தமிழ்நாட்டை மட்டுமன்றி, இந்தியாவிற்குள் அடைக்கப்பட்டுள்ள மொழித் தேச மாநிலங்கள் எல்லாவற்றையும் ஆளுநர்கள் அரட்டிக் கொண்டிருக்கிறார்கள்..

எதற்காக அவர்கள் அரட்டுகிறார்கள்.. எல்லாரையும் அரட்டுவதற்கு அவர்கள் யார்?..அவர்களுக்கு அந்த அதிகாரங்களைக் கொடுத்தது யார்?..

இவை பற்றியெல்லாம் விரிவாகத் தெரிந்தால்தான் ஆளுநர்களை நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை விளங்கிக் கொள்ள முடியும்..

காந்தி கொலை வழக்கிலேயே கோட்சே 16 - ஆண்டு களில் விடுதலை பெற்ற நடைமுறை இருந்த நிலையில், இராசீவ்காந்தி கொலை வழக்கில் 27  ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையிலேயே அடைபட்டிருக்கும் ஏழு தமிழர்களை விடுதலை செய்ய ஆளுநரே முடிவெடுக் கலாம் என்று உச்சநெறிமன்றம் அறிவித்த பின்பும், அவர்களின் விடுதலையை முடக்கி வைக்கிறார் தமிழகத்திற்குள் வந்துள்ள இந்திய ஆளுநர்.

தமிழர்களின், தமிழ்நாட்டின் நலன் நோக்கி ஏதும் வாய் திறந்து விடாத ஆளுநர் என்போர் தமிழருக்குத் தேவையா?

அத்தகைய அதிகாரத்தால் தமிழருக்கு, தமிழ்நாட்டிற்கு என்ன பயன் உண்டு?

ஆளுநர்களுக்கு என்னென்ன அதிகாரங்கள்  இருக்கின்றன? அந்த அதிகாரங்களை யெல்லாம் வைத்துக்கொண்டு அவர்கள் அதிகாரம் செலுத்தத்தான் வேண்டுமா? இல்லாவிட்டால் என்ன நடந்து விடும்? என்பவை குறித்தும் தெரிந்து கொள்ள வேண்டி யிருக்கிறது..

எப்போதிலிருந்து ஆளுநர் பொறுப்பு இருக்கிறது?

ஆளுநர்கள் என்கிற அதிகாரத்தை அமைத்துக் கொடுத்தவர்கள் ஆங்கிலேயர்கள்தாம்.

அவர்கள் இங்கிலாந்தில் இருந்து கொண்டு இந்தியாவைத் தங்கள் ஆட்சி அதிகாரத்தால் உருவாக்கிய வர்கள்.

இங்கிலாந்தில் உருவாக்கப்பட்ட பொருள்களை இங்குக் கொண்டு வந்து விற்க வந்தவர்கள், இங்கேயே அவற்றுக் கான மூலப்பொருள்களும் மலிவான உழைப்புக் கூலிகளும் கிடைப்பதைப் பார்த்துத் தொழிற்சாலைகளை அமைத்து தொழில்களைத் தொடங்கி விட்டார்கள்..

லிப்டன், கோத்ரெஜ், ப்ரூக்பாண்ட், லேலாண்ட், லார்சன், பிரிட்டானியா  என எண்ணற்ற தொழிற்சாலை களை இங்கு வந்து நடத்தினர்.

பின்னர், அவற்றுக்குப் பாதுகாப்புக்காகப் படைகள் கொண்ட அரசை ஏற்படுத்திக் கொண்டனர்..

அதையே படிப்படியாக விரிவுபடுத்திப் பிரிட்டிஷ் இந்தியாவை  உருவாக்கினர்.

இலண்டனில் இருந்தபடியே பிரிட்டிஷ் இந்தியாவை ஆளுமை செய்வதற்குக் கங்காணியாக கவர்னர் ஜெனரல் என்கிற பொறுப்பில் வாரன் ஹேஸ்டிங்ஸ் என்ற ஒருவரை 1777 முதல் 1785 வரை பதவியில்  அமர்த்தினர்.

