kaanja ayeliyaதமிழ்நாட்டில் இன்றைக்கு எந்த ஒரு நகரத்திலோ கிராமத்திலோ வீதியில் செல்கிற ஒரு இளைஞனைப் பிடித்து 'சூத்திரன் என்கிற வார்த்தையைக் கேள்விப்பட்டிருக்கிறாயா?' என்று கேட்டுப் பாருங்கள். நூற்றுக்கு 97 பேர் 'அப்படி என்றால் என்ன?' என்று தயங்காமல் கேட்பான். அரை நூற்றாண்டுக்கு முன் மிக இயல்பாகப் புழக்கத்திலிருந்த சொல் இன்று காணாமல் போயுள்ளது என்றால், அதற்குப் பெரியாரும் அவர் கட்டியெழுப்பிய இயக்கமும்தான் காரணம். இது மகிழ்ச்சி அளிக்கக் கூடிய செய்திதான்.

நிற்க! இப்போது அதே இளைஞனிடம் உனது Community என்ன என்று கேளுங்கள்; ஒருவேளை அவனிடமிருந்து BC அல்லது MBC என்று பதில் வந்தால் 'அப்படி என்றால் நீ பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவன், அதாவது உன் சாதி பின்தங்கிய சாதி' என்று சொல்லிப் பாருங்கள். அடுத்த நிமிடம் ஆத்திரம் மேலெழுந்து வானத்திற்கும் பூமிக்குமாய்க் குதிக்கவே மிக அதிகமான வாய்ப்பிருக்கிறது.

இதைச் சுயமரியாதை உணர்வு என்று சிலர் வாதிடலாம். ஆனால் பெரும்பாலான பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குத் தங்களை ஏன் பேக்வார்டு கிளாஸ் என்று அழைக்கிறார்கள் என்பதையோ, இன்றைக்கு மன்னர் பரம்பரை என்று மார்தட்டும் இவர்கள் அரை நூற்றாண்டிற்கு முன்னர்  சூத்திரர்கள் அதாவது பார்ப்பனர்களின் அடிமைகள் அல்லது தாசி மக்கள் என்றுதான் அழைக்கப்பட்டார்கள் என்பதையோ, தாழ்ந்த சாதி என்பதால் காலங்காலமாகக்  கல்வி உரிமையும், கருவறை நுழையும் உரிமையும் மறுக்கப்பட்டதால்தான் பிற்படுத்தப்பட்டவர்கள் என்பதையோ உணர்ந்திருக்க வாய்ப்பில்லை என்பதே உண்மை.

இன்று கிடைக்கப் பெற்றிருக்கும் ஓரளவுக்கான பொருளாதார மேம்பாடு, கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள், அரசியலில் சில பதவிகள் ஆகிய இவை மட்டுமே நாம் எட்ட வேண்டிய இலட்சியங்கள் என்ற அளவிற்குப் பிற்படுத்தப்பட்ட மக்களின் அறிவுப் பரப்பு சுருக்கப்பட்டுள்ளது.

சாதி அமைப்பை உருவாக்கிய தாழ்வு உளவியலில் இருந்து விடுபடாத அவர்களுக்கு வானம் இவ்வளவு சுருங்கியதாகத்தான் தெரிகிறது. தமிழகத்திலேயே இந்த நிலை என்றால் வட இந்தியாவில் பிற்படுத்தப்பட்டோரின் நிலைமை மிக மோசம்.

உண்மையில் இவர்கள் எட்டியிருக்கும் முன்னேற்றத்தின் அளவு என்ன? எங்கெல்லாம் இவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்? என்னவெல்லாம் கோட்டை விட்டிருக்கிறோம்? நாம் எட்ட வேண்டிய உயரங்கள் என்ன? நமது  ஆய்வுகள் எதை நோக்கி அமைய வேண்டும்? எந்த விழுமியங்களை நாம் முன்னிறுத்த வேண்டும்? 

சாதிக் கட்டமைப்பைத் தகர்க்க பெரும்பான்மை பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் மேம்பாட்டில் ஏற்பட்ட இடைவெளியை நிரப்ப  இக்கேள்விகளை அவர்களிடம் எழுப்பி அதற்கான விடைகளை வழங்க வேண்டியதும் மிக அவசியமான களச் செயல்பாடு. இவ்வரலாற்றுத் தேவையை உணர்ந்து இந்திய அளவிலும், உலக அளவிலும் பார்ப்பனியத்தைத் தோலுரித்துக் காட்டும் அறிவாளர்களில் முக்கியமானவர் காஞ்சா அய்லைய்யா.

தெலங்கானா மாநிலத்தில் ஒரு குக்கிராமத்தில் ஆடுமேய்க்கும் குடும்பத்தில் பிறந்த காஞ்சா அய்லய்யா இன்று அரசியல் அறிவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்று, அண்ணல் அம்பேத்கரை முன்னுதாரணமாக ஏற்றுக் கொண்டு இருபத்தோராம் நூற்றாண்டில் சாதியின் பரிணாமத்தை அலசி ஆராய்ந்து, இந்துத்துவத்தை உலக அளவில் தோலுரித்துக் காட்டும் தரமான பல ஆய்வு நூல்களை எழுதியவருமான அசல் அறிவுஜீவி.

