கேடலோனியா(Catalonia) ஸ்பெயினில் உள்ள ஒரு பகுதி. 75 லட்சம் (முக்கால் கோடி) மக்கள் வாழும் இடம். கேடலோனியர்களின் மொழி கேடலன் (Catalan). தங்களுக்கென ஒரு மொழியும், கலாச்சாரமும் உள்ள ஓர் இன மக்கள். கேடலோனியாவின் ஒரு பக்கம் பிரான்சு, ஒரு பக்கம் ஸ்பெயின், மற்றொரு பக்கம் மத்தியத் தரைக்கடல். தொழிற்சாலைகள், நூல் ஆலைகள், இரும்புத் தொழிற்சாலைகள் வேதியியல் ஆலைகள் மற்றும் மிக சமீபத்தில் பல சேவை தொழிற்சாலைகள் நிறைந்த நிலமாக அமைந்துள்ளது கேடலோனியா.

சுயாட்சியும் இராணுவ ஆட்சியும்

ஏறத்தாழ 15 ஆம் நூற்றாண்டிலிருந்து கேடலோனியா ஸ்பெயின் நாட்டு ஆளுகைக்கு உட்பட்டு இருந்து வருகிறது. 19ஆம் நூற்றாண்டில் தான் கேடலோனியா தனித்த சுயாட்சியுடன் இயங்க வேண்டும் என்றும், கேடலோனிய மொழிக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்ற குரல் எழத் தொடங்கியுள்ளது.

ஸ்பெயின் நாடு 1931 ல் குடிஅரசானது. அப்போது கேடலோனியப் பகுதிக்குப் பரந்த சுயாட்சி வழங்கப்பட்டது. ஆனால் 1939-ஆம் ஆண்டு இராணுவத் தளபதி  ஃபிரான்சிஸ்கோ (Gen Francisco Franco) குடிஅரசு நாடான ஸ்பெயினை இராணுவ ஆட்சியாக மாற்றினார். ஃபிரான்சிஸ்கோவுக்கு ஜெர்மனியின் ஹிட்லரும், இத்தாலியின் முசோலினியும் உதவினர்.

ஃபிரான்சிஸ்கோவின் சர்வாதிகார ஆட்சியில் ஊடகங்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டன. அதே போல கல்வித்துறையும் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டது. இதன் மூலம் இரண்டு முக்கியப் புள்ளிகளில் விடுதலை உணர்வை, பேச்சுரிமையை நசுக்கியுள்ளார். அதாவது கல்வியை கைக்குள் வைத்து இள வயதில் இருந்தே மூளைச் சலவை செய்வது. அடுத்து ஊடகங்களைக் கைக்குள் வைத்துச் செய்திகளை கட்டுக்குள் வைப்பது.

ஃபிரான்சிஸ்கோ 1975 ஆம் ஆண்டு இறந்த பின்னர் கேடலோனியர் மீண்டும் சுயாட்சி கேட்கத் தொடங்கி, தங்களுக்கென்று ஒரு பாராளுமன்றத்தை அமைத்துக் கொண்டனர். அதாவது மாநில சுயாட்சிக்கு நிகரான ஒன்று.

பொருளாதாரமும் பெரும் சீற்றமும்

2010 ஆம் ஆண்டு ஸ்பானிஷ் அரசியலமைப்பு நீதிமன்றம் கேடலோனியர்கள் தேசிய நிதி பெறுவதில் ஓர் அளவுகோல் வைத்தது. வந்ததே கோபம் கேடலோனியர்களுக்கு. தன்மானத் தங்கங்கள் அல்லவா! மீண்டும் “கேடலோனியத் தனி நாடு” எண்ணம் துளிர்விடத் தொடங்கியது. கேட லோனியர்கள் தாங்கள் ஸ்பானிஷ் அரசாங்கத்திற்கு செலுத்தும் பணத்தில் இருந்து திரும்பப் பெறுவது மிக மிகக் குறைவே என்பது அவர்கள் வாதம். அறிவாயுதம் ஏந்திய சமர்!

தருவது நிறைய பெறுவது சிறிது. அறிவது கொண்டு சிந்தித்தனர். தொடுத்தனர் சமர். தடுத்தனர் ஸ்பானியர். புள்ளிவிவரம் பல கொண்டு புலிபோல் வெகுண்டனர். பாருங்கள் பொருளாதார புள்ளி விவரங்களை :

கேடலோனியாவில் வாழும் மக்கள் விழுக் காடு 16%

கேடலோனியா ஸ்பானிஷ் பொருளாதாரத் திற்கு தரும் பங்களிப்பு 19%

கேடலோனியா ஸ்பானிஷ் ஏற்றுமதிக்கு தரும் பங்களிப்பு 25.6%

மேலும் ஸ்பானிஷ் மத்திய அரசாங்கத்தின் நிர்வாகத் திறமையின்மையே 2008 இல் ஸ்பெயின் நாடு கடன் தொல்லைக்கு ஆளானதற்கான காரணம் என்கிறார்கள் கேடலோனியர்கள்.

வேண்டும் விடுதலை

சுயாட்சி கொண்ட கேடலோனிய அரசாங்கம் 2014, 2015 மற்றும் 2017இல் தனி நாடு வாக்கெடுப்பு நடத்தியதில், வாக்களித்த பெரும்பான்மையினர் தனி நாடு கோரிக்கையை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

ஆனால் ஸ்பானிஷ் அரசாங்கமோ கேடலோனிய அரசாங்கத்திற்கு அரசியலமைப்பு சட்டப்படி பிரிந்துசெல்ல உரிமை இல்லை என்று கூறுகிறது. அது மட்டும் இல்லை, ஸ்பானிஷ் மத்திய அரசாங்கம், அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தி கேடலோனிய அரசைக் கலைத்து புதிய தேர்தலுக்கு உத்தரவிட்டுள்ளது.

களத்தில் உள்ள விடுதலை வேட்கை உடைய கேடலோனிய சமூகப் போராளிகள் விடுதலை உணர்வை மக்களிடம் கொழுந்து விட்டு எரிய விட்டுக் கொண்டிருக்கின்றனர். வேண்டும் விடுதலை! அதை வேண்டியா பெறுவது? என்கினர் கேடலோனியர். “தற்சார்பு கேடலோனியா” தங்கள் கையில் இருக்கையில், தன்னை, தன் மொழியை அடக்கும், தன் உரிமையை பறிக்கும், தன்மானத்தை இகழும் ஸ்பெயினுடன் என்றும் அன்பாய் இருக்கலாம் தவறில்லை; ஆனால் ஏன் அண்டிப் பிழைக்க வேண்டும்?

‘வேண்டும் விடுதலை!’ என்கின்றனர் கேடலோனியர். தமிழர்களுக்கு வேறு என்னென்ன செய்தி சொல்லப் போகிறதோ கேடலோனியா!

References:

http://www.bbc.com/news/world-europe-20345071

http://www.bbc.com/news/world-europe-34844939

http://www.bbc.com/news/world-europe-34844939

 

Pin It