இராசிவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப் பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் 26 ஆண்டு களாகச் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது எல்லா வகையிலும் அநீதியான கொடுமையாகும். நடுவண் அரசின் பார்ப்பன-பனியா உயிர் அதிகார வர்க்கம் தமிழர்களைப் பழிவாங்கும் மனப்போக்குடனேயே செயல்பட்டு வருகிறது என்பதற்கு எழுவரின் விடுத லைக்குத் தடையாக நிற்பதே சான்றாகும்.
தேசத்தந்தை என்று போற்றப்படுகிற காந்தியார் 1948 சனவரி 30 அன்று மாலை ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த நாதுராம் கோட்சே என்பவரால் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தார். நாதுராம் கோட்சே ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மிதவாதப் போக்கைப் பின் பற்றுவதாகக் கருதியதால், வி.டி. சாவர்க்கர் தலைமை யிலான தீவிரவாத இந்து மகாசபையில் சேர்ந்து பணி யாற்றினார். சாவர்க்கருடன் பயணம் செய்து பல கூட்டங்களில் பேசினார். அதனால் வி.டி. சாவர்க்கரும் காந்தியாரின் கொலை வழக்கில் ஒரு குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார்.
நாதுராம் கோட்சேவின் தம்பி கோபால் கோட்சேவும் காந்தியின் கொலை வழக்கில் விசாரிக்கப்பட்டார். இந்த வழக்கில் நாதுராம் கோட்சேவுக்கும் நாராயண ஆப்தே வுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இருவரும் தூக்கிலிடப்பட்டனர். கோபால் கோட்சேவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. வி.டி. சாவர்க்கருக்கு இக் கொலையில் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாகக் கருதப்பட்ட போதிலும், சாட்சிகள் இல்லாத தால் அவர் விடுதலை செய்யப்பட்டார்.
காந்தியின் கொலைக்குத் துணையாக இருந்த சாவர்க்கரின் உருவப்படம் அவர் 1910களில் பிரித்தானிய ஆட்சிக்கு எதிராகப் போராடியதைக் காரணமாகக் காட்டி, வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் (1999-2004) நாடாளு மன்றத்தில் காந்தியாரின் படத்திற்கு நேர் எதிராக வைக் கப்பட்ட கொடுமை நடந்தது. ஏனெனில் சாவர்க்கர் தான் இந்துத்துவம் என்பதை 1923இல் வரையறை செய்து, “இசுலாமியர் நாட்டுப்பற்று இல்லாத அந்நியர்” என்ற கருத்தைப் பரப்பியவர். சாவர்க்கரின் அடி யொற்றியே சங்பரிவாரங்கள் இன்று வரையிலும் இசுலாமியரை இந்நாட்டின் குடிமக்களாகக் கருதாமல், எதிரிகளாகவே பார்க்கின்றனர்.
காந்தியாரின் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கோபால் கோட்சே 14 ஆண்டுகள் சிறையில் இருந்த பின், தன்னை விடுதலை செய்யுமாறு 1961இல் உச்சநீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்தார். ஆனால் உச்சநீதிமன்றம் அந்த விண்ணப்பத்தை ஏற்க மறுத்து விட்டது. ஆயினும் அதன்பின் மகாராட்டிர அரசு நான் காண்டுகள் முடிவதற்குள் கோபால் கோட்சேவை விடு தலை செய்தது. அப்போது மகாராட்டிரத்தின் முதல மைச்சராக வசந்தராவ் நாயக் இருந்தார். தண்டனை பெற்றவர்களை - குறிப்பாக 14 ஆண்டுகள் சிறையில் இருந்தவர்களை விடுதலை செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு இருக்கிறது; இந்த விதியை மகாராட்டிர மாநில முதல்வர் திறமையாகப் பயன்படுத்தி, கோபால் கோட்சேவை விடுதலை செய்தார். விடுதலையான பின் காந்தியைக் கொல்ல எவ்வாறு திட்டமிட்டோம் என்று, கோபால் கோட்சே வெளிப்படையாகப் பேசினார். காந்தியைக் கொன்ற கோபால் கோட்சேவை சங்பரி வாரங்கள் போற்றிப் புகழ்ந்தன.
