periyar 350இந்திய நாட்டில் இது சமயம் தேச விடுதலையின் பேரால் ஒரு குழப்பம் ஏற்பட்டு, அதனால் எங்கு பார்த்தாலும் கலவரமும் அடிதடியும் சிறைவாசமும் உயிர்ச்சேதமும் நடந்து வருவதாகத் தெரிகின்றது.

பொது மக்களுக்குள்ளாகவும் பலருக்கு ஒரு வித உணர்ச்சி தோன்றி இக்குழப்பத்தில் கலந்து கொள்ள வேண்டியது பெரிய தேசாபிமானம் என்றும், இதனால் தங்களுக்கு பிற்காலத்தில் ஏதோ ஒரு பெரிய லாபமும், கீர்த்தியும் ஏற்படும் என்றும் கருதப்பட்டு வருகின்றது.

இந்த நிலைக்கு பொதுவாக டாக்டர் சுப்பராயன் அவர்கள் சென்ற வருஷம் செங்கல்பட்டு முதலாவது சுயமரியாதை மகாநாட்டில் சொன்னது போல், அதாவது “மக்கள் மத விஷயத்தில் பெரிதும் மூட நம்பிக்கையில் ஆழ்த்தப்பட்டிருப்பதால் அது போலவே அரசியலிலும் ஆராய்ச்சியில்லாமலும், பகுத்தறிவு இல்லாமலும் கண்மூடித்தனமாய் நடந்து கொள்ள வேண்டியவர்களாய் இருக்கிறார்கள்” என்று சொன்னதும், மற்றும் சமீபத்தில் ஸ்ரீமதி பெசண்டம்மையும் “இந்தியர்களுக்குள் இருந்து வரும் மூட நம்பிக்கையின் பலனே இக்குழப்பத்திற்கு காரணமாயிருக்கின்றது” என்று சொன்னதும் மிகவும் பொருத்தமானதாகும்.

ஏனெனில் இந்தியர்களில் அதாவது இப்போதைய குழப்பத்தில் கலந்து கொண்டிருக்கும் மக்களிலும் இக்குழப்பத்தை ஆதரிக்கும் மக்களிலும் 1000க்கு ஒன்று இரண்டு பேருக்காவது இப்போது நடைபெற்று வரும் குழப்பத்திற்கு ஆஸ்பதமான தேசீயத்தைப் பற்றியோ தேச விடுதலையைப் பற்றியோ அதற்காகவென்று செய்யப்படும் உப்புக் காய்ச்சுவதைப் பற்றியோ ஏதாவது தெரியுமா என்று கவனித்துப் பார்த்தால் அதாவது எப்படி பார்ப்பனர்கள் மோட்சம் என்றும் சொர்க்கம் என்றும் பாவ விமோசன மென்றும் சொல்லுவதை நம்பி அதற்காக அவர்கள் சொல்லுகின்றபடியெல்லாம் கேட்டு கண்மூடித் தனமாய் நடப்பதும் கஷ்டப்பட்டு சம்பாதித்த பொருள்களை செலவு செய்வதுமான காரியத்தில் மக்கள் நாசமடைவதும் சகஜமாயிருக்கிறதோ அதே போல் “தேச பக்தி” “தேசீய விடுதலை” என்கின்ற பேரால் மக்கள் பாழாகின்றார்கள் என்பது தெரியவரும்.

அன்றியும் யாராவது இம்மூடக் காரியங்களை வெளியாக்கி தடுத்துச் சொன்னால் எப்படி மதவிஷயத்தில் கண்மூடித்தனமாய் நடப்பதை எடுத்துச் சொல்லுகின்றவர்கள் நாஸ்திகர்களென்று குற்றம் சாற்றப்படுகிறார்களோ அதே போல் தேசீய விஷயத்தில் உள்ள மூடநம்பிக்கையை எடுத்துக் காட்டுகின்றவர்கள் தேசத்துரோகிகள் என்று குற்றம் சாட்டப்படுகின்றார்கள்.

