2009 ல் வெளிவந்த 170 தமிழ்த் திரைப்படங்களில் பேராண்மை, பசங்க, வெண்ணிலா கபடிக் குழு ஆகிய மூன்றையும் ஒரே நிலையிலான சிறந்த படங்களாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் தேர்ந்தெடுத்துள்ளது. இதன் படைப்பாளிகளான எஸ்.பி ஜனநாதன், பாண்டிராஜ், சுசீந்திரன் இளைய வயதைச் சார்ந்தவர்கள்.

இவர்கள் கதைக்கு நியாயம் செய்தவர்கள்; கதை இல்லாமல் ஹீரோவிற்காக அஷ்டாவதானம் செய்ய பிரியப்படாதவர்கள். கதையைப் புறக்கணித்து ஹீரோவின் பின்னால் சென்ற இயக்குநர்களை, தயாரிப்பாளர்களை ஏன் ஹீரோக்களையே இன்று தேட வேண்டி உள்ளது.

த.மு.எ.க.ச விருதுக்குரிய படங்கள் மக்களால் கொண்டாடப்பட்ட புதிய முயற்சிகள்; வியாபார ரீதியாகவும் கலைரீதியாகவும் வெற்றி பெற்ற முயற்சிகள்.ஸீணீtவீஸ்வீtஹ் எனச் சொல்லப்படுகின்ற மண் சார்ந்த மக்கள் சார்ந்த படங்கள்.

எளிய, மத்தியத்தர, ஒடுக்கப்பட்ட மனிதர்களே கதாநாயகர்களாக இதில் சித்திரிக்கப்பட்டுள்ளனர்.பொதுப்புத்தியில் உறையாத, கவனம் பெறாத இம்மனிதர்கள் மீது சமூகத்தின் அன்பை, நேசத்தை, கனிவைக் கோரும் படங்கள் இவை.

உலகப்படங்கள் என்பது சொந்த மண்ணைப் பார்க்க மறுப்பது அல்ல. தமிழகத்தின் பலதரப்பட்ட, வர்க்க முரண்பட்ட மக்களை வேரோடும் வேரடி மண்ணோடும் சித்திரிப்பதே உலகப்படமாக பரிமாணம் பெறும். ஈரான் மஜீத் மஜீதின் படங்கள் இதற்கான பெரும் அடையாளம்.

நமது ‘பேராண்மை’ நார்வே படவிழாவில் பாராட்டப் பட்டது. பசங்க சீனப்படவிழாவில் பாராட்டப் பட்டுள்ளது. பல உலகப்படவிழாவில் அங்காடித்தெரு பங்கேற்றுள்ளது. ரஹ்மான் 2 ஆஸ்கர் விருது வென்றதும் மும்பையின் கவனிக்கப்படாத அடித்தட்டு மக்கள் பற்றிய கதை சார்ந்த இசைக்கே கிடைத்தது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்தப் புதிய அலையை வசந்தகீற்றுகளை தமிழ்மக்கள் வரவேற்றுள்ளார்கள்; வரவேற்பார்கள்.இந்தப் பாதையில் நம் இயக்குநர்கள் தொடர்ந்து முன்னேறவேண்டும்.முரண்பட்ட, பிளவுபட்ட சமூகத்தின் எளிய மக்களுக்கான கலைத்தேடலை ரசனைத்தேடலை பூர்த்தி செய்கிறவர்களாக நம் திரைப்படைப்பாளிகள் முன்னேற வேண்டும்.

யாருக்காகப் படம் எடுக்கிறோம் என்பது முக்கியமானது. எல்லோருக்கும் மொத்தமாக படம் காட்ட முடியாது; அவ்வாறு காட்டப்படும் படங்கள் மக்கள் பண்பாட்டுக்கு விரோதமான ‘எந்திரன்’ பாணி படங்களாகவே அமைகின்றன.
Pin It