நமது நாட்டு முன்னேற்றத்திற்கும், சுயமரியாதைக்கும் பார்ப்பனர்களே ஜன்ம விரோதிகள் என்றும், அவர்களாலேயே நமது நாடு அடிக்கடி அன்னிய ஆதிக்கத்திற்கும் கொடுங்கோல் அரசு முறைக்கும் ஆளாகி வந்துக் கொண்டிருக்கின்றது என்றும், பார்ப்பன அயோக்கியத்தனம் வீழ்ந்த அன்றே வெள்ளைக்கார கொடுங்கோல் ஆட்சிமுறை பட்டு மாய்ந்து விடும் என்றும் நாம் விபரம் தெரிந்த காலம் முதல் தொண்டை கிழியக் கத்தியும் வருகின்றோம், கை நோக எழுதியும் வருகின்றோம். ஆனாலும், வேறு வழியில் வயிறு வளர்க்க முடியாத இழிமக்கள் தங்கள் வாழ்வுக்காக பார்ப்பனர்களுக்கு அடிமைகளாகி சிலர் கடவுளுக்கு வக்காலத்து பேசுவது போல் இவர்கள் பார்ப்பனர்களுக்கு வக்காலத்து பேசி நமது முயற்சியைக் கெடுக்க வந்து விடுகின்றார்கள்.

periyar meetingபொதுஜனங்களும் முக்கியமாய் பாமர மக்களும் இவ்விஷயத்தில் கவலை இல்லாமலும் தங்கள் பகுத்தறிவை சரியாய் உபயோகிக்காமலும் கவலை அற்ற முறையில் “பார்ப்பானைக் குற்றம் சொல்லாத முறையில் நமது வேலை நடக்கக் கூடாதா” என்போர்களும் “பார்ப்பனர்கள் 100-க்கு மூன்று பேர்கள் தானே, அவர்கள் நமக்கு ஒரு எதிரிகளா” என்று “தர்மம்” பேசுவோர்களும், மற்றும் பல விதமாக அர்த்தமில்லாத சமாதானம் சொல்வோர்களுமாக இருந்து வருகிறார்கள்.

என்றைக்காவது நமது நாடு யோக்கியமான முன்னேற்றமும் சுயமரியாதையும் பெற வேண்டுமானால் பார்ப்பன அயோக்கியத்தனமும், சூழ்ச்சியும், ஆதிக்கமும் ஒழிந்த பிறகுதான் சாத்தியப்படக்கூடிய விஷயமேயல்லாமல், பார்ப்பனீய ஆதிக்கம் அடியோடு அழிபடாமல் ஒரு நாளும் முடியாது என்று கோபுரத்தின் மீதிருந்தும் கூவுவோம்.

வெளியில் இருக்கிற பாமர மக்களுக்கு பார்ப்பனத் தொல்லை இன்னது என்பது ஒரு நாளும் புலப்படுவது இல்லை. பார்ப்பனன் தன்னுடைய வாழ்வுக்குத் தக்கபடி தனது நடவடிக்கையை மாற்றிக் கொள்ளத்தக்க சவுகரியங்கள் மதத்தின் பேராலும், கடவுள், வேதம், சாஸ்திரம், ஸ்மிருதி, புராணங்கள் முதலியவைகளின் பேராலும் பழக்க வழக்கங்களினாலும் ஆதியிலேயே ஏற்படுத்தி வைத்துக் கொண்டிருக்கிறான்.

அன்றியும் நம்மவர்களின் பெரும்பாலோர்களை படிக்க முடியாமல் செய்தும், படித்த சிலரையும் மேல்கண்ட கடவுள், வேதம், சாஸ்திரம், சமயம், பக்தி முதலியவைகளால் பிடிவாத மூடர்களாக்கி வைத்திருப்பதாலும் எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் புத்தியில் படாமல் நமது முயற்சிகள் வீணே போய் விடுகின்றன.

