கீற்றில் தேட...

தெரு முட்டும் இடத்தில் இருக்கும் டீக் கடையை நோக்கியதுமே அங்கு நிற்பது கோகுல் நாயுடுதான் என்பது துல்லியமாகத் தெரிந்து போனது.

"சித்திரை மாசமில்ல, அதான்..." என்றான் ராமசாமி.

"அதுக்கின்னும் பத்துப் பன்னெண்டு நாள் கிடக்கே...?" என்றேன் நான்.

"ஆனாலும் மாசம் பொறந்தா கூட்டமும் கொண்டாட்டமும் ஆரம்பிச்சிடுமில்லே...இந்த சமயத்துலே நாலு காசு பார்த்தாத்தானே ஆச்சு...? அட்வான்சாப் புறப்பட்டு வந்திட்டாரு போலிருக்கு..."

டீக் கடையை நோக்கி நடந்தேன் நான்.

பராக்குப் பார்த்துக்கொண்டே டீ குடித்துக் கொண்டிருந்தார் நாயுடு. எத்தனை தூரத்திலிருந்தாலும் அடையாளம் காட்டுவது அவரது மீசை. கொடுவாள் போன்று படர நீண்டு, பின் வளைந்து, இரு காதுப்புறமுள்ள கிருதாவோடு போய் அனாயாசமாய் சேர்ந்து நிற்கும். சற்றே கவனமின்றி சாதாரணமாய் நோக்கினோமெனின், மீசையும் கிருதாவும் இணைந்தே வளர்ந்திருக்கிறதோ என்று தோன்றும். மூக்குக்கும், உதட்டுக்குமான இடைவெளி சற்று அதிகம். அதை மறைப்பதற்கும், அதனால் குறையும் பர்சனாலிட்டியை சமன் செய்வதற்கும் இப்படி வளர்த்திருந்தார் மீசையை.

அறுப்பாரின்றி, மேய்ச்சல் இல்லாமல் தன்னிச்சiயாய் வளர்ந்து கிடக்கும் செழுமையான அருகம்புல் போல அங்கங்கே கம்பி கம்பியாய்ச் சுருண்டு கொண்டு கருகருவென்று மண்டிக் கிடக்கும். "நம்ம மீசை நாயுடு இருக்காரே..." என்றுதான் ஆரம்பிப்பார்கள் எல்லோரும். இரண்டு விதத்திலான அவரது தொழிலுக்கு வேறு காலகட்டங்களில் அது ரொம்பவும் உபயோகப்பட்டுப்போனது என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்தத் தொழிலுக்கான வேஷம் இதுதான் என்று நினைத்து வளர்த்தாரா அல்லது காலப்போக்கில் அவருக்கு இதுவே உருவ ஆகு பொருளாக நிலைத்துவிட்டதா என்று தெரியவில்லை. இரண்டுக்கும் எப்படியோ பொருந்தி வந்து அதுவே தொடர்ந்து வருகிறது. நாயுடுவின் குலத்தொழில் வளையல் வியாபாரம். சிறு பிராயத்தில் சரஸ்வதி கடாக்கூஷம் சுத்தமாய் கிடைக்காமல் போக "கழுதை கிடக்கு விட்டுத்தள்ளு...இந்தா பிடி இந்த ஜதையை......" என்று இவர் கையில் வளையல் தொட்டிலை சரம்சரமாய் மாட்டி விட்டார் நாயுடுவின் தந்தை.

"நட பின்னாடி..." என்றார். அன்று பாதம் பின் பற்றியவர்தான். இன்று வரையும் தொடரத்தான் செய்கிறது. அண்டை அசலில் பூச்சூடல், வளைகாப்பு சீமந்தம், கோயில் விழாக்கள் என்று வியாபாரம் ஆரம்பித்து, பக்கத்து ஊர் கோயில் திருவிழா, சந்தை என்று படிப்படியாக நீள ஆரம்பித்தது. படிப்பில் உதவாக்கரை என்று பெயரெடுத்த நாயுடு அதற்கு நேர் மாறாக ரொம்பவும் புத்திசாலித்தனமாக வியாபாரத்தில் ஜெயித்து நின்றபோது அவரது தந்தை ரொம்பவும்தான் பெருமைப்பட்டுப் போனார்.

