பத்து ஆண்டுகளுக்குமுன் வரை பொறியியல் படிப்பில் சேருவதற்காகப் புற்றீசல்கள் போல் மாணவர்கள் படையெடுத்தனர். இன்றோ பெரும்பாலான பொறியியல் கல்லூரிகளின் நிர்வாகம், படிப்புக்கான இடங்கள் விற்பனையாகாமல் ‘ஈ’ ஒட்டிக் கொண்டி ருக்கின்றன.

தமிழ்நாடு இதில் முதலிடத்தில் இருக்கிறது. தமிழ் நாட்டில் மொத்தம் 571 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றுள் 539 பொறியியல் கல்லூரிகள் தனியார்-சுயநிதிக் கல்லூரிகள். மீதி 32 மட்டுமே அரசு மற்றும் அரசு நிதி உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள்.

1995 சனவரியில் ‘காட்’ ஒப்பந்தப்படி உலக வணிக அமைப்பின் (WHO) விதிகள் நடைமுறைக்கு வந்தன. அதன்படி கல்வி, தனியாருக்கு வேகமாகத் திறந்துவிடப்பட்டது. மழைக்குப்பின் முளைக்கும் காளான் கள் போல் தனியார் பொறியியல் கல்லூரிகள் தொடங் கப்பட்டன. தடையற்ற கல்வி வணிகக் கொள்ளை நடந்தது.

anna university students 6002015-16ஆம் கல்வியாண்டிற்கான பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை, ஆகத்து மாதத்துடன் முடிந்துவிட்டது.

இந்த ஆண்டு, பொறியியல் கல்லூரிகளில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளன.

அதாவது கிட்டத்தட்ட 50 விழுக்காடு இடங்கள் காலியாக இருக்கின்றன.

கடந்த சில ஆண்டுகளாகவே பொறியியல் படிப்பில் நிரப்பப்படாத இடங்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.

ஆந்திராவில் உள்ள 364 பொறியியல் கல்லூரி களில் 2,20,000 இடங்கள் உள்ளன. இவற்றில் 35,000 இடங்கள் காலியாக உள்ளன. தெலுங்கா னாவில் உள்ள 340 பொறியியல் கல்லூரிகளில் 33,000 இடங்கள் காலியாக உள்ளன.

ஆனால் தமிழ்நாட்டில் 50 விழுக்காடு அளவுக்கு மிக அதிக அளவில் பொறி யியல் படிப்பில் இடங்கள் காலியாக இருப்பதற்கு முதன்மையான காரணம், கல்வித்தரம் மிகக் கேவல மாகத் தாழ்ந்துவிட்டதேயாகும் என்று அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி போன்ற கல்வியாளர்கள் பலரும் கூறுகின்றனர்.

கல்வி ஆண்டு       நிரப்பப்படாத இடங்கள்

2011-12                45,062

2012-13                50,000

2013-14                80,700

2014-15                1,00,819

தமிழ்நாட்டில் தொடக்கப் பள்ளி முதல் பல்கலைக் கழகம் வரை, கல்வியின் தரும் அடிமட்டத்திற்குத் தாழ்ந்துவிட்டிருக்கிறது என்பதைப் பல ஆய்வு முடிவு கள் உறுதிப்படுத்துகின்றன. இந்த ஆண்டு அகில இந்திய தொழில்நுட்ப நுழைவுத் தேர்வு (JEE) எழுதிய வர்களில் தமிழ்நாட்டில் 33 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். அதேசமயம் ஆந்திராவில் 1787 பேரும் இராஜ°தானில் 1,610 பேரும் தேர்ச்சி அடைந்தனர். இந்தக் கேடான நிலைக்கு தமிழ்நாட்டு அரசும், தமிழ் நாட்டை நீண்டகாலமாக ஆண்டுவரும் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் பொறுப்பாளிகளாவர்.

தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளில் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட இடங்கள் காலியாக இருப்ப தற்கும், கல்வித்தரம் எளிதில் சீர்செய்ய முடியாத அளவுக்குப் பாழ்பட்டிருப்பதற்கும், பொறியியல் கல்லூரிகளைத் தொடங்குவதற்கு ஒப்புதல் வழங்கும் அதிகாரம் கொண்ட அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனமே (AICTE) முதன்மையான குற்றவாளியாகும்.