கடவுள் பேராலும் மதத்தின் பேராலும் நமது பெண்களை விபசாரிகளாக்கும் கொடுமையை ஒழிக்க முயற்சிக்கும் விஷயத்திற்கும், சிறு குழந்தைகளை புருஷன் பெண்ஜாதிகளாக்கும் கொடுமையை ஒழிக்கும் விஷயத்திற்கும், மனிதனுக்கு மனிதன் தீண்டாதவன் தாசி மகன் என்பதை ஒழிக்க வேண்டும் என்பதற்கும், நம் கடவுள் பேராலும், மதத்தின் பேராலும், ஸ்மிருதிகள் பேராலும் ‘மதத் தலைவ’ப் பார்ப்பனர்கள் முதல் காப்பிக் கடைப் பார்ப்பனர்கள் இடையாக தரகுப் பார்ப்பனர் ஈறாக எவ்வளவு எதிர்ப்புகளும் சூழ்ச்சிகளும் தொல்லைகளும் விளைவித்து வருகின்றார்கள் என்பது யாராவது அறியாத விஷயமா என்று கேட்கின்றோம்.

“சுயராஜ்யம் வேண்டும்”, “தேசீயம் முக்கியமானது” என்று கூச்சல் போடுகிற யாராவது இக்கொடுமையிலும் இழிவிலும் இருந்து விலகுவதற்கு ஏதாவது கவலை எடுத்துக் கொள்ளுகிறார்களா அல்லது அதற்கு ஆதாரமாய் இருக்கும் இடத்தைக் கண்டு அதை வெட்டி எறிய ஏதாவது முயற்சி எடுத்துக் கொள்ளுகிறார்களா என்று கேட்கின்றோம்.

தேசீயக் கூச்சல் போடுகின்ற வயிற்றுச் சோற்று ஆசாமிகள் எந்த சமயத்திற்கு எதைச் சொன்னால் பாமர மக்கள் ஏமாறுவார்கள், பொது ஜனங்களை ஏமாற்றி வாழலாம் என்கின்ற கவலையில் இருக்கின்றார்களேயொழிய வேறு ஏதாவது மானம், அவமானம், சுரணை, இழிவு என்பதைப்பற்றி கொஞ்சமாவது உணர்ச்சி உள்ளவர்களாக இருக்கிறார்களா?

உதாரணமாக பொட்டுக் கட்டும் வழக்கத்தை ஒழிக்க ஸ்ரீமதி முத்து லக்ஷிமி அம்மாளவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிக்கு விரோதமாக ஒரு ‘பிரபல தேசீயவாதி’ என்கின்ற பெயர் பெற்ற ஸ்ரீமான் சத்தியமூர்த்தி அவர்கள் சொன்னது என்ன என்பதை சற்று ஞாபகப்படுத்திப் பாருங்கள். அவர் என்ன சொன்னார் “பெண்களை கடவுள் பேராலும் மதத்தின் பேராலும் பொட்டுக்கட்டி விபசாரத்திற்கு விடுகிற வழக்கம் தப்பு என்பதாக இன்று நாம் ஒரு முடிவு செய்து விடுவோமானால், ஸ்ரீமான் ஈ.வெ.ராமசாமி நாயக்கரும், வரதராஜுலு நாயுடுவும் நாளைக்கு கோவிலில் சுவாமிக்கு (தரகர்கள்) அர்ச்சகர்கள் வேண்டியதில்லை என்று சொல்லுவார்கள். அதையும் கேழ்க்க வேண்டியதாய் ஏற்பட்டுவிடும். ஆதலால் கண்டிப்பாய் மதத்தில் பிரவேசிக்க (அதாவது எவ்வித சீர்திருத்தமும் செய்ய) இடம் கொடுக்கக் கூடாது” என்று 3 மாதத்திற்கு முன் சொன்ன சங்கதி யாவருக்கும் தெரியும்.