தனக்கு இல்லாத சாமர்த்தியமும், ஆட்களை (பெண்டுகளை) வளைத்துப் போடும் வாய்ச் சாதுர்யமும், தன் பையனிடம் இருப்பதை அறுதியிட்டு உணரத்தான் செய்தார். ஆரம்பத்தில் இப்படியெல்லாம் பேசக்கூடாது, நடந்து கொள்ளக்கூடாது என்றும் குலத் தொழிலை வளர்ப்பதோடு, குல தர்மத்தையும் மேம்படுத்த வேண்டும் என்றும் அறிவுரை கூறிய அவர் நாளாக ஆக அந்த மாதிரியான பேச்சும் நடவடிக்கைகளும் எதிராளிகளுக்கும் தேவைப்படுகிறது என்பதை மகனின் சாமர்த்தியம் மூலம் உணர்ந்து கொண்டார்.

கோகுல் நாயுடு கோகுலத்தில் விளையாடிய கிருஷ்ண பரமாத்மாவைப் போல் இல்லாவிட்டாலும், வயதும் அனுபவ முதிர்ச்சியும் ஒருங்கே சேர்ந்த வேளையில், ஒரு தந்தையின் ஸ்தானத்தில் இருந்து பெண்களுக்கு வளையல் விற்பதும், சூட்டி மகிழ்வதும் மற்ற எவராலும் ஈடு செய்ய முடியாத ஒன்று. கல்யாணமாகாத பெண்களைப் பார்த்து "உனக்கு என்னைக்கு தாயி நா கங்கணங் கட்டி விடப்போறேன்...?" என்பார். “போங்க நயினா..." என்று வயசுப் பெண்கள் நாணிக் கோணுவது அவருக்கு ரொம்பவும் பிடித்தமான ஒன்று.

பட்டு வளையல், ஜரிகை வளையல், அரக்கு வளையல், ஸ்பிரிட் வளையல் என்று ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயர் சொல்லி, பெண்களின் மனசைத் தட்டிப் பார்ப்பார். காலத்துக்கேத்த மாதிரியான ரசனையை திறம்பட உணருவதிலும், பெண்டுகளின் தேவைகளை நாடி பிடித்துப் பார்ப்பதிலும், ரொம்பவும் சமர்த்தர் நாயுடு. ஸ்ரீதேவி, சிம்ரன், த்ரிஷா, நமீதா, என்று பலவிதத்தில் நடிகைகளின் பெயர்களைச் சேர்த்தும், கில்லி, சந்திரமுகி, கஜினி, என்றும், மய+ரி, ஆராதனா, பாபி என்று பழைய பெயர்களையும் விடாமல் அவரது வளையல்களுக்குச் சொல்லி, அவற்றினைத் தனியே ஒன்றோடொன்று சேர்த்து வரிசைப்படுத்தி ஜோடித்து, பெண்களின் கைக்கு அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் வலிய இழுத்துப் போட்டுவிட்டு அழகு பார்ப்பார் நாயுடு.

அவரது இத்தனை வருஷ சர்வீசில் ஒரு முறை கூட அவரை யாரும் தப்பாய்ப் பார்த்ததுமில்லை, கேட்டதுமில்லை. அவரது செயல்கள் ஒவ்வொன்றிலும் பாசமும், நேசமும் பொழியும் அப்படியே, “இத்தோட உன்னை உன் மாமன் பார்த்தான்னா கையோட உன்னை அப்படியே கொத்திக்கிட்டுப் போயிடுவான்..." என்று கிளுகிளுப்பூட்டி, வளையல்களைச் சரம் சரமாகத் தள்ளிவிட்டு விடுவார் நாயுடு. பெண்டுகளின் கனவுகளையும், கற்பனைகளையும் பகுத்தறிந்து, அதைத் தனக்குச் சாதகமாக்கிக்கொள்ளுவதில் படு சமர்த்தர் அவர்.

ரொம்பவும் செழிப்பாகத்தான் திரிந்தார் நாயுடு. காலம் ஒரு மனிதனை ஒரே மாதிரியாகவா விட்டு வைக்கிறது? எவனொருவனுக்கும் தொடர்ந்து ஏற்றமும் இருந்ததில்லை, ஒரேயடியாக இறங்கியும் போனதில்லை. நாயுடுவுக்கும் அப்படித்தான் ஆகிப் போனது. சீராக ஓடிக் கொண்டிருந்த வாழ்க்கை திசை மாற ஆரம்பித்தது. கோணல் புத்திதான் அதற்குக் காரணமானது என்றுதான் சொல்ல வேண்டும்.