கருத்தரங்குகள், தொலைக்காட்சி விவாதங்கள், முக்கிய இதழ்களில் எழுதும் கட்டுரைகள், புத்தகங்கள் என அவர் தந்த செயல்பாட்டிலும் எனக்குப் புரிந்த வரையில்  இரண்டு விஷயங்களை அவர் தொடர்ந்து செய்கிறார்.

ஒன்று தந்தை பெரியார் போல அறியாமையில், போலிப் பெருமிதங்களில் மூழ்கிக்கிடக்கும் சூத்திரர்களுக்குச் சுருக்கென்று உரைக்கும் வகையில் அவர்களின் உண்மை நிலையை எடுத்துக்கூறி முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போடும் பார்ப்பனியத்தின் தோலை உரிப்பது.

இரண்டாவது அண்ணல் அம்பேத்கர் வழியில் ஒடுக்கப்பட்ட மக்களை அறிவுத் தளத்தில் உள்ள தாழ்வு உளவியலில் இருந்து மீட்டு எடுப்பது, தங்களை அடக்குபவர்களைவிடத் தாம் எந்த வகையில் எல்லாம் மேலானவர்கள், தங்களால் எந்த உயரங்களை எட்ட முடியும், அதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதைக் கோடிட்டுக் காட்டி அவர்களின் அறிவுச் செயல்பாட்டைத் தூண்டுவது.

இந்திய சமூகத்தில் சூத்திரர்கள் நிலை என்னவாக இருக்கிறது என்பதை உணர்த்த காஞ்சா அய்லைய்யா முன்வைக்கும் உதாரணம், இன்று இந்துத்துவவாதிகளால் கொண்டாடப்படும் சர்தார் பட்டேல். அன்றைய காங்கிரசைக் கட்டுப்படுத்திய மூவரில் ஒருவர் சர்தார் பட்டேல். இருந்தபோதிலும் காந்தி மற்றும் நேருவைப் போல அவர் தனது சுய சரிதையை எழுதவில்லை; ஏன்?

அதற்குப் பட்டேலின் சூத்திர சமூகப் பின்னணிதான் காரணம் என்கிறார் காஞ்சா. ஏனெனில் சூத்திரர்களுக்கு வரலாற்று நெடுகிலும் எழுத அனுமதி வழங்கப்படவில்லை; பட்டேல் தனது சூத்திரப் பாரம்பரியத்தில் தேங்கி நின்று விட்டார்.

அதனால்தான் அவர் தன்னையோ தன் சமூகத்தைப் பற்றியோ எதையும் எழுதவில்லை. வருணாசிரமத்திற்குக் கட்டுப்பட்டவராகவே வாழ்ந்தார். அதனால்தான் இந்துத்துவவாதிகள் இன்று அவருக்குச் சிலை வைத்துக் கொண்டாடுகிறார்கள்.

பார்ப்பனியம் சூத்திரர்களைச் சில சமயம் செல்வாக்குப் பெற அனுமதிக்கும், இரும்பு மனிதன் எனப் புகழக் கூடச் செய்யும் (இன்றைக்கு ஆண்ட பரம்பரை பட்டம் சூட்டுவது போல்) ஆனால் ஒரு போதும் உங்களை அறிவுத்தளத்தில் மேம்பாடு அடைய, ஆய்வறிஞர்களாக உருவாக,  சமூக விடுதலைக்கான கோட்பாடுகளை முன்வைக்க அனுமதிக்காது. அதனால்தான் இன்றுவரை IIT, IIM உட்பட பிற இந்திய ஆய்வு நிறுவனங்களிலும், சமூக அறிவியல் துறையில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் சிறுபான்மையினர் அனுமதிக்கப்படுவதில்லை.

நாம் பொறியியல் படித்து மாதச் சம்பளம் வாங்குவதில் திருப்தி அடைந்து விடுகிறோம், ஆனால் சித்தாந்தங்களைக் கட்டமைக்கக் கூடிய சமூகவியல், அரசியல் அறிவியல் அறிஞனாய், தத்துவ ஞானியாய் உருவாவதைப் பற்றி நாம் எண்ணிக் கூடப் பார்ப்பதில்லை. நமது அறிவு நாம் பிறந்த சமூகத்தைப் பற்றி ஆய்வு செய்யவும் எழுதவும் பயன்படாதவாறு, ஒரு குறிப்பிட்ட அளவோடு தேங்கி நிற்பதற்கான கட்டமைப்பைப் பார்ப்பனியம் இன்றளவும் வலுவாக நிறுவியிருப்பதை காஞ்சா அய்லய்யா புரிய வைக்கிறார்.