மற்றொரு சமயம் சுமார் 2 வருஷத்திற்கு முன்பு ஸ்ரீமான் சத்தியமுர்த்தி அய்யரை நட்டுவன் போல் படமெழுதி அவர் கையில் ஒரு ஜால்ராவைக் கொடுத்து ஒரு தாசிக்குப் பின்னால் நிறுத்தி அவர் தட்டும் மாதிரியாகவும், ஒரு தாசி ஆடும் மாதிரியாகவும் படம் போட்டு ‘இங்கிலாந்தில் தேசீயக் கூத்து’ என்று பெயர் கொடுத்து லண்டனுக்கு விபசாரத்திற்கு விடுவதற்காக ஸ்ரீமதி பத்மாசனி அம்மாளை அழைத்துப் போகிறார் என்று முதல் நாள் எழுதி விட்டு, மறுநாள் கேஸ் ஆகி விடுமோவென்பதாகப் பயந்து விபசாரத்திற்கு என்று எழுதியது கைப்பிசகென்றும், அதை உபசாரத்திற்கு என்பதாக திருத்திக் கொள்ள வேண்டும் என்றும் ‘தமிழ் நாடு’ பத்திரிகையில் ஸ்ரீ வரதராஜுலு திருத்தம் எழுதியதும் யாவருக்கும் தெரியும்.

எனவே அப்படிப்பட்ட .............ஸ்ரீமான் சத்தியமூர்த்தி அய்யரை அதே ஸ்ரீ வரதராஜுலு மந்திரி வேலையை தயவு செய்து ஒப்புக் கொள்ளும்படி எப்படி தந்தி கொடுத்தார்? அதே ஸ்ரீசத்தியமூர்த்தி அய்யர் அதே ஸ்ரீமான் வரதராஜுலுவுக்கு இன்றைய தினம் எப்படி தலைவரானார்? அவர் தலைமையில் இவர் எப்படி தொண்டாற்றுகின்றார்? ‘தமிழ்நாடு’ ஆபீசில் அடிக்கடி கதவை மூடிக்கொண்டு எப்படி இருவரும் இரகசியக் கூட்டம் கூடுகின்றார்கள்? என்பவைகளையெல்லாம் கவனித்தால் பொது ஜனங்களுக்கு இதில் ஏதாவது ஒரு இரகசியம் இருக்கும் சங்கதி விளங்காமல் போகாது.

அடுத்தாப்போல் ‘இந்து’ பத்திரிகை என்னும் ஒரு பார்ப்பனப் பத்திரிகை எவ்வளவு தூரம் நமது மக்களுக்கு கொடுமை செய்கின்றது! எவ்வளவு தூரம் நமது முன்னேற்றத்திற்கும் சுயமரியாதைக்கும் முட்டுக் கட்டையாயிருக்கின்றது! நமது ஆங்கிலம் படித்த மக்களை தலையெடுக்க வொட்டாமல் செய்ய எவ்வளவு அயோக்கியத்தனங்கள் செய்கின்றது! என்பனவாதியவைகள் யாருக்கும் தெரியாதா! என்று கேட்கின்றோம்.

உதாரணமாக சமீபகாலத்தில் ‘இந்து’ பத்திரிகையால் 10 வயது பெண்ணோ அல்லது 12 வயது பெண்ணோ ஒருவனுக்கு கல்யாணத்திற்காக வேண்டும் என்று ஒரு விளம்பரம் செய்திருக்கிறது. இதைப் பார்த்து ஒரு சீர்திருத்தக்காரர் ‘இந்து’வை ஒரு கேள்வி கேட்டார். அதாவது “ஓ! இந்துவே நீர் சீர்திருத்தக்காரன் என்று முழக்கம் செய்கின்றனையே! இந்தக் காலத்தில் கூட 10 வயது அல்லது 12 வயது பெண் ஒரு மாப்பிள்ளைக்கு கலியாணத்திற்காக வேண்டும் என்று விளம்பரம் செய்யலாமா” என்று கேட்டார். அதற்கு ‘இந்து’ பத்திரிகை சொன்ன பதில் என்ன என்று பாருங்கள்.

“10 அல்லது 12 வயது பெண்களை இப்போது விவாகம் செய்வது என்பதாகக் காணப்படுவது விவாகச் சடங்கல்ல. அது நிச்சயார்த்தத்திற்கு ஒப்பானது. பெண்ணையும் மாப்பிளையையும் வீட்டிற்குள் விட்டு கதவு சாத்துகின்றோமே. அதுதான் விவாகம்” என்று அயோக்கியத்தனமாய் பதில் எழுதிற்று.