சிறு வயது முதலே சினிமா என்றால் நாயுடுவுக்குத் தனி பாசம் உண்டு. காலில் கட்டிய சக்கரமாய் ஊர் சுற்றிக் கொண்டிருந்த காலத்தில் பக்கத்து ஊர் திருவிழா, வாராந்திரச் சந்தை என்று போன இடங்களில், அந்தந்த ஊரில் என்ன படம் ஓடுகிறது என்று முதலில் பார்த்து வைத்துக்கொள்வார். அதற்குத் தகுந்தாற்போல் வியாபாரத்தை ஜரூராக்கி பொழுது சாயும் வேளையிலேயே முடித்துக்கொண்டு, தியேட்டரில் போய் கௌண்டரில் அமர்ந்து கொள்வார். பழகிய தியேட்டர்களில் கான்டீன் ஆட்களைச் சிநேகம் பண்ணிக் கொண்டு படம் பார்ப்புக்கு இடையில் அவர்களோடு அளவளாவிக் களிப்பதும், மனதில் அன்று பார்த்த லாபத்தோடு பொழுதை நகர்த்துவதும் ஆன நிகழ்வுகளெல்லாம் சுகமான ராகங்கள் அவருக்கு.

எத்தனையோ நாட்கள் கடைசி வண்டியைத் தவறவிட்டு ராத்திரி ரெண்டாம் ஆட்டமும் சேர்த்துப் பார்த்துவிட்டு விடிகாலை நாலு நாலரை வரை பஸ் ஸ்டாண்டிலேயே குந்தியிருந்து, பின் புறப்பட்டு ஊர் வந்த காலமும் உண்டு. உடம்பும், மனமும், எதற்கும் ஈடு கொடுத்த காலம் அது. "நம்மூரிலே இல்லாத சினிமாவா? அதான் ரெண்டு கீத்துக் கொட்டகையை மேய்ஞ்சு விட்டிருக்கானே உங்களை மாதிரிச் சினிமாப் பைத்தியங்களுக்குன்னு.....?"

"நானென்ன தொழிலைத் தூர வச்சிட்டா போறேன்? அதையும் சுளுவா என் சாமர்த்தியம் போல முடிச்சிட்டுத்தானே போயிட்டு வாரேன்...எப்பப் பார்த்தாலும் வியாபாரம், துட்டுன்னே கதியாக் கிடக்க முடியுமா? மனுஷனுக்கு ஒரு பொழுதுபோக்கு வேண்டாமா? "

"சர்தான், ஏதோ கூத்தாட்டம் பார்க்கிறதுல ஒரு நப்பாசை..." என்று விட்டு விடுவார் நயினா.

காரணம் உள்ளுரில் கீத்துக்கொட்டகைகளுக்குப் படம் பார்க்கப் போன போது கூட தன் வியாபாரத்தைப் பார்த்தவர் நாயுடு. அது வெளியூர் கொட்டகைகளிலும் ஏன் அறங்கேறக் கூடாது? தன் பையனின் திறமையை என்னவென்று சொல்வது? இப்படியே இருந்தவர்தான் ஒருநாள் திடீரென்று காணாமல் போனார். வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அரற்றினாள் அவர் மனைவி பஞ்சவர்ணம். ஆனாலும் எல்லோரும் நினைத்ததுபோல், வாய்க்கு வந்தபடி குசுகுசுத்ததுபோல், அப்படியொன்றும் கழற்றிக்கொண்டு போய்விடவில்லை நாயுடு.

போய் பத்துப் பதினைந்து நாளில் அவரிடமிருந்து ஒரு கடுதாசியும் வரத்தான் செய்தது. தொடர்ந்து வீட்டுச் செலவுக்கும் பணம் அனுப்பியிருந்தார் நாயுடு. ஆனால் ஒரே ஒரு வரியை மட்டும் கண்டு, 'இதென்ன கிறுக்குத்தனம்..?." என்று ரொம்பவும் பிதற்றினாள் பஞ்சவர்ணம்.

