I
சமயங்களைத் தோற்றுவித்த பலரில் நால்வர் நிறுவிய மதங்கள் கடந்த காலத்தில் உலகத்தை அசைத்துள்ளன என்பது மட்டுமன்றி, இன்னும் பரந்த மக்கள் திரளின் மீது செல்வாக்குச் செலுத்தி வருகின்றன. அந்த நால்வர் புத்தர், ஜீஸஸ் (இயேசு கிறிஸ்து), முகம்மது நபி மற்றும் கிருஷ்ணர். இந்த நால்வரின் ஆளுமைகளையும், தமது மதங்களைப் பிரசாரம் செய்வதில் அவர்கள் கடைப்பிடித்த நிலைகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால், ஒரு புறத்தில் புத்தருக்கும் மறுபுறத்தில் மற்றவர்களுக்கும் இடையில் சில வேறுபாட்டு அம்சங்கள் இருப்பது வெளியாகிறது. அவை முக்கியத்துவம் இல்லாதவை.

புத்தரை மற்றவர்களிடமிருந்து பிரித்துக் காட்டும் முதலாவது அம்சம், அவருடைய தன்னல மறுப்புக் கொள்கையாகும். பைபிள் முழுவதிலும் இயேசு, தான் கடவுளின் மைந்தன் என்றும், தன்னைக் கடவுளின் மைந்தன் என்று அங்கீகரிக்காவிட்டால், கடவுளின் சாம்ராஜ்யத்தினுள் பிரவேசிக்க விரும்புபவர்கள் தோல்வியடைவார்கள் என்றும் வலியுறுத்துகிறார். முகம்மது நபி மேலும் ஒருபடி மேலே சென்றுள்ளார். இயேசுவைப் போன்றே அவரும் தான், இந்த உலகில் கடவுளின் தூதர் என்று உரிமை கொண்டாடினார். ஆனால் அவர், மேலும் அப்பால் சென்று தான் கடவுளின் கடைசி தூதர் என்று வலியுறுத்தினார். அந்த அடிப்படையில் முக்தி அடைய விரும்புபவர்கள், தன்னைக் கடவுளின் தூதர் என்று ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பது மட்டுமன்றி, தான் கடவுளின் கடைசி தூதர் என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் பிரகடனம் செய்தார். கிருஷ்ணர், இயேசுவுக்கும் முகம்மது நபிக்கும் மேலும் அப்பால் சென்றார். அவர் கடவுளின் மைந்தன் என்றோ, அல்லது கடவுளின் தூதர் என்றோ இருப்பதோடு திருப்தியடைய மறுத்தார்.

Buddha 470கடவுளின் கடைசி தூதர் என்பதோடு கூட அவர் திருப்தியடைய வில்லை, தன்னையே கடவுள் என்று கூறிக் கொள்வதோடுகூட அவர் திருப்தியடையவில்லை. தான் 'பரமேஸ்வரன்' என்றும் அவரைப் பின்பற்றுபவர்கள் அவரைத் 'தேவாதி தேவர்' என்று அழைப்பது போன்று, தாம் கடவுள்களுக்கெல்லாம் கடவுள் என்றும் உரிமை கொண்டாடினார். ஆனால் புத்தர் ஒருபோதும். அத்தகைய அந்தஸ்து (தகுதி) எதையும் தனக்குத்தானே சுவீகரித்துக் கொள்ளவில்லை (வீம்புரிமை கொண்டாடவில்லை.) அவர் மனிதனின் ஒரு மகனாகப் பிறந்தார்; ஒரு சாதாரண மனிதனாக இருப்பதோடு திருப்தியடைந்தார்; ஒரு சாதாரண மனிதனாகத் தன்னுடைய தன்னெறியைப் போதித்தார். இயற்கைக்கு அப்பாற்பட்ட பிறப்புடையவராகவோ, அல்லது தெய்வீக சக்தி உடையவராகவோ அவர் உரிமை கொண்டாடவில்லை அல்லது தனது தெய்வீக சக்தியை நிரூபிப்பதற்கு அற்புதங்கள் எதையும் அவர் செய்யவில்லை. ஒரு மார்க்கதாதாவுக்கும் ஒரு மோட்ச தாதாவுக்கும் இடையில் ஒரு தெளிவான வேறுபாட்டை அவர் எடுத்துக் காட்டினார். இயேசுவும், முகம்மது நபியும் கிருஷ்ணரும் மோட்ச தாதாக்கள் என்று தங்களுக்குத் தாங்களே உரிமை கொண்டாடிக் கொண்டனர். ஆனால் புத்தர் மார்க்க தாதாவின் பாத்திரத்தை ஆற்றுவதோடு திருப்தியடைந்தார்.

இந்த நான்கு சமய போதனையாளர்களிடையில் மற்றொரு வேறுபாடும். உண்டு, இயேசுவும், முகம்மது நபியும் தாங்கள் போதிப்பது கடவுளின் சொல் என்றும், எனவே கடவுளின் சொல் என்ற வகையில் தாங்கள் போதிப்பது பிழையாத் தன்மை உடைய தென்றும், கேள்விக்கு அப்பாற்பட்டதென்றும் உரிமை கொண்டாடினார். கிருஷ்ணர் தனது சொந்த அனுமானத்தின்படி கடவுள்களுக் கெல்லாம் கடவுள்; எனவே, அவர் போதிப்பது கடவுளின் சொல் என்றும், கடவுளால் அருளப்பட்டது என்ற வகையிலும் அவை மூலமானதும் இறுதியானதுமாகும். எனவே பிழையாத் தன்மை என்ற பிரச்சினை எழக்கூட இல்லை. ஆனால் புத்தர், தான் போதிப்பது பிழையாத் தன்மை கொண்டது என்ற எத்தகைய உரிமையும் கொண்டாடவில்லை. தனது மகா பரிநிர்வாண சத்தா என்ற போதனையில் அவர், ஆனந்தாவிடம், தனது சமயம் பகுத்தறிவையும் அனுபவத்தையும் அடிப்படையாகக் கொண்டதென்றும், தன்னைப் பின்பற்றுபவர்கள் தனது போதனையை அவற்றைத் தான் கூறியதாலேயே பிழையற்ற தென்றும் கட்டுப்படுத்துபவை என்றும் ஏற்றுக்கொள்ளக் கூடாதென்றும் கூறினார். பகுத்தறிவையும் அனுபவத்தையும் அவை அடிப்படையாகக் கொண்டதால் அவை திருத்தப்படுவதற்கு முழு இடமுண்டு. அல்லது தனது போதனைகள் ஏதாவது ஒரு குறிப்பிட்ட காலத்திலும் குறிப்பிட்ட சூழ்நிலையிலும் காலாவதி அவை பொருந்தாதவை என்று கண்டறியப்பட்டால் கைவிடப்படுவதற்கும் உரிமையுண்டு.

