெறாமல், இந்தியளவில் அரசியலில் தலைவராக எவரும் உருவெடுக்க முடியாது; தில்லி ஆட்சி அதிகாரத்தில் அமரவும் முடியாது என்பது இந்திய அரசியலை அறிந்தவர்க்குப் ‘பாலபாடம்’. எனவே மோடி இந்தியப் பெரு முதலாளிகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தொழில் வளர்ச்சிக்காக- முதலீடுகளை ஈர்ப்பது என்ற பெயரால், குசராத்தில் நிலம், நீர், காடுகள், மின்சாரம் முதலானவற்றை அடிமாட்டு விலைக்குக் கொடுத்தார்.

மேற்கு வங்காளத்தில் சிங்கூரில், டாடா நிறுவனம் ‘மக்களுக்கான மகிழுந்து’ ஒரு இலட்சம் உருபாய் விலையில் என்ற பெயரில் நானோ மகிழுந்து தயாரிப்புத் தொழிற்சாலைக்கான வேலைகள் தொடங்கிவிட்ட நிலையில், தங்கள் நிலத்தை இழந்த மக்களின் கடும் எதிர்ப்பால் திக்குமுக்காடி நின்றபோது, மோடி குசராத்தில் நானோ மகிழுந்து தொழிற்சாலையை அமைக்க ஒரே நாளில் டாடாவுக்கு ஆயிரம் ஏக்கர் நிலத்தைக் கொடுத்தார்.

நிலமற்ற விவசாயிகளுக்கு நிலம் வழங்கிடவும், சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்களின் வளர்ச்சிக்காகவும் என, 1980களில் குசராத் தொழில் வளர்ச்சிக்கழகம் மூலம் நிலங்களைக் கையகப்படுத்தியிருந்தது. இந்த நிலங்களை மோடி அரசு டாடா, அதானி, எஸ்ஸார், ரிலையன்ஸ் முதலான முதலாளிகளுக்குத் தாரைவார்த்துக் கொண்டிருக்கிறது. மனை வணிகச் சூதாடிகளும் ஏராளமான நிலங்களைப் பெற்றனர்.

அதானி குழுமத்திற்கு முந்தரா துறைமுகம் கட்டுவதற்காக 2005-2007 காலத்தில் மோடி அரசு 5.47 கோடி சதுர மீட்டர் நிலத்தைக் கொடுத்தது. இதில் 2011 திசம்பர் முடிய 98.60 இலட்சம் சதுர மீட்டர் இடம் மட்டுமே பயன்படுத் தப்பட்டது. அரசிடம் ஒரு சதுர மீட்டர் நிலத்தை ஒரு உருபா முதல் 32 உருபா விலையில் வாங்கிய அதானி குழுமம், மீதி 4 கோடி சதுர மீட்டர் நிலத்தை சதுர மீட்டர் ரூ.600 முதல் 737 வரையிலான விலையில் மற்ற நிறுவனங்களுக்கு விற்றுக் கொள்ளையடித்துள்ளது. அதானி குழுமம் அமைக் கும் முந்தரா துறைமுகத்தால் பல மீனவர் குடியிருப்புகளும், வேளாண் நிலங்களும் சிற்றூர்களும் அங்கிருந்து அகற்றப் படுகின்றன. மேலும் கடற்கரையின் சுற்றுச்சூழலுக்கு இத் துறைமுகத்தால் பல கேடுகள் உண்டாகும். அதனால் தில்லி அறிவியல் மய்யத்தின் தலைவர் சுனில் நாராயண் 2013 ஏப்பிரல் 18 அன்று நடுவண் அரசின் சுற்றுச்சூழல் அமைச் சகத்திடம் அளித்த அறிக்கையில் முந்தரா துறைமுகத்திற்கு அளிக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் சான்றினை உடனே இரத்து செய்யுமாறு வலியுறுத்தியிருக்கிறார்.

லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனத்துக்கு 8,53,247 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட நிலத்தை சதுர மீட்டர் ரூ.700 விலையில் மோடி அரசு அளித்தது. ஆனால் மாநில நில மதிப்புக் குழுவின் அறிக்கையின்படி இதன் சந்தை மதிப்பு ஒரு சதுர மீட்டர் ரூ.2020 ஆகும். இதனால் குசராத் அரசுக்கு ரூ.128.71 கோடி இழப்பு ஏற்பட்டதாக தலைமைக் கணக்குத் தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு பல வழிகளிலும் பெருமுதலாளிகள் கொள்ளையடிப்பதன் மூலம் ஏற்பட்ட தொழில் வளர்ச்சியை, மோடி மாபெரும் சாதனை யாகக் கூறிவருகிறார். 1980களில் குசராத்தை ‘இந்துத்துவத் திற்கான ஒரு ஆய்வுக் கூடம்’(Labortory for Hindutva) என்று இந்துத்துவ வெறியர்கள் கூறிவந்தனர். அதுபோல், குசராத்தை மோடி வளர்ச்சியடையச் செய்துள்ளது மாதிரியில் (Gujarat Model) இந்தியா முழுவதையும் வளர்ச்சி பெறச் செய்வதற்காக மோடி தலைமையமைச்சராக வரவேண்டும் என்று தீவிரமாகப் பரப்புரை செய்யப்படுகிறது. 

2009 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அத்வானியைப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தியும் பா.ச.க. தோற்றது. காங்கிரசுக் கட்சி 2004, 2009 ஆகிய இரு நாடாளுமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்றாலும் - 2009 முதலே காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல், ஆதர்சு வீட்டுமனை ஊழல், 2-ஜி அலைக்கற்றை ஊழல், நிலக்கரி ஊழல் என்று இலக்கக்கணக்கான கோடி உருபாய் ஊழல்களில் - புதை மணலில் சிக்கிய யானைபோல் காங் கிரசுக் கட்சி தத்தளித்துக் கொண்டிருப்பதாலும், 2014ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் காங்கி ரசுக்கு மக்கள் வாக்களிக்கமாட்டார்கள் என்று பா.ச.க. திடமாக நம்புகிறது. ஆர்.எஸ்.எஸ். தலைமையோ இன்னும் ஒருபடி தாண்டிச் சிந்திக்கிறது.

1998இல் பா.ச.க. அயோத்தியில் இராமர் கோயில் கட்டுதல், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்குச் சிறப்புரிமை தரும் அரசியல் சட்ட விதி 370-யை நீக்குதல், பொதுவான உரிமை இயல் (Civil) சட்டம் கொண்டுவருவது ஆகிய இந்துத்துவத் தின் முதன்மையான மூன்று கொள்கைகளை மூட்டைகட்டி வைப்பதாக வாக்குறுதி அளித்த பிறகுதான், 23 அரசியல் கட்சிகள் கொண்ட கூட்டணி ஆட்சியை வாஜ்பாய் தலை மையில் அமைக்க முடிந்தது. வாஜ்பாய் ஆட்சியில் இருந்த ஆறு ஆண்டு காலத்திலும் ஆர்.எஸ்.எஸ்., கூட்டணி ஆட்சி முறை நீடிக்கும் வரையில் இந்துத்துவக் கொள்கைகளைத் தீவிரமாகச் செயல்படுத்த முடியாது என்ற நிலையால் எரிச்ச லடைந்தது. அதனால் 2014 தேர்தலில் மோடி தலைமையில் பா.ச.க. தனித்தே நடுவண் அரசில் ஆட்சியை அமைக்க வேண்டும் என்று விரும்புகிறது.