"நா சினிமாவுல ஆக்ட் குடுக்கிற ஆசைலதான் இங்க பட்டணம் வந்திருக்கேன்...மெட்ராசுலதான் நா இருக்கேன்... பயப்படாத...எப்டியும் இந்தத் தொழில்ல நொழஞ்சிடுவேன்...அதுவரைக்கும் பொறுத்துக்கோ...அப்பப்போ பணம் உனக்குக் கண்டிப்பா வரும்...வருத்தப்படாத..." அந்தக் கடைசி வரிதான் ஆறுதல்படுத்தியது பஞ்சவர்ணத்தை. சொன்னதுபோலவே செய்யவும் செய்தார் நாயுடு. எப்படியெல்லாம் அலைந்தாரோ, யார் யார் காலையெல்லாம் பிடித்தாரோ...என்ன செய்தாரோ தெரியாது... முதன் முதலாக ஒரு படத்தில் தலை காட்டினார் நாயுடு.

கூண்டில் ஏறிப் பொய்ச் சாட்சி சொல்லும் ஒரே ஒரு காட்சிக்கான வேடம். கிடைத்த சான்சை விடக்கூடாது என்று ஓகே சொல்லிவிட்டார் நாயுடு. நாபிக் கமலத்திலிருந்து வரும் கணீரென்ற குரலும், வளையல் வியாபபாரத்தில் கற்றுக்கொண்ட பல்வேறு நுணுக்க, சைவ, அசைவ முக பாவங்களும் அவருக்கு மிகவும் கை கொடுத்தன.

'எசமான்...அந்தக் கொலையை இந்த ரெண்டு கண்ணால பார்த்தேனுங்க...பார்த்ததோட மட்டுமில்லீங்க... இவரா அந்தக் கொலையைச் செய்தாருன்னு நெனச்சபோது, மனசே உடைஞ்சு போச்சுங்க....." - என்றவாறே குலுங்கிக் குலுங்கி அழுதார் நாயுடு. டைரக்டர் "கட்..." என்று சொன்ன பிறகும்கூட அழுதுகொண்டே இருந்தார். "யோவ், அடுத்த படத்துக்கு மிச்சம் வச்சிக்கய்யா..." என்றவாறே வந்து தோளில் தட்டினார் டைரக்டர். அதுதான் தன் நடிப்புக்குக் கிடைத்த 'ஷொட்டு" (பாராட்டு) என்று நினைத்தார் நாயுடு.

ஊருக்கு வந்தபோதில் இதையெல்லாம் சொல்லிச் சொல்லிப் பெருமைப்பட்டுக்கொண்டார். அந்த முதல் படத்துக்கு அவருக்குக் கிடைத்ததென்னவோ வெறும் நூறு ரூபாய்தான். என்றாலும் இதயத்தில் பசுமரத்தாணியாய் ஊறிப் போயிருந்த லட்சிய வேட்கைக்குக் கிடைத்த கூலியாய் நினைத்துப் பெருமிதப்பட்டுக் கொண்டார். அதற்குப் பின் என்னவோ அவர் ராசிக்குத் தொடர்ந்து படங்கள் கிடைக்கத்தான் செய்தன. சின்னச் சின்ன வேஷங்கள்தான். ஆனாலும் விட்டு விட முடியுமா?

"பொது ஜனத் தொடர்பு" என்ற தலைப்பின் கீழ் தன் பெயரால் நிற்கும் ஒரு பிரபல நபரின் கட்டுப்பாட்டின்கீழ் கூட்டத்தோடு கூட்டமாக வந்துபோகும் வேஷம் கிடைத்தாலும் விடுவதில்லை அவர். வெளிவரும் படங்களிலெல்லாம் தலைகாட்டி விடுவதும், ஸ்டுடியோ வட்டாரத்திலேயே அலைந்து கொண்டிருப்பதுமான நிகழ்வு அவருக்குப் பெருத்த ஆறுதலைத் தரும் விஷயமாக இருந்தது. ஆத்ம திருப்தியளிப்பதுமாகவும் கழிந்தது.