அந்தப் பதவிக்குக் கவர்னர் ஜெனரல் ஆப் பெங்கால் எனப் பெயரிட்டனர். அப்போதெல்லாம் கல்கத்தாவை நடுவப்படுத்தியே அவர்களின் நகர்வுகள் இருந்தன.

1833 முதல் கவர்னர் ஜெனரல் ஆப் இந்தியா என்ற பொறுப்பில் பல்வேறு ஆட்சித் தலைவர்கள் அமர்த்தப் பட்டனர்.

1858 முதல் 1946 வரை அந்த கவர்னர் ஜெனரல்கள் எல்லாம் `வைஸ்ராய் என்றும் அழைக்கப்பட்டனர்.1947-இல் இந்தியா விடுதலை பெற்றதாக அறிவிக்கப்பட்ட பின்னர், முதல் கவர்னர் ஜென்ரல் மவுண்ட்பேட்டன் ஆக ஏற்றுக்கொள்ளப்பட்டார். ஏற்கெனவே கற்றுக்கொண்டி ருந்த பிரிட்டிஷ் ஆட்சி முறைகளுடன், மவுண்ட்பேட்டன் வழியாகவும் கற்றுத் தேர்ந்தபின் இராஜகோபாலாச்சாரி அடுத்த கவர்னர் ஜெனரலானார்..

1949 முதல் குடியரசுத் தலைவராக இராசேந்திர பிரசாத்தைத் தேர்வு செய்ய முனைந்தபோது, நேரு இராஜாஜியையே குடியரசுத் தலைவராக அமர்த்தப் பெரும் முனைப்புக் காட்டினார். அதற்கான காரணங் களும் நோக்கங்களும் தனி செய்திக்கு உரியன.

பிற நாடுகளில் ஆளுநர்கள்

காலனி நாடுகள் என்கிற குடியேற்ற நாடுகளாக உள்ளவை எல்லாம் கவர்னர் என்கிற அரசு அமைப்பைக் கொண்டிருக்கின்றன. அதன்படி அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளில்  எல்லாம் ஆளுநர்கள் உண்டு. ஆனால் ஆளுநர்களைத் தேர்ந்தெடுக்கிற முறைகளும், அவர்களுக்கான அதிகார வரம்புகளும்தாம் வேறுபட்டவை.

இந்தியாவில் ஆளுநர்கள்

1947க்குப் பின்னர்,  இந்திய அளவில் குடியரசுத் தலைவர் அமைக்கப்பட்ட நிலையில், தலை மாநிலங் களில்  ஆளுநர்களுக்குரிய பொறுப்புகளும் தேர்வுகளும் குறித்து நிறைய பேசப்பட்டன. சட்டமன்ற உறுப்பினர் களால்தாம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும், மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும் பலவாறான கருத்துகள் கூறப்பட்டாலும் இறுதியாக நேரு கொடுத்த அழுத்தத்தால் இப்பொழுதுள்ள முறைப்படி, இந்தியாவை ஆளுகிற கட்சியின் முடிவாகவே ஆளுநர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

அதன்படி ஆளுநருக்கு உரிய அதிகாரங்கள் வரை யறுக்கப்பட்டன. ஆளுநருக்கான அதிகாரங்கள்

ஆளுநர்களுக்கு   ஏது  அதிகாரம் என்பதாகக்  கருதினால் அது தவறு.

ஆட்சி நிலையில்,

சட்டமியற்றும் நிலையில்,

பொருளியல் வகைப்பாட்டு நிலையில்,

நீதி(நயன்மை)த் துறையில்,

எல்லாவற்றுக்கும் மேலாக விருப்ப அதிகாரம் என்ற நிலையில் என்று எல்லா நிலைகளிலும் அதிகாரம் படைத்தவராகவே ஆளுநர் பொறுப்பில் இருக்கிறார்.

1. மாநிலத்தின் நிர்வாக அதிகாரங்கள் ஆளுநரின் பொறுப்பில் இருக்கும். அந்த அதிகாரங்களை ஆளுநர் நேரடியாகவோ தன் கீழுள்ள அதிகாரிகளின் மூல மாகவோ செயலாட்சி செய்வார். என்பது 154(1) பிரிவிலான சட்ட நெறி. இதுபோன்றதான நிலைகளிலேயே எண்.163, 163(3), 167(1) - (2) - (3), 217- வழங்கிய நெறி முறைகள் பல்வேறு வகையில் ஆளுநரின் அதிகாரங் களை விளக்குகின்றன.