இந்துமதப் புராண, இதிகாசங்களில், இந்துக் கடவுள்கள் மனிதனாக அவதாரமெடுத்து, மக்களை மட்டுமின்றித் தேவர் களையும் காப்பாற்றியதாகப் பல கதைகள் இருக்கின்றன. கிட்டத்தட்ட மோடியை இந்திய மக்களைக் காக்க வந்துள்ள ‘அவதார புருஷராகவே’ முதலாளிய ஊடகங்கள் சித்திரிக்க முயல்கின்றன. தன்னை வானுயர் தோற்றங் கொண்டவ ராகக் காட்டிட, மோடி குசராத்தில் ‘ந.மோ.’ (NaMo) என்று அவருடைய பெயரிலேயே தொலைக்காட்சி அலைவரிசை யைத் தொடங்கி நடத்தி வருகிறார்.

மேலும் இந்திய அளவிலும் உலக அளவிலும் ‘மோடியை விட்டால், வேறு வழியில்லை’ என்ற கருத்தை மக்கள் மனதில் பதியச் செய்வதற்காக, ஏபிகோ வோர்ல்டு வைடு (APCO World Wide) என்ற அமெரிக்காவின் நிறுவனத்தை 2007 ஆகத்து முதல் பயன்படுத்தி வருகிறார்.

‘ஏபிகோ’ நிறுவனம் உயர்ந்த தொழில்நுட்பமும் நவீன ஏமாற்று உத்திகளும் கொண்ட பொதுமக்கள் தொடர்பு முகமை (Public Relations Agency) ஆகும். பெருந்தொகை கொடுத்து மோடி இந்நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறார். 

 2012 திசம்பரில் நடைபெற்ற குசராத் சட்டமன்றத் தேர்தலின் போது, ஒரே நேரத்தில் பல இடங்களில் முப்பரிமாண (3னு)த் தோற்றத்தில் திரையில் தோன்றி உரையாற்றினார் மோடி! இந்த ஏபிகோ நிறுவனம் அமெரிக்காவின் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள், அய்க்கிய நாடுகள் அவை, உலக வங்கி போன்ற அமைப்புகளுக்கும், இசுரேல், கசகஸ்தான் போன்ற நாடு களுக்கும் மக்கள் தொடர்பு முகமையாக வேலை செய்கிறது. 

உண்மைகளைத் திரித்தும் மறைத்தும் கூறுவது, மக்கள் நலனுக்கு ஏற்றது என்பது போன்ற மாயத் தோற் றத்தை உருவாக்கி, பன்னாட்டு நிறுவனங்களுக்கு நலம் சேர்க்கும் திட்டங்களைச் செயல்படுத்த உதவுவது, பொய்யை உண்மையென நம்பச் செய்வது முதலான வேலைகளை ஏபிகோ நிறுவனம் திறம்படச் செய்கிறது.

இந்தியாவில் இத்தகைய நவீன தகவல் தொழில்நுட்ப ஏந்துகள் மோடியிடம் மட்டுமே இருக்கின்றன. இட்லரின் பொய்களை உண்மை யென நம்ப வைத்த கோயபெல்சு போன்று, மோடி தன் னுடைய தவறுகளை மறைக்கவும், தன்னை மாபெரும் தலைவராகக் காட்டவும் ஏபிகோ முகமையையும், ‘ந.மோ.’ தொலைக்காட்சியையும் பயன்படுத்தி வருகிறார்.

இத்தன்மையில், மோடிக்கு நெருக்கமான ஒரு பெரிய முதலாளியக் குழுமம், தேசிய அளவில் ‘மோடி பிரதமர் வேட்பாளர்’ என்பதை முன்னிறுத்தி ஒரு ஆய்வைச் செய்தது. அதன்படி பா.ச.க.வுக்கு 190 இடங்கள் கிடைக்கும். மோடி யைப் பிரதமர் வேட்பாளராக நிறுத்தாவிடில், 160 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்று அந்த ஆய்வு கூறுகிறது. இதன் நோக்கம் பா.ச.க.விலும் பிற சங்பரிவார அமைப்புகளிலும் ‘மோடியை விட்டால் வேறுவழியில்லை’ என்ற கருத்தை நிலைக்கச் செய்வதேயாகும்.

24.6.2013 அன்று பஞ்சாப் மாநிலம் பதான்கோட் நகரில் பா.ச.க.வின் தாய் அமைப்பான ஜனசங்கத்தை நிறுவியவர் களில் ஒருவரான சியாம் பிரசாத் முகர்சியின் 60ஆவது ஆண்டு நினைவு நாள் பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய நரேந்திர மோடி, “வளர்ச்சிப் பாதையில் குசராத் புதிய சிகரங் களைத் தொட்டிருக்கிறது.

இது குறித்து எங்கும் பேசப்படு கிறது. குசராத்தின் வளர்ச்சிப் பாதையைப் பின்பற்றி இந்தியாவும் பீடுநடை போடமுடியும்” என்று கூறியுள்ளார். ஆனால் மோடியின் ஆட்சியில் குசராத் பெற்றுள்ள வளர்ச்சி என்பது வெகுமக்களாக உள்ள பழங்குடியினர், முசுலீம்கள், பிற்படுத் தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் ஆகியோர்க்குக் கிட்டவில்லை. மாறாக அவர்களின் வாழ்வு மேலும் தாழ்ந்துவிட்டது.

உலக அளவில் ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது மொத்த உற்பத்தி மதிப்பின் அடிப்படையில் அளவிடப்படுவதில்லை. மக்களின் கல்வி, மருத்துவ வசதி, சராசரி ஆயுள், ஊட்டச்சத்து, தூய்மையான சுற்றுப்புறம், மின்சாரம், குழந்தைகள் இறப்பு விகிதம் ஆண், பெண் பிறப்பு விகிதம் முதலானவற்றால் மதிப்பிடப்படுகிறது.