ஒரு பிரபல நடிகருக்கு மாறு வேஷத்தில் சென்று கதாநாயகியை வில்லன் வீட்டிலிருந்து கடத்தி வரும் காட்சிக்கு வளையல்காரர் கெட்அப்புக்கு இவர்தான் பெரிதும் உதவினார். ஒருமுறை தன்னை அப்படி அலங்கரித்துக்கொண்டு, கைகளில் சரம்சரமாக வளையல்களைத் தொங்கவிட்டுக்கொண்டு நடந்து பாடி ஆடிக் காட்டியபோது அந்தப் பெரிய நடிகரிடம் தனக்கு இத்தனை நல்ல பெயரும், அவருடனான நெருக்கமும் கிடைக்குமென்று நாயுடு கனவுகூடக் காணவில்லை. அச்சு அசலாகத் தன்னைப் போலவே அந்த நடிகர் தனக்கும் மேக்கப் வேண்டும் என்று ஆசையாய் நின்றபோது, பெருமை பிடிபடவில்லை நாயுடுவுக்கு.

அவருக்கு மேக்கப் போடுவதற்கு, இவரை மணிக்கணக்காக அதே வளையல்காரர் வேஷத்தில் உட்கார வைத்துவிட்டனர் அன்று. தன் பாக்கெட்டிலிருந்து உருவி ஆயிரம் ரூபாயைப் படக்கென்று அவர் நீட்டியபோது வேண்டாம் என்று சொல்ல ஏனோ மனம் வரவில்லை நாயுடுவுக்கு. ரெண்டு மாசமாய்ப் பணம் அனுப்பாத நிலையில் சடக்கென்று பஞ்சவர்ணத்தின் மூஞ்சிதான் அவர் நினைவுக்கு வந்தது. கைகூப்பி ரொம்பவும் நன்றியோடு வாங்கிக்கொண்டார் அதை. அதற்குப்பின் அந்த நடிகருக்கு ரொம்பவும் நெருக்கமாகி விட்டார் இவர். அந்தப் படத்தில் அந்த நடிகர் போட்ட வளையல்காரர் வேஷம் மிகவும் பிரபலமாகிவிட்டது இவருக்கு இன்றும் பெருமை பிடிபடாத விஷயமாக இருந்தது. அவரது

அடுத்தடுத்த படங்களில் ஏதேனும் ஒரு வேஷம் தொடர்ந்து கிடைக்க ஆரம்பித்தது நாயுடுவுக்கு. இந்தப் பாத்திரத்திற்குத்தான் நாயுடு பொருந்துவார் என்பதாக ஏதும் இல்லை. வாழ்க்கையின் லட்சியம் ஏதோவொருவிதத்தில் தொடர்ந்து நிறைவேறிக்கொண்டிருப்பதாக ஆறுதல் அடைந்தார் நாயுடு. தன்னை ஒரு சினிமா நடிகன் என்று பலரும் கூறுவதில் பெருமை இருந்தது அவருக்கு. அதிலும் தன் ஊரார் அப்படி அழைப்பதைப் பெரிதும் வரவேற்றார் அவர். அதில் தன் தலை நிமிர்வதாகவும், புகழ் கிடைப்பதாகவும் உணர்ந்து மயங்கினார்.

ஒரு முறை சமஸ்தான ராஜாக்கள் சம்பந்தப்பட்ட ஒரு படத்தில் நடித்துவிட்டு ஊர் வந்திருந்தார் நாயுடு. அந்தப் படம் அவர் ஊர் வருவதற்கு முன்பாகவே ரிலீஸாகி, நாயுடுவின் மனைவி பஞ்சவர்ணமும் ஓடிப் போய்ப் பார்த்து விட்டிருந்தாள்.

"எங்க வீட்டுக்காரரு ஆக்ட் குடுத்திருக்காரு ஆத்தா....நேத்தே போகணும்னு நெனச்சேன். இன்னிக்குத்தான் ஒழிஞ்சிச்சு..."என்று நொந்தவாறே போய் வந்து விட்டாள்.

எந்தப் பெயரிலான படத்திலெல்லாம் நடிக்கிறேன், அது எவ்வெப்போது ரிலீஸாகிறது என்பது முதற்கொண்டு பஞ்சவர்ணத்திற்குச் சொல்வதில் தவறுவதேயில்லை நாயுடு. அவர் அவளுக்குக் கடுதாசி எழுதுவது அந்த வகையிலேனும் தொடர்கிறதே என்பதில் படு ஆறுதல் அவளுக்கு. ஆகையால் தேதி தப்பினாலும் தன் புருஷன் நடித்த படத்தினைப் பார்ப்பதில் தப்பியதேயில்லை பஞ்சவர்ணம்.

