மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் சார்பில் 05.01.2020 ஞாயிறு அன்று முற்பகல், சென்னை, மேற்கு மாம்பலம், ஆ.சந்திரசேகர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தமிழ்நாட்டுக் கல்வி உரிமை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

தீர்மானம் -1 :

மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் வே. ஆனைமுத்து வின் துணைவியார் ஆ.சுசீலா அவர்கள்ƒ மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் ஈடு இணையற்ற போராளி கவிஞர் தமிழேந்தி அவர்கள்ƒ வேலூர் இயக்கச் செயல்வீரர்  து. அரங்கநாதன் அவர்கள்ƒ ஜெ. தத்தனூர் பொட்டக் கொல்லை செயல்வீரர் சா.துரைக்கண்ணுவின் துணைவியார் சின்னம்மாள் ஆகியோரின் மறைவுக்கு இம்மாநாடு வருந்துவதுடன், அப்பெருமக்களின் குடும்பத் தார்க்கு ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் - 2 :

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 1976 வரை மாநில அரசின் அதிகாரப் பட்டியலில் இருந்த கல்வித்துறை, ‘நெருக்கடி நிலை” ஆட்சியில், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 42-வது திருத் தத்தின் மூலம் இந்திய ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் பொதுவான அதிகாரப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது.

அதன் விளைவாக நடைமுறையில் கல்வித்துறை அதிகாரங்கள் முழுமையாக இந்திய ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் என்று ஆகிவிட்டது. கல்வித் துறையின் அதிகாரத்தை - மாநில அரசுகளிடமிருந்து பறித்த ‘நீட்” நுழைவுத் தேர்வு முதலான கேடுகளை - இந்திய ஒன்றிய அரசு திணிப்பதற்குக் காரணமாயிற்று.

எனவே, கல்வித் துறையை மீண்டும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசின் அதிகாரத்தின் கீழ்க் கொண்டுவரத் தொடர்ந்து போராட வேண்டும். இந்தக் கொள்கைக்கு இசைவாக மற்ற மாநிலங் களில் உள்ள கட்சிகள், இயக்கங்களையும் ஒருங்கிணைத்துப் போராடுமாறு  தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகள் இயக்கங்களை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது. 

தீர்மானம் - 3 :

தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வி முதல் அனைத்து நிலைகளிலான கல்வி நிலையங்களிலும் மாணவர் களுக்குப் பயிற்றுமொழி தாய்மொழியான தமிழ்தான் இருத்தல் வேண்டும். இதனைத் தமிழ் நாட்டரசு உறுதியாகத் தீர்மானித்தால் நடைமுறைப்படுத்த முடியும். எனவே, தமிழ்நாட்டில் உள்ள கட்சிகளும் இயக்கங்களும் ஒருங்கிணைந்து, இக்கோரிக்கை நிறைவேறும் வரை உறுதியான போராட்டங்களை நடத்திடுவது உடனடித் தேவையாகும் என இம்மாநாடு தமிழ் மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறது.

தீர்மானம் - 4 :

தமிழ்நாட்டிற்குள் இயங்கும் அஞ்சல்துறை, தொடர்வண்டித்துறை, வங்கிகள், வருமானவரித் துறை என இந்திய ஒன்றிய அரசின் துறைகள் எல்லாவற்றிலும் அலுவல் மொழியாகத் தமிழ் மட்டுமே இருக்க வேண்டும். இதேபோல் மற்ற மாநிலங்களிலும் அந்தந்த  மாநில மொழியே அலுவல் மொழியாக இருத்தல் வேண்டும்.

இந்தி உள்ளிட்ட 52 மொழிகளின் மொத்தம் ஆக உள்ள பொய்யான கணக்குப்படி இந்தியக் குடிமக்களில் 50 கோடிப் பேர் பேசுவதாக உள்ள இந்தி மொழியை - இந்தி பேசாத 80 கோடி மக்கள் மீது திணிப்பது அநீதி ஆகும். இந்த அநீதியைத் தடுத்து நிறுத்திட வேண்டும்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் பட்டியலிடப் பட்டுள்ள 22 இந்திய மொழிகளையும் இந்தியாவின் அலுவல் மொழிகளாக்க வேண்டும்.

இதற்கு, தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள், மற்ற இந்தி பேசாத மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் துணையுடன் உறுதியான நடவடிக்கை கள் மேற்கொள்ளுமாறு இம்மாநாடு வேண்டுகிறது.

தீர்மானம் - 5 :

மெக்காலே கல்வித் திட்டத்தால், 1835 ஆண்டு முதல் பொதுப் பள்ளிக் கல்வி முறையால் இந்தியா முழுவதுமுள்ள பட்டியல் வகுப்பு மக்களும், பிற் படுத்தப்பட்ட வகுப்பு மக்களும் ஓரளவு கல்வி பெற்றுள்ளனர். இந்தியா விடுதலை அடைந்து 70 ஆண்டுகள் கடந்த பின்னும் இம்மக்கள் அனை வரும் கல்வி பெற்றிடவில்லை.

இந்தச் சூழ்நிலையில், ‘தேசியக் கல்விக் கொள்கை” என்ற பெயரால் - இதுவரை பெற்று வந்த கல்வியையும் பறிக்கத் திட்டமிட்டுள்ளது பா.ச.க. தலைமையிலான இந்திய ஒன்றிய அரசு.

இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால், ஆங்கிலப் பயிற்று மொழி இப்போதுள்ளதை விட மேலும் அதிகமாகும். இந்தியும் சமஸ்கிருதமும் புகுத்தப் படும். அத்துடன் சாதிய ஏற்றத் தாழ்வையும் - பெண்ணடிமையையும் நிலைநாட்டுவதுதான் இந்தியப் பண்பாடு என வரலாறு கற்பிக்கப்படும். பட்டியல் வகுப்பு, பிற்படுத்தப்பட்ட  வகுப்பு, சிற்றூர் சிறுவர்கள் பள்ளிப்படிப்பு இடைநிற்றல் அதிகமாகும்.

கல்வி கற்கும் சூழலை மேலும் சுமையானதாக ஆக்குகின்ற - மாநிலங்களின் கல்வி உரிமையைப் பறிக்கின்ற - சமஸ்கிருதத்தையும் இந்துத்துவத்;தை யும் திணிக்கின்ற - சமூக நீதிக் கொள்கைக்கும் குழி பறிக்கின்ற தேசியக் கல்விக் கொள்கை அறவே கைவிடப்பட வேண்டும்.

அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையில் நடக்கும் தமிழ்நாட்டு அரசு, இந்தத் தேசியக் கல்விக் கொள்கையில் தமிழக அரசு தம் நிலையைத் தெளிவுபடுத்தாமல் இருப்பது கண்டனத்துக்குரியது.

மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் சார்பில் 05.01.2020 ஞாயிறு அன்று பிற்பகல், சென்னை, மேற்கு மாம்பலம், ஆ.சந்திரசேகர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

தீர்மானம் : 1

தந்தை பெரியார் விதைத்த சுயமரியாதைக் கொள்கைகள் தமிழர்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்கும் முற்போக்குக்கும் மிகவும் துணை செய்துள்ளன. மேலும் இந்தியத் துணைக் கண்டத்திலுள்ள ஒடுக்கப்பட்ட மக்களும் பெரியார் கொள்கையின் தேவையை உணர்ந்து வருகின்றனர்.

வருணாச்சிரமப் பிறவிச்சாதி அமைப்பை நியாயப்படுத்துகின்ற- நிலைப்படுத்துகின்ற தன்மையிலும், பட்டியல் வகுப்பு, பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களின் உரிமைகளைப் பறிக்கின்ற வகையிலும், சமூக நீதிக் கொள்கைகளை முடக்குகின்ற - மூடநம்பிக்கைகளுக்கு முட்டுக் கொடுக்கின்ற வகையிலும் தீவிரமாகச் செயல்படும் ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. பார்ப்பன இந்துத்துவத்தை எதிர்த்துப் போராடும் கருவியாகப் பெரியாரின் கொள்கைகள் இன்றையக் கால கட்டத்தில் மிகவும் தேவைப்படுகின்றன.

அனைத்து ஒடுக்குமுறைகளிலிருந்து விடுபட்டு, மனித உரிமைகளை மீட்டெடுக்கவும், சமவுரிமையை நிலைநாட்டப் போராடவும் பெரியாரின் சுயமரியா தைக் கொள்கைகளை மக்களிடையே பரப்புவது இன்றியமையாததாகும்.

தமிழ்நாட்டின் எல்லா மாவட்டங்களிலும் பெரியாரிய உணர்வாளர்களின் துணைகொண்டு, 2020 ஆம் ஆண்டிலிருந்து பெரியார் சுயமரியாதைக் கொள்கை மாநாடுகள் நடத்திட வேண்டும் என்று இம்மாநாடு தமிழர்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் : 2

அண்மையில், அய்தராபாத்தில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பயிற்சி வகுப்பு நிறைவு விழாவில் உரையாற்றிய ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன்பகத் அவர்கள், உண்மைக்கு மாறான-மானிட வரலாற்றுக்கு எதிரான தன்மையில் ‘இந்தியாவில் இன்று வாழும் 130 கோடி மக்களும் இந்துக்கள் தான் - இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் தான்” என்று பேசியிருப்பது ஒரு பொய்யான கற்பனை. அவருடைய சொற்பொழிவை சுயமரியாதை மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.

தீர்மானம் : 3

தோழர் வே.ஆனைமுத்து உருவாக்கியுள்ள ‘தந்தை பெரியார்” வாழ்க்கை வரலாறு” நூல், 1400 பக்கங்கள் கொண்ட இரு தொகுதிகளாக 2020 ஆண்டு இறுதிக்குள் வெளியிடப்பட உள்ளது.

இந்நூலினை, மார்க்சியப் பெரியாரியப் பொதுடைமைக்கட்சி வெளியிடுவது என, 8-9-2019 ஞாயிறு அன்று, வேலூரில் நடைபெற்ற மா.பெ. பொ.க. பொதுக்குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நூல் 10,000 படிகள் வெளியிடப்பட வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும்  இந்நூலுக்கு 500 படிகளுக்கு மேல் முன்பதிவு செய்திடுமாறு மா.பெ.பொ.க தோழர்களையும் அனைத்துத் தமிழ்ப்பெரு- மக்களையும், இம்மாநாடு அன்புடன் வேண்டிக் கொள்கிறது.

Pin It