கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

modi and nirmala sitharamanநிதிநிலை அறிக்கைகள் என்பவை பொருளாதார நெருக்கடியை எதிர் கொள்ளவும், குடிமக்களின் தேவைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றுவதற்கும், சமுதாயத்தின் எதிர்கால வளமையை நோக்கிய பாதையை வடிவமைக்கவும் மூலாதாரங்களை ஒதுக்கீடு செய்வது மற்றும் வருவாயைப் பெருக்குவதன் அடிப்படையில் பொருளாதாரத் திட்டமிடலுடன் கூடிய அரசியல் தொலைநோக்கு அறிக்கைகளாகும்.

தென்கொரிய நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மடிக் கணினியில் உள்ள, மோடியின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் நிதிநிலை அறிக்கை உரையும் அவருடைய நிதிநிலை அறிக்கை ஆவணங்களும், ஒரு தைவான் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஒரு கைக்கணினியின் ஆதரவும் டிஜிட்டல் உள்கட்டமைப்பை உருவாக்கவில்லை.

ஒரு கைக்கணினியில் நிதிநிலை அறிக்கையை முன் வைப்பது டிஜிட்டல் இந்தியாவை உருவாக்கவில்லை. மருத்துவத்திற்கும் கல்விக்கும் செய்யப்படும் உயர்ந்த அளவிலான முதலீடு மட்டுமே டிஜிட்டல் இந்தியாவுக்கான விவசாய மற்றும் தொழில்துறை இரண்டின் புரட்சியையும் வடிவமைக்க முடியும்.

படுபாதாள சமூகச் செலவு இந்த நிதிநிலை அறிக்கையை சுதந்திர இந்தியாவில் மிக மோசமானவற்றில் ஒன்றாக ஆக்குகிறது. அது மக்களுக்கும் அவர்களின் அன்றாடத் தேவைகளுக்குமான முன்னுரிமைகளும் ஒப்படைவும் இல்லாமல் போனதைக் காட்டுகிறது. இந்திய மக்களுக்காக முதலீடு செய்வதற்கான எந்த ஒப்படைவையும் அரசாங்கம் காட்டவில்லை.

மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசாங்கம் 2021-2022 நிதிநிலை அறிக்கையிலும் மீண்டும் மக்களைக் கைவிட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சி மற்றும் மனித வளர்ச்சியின் பாதையில் இந்தியாவையும் இந்தியர்களையும் முன்னேற்றிச் செல்வதற்கான இலக்குகளும் தொலை நோக்குகளும் இல்லை.

அது மக்கள் மீதான எந்த அக்கறையுமற்ற ஓர் ஆவணமாகும். இந்த நிதிநிலை அறிக்கை மக்களுக்கான மருத்துவம், கல்வி, வேலைவாய்ப்பு, மற்றும் பிற இன்றியமையாச் சேமநலத்தையும் உத்தரவாதப்படுத்தத் தவறியுள்ளது.

நிதிநிலை அறிக்கையில் முன் வைக்கப்பட்டுள்ள அரை மனதுடன் தரவுகளை ஆவணப்படுத்தல், கால இடைவெளிகள், சந்தேகத்துக் கிடமான போலிக் கணக்குகள் ஆகியவை இந்தியாவின் வளர்ச்சிக் கதையைப் புதுப்பிக்கும் நம்பிக்கைக்குரிய, தீவிரமான பொருளாதார நடவடிக்கையாக அல்லாமல் ஒரு பிரச்சார ஆவணமாக ஆக்குகின்றன.

இந்த நிதிநிலை அறிக்கை திருவாளர் நரேந்திர மோடி அவருடைய விளம்பரங்களுக்காகவும் பிரச்சாரத்துக்காகவும் செலவழிக்கப் போகிற தொகையை வெளியிடவில்லை.

அத்தனை குறைபாடுகளுக்கும் அப்பால். இந்தியாவிலும் அயல்நாடுகளிலும் உள்ள கள்ளக்கூட்டு முதலாளித்துவ வர்க்கங்களுக்காகக் கார்பொரேட்டுக்களால் உருவாக்கப்பட்ட புதிய தாராளவாத பொருளாதாரக் கொள்கைப் பரிந்துரைகளுக்கு இந்த நிதிநிலை அறிக்கை 2021 தயக்கமற்ற ஒப்படைவைக் காட்டுகிறது.

