நாசமாகப் போகிற ‘கற்பு’, கற்பு’ என்று சொல்லி நம் பெண்களை எவ்வளவு கேவலமாக ஆக்கிவிட்டார்கள். பார்ப்பானோ மிகக் கெட்டிக்காரன், ஆயிரம் பேரை அவள் பார்த்திருந்தால் கூட அவளைப் பத்தினியாக்கி விடுவான். சீதை, துரோபதை, தாரை இவர்களே அதற்கு உதாரணம். கற்பு என்றால் இரண்டு பேருக்கும் ஒரே மாதிரியாக அல்லவா இருக்கவேண்டும்? பைத்தியகாரத்தனமாக மூட நம்பிக்கை களைப் புகுத்தி பாழாக்கி விட்டார்கள்.

ram sita 350கட்டுப்பாட்டிற்காகவும் நிர்ப்பந்தத்திற்காகவும் கற்பு ஒரு காலமும் கூடாது! வாழ்க்கை ஒப்பந்தத்திற்காகவும் காதல் அன்பிற்காகவும் இருவரையும் கற்பு என்னும் சங்கிலியால் எவ்வளவு வேண்டுமானாலும் இறுக்கிக் கட்டட்டும். அதைப்பற்றி எனக்குக் கவலை இல்லை. ஆனால், ஒரு பிறவிக்கு ஒரு நீதி என்கிற கற்பு மாத்திரம் அடிமைப்படுத்துவதில் ஆசை, மூர்க்கத்தனமே அல்லாமல், அதில் கடுகளவு யோக்கியமும் நாணயமும் பொறுப்பும் இல்லவே இல்லை.

பாவத்திற்குப் பயந்து பதிவிரதையாய் இருப்பவளும், காவலுக்குப் பயந்து பதிவிரதையாயிருப் பவளும், மானத்திற்குப் பயந்து பதி விரதையாய் இருப்பவளும் ஒரே யோக்கியதை உடையவளே ஆவாள் என்கிறார் பெரியார்.

அம்பேத்கரின் கருத்தியல் புரிதலுடன் சேர்த்து பெண்களுக்கான மனுதர்ம விதிகள் சிலவற்றைப் பார்ப்போம்.

1. ஆண்களைத் தவறு செய்யத் தூண்டுவதே பெண்களின் இயல்பு. ஆகவே, அறிவுடையோர்,பெண்களுடன் இருக்கும்போது கவனக் குறைவாக இருக்கமாட்டார்கள். (எச்சரிக்கையாகவே இருப்பார்கள்) (2:213)

2. பெண்கள் (ஆண்களின்) அழகைப் பற்றியும், வயதைப் பற்றியும் பொருட்படுத்துவது இல்லை. அவன் ஒரு ஆண் என்பது மட்டுமே போதுமானது. அழகானவர்களாக இருந்தாலும் சரி, விகாரமானவர் களாக இருந்தாலும் சரி எப்படி இருந்தாலும் தங்களை ஒப்படைத்துக் கொண்டு விடுவார்கள்.(9:14)

3. ஆண்கள் மேலுள்ள ஆசையினாலும், சலனப்புத்தியினாலும், இயல்பாகவே இதயமில்லாதவர்களாக இருப்பதனாலும், பெண்களை அவர்களின் கணவன்மார்கள் எவ்வளவுதான் பாதுகாப்புடன் காத்து வந்தாலும் துரோகமே இழைப்பார்கள் (9:15)

4. படைக்கும்போது கடவுள் இத்தகைய இயல்புடன் அவளைப் படைத்துவிட்டான் என்பதை அறிந்து, ஆண்கள் அவர்களைப் பாதுகாக்க கவனத்துடன் செயல்படவேண்டும். (9:16)

5. பெண்களைப் படைக்கும்போதே அவர்களுக்கு என்று படுக்கை, இருக்கை, அணிகலன்கள் (ஆகியவற்றில் விருப்பம்) கேவலமான ஆசைகள், சினம், நேர்மையின்மை, தீய நடத்தை ஆகியவற்றையும் படைத்தார். (9:17)

6. இரவும், பகலும் தங்கள் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களைத் தங்கள் கண்காணிப்பிலேயே ஆண்கள் வைத்திருக்கவேண்டும். அவர்கள் புலன் இன்பங்களில் தோய்ந்தவர்கள் ஆதலால், ஒருவர் கண்காணிப்பின் கீழ்தான் அவர்கள் இருக்க வேண்டும். (9:2)