அப்படித்தான் அந்தப் படத்தையும் பார்த்து வந்திருந்தாள் அவள். மறுநாள் ஊரில் வந்து நாயுடு இறங்கினாரோ இல்லையோ, குய்யோ முறையோ என்று அவரைக் கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்து விட்டாள்.

'பாவா....பாவா...." என்ற அவள் புலம்பலில் தன்னை மறந்து அப்படியே நெகிழ்ந்து, கரைந்து போனார் நாயுடு. பிறகுதான் சமாளித்துக்கொண்டு விஷயத்தைக் கேட்டபோது, விழுந்து விழுந்து சிரித்தார்

"அட, என்ன புள்ளே நீ? எம்புட்டுச் சினிமா பார்த்திருக்கே...அத்தனையும் வெறும் நடிப்புத்தானே? இதுக்கெல்லாம் போயா கலங்குறது?" என்றார்.

'அது இல்ல பாவா...இதுவரைக்கும் ஒரு படத்தில் கூட நீங்க தும்பப்படறது மாதிரி, துயரப்படுற மாதிரி பார்த்ததில்லேல்ல...அதான் பயந்திட்டேன்...ராவுல அதே மாதிரி ஒரு கனா வேறே கண்டுட்டனா...ஒரே கலக்கம்..." என்று குழந்தைபோல் அவள் அழுதது நாயுடுவைக் கலங்கடித்து விட்டது. இவரது கால்களையும், கைகளையும் தடவித் தடவிப் பார்த்தவாறே நம்புவதற்குத் தலைப்பட்டாள் பஞ்சவர்ணம்.

விஷயம் வேறொன்றுமில்லை. நாயுடு அந்தப் படத்தில் நடித்த பாத்திரம்தான் பஞ்சவர்ணத்தை அப்படிக் கலங்கடித்து விட்டது. சமஸ்தானத்தில் பணிபுரியும் சேவகர்களுக்கெல்லாம் தலைமையாக முன் நின்று அரண்மனை வாசலில் கூட்டத்தைக் கூட்டி கூலி உயர்வு கேட்பதுபோல் ஒரு காட்சி. ஆத்திரமும், ஆவேசமும் கட்டு மீறிப் போக, கலகம் ஏற்படும் சூழலில், சமஸ்தானத்தின் பெருமைக்குத் தீனி போட்டு வளர்க்கப்படும் உயர்ஜாதி நாய்கள், இவர்களை நோக்கி ஏவி விடப் படுகின்றன. நாய்கள் கூலியாட்களை நோக்கிப் பாய்ந்துவரும் காட்சி. விரட்டி விரட்டியடிக்க, தலைகுப்புற விழுந்து தட்டுத் தடுமாறிய நிலையில் கொழு கொழு மலைஜாதி நாய்கள் காலிலும், கையிலும் விழுந்து பிடுங்க, தப்பியது தம்பிரான் புண்ணியம் என்று கூட்டம் தறிகெட்டு சிதறி ஓடுகிறது.

“பூராவுமே பழக்கின நாய்கள்தான் புள்ளே...சொல்லப் போனா ஒரே சமயத்துல எடுத்த காட்சிகளே இல்லை அது...நாய்கள் எல்லாம் கூட்டமா ஓடி வர்றது தனி...நாங்க விழுந்து புரள்றது தனி...எல்லாத்தையும் ஒண்ணாச் சேர்த்துக் காண்பிக்கிற போது ஒனக்கு அப்டித் தெரியுது...அம்புடுதெ....அப்படியெல்லாம் கடிக்கவிட்டு எங்கயாச்சும் எடுப்பாகளா? புரியாத புள்ளையா இருக்கியே?" என்று கூறி தன் தொழில் மீதான தன் கவனத்தை, அக்கறையை வெளிப்படுத்திக் கொண்டார் நாயுடு.

"இருந்தாலும் மேலே விழுந்து லபக் லபக்குன்னு புடுங்கிற மாதிரியே இருக்குதே...லேசுல நம்ப முடியுதா...போங்க பாவா..." என்று செல்லமாக அவர் மடியில் விழுந்து சிணுங்கினாள் பஞ்சவர்ணம். அவர் காலிலோ, கையிலோ பொட்டுக் காயமில்லை என்பது ஒன்றுதான் அவளை நம்ப வைத்தது. சின்னச் சின்ன வேஷமானாலும், 'எம் புருஷன் வராருல்ல..." என்று நீட்டி முழக்கிக்கொண்டு ஓடி ஓடிப் பார்த்தாள்.