இப்படி ஒடுக்கப்படும் பெரும்பான்மை பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் லட்சிய நாயகனாக அம்பேத்கரை முன்னிறுத்துகிறார் காஞ்சா. ஏனெனில் தனது கடுமையான உழைப்பின் மூலமாக அறிவை எல்லையற்று விஸ்தரித்து உலகே வியந்து பார்க்கும் அறிஞராக உருவானவர் அண்ணல் அம்பேத்கர்தான், அதுவரை நம் உளவியலில் திணிக்கப்பட்ட அறிவுசார் தாழ்வு உளவியலை அடித்து நொறுக்கினார்.

அதற்கு அம்பேத்கருக்குத் துணைபுரிந்தது அவரது ஆங்கில அறிவு. அந்தக் காரணத்துக்காகத்தான் காஞ்சா, தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் முன்னேற்றத்திற்கு ஆங்கிலம் இன்றியமையாதது என்றும், இந்திய ஆங்கிலம் என்பது நமது தேசிய மொழி என்றும், அரசுப் பள்ளிகளில் ஆங்கிலம் கட்டாயம் பயிற்று மொழியாக வேண்டும் என்றும் மீண்டும் மீண்டும் பிரச்சாரம் செய்து வருகிறார். 'பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்டோர் பிள்ளைகள் ஆங்கிலம் படிக்கட்டும், பார்ப்பனர் பிள்ளைகள் சமஸ்கிருதம் படிக்கட்டும்' என்பது அவரது முழக்கம்.

தங்களைத் தேச பக்தர்களாகக் காட்டிக்கொள்ளும் இந்துத்துவவாதிகளைவிடப் பல மடங்கு தேச அக்கறை கொண்டவர்கள் நாம்தான். ஏனெனில் இந்த மண், வேறு எவரையும் விட, தலித் மக்களுக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் பழங்குடியினருக்குமே சொந்தமானது என்கிறார் காஞ்சா. ஆரியர்களின் வருகைக்கு முன்பே ஹரப்பா நாகரிகத்தைக் கட்டமைத்தவர்கள் இன்றைய பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் - திராவிடர்கள் - என்பது அவரது துணிபு.

கற்பனை வறட்சி, அறிவியல் வளர்ச்சிக்கும் உற்பத்தி பெருக்கத்திற்கும் எதிரான மதக் கட்டமைப்பு, உடல் மற்றும் அறிவு வளர்ச்சியை வழங்காத சைவ உணவு ஆகியவற்றால் இன்று இந்த நாட்டைப் பலவீனப்படுத்தி வைத்திருப்பவர்கள் பார்ப்பனர்கள்தான் என்பதையும், பார்ப்பனியக் கட்டமைப்பு தகர்க்கப்பட்டு சாமானிய, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்களுக்கு அனைத்து உரிமைகளும் என்று கிடைக்கப்பெறுகிறதோ அன்றுதான் அந்தத் தேசம் பாதுகாக்கப்படும், தன்னிறைவு அடையும் என்கிற வெடிகுண்டை மேடைதோறும் வீசுகிறார் காஞ்சா.

சமூகத்தளத்தில் இருந்து கருத்துகளை உள்வாங்கி, எளிய தர்க்க ரீதியான கேள்விகளின் மூலம் பார்ப்பனியத்தைத் தெறிக்கவிடும் இவரது கருத்துக்களைப் பெரியாரைப் படித்த எவராலும் எளிதில் ரசித்து ஏற்றுக் கொள்ள முடியும். அவரது ‘நான் இந்து அல்ல’ புத்தகம் ஒரு சூத்திரனின் கண்ணோட்டத்திலிருந்து இந்து மதத்தை வெளுத்து வாங்கியது. புத்தரை ஒரு அரசியல் தத்துவவாதியாக ஆணித்தரமாக நிறுவியது அவரது ஆய்வு நூல்.

ஆனால் அவரது எந்த ஒரு ஆய்வும் வெறும் மேற்கோள்களாக நிரம்பியதாக இல்லாமல் நிதர்சனமான கள யதார்த்தத்தை, சாமானிய, உழைக்கும் மக்களின் வாழ்வியலை, அறிவியலை, உழைப்பின் மேன்மையைப் பேசுவதாக இருப்பதே அவரைத் தனித்துவமான அறிஞராக ஆக்குகிறது.

இந்த நூற்றாண்டின் பார்ப்பனீய சூழ்ச்சிகளைப் புரிந்து கொள்ளவும், நம்மீது திணிக்கப்பட்டுள்ள தாழ்வு உளவியலை உடைத்து அறிவுப் பாதையில், சமூகத்தை உற்று நோக்கி விடுதலைக்கான கோட்பாடுகளை உருவாக்கக்கூடிய ஊக்கத்தைத் பெறவும் நாம் படிக்க வேண்டியவர்களில் இன்றியமையாதவர் காஞ்சா அய்லய்யா.

- குண.சந்திரசேகர்

Pin It