2000ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் அய்க்கிய நாடுகள் மன்றம் ‘மனிதவள மேம்பாட்டு அறிக்கையை’(Human Development Report - HDR) வெளியிட்டு வருகிறது. அதன்படி உலகில் 187 நாடுகளில் இந்தியா 134 ஆவது இடத்தில் இருக்கிறது. வறுமைமிகுந்த 88 நாடுகளில் 66 ஆவது இடத்தில் இந்தியா இருக்கிறது. இந்தியாவின் பெருந்தொழில்களை, வணிகத்தை, நிதி நிறுவனங்களை ஆட்டிப் படைக்கும் பனியாக்களின் தாயகம் குசராத். ஆனால் அந்த குசராத்தில் மற்ற மாநிலங்களைவிட வெகுமக்களின் வாழ்க் கைத்தரம் மிகவும் தாழ்ந்திருக்கிறது.

2011ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் மனிதவள மேம் பாட்டு அறிக்கையின்படி, 1996இல் மனிதவள மேம்பாட்டுக் குறியீட்டில் (HDI) 5 ஆவது இடத்தில் இருந்த குசராத், 2006 இல் 9ஆவது இடத்துக்கு இறங்கியுள்ளது. அய்ந்து அகவைக்கு உட்பட்ட சிறுவர்களில் 69.7 விழுக்காடு குழந்தைகள் இரத்தச்சோகையுடன் இருக்கின்றனர். 44.6 விழுக்காடு குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாடுகளுடன் உள்ளனர். எழுத்தறிவு அளிப்பதில், போதிய அக்கறை காட்டாத, மிகவும் பின்தங்கியுள்ள அய்ந்து மாநிலங்களில் குசராத்தும் ஒன்று. குசராத்தின் எழுத்தறிவு இந்தியாவின் சராசரிக்குச் சற்றே அதிகம்.

மின்மிகை மாநிலம் என்று மோடி விளம்பரப்படுத்துகிறார். ஆனால் கிராமப்புறங்களில் பத்து ஆண்டுகளுக்கு முன் ஒரு நாளைக்குப் பத்து மணிநேரம் மின்சாரம் கிடைத்தது; இப்போது ஆறு மணிநேரம் மட்டுமே கிடைக்கிறது. நருமதை அணையிலிருந்து கிடைக்கும் நீரை வறண்ட பகுதிகளான சவுராட்டிரா, கட்சு பகுதி மக்களுக்கு அளிப்பேன் என்றார் மோடி. ஆனால் அந்த நீரை அகமதாபாத்தில் உள்ள முதலாளிகளுக்கும் பணக்காரர்களுக்கும் கொடுத்துக் கொண்டிருக்கிறார். சவுராட்டிரா, கட்சு பகுதி மக்கள் நீரின்றித் தவித்துக் கொண்டிருப்பது பற்றி நாளேடுகளில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. குசராத்தில் மூன்றில் ஒரு பகுதி மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்கின்றனர்.

முசுலீம்கள் உயிரச்சத்துடன் வாழ்வதுடன், எல்லா வகையிலும் புறக் கணிக்கப்பட்டுள்ளனர். பணக்கார மாநிலமான குசராத், இந்தியாவில் அதிகக் கடன் சுமை உள்ள மூன்று மாநிலங்களில் ஒன்றாக இருக்கிறது. மக்கள் நலவாழ்வுக்காக (சுகாதாரம்) 1990-95இல் அரசின் வருவாயில் 4.25 விழுக்காடு செலவிடப்பட்டது. 2005-2010இல் இது வெறும் 0.77 விழுக்காடாகக் குறைத்துள்ளது.

ஆகவே மோடி தம்பட்டம் அடிக்கின்ற குசராத்தின் வளர்ச்சி என்பது, வெகுமக்களின் வாழ்வாதாரங்களைப் பறித்து, அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய அடிப்படையான தேவைகளை மறுத்து, முதலாளிகள், பணக்காரர்கள், நகர்ப்புற மேல்சாதிப் படித்தவர்கள், உயர் பதவிகளில் இருப்ப வர்கள் ஆகியோரின் நலன்களைப் பேணுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டதாகும். நடுவண் அரசும் பிற மாநில அரசுகளும் தாராளமய, தனியார்மய, உலக மயக் கொள்கை யின் பெயரால், மோடியைப் போல்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த அரசுகளும் ஆட்சியாளர்களும் எல்லா வகையிலும் உழைக்கும் மக்களுக்கு எதிரான பகைவர்களேயாவர்.

மற்ற மாநிலங்களைப் போல வலிமையான எதிர்க்கட்சி குசராத்தில் இல்லை. மேலும் வலிமையான முற்போக்கான மக்கள் இயக்கம் குசராத்தில் இல்லை. தென்னிந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் நூறு ஆண்டு களாக வலிமையான சாதி எதிர்ப்பு இயக்கங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. நீதிக்கட்சி அன்று அங்கு உருவாக்கிய மக்கள் நலத் திட்டங்கள், திறமையான நிர்வாகம் ஓரளவு அப்படியே தொடர்கிறது. ஆனால் குசராத்தில் இத்தகைய நிலைகள் இல்லாததால் மோடி ‘காட்டுத் தர்பார்’ நடத்திக் கொண்டிருக்கிறார்.

ஆனால் பல்வேறு தேசிய மொழிகளும் கலாச்சாரமும் பழக்கவழக்கங்களும் கொண்ட இந்தியாவுக்கு மோடியின் ‘சூத்திரம்’ பொருந்தாது. இந்தியாவில், இந்துக்கள் 85 விழுக்காட்டினராக இருந்தபோதிலும் இவர்களில் பெரும்பாலோர் கொலைகார இந்துத்துவத்தை ஏற்பதில்லை. ‘இராம பாணம்’ (இராமனுக்குக் கோயில் கட்டுதல்) பா.ச.க.வுக்கு ஒருமுறைதான் கைகொடுத்தது. அதோடு அது காலாவதி யாகிவிட்டது. எனவே ‘மோடி பாணம்’, ‘புஸ்வாணமாகி’விடும் என்பது உறுதி!

காங்கிரசோ, பா.ச.க.வோ நடுவண் அரசில் இனி தனித்து ஆட்சி அமைக்க முடியாது. மாநிலக் கட்சிகளின் துணையில்லாமல் ஆட்சிக்கு வர முடியாது. தி.மு.க., அ.தி.மு.க., தெலுங்குதேசம், மதச்சார்பற்ற சனாதளம், பிஜு சனதாதளம், அய்க்கிய சனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதாதளம், திரிணாமுல் காங்கிரசு, சிவசேனை, அகாலிதளம், சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி முதலாள பெரிய மாநிலக் கட்சிகள் இனியேனும் நடுவண் அரசில் காங்கிரசுக்கும் பா.ச.க.வுக்கும் சேவகம் செய்வதை நிறுத்திவிட்டு, தில்லியில் குவிக்கப்பட்டுள்ள அதிகாரங்களை உடைத்தெறிந்து, அவற்றை ஒவ்வொரு மொழி மாநில அரசும் பெற்று, அந்தந்த மாநிலத்தின் தேசிய மொழியும், அம்மக்களின் சமூகம், பொருளியல் வாழ்வும் சிறந்தோங்கிட வழிகாண வேண்டும்.