தனது சமயம் கடந்த காலத்தின். பழ்கிப் போனவற்றினால் கட்டுப்படுத்தப்படக்கூடாது என்று அவர் விழைந்தார். அது என்றும் பசுமையாயிருக்க வேண்டுமென்றும் எல்லாக் காலங்களிலும் பயன்படக் கூடியதாயிருக்க வேண்டு மென்றும் அவர் விரும்பினார். அதனால்தான். அவர் குறிப்பிட்ட நிலைமையின் தேவைகளுக்கு ஏற்பத் தனது சமயம் துண்டாக்கப் படுவதற்கும் வெட்டிக் குறைக்கப்படுவதற்கும் தன்னைப் பின்பற்றுவோருக்கு சுதந்திரம் அளித்தார். வேறு எந்த சமய போதனையாளரும் இத்தகைய துணிவைக் காட்டியதில்லை. பழுதுபார்க்கப்படுவதை அனுமதிப்பதற்கு அவர்கள் பயப்பட்டனர். பழுது பார்ப்பதற்கு அளிக்கும் உரிமை, தாங்கள் பேணி வளர்த்த கட்டுமானத்தை அழிப்பதற்குப் பயன்படுத்தப்படலாம் என்று அவர்கள் அஞ்சினர். புத்தருக்கு அத்தகைய அச்சம் ஏதும் இருக்கவில்லை; தனது அடித்தளம் குறித்து அவருக்கு நம்பிக்கையிருந்தது. மிகவும் உக்கிரமான உருவ வழிபாட்டாளராலும் கூட தனது சமயத்தின் அடித்தளத்தை ஒழித்துவிட இயலாது என்று அவர் அறிந்திருந்தார்.

II

இதுதான் புத்தரின் தன்னிகரற்ற நிலையாகும். அவருடைய மதத்தைப் பற்றி என்ன? அவருடைய போட்டியாளர்கள் (எதிரிகள்) தோற்றுவித்த மதங்களுடன் அதை எவ்வாறு ஒப்பிடுவது?

முதலில் நாம் புத்த மதத்தை இந்து மதத்துடன் ஒப்பீடுவோம். நமக்குள்ள குறுகிய இடைவெளியில் ஒருசில முக்கிய அம்சங்களுடன், உண்மையில் இரண்டு அம்சங்களுடன் நமது ஒப்பீட்டுக்கு வரம்பு கட்டிக் கொள்வோம்.

இந்து மதமானது ஒழுக்கத்தின் பேரில் நிறுவப்பட்ட மதமல்ல. இந்து மதத்தில் என்ன ஒழுக்கம் இருந்தபோதிலும் அது அந்த மதத்தினுடைய ஒருங்கிணைந்த பாகமல்ல. அது மதத்தில் ஆழமாகப் பதிந்ததல்ல. அது ஒரு தனிசக்தி, சமூகத் தேவைகளால் அது நிலைத்து நிற்கச் செய்யப்படுகிறதேயன்றி, இந்து மதத்தின் கட்டளையின்படி அல்ல. ஆனால் புத்தரின் மதம் ஒழுக்கத்தில் தோய்ந்ததாகும். அது மதத்தில் ஆழப்பதிந்துள்ளது. ஒழுக்க முறைமை இல்லை யென்றால் புத்த மதம் ஒன்றுமில்லாததாகும். புத்தமதத்தில் கடவுள் இல்லை என்பது மெய்யே. கடவுளுக்கு பதிலாக அங்கு ஒழுக்க முறைமை இருக்கிறது. பிற மதங்களுக்குக் கடவுள் எப்படியோ, அதுபோன்று புத்த மதத்திற்கு ஒழுக்கம் இருந்து வருகிறது.

'தம்மம்' என்ற சொல்லின் ஒரு புதிய புரட்சிகரமான பொருளை அவர் விளக்கினார் என்பது அரிதாகவே அங்கீகரிக்கப் படுகிறது. "தர்மம்" என்ற சொல்லின் வேதங்களின்படியான பொருள். அந்த சொல்லின் எந்த அர்த்தத்திலும் அது ஒழுக்க முறைமையைக் குறிப்பிடுவதில்லை. பிராமணர்களால் விளக்கப்படுகிற வகையிலும், ஜெமினியின் பூர்வமீமாம்சாவால் விளக்கப்பட்டுள்ள வகையிலும் தர்மமானது சில கர்மங்களை செய்வது தவிர, அல்லது ரோமானிய மத செயல்பாடுகளின் சொற்பிரயோகத்தைப் பயன்படுத்துவது தவிர வேறு எதுவுமல்ல. பிராமணர்களுக்கு தர்மம் என்றால் சடங்குகளை, அதாவது யாகங்களை நடத்துவதும் கடவுள்களுக்கு பலியிடுவதும் தவிர வேறு எதுவுமல்ல. பிராமணியத்தின் அல்லது வேத சமயத்தின் சாராம்சம் இதுவே. ஒழுக்க முறைமைக்கும் அதற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை.

புத்தர் பயன்படுத்திய தம்மம் என்ற சொல்லுக்கும் சடங்குகள் அல்லது மரபுகளுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. யாகங்கள் மதத்தின் சாராம்சம் என்று கூறப்படுவதை அவர் நிராகரித்தார். 'கர்மம்' என்று சொல்லப்படுவதற்கு பதிலாக, ஒழுக்க முறைமையை தம்மத்தின் சாராம்சம் என்று அவர் கூறினார். தம்மம் என்ற சொல்லை பிராமணிய ஆசான்களும் புத்தரும் பயன்படுத்திய போதிலும், இருவரின் கூற்றுக்களின் உள்ளடக்கம் தீவிரமாகவும் அடிப்படை யாகவும் வேறுபட்டதாகும். உண்மையில் ஒழுக்க முறைமையை மதத்தின் சாராம்சம் மற்றும் அடித்தளம் என்று கூறிய உலகின் முதலாவது போதனையாளர் புத்தரே ஆவார். பகவத் கீதையிலிருந்து நாம் காண்கிறபடி, கிருஷ்ணரும்கூட மதம் சட்டங்களுக்கும் மரபுகளுக்கும் சமமானது என்ற பழைய கண்ணோட்டத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முடியவில்லை. நிஷ்காமிய கர்மம் அல்லது அனாசக்தியோகம் என்று பகவத் கீதையில் கிருஷ்ணரால் போதிக்கப்பட்ட கோட்பாட்டினால் பலர் ஈர்க்கப்பட்டதாகத் தோன்றுகிறது. காரணம் இயக்க உணர்வில் இதன் பொருள் வெகுமதி எதிர் பாராமல் நல்லது செய்வது என்பதாகும். நிஷ்காமிய கர்மம் என்பதன் இந்த வியாக்கியானம், மெய்யாக அதன் பொருளினின்றும் முற்றிலும் தவறான கருத்தாகும். நிஷ்காமியகர்மம் என்பதில் கர்மம் என்பதன் பொருள், அந்த சொல்லின் இனம் சார்ந்த பொருளில் 'செயல்' அல்ல. அது, பிராமணர்களாலும், ஜெமினியாலும் அதனுடைய மூல அர்த்தத்தில் உபயோகப் படுத்தப்படுகிறது. மரபுகள் என்ற அம்சத்தில், ஜெமினிக்கும் பகவத் கீதைக்கும் இடையில் ஒரே ஒரு வேறுபாட்டு அம்சம் மட்டுமே உண்டு. பிராமணர்களால் புரியப் பட்ட மரபு இரண்டு வகைப்பட்டதாகும்.

(i) நித்திய கர்மங்கள் மற்றும் 

(ii) நைமித்திக கர்மங்கள்

நித்தியகர்மங்கள் எனப்படுபவை, முறையாக அன்றாடம் ஆற்றப்பட வேண்டிய செயல்பாடுகள் ஆகும். இந்தக் காரணங்களினால் அவை நித்திய என்று அழைக்கப்படுகின்றன. மதம் சார்ந்த கடமையாகவும் இவை கருதப்படுகின்றன. இதற்கு எந்த வெகுமதியும் எதிர்பார்க்கப்படக் கூடாது. அந்தக் காரணத்தினாலேயே அவை நிஷ்காமிய கர்மங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. கர்மங்களின் மற்றொரு இனம் நைமிதிகம் என்று அழைக்கப்படுகிறது. அதாவது, சந்தர்ப்பம் ஏற்படும்போது புரியப்படுவதாகும். மற்றும் காம்யகர்மங்கள் என்று அவை அழைக்கப்படுகின்றன. ஏனெனில் அவை புரியப்படுவதின்று சில அனுகூலம் ஏற்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. கிருஷ்ணர், பகவத் கீதையில் காம்யகர்மங்களைக் கண்டனம் செய்தார். நிஷ்காம்ய கர்மங்களை அவர் கண்டனம் செய்யவில்லை. அதற்கு மாறாக அவற்றை அவர் பாராட்டினார். இங்கு மனதில் கொள்ளவேண்டிய அம்சம் என்னவெனில், கிருஷ்ணருக்கும்கூட மதம் ஒழுக்க முறைமையைக் கொண்டதாகப் படவில்லை. அவை நிஷ்காமி கர்மங்கள் வகையைச் சேர்ந்தவையாக இருந்தபோதிலும் யாகங்களைக் கொண்டிருந்தன.