ஆகவே இவற்றிற்கு முக்கிய காரணம் மேல் சொல்லப்பட்டது போல் நமது மக்களின் மூடநம்பிக்கையும் குருட்டு பக்தியுமேயாகும்.

பார்ப்பனர்களுக்கு கொடுப்பதற்கும் மோட்சத்திற்கும் எப்படி சம்பந்த மிருக்கக் கூடும்? என்கின்ற விஷயத்தை ஒரு மனிதன் யோசித்துப் பார்த்தானானால் உப்புக் காய்ச்சுவதற்கும் தேச விடுதலைக்கும் எப்படி சம்பந்தமிருக்கக் கூடும்? என்பதும் மோக்ஷம், சொர்க்கம் என்பது என்ன என்று அதன் புறட்டுகளை சற்று யோசித்து பார்ப்பார்களேயானால் அவருக்கு தேசீயம் சுயராஜ்ஜியம் என்பதின் புறட்டுகள் என்ன என்பதும் சுலபத்தில் விளங்கிவிடும்.

எதற்கும் பகுத்தறிவை உபயோகிக்க விடாமலும் ஆராய்ச்சி செய்யவோ ஆலோசனை செய்து பார்க்கவோ இடம் கொடுக்காமலும் அடக்கி வைத்த பலனே நமது நாட்டின் இன்றைய இழிந்த நிலைக்கும் இக் குழப்பத் திற்கும் காரணமாயிருக்கிறது.

ஆகவே நமது நாட்டில் ஏதாவது ஒரு துறையில் மூட நம்பிக்கைக்கு அனுமதியும் அதை காப்பாற்ற நிர்ப்பந்தமும் இருக்கும் வரை இம்மாதிரி குழப்பநிலை அடிக்கடி ஏற்பட்டுக் கொண்டு தான் வரும். அதற்காக விசனப் படுவதில் யாதொரு பலனும் உண்டாகப் போவதில்லை. மேலும், தட்டிச் சொல்லுபவர்கள் மீது கோபமும் ஆத்திரமும் பாமர மக்களுக்கு உண்டாய்க் கொண்டு தான் வரும். ஆகவே அக்கோபத்திற் கும் ஆத்திரத்திற்கும் ஆளாகத் துணிந்தவர்கள்தான் தட்டிச் சொல்ல யோக்கியமுடையவர்களாவார்கள். மற்றவர்கள் பயந்து கொண்டு கூட்டத்தில் கோவிந்தா போட வேண்டியவர்களாகவேதான் இருப்பார்கள்.

ஏனெனில் மதத்தின் பேரால் நடைபெரும் காரியங்களால் எப்படி ஒரு கூட்டத்திற்கு வயிறு வளர்க்க வசதி ஏற்பட்டு அவ்வசதியை நிலைநிறுத்திக் கொள்ள அக்கூட்டத்தார் மதத்தைக் காப்பாற்ற வேண்டியவர்களாகி விட்டார்களோ அது போலவே “தேசீயத்தின்” பேரால் ஏற்படும் காரியங்களால் மாத்திரம் வயிறு வளர்க்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் நமது நாட்டில் ஒரு கூட்டம் ஏற்பட்டு விட்டபடியால் அக்கூட்டத்தார் “தேசீயத்தை” காப்பாற்ற வேண்டிய அவசியமுடையவர்களாகி விட்டார்கள்.

வயிறு வளர்ப்பை உத்தேசித்து மோட்சத்தில் நம்பிக்கை உண்டாகும் படி பிரசாரம் செய்வது போலவே வயிறு வளர்ப்பை உத்தேசித்து “தேசீயத் தில்” நம்பிக்கை உண்டாகும்படி பிரசாரம் செய்ய வேண்டியது அவர்களுக்கு அவசியமாகிவிட்டது.

