“மகாத்மா காந்தியும் வருணாசிரமமும்” என்னும் விஷயமாய் இரண்டு வாரங்களுக்கு முன் “குடி அரசி”ல் மகாத்மாவின் வருணாசிரம அபிப்பிராயத்தை கண்டித்தெழுதியது நேயர்கள் பார்த்திருக்கக்கூடும். அதன் பிறகு பலர் பல பல விதமாக நமக்கு கடிதம் மூலமாய், மகாத்மாவை தாக்குவது தர்மமல்லவென்றும், அபிப்பிராய பேதத்தை மகாத்மாவிடம் நேரில் தெரிந்து கொள்ளலாம் என்றும், நேரில் சொன்னால் நமது அபிப்பிராயத்தை மகாத்மா ஒப்புக் கொள்வார்கள் என்றும், எப்படி இருந்தாலும் மகாத்மாவைப் பற்றி ஒரு வார்த்தையாவது வித்தியாசமாய் எழுதினால் நமது செல்வாக்கே அடியோடு போய்விடும் என்றும், நமது பத்திரிகை ஆகிய “குடி அரசு” கூட ஜனங்களால் மதிக்கப்படாது போய் விடுமென்றும், மகாத்மா பார்ப்பனரல்லாதார் ஆதலால் அவர் பேரில் குற்றம் சொல்லக்கூடாது என்றும் இப்படியாக பல பேர் பல விதத்தில் கடித மூலமாயும் நேரிலும் நமக்கு தெரிவிக்கிறார்கள்.

periyar 2மற்றும் சிலர், பல பத்திரிகைகளிலும் ஜாடை ஜாடையாய் நமது அபிப்பிராயத்தை கண்டித்தும், மகாத்மாவை ஆதரித்தும் எழுதி வருகிறார்கள். மற்றும் சிலர், எல்லாவற்றையும் குற்றம் சொல்லிவிட்டு நீர் என்னதான் செய்யப் போகிறீர், எதைத்தான் ஆதரிக்கிறீர்கள், உமது கொள்கைதான் என்ன என்று எழுதுகிறார்கள். ஆகவே, இவைகளுக்கு தனித்தனி பதிலும், சமாதானமும் சொல்லிக் கொண்டிருப்பது மிகவும் கஷ்டமான காரியமானதால் இவற்றிற்கு பொதுவாக இந்த வாரம் சில விஷயங்களை எழுதுகிறோம்.

ஆரம்பத்தில் ஒரு விஷயத்தை பொது ஜனங்களுக்கு தெரியப்படுத்திக் கொள்ள ஆசைபடுகிறோம். அதென்னவெனில், நாமும் நமது பத்திரிகையும் வயிற்றுப் பிழைப்புக்கோ, பொது ஜனங்களின் செல்வாக்குப் பெறுவதற்கோ, பொது நன்மையின் பேரால் தொண்டு செய்ய வரவில்லை என்பதே. உண்மையை உண்மை என்றும், சரி என்று பட்டதை வெளிப்படுத்துவதற்கும், பொய்யென்றும் தப்பென்றும் பட்டதை கண்டிப்பதற்குமே நடைபெற்று வருகிறது என்பதாகவும், பத்திரிகையின் கொள்கையே அதுதான் என்பதாகவும் ஆதி முதற்கொண்டே பல தடவைகளில் வெளிப்படுத்தி இருக்கிறோம்.