இந்து மதத்திற்கும் புத்த மதத்திற்கும் இடையில் இது ஒரு வேறுபாட்டு அம்சமாகும். இரண்டாவது வேறுபாட்டு அம்சம் என்ன வெனில், இந்து மதத்தின் அதிகாரபூர்வமான கோட்பாடு அசமத் துவமாகும். சதுர்வர்ணம் (நான்கு இனங்கள்) என்ற தத்துவமானது இந்த அசமத்துவக் கோட்பாட்டின் ஸ்தூலமான உருவகமாகும். ஆனால் மறுபுறத்தில் புத்தர் சமத்துவத்திற்காக நின்றார். அவர் சதுர்வர்ணத்தின் மிகப்பெரும் எதிரியாக இருந்தார். அதற்கு எதிராக அவர் போதனை செய்தார் என்பது மட்டுமன்றி, அதற்கு எதிராகப் போராடவும் செய்தார். அதோடு மட்டுமன்றி, அதை வேரோடு களைவதற்கு மிகவும் பாடுபட்டார். இந்து மதத்தின் கோட்பாடு களின்படி ஒரு சூத்திரனோ அல்லது ஒரு பெண்ணோ ஒரு மத் போதனையாளராக முடியாது. மேலும், அவர்கள் சந்நியாசம் பெறவோ, கடவுளை அடையவோ முடியாது. ஆனால் அதற்கு மாறாக புத்தர், சூத்திரர்களை பிட்சுக்களின் சங்கத்தில் அனுமதித்தார். பெண்களையும் பிட்சுணிகள் ஆவதற்கு அனுமதித்தார்.

அவர் ஏன் அவ்வாறு செய்தார்? இந்த நடவடிக்கையின் முக்கியத்துவத்தைப் பலரால் புரிந்து கொள்ள முடியவில்லை. இதற்குரிய பதில் என்ன வெனில், அசமத்துவக் கேட்பாட்டை ஒழிப்பதற்கு அவர் உருப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்கு விரும்பினார். புத்தர் நடத்திய தாக்குதல்களின் விளைவாக, இந்து மதம் தனது கோட்பாடுகளில் பல மாற்றங்களைச் செய்ய வேண்டியேற்பட்டது. அது இம்சையைக் கைவிட்டது வேதங்கள் தவறு செய்யப்படாதவை என்ற கோட்பாட்டைக் கைவிடவும் தயாராயிருந்தது. சதுர்வர்ணங்கள் என்ற கோட்பாட்டிற்குத் தனது எதிர்ப்பை விட்டுக் கொடுப்பதற்கு புத்தர் தயாராயில்லை. அதனால்தான், பிராமணீயமானது ஜைன மதத்திற்குக் காட்டிய எதிர்ப்பைக் காட்டிலும் புத்த மதத்திற்கு எதிராக மிகவும் கூடுதலான வெறுப்பையும் பகைமையையும் காட்டியது. சதுர்வர்ணத்திற்கு எதிரான புத்தரது வாதங்களின் வலுவை இந்து மதம் அங்கீகரிக்க வேண்டியதாயிற்று. ஆனால் அதனுடைய தர்க்க நியாயத்திற்கு இணங்குவதற்கு மாறாக, இந்து மதமானது சதுர் வர்ணத்திற்கு ஓர் புதிய தத்துவார்த்த நியாயத்தை அது வளர்த்தது. இந்தப் புதிய தத்துவார்த்த நியாயத்தை பகவத் கீதையில் காணலாம். பகவத் கீதை என்ன போதிக்கிறது என்பதை யாரும் திட்டவட்டமாகச் சொல்ல முடிவதில்லை.

பகவத் கீதை இதை எவ்வாறு நியாயப்படுத்துகிறது? கிருஷ்ணர் கடவுள் என்ற முறையில்தான் (அவர்) சதுர்வர்ண முறையை (அமைப்பை) உருவாக்கியதாகவும், குணம் கர்மம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் அதை உருவாக்கியதாகவும் கூறுகிறார். அதாவது ஒருவருடைய உள்ளார்ந்த குணங்களுக்கு (அல்லது பண்புளுக்கு) ஏற்ப ஒவ்வொருவரின் தகுதியையும், தொழிலையும் அவர் நிர்ணயிக்கிறார் என்பது இதன் பொருள். இதிலிருந்து இரண்டு விஷயங்கள் தெளிவாகின்றன ஒன்று, இந்தத் தத்துவம் புதிது. பழைய தத்துவம் வேறாக இருந்தது. பழைய தத்துவத்தின்படி. சதுர்வர்ணத்தின் அஸ்திவாரமானது வேதங்களின் ஆணையின் பேரில் இடப் பட்டதாகும். வேதங்கள் பிழையற்றவையாதலால், அதன் மீது சார்ந்துள்ள சதுர்வர்ண அமைப்பும் பிழையற்றதாகும். வேதங்களின் பிழையற்ற தன்மை என்பதை புத்தர் தாக்கியதோடு, சதுர்வர்ணத்தின் இந்தப் பழைய அடித்தளத்தின் செல்லுபடியாகும் தன்மையையும் ஒழித்துக் கட்டிவிட்டது. இந்து மதம் சதுர்வர்ணத்தைக் கைவிடுவ தற்குத் தயாராயில்லை; அதைத் தனது ஆன்மா என்று கருதியது. எனவே அதற்கு ஒரு மேம்பட்ட அடித்தளத்தைக் காண்பதற்கு முயன்றது மிகவும் இயற்கையானதே. இதை செய்வதற்கு பகவத் கீதை முன்வருகிறது. ஆனால் பகவத் கீதையில் கிருஷ்ணர் வழங்கியுள்ள இந்தப் புதிய அடித்தளம் (நியாயம்) எவ்வகையில் நல்லது? பெரும்பாலான இந்துக்களுக்கு இது மிகவும் நம்பிக்கை ஏற்படுத்துவதாகத் தோன்றுகிறது. இது மறுக்கப்பட முடியாதது என்று கருதும் அளவிற்கு நம்பிக்கை ஏற்படுத்துகிறது. இந்துக்களல்லாத பலருக்கும் கூட இது மிகவும் சாத்தியப்பாடு உடையதாகவும், கவர்ந்திழுப்பதாகவும் தோன்றுகிறது.