2 சட்ட முன் வரைவு ஒன்று சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின் ஆளுநரின் இசைவிற்காக அது அளிக்கப்பட வேண்டும். தனது ஒப்புதல் அல்லது இசைவுக்காக அனுப்பப்பட்ட சட்ட முன்வரைவில் தனது இசைவை வழங்கலாம் அல்லது இசைவினை மறுக்கலாம், அல்லது குடியரசுத் தலைவரின் கருத்துக்கு அதை ஒதுக்கி வைத்து விடலாம்.

அதேபோல், பொருள் திட்ட சட்ட முன்வரைவைத் தவிர பிற எந்தச் சட்ட முன்வரைவை யும், மீண்டும் மறு ஆய்வு செய்ய வேண்டும் என ஆணையிட்டுச் சேர்த்து ஆளுநர் அந்தச் சட்ட முன்வரைவைச் சட்டமன்றத்திற்குத் திருப்பி அனுப்பி விடலாம் என்கிற படியாகப் பல அதிகாரங்கள் ஆளுநருக்கு உண்டு என்பதை அறிய வேண்டும்.

3. பொருளியல் அதிகாரங்கள் என்கிற வகையில், ஆளுநரின் பரிந்துரை இல்லாமல் எந்த ஒரு பொருள் முன்வரைவையும், பண முன் வரைவையும் சட்ட மன்றத்தில் முன்மொழியக் கூடாது - என்கிற வகையில் பொருளியல் அதிகாரமும் ஆளுநரின் பிடிக்குள் வைக்கப்பட்டிருப்பதை உணர வேண்டும்.

4. ஒரு மாநிலத்தின் ஆட்சி அதிகார எல்லைக்கு உட்பட்ட குற்றத்தைச் செய்த குற்றவாளிகளின் தண்டனையைக் குறைக்கவும், மாற்றவும், நிறுத்தி வைக்கவும், நீக்கிவிடவும் ஆளுநருக்கு அதிகாரம் உண்டு.

குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் மீது உசாவல் நடந்து கொண்டிருக்கும் போதோ, விசாரணை முடிந்து அவர் தண்டிக்கப்பட்ட பின்னரோ, எப்போது வேண்டுமானாலும் ஆளுநர் தன் அதிகாரத்தை நிறுவ முடியும்.

15 நாள்களுக்கு ஒரு முறை மாநிலத்தின் நிலைபற்றிக் குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அறிக்கை அனுப்ப வேண்டும். மாநிலத்தில் நெருக்கடி நிலையைக் குடியரசுத் தலைவர் நடைமுறைப்படுத்துவதற்குரிய நிர்வாக நிலை பற்றிய அறிக்கையைக் குடியரசுத் தலைவர் கேட்கும் போது மாநில ஆளுநர் அனுப்ப வேண்டும் எனும் சட்ட நெறி 356 - பிரிவுப்படி ஆளுநருக்கான அதிகாரங்கள் நிரம்ப உண்டு.

5. இவையன்றி, ஆளுநரின் விருப்ப அதிகாரங்கள்() என்கிற பெயரில் நெறிவிலக்கு என்கிற அடிப்படையில் ஆளுநர் என்ன முடிவையும் முன்னெடுக்க முடியும்

இவ்வகையில் எல்லாம் பார்க்கும்போது ஆளுநர் களுக்கு இருக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு உள்ள அதிகாரங்களைக் காட்டிலும் கூடுதலானவை யாகவே உள்ளன.

நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வருவதற் கான திட்டம் இருப்பது போன்று ஆளுநருக்கு எதிரான தீர்மானத்தைச் சட்டமன்றத்தில் கொண்டுவர இயலாது. இது அவருக்கு உரிய அதிகப்படியான அதிகாரங்களைக் காட்டும் இந்த வகையில் எல்லாம் ஆளுநரின் அதிகார எல்லை மீறலைக் கண்டு ஆளுநர் என்பவரே தேவை யில்லை என்பதான குரல்கள் 1960 முதற்கொண்டே எழுந்தன ஆட்டுக்குத் தாடியும். நாட்டுக்கு ஆளுநரும் தேவை யில்லை என்பதாக அண்ணா பகடி பேசினார்.

