சமீபத்தில் எனக்குத் தெரிந்த ஒரு யூ.கே.ஜி குழந்தை என்னிடம் “அக்கா, எனக்கு பாய்ஸ் பக்கத்துல உட்காரவே பிடிக்கல” என்று கூறியது.” முதலில் அண்ணனுக்கு சாக்லெட் கொடு...அப்புறம் உனக்கு நான் வாங்கித் தருகிறேன்” என்று ஒரு அம்மா கூறினார். இம்மாதிரியான சம்பவங்களை நோக்கும்போது தான் நாம் எப்படிப்பட்ட பாலின ஏற்றத்தாழ்வுள்ள ஒரு சமூகத்தில் வாழ்கிறோம் என்று எனக்குத் தோன்றியது.

குழந்தைப் பருவம் மற்றும் பள்ளிப் பருவம் என்பது எதையும் எளிதாக ஏற்றுக்கொள்ளும் ஒரு பருவம்.  இக்காலகட்டத்தில் பாலின சமத்துவத்தைக் கற்பிப்பதற்குப் பதிலாக பாலின வேறு பாட்டைத் தான் இந்தச்சமூகம் அவர்கள் மனதில் பதிய வைக்கிறது. அதாவது “ஆண் குழந்தையின் பக்கத்தில் உட்காராதே, அவனிடம் பேசாதே, பெண் குழந்தையுடன் விளையாடாதே” என்பவை போன்ற கற்பிதங்களைத் தான் இந்தச்சமூகமும், பெற்றோர் களும் குழந்தைகளுக்குப் போதிக்கிறார்கள். இதன் மூலம் ஆண் என்பது வேறு, பெண் என்பது வேறு, ஆண் என்பவன் பெண்ணைவிட உயர்ந்தவன், அவனைச் சார்ந்து தான் ஒரு பெண் இயங்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது இந்தச் சமூகம்.

பாலின சமத்துவத்தைக் கற்பிக்கவேண்டிய பள்ளிகளும் பாலின வேறுபாட்டையே மாணவர் களுக்குக் கற்பிக்கின்றன. பல பள்ளிகள் ஆண் மற்றும் பெண்களுக்குத் தனித்தனி வகுப்பறைகளையும், அப்படி ஒரே வகுப்பறைகளாக இருந்தாலும் அவர் களைத் தனித்தனியாகவும் அமரவைக்கின்றன. பள்ளிவளாகத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் பேசிக்கொள்ளக் கூடாது என்பது போன்ற பலவித மான கட்டுப்பாடுகளை வைத்துள்ளன. பள்ளிகள் மட்டுமில்லாமல் பல கல்லூரிகளும் இதே முறையைத் தான் பின்பற்றுகின்றன.

பாலியல் கல்வியைக் கற்பிக்கவேண்டிய கல்வி நிலையங்களே அதைப்பற்றிய தவறான புரிதலை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்துகின்றன. இவற்றைத் தகர்த்தெறிய முதல்படி கே.ஜி. வகுப்பு முதல் பல்கலைக்கழக வகுப்புகள்வரை அகர வரிசைப்படி (Alphabetical order) மாணவர்களை அமர வைக்கவேண்டும் .நாம் மாணவர்களை அகர வரிசைப்படி அமரவைப்பதன் மூலம் ஆணும், பெண்ணும் ஒன்று என்ற ஒரு புரிதலை அவர்கள் மத்தியில் ஏற்படுத்த இயலும். வலுவான, ஆரோக்கிய மான ஆண்-பெண் நட்புமுறை இதன்மூலம் தொடங்கும்.

மெதுவாக இந்த நடைமுறை ஆணுக்கும், பெண்ணுக்கும் உடலியல் சார்ந்த மாற்றங்களைத் தவிர, எவ்விதவேறுபாடும் இல்லை என்பதை உணரவைக்கும். மேலும், அவர்கள் தயக்கம் மற்றும் தாழ்வு மனப்பான்மை இன்றிப் பழகுவதற்கும் உதவும்.

ஊடகங்களும் பாலியல் வேறுபாடு பற்றிய தவறான புரிதல்களை மக்கள் மனதில் பதிவு செய்வதைக் கைவிடவேண்டும். பாலியல் சம்பந்தப்பட்ட விஷயங்களைப் பேசவே தயங்கும் புழுக்கமான மனநிலை கொண்ட இந்தியக் குடும்பங்களின் மத்தியில் பாலியல் கல்வியைக் குடும்பஅமைப்பு வழங்குவது என்பது இயலாத காரியம். ஆகவே பாலியல் கல்வியை வழங்கச் சரியான இடங்கள் பள்ளிகளே. மாணவர்களிடையே பாலின சமத்துவத்தை ஏற்படுத்தப் பள்ளிகள் முன் வரவேண்டும். அகரவரிசைப்படி மாணவர்களை அமரவைப்பதுதான் இதன் முதற்படி.

Pin It