சதுர்வர்ணமானது வேதங்களின் அதிகார ஆணையின் மீது மட்டுமே சார்ந்திருந்திருந்தால், நீண்ட காலத்திற்கு முன்பே அது மறைந்து போயிருக்கும் என்று நான் நிச்சயமாகக் கருதுகிறேன். பகவத் கீதையின் விஷமத்தனமான மற்றும் பொய்யான கோட்பாடுதான். சாதி அமைப்பின் பெற்றோராகிய சதுர்வர்ணத்திற்கு நிரந்தரமான, நிலையான வாழ்வை அளித்திருப்பதாகத் தோன்றுகிறது. இந்தப் புதிய கோட்பாட்டின் அடிப்படையான கருத்தமைவு சாங்கியத் தத்துவத்திலிருந்து பெறப்பட்டுள்ளது. இதில் மூல அம்சம் எதுவும் இல்லை. சதுர்வர்ணத்தை நியாயப்படுத்துவதற்கு அதைப் பயன்படுத்துவதில்தான் கிருஷ்ணருடைய மூலத்தன்மை (originality) அடங்கியுள்ளது. அதனுடைய பிரயோகத்தில் தான் அதனுடைய போலித்தன்மை அடங்கியுள்ளது. சாங்கிய முறையின் மூலவராகிய கபிலர், கடவுள் என்று ஒருவர் கிடையாது என்று கூறினார். பருப்பொருள் (matter) உயிரற்றதாகக் கருதப்பட்டதால் தான் கடவுள் தேவைப்பட்டது; ஆனால், பருப்பொருள் உயிரற்றதல்ல, அது செயலூக்கமாக இருக்கிறது; பருப்பொருள் மூன்று குணங்களைக் கொண்டுள்ளது. ராஜ், தமஸ் மற்றும் சத்வம் என்ற இந்த மூன்று குணங்களும் சரிசமநிலையில் இருப்பதால்தான் பிரகிருதி இறந்துபட்டுள்ளதாகத் தோன்றுகிறது. ஒரு குணம், மற்ற இரண்டு குணங்களை விடவும் மேலோங்கும் நிலைமை ஏற்பட்டு சமநிலைமை பாதிக்கப்பட்டால், பிரகிருதி செயலூக்கம் பெறுகிறது. சாங்கியதத்துவத்தின் சாராம்சம் இதுவே. இந்தக் கோட்பாட்டோடு எவ்வித சர்ச்சையும் இருக்க முடியாது. ஒருவேளை இது உண்மையாகவும் இருக்கலாம். எனவே, ஒவ்வொரு தனிநபரும்- பிரகிருதியின் ஒரு வடிவம் என்ற வகையில் மூன்று குணங்களைக் கொண்டவர் என்பதை ஒப்புக்கொள்ளலாம்.

இந்த மூன்று குணங்களில் ஒன்று மற்றொன்றின் மீது ஆதிக்கம் செலுத்துவதற்குப் போட்டியிருக்கிறது என்பதையும் கூட ஒப்புக்கொள்ளலாம். ஆனால், ஒரு குறிப்பிட்ட நபரிடமுள்ள ஒரு குறிப்பிட்ட -அது ஒரு சமயத்தில் உதாரணமாக அவருடைய பிறப்பின்போது - அவருடைய இதர குணங்களின்மீது ஆதிக்கம் செலுத்தும் நிலைமையிருந்தால், எல்லாக் காலத்திலும் - அவருடைய மரணம் வரையிலும் அவ்வாறே தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் என்று எவ்வாறு ஒப்புக்கொள்ள முடியும்? சாங்கிய தத்துவத்திலோ அல்லது நடைமுறை அனுபவத்திலோ இந்த அனுமானத்திற்கு ஆதாரமேயில்லை. துரதிருஷ்டவசமாக கிருஷ்ணர் இந்தத் தத்துவத்தை முன்வைத்தபோது ஹிட்லரோ, முசோலினியோ பிறக்கவில்லை. ஒரு விளம்பர போர்டு எழுதும் ஓவியரும் செங்கற்களை அடுக்கி வைத்து வீடு கட்டும் தொழிலாளியும், உலகத்தின் மீது ஆதிக்கம் செலுத்தவல்ல சர்வாதிகாரிகளாக முடிந்தது என்பதை விளக்குவதற்கு கிருஷ்ணர் பெருமளவு சிரமப்பட்டிருப்பார்.

விஷயம் என்னவெனில், ஒரு தனிநபரின் பிரகிருதி எப்போதும் மாற்றமடைந்து கொண்டுவரும், ஏனெனில் குணங்களின் பரஸ்பர நிலை எப்போதும் மாற்றமடைந்து கொண்டிருக்கிறது. குணங்கள் அவற்றின் பரஸ்பர ஆதிக்க நிலையில் எப்போதும் மாற்றமடைந்து வருகிறதெனில், மக்களை வர்ணங்களில் நிரந்தரமான மற்றும் நிலையான பாகுபாடு செய்யும் முறை இருக்க முடியாது, அதுபோன்றே நிரந்தரமான, நிலையான வேலைகளை ஒதுக்கீடும் இருக்க முடியாது. எனவே, பகவத் கீதையின் தத்துவம் முழுமையும் நொறுங்கி வீழ்கிறது. ஆனால், நான் கூறியது போன்று, இந்துக்கள் அதனுடைய நம்புதற்குரிய தன்மையினாலும் ''நல்ல தோற்றத்தினாலும்'' ஈர்க்கப்பட்டு, அதற்கு அடிமைகளாகி விட்டனர். இதன் விளைவாக இந்து மதம், சமூக அசமத்துவத்தை வேதவாக்காகக் கொண்ட வர்ணப் பாகுபாடு முறையைத் தொடர்ந்து உயர்த்திப் பிடித்து வருகிறது. இவை இந்து மதத்தின் இரண்டு தீமைகளாகும். இந்தத் தீமைகள் புத்த மதத்தில் இல்லை.

III

புத்தமதக் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டால் மட்டுமே இந்துக்களைக் காப்பாற்ற முடியும் என்று நம்புகின்ற சிலர், துயரத்தில் ஆழ்த்துள்ளனர். ஏனெனில், இந்தியாவில் புத்த மதம் திரும்பவும் வந்து சேரும், அல்லது புத்துயிர் பெறும் என்பதில் அவர்களுக்கு அவ்வளவாக நம்பிக்கை இல்லை. இந்த நம்பிக்கையின்மையை நான் பகிர்ந்து கொள்ளவில்லை.

இந்துக்கள், அவர்களது மதம் சம்பந்தமான அவர்களுடைய கண்ணோட்டத்தில், இன்று இரு பிரிவினராக உள்ளனர். ஒரு பிரிவினர், 'எல்லா மதங்களும் இந்து மதம் உள்ளிட்டு - உண்மையானவையே என்று கருதுகின்றனர். பிற மதங்களின் தலைவர்களும், இந்தக் கோஷத்தில் அவர்களுடன் ஒன்றுபட்டு நிற்பதாகத் தோன்றுகிறது. எல்லா மதங்களும் உண்மையானவை என்று கூறும் ஆய்வுரையைவிடக் கூடுதல் பொய்யான ஆய்வுரை இருக்க முடியாது. ஆயினும், இந்த கோஷத்தை எழுப்பியுள்ள இந்துக்களுக்கு பிற மதங்களைக் கடைப்படிப்பவர்களின் ஆதரவும் இருக்கிறது. தமது மதத்தில் ஏதோ கோளாறு இருக்கிறது என்று கருதும் நிலைக்கு சில இந்துக்கள் வந்துள்ளனர். ஆனால் அதை பகிரங்கமாகக் கண்டனம் செய்யும் நிலைக்கு அவர்கள் தயாராக இல்லை. இந்தக் கண்ணோட்டம் புரிந்து கொள்ளத்தக்கதே. மதம் ஒருவருடைய சமூக மரபின் ஒரு பாகமாகும். ஒருவருடைய வாழ்க்கையும் மதிப்பும் பெருமிதமும் அதனுடன் இணைந்துள்ளன.