இதற்கு அந்த சீர்திருத்தக்காரர் என்ன பதில் எழுதினார் என்றால் “ஓ இந்துவே 10 வயதிலும் 12 வயதிலும் கல்யாணம் செய்வது போல் கண்ணுக்குத் தெரிவதெல்லாம் கல்யாணம் அல்ல. அது நிச்சயார்த்தம் என்று சொல்ல வருவாயானால் அந்த 10, 12 வயது பெண்களின் நிச்சயார்த்தம் செய்யப்பட்ட புருஷன் செத்தால் தாலி அறுபட்டதாக பெயர் செய்து மொட்டையடித்து முக்காடு போட்டு மூலையில் உட்கார வைப்பதேன்? அது கூட உங்கள் நிச்சயார்த்தச் சடங்கில் சேர்ந்த நிபந்தனையா” என்று கேட்டார்.

உப்புக் கண்டம் பறிகொடுத்த பார்ப்பனத்தி போல் “இந்து” இதற்கு ஒரு மறுமொழியும் சொல்லாமல் வாயை மூடிக்கொண்டது. மற்றும் பல சமயங்களில் அது நம்மவர்களுக்கு விரோதமாக எவ்வளவோ கொலை பாதகத்திற்கு ஒப்பான கொடுமைகளைச் செய்திருக்கின்றது; செய்கின்றது; செய்யக் காத்திருக்கின்றது. இம்மாதிரியான பத்திரிகையைத்தான் ஸ்ரீமான் வரதராஜுலுவும் அவரது “தமிழ் நாடு”ம் உயர்ந்த யோக்கியமான பத்திரிகை என்று சொல்ல ஸ்ரீமான் காந்தியிடம் தூது சென்றன.

நிற்க, ஸ்ரீமான் சர்.சி.பி. ராமசாமி அய்யர் நமது சமூகத்தார் தயவினால் சட்ட மெம்பர் ஆனவர். அப்படி இருந்தும் அவர்கள் பரம்பரை வழக்கம் போல் அதை மறந்துவிட்டு நம்மவருக்கு செய்த இடையூறுகள் கொஞ்ச நஞ்சமா? என்பதை அறியாதார் யாரும் இருக்க மாட்டார்கள்.

மேட்டூர் திட்டத்தில் அவர் செய்த புரட்டும் பித்தலாட்டங்களும் கணக்கு வழக்குகள் அடங்கியதல்ல. இதை பிட்டுப்பிட்டு ஜஸ்டிஸ் ‘திராவிடன்’ பத்திரிகைகள் வெளியாக்கின. கொஞ்ச காலத்திற்கு முன்வரை ஸ்ரீமான் வரதராஜுலுவும் அவரது தமிழ்நாடும் ஸ்ரீமான் சி.பி. அய்யரைப் பற்றி எழுதிய வசவு எழுத்துக்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அப்படி இருக்க இப்போது திடீரென்று சர்.சி.பி. அய்யருக்கு சிபார்சு பேசுவதும் அவரை ஆதரிப்பதும் அவரையும் அவர் ஊழல்களையும் வெளியாக்கினதற்காக ஜஸ்டிஸ் கட்சியை ‘தமிழ்நாடு’ பத்திரிகை வைததும் ஆகிய விஷயங்களைப் பற்றி யோசிப்பவர்களுக்கு அதிலும் ஏதாவது இரகசியம் இருக்க வேண்டுமென்று புலப்படாமல் போகுமா?

எவ்வளவோ கஷ்ட நஷ்டங்களுக்கிடையில் பார்ப்பன சூழ்ச்சியை வெளியாக்கி மக்களை பார்ப்பனக் கொடுமையிலிருந்து விடுதலை பெறச் செய்ய ஒரு சாரார் பிரயாசைப்படும்போது ஸ்ரீ வரதராஜுலுவும் அவரது பத்திரிகையும் பார்ப்பன பூஜை செய்து கொண்டு கவிபாடி திரிந்து கொண்டிருக்க வேண்டிய இரகசியம் என்ன? இதற்காக இவருக்குப் பார்ப்பனர்கள் கொடுத்த கூலி என்ன? என்பதை கவனித்துப் பார்ப்போமாக.