எனவே இவ்விரு துறையிலும் உள்ள மூடநம்பிக்கைகளை அடியோடு அழித்து மக்களைக் காப்பாற்ற வேண்டியது தான் இது சமயம் இந்நாட்டிற்கு மிகவும் அவசியமான காரியமாகும்.

ஆதலால் மூட நம்பிக்கையை ஒழிக்க வேண்டும் என்னும் துறையில் கவலை கொண்ட நாம் பாமர மக்களுடன் கூடிக் கொண்டு கூட்டத்தில் கோவிந்தா போட முடியாத நிலையில் இருக்கின்றதுடன் மூட நம்பிக்கையால் ஏற்படும் பலனை விளக்க வேண்டியவறாகவும் இருக்கின்றோம்.

சுமார் 10, 12 வருஷங்களுக்கு முன்பு இதைப் போல் ஒரு குழப்பம் இந்த “மகாத்மா” வினாலேயே பஞ்சாப்பில் ஏற்படுத்தப்பட்டது. பிறகு அது ஒத்துழையாமையாக மாறிற்று. அது இப்போதிருக்கும் குழப்பத்தை விட எத்தனையோ மடங்கு அதிகமாக இந்தியா நாடு முழுவதிலும் குழப்பம் ஏற்பட்டது.

அதனால் ஆயிரக்கணக்கான மக்கள் அடி, உதை, உயிர்ச்சேதம் ஆகியவை களால் துன்பப்பட்டார்கள். பதினாயிரக் கணக்கான மக்கள் சிறை வாசம் செய் தார்கள்.

கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவாயின. இவைகளால் ஏற்பட்ட பலன் என்ன? செத்தவர்கள் “வீர சுவர்க்கம்” புகுந்தார்கள் என்று சொல்லப் பட்டது. சிறை சென்றவர்கள் பெரிய பெரிய “தேசீய வாதி”களானார்கள்.

பணம் கொடுத்தவர்கள் “தேச பக்தர்களானார்கள்”. இதில் கலந்து மேடையில் நின்று பேசிய வக்கீல்களும் டாக்டர்களும் “தேசீய வாதி” களாகி முன்னிலும் அதிகமான பணம் வரும்படி உடையவர்களானார்கள்.

“தலைவர்கள் என்பவர்கள் அசைக்க முடியாத மகாத்மாக்கள்” ஆனார்கள். தங்களுக்கென்று ஆச்சிரமங்களும், மடங்களும் ஏற்படுத்திக் கொண்டார்கள். மற்றபடி பொது ஜனங்களுக்கு இதனால் ஏற்பட்ட நன்மை என்னவென்று கேட்கின்றோம்?

மேல் கண்டபடி பஞ்சாபில் ஏற்பட்ட குழப்பத்தால் குழந்தைகளும் நிரபராதிகளும் கொல்லப்பட்டதைத் தவிர, பெண்கள் மானபங்கம் செய்யப் பட்டதைத் தவிர, பல இடங்களில் ராணுவச் சட்டம் அமுல் நடத்தப்பட்டதுடன் பாமர மக்களுக்கு வரி அதிகப்படுத்தப்பட்டது.

பார்ப்பனர்களுக்கும் அவர்களை பின்பற்றின பார்ப்பனரல்லாதவர்களுக்கும் பெரிய பெரிய உத்தியோகங்கள் கற்பிக்கப்பட்டது. அதற்காக ஆயிரக் கணக்கான ரூபாய்கள் சம்பளமாக உயர்த்தப்பட்டது.

இவைகளைத் தவிர வேறு என்ன நடந்தது?