ஒருவர் தனது மதத்தைக் கைவிடுவது எளிதானதல்ல. "எனது நாடு'' சரியோ, தவறோ- என்பதில் தேசபக்தி வருகிறது. அது போன்றே "எனது மதம்" சரியோ தவறோ - என்று கூறப்படுகிறது. அதைக் கைவிடுவதற்கு பதிலாக இந்துக்கள் வேறுவழிகளில் தப்பிக்கும் மார்க்கம் தேடுகின்றனர். எல்லா மதங்களிலும் தவறு உள்ளது; எனவே ஏன் மதத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டும் என்று சிலர் தங்களைத் தாங்களே தேற்றிக் கொள்கின்றனர். அதே தேசபக்தி உணர்வு, அவர்களை வெளிப்படையாக புத்த மதத்தைத் தழுவுவதைத் தடுக்கிறது. இத்தகைய கண்ணோட்டம் ஒரே ஒரு விளைவைத்தான் ஏற்படுத்த முடியும். இந்துமதம் மறைந்து, வாழ்க்கையை முறைப்படுத்தும் ஒரு சக்தியாக இல்லாமற் போய் விடும்; வெற்றிடம் ஏற்படும்; அதன் பலனாக இந்து சமுதாயம் சீரழியும் விளைவை ஏற்படுத்தும். அப்பொழுது இந்துக்கள் ஒரு கூடுதல் ஆக்கப்பூர்வமான கண்ணோட்டத்தை மேற்கொள்ளும்படி நிர்பந்திக்கப்படுவார்கள். அவர்கள் அவ்வாறு செய்யும்போது, புத்த மதத்தைத் தவிற வேறெங்கும் அவர்கள் போக முடியாது. இது மட்டுமே நம்பிக்கை ஏற்படுத்தும் ஒரு கதிர் அல்ல. பிற வட்டாரங்களிலிருந்தும் நம்பிக்கைகள் வருகின்றன.

ஒவ்வொரு மதமும் பதில் சொல்ல வேண்டிய ஒரு கேள்வி இருக்கிறது. ஒடுக்கப்பட்ட, அடிமட்டத்திலுள்ள மக்களுக்கு என்ன மனரீதியான மற்றும் ஒழுக்க ரீதியான நிவாரணத்தை (நிம்மதியை) அது அளிக்கிறது? அவ்வாறு அளிக்காவிட்டால் அது அழிவது உறுதி. கோடிக்கணக்கான பிற்படுத்தப்பட்ட வர்க்கங்களுக்கும் ஷெட்யூல்டு சாதியினர்களுக்கும் இந்து மதம் ஏதாவது மன ரீதியான மற்றும் ஒழுக்க ரீதியான நிம்மதியைக் கொடுக்கிறதா? அது கொடுப்பதில்லை.

மன மற்றும் ஒழுக்க ரீதியான நிம்மதியைக் கொடுக்கப் போவதாக எந்த வாக்குறுதியும் (நம்பிக்கையும்) அவர்களுக்குக் கொடுக்காத நிலையில் இந்தப் பிற்படுத்தப்பட்ட வர்க்கங்களும் ஷெட்யூல்ட் சாதியினரும் இந்து மதத்தின் கீழ் வாழவேண்டு மென்று இத்துக்கள் எதிர்பார்க்கிறார்களா? அத்தகைய எதிர்பார்ப்பு முற்றிலும் பயனற்றதாகும். இந்து மதம் ஓர் எரிமலையின் உச்சியில் மிதந்து கொண்டிருக்கிறது. இன்று அது இல்லாதது போல் தோற்ற மளிக்கிறது. ஆனால் அது உண்மையல்ல. இந்த வலிமை மிக்க கோடிக்கணக்கான மக்கள் தங்களுடைய இழிநிலையை உணர்ந்து இது பெரும்பாலும் இந்து மதத்தின் சமூகத் தத்துவவியலின் காரணமாகவே ஏற்படுகிறது என்பதை அறியும்போது அது பொங்கி எழும். ரோம சாம்ராஜ்யத்தில் 'பாகனிசத்தை' (பல தெய்வ வழிபாட்டை) கிறிஸ்துவ மதம் தூக்கியெறிந்தது நினைவுக்கு வருகிறது. பாகனிசம் தங்களுக்கு எவ்வித மனநிம்மதியையும், ஒழுக்க நிம்மதியையும் தர இயலாது என்பதை மக்கள் திரள் உணர்ந்த போது, அவர்கள் அதைக் கைவிட்டு, கிறிஸ்துவ மதத்தைத் தழுவினர். ரோமாபுரியில் ஏற்பட்டது இந்தியாவிலும் ஏற்படுவது நிச்சயம். இந்து மக்கள் திரள், அறிவு ஞானம் பெறும்போது புத்த மதத்தின்பால் நிச்சயம் திரும்புவார்கள். 

IV

இந்து மதத்திற்கும் புத்த மதத்திற்கும் இடையிலுள்ள வேறுபாட்டைப் பற்றி இதுவரை ஒப்பிட்டுக் கூறினேன். இனி இந்து மதமல்லாத பிற மதங்களுக்கும் புத்த மதத்திற்கும் இடையிலான வேறுபாடு என்ன? இந்து மதமல்லாத இந்த பிற மதங்கள் ஒவ்வொன்றையும் புத்த மதத்தோடு விரிவாக ஒப்பிட்டுக் கூறுவது அசாத்தியம். என்னுடைய முடிவுகளை ஒரு சுருக்கமான கருத்துரையாக எடுத்துக் கூறுவது மட்டுமே என்னால் செய்ய முடியும். எனவே நான் கூறுவதென்னவெனில்,

(i) சமுதாயம், ஒன்றாக இருப்பதற்கு அதற்கு சட்ட உத்தரவாதம் அல்லது ஒழுக்க நியதியின் உத்தரவாதம் இருக்க வேண்டும். இந்த இரண்டில் எதுவும் இல்லாவிட்டால். சமுதாயம் நிச்சயமாக சிதறுண்டு போகும்.

எல்லா சமுதாயங்களிலும் சட்டம் ஒரு மிகச் சிறிய பங்கையே ஆற்றுகிறது. அது, சிறுபான்மையோரை சமூகக் கட்டுப்பாடு வீச்சினுள் இருத்தி வைத்துக்கொள்வதை நோக்கமாகக் கொண்ட தாகும். பெரும்பான்மைப் பகுதியானது தனது சமூக வாழ்க்கையை ஒழுக்க நியதியின் கோட்பாடுகள் மற்றும் அனுமதியினால் நிலை நிறுத்தி வைத்துக் கொள்வதற்கு விட்டுவிடப்படுகிறது; அவ்வாறு விட்டுவிடப்பட வேண்டியுள்ளது. எனவே, மதமானது, ஒழுக்க நியதி என்ற பொருளில் ஒவ்வொரு சமுதாயத்திலும் ஆட்சி செய்யும் கோட்பாடாக இருக்க வேண்டும்.

(ii) முதலாவதாகக் கூறப்பட்டதில் விளக்கப்பட்டபடி மதமானது விஞ்ஞானத்திற்கு இசைவானதாக இருக்க வேண்டும். எனவே மதம், விஞ்ஞானத்திற்கு இசைவான தாக இல்லாவிட்டால், அது நிச்சயம் தனது மரியாதையை இழந்துவிடும். எனவே அது ஏௗனத்திற்குரியதாகிவிடும். அதன் மூலம் அது, வாழ்க்கையை நிர்வகிக்கும் ஒரு கோட்பாடு என்ற தனது சக்தியை இழக்கிறது: காலப் போக்கில் அது சீரழித்து, மறைந்துவிடும். வேறு சொற்களில் கூறுவதெனில், மதம், அது தொடர்ந்து செயல்பட வேண்டுமென்றால், பகுத்தறிவிற்கு இசைவானதாக அதாவது விஞ்ஞானத்திற்கு இசைவானதாக இருக்க வேண்டும்.