3 ² ‘தமிழ் நாடு’ உபதலையங்கத்திலும் 8 தேதி ‘ஜஸ்டிசி’லும் 9 தேதி ‘திராவிடனி’லும் உள்ள தலையங்கத்தில் காணப்படும் சில குறிப்புகளை சற்று கவனித்துப் பார்த்தால் ஸ்ரீ வரதராஜுலுவுக்கு பார்ப்பனர்கள் கொடுத்த கூலியும் அவர்களின் அயோக்கியத்தனமும் நன்றாய் விளங்கும். அதில் காணப்படுவ தென்னவென்றால்,

“இந்து” பத்திரிகையின் சந்தாதாரர்களின் தொகை 13,500 - ல் இருந்து 17,500க்கு உயர்ந்துவிட்டது. ................... தமிழ் பத்திரிகைகளுக்குள் ‘தமிழ் நாடு’ பத்திரிகையின் சந்தாதாரர்களின் தொகை நூற்றுக்கு ஐம்பது வீதம் உயர்ந்து 6000 பத்திரிகை ஆகிவிட்டது. இது கொள்கையை மாற்றிக் கொண்டதனால் இப்படி உயர்ந்து விட்டது........... ஜஸ்டிஸ் முதலிய பத்திரிகைகளின் சந்தாதாரர்களின் தொகை மிகுதியும் குறைந்துவிட்டது.........

என்பதாகக் காணப்படுகின்றது. இது அரசாங்கத்தாரின் சென்ற வருஷ நிருவாக அறிக்கையில் பத்திரிகைகளைப் பற்றிய குறிப்புகளில் இருந்து எடுத்து எழுதப்பட்டது.

இதைப் பார்க்கும்போது பார்ப்பன அயோக்கியத்தனத்திற்கும் ஸ்ரீவரதராஜுலுவுக்கு பார்ப்பனர்கள் கொடுத்த லஞ்சத்திற்கும் வேறு ஆதாரம் வேண்டுமா என்று கேட்கின்றோம். இந்த இலாகா நிர்வாகம் சர்.சி.பி. என்கின்ற பார்ப்பன ஆதிக்கத்தில் உள்ளது. பத்திரிகை கணக்கெடுக்கும் ஊ.ஐ.னு உத்தியோகஸ்தர்கள் மிகுதியும் சர்.சி.பி. அய்யரின் ஏவலாள்களான பார்ப்பனர்கள். எனவே இந்தக் காரியமானது சர்.பி.பி. அய்யராலாவது அல்லது அவரது ஊ.ஐ.னு சிஷ்யர்களாலாவது செய்த அயோக்கியத்தனமாக இருக்க வேண்டுமே யொழிய வேறு யாராலாவது அல்லது யோக்கியமாகவாவது செய்த காரியம் என்று சொல்ல முடியுமா என்று கேட்கின்றோம்.

இந்த ரிப்போட்டு எழுதப் பட்ட காலத்தில் ‘ஜஸ்டிஸ்’ ‘திராவிடன்’ பத்திரிகைகள் மளமளவென்று உயர்ந்துகொண்டு போன காலம். இது எந்த மடையனுக்கும் தெரிந்த விஷயம். அதல்லாமல் ‘தமிழ்நாடு’ பத்திரிகை படல் படலாய் விழுந்துகொண்டு வந்த காலம். இப்படி இருக்க இம்மாதிரி அரசாங்க ரிபோர்ட்டில் எழுதப்படுவது என்றால் பார்ப்பன அயோக்கியத்தனம் எவ்வளவு தூரம் பாய்கின்றது என்பதற்கு அளவுண்டா என்பதை யோசித்துப் பாருங்கள்.