1920 ´த்தில் பிராட்வே 8ம் நெம்பர் கட்டிடத்தில் திரு. காந்தியாரை ஒருவர் ஒரு கேள்வி கேட்டார். அதாவது:-

“பஞ்சாப் அக்கிரமத்திற்கும் கிலாபத் அநீதிக்கும் ஒத்துழையாமை நடத்த வேண்டும் என்று சொல்லுகிறீர்களே அரசாங்கத்தார் பஞ்சாப் அக்கிரமத்திற்காக இனி ஒன்றும் செய்ய முடியாது. ஏதோ சிறிது ஜட்ஜ்மெண்ட் தவறிவிட்டதால் இப்படி நேர்ந்து விட்டது.

ஆதலால் மறந்து விடுங்கள் என்று சர்க்கார் தரப்பில் சொல்லிவிட்டார்கள், கிலாபத் விஷயத்திலோ துருக்கி யிலேயே ஒரு வித சமாதானம் ஏற்பட்டு துருக்கி அரசரே உடன்படிக்கையில் கையெழுத்து செய்து விட்டார். மற்றபடி ஒரு சமயம் சுயராஜ்ஜியத்திற்காக ஒத்துழையாமை என்று சொல்லுவீர்களேயானால், அதற்காகவும் சர்க்கார் ஒரு சீர்திருத்தம் வழங்கிவிட்டார்கள்.

தாங்களும் அதை நடத்திக் காட்ட வேண்டும் என்று ஏற்றுக் கொண்டு விட்டீர்கள். இனி எதற்காக ஒத்துழையாமை ? ” என்று கேட்டார், அதற்கு திரு காந்தியார் சொன்ன பதில் என்ன வென்றால் “இந்திய மக்களின் சுயமரியாதைக்காக ஒத்துழையாமை செய்ய வேண்டியிருக் கின்றது” என்று பதில் சொன்னார்.

ஆகவே மேற்படி ஒத்துழையாமை நடத்தியதின் பலனாக காந்தியார் அபிப்பிராயப்படி இந்தியாவுக்கு ஏற்பட்ட சுயமரியாதை எவ்வளவு என்று இப்போதே கேட்கின்றோம். ஒத்துழையாமையின் பலனாக ஏற்பட்ட கஷ்ட நஷ்டத்திற்கு உண்டான பலன் எவ்வளவு? என்று கேட்கின்றோம்

மற்றும் தீண்டாமை ஒழியாமல், ஜாதி மத வித்தியாச உயர்வு தாழ்வு ஒழியாமல், சுயராஜியம் அடைய முடியாதென்றும், அதைப் பெற நினைப்பது கூட முட்டாள் தனமென்றும், இதே திரு. காந்தியார் பேசியதின் எதிரொலி இன்னமும் அடங்கவில்லை.

எழுதியதின் இங்கி இன்னமும் காயவில்லை. அப்படி இருக்க இப்போது சுயராஜ்யம் பெற உப்புக் காச்சுவதும் சர்க்கார் சட்டத்தையும் மீறுவதும் எதற்கு என்று மறுபடியும் கேட்கின்றோம்?

சட்டம் மீற வேண்டும் என்று சொல்லி மக்களை ஏவி விட்டு விட்டு “இது சட்டத்திற்கு விரோதம்” “அது நீதிக்கு விரோதம்” என்று பேசுவது எதற்கு என்றும் கேட்கின்றோம்?

“மக்கள் மண்டை உடைபட வேண்டும்”, “மக்கள் உயிர் சுட்டுக் கொல் லப்பட வேண்டும்”, “இந்த சர்க்காருக்கு என்னை பிடிக்க சக்தியில்லை”, “கை முறிக்கப்படும் வரை விடாதீர்கள்”, “ஆங்காங்கு என்ன என்ன சட்டம் மீறக் கூடுமோ அதையெல்லாம் மீற வேண்டியது தான்” என்பவையெல்லாம் பேசி மக்களுக்கு போதையை உண்டாக்கி விட்டு மக்களையும் கண்மூடித்தனமாய் கண் கொண்ட மாடு போல் நடந்து கொள்ளச் செய்துமாய் விட்டது.