இந்த நிதிநிலை அறிக்கை ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. கூறிக் கொள்ளும் பொருளாதார தேசியவாதத்தின் போலித் தன்மையை அம்பலப்படுத்துகிறது. மோசடிக் கருத்து இந்துதுவா போலித்தனத்தின் சித்தாந்தக் கதையாடல் மற்றும் அரசியல் மூல உத்திகளுக்குள் எழுதப்படுகிறது.

அதில் துணிச்சலான எதுவும் இல்லை, எந்தத் தீர்வும் இல்லை. இந்த நிதிநிலை அறிக்கை பொருளாதார மீட்சிக்கான இந்துத்துவா போலிக் கையேடாக இருக்கிறது. இதில் கார்பொரேட் இலாபங்களும் மக்கள்திரள் துயரங்களுமே உறுதிப்படுத்தப்படுகின்றன.

இந்த நிதிநிலை அறிக்கை நெருக்கடியை மேலும் தீவிரமாக்குகிற, இந்தியப் பொருளாதாரத்துக்கும் சமுதாயத்துக்கும் இன்னொரு அதிர்ச்சி வைத்தியமாகும்.

இந்த நிதிநிலை அறிக்கையில் வறுமையையும் வேலையின்மையையும் ஒழிப்பதற்கான எந்தத் திட்டமும் இல்லை. அது மக்களுக்குக் குறைந்தபட்சமாகவும் அவருடைய கள்ளக்கூட்டு முதலாளித்துவ நண்பர்களுக்கு அதிகபட்சமாகவும் ஆதரவளிக்கும் திருவாளர் நரேந்திர மோடியின் கருத்தை உண்மையாக உயர்த்திப் பிடிக்கிறது.

அவர் தனக்குத் தேர்தல் பிணைப்புக்கள் மூலம் தேர்தல் செலவுகளுக்கு ஆதரவளித்த கார்பொரேட் நண்பர்களுக்கு தனது பதில் ஆதரவைத் தருகிறார். இது வாக்காளர்களுக்கு ஜனநாயகப் பொறுப்புடைமை இல்லாத கார்பொரேட் நிதிநிலை அறிக்கையாகும்.

போலி மருத்துவர்களை நம்புவதைப் போல, இந்தியாவையும் இந்தியர்களையும் அழிவுக்கு இட்டுச் செல்கிற இந்துத்வா போலித்தனத்தையும் அவர்களுடைய தீவிரப் பிரச்சாரத்தையும் மக்கள் இன்னும் நம்புகிறார்கள்.

இந்த நிதிநிலை அறிக்கை தேவையை ஊக்குவிக்கவும் இல்லை, உற்பத்தியையும் விநியோகத்தையும் தூண்டிவிடவும் இல்லை. அது அத்தியாவசியப் பண்டங்களையும் சேவைகளையும் அணுகுவதையும் அடைவதையும் சாத்தியமில்லாமல் போகும் நெருக்கடியைத் தீவிரப்படுத்துகிறது.

இந்த நிதிநிலை அறிக்கை மக்களை மேலும் விளிம்பு நிலைக்குத் தள்ளுவதோடு, வறுமை, உணவுப் பாதுகாப்பின்மை, வேலையின்மை, படிப்பறிவின்மை, நோய்கள் மற்றும் பொருளாதார நெருக்கடி ஆகியவற்றை மேலும் தீவிரப்படுத்தும்.

இந்த நெருக்கடி நிலைமைகள் இந்துத்வா மோசடியை நீடித்திருக்கச் செய்வதற்கு இன்றியமையாத் தேவைகளாக இருக்கின்றன.

வறுமை, அறியாமை, படிப்பறிவின்மை ஆகிய நிலைமைகளால் உருவாக்கப்பட்டுள்ள நெருக்கடி இந்திய அரசியலிலும் கலாச்சாரத்திலும், சமுதாயத்திலும் இந்துத்துவா போலித்தனத்தை உற்பத்தி செய்கிறது.

கூட்டம் நிரம்பிய தெருக்களிலும், சந்தையிடங்களிலும், தொலைதூரக் கிராமங்களிலும் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி பெற்ற இந்துத்துவாப் போலிகள், தங்களுடைய அதிகாரத்தையும் திறன்களையும் பற்றித் தீவிரமாகக் கூச்சலிடுவதன் மூலம் தங்களுடைய மோசடியான நடைமுறைகளையும் அறியாமையையும் மறைக்கின்றனர்.

இந்துத்துவாப் போலிகள் தாங்கள் மட்டுமே மாற்று என்று பிரச்சாரம் செய்வதற்கான ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்துகின்றனர்.