ஆளுநர் பொறுப்பே கூடாது என்று மறுத்தும் ஆளுநர் எங்கு வந்தாலும் அவருக்குக் கறுப்புக் கொடி காட்டுவது என்றும், அவர் பங்கு கொள்ளும் கூட்டங்களை யெல்லாம் முழுமையாகப் புறக்கணிப்பது என்றும் அன்றைக்குத் திமுக சார்பில் அறிவிப்பும் நடைமுறையும் இருந்தது. பின்னர் படிப்படியே விட்டுவிட்டனர்.

1969இல் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது இராஜமன்னார் குழு என்ற ஒரு குழு உருவாக்கப்பட்டு இந்திய அரசு - மாநில அரசுகளுக்கு இடைப்பட்ட அதிகாரங்களின் வரம்புகள் ஆய்வு செய்யப்பட்டன. அதன்படி ஆளுநர் இந்திய அரசின் முகவராகச் செயல் படக்கூடாது என்று மறுத்தனர். அந்தக் குழுவின் அறிக்கை 1974 இல் இந்திய அரசிடம் அளிக்கப்பட்டது. ஆனால் எவ்வகை ஏற்பையும் இந்திய அரசு செய்ய வில்லை.

அதேபோல் நெருக்கடி கால ஆட்சிக்குப் பின்னர் இந்திய அரசால் உருவாக்கப்பட்ட சர்க்காரியா குழு வழி ஆளுநர் பற்றிய சில அதிகார வரம்புகள், ஆளுநர் தேர்வு செய்யப்படுவதில் மாற்றங்கள் சொல்லப்பட்டபோதும், அவையும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை..

தொடர்ந்து 2002-இல் வாஜ்பாய் ஆட்சியின்போது அரசமைப்புச் சட்டம் மறு ஆய்வு என்கிற பெயரில் அமைக்கப்பட்ட குழுவும் ஆளுநர் நேரடியாகச் சட்டமன்ற உறுப்பினர்களால்தாம் தேர்வு செய்யப்பட வேண்டும் எனப் பரிந்துரைக்கும் அக்கருத்தும் ஏற்றுக்கொள் ளப்படவில்லை..

2007-இல் `பூஞ்சிக் குழு’ என்கிற குழுவின் அறிக் கைபடி நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வருவதற்கான அதிகாரம் உள்ளது போல் சட்டமன்றத்தில் ஆளுநருக்கு எதிராகவும் தீர்மானங்கள் கொண்டு வருகிறபடியான அதிகாரமும் இருக்க வேண்டும் என வலியுறுத்தியும் அதுவும் ஏற்கப்படவில்லை.

இந்திய அரசமைப்புச் சட்டம் இதுவரை 101 முறை திருத்தப்பட்டும் ஆளுநர் தொடர்பான அதிகாரங்களை மீளாய்வு செய்கிறபடியாக எந்தத் திருத்தத்தையும் இந்திய அரசு செய்திடவில்லை..

மக்கள் அதிகாரத்தையே தூக்கி வீசும் ஆளுநர் அதிகாரம்

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற அதிகாரத் தையே எந்தக் காரணமும் இல்லாமல் தன் விருப்பப்படி உடன்பாடு இல்லை என்கிற அடிப்படையில் 356-ஆவது பிரிவின்படி ஆளுநரால் கலைத்து விட முடியும்.

இன்றைய அளவில் உள்ள சட்டமன்ற ஆட்சி அமைப்பு முறை எந்தளவு அதிகாரம் படைத்தது, அது யாருக்கானது என்பதெல்லாம் ஒரு பக்கம் இருக்க இருக்கக்கூடிய அந்த அமைப்பு முறையையேகூட கலைத்து விடுகிற அதிகாரத்தை ஆளுநர்கள் வைத்திருக் கிறார்கள் என்பதே அவர்களின் உச்ச நிலை அதிகாரத் தைக் காட்டும்.