காந்தியாரைக் கொன்ற வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கோபால் கோட்சே, 14 ஆண்டுகள் சிறைத் தண்டனைக் காலம் முடிந்ததும் விடுதலை பெறலாம் என்ற குற்றவியல் சட்ட நடைமுறையின் அடிப்படை யில் விடுதலை செய்யப்பட்டார். ஆனால் இராசிவ் காந்தியின் கொலையில் நேரடியாகத் தொடர்பு இல் லாத நிலையிலும், கொல்லப்பட்டவர் நேருவின் பேரன் என்கிற ஒரே காரணத்தால், சிறப்பு விசாரணை நீதி மன்றம் 26 தமிழர்களுக்கு மரண தண்டனை விதித்த கொடுமை நிகழ்ந்தது. தமிழ் மக்களின் எதிர்ப்பாலும், கூட்டு முயற்சியாலும் உச்சநீதிமன்றம் 19 பேரை விடுதலை செய்தது. பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன் ஆகிய நால்வருக்கு மரண தண்ட னையும், இராபர்ட் பயாஸ், செயகுமார், இரவிச்சந்திரன் ஆகிய மூவருக்கு ஆயுள் தண்டனையும் விதித்தது.
நடுவண் அரசில் காங்கிரசு ஆட்சியில் இருந்த போது, ஒரு பெண் குழந்தைக்குத் தாயாக நளினி இருப்பதைக் கருத்தில் கொண்டு, சோனியா காந்தி யின் ஒப்புதலுடன் நளினியின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.
தமிழரான சதாசிவம் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தபோது, 18.2.14 அன்று பேரறி வாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனை யாக மாற்றி உச்சநீதிமன்ற அமர்வு தீர்ப்பளித் தது. அப்போது தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருந்த செயலலிதா சட்ட விதிகளை நுணுக்க மாக ஆராயாமல் - இராசிவ் கொலையில் தண்டிக்கப்பட்ட எழுவரையும் விடுதலை செய்த பெருமையைத் தனக்கே உரித்தாக்கிக் கொள்ள வேண்டும் என்கிற அரசியல் உள்நோக்கத்துடன், அடுத்த நாள் (14.2.2014) செய்த அறிவிப்பே அவர்களின் விடுதலைக்கு ஒரு தடை யாகிவிட்டது.
2014 பிப்பிரவரி 19 அன்று, முதலமைச் சர் செயலலிதா சட்டப் பேரவையில், “சுதேந் திரராஜா என்கிற சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முருகன், பேரறிவாளன் என்கிற அறிவு, நளினி, இராபர்ட் பயாஸ், ஜெயகுமார், இரவிச் சந்திரன் ஆகிய ஏழு பேரை விடுவிப்பது என்கிற தமிழக அரசின் முடிவு குறித்து நடுவண் அரசு மூன்று நாள்களுக்குள் தனது கருத்தைத் தெரிவிக்காமல் காலம் தாழ்த்தினால் இந்திய குற்றவியல் நடை முறைச்சட்டம் 432இல் மாநில அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் அமைச்சரவைக் கூட்டத் தில் எடுக்கப்பட்ட முடிவின்படி ஏழு பேரும் விடுவிக் கப்படுவார்கள்” என்று அறிவித்தார்.
இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டம் விதி 432இல் சிறையாளிகளை விடுதலை செய்தல் அல்லது தண்டனையைக் குறைத்தல் தொடர்பாக மாநில அரசு முடிவு எடுப்பதற்குமுன் நடுவண் அரசைக் கலந்தா லோசிக்க (Consult) வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் மன்மோகன்சிங் தலைமையிலான நடுவண் அரசு, காங்கிரசுக் கட்சியின் தலைவி சோனியா காந்தியின் கணவர் இராசிவ் காந்தி என்பதால் அவரு டைய கொலை வழக்கின் குற்றவாளிகளைச் சிறையி லிருந்து விடுவிக்க எதிர்ப்புத் தெரிவித்தது. அதற்காக 20.2.2014 அன்று உச்சநீதிமன்றத்தில், “இந்திய குற்ற வியல் முறைச் சட்டத்தின் விதி 432இன்படி பேரறி வாளன் உள்ளிட்ட எழுவரை நடுவண் அரசின் ஒப்புதலைப் பெறாமல் விடுதலை செய்யும் அதிகாரம் தமிழ்நாட்டு அரசுக்கு இல்லை; ஏனெனில் இராசிவ் காந்தி கொலை வழக்கு மத்தியப் புலனாய்வுத் துறை யால் விசாரிக்கப்பட்டு, நடுவண் அரசின் தடா சட்டத்தின்கீழ் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டிருக் கிறார்கள்; எனவே எழுவர் விடுதலை குறித்து தமிழ் நாட்டு அரசின் அறிவிப்புக்குத் தடைவிதிக்க வேண்டும்” என்று உச்ச நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்தது. இதே காரணத்தைக் காட்டி உச்சநீதிமன்றம் தமிழ்நாட்டு அரசு ஏழு பேரை விடுதலை செய்வதற்கு இடைக்காலத் தடை விதித்தது.
எழுவர் விடுதலை குறித்து, உச்சநீதிமன்ற நீதிபதி கலிபுல்லாவின் தலைமையில், 2015 திசம்பர் 2 அன்று அளிக்கப்பட்ட அமர்வின் பெரும்பான்மைத் தீர்ப்பில், மத்தியப் புலனாய்வுத் துறையாலோ அல்லது நடுவண் அரசின் வேறொரு அமைப்பாலோ விசாரிக்கப்பட்டுத் தண்டிக்கப்பட்டவர்களை விடுதலை செய்வது குறித்து முடிவு செய்யும் முதல் உரிமை நடுவண் அரசுக்குத் தான் உண்டு; மாநில அரசுக்கு இந்த முதல் உரிமை இல்லை என்று தீர்ப்புக் கூறியது, மேலும் நீதிபதி கலிபுல்லா, இராசிவ் காந்தி கொலை நாட்டையே உலுக்கிய ஒரு கொடுஞ்செயல். எனவே என்றேனும் ஒருநாள் விடுவிக்கப்படுவோம் என்ற சிறிய நம்பிக்கை கூட தண்டிக்கப்பட்டவர்களுக்கு இருக்கக்கூடாது என்று கூறித் தன் “தேசபக்தியை”க் காட்டிக் கொண்டார்.
உச்சநீதிமன்ற நீதிபதி கலிபுல்லா தலைமையி லான அமர்வு அளித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யு மாறு தமிழ்நாட்டு அரசு உச்சநீதிமன்றத்தில் விண்ணப் பித்தது. பேரறிவாளனும் இதேபோன்று விண்ணப்பித் தார். குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் விதி 72 மற்றும் அரசமைப்புச் சட்டம் 161-இன்படி, தண்டனைப் பெற்றவர்களின் தண்டனையைக் குறைக்கவோ அல்லது விடுதலை செய்யவோ மாநில அரசுக்கு அதிகாரம் இருக் கிறது என்று தமிழ்நாட்டு அரசின் சார்பில் உச்சநீதிமன் றத்தில் வாதிடப்பட்டது.
மறு ஆய்வு குறித்த வழக்கை உச்சநீதிமன்றத் தின் தலைமை நீதிபதி ஜெ.எஸ். கேஹர், நீதிபதிகள் பி.சி. கோஷ், எஸ்.ஏ. போப்டே, ஏ.எம். சாப்ரே, யு.யு. லலித் ஆகிய அய்ந்து நீதிபதிகளைக் கொண்ட அரச மைப்பு அமர்வு விசாரித்து 7.2.2017 அன்று தன் தீர்ப்பை வழங்கியது. நீதிபதி கலிபுல்லா வழங்கிய தீர்ப்பையே உறுதி செய்தது. மத்தியப் புலனாய்வுத் துறையால் விசாரிக்கப்பட்டு தண்டனை பெற்றவர் களை விடுதலை செய்வது குறித்து முடிவு எடுக்கும் முதல் உரிமை நடுவண் அரசுக்கே உண்டு என்ற கருத்தை அய்ந்து நீதிபதிகளைக் கொண்ட அமர்வும் உறுதி செய்தது.