(iii) மதமானது சமூக ஒழுக்கத்தின் ஒரு சட்டமென்ற வகையில் மற்றொரு சோதனையிலும் தேறவேண்டும். மதமானது ஓர் ஒழுக்க சட்டத்தைக் கொண்டிருப்பது மட்டும் போதாது; அதனுடைய ஒழுக்க சட்டமும் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய அடிப்படையான நியதிகளையும் அங்கீகரிக்க வேண்டும். ஒரு மதமானது. சமூகவாழ்க்கையின் இந்த மூன்று அடிப்படையான கோட்பாடுகளை அங்கீகரித்தாலன்றி மதம் அஸ்தமனமாகிவிடும்.

(iv) மதமானது வறுமையை புனிதப்படுத்தவோ அல்லது மேம்படுத்தவோ கூடாது. செல்வம் படைத்தவர்கள் அதைக் கைவிடுவது ஒரு மகிழ்ச்சியடையத்தக்க நிலையாக இருக்கலாம். ஆனால் வறுமை ஒருபோதும் அப்படியிருக்க முடியாது. வறுமையை மகிழ்ச்சியடையத்தக்க ஒரு நிலையாக அறிவிப்பது மதத்தைத் தவறான பாதையில் செல்லச் செய்வதும், தீமையையும், குற்றத்தையும் நீடித் திருக்கச் செய்வதும் பூவுலகத்தை ஒரு வாழும் நரகமாக்கு வதற்கு சம்மதிப்பதுமாகும்.

எந்த மதம் இந்தத் தேவைகளையெல்லாம் பூர்த்தி செய்கிறது? இந்தக் கேள்விகளைப் பரிசீலனை செய்யும்போது. மகாத்மாக்களின் காலம் மலையேறிப் போய்விட்டது என்பதையும் உலகத்திற்கு ஒரு புதிய மதம் தேவையில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். ஏற்கனவே இருப்பவற்றிலிருந்தே அது தேர்வு செய்ய வேண்டும். எனவே இந்தக் கேள்வி தற்போதிலிருந்து வரும் மதங்கள் சம்பத்தப்பட்டதாக மட்டுமே இருக்க வேண்டும்.

ஏற்கனவே இருந்துவரும் மதங்களில் ஒன்று இந்த சோதனைகளில் ஒன்றில் தேறலாம். சில மதங்கள் இரண்டில் தேறலாம். ஆனால், இத்தகைய நல்ல கோட்பாட்டைக் கொண்ட மதம் ஏதாவது இருக்கிறதா? இந்தச் சோதனைகளில் எல்லாம் தேறும் ஒரே மதம் எனக்குத் தெரித்தவரை புத்த மதம்தான். வேறுவிதமாகக் கூறினால் உலகம் பெற்றிருக்க வேண்டிய ஒரே மதம் புத்த மதம்தான். பழைய உலகிலிருந்து பெரிதும் வேறுபட்ட ஒரு புதிய உலகம் உதய மானால் பழைய உலகைவிட அதற்கு ஒரு மதம் அவசியம் தேவை. அப்போது புத்தரின் மதம்தான் இந்தத் தேவையைப் பூர்த்திச் செய்யக்கூடியது.

இவ்விதம் கூறுவது மிகவும் விந்தையாகத் தோன்றக்கூடும்.'அகிம்சையைப் போதித்ததுதான் புத்தர் செய்த ஒரு காரியம் என்று புத்தரைப் பற்றி எழுதியவர்களில் பெரும்பாலோர் குறிப்பிட்டிருப்பதே இதற்குக் காரணம். இது மிகவும் பெரிய தவறாகும்.

புத்தர் அகிம்சையைப் போதித்தார் என்பது உண்மை. இதன் முக்கியத்துவத்தைக் குறைத்துக் கூற தான் விரும்பவில்லை. ஏனென்றால் இது ஒரு மாபெரும் சித்தாந்தமாகும். இந்த சித்தாந்தத்தைப் பின்பற்றினாலொழிய உலகத்தைக் காப்பாற்ற முடியாது. அகிம்சையைத் தவிர வேறு பல விஷயங்களையும் புத்தர் போதித்தார். என்பதை இங்கு வலியுறுத்திக் கூற விரும்புகிறேன். அவர் தமது சமய பிரசாரத்தின் ஒரு பகுதியாக சமூக சுதந்திரம், அறிவுத்துறை சுதந்திரம், அரசியல் சுதந்திரம் முதலியவற்றையும் போதித்தார். அவர் மனிதனுக்கும் மனிதனுக்குமிடையே சமத்துவத்தையும், ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே சமத்துவத்தையும் வலியுறுத்தினார். புத்தருடன் ஒப்பிடக்கூடிய சமயப் பிரசாரகர் எவரையும் காணமுடியாது. அவரது போதனைகள் மக்களது சமூக வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களையும் எடுத்துரைப்பவையாக இருந்தன. அவரது சித்தாந்தங்கள் மிகவும் நவீனமயமானவையாக இருந்தன. மனிதன் இறந்த பிறகு அவனுக்கு சொர்க்கம் கிட்டச் செய்வதாக அவர் உறுதி கூறவில்லை; மாறாக இந்தப் பூவுலக வாழ்க்கையிலேயே அவன் உய்வும் உயர்வும் பெற வழி செய்வதே அவரது போதனையில் அடிப்படை அம்சமாக இருந்தது. 

V

புத்த மதத்தின் இந்த லட்சியத்தை எவ்வாறு நிறைவேற்றுவது? இதற்கு மூன்று நடவடிக்கைகளை மேற்கொள்வது இன்றியமையாததாகத் தோன்றுகிறது. அவை வருமாறு:

முதலாவது : பௌத்த பைபிள் ஒன்றைத் தயாரிக்க வேண்டும்.

இரண்டாவது : பிக்கு சங்கத்தின் அமைப்பிலும், குறிக்கோள்களிலும் நோக்கங்களிலும் மாற்றங்கள் செய்யப் பட வேண்டும்.

மூன்றாவது : ஓர் உலக பௌத்த அமைப்பைத் தோற்றுவிக்க வேண்டும்.

பௌத்த பைபிளைத் தயாரிப்பது முதலாவதும் இன்றியமை யாததுமான தேவையாகும். பௌத்த இலக்கியம் மிகவும் பரத்த விரிந்துபட்ட இலக்கியமாகும். புத்த மதத்தின் சாராம்சத்தைத் தெரிந்து கொள்ள விரும்பும் ஒருவர் ஒரு மாகடலைக் கடந்து செல்வது போன்ற பிரயாசை எடுத்துக் கொள்ள வேண்டும்; இதனைச் செய்வது

