"ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்

 பேரறி வாளன் திரு”,

P Theagarayaஇக்குறளுக்குக் கலைஞர், "பொதுநல நோக்குடன் வாழ்கின்ற பேரறிவாளனின் செல்வமானது ஊர் மக்கள் அனைவருக்கும் பயன் தரும் நீர் நிறைந்த ஊருணியைப் போன்றதாகும்" என்று உரை சொல்கிறார்.

இந்தக் குறட்பாவில் ‘பேரறிவாளன்’ என்று வள்ளுவர் குறிப்பிடுவதற்கான வரையறை, அதிகம் அறிவு உடையவர், அல்லது அதிகம் பட்டம் பெற்றவர் என்பதல்ல! தான் பெற்ற அறிவையும், செல்வத்தையும் யார் ஒருவர் சமூகத்தின் வளர்ச்சிக்காகப் பயன் படுத்துகிறாரோ அவரைத் தான் வள்ளுவர் பேரறிவாளன் என்று குறிப்பிடுகின்றார்!

அவ்வகையில், தான் கற்ற கல்வி, ஈட்டிய பொருள், வகித்த பதவிகள் உட்பட அனைத்தும் அன்றைய மதராஸ் மாகாணத்தின் சமூக, கல்வி, பொருளாதார வளர்ச்சிக்காகப் பயன்படுத்திய திராவிடப் பெருந்தகை சர். பிட்டி தியாகராயர், ஒரு முன்னோடியாக, பேரறிவு உடையவராக இன்றும் நம் நினைவில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.

சர். பிட்டி. தியாகராயர், சென்னை கொருக்குப் பேட்டையில் வாழ்ந்த அய்யப்பனார் - வள்ளியம்மாள் இணையருக்கு மூன்றாவது மகனாக 1852ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 27ஆம் நாள் பிறந்தார். சென்னை மாநிலக் கல்லூரியில் பயின்று இளங்கலைப் (B.A.) பட்டம் பெற்றார். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், இலத்தீன், பிரெஞ்சு, உருது ஆகிய மொழிகள் கற்றுத் தேர்ந்திருந்தார். 1882ஆம் ஆண்டு நடைபெற்ற நகர அவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்! அதைத் தொடர்ந்து 1925 வரை நாற்பத்திரண்டு ஆண்டுகள் தொடர்ந்து நகரவை உறுப்பினராக இருந்தார்.

சென்னை மாகாணச் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றார். தியாகராயர் தமது சொந்த வருமானத்தில், வண்ணாரப்பேட்டையில் "வடசென்னை நடுநிலைப்பள்ளி" யினை 3.12.1897இல் தொடங்கினார். ஏழை மாணவர்களுகாக 'மதிய உணவு'த் திட்டத்தைக் கொண்டு வந்து வயிற்றுப் பசியையும், அறிவுப் பசியையும் தீர்க்கும் மாமனிதராக விளங்கினார்.

 சர்.தியாகராயர், மக்களிடைய செல்வாக்கு மிக்கவர். ஆனாலும், சென்னை மயிலை கோயில் விழாவில் உரிய மதிப்பினைப் பார்ப்பன விழாக் குழுவினர், அவர், சூத்திரர் என்பதால் தராது அவமதித்து விட்டனர். அதனால் வெகுண்டு வெளியேறிய தியாகராயர், டி எம் நாயர், நடேசனார் உள்ளிட்டோருடன் இணைந்து பார்ப்பனரல்லாதார் நலன்களைக் காப்பதற்கு வழிகாண வேண்டும் என்ற உயரிய நோக்கோடு, 1916 நவம்பர் 20ஆம் நாளன்று சென்னை விக்டோரியா பொது அரங்கில், "தென்னிந்தியர் நல உரிமைச் சங்கம்" என்ற அரசியல் அமைப்பினைத் தொடங்கி அதன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் அந்த அமைப்பே பின்னாளில் நீதிக் கட்சி என பெயர் பெற்றது.

நீதிக் கட்சி சார்பாக வெளியிட்ட 'பிராமணரல்லாதார் கொள்கை விளக்க அறிக்கை', பார்ப்பனரல்லாத மக்களிடையே பெருமளவிற்கு விழிப்புணர்ச்சியைத் தோற்றுவித்தது. அவர்கள் இயக்கத்தின் கொள்கைகளுக்கும் திட்டங்களுக்கும் பேராதரவு தந்தனர். நீதிக்கட்சி பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு முழு உரிமை வேண்டும் என்றும், அரசுப் பணிகளிலும், கல்வியிலும் இடஒதுக்கீடும் வழங்க வேண்டும் என்று கோரியது. நீதிக்கட்சி 1920 நவம்பர் 20இல் நடைபெற்ற மாகாணத் தேர்தலில் போட்டியிட்ட 98 இடங்களில் 63 இடங்களில் வென்று மதராஸ் மாகாணத்தில் ஆட்சியமைத்தது.

மாகாண வளர்ச்சிக்கு ஈடு இணையற்ற பங்களிப்பைச் செய்த தியாகராயர் 28.4.1925 அன்று மறைந்தார். இன்று நம்முடைய முதலமைச்சர் நீதிக் கட்சியின் நீட்சி தான் இந்த ஆட்சி என்று சொல்கிறார்.

தியாகராயர் விட்டுச் சென்ற பணிகளை திராவிட இயக்கம் காலங்காலமாக தொடர்ந்து வருகிறது! அதன் ஒரு பகுதியாக நாமும் நின்று திராவிடப் பெருந்தகை சர். பிட்டி தியாகராயரின் புகழ் பாடுவோம்.

- ஞா. கதிரவன், திராவிடப் பள்ளி மாணவர்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.