“அடி என்னாடி இது இந்த ஓட்டம் ஓடுற...?"- என்று அக்கம்பக்கத்தில் வாய் கிழிந்தால்...

“ம்க்கும்...கட்டின புருஷன் பக்கத்திலே இல்லன்னாத் தெரியும்...?" என்று பதிலிறுத்தி அடக்குவாள். இருந்திருந்தாற்போல் படங்கள் வருவது நின்று போகையில் கடுதாசி எழுதி மகிழ்ந்து கொண்டாள். அதுதான் அவளுக்குப் பெருத்த ஆறுதல். ஆரம்பத்தில் "இப்படிப் போயிட்டாகளே..." என்று நினைத்தவள், நாட்களும் மாதமும் செல்லச் செல்ல அந்த மனபாரம் குறைவதாய் உணர்ந்தாள்.

“என்னப் பத்திக் கவலையே படாதீக பாவா...நா எப்படியும் சமாளிச்சுக்குவேன்...நீங்க உங்க மனசுக்குப் பிடிச்ச தொழில்ல மேல வர்றப் பாருங்க...அதான் என்னோட பிரார்த்தனை..." என்று தைரியம் சொல்லிப் பதில் எழுதுவாள். இது நாயுடுவை எந்த அளவுக்கு மேலே உயர்த்திற்றோ தெரியாது. ஒரு கட்டத்தில் அவரிடமிருந்து கடிதம் வருவது அறவே நின்று போனது. அதுமட்டுமில்லாமல் படங்கள் வருவதும் நின்று போயிருந்ததுதான் அவளை மிகவும் கலங்கடித்தது. என்னவாயிற்று பாவாவுக்கு? ஏதோ ஒன்றிரண்டு என்று ஆகிப் போனதே! ஏன்? அவற்றிலும் வந்து போவதே தெரியவில்லையே?

வசனமுள்ள காட்சிகளே இல்லையே? கூட்டத்தோடு கூட்டமாக அல்லவா நிற்கிறார்? வெகுவாகக் கலங்கித்தான் போனாள் பஞ்சவர்ணம். பிழைப்புக்கு என்ன செய்கிறார்? சோற்றுக்குத் திண்டாடுகிறாரோ? உடல் நலமில்லையோ? என்னவாயிற்று அவருக்கு? இப்படி அவள் கலங்கி நின்ற வேளையில்தான் ஊர்த் திருவிழாவும் நெருங்கிற்று.

'என்னப்பா ராசு...நாயுடு நின்னாரே...எங்கே?..."தூரத்தில் நின்றபோது கண்ணுக்குத் தெரிந்தவர் அருகில் வந்ததும் காணாமல் போனதுபோல் இருந்தது.

"இப்பத்தானே போறாரு..."- டீக்கடை ராசு அலட்டிக்கொள்ளாமல் கூறினான்.

"இன்னா விஷயமாம்...திருவிழாவுக்கு வந்திருக்காராக்கும்..."

"அப்டித்தான் சொன்னாரு...ஆனா மனுஷங்கிட்ட மின்னமாதிரி சுரத்தில்லையே...?"

"சுரத்தில்லையா...ஏன்யா நீயெல்லாம் கண்டுக்கிற மாதிரியாவா நடந்துக்குவாரு? சாதாரணப்பட்ட ஆளாய்யா அவுரு? அத்தனை லேசாப் போச்சா உனக்கு?"

"அட, அதுக்கில்லண்ணே...எப்பவுமே வந்தாருன்னா சுத்தியிருக்கிற அத்தனை பேப்பரையும் ஆஞ்சுபிட்டு, சவடாலா எங்ககிட்டல்லாம் பேசி அளந்திட்டுல்ல போவாரு. அதக் காணலியேன்னு சொன்னேன்...யாருகிட்டயும் ஒத்த வார்த்தை பேசலண்ணே...அதல்ல சொல்ல வர்றேன்..."