இந்தப் போலிகள் அமைப்பு ரீதியான வலைப்பின்னல்கள் மூலமும் அச்சத்தை வரவழைக்கும் பிரச்சாரம் மூலமும் இனிப்புத் தடவிய பிரச்சாரத் திறன்களைப் பயன்படுத்தி தங்களுக்குப் பலியாவோரை அறிதுயிலில் ஆழ்த்தி மயக்குறச் செய்கின்றனர். ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. இரண்டும் சொல்லிலும் உணர்விலும் போலித்தனத்தின் அதிகார அறிவிப்பைப் பின்பற்றுகின்றன.

இந்துத்துவாப் போலித்தனத்தின் செருக்கையும் அறியாமையையும் மறைப்பதற்கு கார்பொரேட் ஊடகப் பெருநிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் உறுதுணையாக இருக்கின்றன.

நம்பிக்கையிழந்த நிலையில் உள்ள இந்திய மக்கள் திருவாளர் நரேந்திர மோடியின் தலைமையிலான இந்துத்வாப் போலிகளிடம் நம்பிக்கை வைக்கின்றனர். தங்கள் உடனடி வலி மற்றும் துன்பங்களிலிருந்து விடுதலை பெறுவதை எதிர்பார்க்கிறார்கள்.

ஆனால் மக்கள் தங்கள் உடனடி வலி மற்றும் துன்பங்களிலிருந்து விடுதலை பெறுவதை இந்துத்வாப் போலிகள் விரும்பவில்லை. அமைதி, வளமை, மருத்துவ நலம், கல்வி, அறிவியல்பூர்வ நம்பிக்கைகள், சமூக ஒற்றுமை, பாதுகாப்பான வேலைவாய்ப்பு, மற்றும் உணர்வுபூர்வமான குடிமக்கள் ஆகியவை இந்தியாவில் இந்துத்வா போலிகளின் இருத்தலுக்கே நிரந்தரமான அச்சுறுத்தல்கள் ஆகும்.

ஆகவே, ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.வால் உருவாக்கப்பட்டு, வழிநடத்தப்படும் இந்துத்துவாப் போலிகள் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக மேம்பாட்டுப் பாதையைத் தடுத்து நிறுத்துவதற்கான ஒவ்வொரு வாய்பையும் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

இந்தியாவையும் இந்தியர்களையும் நீண்ட காலத்திற்குக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் அவர்களைத் தங்கள் விருப்பத்திற்கேற்ப இயக்கவும், அவர்கள் மீது மேலாதிக்கம் செலுத்தவும் காலவரம்பற்ற நெருக்கடி நிலைமைகள் இந்துத்வாப் போலிகளுக்கு முழுநிறைவான வாய்ப்பாக இருக்கின்றன.

வரலாற்றில் போலிகளின் காலம் நீடித்து இருந்ததில்லை. அவர்களுடைய போலிமைகள் அனைத்தும் எப்போதும் வரலாற்றின் குப்பைத் தொட்டிக்கே சென்று சேர்கின்றன. மக்கள்திரள் உணர்வுநிலை பரவியதும் முடிவுக்கு அது வந்துவிடுகிறது.

இந்தியாவில் இந்துத்துவா போலிமையின் எதிர்காலம் வேறுமாதிரி இருக்கப் போவதில்லை. இந்துத்துவாப் போலித்தனத்துக்கு எதிரான மக்கள் திரள் உணர்வுநிலையும் மக்கள்திரள் போராட்டமும் மட்டுமே இந்தியாவில் அமைதிக்கும் முன்னேற்றத்துக்குமான ஒரே நம்பிக்கையாகும்.

மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசாங்கம் இந்தியாவில் இந்தியப் பொருளாதாரம், ஜனநாயக அரசியல், பன்மைக் கலாச்சாரம் ஆகியவற்றின் அடிப்படைகளைப் பற்றிய அறியாமையில் இருக்கிறது என்பதை இந்த நிதிநிலை அறிக்கை பிரதிபலிக்கிறது.

இந்துத்துவா போலிமையின் தோல்வி அதன் உள்ளார்ந்த இயல்பிலேயே இருக்கிறது என்பதும், நெருங்கி வருகிறது என்பதும் தெளிவாகத் தெரிகிறது.

நன்றி: ஃபிரான்டியர் இதழ்

பவானி சங்கர் நாயக்

தமிழில்: நிழல்வண்ணன்