திராவிடம் தான் எங்களைப் படிக்க வைத்ததென்றால் மற்ற மாநிலங்களில் எல்லோரும் படித்திருக்கிறார்களே அவர்களை எல்லாம் யார் படிக்கவைத்தது. இது பார்ப்பனிய சிந்தனைகளை உள்வாங்கும் தமிழ் தேசியவாதிகளின் கேள்வி. இங்க தான் திராவிடம் பேசி மற்ற மொழிக்காரர்கள் எங்களை அடிமைப் படுத்தி வைத்திருக்கிறார்கள் என்று புலம்பல் வேறு. சரி, திராவிடம் இப்ப யாரு பேசுராங்க என்று நாம் கேட்டால் தெலுங்கு, மலையாளம், கன்னடம் பேசுகிறவர்கள் என்று பதில் சொல்கிறார்கள்.

இவர்கள் சொல்வதைப் பார்த்தால் தினமும் ஆயிரம் பேர் கேரளா, ஆந்திராவிலிருந்து கிளம்பி பஸ் ஏறும் போதே திராவிடத்திற்கு ஒரு டிக்கெட் கொடுங்க என்று கேட்டு வந்து நம்மளை அடிமைப் படுத்துவது போல் உளறுகிறார்கள். இந்த 50 வருட திராவிட ஆட்சியில் எங்களுக்கு எதுவுமே கிடைக்கவில்லை, அதனால் திராவிடத்தை நாங்கள் எதிர்க்கிறோம் என்று சொல்றீங்க, சரி இந்த 50 வருசமா உங்களுக்கு எதுவுமே கிடைக்கலியா? 50 வருசமா தமிழன் யாரும் படிக்கவில்லையா? சம்பாதிக்கவில்லையா? என்று எதிர் கேள்வி கேட்டால், இல்ல எத்தியோப்பியாவிலிருந்து ஒரு தமிழன் நேற்று பீட்சா வாங்கப் போக, அதுக்கு அந்த எத்தியோப்பிய கடைக்காரன் பீட்சா இல்லன்னு சொன்னதால் அன்றைக்கு அந்தக் குடும்பமே சாப்பிடாமல் பட்டினி கிடந்திருக்கிறார்கள். இதை இந்த திராவிட ஆட்சி தட்டி கேட்டிருக்கணும். கேட்கல, அதனால் இந்த திராவிடம்  வேணாம் என்று சொல்கிறோம். அடடா இவனுக பிரச்சனை பீட்சா வரைக்கும் போயிருச்சே என்று யோசிக்க ஆரம்பித்தேன்.

திராவிட ஆட்சி வருவதற்கு முன் இந்த தமிழ்தேசியவாதிகளின் வீட்டில் ஒவ்வொருத்தர் வீட்டிலும் ஒரு IAS, IPS, இருந்தமாதிரியும், பார்ப்பனர்கள் அனைவரும் இவர்களைப் பார்த்து “நமஸ்காரம் நல்லா இருக்கேளா?” கேட்டுவிட்டு, கும்பிட்டுப் போன மாதிரியும், திராவிடம் தான் அதத் தடுத்த மாதிரியும் நெனப்பில் இருக்கிறார்கள். இந்த ஆண்டபரம்பரைக்காரர்கள். அன்று பார்ப்பனர் வீட்டுக் கொல்லைப்புறம் தான் இவர்களுக்குச் சொர்க்கவாசல் என்பது மறந்துவிட்டது போல, உண்மையில் இவர்களைப் படிக்கவைத்தது எது, கல்வி பெற்ற மாநிலங்களில் திராவிடம்  இல்லையா? ஞாபகப்படுத்துவோம்.

“கல்வி விசயத்தில் தற்போதுள்ளவர்கள் மிகவும் மேன்மை பெற்றவர்கள். ஏனெனில் முந்திய சகாப்தத்திற்கும் பிந்திய சகாப்தத்திற்கும் கல்வி கற்பிப்பதில் எவ்வளவோ வித்தியாசங்கள் உண்டு. நம் சகாப்தத்திற்கு முந்தைய காலத்தில், இன்னார் இன்னார் தான் கல்வி -கற்பிக்க உரிமையுடையவர்கள் என்கின்ற நிபந்தனை இருந்தது. இன்ன இன்ன விஷயந்தான் கற்பிக்கப் படவேண்டும் என்றும் இருந்தது. இதோடு மாத்திரமல்லாமல், இன்ன இன்னார்தான் கல்வி கற்பிக்கப்பட உரிமையுடையவர்கள் என்கின்ற நிபந்தனையும், இன்ன இன்னவர்களுக்கு எழுத்து வாசனையே கற்பிக்கப்படக் கூடாது என்கின்ற தான நிர்பந்தமும் இருந்து வந்தது. இந்த மாதிரி யான  நியமங்களினாலும், நிர்பந்தங்களினாலும் கல்வி என்பது ‘மூடுமந்திரம்’ போன்று ஒரு இரகசியப் பொருளாகவே இருந்து வந்தது.