சாத்தியமற்றதாகும். புத்த மதத்துக்கு இல்லாத மிகப் பெரிய அனுகூலம் மற்ற மதங்களுக்கு இருக்கிறது; இந்த மதங்கள் ஒவ்வொன்றுக்கும் தனி நூல் இருக்கிறது; எவரும் இதனைத் தம்முடன் எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் சென்று படிக்கலாம். இத்தகைய ஒரு சமய நூல் இலாதது புத்த மதத்தின் மிகப் பெரிய குறைபாடாகும். இந்த பணியைச் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய தம்மபதம் அதனைச் செய்யத் தவறிவிட்டது. ஒவ்வொரு பெரிய மதமும் குறிப்பிட்ட கோட்பாடுகளின் அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. ஆனால் வெறும் கோட்பாடுகள், ஸ்தூலமான தத்துவங்களின் அடிப்படையில் ஒரு மத நம்பிக்கை முன் வைக்கப்படுமானால் அதனை ஜீரணித்துக் கொள்ள முடியாது. கற்பனையைத் தூண்டும் விதத்தில் ஒரு கதையைப் போல் அது எடுத்துரைக்கப்பட வேண்டும். இவ்வகையில் தம்மபதம் ஒரு கதையைப் போல் உருவாக்கப்படவில்லை. ஸ்தூலமான சித்தாந்தங்களின் அடிப்படையில் அது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்திய தம்மபதம் (சமயப்பாதை) ஒரு மதத் தத்துவம் எதிர்பார்க்கப்படும் செயல்பாட்டைச் செய்யத் தவறிவிட்டது. ஒவ்வொரு மகத்தான மதமும் நம்பிக்கையின் அடிப்படையில்தான் கட்டியமைக்கப்பட்டுள்ளது. ஆனால் மத நம்பிக்கையானது, மதக் கோட்பாடுகளாக அல்லது கண்டுணர முடியாத வறட்டுக் கொள்கைகளாக முன்வைக்கப்பட்டால் அவற்றை ஏற்றுக் கொள்ள முடியாமல் தன் வயப்படுத்திக் கொள்ள முடியாமல் இருக்கும். கற்பனை செய்து பார்த்தால் பதியக்கூடிய ஏதாவது ஒன்று - ஏதாவது கட்டுக் கதை. வீரகாவியம் அல்லது நற்செய்தி தேவைப்படுகிறது. பத்திரிகைத் - துறையில் இது ஒரு கதை (புனைவு) என்று அழைக்கப்படுகிறது. தம்ம பதமானது ஒரு கதையைச் சுற்றிப் புனையப்பட்டதல்ல. அது கண்டுணர முடியாத வறட்டுக் கோட்பாடுகளின் மீது நம்பிக்கை யைக் கட்டியமைப்பதற்கு முயல்கிறது.

புத்த மதத்தின் பிரேரணை செய்யப்பட்ட சித்தாந்தம் பின்வருவனவற்றைக் கொண்டிருக்க வேண்டும் (i) புத்தரின் ஒரு சுருக்கமான வாழ்க்கை வரலாறு, (ii) சீன தம்மபதம், (iii) புத்தரின் சில முக்கிய உரையாடல்கள் மற்றும், (iv) புத்த சடங்குகள், பிறப்பு, தீட்சை கொடுக்கப்படல் மற்றும் மரணம். இத்தகைய ஒரு சித்தாந்தத்தைத் தயாரிக்கும்போது, அதனுடைய மொழிசார்ந்த பகுதி புறக்கணிசுப்படக் கூடாது. அது உயிரோட்டமான மொழியில் தயாரிக்கப்பட வேண்டும். அது ஒரு மந்திரமாக அமைய வேண்டும் - ஒரு கதையை வாசிப்பதாகவோ அல்லது நன்னெறிகளை விளக்கப் படுத்துவதாகவோ இருக்கக் கூடாது. அதனுடைய பாணி தெளிவானதாக,நெகிழ்ச்சியடையச் செய்வதாக இருக்க வேண்டும். அது ஒரு வசியப்படுத்தும் விளைவை ஏற்படுத்த வேண்டும்.

ஓர் இந்து சந்நியாசிக்கும் ஒரு பௌத்த பிக்குவுக்கும் இடையில் பெரும் வேற்பாடு இருக்கிறது. ஒரு இந்து சந்நியாசி உலகப் பற்றற்றவர். அவர் உலகம் சம்பந்தமாக இறந்து போனவர் ஆவார். ஆனால் ஒரு பிக்குவுக்கு உலகத்தில் செய்ய வேண்டியது நிறைய உள்ளது. இது இவ்வாறிருக்கும்போது, பிக்குகளின் சங்கத்தை எந்த நோக்கத்திற்காக ஏற்படுத்துவதற்கு புத்தர் நினைத்தார். இதில் இவரது என்ற கேள்வி எழுகிறது. பிக்குகளின் ஒரு தனிக் கழகத்தை நிறுவுவதற்கு அவசியம் என்ன? ஒரு நோக்கம் என்னவெனில், புத்த மதத்தின் கோட்பாடுகளில் அடங்கியுள்ள புத்த மதக் கருத்திற்கேற்ப செயல்படும் ஒரு கழகத்தை ஏற்படுத்துவதும், அது சாதாரண மக்களுக்கு ஒரு முன் மாதிரியாக அமைய வேண்டும் என்பதுமேயாகும். புத்த மத லட்சியத்தை நிறைவேற்றுவதற்கு ஒரு சாதாரணம் மனிதனால் சாத்தியமல்ல என்பதை புத்தர் அறிந்திருந்தார். ஆனால் அந்த லட்சியம் என்ன என்பதை சாதாரண மனிதன் தெரிந்திருக்க வேண்டும் என்றும், மற்றும் தனது லட்சியங்களை நிச்சயம் நடைமுறைப்படுத்தும் நபர்களைக் கொண்ட ஒரு கழகத்தை சாதாரண மனிதனின் முன்னால் நிறுவிக்காட்ட வேண்டும் என்றும் அவர் விரும்பினார். அதனால்தான், அவர் பிக்குகள் சங்கத்தை நிறுவினார். அதை வினய விதிகளுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்றும் வகுத்தார். ஆனால் இந்த சங்கத்தை நிறுவுவதற்கு நினைத்தபோது, வேறு நோக்கங்களும் அவருடைய மனதில் இருந்தன. அத்தகைய நோக்கங்களில் ஒன்றும் சாதாரண மக்களுக்கு மெய்யான, மற்றும் நடுநிலை தவறாத வழி காட்டுதலை அளிப்பதற்கு அறிவாளிகளின் அமைப்பு ஒன்றை நிறுவ வேண்டும் என்பதாகும். அதனால்தான், பிக்குகள் சொத்துக்களை உடமையாகக் கொள்ளக் கூடாது என்று அவர் தடை விதித்தார். சுதந்திரமாக சிந்திப்பதற்கும் சுதந்திர சிந்தனையைப் பிரயோகப் படுத்துவதற்கும் மிகப் பெரிய இடையூறுகளில் ஒன்றாக இருப்பது சொத்துடைமையாகும் என்று அவர் கருதினார். பிக்கு சங்கத்தைச் தோற்றுவிப்பதில் புத்தரின் மற்றொரு நோக்கம், மக்களுக்கு சுதந்திரமாக சேவை செய்யக்கூடிய உறுப்பினர்களைக் கொண்ட ஒரு கழகத்தை நிறுவுவதாகும். அதனால்தான் பிக்குகள் திருமணம் செய்து கொள்வதை அவர் விரும்பவில்லை.

V

இன்றைய பிக்கு சங்கம் இந்த லட்சியங்களுக்கு செயல்படுகிறதா?

இதற்கு பதில், உறுதியாக, இல்லையென்பதுதான். அது மக்களுக்கு வழிகாட்டுவதுமில்லை, மக்களுக்கு சேவை செய்வதுமில்லை.