இப்படியாக இதுவரை அதாவது கடந்த 70 ஆண்டு களில் 128 முறை சட்டப் பிரிவு 356-இன்படி மொழித் தேச மாநிலங்களின் ஆட்சிகள் கலைக்கப்பட்டுள்ளன என்றால்.. ஆளுநரின் அதிகார வெறிப்  போக்கை உணர்ந்து கொள்ள வேண்டும்.

16 - 6 - 1951 ஆம் நாள்தான் பஞ்சாபில்  முதன் முதலில் அன்றைய காங்கிரசு ஆட்சி கலைக்கப்பட்டது. அதன் பிறகு 1953, 54, 56, 59 என வரிசையாக ஆட்சிக் கலைப்புகள் நடந்துகொண்டே இருந்தன, இருக்கின்றன.

1947 முதல் 64 வரை நேரு தலைமை அமைச்சராக இருந்த காலங்களில் 8 முறையும்,

1977 முதல் 79 வரை மொராஜி தேசாய் தலைமை அமைச்சராக இருந்த ஒன்றரை ஆண்டில் பதினாறு முறையும்,

இந்திரா காந்தி தலைமை அமைச்சராக ஆட்சி செய்த 16 ஆண்டுகளில் 50 முறைகளும் மாநில அரசுகள் கலைக்கப்பட்டுள்ளன.

மொத்தம் 128 முறைகளில் 88 முறை காங்கிரஸ் ஆட்சியின்போது கலைக்கப்பட்டுள்ளது.

அதே 2016 மார்ச் 27 இல் உத்தரகண்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியைக் கலைத்ததையும் உச்ச நீதிமன்றம் வெகு கடுமையாகக் கண்டித்ததை அறிந் திருப்போம்.

ஏற்கெனவே 1977-இல் இராசசுத்தான் மாநில அரசு கலைக்கப்பட்டதால் இந்திய அரசை  உச்சநீதிமன்றத்தின் ஏழு பேர் கொண்ட அமர்வு மிகக் கடுமையாகக் கண்டித்து இருந்தது. அமீதுல்லா( உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி), சந்திக் சூட், பி.என். பகவதி, கோசுவாமி, குட்டா, உன்ட் வாலியா, பாசலால் ஆகியோரின் அறிக்கையிலும் இது பிரிட்டீசு ஆட்சியைப் போல் அல்லவா இருக்கிறது, இதுபோன்ற நடைமுறை இந்திய அரசியலில் இருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்று அந்த அமர்வு இடித்துரைத்தது.

தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் கலைக்கப்பட்ட நிகழ்வுகளும் கொடுமையானவை.1976 ஊழலின் பெயராலுல் திமுக ஆட்சி கலைக்கப்பட்டதும், பின்னர் 1991இலும் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டதும் முற்றிலும் மக்களாட்சிக்கு எதிரானவை.

இன்னொரு வேடிக்கையையும் சொல்ல வேண்டும். அன்றைய ஆளுநர் பர்னாலா கலைக்கவேண்டும் என அறிக்கையைத் தர மறுத்தும், குடியரசுத் தலைவர் தன் போக்காகத் தமிழ்நாட்டு அரசாட்சியைக் கலைத்த  கொடுமையும் இந்திய மக்களாட்சியில் நடைபெற்றது.

ஆளுநருக்குக் கொட்டி அழும்  மக்களின் வரிப்பணம்

இப்படியாக மக்கள் ஆட்சிக்கு எதிரான, மொழித் தேச மாநிலங்களின் உரிமைகளுக்கு வேட்டுவைக்கக்கூடிய, அதிகாரத் திமிர் படைத்த ஆளுநருக்குச் சம்பளம் இப்போது 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய். இதை யார் தருவது என்றால், அந்தந்த மாநில அரசுகள் தாம் தர வேண்டுமாம்?