7. பெண்கள் குழந்தையாக இருக்கும்போது தந்தையின் பாதுகாப்பிலும், திருமணத்திற்குப் பின் கணவன் பாதுகாப்பிலும்,வயதான காலத்தில் மகனின் பாதுகாப்பிலும் இருக்கவேண்டும். பெண் ஒரு போதும் சுதந்திரமாக இருக்கத் தகுதியற்றவள்.(9:3)

8. தீய விருப்பங்களுக்கு எதிராக - அவை எவ்வளவுதான் சிறியதாகத் தோன்றினாலும் பெண்களை குறிப்பாகப் பாதுகாக்க வேண்டும். இல்லையெனில் அவை இரு குடும்பங்களுக்கும் துன்பத்தையே தரும். (9:5)

9. பெண் குழந்தையாக இருக்கும்போதும், சிறுமியாக இருக்கும்போதும், வயதானவளாக இருக்கும் போதும் சுயமாக எதையும் செய்யக்கூடாது. தன் சொந்த வீட்டிலும் கூட அவ்வாறு செய்யக்கூடாது.(5:147)

10. தன் தந்தை, கணவன் அல்லது பிள்ளைகளை விட்டுத் தனியே வாழ பெண் முயற்சிக்கக் கூடாது. காரணம், இவர்களை விட்டுத் தனியே செல்வதின் மூலம் இரு குடும்பத்தாருக்கும் அவமதிப்பையே உண்டாக்குகிறாள். பெண்ணுக்கு மணவிலக்கு உரிமை இருக்கக்கூடாது. (5:49)

11. கணவன் மனைவியுடன் சேர்ந்தே இருக்க வேண்டுமென கூறப்படுகிறது. இதன் பொருள், ஒரு பெண்ணுக்கு மணம் முடித்த பின் பிரிதல் என்பதே கூடாது என்பதாகும். (9:45)

12. விற்று விடுவதானாலோ அல்லது தனக்குச் சொந்தமில்லை என மறுப்பதனாலோ மனைவி கணவனிடமிருந்து விடுபட முடியாது.(9:46)

13. மனைவி, மகன், அடிமை ஆகிய இவர்கள் சொத்து வைத்திருக்கக்கூடாது என அறிவிக்கப் படுகிறது. அவர்கள் சம்பாதிக்கும் சொத்து அவர்கள் யாருக்குச் சொந்தமோ அவர்களை அடைகிறது. (9:146)

14. மனைவி, மகன், அடிமை, சீடன், உடன் பிறந்த தம்பி ஆகிய இவர்கள் தவறு செய்தால் கயிறு அல்லது பிரம்பின் மூலம் அடிக்கலாம். (8:299)

15. தந்தை யாரிடம் ஒப்படைக்கிறாரோ அல்லது தந்தையின் அனுமதியின் பேரில் தன் சகோதரன் யாரிடம் ஒப்படைக்கிறானோ அவருக்கு சாகும் வரை அவள் கீழ்படிந்து நடக்கவேண்டும். அவர் இறந்து விட்டால் அவர் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தக்கூடாது.(5:151)

இவ்வாறாக மனு, பெண்களை தீய நடத்தை உள்ளவர்களாகவும், கற்பொழுக்கம் பேண வேண்டியர்களாகவும் தனி ஆளுமைக்கும், சுதந்திரத்திற்கும் தகுதி அற்றவர்களாகவும், பாலியல் பொருட்களாக மட்டுமே சுருக்கி பெண்களைச் சூழ்ச்சியான புத்திசாலித்தனத்துடன் வீட்டில் முடக்கினர்.

மதங்களின் பார்வையில் கற்பு

கற்பைப் பற்றி இன்றைய தலைமுறையின் கருத்துகள்

*கற்பு என்று ஒன்று இல்லவே இல்லை. அப்படி இருப்பதாய் நினைத்தால் அது அவரவரின் (ஆண், பெண்)  தனி மனித ஒழுக்கம் அதை அவரவர் பின்பற்றினால் போதும். (Vaishu)

*ஒரு பெண்ணா, கற்பைப் பற்றி பேசவே பயமாக இருக்கு.... காரணம் கற்பைப் பற்றி பேசிய பெண்கள் கேவலப்படுத்தப்படுகிறார்கள்....கற்பைப் பேசுகிற உரிமை கூட ஒரு ஆணின் கையில்தான் உள்ளது. கற்பு என்பது இன்றைய காலகட்டம் வரை ஒரு ஆண்,பெண்ணிற்கு வைக்கிற வரையறையாகவே உள்ளது. (Gowthami)

* 100 சதவீதம் கற்பு என்பது ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொண்டு ஒருவனுக்கு ஒருத்தியாக வாழ்கிற ஒரு உயர்ந்த பண்பு....அன்பு,நேர்மை எப்படி வடிவம் கிடையாத உணர்வோ, கற்பும் அதே போன்று உளம் சார்ந்த உன்னத உணர்வு....ஆண், பெண்ணுக்கும் பொதுவான ஒன்று.