 இத்திசையில்,வழக்கமான பொதுவுடைமைக்கட்சிகளும் நேர்மையுடன் செயல்பட வேண்டும். அப்போதுதான் இந்துத்துவ, பார்ப்பன-பனியா, முதலாளிகள் ஆதிக்கத்தில் உள்ள காங்கிரசுக் கட்சியையும், பாரதிய சனதாக் கட்சியையும் வீழ்த்த முடியும். இவ்விருகட்சிகளை வீழ்த்துவதன் மூலமே பல்வேறு தேசிய மொழிகளையும், இனங்களையும் பன்முகக் கலாச்சாரத்தையும் காக்க முடியும். உண்மையான மதச்சார்பற்ற கூட்டாட்சியை இங்கு அமைக்க முடியும். மெய்யான மக்களாட்சி அப்போதுதான் மலரும்.

Comments

13 comments

13
சாணக்கியன்
ஆரியக்கூத்தாடிகளின் சாம தான பேத தண்டங்கள் அனைத்தும் தவிடுபொடியாகி விட்டது. இறுதி கட்டமாக "இது ஹிந்து நாடு, இங்கு முஸ்லிம்களுக்கு இடமில்லை. ஓடுங்கள் பாக்கிஸ்தானுக்கு" என்று போலிஸ், ராணூவத்தை வைத்து இந்தியாவுக்கு சுத்திகரணம் செய்வதுதான் ஹிந்துத்வ வெறியர் அத்வானி, மோடி ஆகியோரின் திட்டம். ------ போலிஸ், சட்டம், நீதியின் மேல் முஸ்லிம்களுக்கு நம்பிக்கை போய்விட்டது. "பாக்கிஸ்தானை ஜின்னா உருவாக்கியது முற்றிலும் சரியே. தலைக்கு மேல் வெள்ளம், ஜான் போனாலென்ன முழம் போனாலென்ன?. ஆறிலும் சாவு, நூறிலும் சாவு" எனும் மனநிலைக்கு பெருவாரியான முஸ்லிம் சமுதாயம் தள்ளப்படுகிறதென்றால் மிகையாகாது. ------- முசல்மானோடு சொதப்பினால், சோவியத் யூனியன் போல் இந்தியாவும் துண்டுதுண்டாகி விடும் என்பதில் சந்தேகமில்லை.
Chandar
@Chanankya: Aiyo Thaanga mudiyalappa. LOL, ROFTL.
சாணக்கியன்
பிராமின்ஸின் அறிவுத்திறனை உலகமே பாராட்டுகிறது என்பதை மறுக்கமுடியாது. ஆனால் இவர்களின் அறிவால் அமெரிக்காவும் ஆங்கிலேயரும்தான் பயனடைந்துள்ளனர். 80 சதவீத இந்தியாவில் வறுமையும், ஜாதிக்கொடுமையும்தானே பெருகி தாண்டவமாடுகிறது. ஜாதியை ஒழித்தால்தான் இந்தியா உருப்படும். இந்தியா ஒரு வளமான நாடாக உருவாக வேண்டுமானால், இஸ்லாம் ஒன்றே தீர்வு. ---- கற்றறிந்த சான்றோரை இஸ்லாத்துக்கு அழையுங்கள். அவர்களை தலைவராக ஏற்றுக்கொள்ளுங்கள் என்றார் பெருமானார்(ஸல்). இன்று பிராமின்ஸுக்கு நிகரான கற்றறிந்த சான்றோர்கள் இந்தியா, பாக்கிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தானில் வாழும் 70 கோடி முஸ்லிம்களில் யாருமே கிடையாது. பிராமின் சமுதாயத்தை உலக நாடுகள் பெரிதும் மதிக்கின்றன. முஸ்லிம் நாடுகள், இது போல் நமது முஸ்லிம்களில் யாருமே இல்லையே என்று ஏங்குகின்றன. ----- பிராமின்ஸிடம் ஒன்று கேட்க விரும்புகிறேன். பிராமின்ஸ் ஒட்டுமொத்தமாக இஸ்லாத்தை தழுவினால், 70 கோடி முஸ்லிம்களுக்கு தலைமையேற்க உங்களைவிட சிறந்த தலைவர்கள் அகண்டபாரதத்தில் உண்டா?. நீங்கள் ஏன் எங்களுடைய கலீபாக்களாக வரக்கூடாது?.
Agilan
@சாநிக்யன். ஆஹா என்ன ஒரு கனவு..! என்ன ஒரு லட்சியம்..! இந்தியா உடையவேண்டும?! ஆப்கான், பாகிஸ்தான், ஈரான், சிரியா, சுடன் போன்று பல இசுலாமிய அமைதி பூங்ககள் இந்தியாவில் உருவாக வேண்டும் என்கிற உங்கள் கனவு, லட்சியம் புரிகிறது. ஆனால் என்ன செய்ய. இந்தியாவில் இருந்து பிரிந்த பாகிஸ்தான் படும் பாடு உலகம் அறிந்தது. அங்கே ஏக இறைவனின் குழந்தைகள் ஒரு வரை ஒருவர் ஷியா, சுன்னி அகமதிய என்கிற ஜாதி அடிபடையில் கொன்று குவித்து இறை பணியை தொடர்கிறார்கள். இது ஏகபோகமாக இந்தியாவில் நடத்த முடியாத உங்களின் வருத்தம் புரிகிறது.... உங்களை போன்ற முஸ்லிம்களின் பிரெச்சனை உங்கள் மத தலைவர்களே. ஏழாவது நூற்றாண்டிலேயே உங்கள் மனநிலையை கைது செய்யும் வேலையை செவ்வனே செய்து கொண்டிருகிறார்கள். மூளை சலவை செய்யப்பட்ட உங்களை போன்றோர் உலகதில் எந்த மூலையில் இருந்தாலும் இப்படி தான் இருப்பீர்கள்..!! உங்கள் மத்தியில் இருக்கும் கயவர்களை இனம் கண்டுகொள்ளாமல் உங்கள் கோவத்தை இந்தியா மீது காட்டினால், யாசின் பட்கல் மாதிரி உள்ளே போக வேண்டி தான்... கூடிய சீக்கிரம் போவீர்கள் என்று எதிர்பார்கிறோம். உங்கள் அரபு முதலாளிகள் மகிழ்ச்சி அடைவார்கள்.
seyed muhammed
அய்யா சாணக்கியரே!
உமது ஒய்யாரக் கொண்டையை அதற்கான அரிதார பூச்சை முஸ்லிம்களிடம் தான் காட்ட வேண்டுமா?
நீர் ஒரு முஸ்லிம் ஆதரவாளன் போல் எழுத வேண்டும்....அதை விமர்சிக்கும் ஹிந்து அபிமானிகளாய் நாங்கள் தொடர வேண்டும் எனும் அம்பிகள் ஆத்து அடுப்படி சமாச்சாரம் பழைய ஊசிப் போன பெருங்காய டப்பா,குமட்டுகிறது.
