ஐரோப்பிய தேசங்களுள் உலகின் கவனத்தை மிகவும் ஈர்த்து நிற்பது தற்கால ருஷ்யாவேயாகும். சில நூற்றாண்டுகளுக்குமுன் வரை ருஷ்யாவானது ‘அரை ஐரோப்பிய’ தேசமாகவே கருதப்பட்டு வந்தது. காரணம், அதன் நாகரிகமின்மையே. பீட்டர் எனும் அரசன் காலத்திலே தான் ருஷ்யாவுக்கும் சம அந்தஸ்து அளிக் கப்பெற்றது. அதன்பின் ருஷ்யாவானது பல துறை களிலும் முன்னேறிச் சென்று ஒரு சாம்ராஜ்யம் எனச் சொல்லும்படியாயிற்று. சமீபகாலத்தில் மகாயுத்தம் நடந்து கொண்டிருக்கும் பொழுது ருஷ்யாவில் ஒரு பலத்த உள்நாட்டுக் கிளர்ச்சி தோன்றி ருஷ்யா சக்ரவர்த்தியை துரத்திவிட்டு ஜனங்களே - அதிலும் ஏழை தொழிலாளர்களே அரசாங்கத்தைக் கைப்பற்றிக் கொண் டார்கள். அதன் பெயரே போல்ஷ்விக் ஆட்சி. அதன் கொள்கைகளில் அநேகம் சமதர்மத்தை அடிப்படை யாகக் கொண்டன.

அதன் கொள்கைகளுள் சொந்த சொத்து, மூலதனம் முதலியவற்றை இவ்வுலகத்திலே இல்லாமல் செய்வது தான் தலைநிற்பதாகும். சொத்து, நிலம், பணம் முத லானவைகள் தேசத்தாருக்குப் பொது உரிமையுடையன என்பது இரண்டாவது கோட்பாடாகும். மூன்றாவதாக உலக சகோதரத்துவத்தை ஏற்படுத்துவது, எதிர்ப்பு, கிளர்ச்சி, பலாத்காரம் முதலியவைகள் எல்லாம் மேற் சொன்ன மூன்றை ஏற்படுத்தவதற்காகக் கையாண்ட உபகரணங்களேயன்றி, அக்கட்சியின் முடிவுகள் அல்ல. இத்தகைய அரசியல் முறையை ஏற்படுத்திவிட்டால், மனிதருக்குள் உயர்வு தாழ்வு, பிறப்பு வேற்றுமை, பல தேசங்களுக்குள் யுத்தம் ஆகியவைகள் ஏற்படா தென்பது அவர்கள் துணிவு.

அப்பொழுது உலகமே ஒன்றாகி எல்லோரும் சகோதரர்களாய் கஷ்டம் என்பதைக் கனவிலும் கண்டறியாது சுபிட்ச வாழ்க்கையை மேற்கொள்வார்கள் என்பது திண்ணம். அவ்வரசாட்சி யில் பணம் மறைந்து போய்விடும். பிரத்தியேக வரவு, செலவு வேண்டியதில்லை. வரி விதிப்பு கிடையாது. பணக்காரர்கள், ஏழைகள் என்றும், முதலாளிகள், தொழிலாளிகள் என்றும், வியாபாரிகள், விவசாயிகள் என்றும் பிரிவினை இருக்காது.

எல்லா ஜனங்களும் தாங்கள் குறிப்பிட்ட நேரம் வேலை செய்ததின் பயனாய்த் தங்களுக்கு வேண்டிய பொருள்களைப் பெற்றுக் கொள்வார்கள். எல்லோருக்கும் கட்டாய வேலை; எல்லாச் சொத்துகளும் தேசத்தைச் சேர்ந்தன ஆகிய இரு கொள்கைகளான அஸ்திவாரத்தின் மேலே போல்ஷ் விக் எனும் குடியாட்சிக் கட்டடம் எழுப்பப் பெற்றி ருக்கிறதென்பதை யாவரும் அறிய வேண்டும்.

அந்த நாட்டில் ஒருவர் வேலை செய்து சாப்பிட வேண்டும்; அல்லது பட்டினிக்கிடந்து இறக்க வேண்டும். தான் யாதொரு வேலையுஞ் செய்யாமல் பிறர் செய்யும் வேலையால் சாப்பிட்டு ஏப்பமிடும் அயோக்கியர்களுக் கும்,  தெரியாதவர்களை ஏமாற்றி வாய்ப்பேச்சினால் வயிறு வளர்க்கும் அன்னக்காவடிகளுக்கும், பிதுரார்ச்சிதத்தி னால் வந்த சொத்தைக் கொண்டு உண்டு வண்டவாள மளக்கும் சிறுவர்களுக்கும், பணக்கார மமதையினால் உண்டு உறங்கி உடுத்தி வாழ்வதே நோக்கமாகக் கொண்டு பஞ்சணையின்மேல் சல்லாபஞ் செய்யும் வீரர்களுக்கும் அத்தேசத்தில் இடம் இல்லை.