இரண்டாவதாக, மகாத்மா காந்தியவர்களிடத்தில் மற்றவர்களுக்கு இருக்கும் அபிமானத்திலும், பக்தியிலும் நமது பக்தி எள்ளளவும் குறைந்ததல்ல என்பதையும் தெரிவிப்பதோடு, மகாத்மாவை தமிழ்நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்தின அனேகருள் நாமும் ஒருவரென்றும் மகாத்மாவை பின்பற்றி வந்த விஷயத்திலும் இப்போது சிபார்சுக்கு வருகிற எல்லோரையும் விட நாம் பின்பட்டவரல்ல என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்

நிற்க, மகாத்மாவை குருட்டுத்தனமாய் ஆதரிக்கும் மூலமாய் வரும் செல்வாக்கு நமக்கு அவசியமில்லை என்றும், மகாத்மாவைப் பற்றி நாம் கண்டிக்கும் விஷயம் சரியா தப்பா என்று விசாரணை செய்து பார்த்து ஒரு முடிவுக்கு வர யோக்கியதை இல்லாமல் குருட்டு பக்தியாய் அபிப்பிராயம் கொள்ளுபவரது கண்டனத்தைப் பற்றி நமக்கு கவலை இல்லை என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்.

நிற்க, இதுவரையில் கடிதமூலமாயும் பத்திரிகை மூலமாயும் நேரிலும் நமது கண்டனத்தை மறுத்தவர்களில் ஒருவராவது பிறவியில் வருணாசிரம தர்மமும் ஜாதி வித்தியாசமும் இல்லை என்ற மகாத்மா சொன்னதாகவாவது, பிறவியில் வருணாசிரம தர்மமும் ஜாதிப் பிரிவுகளும் உண்டு என்று அவர் சொல்லவில்லை என்றாவது ஒருவரும் சொல்லவே இல்லை. இனியும் யாராவது மகாத்மாவுக்கு பிறவியில் வருணாசிரம தர்மமும் ஜாதியும் இல்லை என்று சொல்வார்களேயானால், அல்லது இல்லை என்று மகாத்மா இன்ன இடத்தில் சொல்லியிருக்கிறார் என்று காட்டுவார்களேயானால் உடனே நான் எழுதியவைகளையும் மறுத்து எழுதிவிட்டு மகாத்மா விஷயமாய் நான் கொண்ட அபிப்பிராயத்தையும் மாற்றிக் கொண்டு எனது வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்ளத் தயாராயிருக்கிறேன்.

அப்படிக்கில்லாமல் “அவர் அப்படி எண்ணி இருக்கமாட்டார் இப்படி எண்ணி இருக்க மாட்டார், மகாத்மா சொல்வதற்கு அதுவல்ல அர்த்தம், இதுவல்ல பொருள்” என்பதான வெறும் உத்தேசமும் வியாக்கியானமும் நமது அபிப்பிராயத்தை ஒரு சிறிதும் மாற்றிக் கொள்ளும்படி செய்யவே முடியாது என்பதை வணக்கமாய் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

நிற்க, நமது கருத்தையும், மகாத்மா கருத்துக்கும் நமது கருத்துக்கும் மாறுபட்ட கருத்துக்களைப் பற்றியும் சென்றமாதம் மகாத்மா அவர்களிடம் நேரில் கலந்து பேசி நம்மைப் பொருத்த வரையிலும் ஒரு முடிவு கட்டிக் கொண்டே வந்து விட்டோம் “மகாத்மாவிடம் நான் கலந்து பேசினேன்” என்று சொல்லிக் கொள்வதும் எழுதிக் கொள்வதும் இக்காலத்தில் பெரிதும் தற்பெருமைக்கே உபயோகித்துக் கொள்ளக் கூடியதாய் விட்டபடியால் அந்த தற்பெருமை நமக்கு வேண்டாம் என்பதாகக் கருதியே நாம் அது சமயம் அதை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை.

தவிரவும் அது சமயம் நமக்கும் மகாத்மாவுக்கும் நடந்த சம்பாஷணைகளின் விபரத்தை மகாத்மாவின் சம்மதம் பெற்றே வெளிப்படுத்த வேண்டியதான ஒரு நிபந்தனைக்கும் நாம் சம்மதம் கொடுத்து வந்ததால் அதையும் வெளியிட முடியாத நிலையில் இருக்கிறோம்.