“தமிழ்நாட்டை”ப் பற்றி உயர்த்தி ஒன்றுக்கு மூன்றாய் எழுதியதில் நமக்கு பொறாமை இல்லை. வேலைக்குத் தகுந்தக் கூலி அடையட்டும். ‘ஜஸ்டிஸ்’ ‘திராவிடன்’ பத்திரிகைகளைப் பற்றி இவ்வளவு குறைவாய் வேண்டுமென்றே போக்கிரித் தனமாய் எழுத வேண்டிய காரணம் என்ன? என்பதுதான் நமது கேள்வி.

விளம்பரம் கொடுப்பவர்களை இப்பத்திகைகளுக்கு கொடுக்க முடியாமல் செய்துவிட வேண்டுமென்றும் ‘தமிழ்நாடு’ பத்திரிகைக்கும் ‘இந்து’ பத்திரிகைக்கும் அதிகமான பேர் விளம்பரம் கொடுத்து அவைகள் பணம் சம்பாதித்து வயிறு வளர்த்து பார்ப்பனப் பிரசாரம் செய்யட்டும் என்றும் எண்ணினதேயல்லாமல் வேறு என்னமாய் இருக்க முடியும்?

அப்படிக்கில்லாமல் இந்த அறிக்கை அறியாமலாவது முட்டாள் தனமாகவாவது எழுதப்பட்டிருக்குமென்று யாராவது சொல்ல முடியுமா? வேண்டுமென்றே கூலிக்காகச் செய்த காரியமா அல்லவா என்பதைப் பொது ஜனங்களே யோசித்துப் பார்க்கட்டும். சற்று கடுமையாக இருப்பதாக யாராவது சிலர் சொல்ல வரக்கூடும். அக்கடுமையின் பலனை நாம் அனுபவிக்கத் தயாராயிருக்கின்றோம். ஆனால் கடுமை என்று நினைப்பவர்கள் எத்தனை நாளைக்கு இம்மாதிரி அயோக்கியத்தனங்களையும் போக்கிரித்தனங்களையும் சகித்துக் கொண்டு இருப்பது என்பதையும் இவைகளை நிறுத்த என்ன செய்வது, எப்படிப்பட்ட பாஷையில் எழுதுவது என்பதையும் பற்றி நமக்கு ஏதாவது யோசனை சொல்லட்டும். இல்லாத வரை வாயை மூடிக் கொண்டு நமது பத்திரிகையை கிழித்தெறிந்துவிட்டு சும்மா கிடக்கட்டும். இரண்டும் இல்லாமல் நோணாவட்டம் பேசவேண்டாம் என்றுதான் கேட்டுக் கொள்ளுகின்றோம்.

பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன் என்கின்ற பாகுபடுத்தி நம்மை சூத்திரன் என்கின்ற பிரிவில் சேர்த்து சட்டசபையில் அறிக்கை வெளியிட்டு இன்னமும் ஆறுமாதம் கூட ஆகவில்லை. அதைப் பற்றி தொண்டையைக் கிழித்துக் கொண்டோம். கையை ஒடித்துக் கொண்டோம். யாரும் ஏன் என்று கேட்கவில்லை.

‘தேசீயம் பறக்கின்றது’ ‘சீர்திருத்தம் வாழ்கின்றது’ ‘சுயமரியாதைக்காக பகிஷ்காரமும் அர்த்தாலும் தாண்டவமாடுகின்றது’ ‘சட்ட சபைகளில் நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் கர்ஜ்ஜிக்கின்றது’ ‘பார்ப்பனரல்லாத் தலைவர்களும் அதற்கு எழுந்து நிற்கின்றார்கள்’ இவ்வளவு அமோகத்தில் இதைப்பற்றிய அயோக்கியத்தனங்களுக்கும் கொடுமைகளுக்கும் சற்றும் இடமே இல்லை. இனி நம்ம ‘தலைவிதி தான்’ என்ன என்பதைப் பற்றி யாராவது யோசிக்க வேண்டாமா?