ஓஹோ....!!!உங்களவர்களுக்கு இப்படி ஓர் ஆசையா?இந்தியாவை சுத்திகரிக்க போகிறீர்களாக்கும்...அதும் இராணுவத்தையும் போலீஸையும் துணையாக்கிக் கொண்டு!!!பாவம்...சாணக்கியரும் சாணக்கிய சஹாக்களும்.
இந்தியாவை உடைக்க தெரிந்த பார்ப்பன மேதாவிகளுக்கு ஒன்றை உருவாக்கவோ உருவாக்கியதை குலையாமல் பாதுகாப்பதற்கோ தெரியாது.இது அவசரத்தின் ஆத்திரத்தின் அவஸ்த்தை.நான் மட்டும் வாழ வேண்டும் என்ற பொறாமையின் பேராசையின் விளைவு.இது பார்ப்பனர்களை பைத்தியமாக்கிவிடுகின்றது.
66 ஆண்டுகால பார்ப்பன இந்தியா வளர்ந்துள்ளதா?வீழ்ந்துள்ளதா?என சாமான்யர்களிடம் கேட்டாலும் கிடைக்கும் உடனடி பதில் இந்தியா இடிந்து போயுள்ளது.இந்தியாவின் செல்வங்களும் கனிவர்க்க கருவூலங்களும் கொள்ளை போயுள்ளது.மொத்தத்தில் இந்தியா இடி விழுந்த மரமாய் மூளியாயுள்ளது.
ஆமாம்...அது என்ன பிராமின்ஸின் அறிவு திறமை...உலகம் வியக்க கூடிய அறிவு திறமை.ஆபே டூபே எனும் மேற்கத்தியர் இந்தியாவை சுற்றி பார்த்து விட்டு ஒரு சான்றிதழை பிராமணர்கள் குறித்து வரைந்துள்ளாரே...அதை பேரறிஞர் அண்ணா தமது ஆரிய மாயையில் அழகு தமிழில் போற்றிப் பாவாக்கியுள்ளாரே....அந்த அறிவு ஆற்றலா...கீழுள்ள போற்றிப் பாவை வாசியுங்களேன்
பேராசைப் பெருந்தகையே போற்றி!
பேச நா இரண்டுடையாய் போற்றி!
தந்திர மூர்த்தி போற்றி!
தாசர்தம் தலைவா போற்றி!
வஞ்சக வேந்தே போற்றி!
வண்கன நாதா போற்றி!
கொடுமை குணாளா போற்றி!
கோழையே போற்றி போற்றி!
பயங்கொள்ளிப் பரமா போற்றி!
படுமோசம் புரிவாய் போற்றி!
சிண்டு முடிந்திடுவோய் போற்றி!
சிரித்திடு நரியே போற்றி!
ஒட்டுவித்தை கற்றோய் போற்றி!
உயர் அநீதி உணர்வோய் போற்றி!
எம் இனம் கெடுத்தாய் போற்றி!
ஈடில்லாக் கேடே போற்றி!
இரை,இதோ,போற்றி!போற்றி
ஏத்தினேன் போற்றி!போற்றி!!
இந்த அறிவுப் பிரகாசத்தை உலகம் போற்றி தொழுகிறதோ.... சாணக்கியர் விளக்கி சாஸ்த்திரம் படைத்தால் நலாமாயிருக்கும்.எதிர் பார்ப்போமா!!காத்திருப்போமா!!!
Chandar
//பேராசைப் பெருந்தகையே போற்றி! பேச நா இரண்டுடையாய் போற்றி! தந்திர மூர்த்தி போற்றி! தாசர்தம் தலைவா போற்றி! வஞ்சக வேந்தே போற்றி! வண்கன நாதா போற்றி! கொடுமை குணாளா போற்றி! கோழையே போற்றி போற்றி! பயங்கொள்ளிப் பரமா போற்றி! படுமோசம் புரிவாய் போற்றி! சிண்டு முடிந்திடுவோய் போற்றி! சிரித்திடு நரியே போற்றி! ஒட்டுவித்தை கற்றோய் போற்றி! உயர் அநீதி உணர்வோய் போற்றி! எம் இனம் கெடுத்தாய் போற்றி! ஈடில்லாக் கேடே போற்றி! இரை,இதோ,போற்றி!போற்றி ஏத்தினேன் போற்றி!போற்றி!!// - Appropriate Karunanidhi Naamavali, the dear friend of so called minorities.
சாணக்கியன்
////சாணக்கியர் விளக்கி சாஸ்த்திரம் படைத்தால் நலாமாயிருக்கும்./// ------- இஸ்லாத்தின் நான்கு மாபெரும் கலிபாக்கள், அபுபக்கர், உமர், உஸ்மான், அலி ஆகிய அனைவருமே சிலைவணக்கம் செய்யும் பிராமின் காபிராக இருந்துதான் இஸ்லாத்தின் ஒப்பற்ற தலைவரானார்கள். பெருமானாரை 42 வருடங்கள் பாதுகாத்து வளர்த்த அவருடை சொந்த பெரியப்பா மஹா பிராமின் அபு தாலிப் இறுதி வரை இஸ்லாத்தை ஏற்கவில்லை --- அன்னை ஆயிஷா ஒரு உயர்ந்த பிராமின் குலத்தில் பிறந்தவர். அவருடைய தந்தை அபுபக்கர் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன் காபாவில் பூசாரியாக இருந்தார். --- அனைத்து முஸ்லிம் நாடுகளிலும் முஸ்லிமும் முஸ்லிமும் அடித்துக்கொண்டு சாகிறார்கள். ஆனால் அரபு நாடுகளில் அமைதி நிலவுகிறதென்றால், அதற்குக்காரணம் அங்கே வேலை செய்யும் 2 கோடி காபிர்கள். இவர்கள் இல்லாவிட்டால், ஷியாவும் சன்னியும் அடித்துக்கொண்டு சாவார்கள். --- பிராமின்ஸ் இஸ்லாத்தை ஏற்றால் அகண்டபாரதத்தின் கலீபாக்களாக நல்லாட்சி செய்வார்கள். தருமம் தழைக்கும். நீதி நிலைக்கும் --- 55 இஸ்லாமிய நாடுகளில் அமைதி தவழும்.
seyed muhammed
சாணக்கியருக்கு சாஸ்த்திரம் படைக்க தெரியவில்லை என்றாலும்.....குல பண்பாகிய பல்லிளிப்பு சமாச்சாரத்திற்கு மட்டும் குறைவில்லை.