இதனால் பலர் சிறை சென்றாய் விட்டது. இனியும் பலர் செல்லக்கூடும். பலர் உயிர் மாய்ந்தாய் விட்டது. இனியும் பலர் மாளக் கூடும். அடக்கு முறை சட்டங்கள் கிளம்பிவிட்டது. ராணுவச் சட்டம் முதலிய கொடுமைகளின் நிழல் தெரி கின்றது. மற்றும் பொது ஜனங்களின் சொத்துக்கள் உயிர்கள் பெண்டு பிள்ளைகள் காப்பாரற்று பரிபோகவும் கூடும் போல் தெரிகின்றது.

இவைகளுக்கெல்லாம் யார் பொறுப்பாளி? என்ன பரிகாரம்?

ஒரு புரத்தில் “சுயராஜ்யம் பெற என்னமாவது செய்து சட்டம் மீற வேண்டியதுதான் என் கடமை” என்று திரு. காந்தி சொல்லவும், மற்றொரு புறம் “மக்களைக் காப்பாற்ற நீதியையும் சமாதானத்தையும் நிலைநிருத்த எப்படியாவது சட்டத்தைக் காப்பாற்ற வேண்டியது தான் எமது கடமை” என்று அரசாங்கம் சொல்லவும், இருவரின் பலமும் ஒன்றோடொன்று முட்டிக் கொள்ளும் போது நிரபராதிகளும், யோசனையற்ற பாமர ஜனங்களும், கஷ்டப்படுவதுவான சத்தியாக்கிரகமா? என்று கேட்கின்றோம்.

இருவருக்கும் ஆள் கூட்டமும் பணப் பொழக்கமும் தாராளமாயிருக்கின்றது. பாமர மக்கள் இருவரையும் நம்புகிறார்கள். ஒரு புறம் “அரசாங்கத்தை ஒழித்து விட்டால் நமக்கு வரியே போய் விடும். வேண்டிய சாமான்களை கடைகளிலிருந்து சும்மா அள்ளிக் கொண்டு வந்து சாப்பிடலாம். நம்மை யார் கேட்கப் போகிறார்கள்” என்று அநேகர் நம்புகிறார்கள்.

மற்றொரு புறம் “அரசாங்கம் போய் விட்டால் நமது கதி என்ன ஆகும்? பிறகு கையில் வலுத்தவன் காரியம் தானே? மதக் கொடுமை ஜாதிக் கொடுமை காலிகள் கொடுமை ஏமாற்றுக்காரர்கள் கொடுமை ஆகியவை களிலிருந்து எப்படி மீளுவது?” என்றும் அநேகர் கருதுகின்றார்கள்.

இன்றைய குழப்பத்தில் இவைகளுக்கெல்லாம் என்ன பரிகாரம் இருக்கிறது? என்று தான் கேட்கின்றோம். ஏழைகளையும் பாமர மக்களையும் ஏமாற்றுவதில் யார் கெட்டிக் காரர்கள் என்பதில் தான் தேசீய போராட்டமும் சர்க்கார் சமாளிப்பும் இருக் கின்றதே ஒழிய நாணையமும் யோக்கியப் பொறுப்பும் சற்றாவது இவைகளில் தென்படுகின்றதா என்பது நமக்கு விளங்கவில்லை.

சென்ற வருஷத்தில் நமது நாட்டில் ஏற்பட்ட தொழிலாளர் போராட்டங் களிலாவது இப்போது நமது நாட்டில் பல இடங்களில் நடந்து வரும் தொழிலாளர் போராட்டங்களிலாவது இந்த தேசிய வீரர்களுக்கோ தேசியத் தலைவர் களுக்கோ எவ்வளவு கவலை இருந்தது - இருக்கின்றது? நமது நாட்டு தொழி லாளர்களை காட்டிக் கொடுத்து அவர்கள் போராட்டத்தை அழித்தவர்கள் யார்?

