கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்ததில் இருந்து, ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களை மூளை வெளுப்பு செய்யும் பணியில் காவிக் கும்பலினர் சுறுசுறுப்பு அடைந்தனர். இப்பொழுது உத்தரப்பிரதேம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் மாநிலங்களில் ஆட்சியைக் கைப்பற்றிய பின் அவர்கள் அப்பணியில் தலை கால் தெரியாத வேகத்துடன் செயல்படத் தெடங்கி இருக்கிறார்கள்.

அவர்கள் இப்பொழுது முக்கியமாக முன்வைக்கும் வாதம், பெரியாரியவாதிகள் இந்து மதத்தை மட்டுமே எதிர்க்கின்றனர்; பிற மதங்களை எதிர்க்க அஞ்சுகின்றனர் என்பதுதான். இதற்கு அவாளும், அவாளால் மூளை வெளுப்பு செய்யப்பட்ட மற்றவர்களும் கொடுக்கும் விளக்கம் இது தான்.

இந்துக்கள் சாதுவானவர்கள்; சகிப்புத் தன்மை உடையவர்கள்; இவர்களை விமர்சிப்பதால் எதிர்த் தாக்குதல் இராது; ஆகவே துணிவாக எதிர்க்கலாம். ஆனால் இஸ்லாமியர்களும், கிருத்துவர்களும் அப்படி அல்ல; அவர்கள் சிறிதும் சகிப்புத்தன்மை இல்லாதவர்கள்; தங்களை எதிர்ப்பவர்களை வன்முறையால் தாக்கி அழிவை ஏற்படுத்தி விடுவார்கள். ஆகவே அவர்கள் மீது தாக்குதலைத் தொடுக்க அஞ்சுகின்றனர்.

அவாளின் இந்த விளக்கம் கலப்படம் இல்லாத பட்டவர்த்தமான பொய்யே. பெரியார் மூட நம்பிக்கை களைக் கண்டனம் செய்தபோது, இஸ்லாமிய, கிருத்துவ மதத்தினரை மட்டும் அல்ல; நாத்திகத்தை அடிப்படை யாகக் கொண்ட புத்த மதத்தினரையும் விமர்சிக்கத் தயங்க வில்லை,

மாரியம்மன் தீமிதி விழாவைப் போல், இஸ்லாமியர் களிடையே சந்தனக் கூடு தீமிதி விழா நடைபெறுவதை விமர்சித்து இஸ்லாமியர்களிடையே பெரியார் பேசி இருக்கிறார். சகிப்புத்தன்மை இல்லாதவர்கள் என்று காவிக் கும்பலினால் சித்தரிக்கப்படும் இஸ்லாமியர்கள் இதைக் கேட்டு வெட்கப்பட்டார்களே ஒழிய, வெகுண்டு எழவில்லை.

இந்நிகழ்வு குறித்து திருநெல்வேலி மாவட்டம், சாத்தான் குளத்தில் 28.7.1931 அன்று முகம்மது நபி பிறந்த நாள் விழாவில் பெரியார் பின் கண்டவாறு பேசினார்.

"சென்ற வருஷம் ஈரோடு அல்லாசாமிப் பண்டிகை யைப் பற்றி ஈரோடு கூட்டத்தில் கண்டித்துப் பேசினேன். எனது ஈரோடு சகோதரர்கள் அதற்குச் சிறிதும் கோபித்துக் கொள்ளாமல் வெட்கப்பட்டார்கள். அதன் பிறகு இந்த வருஷம் அந்தப் பண்டிகை நின்று விட்டது. எனக்கு மிக சந்தோஷம். கோபித்துக் கெண்டிருந்தால் இந்த வருடமும் நடத்தி இருப்பார்கள்"

இப்பேச்சு 2.8.1931 குடி அரசு இதழில் வெளி வந்து உள்ளது.

பெரியாரியவாதிகள் மூட நம்பிக்கைகளையும், மக்களின் சுதந்தரத் தன்மைக்கு விலங்கிடும் எந்தச் செயல்களையும் எதிர்க்கும் போது மதங்கள் அதற்குத் தடையாக எப்போதுமே இருந்தது இல்லை. மக்களுக்கு அவை யாரால், எவ்வளவு ஆழமாக, எவ்வளவு வலிமையாகப் பாதிக்கிறது என்பதைப் பொறுத்துத் தான் எதிர்ப்பின் தீவிரம் இருக்கிறது.

இது இந்தியாவில் மட்டும் அல்ல; உலகம் எங்கெங்கும் நிகழும் நிகழ்வுதான். பிரிட்டன் தத்துவ ஞானி பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் "நான் ஏன் கிருத்துவன் அல்ல?" என்று, தான் பிறந்த சமுதாயத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் கிருத்துவ மதத்தைத் தான் விமர்சித்தாரே ஒழிய, இந்து மதத் தையோ, இஸ்லாமிய மதத்தையோ விமர்சிக்கவில்லை.

வங்க தேச வீராங்கனை தஸ்லிமா நஸ்ரீன் இஸ்லாமிய மதத்தைத்தான் விமர்சித்தாரே ஒழிய, இந்து மதத்தை யோ, கிருத்துவ மதத்தையோ விமர்சிக்கவில்லை, அவாளுக்கு இவை எல்லாம் தெரியாதா? நன்றாகத் தெரியும். அது மட்டும் அல்ல. இஸ்லாமிய மக்களுடனும், கிருத்துவ மக்களுடனும் கலந்து பழகியது போல், இந்து மக்களுடனும் பெரியார் கலந்து பழகிய செய்திகளும் அவாளுக்கு நன்கு தெரியும்.