எனவே, பிக்கு சங்கம், அதனுடைய இன்றைய நிலைமையில், புத்த சமயத்தைப் பரப்புவதற்கு எவ்விதப் பயனுமில்லை. முதலாவதாக, அளவிற்கு அதிகமான பிக்குகள் இருக்கின்றனர். இவர்களில் ஒரு மிகப் பெரும்பான்மையோர் வெறும் சாதுக்களும் சந்நியாசிகளுமே ஆவர். இவர்கள் தியானத்திலோ அல்லது சோம்பேறித்தனமாகவோ தமது காலத்தைக் கழிக்கின்றனர் அவர்கள் கற்பதுமில்லை, சேவை புரிவதுமில்லை. கஷ்டப்படும் மனித சமுதாயத்திற்கு சேவை புரியும் எண்ணம் மனதில் தோன்றும் போது, ஒவ்வொருவரும் ராமகிருஷ்ணா சேவை மையத்தைப் பற்றித் தான் நினைக்கின்றனர். புத்த சங்கத்தைப் பற்றி யாரும் நினைப்பதில்லை. சேவையைத் தமது புனிதமான கடமை என்று யார் கருத வேண்டும்? சங்கமா அல்லது சேவை மையமா? இதற்கான பதிலைப் பற்றி எவ்வித ஐயப்பாடும் இருக்க முடியாது. ஆயினும் சங்கம் சோம்பேறிகளின் ஒரு பெரிய படையாக இருக்கிறது. குறைவான எண்ணிக்கை பிக்குகளையே நாம் விரும்புகிறோம், பிக்குகள் உயர் கல்வி கற்றவர்களாக இருக்க வேண்டும். பிக்குகளின் சங்கமானது, கிறிஸ்துவப் பாதிரிமார்களில், குறிப்பாக ஜேசுவிஸ்டுகளின் சில இயல்புகளைச் சுவீகரித்துக் கொள்ள வேண்டும். கிறிஸ்துவ சமயமானது சேவையின் வாயிலாகத் தான், கல்வி மற்றும் மருத்துவ சேவையின் வாயிலாகத்தான் ஆசியாவில் பரவியுள்ளது. இது சாத்தியமானதற்குக் காரணம், கிறிஸ்துவப் பாதிரியார் சமயம் சம்பந்தமான வழிவழியான அறிவைப் பெற்றுள்ளார் என்பது மட்டுமன்றி, கலைகள், விஞ்ஞானம் ஆகியவற்றிலும் அவர் தேர்ச்சி பெற்றுள்ளார். இது மெய்யாகவே. பழங்கால பிக்குகளின் லட்சியமாக இருந்தது. நாளந்தா, தட்சசீல பல்கலைக் கழகங்கள் பிக்குகளினால் நடத்தப்பட்டு, நிர்வகிக்கப்பட்டு வந்தன என்பது நன்கு அறியப்பட்டதே. அவரகள் நன்கு கல்வி கற்ற அறிஞர்களாக இருந்திருக்க வேண்டும் என்பது தெளிவு தமது சமயத்தைப் பிரச்சாரம் செய்வதற்கு சமூக சேவை அத்தியாவசியமானது என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். இன்றைய பிக்குகள் பழைய இலட்சியத்திற்குத் திரும்ப வேண்டும். சங்கம் இன்றுள்ள நிலைமையில் சாதாரண மக்களுக்கு இந்த சேவையை செய்ய முடியாது, எனவே அவர்களால் மக்களைத் தம் பக்கம் ஈர்க்கவும் முடியாது.

சேவை மனப்பான்மையின்றி புத்த சமயம் பரவுவது அரிது. கல்வி போதிக்கப்பட வேண்டியிருப்பதைப் போன்றே சமயமும் பிரச்சாரம் செய்யப்பட வேண்டும். ஆட்களும் பணமும் இல்லாமல் பிரச்சாரத்தை மேற்கொள்ள முடியாது. யார் இவற்றை வழங்க முடியும்? புத்த மதம் ஓர் உயிரோட்டமுள்ள சமயமாக இருக்கும் நாடுகள் மட்டுமே இவற்றை வழங்க முடியும்? என்பது தெளிவு. இந்த நாடுகள்தான், குறைந்தபட்சம் ஆரம்பக் கட்டத்திலாவது ஆட்களையும், பணத்தையும் வழங்க வேண்டும். இந்த நாடுகள் இவற்றை வழங்குமா? இந்த நாடுகளில் பௌத்த சமயத்தைப் பரப்புவதற்கு அவ்வளவு உற்சாகம் இருப்பதாகத் தெரியவில்லை.

மறுபுறத்தில், பெளத்த சமயத்தைப் பரப்புவதற்கு காலம் மிகவும் பக்குவமாக (ஏற்றதாக) இருப்பதாகத் தோன்றுகிறது. மதமானது ஒருவருடைய பாரம்பரியத்தின் பாகமாக இருந்த காலம் ஒன்றுண்டு. ஒரு காலத்தில், ஒரு பையனோ அல்லது பெண்ணோ தனது பெற்றோரின் சொத்துடன் கூடவே பெற்றோரின் சமயத்தையும் வாரிசுரிமையாகப் பெற்று வந்தனர். மதத்தின் தகுதி (மதிப்பு) மற்றும் நற்பண்புகளை ஆய்வு செய்வதென்ற பேச்சுக்கே இடமில்லை. சில சமயங்களில் வாரிசு, பெற்றோர்களால் விட்டுச் செல்லப்பட்ட சொத்தை எடுத்துக் கொள்வதற்குத் தகுதியுள்ளதா (பயனுள்ளதா) என்று கேள்வி கேட்டதுமுண்டு. ஆனால், தமது பெற்றோர்களின் சமயத்தை மேற்கொள்வது பயனுடையதுதானா என்று எந்த வாரிசும் கேள்வி கேட்டதில்லை. ஆனால் காலம் மாறிவிட்டதாகத் தோன்றுகிறது. பல நபர்கள் உலகம் முழுவதிலும் தமது சமயத்தைப் பிதுரார்ஜிதமாகப் பெறுவது சம்பந்தமாக முன்னென்றும் காணாத பலர், விஞ்ஞான ரீதியான விசாரணையின் செல்வாக்கின் பயனாக மதம் தவறானது என்றும், அது கைவிடப்பட வேண்டும் என்றும், துணிவை வெளிப்படுத்தியுள்ளனர். முடிவுக்கு வந்துள்ளனர். வேறு பலர், மார்க்சிய போதனையின் பயனாக, மதம் என்பது அபினி என்றும், அது ஏழை மக்களை பணக்காரர்களின் ஆதிக்கத்திற்குக் கட்டுப்படும்படித் தூண்டுகிறது என்றும், எனவே அது கைவிடப்பட வேண்டுமென்றும் முடிவுக்கு வந்துள்ளனர்.

காரணங்கள் எவையாக இருந்த போதிலும், மதம் சம்பந்தமாக, விசாரணை செய்யும் மனதை மக்கள் வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது மெய்யாகும். இந்த விஷயம் பற்றி சிந்திக்கும் துணிவு பெற்றுள்ளவர்களின் மனதில், மதம் அவசியம் தானா, அப்படியெனில் எந்த மதத்தைக் கடைப்பிடிப்பது நல்லது என்ற கேள்விகள் மேலோங்கியிருக்கின்றன. திட சித்தம் தேவைப் படும் காலம் வந்துவிட்டது. புத்த சமயத்தைத் தழுவியுள்ள நாடுகள், புத்த சமயத்தைப் பரப்புவதற்கான மன உறுதியை வளர்த்துக் கொள்வார்களானால் புத்த சமயத்தைப் பரப்பும் பணி கடினமாக இருக்காது. ஒரு பௌத்தரின் கடமை ஒரு நல்ல பௌத்தராக இருப்பது மட்டுமன்றி, பௌத்தத்தைப் பரப்புவதும் அவரது கடமையாகும். பௌத்தத்தைப் பரப்புவது மனித குலத்திற்கு சேவை செய்வதாகும் என்பதை அவர்கள் உணர வேண்டும்.

- டாக்டர் அம்பேத்கர்

தொகுப்பு: பேரா. எ. பாவலன்

Pin It