ஜாதி உயர்வு தாழ்வு கொடுமைக்கு தேசீய வீரர்கள் என்ன செய் தார்கள்? அதை ஒழிக்க தலைவர்கள் என்ன உதவி புரிந்தார்கள்?
கஞ்சிக்கு இல்லாமல் மக்கள் கஷ்டப்படுவதையும், ஜாதிக் கொடுமை யால் இழிவு படுத்தி கொடுமைப் படுத்தப்படுவதையும் விட இந்த “சுயராஜ்ஜி யம்” எந்த விதத்தில் மேலானது? யாருக்கு வேண்டியது?

தொழிலாளர் போராட்டத்தையும் ஜாதிக் கொடுமை போராட்டத் தையும் கண்டு ஒளிந்து கொண்ட கோழைகள் சுயராஜ்ஜியத்திற்கு சாதிக்கப் போகின்றோமென்றால் இவர்களை மடையர்கள் தானே நம்புவார்கள்.

உப்பு போராட்டத்திற்கு ஓடி ஓடி மீட்டிங்கி போடும் வக்கீல்கள், டாக்டர்கள் (பார்ப்பனர்) ஏழைகள் கொடுமைக்கும் ஜாதிக் கொடுமைக்கும் என்ன செய்தவர்களாயிருப்பார்கள்?

அல்லது இவர்கள் காங்கிரஸ் கட்டளையில் எந்த பாகத்தை காரியத்தில் ஏற்றுக்கொண்டு நடந்தவர்களாயிருப்பார்கள்; அல்லது இவர்கள் வரும்படியில் எந்த பாகத்தை கொடுத்து உதவினவர்களாயிருப்பார்கள்? வருணாச்சிரமத் தலைவரான உயர் திரு. டி. ஆர். ராமச்சந்திரய்யர் தலைமை வகித்துத் தேசீயத்திற்கு அனுதாபம் காட்டியிருந்தால் அந்த தேசீயம் எவ்வளவு நாணையமானதாயிருக்க முடியும்?

இன்றைய போராட்டத்தில் தமிழ் நாட்டில் தலைமை வகித்து நடத்து கின்றவர்கள் யார்? எல்லோரும் பார்ப்பனர்கள் அல்லவா? அவர்கள் இந்த போராட்டம் உண்மையில் ஏழைகளுக்கு நன்மையாயும் ஜாதிக் கொடுமை ஒழியக் கூடியதாயும் இருந்தால், இதில் கலந்து கொண்டிருப்பார்களா? அறிவுள்ள மக்களுக்கு இது விளங்க வேண்டாமா? என்று கேட்கின்றோம்.

நமது மக்கள் நிலை மற்றவர்களை விட நமக்கு நன்றாய்த் தெரியும்.

கழுத்தில் ருத்திராட்சமோ துளசி மணியோ கட்டிக் கொண்டு சாம்ப லையோ நாமத்தையோ பூசிக் கொண்டு வருகின்றவர்கள் காலிலெல்லாம் விழுகின்றவர்கள் தானே ஒழிய வேறில்லை. அதிலும் சென்னையில் இருப்பவர்களோ இந்த விஷயத்தில் மிகவும் மோசமானவர்கள்.

ஒரு கிழவி மஞ்சள் நூலை மொத்தமாக கழுத்தில் போட்டுக் கொண்டு ஒரு முரத்தை ஏந்திக் கொண்டு ஆ! ஊ!! மாரியாயீ!!! என்று கத்தினால் காலுக்கு தண்ணீர் ஊற்றி தேங்காய் பழம் உடைத்து வைத்து கற்பூரம் பற்ற வைத்து விழுந்து கும்பிட்டு வாக்கு கேட்கும் புத்திசாலிகளேயாவார்கள்.