செயற்கரிய செயலை செய்தோரை தன் இனமாக குலமாக கற்பனை செய்வது,அதன் மூலம் நாங்கள் உயர்ந்தோர் எனும் கோட்பாட்டை தக்க வைத்துக் கொள்ள முயற்ச்சிப்பது பார்ப்பனர்களின் அடங்கா வெறி.இந்த வெறிக்கு பெரியாரையும் பலி கொடுக்க முனைந்தார் இதயம் பேசுகிறது மணியன்.தி.க.வின் எச்சரிக்கை உணர்வு மணியனை முடக்கியது.அதே பாணியில் சாணக்கியன்.....பாவம் இது போன்ற பொல்லாங்குகளை இஸ்லாம் தன் வரலாறு நெடுகிலும் சந்தித்துள்ளது;முட்டியவர்களையும்,முழங்கால் பிடித்தவர்களையும்,நெடுஞ்சாண்கிடையாய் வீழ்ந்தவர்களையும் அவர்கள் பறித்த பள்ளங்களையும் புறம் தள்ளி தன் உயர் வழியில் எவ்வித தடையுமின்றி பீடுநடை போடுகிறது,உலகின் இறுதி நாள் வரை இந்த நடை நிற்க்காது.
சாணக்கியர்க்கு வாலும் தெரியவில்லை,வரலாறும் தெரியவில்லை என்ற என் கருத்திற்கு வலு சேர்க்கும் மற்றுமோர் வாசக பதிவு தான் மேலுள்ளது.
வரலாற்றின் குறிப்புகளிலிருந்து நமக்கு கிடைக்கும் எல்லா ஆதாரப்பூர்வமான சான்றுகளும் ஆரியர்கள் அதாவது இந்திய பிராமணர்கள் பனூ இப்றாகிம் எனப்படும் இப்றாகிம் நபி வம்ச வழியை சேர்ந்தோர் அல்ல;இப்றாகிம் நபியின் வமசம் இரு பெரும் பரம்பரைகளாக விரிந்தது;ஒன்று இஸ்ஹாக் நபியின் வம்சாவளி,மற்றொன்று இஸ்மாயில் நபியின் வம்சாவளி.இதில் இஸ்ஹாக் நபியின் வம்சாவளி பிற்காலத்தில் இஸ்ஹாக் நபியின் மகனார் யாகூப் நபியின் பெயரால் பிரபல்யமாகியது அதன் பெயர் பனூ இஸ்ராயீல் அதாவது இஸ்ராயீல்களின் சந்ததிகள்.இஸ்ராயிலின் சந்ததிகளுக்கும் நம்மிடையேயுள்ள யூதர்களுக்குமான தொடர்பே வரலாற்றில் கேள்விகுறியாக உள்ளது.இந்நிலையில் ஆரிய இன விருத்தியை சேர்ந்த பிராமணர்களை இப்றாகிமின் சந்ததியில் இணைக்க எண்ணுவது.....இராமர் கோயில்,இராமர் பிறந்த இடம் போன்ற ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்..பொய்யன்றி வேறில்லை.
சிலர் பிராமணர்களுக்கும்,பனூ இஸ்ரேலர்களுக்கும் ஒரு கடும் முடிச்சிட முயற்ச்சிக்கிறார்கள்.அது இஸ்ராயிலின் சந்ததிகளில் சிலர் பசு வணங்கி வழி கெட்டு போயிருந்தனர்;அந்த வழி கெட்டோரின் மிச்ச தொச்சம் தான் பிராமணர்கள் என்கின்றனர்.இது வரலாறு அறியா ஞான சூனியன்கள்.இந்த பிராமணர்கள் ஆரமபத்தில் பசுவையும் அதன் கன்றையும் வேள்வியில் பொசுக்கி உணவாய் உண்டவர்கள்;பிற்காலத்தில் வேள்விக்கு எதிரான புத்தரின் எழுச்சி பிராமணர்களை பசு மாதாவை கோமாதாவை உருவாக்க வழியானது.அத்தோடு இஸ்ராயிலின் சந்ததியிலிருந்த சிலர் மாட்டை வணங்கும் மடையராய் உரு மாறா அவர்களின் அடிமைத்தனமும் காரணம்.எகிப்தை ஆண்ட பிர் அவ்ன் இஸ்ராயிலின் சந்ததிகளை அடிமையாக்கி தாழ்த்திருந்தான்.ஆட்சியிலிருந்த பிர் அவ்னின் சமுகம் மாட்டையும்,சூரியனையும்,அவதார கயமைகளையும் பெரிதாய் கடவுளாய் நம்பி வழிபடும் காட்டுமிராண்டிகள் விலங்காடிகள்.ஆட்சியிலிருந்தோரை அடிமைகள் பின்பற்றுவது உலக வழக்கம்.அது தான் இஸ்ராயிலினத்தவரில் சிலரை பீடித்தது.இவர்களை மீட்ட நபி மூஸா அவர்கள் முதலில் இஸ்ரவேலர்களின் உள்ளத்திலிருந்து துடைத்தெறிந்தது மாட்டு வணக்கத்தை தான்.ஆதலால் இஸ்ரவேலர்களே பிரமணர்கள் என்பதற்கு கிஞ்சிற்றும் இடமில்லை.
இதில்,தூய அரபுலக இஸ்மாயிலின் சந்ததிகள் பிராமணர்கள் என கதைப்பது....கற்பனை அல்ல...கடைந்தெடுத்த அயோக்கிய தனம்.
இஸ்லாம்,மனிதர்களுக்கான மனிதர்களை படைத்த இறைவனின் மார்க்கம்.இதிலிருந்து மனிதர்களை திசை திருப்பி வழி கெடுத்த ஷைத்தானகள் கற்ப்பித்தது தான் சிலை வணக்கமும் சிலை வணக்க சீரழிவுகளும்.அந்த சிலை வணக்கத்தில் வீழ்ந்து கிடந்த இஸ்மாயிலின் சந்ததிகளை முன்னிருத்தி உலக மக்கள் எல்லோருக்குமான அழைப்பு தான் இஸ்லாமிய அழைப்பு.இதில் பிரமணர்கள் இஸ்லாத்தை ஏற்ப்பதும்,ஏற்க மறுப்பதும் அவர்களின் நலனுக்குரியதே அன்றி அதனால் இஸ்லாத்திற்கு பெருமையோ பேருவகையோ அல்ல.மனிதன் தன்னைப் படைத்த உண்மையான இறைவனை அறிந்து கொண்டான் முஸ்லிமானான் அவ்வளவு தான்.
திருமாவளவன் இஸ்லாத்தை ஏற்றாலும் காஞ்சி சங்கராச்சாரியார் இஸ்லாத்தை ஏற்றாலும் இரண்டும் ஓன்றே!மனிதர்களை எவ்வகையிலும் வேறுபடுத்தி காண முடியாத மனிதர்களுக்கான மார்க்கம் இஸ்லாம்.இந்தியா இதற்கு வலுவான சான்றாயுள்ளது.இந்தியாவின் முஸ்லிம் ஆட்சியாளர்களாக இராஜ பரம்பரையை சேர்ந்தோரும் இருந்திருக்கிறார்கள்,அடிமைகளும் ஆண்டிருக்கிறார்கள்.இஸ்லாத்தில் மனிதன் எல்லா நிலையிலும் சூழலிலும் மனிதன்.
