கீற்றில் தேட...

சிலம்புச் செல்வர் ம.பொ.சி.மட்டுமின்றி, பொதுவுடமைக் கட்சித் தலைவர்களில் ஒருவரான எம்.கல்யாணசுந்தரம், ராஜாஜி ஆகியோரும், ஒரு காலகட்டத்தில் திராவிட இயக்கத்தை ஒழித்துவிட வேண்டும் என்பதில் பேரார்வம் காட்டினர்.

1952 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில், திராவிடர் கழகமும், இந்தியப் பொதுவுடைமைக் கட்சியும் ஓரணியில் நின்றன. 1951 அக்டோபர் 22, 23 ஆகிய நாள்களில், சென்னை, மெமோரியல் ஹாலில், திரு வி.க. தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், ஏற்படுத்தப்பட்ட ஐக்கிய முன்னணியின் அடிப்படையில், இரண்டு இயக்கங்களும், தேர்தல் மேடைகளைப் பகிர்ந்து கொண்டன. அக்கூட்டத்தில் ப.ஜீவானந்தம், கே.டி.கே. தங்கமணி, குத்தூசி குருசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

kalyanasundaramஆனால் அதே ஆண்டு பிற்பகுதியில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், இரண்டு கட்சிகளும் பிரிந்து விட்டன. ஆந்திராவைச் சேர்ந்த டி.பிரகாசத்தைத் தமிழ்நாட்டின் முதலமைச்சராக்க வேண்டும் என்ற பொதுவுடைமைக் கட்சியினரின் கோரிக்கையைப் பெரியார் ஏற்கவில்லை. பிரகாசம் அல்லது ராஜாஜிதான் முதலமைச்சராக வர முடியும் என்ற நிலை ஏற்பட்ட போது, தெலுங்குப் பார்ப்பனரை விடத் தமிழ்நாட்டுப் பார்ப்பனரே மேல் என்று முடிவெடித்தார் பெரியார். அதுவே பிளவுக்கு வழிவகுத்தது. அதனால், உள்ளாட்சித் தேர்தலில் எதிரெதிர் மேடைகளில் நின்று விமர்சனம் செய்து கொண்டனர். அப்போதுதான் ஒரு கூட்டத்தில் பேசும்போது,தோழர் எம்.கல்யாணசுந்தரம், “திராவிட என்ற அடைமொழியுடன் கூடிய எல்லாக் கட்சிகளையும் ஒழித்த பிறகே நான் சாவேன்” என்று சூளுரைத்தார்.

அதற்கு ஓராண்டிற்கு முன்புதான், தோழர் எம்.கே., தானும், தோழர்களும் சிறையிலிருந்த போது, திராவிடர் கழகம் செய்த உதவிகளுக்குக் கடைசி மூச்சு உள்ளவரை விசுவாசம் உள்ளவனாக இருப்பேன் என்று உறுதியளித்து, குத்தூசி குருசாமிக்கு மடல் எழுதியிருந்தார்.

1949 அக்டோபரில், இந்திய அரசு, பொதுவுடைமைக் கட்சிக்குத் தமிழ்நாட்டிலும் தடை விதித்தது. அன்று தொடங்கி, தடை நீக்கப்பட்ட 1951 ஆம் ஆண்டு வரையிலும், தமிழகமெங்கும் பொதுவுடைமைக் கட்சித் தோழர்கள் விரட்டி விரட்டி வேட்டையாடப்பட்டனர். அதனால் பலர் தலைமறைவாயினர். அப்படித் தலைமறைவான தோழர்கள் பலருக்குத் திராவிடர் கழகத் தோழர்களே அடைக்கலம் கொடுத்தனர்.

சேலம் சிறையில் 22 பொதுவுடைமைக் கட்சித் தோழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதனைக் கண்டித்தும், பொதுவுடைமைக் கட்சியின் மீதான தடையை நீக்கக் கோரியும், பெரியார் தமிழ்நாடு முழுவதும் இயக்கம் நடத்தினார்.

தடை நீக்கப்பட்ட பின், புதுக்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தோழர் எம்.கே., 14.06.1951 அன்று விடுதலையானார். வெளிவந்த அவர், 27.06.1951 ஆம் நாளிட்டு, குத்தூசி குருசாமி அவர்களுக்கு எழுதிய கடிதம், வரலாற்றுச் சிறப்பு மிக்கது. அக்கடிதத்தில், “என்னுடைய விடுதலை, திராவிடர் கழகம் - கம்யூனிஸ்ட் கட்சியின் அய்க்கியத்தின் வெற்றியாகும்... இந்த அளவிற்கு வளர்ந்து வந்திருக்கும் கருத்தொற்றுமையையும், செயல் ஒற்றுமையையும், மேலும் மேலும் வளர்த்துக் கண்மணியைப் போல் பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு திராவிடர் கழகத் தோழர்களின், கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களின் கடமையாகும்” என்று குறிப்பிட்டிருந்தார். அந்தக் கடிதத்தின் இறுதிப் பகுதி, “என்னிடம் காட்டியுள்ள அன்பிற்கும், நம்பிக்கைக்கும் தகுதியுடையவனாகவும், விஸ்வாசம் உள்ளவனாகவும், கடைசி மூச்சு உள்ள வரை நடக்க உறுதி கூறுகிறேன்” என்று நிறைவடைகின்றது.