இந்தக் காரணங்களினால் முற்காலங்களில் ஆயிரத்தில் ஒருவர் இருவரே கல்வி கற்றவர்கள் என்பவர்களே எல்லா மக்கள் மீதும் எல்லா காரியத்திலும் ஆதிக்கம் செலுத்துபவர்களாய் இருந்து வந்தார்கள். அன்றியும், மேல் சொல்லப்பட்ட இந்த நிபந்தனைகளும் ஆதிக்கங்களும் எல்லாம் மக்கள் பிரிவில் ஒரு தனிப்பிரிவார் மாத்திரம் அதுவும், பிறவி காரணமாய் உரிமை கொண்டாடத் தக்கதாய் இருந்து வந்ததே அல்லாமல், மற்றபடி பொதுத் தகுதியைக் கொண்ட தாகவோ, எல்லோருக்குமே சம உரிமை கொண்ட தாகவோ சிறிதும் இருந்து வரவில்லை.

சாதாரணமாய் நமது இந்தியாவை முழுவதும் எடுத்துக் கொண்டு, பழைய கல்வி போதனாமுறை என்பதை ஒரு முறையாக வைத்துப் பார்ப்போமானால், இந்தியாவில் உள்ள 35 கோடி(1931) மக்களில், 17.5 கோடி மக்களான பெண்களுக்கு எந்தக் காரணத்தைக் கொண்டும் கல்வி கற்பிக்க முடியாததாகும். மற்றொரு பிரிவில் 7 கோடி தாழ்த்தப்பட்ட மக்கள் விஷயத்திலும் படிப்பு என்பது நினைப்பதற்கே முடியாத காரியமாய் இருக்கும் மற்றும் பார்ப்பனர்கள், அரசர்கள், வியாபாரிகள் என்கின்ற வெகு சிறிய கூட்டத்தார்கள் மாத்திரம் கல்வி கற்க உரியவர்களாவார்கள். அவர்களிலும் கல்வி கற்பிப்பதில் பிரிவுக்கு பிரிவு வித்தியாசம் இருக்கும். ஆனால் இன்றைக்கு இவ்வித வித்தியாசங்கள் ஏது மில்லாமலும், யாருக்கும் யாவராலும் கல்வி கற்பிக்கப்படலாம்.

- தோழர் பெரியார்- ஈரோடு மகாஜன ஸ்கூலில், 17.09.1931 இல் சொற்பொழிவு

அக்ரஹாரத்தில் வசித்து வந்த பிராமணர் ஒருவருக்குக் கை நிறைய வருமானம் வரும் ஜோசியந்தான் தொழில். ஒரு முறை வெளியூரி லிருந்து வீடு திரும்பும் வழியில் தஞ்சை கலெக்டர் அழைப்பதாக செய்தி வரவும் அங்கே சென்றார். அந்த வெள்ளைக்காரக் கலெக்டர் அவரிடம் “உனக்கு எழுதப் படிக்கத் தெரியுமா?” எனக் கேட்க “தெரியும்” எனப் பதிலளித்தார். “கணக்கு பார்க்கத் தெரியுமா?” என அடுத்த கேள்வியைக் கேட்க “ஜோசியம் பார்க்கத் தெரியும், கணக்கும் பார்ப்பேன்” என்றார். விடாத கலெக்டர் “கிராமத்துக் கணக்கு வேலைகளைப் பார்ப்பீரா” எனக் கேட்க , “கொடுத்தால் பார்ப்பேன்” என்றார். அடுத்த நிமிடம் ஜோசிய பிராமணர் அரசு அலுவலரானார்.

-ஆர். முத்துக்குமார் எழுதிய திராவிட இயக்க வரலாறு – பகுதி -1 என்ற நூலிலிருந்து

இப்பிடித்தான் விண்ணப்பிக்காமல், போட்டி இல்லாமல், கோரிக்கை இல்லாமல் அரசுப் பணிகளில் பார்ப்பனர்கள் சேர்ந்தனர்.

முதன் முதலில் இட ஒதுக்கீடு என்கிற வார்த்தை உருவானதே தமிழ் நாட்டில் நீதிக்கட்சி ஆட்சியில் தான். 1921 ஆம் ஆண்டு  நீதிக்கட்சியின் பனகல் அரசர் ஆட்சிக்காலத்தில் திரு. தணிகாசலம் அவர்கள் கொண்டுவந்த வேலைவாய்ப்பு இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால் அப்போது இருந்த இரட்டை ஆட்சி முறையால் கவர்னருக்கு அதிக அதிகாரம் என்பதால் கவர்னர் நிராகரிக்க - இந்தச்சட்டம் நிறைவேற்றப் படாமல் போனது.