உண்மைதான் என்று பட்டது. நாயுடுவின் பேச்சும் கலகலப்பும் ஊர் அறிந்த ஒன்று. என்ன ஆகியிருக்கும் இந்த மனுஷனுக்கு.? மனசு சங்கடப்பட்டது. கதை கதையாய்ச் சொல்வாரே தன் சினிமா அனுபவங்களையெல்லாம்? நாயுடு ஊருக்கு வரும் மாதம் என்று பலரும் எதிர்பார்த்திருப்பரே? எல்லோருக்கும் நல்லவராய், எல்லோரின் நலம் விரும்பியாய், சினிமாத் துக்கிரி எதுவுமில்லாமல், போனது போலவே வந்து வந்து போகும் நாயுடுவா இப்படி? என்னவாயிற்று அவருக்கு? ஊரில் அநேகமாக எல்லோரின் கேள்வியும் இதுவாகவே இருந்தது.

நேற்றுதான் வந்து இறங்கியிருக்கும் மனுஷன் என்னதான் செய்கிறார் பார்க்கலாமே? திருவிழாவுக்கு இன்னும் நாள் கிடக்கிறதே? கோயில் கொடிக்கம்பம் கூட இன்னும் நாட்டவில்லையே? அவ்வளவு அட்வான்சாக அல்லவா வந்திருக்கிறார் நாயுடு. இனிப் போய்விட்டுத் திரும்புவது என்பதுகூட அத்தனை சாத்தியமில்லையே? இல்லை, அப்படி ஏதேனும் எண்ணம் வைத்திருக்கிறாரா? எப்படியும் அவரின் கோயில் கொடை இல்லாமல் போகாது. பார்த்து விடுவோமே...! காத்திருந்தனர் எல்லோரும்.

இரண்டொரு நாளில் நாயுடு வரத்தான் செய்தார். எல்லோரும் பார்க்க.! எல்லோரும் அதிசயிக்க!! 'இதென்ன கோலம்? நம்ம நாயுடுவா இது?" நாயுடு அப்படிக் கிளம்பிய வேளையில் எல்லோருக்கும் இந்தச் சந்தேகம் வரத்தான் செய்தது.

'பளிச்சென்ற விபூதிப்பட்டை, பெரிய சந்தனப் பொட்டு, அதன் நடுவே வட்டமாய் குங்குமம். பளபளக்க, இரண்டு மூன்று கருகமணி மாலைகளோடு, அந்தக் கருப்புக் கோட்டைப் பழையபடி எடுத்து மாட்டிக்கொண்டு, ஜதை ஜதையாக வளையல் சரங்கள் தொங்க, கால்களை வீசிப் போட்டபடி வந்து கொண்டிருக்கும் நம்ம கோகுல் நாயுடுவா இது? தெருவில் அநேகமாக எல்லோர் கண்களும் அதிசயிக்கத்தான் செய்தன.

ரொம்பவும் சிநேகமான ஒரு மனுஷனைப்பற்றி இப்படி ஒதுக்கலாக எத்தனை நாளைக்குத்தான் உணருவது? நாயுடு சொன்னார் ஒரு நாள். 'எத்தன ராத்திரி பகலுக்குப்பா செத்துச் செத்துப் பிழைக்குறது? ஒரு நிரந்தரமில்லாமா? அதான் இப்டி...வந்திட்டேன்...பழையபடி.. உங்க எல்லார்கூடவும் இருந்து கழிச்சிடலாமுன்னு.....இதான் நிரந்தரம்....கண்ணு முன்னால இருக்குற நிதர்சனம்....இந்த முடிவுக்கு வர இத்தன நாள் ஆகிப் போச்சு...பாழாப்போன மனசு...என்ன பண்ணட்டும்...." யாரையும் பார்க்கப் பிடிக்காததுபோல், அதே சமயம் சொல்லியே தீர வேண்டும் என்ற ஆதங்க மேலீட்டில், எல்லோருக்கும் கேட்பதுபோல், சத்தமாக, வாய்விட்டு, மனம் விட்டுத் தன்பாட்டுக்குச் சொல்லிக் கொண்டே போய்க் கொண்டிருந்தார் நாயுடு.

அவர் செல்வதையே எல்லோர் கண்களும் ஆதுரத்தோடு பார்த்துக் கொண்டிருந்தன!!


- உஷாதீபன்(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)