seyed muhammed
இஸ்மாயிலின் சந்ததிகள் இயல்பில் இயற்கையாகவே ஓரிறைக் கொள்கையாளர்கள்.இதை ஆமிர் இப்னு லூயீ எனும் ஒரு குரைஷி குல தலைவன் சீரழித்தான்.அவன் தான் தன் வியாபார பயணத்தில் ஷாம் நாட்டில் கண்ட சிலை வணக்கத்தை முதல் முதலில் மக்காவிற்கு கொண்டு வந்தவன்.இவனுடைய கையறு நிலையை காருண்ய தூதர் முஹம்மது(இறைவனின் அருளும் கருணையும் அவர்கள் மீது பொழியட்டுமாக!)கூறினார்கள்:ஆமிர் தன் குடலை இழுத்துக் கொண்டு நரக நெருப்பினூடே இங்கும் அங்கும் அமைதியிழந்து அலைந்து திரியக் கண்டேன்.
இந்த வரலாற்று குறிப்பின் நோக்கம்...மக்காவில் வாழ்ந்த பலர் சிலை வணக்கம் அதன் உச்சத்தை தொட்ட நிலையிலும் அதை வெறுத்து வாழ்ந்தவர்களும் உண்டு.அவர்களில் ஒருவர் அபூபக்கர்(அல்லாஹி அவர்களை பொருந்தி கொள்வானாக!).தன் தந்தையோடு கஃபாவிற்கு சிறு வயதில் செல்கிறார் தந்தையோ பக்தி பரவசத்தோடு சிலைக்கு முன் நிற்கிறார்.மகனின் உள்ளத்திலோ ஆயிரம் கேள்விகள்.தந்தை கஃபாவை விட்டு வெளியேறியவுடன் சிலையின் அருகாமையில் சென்று கேட்டார்:சிலைகளே ஏன் நீங்கள் பார்ப்பதில்லை?நடப்பதில்லை?பேசுவதில்லை?உங்கள் முன் வைக்கப்படும் நேர்ச்சைகளை உண்வுகளை உண்பதில்லை?என கேட்டு விட்டு சிலைகளை சபித்து விட்டு வெளியேறினார்.அத்தோடு சிலைகளை மறந்தார்.சாணக்கியனோ...அபுபக்கர் பூசாரியாக பணியாற்றினார் என கயிறு திரிக்கிறார்.இது தான் சாணக்கியரின் வரலாற்று ஞானம்;பொங்கி பிராவகமாய் பீறிட்டடிக்கிறது.
சாணக்கியன்
////தூய அரபுலக இஸ்மாயிலின் சந்ததிகள் பிராமணர்கள் என கதைப்பது....கற்பனை அல்ல...கடைந்தெடுத்த அயோக்கிய தனம் //// ---- 1. ப்ராஹ்மின் என்பது அரபி வார்த்தை. "ப்ராஹ்ம்+மின்" எனும் இரண்டு சொற்களின் இணைப்பு. அரபியில் "மின்" என்றால் "அங்கிருந்து, அதிலுருந்து" என்று பொருள். --- ப்ராஹ்ம்+மின் = "ப்ராஹ்ம்"ல் இருந்து", பிரம்மனிலிருந்து. ---- 2. ப்ராஹ்மணா எனும் சமஸ்கிருத வார்த்தையும் "ப்ராஹ்ம்+அனா" எனும் வார்த்தைகளின் இணைப்பு. அரபியில் "அனா" என்றால் நான் என்று பொருள். --- ப்ராஹ்ம்+அனா = நான் "ப்ராஹ்ம்", நான் இப்ராஹிமின் சந்ததி. ---- 3. இது தவிர ஹஜ்ஜில் முஸ்லிம்கள் நிறைவேற்றும் கடமைகளும் திருப்பதியில் ப்ராமின்ஸ் நிறைவேற்றும் கடமைகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானது என்பதை மறுக்க முடியாது. "மொட்டையடித்தல், இஹ்ராம் எனும் தையலற்ற வெள்ளைத்துணியை உடலில் சுற்றிக்கொள்ளுதல், ஏழு முறை கஃபாவையும் கர்ப்பக்கிருகத்தையும் சுற்றுதல், தூண் மீது சிறு கூழாங்கற்களை ஏழு முறை எறிதல் - பூக்களை எறிந்து அர்ச்சித்தல் , ஜம் ஜம் எனும் புனித நீர் குடித்தல் - தீர்த்தம் அருந்துதல்" ---- 4. இப்ராஹிம்(அலை) அவர்களின் துணைவியார் பெயர் சாரா. ப்ரம்மனின் மனைவி பெயர் சர"ஸ்வதி". ஸ்வதி என்றால் தூய்மை. அதாவது தூய சாரா என்று பொருள். ---- 5. காஃபாவுக்கு வெளியே இப்ராஹிம்(அலை) அவர்களின் பாதச்சுவடுகள் "மகாமே இப்ராஹிம்" எனும் உலோகக் கூண்டுக்குள் பாதுகாக்கப் படுகிறது. முஸ்லிம்களுக்கு இது மிகவும் புனிதமானது. குரைஷி பிராமின்ஸும் இதை மிகவும் புனிதமாகக் கருதி 2500 வருடங்கள் பூஜித்தனர். அதுதான் இன்று பாதபூஜை எனும் சம்பிராதயமாக மாறிவிட்டது. ---- 6. பெருமாரை(ஸல்) 40வயதில் அல்லாஹ் நபியாக அறிவித்தான். அதன் பிறகு அவருக்கு தொழுகை ஜிப்ராயில்(அலை) மூலம் கற்றுத்தரப்பட்டது. அதற்கு முன்பு வரை, ஹீரா குகையில் சென்று தனிமையில் ஏக இறைவனை தியானம் செய்தார். பிரம்ம ரிஷி விசுவாமித்திரர் முதல் ஆயிரக்கணக்கான வருடங்களாக குகையில் இறைவனை தியாணம் செய்வோர் பிராமின் ரிஷிக்கள் என்பதை மறுக்க முடியுமா? --- 7. காபாவில் 360 சிலைகளை வைத்து வணங்கிக்கொண்டிருந்த குரைஷிக்கள் யாரென தேடினேன். அன்னை ஆயிஷா பதில் சொன்னார். ஆம். ஷா என்று முடியும் ஒரு அரபி பெயர் கூட இல்லையே, ஏன் எனும் வினா எழுந்தது. ஆ ஷா, உ ஷா, ஹர்ஷா, வர்ஷா, அபிலாஷா, அலிஷா, அனிஷா, திஷா, நிஷா... என்று கிட்டத்தட்ட 150 பிராமண பெண்களின் பெயர்கள் கிடைத்தன. ரிஷி மூலம் நதி முலம் அறிந்து கொண்டேன். --- "ப்ராஹ்ம்-மின்" தான் இப்ராஹ்ம்-மின். "இப்ராஹ்ம்-மின்" தான் ப்ராஹ்ம்-மின். --- பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகம் இருண்டுவிடுமா?.