பழுத்த ஆத்திகரும், சைவ சமயத் தத்துவ ஞானியு மான மறைமலை அடிகள் பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையை மறுத்தாலும், சமூக நலன்கள் என்று வந்த போது இருவரும் இணைந்து பணியாற்றி இருக்கின்றனர்.

அதே போல பழுத்த ஆத்திகரும், சைவ சமயத் தத்துவ ஞானியும், தேச பக்தருமான வ.உ.சி.யுடன் இணைந்து, பெரியார் சமூக நீதிக்காகப் பணி ஆற்றி இருக்கிறார். இதன் தொடர் நிகழ்வாக 5.11.1927 அன்று சேலம் நகரில், "எனது அரசியல் பெருஞ் சொல்" என்ற தலைப்பில் வ.உ.சி. உயர்நிலைகளில் பார்ப்பனர்கள் மட்டுமே இருப்பதைக் கண்டித்தும், விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் வேண்டும் என்று கோரியும் பெரிய சொற்பொழிவையே ஆற்றி இருக்கிறார்.

இராமலிங்க சாமியின் பாடல் திரட்டு என்ற நூலைத் தனது குடி அரசு பத்திரிக்கையின் சார்பிலேயே வெளி யிட்ட பெரியார், சமரச சன்மார்க்க சங்கத்தின் மீது விமர்சனம் செய்யவும் தயங்கவில்லை.

"சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டு அடி" என்ற சொற்றொடரை அவர் கைவல்யசாமியார் என்ற இந்து தத்துவ ஞானியிடம் இருந்துதான் பெற்றார்.

இவற்றை எல்லாம் கணக்கில் கொண்டு பார்த்தால், பெரியார், இஸ்லாமிய, கிருத்துவ நண்பர்களுடன் இணைந்து பணியாற்றியதை விட, இந்து மத நண்பர் களுடன் தான்அதிகமாக இணைந்து பணியாற்றி இருக்கிறார் என்று தெரியும்.

மக்கள் விடுதலைக்கு, நலன்களுக்கு எதிரானது எனும் போது, அவர் நாத்திக மதமான புத்த மதம் உட்பட அனைத்து மதத்தினரையும் சாடவே செய்தார். ஆகவே அவர் இந்து மதத்தை மட்டும் ஓர வஞ்சனையாக எதிர்த்தார் என்று கூறுவது கடைந்தெடுத்த அயேக்கியத் தனம்.

மத நம்பிக்கையாளர்களுடன் சேர்ந்து பணியாற்று வதன் மூலம் மக்கள் விடுதலைக்கும், நலன்களுக்கும் பங்களிக்க முடியும் என்றால், அந்த வாய்ப்பை அவர் தவறவிட்டது இல்லை. இதில் இந்து மத நம்பிக்கையாளர் களுடன் சேர்ந்து பணியாற்றவில்லை என்று கூறுவது முழுக்க முழுக்கப் பொய்.

இன்று நம் நாட்டில் இந்து மதத்தால் நடக்கும் இழிவுகள் அனைத்துக்கும் அடிப்படை எது? அனைத்து வகுப்பு மக்களிலும் திறமைசாலிகளும், திறமைக் குறைவானவர் களும் இருக்கையில், பார்ப்பனர்கள் மட்டுமே உயர்நிலை வேலைகளுக்குத் தேர்ந்து எடுக்கப்படும் நிலை உள்ளது. இதனால் திறமைக் குறைவான பார்ப்பனர்களும் உயர்நிலைகளில் அமர்ந்து கொண்டு நிர்வாகத்தை நாசப்படுத்திக் கொண்டு இருக்கின்றனர். இதனால் நாட்டிற்கு அளவு கடந்த இழப்பு ஏற்படுகிறது.

பார்ப்பனர்களில் உள்ள திறமைக் குறைவானவர்கள் உயர்நிலை வேலைகளைப் பெற்று விடுவதால், அவர்கள் செய்ய வேண்டிய கீழ் நிலை வேலைகளை ஒடுக்கப்பட்ட வகுப்பில் உள்ள திறமைசாலிகள் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் மனித வளம் வீணாகிறது. இதுவும் நாட்டிற்குப் பெரும் இழப்பு ஆகும்.

இதைத் தவிர்த்து அனைத்து வகுப்புகளிலும் உள்ள திறமைசாலிகள் உயர்நிலை வேலைகளிலும், அனைத்து வகுப்புகளிலும் உள்ள திறமைக் குறைவானவர்கள் அடுத்த நிலை வேலைகளிலும் வேலை செய்யும் அமைப் பாக, பொதுப் போட்டி முறையை முற்றிலும் ஒழித்துவிட்டு, விகிதாச்சாரப் பங்கீட்டு முறையைச் செயல்படுத்துவதற்கு, இந்துச் சகோரதரர்கள் அனைவரும் முன்வரவேண்டும். அப்படி முன் வருபவர்களுடன் பெரியாரியவாதிகள் நிச்சயமாக இணைந்து பணி புரிவார்கள். அப்பொழுது அவர்கள் இந்து மதத்தை மட்டுமே எதிர்க்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு கலப்படம் அற்ற பொய் என்று தெளிவாக விளங்கும்.