இந்துகளின் பார்வையில் கற்பு

இந்திய நாட்டைப் பொறுத்தவரை திருமணத்திற்கு முன் பெண்ணின் கற்பு அல்லது கன்னித் தன்மை மிக முக்கியமான ஒன்றாகும். திருமணத்திற்கு முன் கன்னித்தன்மை இழந்த பெண் திருமணம் செய்யத் தகுதியில்லாதவராகவே சமுதாயத்தால் பார்க்கப்படுகிறார்கள்.

இசுலாம் மதத்தில் கற்பு 

இசுலாம் மதத்தில் கற்பு மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. இசுலாம் மதச் சட்டத்தின் படி திருமணத்திற்கு முன் கற்பிழந்த பெண் கல்லால் எறிந்து கொல்லப்பட வேண்டும் என்கிறது.

கிறிஸ்துவ மதத்தில் கற்பு

கிறிஸ்தவ மதத்தில் கடவுள் மனிதருக்குத் தந்த பத்துக் கட்டளைகளில், ஏழாவது கட்டளை விபச்சாரம் செய்யாதே என்றும், ஒன்பதாவது கட்டளையில் பிறர் மனைவியைக் கவர்ந்திட விரும்பாதே என்றும் கட்டளையிடுகின்றன.

கற்பு என்ற வார்த்தையைப் பகுபதமாக்கிப் பார்ப்போமானால் ‘கல்’ என்பதிலிருந்து வந்ததாகவும் அதாவது படி - படிப்பு என்பது போல் கல் - கற்பு என்கின்ற இலக்கணம் சொல்லப்பட்டு வருகிறது.

அதேபோல் ஆங்கிலத்தில் (Viginity) வர்ஜினிட்டி என்பது ‘செஸ்டிடி’ என்பதே பொருள் ஆகும். அதை அந்தப் பொருளின்படி பார்த்தால் இது ஆணுக்கென்றோ பெண்ணுக்கென்றோ சொல்லாமல் பொதுவாக மனித சமூகத்திற்கே எவ்வித ஆண், பெண் புணர்ச்சி சம்பந்தமே சிறிதும் இல்லாத பரிசுத்தத் தன்மைக்கே உபயோகப்படுத்தப்படுகிறது என்பதைக் காணலாம்.

ஆகவே கற்பு என்பது ஆணோ, பெண்ணோ ஒரு தடவை கலந்த பிறகு எவ்வளவு சுத்தமாயிருந்தாலும் கற்பு போய்விடுகிறது என்பது பெண் அடிமைத்தனமும் இந்து மதத்தின் ஆதிக்கமும் ஒழிய வேறொன்றுமில்லை.

“உண்மையாகப் பெண்கள் விடுதலை வேண்டுமானால், ஒரு பிறப்பிற்கொரு நீதி வழங்கும் நிர்பந்தக் கற்பு முறை ஒழிந்து இரு பிறப்பிற்கும் சமமான சுயேட்சைக் கற்பு முறை ஏற்படவேண்டும். கற்புக்காக பிரியமற்ற இடத்தைக் கட்டி அழுது கொண்டிருக்கச் செய்யும்படியான நிர்பந்தத் திருமணங்கள் ஒழியவேண்டும். கற்புக்காக மனதில் தோன்றும் உண்மை அன்பை - காதலை மறைத்துக்கொண்டு காதலும் அன்பும் இல்லாதவனுடன் இருக்க வேண்டும் என்கின்ற சமூகக் கொடுமையும் அழிய வேண்டும்.

எனவே, இக்கொடுமைகள் நீங்கின இடத்தில் மாத்திரமே மக்கள் பிரிவில் உண்மைக் கற்பை, இயற்கைக் கற்பை, சுதந்திரக் கற்பைக் காணலாமே ஒழிய, நிர்ப்பந்தங்களாலும் ஒரு பிறப்பிற்கொரு நீதியாலும், வலிமை கொண்டவன் வலிமை அற்றவனுக்கு எழுதிவைத்த தர்மத்தாலும், ஒருகாலும் காணமுடியாது என்பதுடன் அடிமைக்கற்பையும், நிர்ப்பந்தக் கற்பையும்தான் காணலாம்.”  - தோழர் பெரியார்

Pin It