சாணக்கியன்
/// செயற்கரிய செயலை செய்தோரை தன் இனமாக குலமாக கற்பனை செய்வது,அதன் மூலம் நாங்கள் உயர்ந்தோர் எனும் கோட்பாட்டை தக்க வைத்துக் கொள்ள முயற்ச்சிப்பது பார்ப்பனர்களின் அடங்கா வெறி /// --------- நாலு வார்த்தை அண்ணவிடமிருந்தும் பெரியாரிடமிருந்தும் கற்றுக்கொண்டால் என்னமோ பெரிய திராவிட கொழுந்து எனும் நினைப்பா?. ---- ஈழத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை கொன்று குவித்த உமது தொப்புள்கொடி உறவுகள் பார்ப்பனனா, திராவிடனா?. ---- குஜரத்தில் முசல்மான்களை நரவேட்டையாடிய மோடி சூத்திரனா அல்லது தூய பிராமணனா?. ---- நாளை தமிழ்த்தேசம் பிறக்கும் சூழல் வந்துவிட்டால், ஈழத்தில் நடந்தது போல் அருவாளை தூக்கிகொண்டு முசல்மானை விரட்டப் போவது உமது திராவிட இனம்தான் என்பது நினைவிருக்கட்டும். அப்பொழுது என்ன செய்வீர் திராவிட புத்திரா?
சாணக்கியன்
//// அபூபக்கர் .... சிலையின் அருகாமையில் சென்று கேட்டார்: சிலைகளே ஏன் நீங்கள் பார்ப்பதில்லை? நடப்பதில்லை? பேசுவதில்லை? உங்கள் முன் வைக்கப்படும் நேர்ச்சைகளை உண்வுகளை உண்பதில்லை? என கேட்டு விட்டு சிலைகளை சபித்து விட்டு வெளியேறினார்.//// ----- இந்த கேள்வியை கேட்டது ப்ராஹ்மணரின் முப்பாட்டனார் நபி (இ)ப்ராஹ்ம் அவர்கள்--- அபுபக்கர் என்பது சுத்த புருடா. முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் முடிச்சுபோடும் எத்தனிப்பு --- காபாவை பாதுகாத்த பெருமானாரின் பாட்டனார் அப்துல் முத்தலிப், ஏன் 360 சிலைகளை அகற்றவில்லை?. --- பெருமானாரை கொல்வதற்கு அலைந்த அபுலஹப் அவருடைய சொந்த பெரியாப்பா என்பது நினைவிருக்கட்டும்.----- காபாவில் வேத மந்திரங்களை ஓதி சிலைகளுக்கு பூஜை புனஸ்காரம் செய்தவர் பிராமணரா அல்லது உமது தொப்புள்கொடி உறவா?
seyed muhammed
தொப்புள் கொடி உறவு எனும் உன்னதத்தை உணர நான் மனிதன்,முதல் மனிதன் மண்ணிலிருந்து படைக்கப் பட்டான்.ஆக,மண்ணில் வித்தியாசமில்லை.மண்ணின் தன்மையை உயர்த்தவும் தாழ்த்தவும் கூடிய பண்பை ஆற்றலை இறைவன் மனிதனுக்கு வழங்கியுள்ளான் என இயற்கை சார்ந்த சிந்தனை மனிதனுக்கு வரும்,அவந்தான் தன் தொப்புள் கொடி உறவையும் எண்ணி பார்ப்பான்.
ஆனால்,நான் மனிதன் அல்ல;என் பிறப்பு மனித அடிப்படையானது அல்ல;நான் முகத்தில் தோன்றியவன் எனும் கற்பனை முற்றிய மன நோயின் அறிகுறி.இயற்கை,மனித படைப்பில் மாற்றங்களிலின்றி தொடர்கிறது.அந்த தொடருக்கு தொடர்பில்லாமல் ஒருவன் உளறுகிறான் எனில் அது மன நோய்.....சாதாரண நோயல்ல....நோயின் முற்றிய நிலை.அவர்களால் பிற மனிதர்களை மனிதர்களாக ஏற்க முடியாது.பிற மனிதர்களின் சக வாசத்தை ஏற்க முடியாது.யாரை பார்க்கினும் தொடாதே தள்ளிப் போ தீட்டு என சொல்லத் தான் தோன்றும்.இப்பொழுது சொல்லுங்கள் சாணக்கியரே இது மன நோயின் முற்றிய நிலையா?இல்லையா?இப்பொழுது கூறுங்கள் நீங்கள் யார்?
மக்காவை வென்று கஃபாவின் உள்ளே நுழைந்த மாமனிதர் முஹம்மது(ஸல்லல்லாஹீ அலைஹி வ ஸல்லம்)தன்னோடு அழைத்து சென்றது மக்கத்து குரைஷி ஜாதி வெறியர்களால் ஒடுக்கப்பட்ட இழிவாய் கருதப்பட்ட மாமனிதன் பிலால் எனும் அபீஸீனிய கருப்பின மகனை.........தன் குடும்பத்தின் அங்கத்தினரை அல்ல.இஸ்லாம்,மனிதர்களுக்கான இறை மார்க்கம்.இங்கு சிலை வணக்க இழிவின் எந்த ஷில்மிஷங்களும் கிடையாது.ஆதலால் தான் மாமனிதர் முஹம்மது(ஸல்லல்லாஹீ அலை ஹிவஸல்லம்)சிலைகளை உடைக்கவும் கஃபாவினுல் ஏக இறைவனின் அடிமையாகவும் உட்புக முதலில் அழைத்து சென்றது மாமனிதர் பிலாலை(அல்லாஹி அருள்பாலிப்பானாக)!
கஃபாவை பாதுகாத்த தன் பாட்டனார் இயற்கை மார்க்கம் இஸ்லாத்தை கை விட்டு சிலை வணக்க சீரழிவில் சிக்கி சிதந்ததால் தான் அவர் எங்கே என கேட்டவருக்கு நரகில் வேதனை செய்யப்படுகிறார் என்றார்கள் இறைவனின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹீ அலைஹி வ ஸல்லம்.இதை நான் முன்பே எழுதியுள்ளேன்...மீண்டும் அதையே பெரிய கண்டு பிடிப்பாய் எழுதுவது மன சிதைவிற்கான அறிகுறியே!

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.