அரசியல் சட்டம் உருவாக்கப்பட்ட போது ஆளுநர்களாக நியமிக்கப்படுகின்றவர்கள்  அரசியல் சட்டத்தை மிகவும் மதிக்கக்கூடிய பெரிய மனிதர்களாக இருப்பார்கள் என்று அன்றைய அரசியல் நிர்ணய சபை கருதியது. ஆனால், கவர்னர்கள் அனைவரும்  ஏமாற்றி விட்டார்கள்.

இப்போது நீதிமன்றங்களே ஆளுநர்களை தொடர்ந்து விமர்சித்தும், கண்டித்தும் வருவதை நாம் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். புதுச்சேரி மாநில ஆளுநர், முதலமைச்சரைவிட தனக்கு அதிக அதிகாரம் உண்டு என்பதை போல செயல்பட்டதற்கு உச்சநீதிமன்றம் கடுமையான கண்டனத்தை தெரிவித்து உங்களுக்கு அந்த அதிகாரம் இல்லை என்று கூறிவிட்டது.

தமிழ்நாட்டில் ஆளுநராக இருக்கின்ற பன்வாரிலால் புரோகித், தமிழகத்தில் பல முக்கியக் கோப்புகளை கிடப்பில் போடுவதும் தமிழக அரசுக்கு நிபந்தனைகள் விதிப்பதும் வழக்கமாகி விட்டது. அதில் ஒன்று 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு. அதற்கு ஆளுநர் மறுத்தார். உயர்ஜாதி ஏழை ஒதுக்கீடான 10 சதவீதத்திற்கு ஒப்புதல் தந்தால் கையெழுத்து போடுவதாக நிபந்தனை விதித்ததாக செய்திகள் வந்தன.

பிறகு தமிழக அரசே ஒரு ஆணையின் மூலம் உள் ஒதுக்கீட்டை நிறைவேற்றிய பிறகு ஆளுநர் இறங்கி வந்தார். 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் படி மாணவர் சேர்க்கையும் தொடங்கி இருக்கிறது. ஏழு தமிழர் விடுதலைக் கோப்பிலும் தமிழக ஆளுநர் காலம் தாழ்த்திக் கொண்டே இருக்கிறார். உச்சநீதிமன்றம், ‘ஆளுநரின் இந்த நடவடிக்கை மகிழ்ச்சியைத் தரவில்லை’ என்று திட்டவட்டமாக கூறிவிட்டது.

இதற்குப் பிறகு ஆளுநர் என்ன செய்யப் போகிறார் என்பதும் புரியவில்லை.  தமிழ்நாட்டில்  நீண்ட நெடுங்காலமாக ஆளுநர்கள் இத்தகைய செயல்பாடுகளில் இருப்பதற்கு வரலாற்றுக் குறிப்புகள் இருக்கின்றன.

1976ஆம் ஆண்டு அவசர நிலையை திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்த்தது என்பதற்காக, திமுக ஆட்சியைக் கலைப்பதற்கு மத்திய அரசு ஆளுநரிடம் அறிக்கை கேட்டது. அப்போது ஆளுநராக இருந்தவர் ‘கே.கே.ஷா’. ஆளுநர் அவ்வாறான அறிக்கையை தர மறுக்கவே மத்திய அரசு அப்படி ஒரு அறிக்கையை தானாகவே தயாரித்து ஆளுநர் ஷாவிடம் கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கி திமுக ஆட்சியை கலைத்தது.

1991ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு அரசின் இரகசிய தகவல்களை கொடுத்ததாக ஒரு தவறான குற்றச்சாட்டை சுமத்தி, பிரதமராக இருந்த சந்திரசேகர் ஆட்சி அப்போதைய ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவை கேட்டது. ஆட்சியைக் கலைப்பதற்கு பர்னாலா மறுத்துவிட்டார்.

அப்போது குடியரசுத் தலைவராக இருந்த பார்ப்பனர் வெங்கட்ராமன், ஆளுநர் கையெழுத்து இடாவிட்டால் குடியரசுத் தலைவரே கையெழுத்துப் போடலாம் என்ற விதியைப் பயன் படுத்தி வெங்கட்ராமன் கையெழுத்திட்டு திமுக ஆட்சியை 1991இல் கலைத்தார்.

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது ‘சென்னா ரெட்டி’ ஆளுநராக இருந்தார். இருவருக்கும் கடுமையான முரண்பாடுகள் இருந்தன. ஒரு கட்டத்தில் ஆளுநர்களுக்கு அனுப்பி வைக்கிற கோப்புகளையே ஜெயலலிதா நிறுத்தி வைத்தார். அதற்காக தலைமைச் செயலகத்தின் அலுவல் விதிமுறை களையே மாற்றி அமைத்தார்.

ஆளுநருக்கு அனுப்பப்படுகின்ற கோப்புகள் கணிசமாக குறைக்கப்பட்டன. ஒவ்வொரு பல்கலைக்கழகத் துக்கும் தனித் தனிச் சட்டம் என்ற நிலைமையை மாற்றினார். அனைத்து பல்கலைக் கழகத்திற்கும் ஒரே சட்டத்தை உருவாக்கினார். பல்கலைக்கழகத்தின் வேந்தர், இனி ஆளுநர் இல்லை. முதலமைச்சர்தான் என்று சட்டம் கூறியது.

அதை ஒப்புதலுக்காக ஆளுநர் சென்னா ரெட்டிக்கே அனுப்பி வைத்தார் முதலமைச்சர் ஜெயலலிதா. சென்னா ரெட்டி கையெழுத்துப் போட மறுத்து கிடப்பில் போட்டார். பல்கலைக்கழக மானியக் குழுவும் அதற்கு ஒப்புதல் தரவில்லை பிறகு ஆட்சி மாற்றத்தால் அந்தச் சட்டம் நிறைவேறா மலேயே போய்விட்டது.

பாத்திமா பீவி தமிழகத்தின் ஆளுநராக இருந்தபோது ராஜீவ் காந்தி கொலையில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு தமிழர்களுக்கும் தானே தூக்குத் தண்டனை கொடுக்கின்ற முடிவை அமைச்சரவையைக் கலந்து ஆலோசிக்காமலேயே எடுத்தார். நீதி மன்றம் ஆளுநரைக் கண்டித்து, ‘அமைச்சரவையின் ஒப்புதல் இல்லாமல் நீங்கள் தன்னிச்சையாக முடிவுகள் எடுக்க முடியாது' என்று கூறியது.

அதே பாத்திமா பீவி அப்போது ஊழல் வழக்குகளில் தண்டனைப் பெற்ற ஜெயலலிதா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று தடைவிதிக்கப்பட்டிருந்த நேரத்தில் அக்கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றபோது ஜெயலலிதாவை நேரடியாக முதல்வராக  பதவியேற்க அழைத்தார்.

உச்சநீதிமன்றம் ஆளுநர் முடிவு செல்லாது என்று அறிவித்தது, அவரும் திருப்பி அனுப்பப்பட்டார். ஆளுநர்கள் தமிழகத்தில் உரிமை மீறல்களுக்கும் அதே சமயம் நியாயமானவற்றிற்கும் குரல் கொடுப்பவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். இப்போது இருக்கின்ற ஆளுநர் எல்லாவற்றையும் மிஞ்சுகிற வகையில் கேலிக்குரியஆளுநராகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

-விடுதலை இராசேந்திரன்

Pin It