அத்தேசத்தின் ராஜ்ய பாரம் எவ்வாறு நடக்கிற தென்பதைக் கவனிப்போம். ஒவ்வொருவருக்கும் ஒரு நோட்டுக் கொடுக்கப் பெறுகிறது. அதில் அவர்கள் ஒவ்வொரு நாளும் செய்த வேலையை நிமிஷக் கணக்குப் போட்டுப் பதிவு செய்ய வேண்டும். அதைப் பரிசோதித்த பின் தான் மேலதிகாரி உணவுச் சீட்டு அளிப்பார். தொழிலாளிகளே பொருளாதாரமான எல்லா விஷயங்களையும் கவனித்துக் கொள்கிறார்கள். தனி யாக விற்கவோ வாங்கவோ வேண்டியதில்லை. சொந்த அலுவல் பார்க்க வேண்டிய அவசியமில்லை. முன் னேற்பாட்டின்படி ஒவ்வொரு வேலையும் செவ்வனே நடைபெறும்.

நிலமும், சொத்தும் சொந்தமாக அனுபவிக்கும்படி விட்டுவிடின் அமைதியும், நியாயமும் நிலவுமென்று நினைக்க இடமில்லை. ஒரு தடவை எல்லோருக்கும் சமமாகப் பகிர்ந்து கொடுத்துவிட்ட போதிலும் சிறிது காலத்திற்குள் பலவித மாறுதல் ஏற்பட்டுவிடும். இப் படியேதான் எல்லா தேசங்களிலும் காணப்பெறும் பொருளாதார வேற்றுமை உண்டானது. இதற்குப் பரிகாரம் எல்லாச் சொத்தையும் தேசத்திற்கு உரிமை யாக்கிவிட வேண்டியதைத் தவிர வேறு வழியில்லை. எல்லா நிலங்களையும் அரசாங்கத்தார் கைப்பற்றி ஒவ்வொரு விவசாயப் பகுதியாகப் பிரித்து எல்லோருக் கும் சமமான வேலை விடுத்தலே நியதியாகும். அம்மாதிரியே தொழிற்சாலைகளும், அரங்கங்களும். ஏனெனில் சொந்தச் சொத்தாகக் கொடுத்துவிட்டால் மனித சுபாவமான தன்னலம் பிறரைத் தாழ்த்தித் தான் அதிக நலமடையும்படி செய்கிறது.

அத்தேசத்தில் 16 வயது முதல் 50 வயது வரை உள்ளவர்கள்தான் வேலை செய்ய வேண் டும். நோயைப் பரிகரிப்பதற்கும் தவிர்ப்பதற்கும் ஏராளமான கவர்ன்மென்ட் டாக்டர்கள் இருக் கிறார்கள். வேலையில்லாத நேரத்தில் காலங் கழிக்க லைப்ரேரிகளும், மியூசியம்களும், பார்க்கு களும் உண்டு. எல்லோரும் தொழிலாளிகளாகவும், முதலாளிகளாகவுமிருக்கிறார்கள். சந்தோ ஷமே எங்கும் பரவியிருக்கிறது.

இத்தகைய ஆட்சியின் பேரொலி நாற்புறங்களிலும் சண்டமாருதம் போன்று வீசி உலக மக்களின் மனதைத் தன்பால் திருப்பி வருகிறது. ஒவ்வொரு நாடும் சமதர்ம ஆட்சிக்கு விரைவாகச் சென்று கொண் டிருக்கிறது. அதுபோல் தென்னிந்தியாவும் தெளிர்ச்சி யடைந்து உண்மைக் குடியாட்சிக்குத் தன்னைத் தயாரித்து வருகிறது என்று சொல்லின் மிகையாகா. ஆகவே எங்கணும் காட்டுத் தீபோல் பரவிவரும் சமதர்ம-சுயமரியாதை-உண்மை சுயராஜ்ய இயக்க மானது உலக மாறுபாட்டின் ஒரு பகுதியேயாகும்.

(“நாடார் குல மித்திரன், 5-1-1931)

Pin It