குற்றவாளிகளைத் தண்டிப்பது என்பது அவர்களை வாழ்நாள் முழுவதும் கொடுமைப்படுத்துவதற் காக அன்று, தம் குற்றத்தை - தவறை உணர்ந்து மனந்திருந்தி வாழ்வதற்கான வாய்ப்பை வழங்குவதே தண்டிக்கப்படுவதன் நோக்கமாகும், நவீன காலத்தில் சனநாயகம் இருப்பதாகச் சொல்லப்படும் நாடுகளில், இக்கோட்பாடே பின்பற்றப்படுகிறது, இந்த அடிப்படை யில் தான் உலகில் உள்ள 200 நாடுகளில் 130க்கும் மேற்பட்ட நாடுகளில் மரண தண்டனை என்பது ஒழிக் கப்பட்டு இருக்கிறது, இந்தியா, சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளில் மரணதண்டனை விதிப்பது நீடிக் கிறது.
இராசிவ் கொலை வழக்கில் 26 ஆண்டுகளாகச் சிறையில் இருந்துவரும் ஏழு பேரும் சிறை விதிகளை மீறாமல், நன்னடத்தையுடன் இருந்து வந்திருக்கின்றனர். பேரறிவாளன் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட போது, அவரின் அகவை 19. ஏழுபேரும் கல்வியிலும் மற்ற வகையிலும் தங்களை மேம்படுத்திக் கொண்டுள் ளனர். பேரறிவாளன் பலவகையான நோய்களுக்கு ஆளாகியுள்ளார், எனவே இவ் எழுவரையும் 14 ஆண்டு களுக்கு மேல் சிறைத் தண்டனை அனுபவித்தவர்கள் என்ற ஒரே அடிப்படையில் விடுதலை செய்து, அவர் களின் எஞ்சிய வாழ்நாளைத் தம் குடும்பத்தினருடன் கழிக்குமாறு செய்வதே இயற்கை சார்ந்த நீதியாகும்.
அமெரிக்காவின் குடியரசுத் தலைவராக இருந்த பராக் ஒபாமாவின் பதவிக்காலம் 19.1.2017 அன்று முடிவுற்றது. 11.1.2017 அன்று தன் நாட்டு மக்களுக்கு பராக் ஒபாமா ஆற்றிய இறுதி உரை உலகம் முழுவதும் போற்றப்பட்டது. ஒபாமா தன் பதவிக்காலம் முடியும் தறுவாயில், அரசின் இரகசிய ஆவணங்களை விக்கி லீக்ஸ் என்கிற அமைப்புக்கு அளித்ததற்காக 35 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சேலசியா மானிங் என்கிற பெண்ணின் தண்டனைக் காலத்தை 2017 மே மாதம் விடுதலையாகும் வகையில் குறைத்து ஆணையிட்டார்.
நேருவையும் அவரின் குடும்ப வாரிசுகளையும் வாய்ப்பு நேரும் போதெல்லாம் கண்டனம் செய்து கொண்டிருக்கின்றார் பிரதமர் நரேந்திர மோடி. இந்தச் சூழலில் மோடியின் தலைமையிலான நடுவண் அரசு ஏழுபேரின் விடுதலைக்கு ஒப்புதல் தருமாறு தமிழக அரசும், தமிழ்நாட்டு மக்களும் தமிழ்நாட்டுக்குரிய 57 நாடாளுமன்ற உறுப்பினர்களும் உரிய அழுத்தம் தரவேண்டும்.
காந்தியாரைக் கொன்ற கோபால் கோட்சேவை மகாராட்டிய மாநில அரசு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைப் புறக்கணித்து விடுதலை செய்தது போலவே, தமிழ் நாட்டு அரசும் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஏழு பேரை யும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இராசீவ் கொலை வழக்கில் 26 தமிழர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டபோது தமிழர்கள் கொதித்தெழுந்து அதை எதிர்த்தது போல், ஏழு பேரின் விடுதலைக்காக இன்று வீறார்ந்த வகையில் இளைஞர்களும் பொதுமக்களும் போராட வேண்டும்.