மீண்டும் 1927ம் ஆண்டு திரு. சுப்புராயன் அவர்கள் காலத்தில் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது, இந்தச் சட்டம். 1947 ஆம் ஆண்டு விடுதலை அடையும் வரை இருந்தது. இந்தச் சட்டத்தினால் பார்ப்பனரல்லாதோர் ஓரளவு வேலை பெற்றனர். 1934 இல் சென்னை மாகாண பார்பனரல்லாதார் இடஒதுக்கீடு சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆங்கிலேயர்காலத்தில் போராடிப் பெற்ற இந்தச் சட்டத்திற்குச் சுதந்திர இந்தியாவில் 1947 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதமே தடை விதிக்கப்பட்டது.

முதலில் வேலை வாய்ப்பில் தான் இட ஒதுக்கீடு இருந்தது. அதற்கும் தடையும் வந்தது. இந்திய அரசியலமைப்பு கொண்டு வந்த சட்டமும் வேலை வாய்ப்பில் மட்டும் தான் என்று சொன்னது. வேலைவாய்ப்பில் மட்டும் இடஒதுக்கீடு என்பதை பெரியார் கடுமையாக எதிர்த்தார்.

“நீ தெருவுக்கு நாலு பைப் போட்டுக் கொடுத்துடுற; தண்ணீ பிடிச்சுக்க-ன்னு சொன்ன ; ஆனால் டேங்க்குத் தண்ணீ விடலையே; எனக்கு வேலைவாய்ப்புக்கு இட ஒதுக்கீடு கொடுத்துட்ட, ஆனா, எங்காளு இன்னும் படிக்கவே இல்லையே, பிறகு எப்பிடி வேலை வாய்ப்புக்குப் போய் நிப்பான்?”  என்று கேட்டார்.

டெல்லி உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பும் வகுப்புவாரி உரிமைக்கு எதிராக அமைந்தது. அந்தத் தீர்ப்பைத் துணையாகக் கொண்டு ,‘வகுப்புவாரி உத்தரவை அமல்படுத்துவது இந்திய அரசியல் சட்டத்திற்கு முரணானது; ஆதலால், அதனை அமல்படுத்தக்கூடாது’ – என மத்திய அரசு, மாகாண அரசுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியது.  இதன் தொடர்ச்சியாக 1951 ஆம் ஆண்டு தந்தை பெரியார் நடத்திய மாபெரும் மக்கள் கிளர்ச்சி போராட்டத் தால் இந்தியாவே அதிர்ந்தது வரலாறு. இந்திய அரசியலமைப்பின் முதல் சட்டத் திருத்தம் (விதி (15) (4) வந்தது.

ஆரம்பங்களில் பார்ப்பனருக்கு மட்டுமே கிடைத்த கல்வி எல்லோருக்குமாக மாற்றியதில் திராவிடத்தின் பங்கு அளப்பரியது. திண்ணைப் பள்ளிகள், குரு குலங்களாக இருந்தவை பின்னர் பள்ளிக்கூடங்களாக மாறியது ஒரு சாதாரண நிகழ்வு அல்ல.

காமராசர் ஆட்சிக்காலத்தில் அதிகமான பள்ளிகள் திறக்கப்பட்டன.அதற்கு அடித்தளமிட்டது நீதிக்கட்சியும், பெரியாரும் தான்.

திராவிட ஆட்சிக்கு முன்னால் ஊரில் ஒரு சிலரே படித்தனர், குறிப்பாக வசதிபடைத்தோர் மற்றும் மேல் சாதியினர் தான்.அதை அளவு கோலாக வைத்து விட்டு நாங்கெல்லாம் திராவிடத்திற்கு முன்னே படித்து விட்டோம் என்று மொன்னை வாதங்களை வைக்கக் கூடாது.

ஆரம்பத்தில் எங்கள் ஊரில் ஒரே ஒரு மேல் நிலைப்பள்ளி தான் இருந்தது. அதில் தான் எல்லோரும் படித்தார்கள். இதனால் என்னாச்சுன்னு பார்த்தால், அதிகமான இடை நிறுத்தம் ஏற்பட்டது (னுசடியீ டிரவ) வெகு தொலைவிலிருந்து வந்து படித்தவர் களில் ஒரு சிலர் ஏதோ ஒரு காரணத்திற்காகப் படிப்பதைப் பாதியில் நிறுத்தினார்கள். கண்டிப்பாக திராவிடம் காரணமில்ல. இன்று ஒரு பஞ்சாயத்துக்கு ஒரு மேல்நிலைப்பள்ளி என்று வந்துவிட்டது. அதனால் படிப்பு விகிதம் அதிகமாகியுள்ளது. இதுக்கு யார் காரணம் திராவிடம் தான். எங்கப்பா பள்ளிப் பக்கமே போகாதவர், நான் ஒரு பொறியாளன். எனது அப்பா படிக்காமல் போனதற்கு அன்றைய  மறுக்கப்பட்ட கல்விச் சூழல் ஒரு காரணம். இன்று எங்கள் குடும்பத்தில் எல்லோரும் படித்ததுக்குக் காரணம் பார்ப்பனர் களிடமிருந்த கல்வி எல்லோருக்கும் பரவியது தான். அதை இங்கே கொண்டு சேர்த்தது திராவிடம் தான்.   

- பெருமையுடன் பேசுவோம்

Pin It