இந்த அறிவு தானே இவர்களது மற்ற வாழ்விலும் பரிணமிக்க முடியும், இவர்களே இப்படியானால் மற்றும் நமது கிராமவாசிகளைப் பற்றிச் சொல்ல வேண்டுமா? என்று கேட்கின்றோம்.

ஆகவே இன்றையதினம் நமது நாட்டில் ஏற்பட்டிருக்கும் குழப்பம் பாமர மக்களின் அறியாமையின் பலனாலும் மூட நம்பிக்கையின் பலனாலுமே ஒழிய ஒரு சிறிதும் நாட்டின் நலத்தை உத்தேசித்தல்ல வென்றே நாம் துணிந்து கூறுகின்றோம். இதிலீடுபட்டு கஷ்டமனுபவிப்பவர்களிடம் நமக்கு அனுதாபமிருக்கின்றது, அவர்கள் கஷ்டங்களைப் பற்றி கேள்க்கும் போதும் பார்க்கும் போதும் துக்கம் உண்டாகின்றது.

ஆனால் இதற்காக நாம் என்ன செய்ய முடியும்? இமயமலை பனியால் குளிரால் விரைத்துப் போகின்றது வாஸ்தவமாய் இருக்கலாம். ஆனால் அதற்கு நம்மால் போர்வை போட்டு மூடி குப்பை செத்தைகள் அரித்து குளிர் காய வைக்க முடியுமா என்று கேட்கின்றோம். எலியை பூனை பிடித்து சாப்பிடும் போது மனம் பதறுகின்றது.

இதற்கு நாம் என்ன செய்ய முடியும்? அதனதன் இயற்கைப் பலனை அது அது அடைந்துதான் ஆக வேண்டும். அதிலும் “எல்லாம் ஆண்டவன் செயல் அவனன்றி ஓரணுவும் அசையாது” என்று கற்பித்து மக்கள் அறிவைக் கெடுத்து முயற்சியைக் கெடுத்து வந்த ஞானோப தேசத்தின் பலனை இந்த தேசம் அடையாமல் செய்ய யாராலும் முடியவே முடியாது.

கடைசியாக தமிழ்நாட்டுப் பார்ப்பனரல்லாத மக்களுக்கு பார்ப்பனரல் லாதான் என்கின்ற முறையில் ஒன்று கூறிவிட்டு இதை முடிக்கின்றோம்.

சகோதரர்களே!

இந்திய நாட்டில் சமூக வாழ்வில் நமது நிலை என்ன? நமக்கு சுய ராஜியம் ஒரு கேடா? அதாவது பிறவியில் நாம் “சூத்திரர்களாய்” இழி மக்களாய்க் கருதப்படுகின்றவர்களல்லவா? புனிதமான ஸ்தானங்கள் என்பவைகளில் நாம் செல்லக் கூடாதவர்களல்லவா? நம்மால் பார்க்கப்படும் ஆகாரமும் தொடப்படும் தண்ணீரும் தோஷமடைகின்றதல்லவா? நாம் தீண்டப்படாதவர்கள் அல்லவா? ஒவ்வொரு ஓட்டலிலும் வெளியில் நிற்க வேண்டியவர்களல்லவா? அயோக்கிய மனிதனை சுவாமி! என்று கூப்பிட வேண்டியவர்களல்லவா? நம் பின்னால் கோடிக்கணக்கான சகோதரர்கள் தெருவில் நடக்கவும் அருகில் வரவும் யோக்கியதை அற்றவர்களாக நம்மாலும் கருதப்படுகிறார்களா இல்லையா? நமது நாட்டில் நமது சகோதரர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களிலேயே 100க்கு 3 பேர் உள்ள ஜனத் தொகையினரால் இந்த கொடுமை இழைக்கப்படுவதைச் சகித்துக் கொண்டிருக்கின்றோம்.