ஆளுநருக்கு ஆகின்ற செலவுகள் என்பவை ஏதோ ஆளுநரோடு முடிவடைவதில்லை.. அவருக்கான உதவியாளர்கள் அலுவலர்கள் எடுபிடிகள் காவலர்கள் 300, 400 பேருக்கும் மேலானவர்களுக்கும் அந்தந்த மாநில அரசுகளே சம்பளத்தைக் கொடுத்து அழ வேண்டி இருக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்த அளவு ஆளுநர் களுக்கான  சம்பளங்களின் வழியாகவே இதுவரை 7 ஆயிரம் கோடிக்கும் மேலாகச்  செலவழிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஆளுநர்களுக்கு இரண்டு இடங்களில் மாளிகை உண்டு.

சென்னை கிண்டியில் இருப்பதோடு மட்டுமல்லாமல், கோடை காலங்களில் உதகையிலும் ஓய்வு மாளிகை என்கிறபடி ஏறத்தாழ 600 ஏக்கருக்கும் மேலாகத் தமிழகத்தை நசுக்கி ஆளுகை செய்யும்  ஆளுநருக்கு இடம் தரப்பட்டிருக்கிறது .

ஆளுநருக்கான சம்பளம் மட்டும் அல்ல.. அவருடைய அன்றாடச் செலவுகள் அனைத்திற்கும் தமிழ்நாடு அரசே தந்து கொண்டிருக்கிறது

இவையெல்லாம்  தேவையா? என்பதை நாம் கேள்வி யாக எழுப்பித்தான் ஆக வேண்டும்.

ஆளுநர் என்கிற கங்காணியை விரட்டாமல் விடி வில்லை..

இந்த வகையில் எல்லாம் அமர்த்தப்படும் ஆளுநர்கள் எவரும் நேர்மையானவர்களோ, மக்கள்  நலன்களுக் கானவர்களோ இல்லை.

ஆளும் கட்சியினர் தங்கள் அதிகார வெறிக்கு இசைந்து கொடுக்கிற, வளைந்து கொடுக்கிற அதிகாரிகளையோ, ஓய்வுபெற்ற 'நீதிபதி'களையோதாம் ஆளுநர்களாக அமர்த்தம் செய்கிறார்கள்.

இப்போது கேரள ஆளுநராக இருக்கிறவர், உச்சநெறி மன்ற நீதிபதியாக இருந்தபோது, இப்போதுள்ள இந்திய அமைச்சர் ஒருவரை வழக்கில் இருந்து விடுதலை செய்த நன்றிக் கடனாகப் பெற்றதுதான் அந்த ஆளுநர் பதவி என்பது எல்லாருக்கும் தெரிந்த வெளிச்சமான செய்தி.

இப்படியாக ஆளுநர் ஒவ்வொருவரின் கடந்தகால  இருளுக்குள்ளும் சில கருப்பு நிகழ்வுகள் இருப்பதைத் தோண்டிப் பார்த்தால் தெரியும்.

இந்தவகையில் மொழித் தேசங்கள் எவற்றுக்கும் தொடர்பற்றவராக உள்ளவர்களே ஆளுநர்கள் என்பதி லிருந்து, தமிழ்நாட்டு மக்களாட்சிக்குக் கொஞ்சமும் தொடர்பற்ற, இந்திய அரசின் கங்காணியாகச் செயல் படுகிற ஒரு அதிகார வெறியரை ஆளுநர் என்கிற பெயரில் நாம் ஏற்றுக்கொள்கிறோம் என்று சொன்னால் அதைவிட அடிமைத்தனம் ஏதுமில்லை.

மக்களாட்சிக்கு உட்பட்ட ஓர் அரசு அமைப்பில், ஆளுநர் என்கிற ஒரு கங்காணி, எந்தவொரு மொழித்தேசத்திற்குமே  தேவையில்லை என்கிற தெளிவில் ஆளுநர்களையே விரட்டியடிக்காமல் ஆளுநர் பதவி என்கிற பொறுப்பையே துடைத் தெறியாமல் மொழித் தேச மாநிலங்களுக்கு உரிமைகள் கிடைக்கப்போவதில்லை..

வாருங்கள்

ஆளுநர்கள் இல்லா 

மக்களாட்சி அமைப்பு கொண்ட

மொழித் தேச மாநிலங்களை உருவாக்குவோம்!

தமிழகத்தை அதற்கான முன்னணித் தேசமாக நிறுத்திப் போராடுவோம்!

Pin It