ஆனால், ஓராண்டிற்குள்ளாகவே அவருடைய நிலைப்பாடு மாறி, ‘திராவிட’ என்னும் அடைமொழியையே அழித்துவிட வேண்டும் என்னும் இடத்திற்கு வந்து விடுகிறார்.

ராஜாஜியும், பார்ப்பனர்களும் என்றைக்குமே திராவிட இயக்க எதிரிகள்தாம். எனினும் 1953 இல், திராவிட இயக்கங்களை ஒழித்துவிட வேண்டும் என்பதில் ராஜாஜி மிகுந்த தீவிரம் காட்டினார்.

Rajagopalachari1952 - 54 இல், தமிழ்நாட்டில் அவருடைய ஆட்சிதான் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போதுதான் ‘குலக்கல்வித் திட்டம்’ என்னும் ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தார். அதனைப் பரவலாக அனைத்துக் கட்சிகளுமே எதிர்த்தன. பொதுவுடைமைக் கட்சியும் எதிர்த்தது.

கூட்டங்களில் எதிர்த்துப் பேசியதோடு மட்டுமின்றி, அத்திட்டத்தை எதிர்த்துச் சட்டமன்றத்திலும் அக்கட்சி தீர்மானம் கொண்டு வந்தது. ஆனால் அத்தீர்மானம் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டது.

தோல்விக்கு யார் காரணம் தெரியுமா? எந்தக் கம்யூனிஸ்ட் கட்சி, தீர்மானம் கொண்டு வந்ததோ, அதே கட்சிதான் தோல்விக்கும் காரணம். அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், சட்டமன்ற உறுப்பினருமான பி.ராமமூர்த்தி, அன்று வாக்களிக்க வரவில்லை. அவசரமான கட்சி வேலை காரணமாகத் தில்லிக்குப் போய்விட்டார் என்று கூறப்பட்டது.

எப்படியிருக்கிறது பாருங்கள்! திட்டத்திற்கு எதிராகத் தீர்மானம் ஒரு பக்கம், தலைவரே வாக்களிக்காமல், அது தோற்றுப் போக வழிவகுப்பது மறுபக்கம்!

ராஜாஜி மகிழ்ந்தார். அந்த மகிழ்ச்சியை 03.10.1953 அன்று, சென்னை,தேனாம்பேட்டையில் நடைபெற்ற காங்கிரஸ் ஊழியர்கள் அரசியல் மாநாட்டில் மறைமுகமாக வெளிப்படுத்தினார். ‘கம்யூனிஸ்ட்டுகள் குறித்து இனி கவலைப்பட வேண்டியதில்லை’ என்றார்.

அவருடைய பேச்சிலிருந்து சில வரிகள் :

“இனிமேல் கம்யூனிஸ்ட்டுகள் குறித்து நீங்கள் பயப்பட வேண்டியதில்லை. கம்யூனிஸ்ட்டுகளை விடத் திராவிட கழகத்தார்கள்தான் அபாயகரமானவர்கள். இவர்கள் பிரச்சாரம் சாதாரண மக்கள் மனதைப் பற்றிக் கொள்கிறது. இனி, தமிழ்நாடு சந்தோ­மாக இருக்க வேண்டுமானால், எப்படியாது திராவிடர் கழகக் கணக்கைக் கட்டி வைத்துவிட வேண்டும். இனி அவர்கள் செய்கை, வரலாற்றில்தான் இடம்பெற வேண்டுமேயல்லாது, நாட்டில் காணும்படி விடக்கூடாது”.

ராஜாஜியும், எம்.கல்யாணசுந்தரமும் கொள்கை அடிப்படையில் இரு துருவங்கள். ஆனால், திராவிட இயக்கத்தை ஒழிக்க வேண்டும் என்பதில் இருவரும் ஒரு புள்ளியில் சந்தித்தார்கள்.

என்ன செய்வது... சில வேளைகளில், விருப்பங்கள் எதிர்மாறான நிலையில் நிறைவேறி விடுகின்றன. ராஜாஜி தொடங்கிய சுதந்திரா கட்சியும், எம்.கே., தொடங்கிய ஐக்கிய இந்தியப் பொதுவுடைமைக் கட்சியும் இன்று தமிழகத்தில் இல்லை, இல்லவே இல்லை. இருந்த சுவடு இல்லாமல் மறைந்து விட்டன. ஆனால், திராவிட இயக்கம் முன்னிலும் வலிமையாய், விரிந்து பரந்து வளர்ந்து கொண்டிருப்பதை நாம் காண்கிறோம்.

(கருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 16, 2010 இதழில் வெளியானது)