தமிழ் மக்களின் நிலைதான் என்ன? இது தலை எடுக்கும் காலந்தான் எப்பொழுது? என்பதை சற்று கவனித்துப் பார்க்க வேண்டும் என்பதுதான் இந்த வியாசத்தின் கருத்து “பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் பேச்சே இப்போது கூடாது” என்று போலி தேசீய ஞானம் பேசும் ஸ்ரீமான்கள் வரதராஜுலுவும், குப்புசாமியும், அண்ணாமலையும், ‘தமிழ்நாடு’ பத்திரிகையும் வடநாட்டு இந்து - முஸ்லீம் கலவரங்கள் போல் தென்னாட்டிலும் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் கலவரங்கள் ஏற்பட்டு தினம் இரு பக்கத்திலும் நாலு பத்து என்பதாக மடியவும் கை கால் ஒடியவும் ஏற்பட வேண்டும் என்கின்றதா இந்த தேசீய ஞானிகள் கருத்து என்று கேட்கின்றோம்.

அப்படி ஒரு சமயம் ஏற்பட்டாலும் கூட அதனால் ஏதாவது பெருமை வருவதாயிருந்தால் அப்போதும் இந்த வரதராஜுக்களும் “தமிழ்நாடு” போன்ற பத்திரிகைகளும் “நாம் சொல்லியபடியே நடந்தது, நாம் எழுதியபடியே நடந்தது. இதற்காக பொது ஜனங்களை பாராட்டுகிறோம்” என்று சொல்லி விளம்பரப்படுத்தி அதிலும் லாபம் சம்பாதிக்கப் பார்ப்பார்களேயொழிய இதற்காக கடுகளவாவது கவலைப்படுவார்களா என்று யோசித்துப் பாருங்கள். இம்மாதிரி நிலை (ஏற்படாமல் இருக்கட்டும்) ஒரு சமயம் ஏற்படுமானால் இவர் கதியும் என்ன ஆகும் என்பதையும் யோசித்துப் பார்க்க வேண்டிக்கொள்ளுகின்றோம்.

இப்பார்ப்பனர்களும் அவர்களது அடிமைகளும் சாந்தத்தையும் பொருமையும் அகிம்சையையும் கொலை செய்கின்றார்களேயல்லாமல் கடுகளவாவது அதற்கு மதிப்பு கொடுக்கிறார்களாவென்பதை யோசித்துப் பாருங்கள். இந்தப் பார்ப்பன அயோக்கியத்தனத்தின் பலனாகவும் இப்பார்ப்பனர்களின் அடிமைகளின் நடவடிக்கையின் பலனாகவும் அரசாங்கத்தாரும் (வெள்ளைக்காரர்களும்) தங்களது ஆட்சி முறையை எவ்வளவு அக்கிரமமாக நடத்த முடியுமோ அதற்கு மேலும் நடத்திக் கொண்டு போகத் துணிந்து விட்டார்கள்.

மேலும், அவர்கள் இக் கொடுமைக்கார பார்ப்பனர்களை ஆதரித்து தங்கள் கொடுமையான ஆட்சி முறையை வலுப்படுத்திக் கொண்டும் போகின்றார்கள் என்றே சொல்ல வேண்டும். பார்ப்பனீயம் உள்ளவரை அரசாங்கத்தை யோக்கியமானதாகச் செய்ய முடியாது. பார்ப்பனரல்லாதாருக்கு நியாயம் வழங்கத் தக்கதாக செய்யவும் முடியாது என்பது நமது கடைசி முடிவு.

இந்த நிலையில் இப்போது அரசாங்கத்தைப் பற்றிப் பேசுவது காட்டிலிட்ட கூச்சலாகும். பார்ப்பனீயம் என்னும் மரம் வெட்டி வீழ்த்தப்படும்போது அன்றே அதே சமயத்தில் அந்த நிழலில் வாழும் அரசாங்கமும் நசுக்குண்டு போகுமென்பது சத்தியம்! சத்தியம்!! சத்தியம்!!!

எனவே இவ்விஷயங்களை பார்ப்பனரல்லாத வாலிபர்கள் கண்டிப்பாய் அறிய விரும்புகின்றோம். இது மிகவும் நெருக்கடியான சமயம் என்பதை வலியுறுத்துகின்றோம்.

(குடி அரசு - தலையங்கம் - 11.03.1928)

Pin It