முக்கியமாய் மூன்று விஷயத்தைப் பற்றியே தான் மகாத்மாவினிடம் நாமும் நமது நண்பரான ஸ்ரீமான் .எஸ். ராமநாதனும் சம்பாஷித்தோம். அதாவது என்னுடைய அபிப்பிராயமாக மகாத்மாவுக்கு எடுத்துச் சொன்னதெல்லாம் இந்தியாவின் விடுதலைக்கும், சுயமரியாதைக்கும் மூன்று முக்கிய காரியங்கள் செய்து முடிக்க வேண்டும் என்றும், அது முடிவு பெறாமல் நமது நாட்டுக்கு விடுதலை இல்லை என்றும் நாம் முடிவு செய்திருக்கிறோம் என்பதாகச் சொன்னோம்.

அதாவது, ஒன்று, காங்கிரசு என்பதை ஒழிக்க வேண்டியது. இரண்டாவது, இந்து மதம் என்பதை ஒழிக்க வேண்டியது, மூன்றாவது, பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிக்க வேண்டியது என்பவைகளாகும்.

முதல் இரண்டை ஒழித்தாலே பார்ப்பன ஆதிக்கம் ஒழிந்து விடுமானாலும், இவ்விரண்டின் மூலமாய் ஒழிந்தது போக பாக்கி கொஞ்ச நஞ்சம் இருந்தாலும் அதையும் ஒழிப்பது என்கிற கொள்கையும் அதில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற கருத்தையே காட்டினோம்.

இது விஷயமாய் நடந்த தர்க்கங்கள் முன் சொன்ன காரணத்தால் வெளியிடக்கூடியதல்ல. ஆதலால் இனி இதைப் பற்றி மகாத்மாவிடம் மறுபடியும் கலந்துபேசித் தெரிந்துகொள்ள வேண்டியது ஒன்றும் இல்லை என்பதையும் மகாத்மாவினிடம் நேரிலேயே இம்மூன்று விஷயங்களைப் பற்றியும் மகாத்மா சொன்ன சமாதானங்கள் எம்முடைய அபிப்பிராயத்தை மாற்றக் கூடியதாயில்லை என்றும் சொல்லி மகாத்மாவினிடம் உத்திரவு பெற்றுக் கொண்டு வந்து விட்டோம். மகாத்மாவும் தான் சொன்ன சமாதானத்தால் நாம் திருப்தி அடையவில்லை என்பதை தெரிந்துகொண்டதாகவும், இன்னம் இரண்டொரு தடவை அதைப்பற்றி பேச வேண்டும் என்றும் சொன்னார். எனது நண்பர் ஸ்ரீமான் ராமநாதன் அவர்கள் கூட மகாத்மா சொன்னது போலவே மறுபடியும் இரண்டொரு தடவை மகாத்மாவிடம் பேசலாம் என்று கூட சொன்னார். இதற்கு உடனே நாம் மகாத்மா நம்முடைய அபிப்பிராயத்தை மாற்றும்படி திருப்தி செய்வார்கள் என்று நம்புகிறீர்களா அல்லது மகாத்மா அபிப்பிராயத்தை நாம் மாற்றக்கூடும் என்பதாக கருதுகிறீர்களா என்று கேட்டதில், மகாத்மா சொல்வதைக் கொண்டு நம்முடைய அபிப்பிராயங்களை மாற்றிக் கொள்ள கூடியதாய் ஏற்படாது என்றும், ஒருக்கால் நமது அபிப்பிராயத்துக்கு மகாத்மா இணங்கக்கூடியதானால் நமது பிரசாரத்திற்கு இன்னம் உதவியாக இருக்காதா என்றும் சொன்னார். உடனே நாம் அந்தப்படி எதிர்பார்ப்பது தப்பு என்றும் மகாத்மாவை திருத்தும்படியாக நாம் சொல்லி சரி செய்ய முடியாது என்றும், நம்ம அபிப்பிராயத்தை நாம் வெளிப்படுத்த வேண்டியது தான் நமது கடமை என்றும் சொல்லிவிட்டோம். இன்ன இன்ன விஷயங்களைப் பற்றி மகாத்மா அவர்களுடன் சம்பாஷித்ததாக திரு.சி. ராஜ கோபாலாச்சாரியார் அவர்களிடம் தெரிவித்து விட்டே உத்திரவு பெற்றுக் கொண்டு வந்து விட்டோம்.

