தலையங்கம்

 

எமக்குத் தொழில் கவிதை

நாட்டுக்குழைத்தல்

இமைப்பொழுதும் சோராதிருத்தல்

-  பாரதியார்

 

அவர் ஒரு பால்காரர். இழுத்து இடுப்பில் செருகிய வேட்டிக்கு வெளியே டவுசர் நீட்டிக்கொண்டிருந்தது. அங்கங்கே அழுக்கான மஞ்சள் பனியன். ஒரு பஜாஜ் வாகனம். கூட்டத்திற்கு பொருந்தாமல் சரசரவென்று புத்தகக் காட்சிக்கு முன்வந்து நிற்கிறார்... அவரிடம் ‘புத்தக விற்பனைக்காக இரண்டு நாள் இருப்போம்...’ என்று பாரதி புத்தகாலயத் தோழர் தயங்கியபடி பேச்சுக் கொடுக்கிறார். கழுத்தில் ஒரு நாலுமுழ தாம்புக்கயிறு கையில் எவர்சில்வர் பாத்திரம். பால்காரர் யார் பேசுவதையும் காதில் வாங்கவில்லை. ‘மார்க்சியத்தின் இன்றைய தேவை.. எனும் ஜி. ராமகிருஷ்ணன் புத்தகம் இருக்கா.. அல்தூசர் எழுதிய புத்தகம் கிடைக்கவில்லை... உங்களிடம் இருக்கா.. பகத்சிங் பற்றி வேற என்ன வந்திருக்கு?’... அவ்வளவுதான் நமது தோழர்கள் உற்சாகம் அடைந்தார்கள். இது நடந்தது விருதுநகரில்.

அவர் ஒரு தபால்காரர். கொட்டும் மழையில் தனது சைக்கிளை குடையோடு தள்ளிக்கொண்டு ஒதுங்கினார். மழைக்கு ஒதுங்கியவர்தானே என நம் பாரதிபுத்தகாலயத் தோழர் ‘இந்தாங்க அண்ணே இந்த ஸ்டூல்ல உட்காருங்க’ என்கிறார். ‘இல்ல சார்...’ என்றவாறு அவர் நேராக புத்தகங்கள் பக்கம் போகிறார். ‘கஸ்தூரிபாவைப் பற்றி ஒரு புத்தகம் வந்திருக்குதாம்ல... பிடல்காஸ்ட்ரோ.. உரைகள் இருக்குதா? என்று மடமடவென்று சிறியதும் பெரியதுமாக முன்னூறு ரூபாய்க்கு புத்தகங்களை அள்ளி தனது காக்கிப்பையில் ஒரு ஒரமாய் திணிக்கிறார்... நமது பாரதிபுத்தகாலயத் தோழருக்கு மனமெல்லாம் மின்னல். இது நடந்தது திருச்சி பக்கம் ஒரு கிராமத்தில்.

‘வாங்க... எங்க வந்தீங்க’ அந்த அம்மா தனது கைகளை மீன் கழுவுவதிலிருந்து எடுக்கவில்லை. காலை மணி பதினொன்று இருக்கும்... ‘காய்கறிவிக்கிறமாதிரி இந்த புஸ்தகத்த தூக்கிகிட்டு வந்திருவீங்க...’ வீட்டிற்குள் சென்று இரண்டு மூன்று வாண்டுகளுடன் வெளியே வருகிறார்... ‘எலே..எதுவேனும்னாலும் எடுத்துக்குங்க... உங்க அய்யாகிட்ட நான் பேசிக்கிறேன்...’ சிறுமி அந்தவீட்டுச் சிறுவனை விட அதிக புத்தகங்களை எடுக்கிறாள். ‘எம்புட்டு ஆச்சு.. தம்பி.. மீதிய குடுக்காதீய... நான் இன்னும் வாங்கல இல்ல?’ ஐநூறு ரூபாய் நோட்டு கசங்கி அழுக்காகி இருந்தது. அக்குபஞ்சர்...பற்றிய புத்தகத்தை அவர் கேட்டு வாங்குகிறார். ‘மறுபடி..எப்ப வருவீங்க?’ என்றபடி விடை கொடுக்கிறார்... அடுத்த வாசலில் இரண்டு பெண்கள் காத்திருக்கிறார்கள்... ‘வீதிவீதியாக’ எனும் நமது விற்பனைத் திட்டத்தை சுதந்திரத் திருநாளன்று நிகழ்த்தப்போன நமது தோழருக்கு இன்ப அதிர்ச்சி. இது நடந்தது காரியாபட்டியில்.

அவர் ஊனமுற்ற வாலிபர். மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகையை வாங்கிக்கொண்டு நேராக வீட்டுக்குப்போகவில்லை. சக்கரக் கை மிதிவண்டியை நிறுத்திவிட்டு நாம் கடை விரித்திருந்த புத்தகங்களைப் பார்க்க வருகிறார். பல புத்தகங்களை எடுத்து மிளிரும் விழிகளுடன் அன்போடு தடவிக்கொடுத்து நெஞ்சில் அணைத்தபடி வாசிக்கிறார். உடன் உதவிக்கு யாருமே வரவில்லை.. ‘நான் உதவட்டுமா... டீ... சாப்பிடறீங்களா’ நமது தோழருக்கு பழக்கதோஷம்... ‘ஈ.வெ.ராமசாமி என்கின்ற நான் ...’ அவர் வாரியெடுத்து பில்போட்டுத் தருகிறார்...’ ‘இன்று பத்து சதம் தள்ளுபடி... தோழர்...’ ‘எவ்வளவு மிச்சம்..?’ அவர் கேட்கிறார்.. ‘அறுபத்தைந்து... சொச்சம்’ ‘அதுக்கும்... புத்தகமே கொடுங்க..’ ஆறேழு புத்தங்களை கக்கத்துப் பையில் அடுக்கிக்கொண்டு புத்தகாலயம் கொடுக்கும் உதவியை ‘நோ..பிராப்ளம்’ என அன்போடு மறுத்து வண்டியில் ஏறுகிறார். கடையில் புத்தகம் தேர்வு செய்து கொண்டிருந்த பலர் ஆச்சரியத்தோடு பார்க்கிறார்கள்.. இது நடந்தது திருவாரூரில்!

இந்த அனுபவங்களை விளங்கிக் கொள்ளவே பாரதிபுத்தகாலயம் புத்தகக் காட்சிகளை ஆகஸ்ட் மாதம் 500 இடங்களில் நடத்தியது. அதைத் தொடர்ந்து வருகின்ற தேசிய புத்தக வாரத்தையட்டி தமிழக முழுவதும் புத்தகக்காட்சி நடைபெற உள்ளது.

தனது துயர வாழ்வுக்கு இடையே... வறுமை தின்னும் அன்றாட நிகழ்வுகளுக்கு நடுவே.. உழைத்து உழைத்து சிந்திய வியர்வைப் பொழுதுகளுக்கு அப்பாலும்..

மக்கள் புத்தகங்களை வாசிக்க விரும்புகிறார்கள்... ஆனால் புத்தகங்களை அவர்களிடம் கொண்டு செல்வார் யார்?

அந்தப்பணியில் நாம் ஒரு போதும் சளைக்காது, இமைப்பொழுதும் சோராது..

செயலாற்ற உறுதி ஏற்போம்.

- ஆசிரியர் குழு.
Pin It