இந்து மதத்தில் “சாதி” என்பது பிறவியால் ஏற்படுத்தப்பட்ட நான்கு வருணங்களை மட்டுமே குறிக்கும். நாம், வழக்கத்தில் “சாதி” என்பது - நான்கு பிறவிச் சாதிகள் கலக்கக் கூடாது என்றிருந்த தடையை மீறி, அப்படிக் கலந்ததனால்- வருணத்தைக் கொலை செய்ததனால் உண்டான ஆறா யிரம் ‘உள்சாதி’களைக் குறிக்கும்.

இதற்கான தரவுகள் இந்திய அரசின் மானிடவியல் ஆராய்ச்சித் (Anthropology) துறையினால் தொகுக்கப்பட்டுப் பல தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தொகுதிகளில், உள்சாதிகள் ஆறாயிரம் பற்றிய பட்டியலும் உள்ளது.

brahmin yaagaஅரசமைப்புச் சட்ட ஆராய்சிக்காக, நானும் கட்சித் தோழர் வேலூர் சா.குப்பன் அவர்களும் 2009 மார்ச்சுத் திங்களில் நாடாளுமன்ற நூலகத்தில் இவற்றைப் படித்தோம்.

அங்கேதான் - அப்பொழுதுதான் நேரு தலைமையில் அமைந்த குழுவினர், அரசமைப்புச் சட்ட ஆலோசகர் பி.என். ராவ் என்பவர் எழுதிய “இந்திய அரசமைப்புச் சட்ட முதலாவது வரைவு (The First Draft of the Indian Constitution)” - மூலம் எங்களுக்கு எதிர்பாராமல் கிடைத்தது. நிற்க.

மேலே சொல்லப்பட்ட 6000 உள்சாதிகளுக்கும் வீட்டுச் சடங்குகளுக்கும் புரோகிதராகப் பார்ப்பனர்கள் வருகிறார்கள்; மணவினை நடத்துவதற்கு மதகுரு என்ற தோரணையில் பார்ப்பனர்கள் வருகிறார்கள்; சாவு நேர்ந்தால், கருமாதி நிகழ்ச்சிக்குப் பார்ப்பனர்கள் வருகிறார்கள். இவை மட்டுமல்லாமல் மற்ற நல்வினை, தீவினை ஆகிய எல்லாவற்றுக்கும் பார்ப்பனர்களே மதகுருவாக வருகிறார்கள்.

இதனால்தான் 6000 உள்சாதிகளாக உள்ள இந்துக்கள், பார்ப்பனியத்தைக் கைவிட முடியாமல் திணறுகிறார்கள். இதை, இந்துவாகப் பிறந்த நாம் ஒவ்வொருவரும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். ஏன்?

உலகில் இந்து மதம் அன்னியில் பல்வேறு மதங்கள் இருக்கின்றன.

கிறித்துவம், இசுலாம், பவுத்தம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

கிறித்துவர்கள் சிற்றூர் கோவிலில் பைபிள் படிப்பதற்குப் பாஸ்டர் (Paster) என்கிற பயிற்சியை அளிக்கிறார்கள். அங்குள்ள கிறித்துவர்கள் வீட்டில் நடக்கும் மற்ற சடங்குகளுக்கும் அவர்களே போகிறார்கள். அடுத்து, பெரிய மாதா கோவிலில் பைபிள் படிப்பதற்கு ஃபாதர் (Father) வருகிறார். அவர்கள் இறையியல் கல்லூரியில் - செமினரி (Seminary)யில் சான்றிதழ்ப் படிப்புப் படிக்கிறார்கள். அதற்கு அடுத்தாற்போல் மதகுரு (Bishop)வாக வருவதற்குத் தெய்வீக இளையர் (B.D. = Bachalor of Divinity) என்கிற பட்டம் பெற வேண்டும்; அல்லது கிறித்துவத் தத்துவ இளையர் (B.T. = Bachelor of Theology) படிக்க வேண்டும். இப்படிப் படிப்புத் தகுதியினால் மதகுருவாக வர முடியுமே தவிர, (Priest by qualification only), பிறவியினால் எந்தக் கிறித்துவரும் புரோகிதராக முடியாது.

அதேபோல், இசுலாமிய மதத்திற்கு, இசுலாமிய மதத்தைச் சேர்ந்தவர் அதற்கான படிப்புப் படித்தால்தான் குருவாக வரமுடியும்.

இசுலாமியர்கள் அரபுக் கல்லூரியில் ஆறு ஆண்டுகள் படிக்க வேண்டும். அரபு மொழி, குர்-ஆன், ஷரியத் இவைகளை ஆறு ஆண்டு கள் கட்டாயமாகக் கற்க வேண்டும். அவர்கள்தான் மசூதியில் மவுல்வியாக வர முடியும்; குர்-ஆன் ஓத முடியும். மற்றவர்கள் - எந்தப் பிரிவு இசுலாமியராக இருந்தாலும், இந்தத் தகுதியைப் பெறாமல், இசுலாமிய மதகுரு ஆக முடியாது.

பவுத்த மதத்திற்கு மதகுரு என்கிற பிக்குவாக வர வேண்டுமானால், பவுத்த மதப் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து பயில வேண்டும்.

மேலே கண்ட-இந்து அல்லாத கிறித்துவம், இசுலாம், பவுத்த மதங்களில் இவை ஒவ்வொன்றிலும் எண்ணற்ற  பிரிவுகள் இருக்கின்றன. ஆனால், பிறவி யில் எல்லோரும் சமமே. அதாவது, பிறவியில் எல்லாக் கிறித்துவர்களும் சமமானவர்களே; எல்லா இசுலாமியர்களும் சமமானவர்களே.

இந்து மதத்தில் மட்டும், கி.மு.1 முதல் இரண் டாயிரம் ஆண்டுகளாக - கி.பி.2020 வரையிலும் பிறவியில் பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்கிற நான்கு பிரிவுகளும் உண்டு. அந்தப் பிரிவுகளுக்குள் முறைதவறி ஏற்பட்ட கலப்பினால், ஆறாயிரம் உள்சாதிகள் இருக்கின்றன என்பது மானக்கேடு ஆகும்.

நாம் பார்ப்பனியச் சடங்குகளை அறவே ஒழிக்க வேண்டும். பார்ப்பனர் மட்டும் பிறவியில் உயர்ந்தவர்கள் என்று எண்ணுவதும், நடப்பதும், அதைப் பழக்கத்தில் இன்னமும் இரண்டாயிரம் ஆண்டுகளாக மேற்கொள்ளுவதும் மிகவும் இழிவானதாகும்.

பார்ப்பனியம் ஒழிப்போம்!

- வே.ஆனைமுத்து

Pin It