பொறியியல் கல்லூரி தொடங்குவதற்கு நகரப் பகுதியில் 2.5 ஏக்கர் நிலப்பரப்பும், ஊரகப் பகுதியில் 10 ஏக்கர் பரப்பும், வகுப்பறை என்பது 66 சதுர மீட்டர் என்ற அளவும் மற்றும் நடைமுறைச் செலவுக்காக ஒரு கோடி உருபாவுக்கு வங்கிக் கணக்கில் பண இருப்பும் காட்ட வேண்டும் என்கிற வரையறையை நிறைவு செய்திருப்பதாக விண்ணப்பிக்கும் எவருக்கும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் அனுமதி அளித்தது.

அதிக இலாபம் கிடைக்கும் இடத்தைத் தேடி மூல தனம் ஓடுவதுபோல், தமிழ்நாட்டில் சாராய வணிகர்கள், அரசியல்வாதிகள் மனை வணிக முதலாளிகள், சாதித் தலைவர்கள் ஆகியோர் தங்களிடம் உள்ள கருப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக்கிடவும், மேலும் அதிலிருந்து கொள்ளை இலாபம் ஈட்டவும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளை ‘அறக்கட்டளைகள்’, ‘சிறுபான்மையினர்’ என்கிற மோடி வழிகளில் தொடங்கினர்.

அகில இந்தியத் தொழில் நுட்பக் கல்வி நிறுவனத் திற்குக் கையூட்டாகப் பணம் பாய்ந்தது. காளான்கள் போல் பொறியியல் கல்லூரிகள் முளைத்தன. நிகர்நிலைப் பல்கலைக்கழகத் தகுதியைப் பணத்தின் மூலம் பெற்று பல கல்லூரிகள் அரசின் விதிமுறைகளுக்கு முற்றிலுமாக விலக்குப் பெற்றுத் தங்குதடையற்றக் கொள்ளையில் ஈடுபட்டன. ஒரே வளாகத்திற்குள் நான்கு பொறியியல் கல்லூரிகள் இயங்கும் கொடுமையை அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனமோ, தமிழ்நாட்டு அரசோ கண்டுகொள்ளவில்லை.

பொறியியல் கல்லூரிகளின் தரத்தைக் கண்காணிக்க வேண்டியது அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் கடமையாகும். பொறியியல் கல்லூரி களில் நேற்றுவரை மாணவராக இருந்தவர் அடுத்த நாள் அதில் ஆசிரியர் என்ற கொடுமை நடந்தேறி வருகிறது. எம்.இ. (M.E.) படிப்பு என்பதும் இளநிலைப் பொறியியல் பட்டப் படிப்பைப் போலவே கடைச்சரக் காகிவிட்டது. சுயநிதிப் பொறியியல் கல்லூரி களில் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் (UGC) விதிப் படியான ஊதியம் ஆசிரியர்களுக்கு வழங்கப்படு வதில்லை என்பதுடன் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் சம்பளம் அளவுக்குக்கூட வழங்கப்படுவதில்லை. எம்.இ. படித்தவர்கள் ரூ.18,000 ஊதியத்தில் வேலை செய்ய வரிசையில் காத்துக் கிடக்கின்றனர்.

மற்றும், ஒரு பொறியியல் கல்லூரிகளில் வேலை செய்யும் ஆசிரியர், மேலும் ஒன்று அதற்கு மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளிலும் வேலை செய்வதாகப் பதிவாகியுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகள் ஆண்டுதோறும் தங்கள் கல்லூரி யில் வேலை செய்யும் ஆசிரியர்களின் பட்டியலை அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்துக்கு அனுப்புகின்றன.

அப்பட்டியலை ஆய்வு செய்ததில் தமிழ்நாட்டில் மட்டும் 8,842 ஆசிரியர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பொறியியல் கல்லூரியில் வேலை செய்வ தாகப் பதிவாகியுள்ளது. இதேபோல் ஆந்திரத்தில் 7,948, மகாராட்டிரத்தில் 7,897, கர்நாடகாவில் 2,955, ஒடிசா வில் 2,651, குசராத்தில் 2000, உத்தரப்பிர தேசத்தில் 8,099 ஆசிரியர்களின் பெயர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட கல்லூரிகளில் வேலை செய்வதாகப் பதிவாகியுள்ளது (The Hindu, 11.5.2015). இம்முறைகேடு குறித்து அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறு வனமோ, நடுவண் அரசின் கல்வி அமைச்சரோ இது வரை வாய்திறக்கவில்லை.