இந்த இழிவுக்கு நாம் இதுவரை என்ன செய்தோம்? செய்யத் துணிந்தோம்? இவர்களால் செய்யப்பட்ட சட்டத்தில் இருக்கும் இழிவை யாவது புராண புஸ்தகங்களில் இருக்கும் இழிவையாவது நீக்கிக் கொண்டோமா? வாழ்வில் வழக்கத்தில் இருக்கும் இழிவையாவது நீக்கிக் கொண்டோமா? இந்த ஈன நிலையில் நாம் இருந்து கொண்டும் நம்மை ஈனப் படுத்தினவர்களையே சாமி! சாமி! யென்று கூப்பிட்டுக் கொண்டும் இருக்கும் படி வைக்கப்பட்டிருக்கும் நமக்கு உப்புச் சட்டம் மீறுவது ஒரு கேடா? அதற்காக சத்தியாக்கிரகம் செய்வது ஒரு கேடா? சகோதரர்களே நாயினும் கேடாய் மலத்தினும் கேடாய் புழுத்த புழுவினும் கேடாய் சமூக வாழ்வில் தினமும் அனுபவித்து வரும் இழிவைப் பொருத்துக் கொண்டு ஒருவன் சுயமரியாதைக்காக நாட்டின் விடுதலைக்காக உப்புக் காய்ச்சுகிறேன், உப்புச் சட்டம் மீறுகிறேன் என்று சொன்னால் அவனிடம் நாணையமாவது யோக்கியப் பொறுப்பாவது அறிவுடைமையாவது இருக்க முடியுமா? சமூக வாழ்வில் நமது நிலையை நினைத்துப் பார்த்த சுயமரியாதை உள்ளவர்கள் உப்புக் காய்ச்சப் போக முடியுமா? அதை நினைக்கவாவது நேரமிருக்குமா? இன்றைய தினம் தமிழ் நாட்டில் உப்புக் காய்ச்சும் வேலையிலும் உப்புச் சட்டத்தை மீறும் வேலையிலும் பார்ப்பனர்கள் இவ்வளவு மும்முரமாய் கலந்திருப்பதின் இரகசியம் என்ன என்று யோசித்துப் பாருங்கள்.

பணம் வசூல் பண்ணும் காரணம் என்ன என்று யோசித்துப் பாருங்கள். இந்த நாட்டு மக்களுக்கு “சூத்திரர்களுக்கு” தங்கள் சமூக வாழ்வில் உள்ள இழிவும் மனிதத் தன்மையற்ற நிலையும் ஞாபகத்திற்கு வராமலிருக்கட்டும் என்றும் வேறு யாராவது ஞாபகத்திற்கு கொண்டு வர முயற்சித்தாலும் அம்முயற்சி அழிக்கப்படட்டும் என்று கருதி செய்த சூக்ஷியல்லவா இது?

ஆகவே இது சமயம் நாம் கண்டிப்பாய் சொல்லுவது என்ன வென்றால் இப்போது நமக்கு மோக்ஷமோ சுயராஜ்ஜியமோ கண்டிப்பாய்த் தேவை யில்லை. இவை இரண்டும் ஏமாற்றுத் தன்மையுடையதான புறட்டும் சூக்ஷி எண்ணங்களும் கொண்டு கற்பித்த அர்த்தமற்ற வார்த்தையாகும்! அர்த்தமற்ற வார்த்தையாகும்!! அர்த்தமற்ற வார்த்தையாகும்!!! அதில் கவலை செலுத்துவது நமது அறிவற்றத் தன்மையும் சுயமரியாதையற்ற தன்மையுமாகும் என்பதேயாகும்.

ஆகையால் இதைக் கேட்டால் கேளுங்கள் கேள்க்காவிட்டால் போங்கள். கேட்காமற் போனதற்காக வருந்தும் காலம் ஒன்று வரும் என்கின்ற நம்பிக்கை நமக்குண்டு.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 04.05.1930)

Pin It