எனவே இது சம்மந்தமாக இனி மகாத்மாவின் அபிப்பிராயம் எப்படி என்பதைப் பற்றி நாம் மறுபடியும் அவரைக் கண்டு கேட்க வேண்டியதில்லை என்பதைப் பற்றியும், அதைப் பற்றி நாம் கொண்டுள்ள அபிப்பிராயத்தில் நமக்கு கொஞ்சமும் சந்தேகமில்லையென்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம். வருணாசிரம விஷயமாய் மகாத்மாவுடன் சம்பாஷித்ததை ஆதாரமாய் வைத்துக் கொள்ளாமலேயே மகாத்மாவே மைசூரில் பேசினதைக் கொண்டும், அதற்கும் அவர் எழுதினதைக் கொண்டும் தான் அந்த மறுப்பு எழுதப்பட்டது. தவிர மகாத்மாவின் வருணாசிரம தர்ம நியமனமும் ஜாதி வித்தியாச நியமனமும் பிறப்பை ஒட்டியது என்பதாக இதற்கு முன் எத்தனையோ தடவைகளில் மகாத்மாவின் பேச்சினாலும் எழுத்துக்களினாலும் நாம் தெரிந்தே இருக்கிறோம்.

மகாத்மா பார்ப்பன மதமான ஆரியரின் மதத்தைத்தான் இந்து மதம் என்று சொல்லிக்கொண்டு தன்னையும் அதே இந்து இந்து என்று அடிக்கடி சொல்லிவருகிறார். தன்னுடைய பிரசங்கங்களுக்கும் அடிக்கடி ஆரியக் கதைகளான புராணங்களைத்தான் அதாவது ராமாயணம், பாரதம், பாகவதம் முதலியவைகளையே தனக்கு ஒரு படிப்பினைகளாகவும் மேற்கோள்களாவும் காட்டிக் கொண்டும் வருகிறார். இந்த மாதிரி புராண வழுக்கலானது எப்படியாவது மகாத்மாவை சேற்றில் கொண்டு போய் அழுத்தியே தீரும் என்பதே நமது துணிபு.

தமிழ்நாட்டின் நாகரீகமும், தமிழ்நாட்டின் பழய பழக்க வழக்கங்களும் மகாத்மாவுக்கு தெரிவதற்கு சந்தர்ப்பமேயில்லை. மகாத்மா தென்னாப்பிரிக்காவில் இருந்த காலத்தில் வள்ளியம்மை, நாகப்பன் என்பது போன்ற சில தமிழ் மக்கள் மூலம் தமிழரின் வீரத்தை அறிந்திருக்கலாமே தவிர தமிழ்நாட்டைப்பற்றியும், தமிழ் மக்களைப் பற்றியும் பார்ப்பனர்களின் மூலமாகத் தவிர வேறொன்றும் அவர் அறிந்திருக்க முடியாது என்பதாக உறுதி கூறலாம்.

