உலகத்தில் பல மதங்கள் உள்ளன. அவற்றுள் இந்து மதம் மூத்தது. அடுத்து மூத்த மதங்கள் சமணம், பௌத்தம் ஆகியவை. இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்னர்த் தோன்றியது கிறித்துவ மதம். 1450ஆம் ஆண்டுகளுக்கு முன்னர்த் தோன்றியது இசுலாம் மதம்.

brahmins yagamஒவ்வொரு மதத்திலும் புரோகிதம் உண்டு; புரோகிதர்கள் இருக்கிறார்கள்.

இன்று உலகத்தில் பெரிய எண்ணிக்கையில் உள்ளவர்கள் கிறித்துவர்கள். அவர்கள் கிராமப் பாதிரி, மாதா கோவில் பாதிரி முதலான புரோகிதப் பணிக்குப் பயிற்சி அளிக்கிறார்கள். குறிப்பிட்ட கல்விப் பயிற்சி உள்ளவர் மட்டுமே கிறித்துவப் புரோகிதர் ஆகமுடியும்; அதாவது பாதிரியார் ஆகமுடியும்.

அதேபோல் இசுலாம் மதத்தில் பாதிரியாக வர விரும்புகிறவர், ஏழு ஆண்டுகள் அரபுக் கல்லூரியில் பயிற்சி பெறவேண்டும். அவர்களே திருமணங்கள் மற்றும் இஸ்லாமியர் வீடுகளில் வீட்டுச் சடங்குகளைச் செய்யமுடியும்; மசூதியில் அவர்களே குர்-ஆனை ஓதமுடியும்.

இதேபோல் பௌத்த மதத்திலும் பிட்சுவாகச் செயல்படக் குறிப்பிட்ட மதக் கல்வி பெற வேண்டும். அதேபோல் சமண மதத்திலும் உண்டு.

ஆனால் இந்து மதத்தில் மட்டும், எந்த மதக் கல்வியும் பெறாமல் பிறவி காரணமாக-பார்ப்பானாகப் பிறந்த எவனும் மதகுரு ஆகமுடியும்; புரோகிதனாகச் செயல்பட முடியும்.

இந்தியாவில் உள்ள ஏறக்குறைய 115 கோடி இந்துக்கள் - பார்ப்பானை மட்டுமே மத குருவாக - புரோகிதனாக - திருமணச் சடங்குகளைச் செய்பவனாக - கோவில் அர்ச்சகனாக - ஈமச் சடங்குகளைச் செய்பவனாக ஏற்றுச் செயல்பட முடியும்.

இந்த முறையை அடியோடு மாற்ற வேண்டுமானால், இந்துச் சட்டம் முழுவதையும், அதில் உள்ள பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்கிற பிறவி வருண வேறுபாடுகளையும் அடியோடு ஒழிக்க வேண்டும். இதுவே பெரியாரின் குறிக்கோளாகும்.

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் 1968இல் செய்யப்பட்ட திருமணச் சட்டம் யாரைக் கட்டுப்படுத்தும்? தமிழ்நாட்டில் உள்ள இந்துக்கள் மட்டுமே சுயமரியாதைத் திருமணச் சட்டப்படித் திருமணம் செய்துகொள்ள முடியும். மற்ற மாநிலங்களில் உள்ள இந்துக்களோ, வெளிநாடுகளில் உள்ள இந்துக்களோ - “தமிழ்நாடு 1968ஆம் ஆண்டைய சுயமரியாதைத் திருமணச் சட்டப்படித் திருமணம் செய்து கொள்ள முடியாது.” ஏன்?

இந்துச் சட்டம் இந்தியா முழுவதற்குமானது. அதனால், சுயமரியா தைத் திருமணச் சட்டம் தமிழ்நாட்டு எல்லைக்குள் மட்டுமே செல்லு படியாகும்.

1968 முதல் கடந்த 40 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் எத்தனை விழுக்காடு திருமணங்கள் சுயமரியாதைத் திருமணச் சட்டப்படி செய்து கொண்டார்கள் என்று கணக்கு எடுக்கப்படவில்லை. அதைத் தமிழ்நாட்டு அரசாங்கம்தான் செய்ய வேண்டும்.

ஆனால் தி.மு.க. ஆட்சியோ, அ.தி.மு.க. ஆட்சியோ அந்தப் பணியைச் செய்யவில்லை.

மேலும் திருமண நிகழ்ச்சி மட்டுமே பார்ப்பானைக் கொண்டு செய்யப்படவில்லை. மற்றும் சீமந்தம் (கருக்கொள்ளுதல்), குழந்தை பிறந்தால் புண்ணிய வசனம் செய்தல் குழந்தைக்குப் பெயர் வைத்தல், குழந்தைக்கு முடி இறக்குதல், காதணி விழா செய்தல், திருமண வினை நடத்துதல் முதலான எல்லாச் சடங்குகளையும் நூற்றுக்கு நூறு இந்துக்களும் செய்யா விட்டாலும் - பெரும்பாலோர் பார்ப்பனப் புரோகிதனை வைத்தோ செய்கிறார்கள்.

ஒரு இந்து இறந்துவிட்டால் அவருக்கு ஈமச்சடங்கு அல்லது கருமாதி நடத்துதல், ஆண்டுதோறும் திதி கொடுத்தல் முதலான சடங்குகளுக்கும் பார்ப்பனப் புரோகிதனே அழைக்கப்படுகிறான். மற்றும் ஒவ்வொரு குடும்பத்திலும் நடைபெறும் வீடு கட்ட அடிப்படை போடு தல், கிணறு தோண்ட மனை கோலுதல் முதலான எல்லாச் சடங்குகளும் பார்ப்பனப் புரோகிதனைக் கொண்டே செய்யப்படுகின்றன.

எனவே, பார்ப்பனப் புரோகிதம் அடியோடு சட்டப்படி ஒழிக்கப்படுகிற வரையில், பார்ப்பனனுக்கு இந்து சமூகத்தில் உள்ள உயர்வும், மரியாதையும், ஒருவன் சாகிற வரையில், சடங்கின் பேரால் பார்ப்பனன் வசூல் பண்ணுகிற உரிமையும் ஒழியாது என்பதை நல்ல சுயமரியாதைக்காரர்கள் உணரவேண்டும் என அன்போடு வேண்டுகிறேன்.

Pin It