அரசுகளும்,தாராளமய - தனியார்மயத்தை ஆதரிக்கும் ஊடகங்களும் சிற்றூரில் பிறந்த ஏழைக் குடும் பத்து மாணவனும் பொறியியல் பட்டம் பெற்று அமெரிக்காவுக்குச் சென்று பல இலட்சம் உருபாசம் பாதிக்கலாம் என்கிற பொய்மையான கனவுலகத்தை மக்கள் முன் காட்டின. அதனால் நடுத்தர-ஏழைக் குடும்பத்தின் பெற்றோர் இக்கானல் நீர்க் கனவை நம்பி தங்கள் நிலத்தை, வீட்டை விற்றும், அடை மானம் வைத்தும் தங்கள் பிள்ளைகளைத் தனியார் பொறியியல் கல்லூரிகளில் சேர்த்தனர்.

சுயநிதிக் கல்லூரிகளின் சங்கம் அரசுக்குக் கையூட்டுக் கொடுத்து, பொறியியல் படிப்பில் சேருவதற்கு இருந்த குறைந்த பட்ச மதிப்பெண் விதியை நீக்கிவிட்டன. பனிரெண்டாம் வகுப்பில் வெறும் தேர்ச்சி என்கிற அளவுக்கு மட்டுமே மதிப்பெண் பெற்ற பிள்ளைகளின் பெற்றோர்கள் தனியார் பொறியியல் கல்லூரிகளில் பெருந்தொகை யைச் செலவிட்டுச் சேர்த்து, தங்கள் வாழ்க்கையையும் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தையும் பாழாக்கிக் கொண்டு வருகின்றனர்.

சமூக அக்கறை கொண்ட சில கல்வியாளர்கள் இக்கேடான நிலையைச் சுட்டிக்காட்டி வருகின்றனர். ஆனால் அரசும், அரசியல்வாதிகளும் இதைப்பற்றிக் கவலைப்படுவதே இல்லை.

எரிகிற வீட்டில் பிடுங்கியதுவரை இலாபம் என்பது போல், தமிழ்நாட்டில் இந்த ஆண்டு, புகழ்பெற்ற ஒரு நிகர்நிலைப் பல்கலைக்கழகம்,  மாணவர்கள் சேருவ தற்கான விண்ணப்பம் ரூ.1000 என்ற விலையில் 21 இலட்சம் விண்ணப்பங்களை விற்று ரூ.21 கோடி ஈட்டியுள்ளது. விண்ணப்பத்தை வலைதளத்தில் பதி விறக்கம் செய்ய வேண்டும் என்பதால் ஒரு காசுகூட செலவில்லாமல் 21 கோடி உருபா கொள்ளையடித் துள்ளது.

பொறியியல் கல்லூரிகள் மட்டுமின்றி மற்ற அனைத்து வகையான கல்லூரிகளிலும் கல்வித்தரம் வீழ்ச்சியுற்றிருப்பதற்கு முதன்மையான காரணம் கல்வி தனியார்மயமாக்கப்பட்டதும், வணிகமயமாக் கப்பட்டதுமே ஆகும். அடுத்து ஆங்கிலவழிக் கல்வி தான் வாழ்வு தரும் என்கிற மோகத்தைத் தனியார் பள்ளிகள் நன்கு அறுவடை செய்து கொள்கின்றன. அரசும் தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஆங்கில வழிப் பிரிவைத் தொடங்கியிருப்பது கொடுமை யல்லவா!

தனியார் மயமே தகுதி திறமையை வளர்க்கும்; நாட்டை வளர்ச்சிப் பாதையில் செலுத்தும் என்று கூப்பாடு போட்டுவரும் முதலாளிய அறிஞர்களும் எடுபிடிகளும் தமிழ்நாட்டிலும் இந்தியா முழுவதிலும் தனியார் பொறியியல் கல்லூரிகளின் கல்வித்தரம் அதளபாதாளத்துக்குச் சென்றுவிட்டிருப்பதற்காகத் தங்களைத் தங்கள் செருப்பால் அடித்துக் கொள்வார்களா!

Pin It