ஆரியக் கொள்கையான பார்ப்பன மதத்திற்கும் தமிழர் நாகரீக பழக்க வழக்கத்திற்கும் ஏறக்குறைய 2000, 3000 வருஷங்களாகவே யுத்தங்கள் நடந்து வரும் விஷயங்களை மகாத்மாவுக்கு எடுத்துச் சொல்ல கூடியவர்கள் யார் மகாத்மா மடத்தில் இருக்கிறார்கள். ஆதலால் தமிழ்நாட்டிற்கு ஆரியக் கொள்கைகள் கூடாது என்பதாக நாம் பிரசாரம் செய்வதானால் அதைப் பொருத்தவரை மகாத்மா கொள்கை கூடாது என்றுதான் நாம் சொல்லி ஆக வேண்டும். தொழிலின் மூலமாகக்கூட மக்களைப் பிரிக்கக் கூடாது. பிரிக்க முடியாது, பிரிப்பதும் உலகியற்கைக்கும் மனிதத் தன்மைக்கும் சரியல்லவென்று வாதாடுகிற நாம் “பிறவியில் ஜாதி உண்டு, தொழில் உண்டு இது பெரியோர்களால் ஏற்படுத்தப்பட்டது. கடவுளால் ஏற்படுத்தப்பட்டது, ரிஷிகளால் ஏற்படுத்தப்பட்டது” என்றால் எப்படி ஒப்புக்கொள்ள முடியும். ரிஷிகள், கிருஷ்ணன் முதலானவர்கள் காலமல்ல இது என்பதும், நாம் அந்தக்காலத்தில் இல்லை என்பதும், இந்தக் காலத்தில் அவர்கள் இல்லை என்பதும் அது சரியா தப்பா, நிஜமா பொய்யா என்பதற்கு சரியான ஆதாரமும், அவசியமும் சாத்தியமும் இல்லை என்பதும் ஒவ்வொரு பகுத்தறிவுள்ள மனிதனுக்கும் தானாக விளங்கும்போது ‘பாட்டி கதைக்கு’ எப்படி மரியாதை கிடைக்கும் என்பது நமக்கே விளங்கவில்லை.

மகாத்மாவும் வருணாசிரமமும் என்னும் வியாசத்தை மகாத்மாவுக்கும் அனுப்பித்தான் இருக்கிறோம். மற்றொன்றை அவரது அந்தரங்க சிஷ்ய கோடிகளுக்கும் அனுப்பி மகாத்மா தகவலுக்கு கொண்டுபோகும்படி கேட்டுக் கொண்டும் இருக்கிறோமேயல்லாமல் மகாத்மாவுக்குத் தெரியாமல் ஒன்றும் செய்துவிடவில்லை. ஆனால் அவரது பரமானந்த சிஷ்யர்கள் இம் மாதிரி விஷயங்களை லக்ஷியம் செய்யாதீர்கள். லக்ஷியம் செய்தால் மறுப்புக்கு அதிக யோக்கியதை உண்டாகிவிடும், மறுப்பவனுக்கும் அந்தப் பத்திரிகைக்கும் யோக்கியதை அதிகமாகிவிடும். ஆதலால் குப்பையில் போட்டு விடுங்கள் என்றுதான் சொல்லிக் கொடுப்பார்கள். அதை மீறுவதற்கு மகாத்மாவுக்கு இது சமயம் சக்தியில்லை என்பதே நமது அபிப்பிராயம். ஆகவே, இந்த விஷயம் முக்கியமானதாலும் நமது நாட்டின் விடுதலைக்கும், நமது சுயமரியாதைக்கும், வருணாசிரமம் என்கிற தத்துவமே அதிலும் பிறவியில் வருணாசிரமமும் ஜாதியும் உண்டு என்கிற தத்துவமே எமனாய் இருக்கிறது என்பதான கண்ணியமான முடிவுக்கு வந்திருப்பதாலும் அதையொழிக்கப் பாடுபடுவதே நாட்டில் விடுதலையும் சுயமரியாதையும் கோரும் மனிதனின் கடமையென்று நாம் களங்கமற உணருவதாலும் கண்டிக்க வேண்டியதாயிருக்கிறதே என்பதாக வருத்தத்துடன் இதை எழுதுகிறோம்.

(குடி அரசு - தலையங்கம் - 28.08.1927)

Pin It