“உன்னுடைய கருத்தை வரிக்கு வரி நான் மறுக்கின்றேன். ஆனால் அந்தக் கருத்தை நீங்கள் வெளியிடுவதற்கான சுதந்தரத்தைப் பெற்றுத் தருவதற்காக எனது உயிரையும் தர ஆயத்தமாக இருக்கிறேன்” என்றார், வால்டேர். ஓர் உண்மையான சனநாயகத்தில் இத்தகைய ஆரோக்கியமான அணுகுமுறைதான் இருக்க வேண்டும். ஆனால் நிலவும் சமூக வெளியில் தனக்கு உவப்பாக இல்லாத கருத்தை ஒருவர் வெளியிடுவதை ஒரு சிறிதும் சகித்துக் கொள்ளமுடியாத அவல நிலைதான் தமிழகத்தில் நடைமுறையாக உள்ளது. இதன் வெளிப்பாடுதான் 2016 சூன் 4ஆம் நாள் சென்னையில் “இடது” காலாண்டிதழ் சார்பாக வெளியிடப்படுவதாக இருந்த மனிதநேயப்  போராளி தோழர் எஸ்.வி.ஆர். என்னும் ஆவணப்படத்திற்குக் காவல்துறையினால் மிக அவசரமாக விதிக்கப்பட்ட தடையாகும்.

எஸ்.வி.ராஜதுரை எனும் மாமனிதர் தமிழ்ச் சமூகத்திற்கு அளப்பரிய அறிவுக்கொடையை நல்கியவர். ஏறக்குறைய 80க்கும் மேற்பட்ட அரிய ஆய்வுநூல்களை வழங்கியவர். அகில இந்திய அளவில் மட்டுமல்லாமல், அகில உலகும் பெரியாரை அறியும் வண்ணம், அவரைப் பற்றி மிகச் செறிவான அறிமுகத்தை ஆங்கிலத்தில் அளித்தவர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியார் உயராய்வு மையத்தில் தலைவராக இருந்து பல்வேறு ஆய்வுத் தொடர்பான அரும்பணிகளைத் தொய் வின்றி ஆற்றியவர்.

“சென்றிடுவீர் எட்டுத் திக்கும்; கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்” என்னும் தமிழ்க் கவிஞனின் ஆணைக்கு ஏற்ப, மார்க்சியம் குறித்து உலகெங்கும் நிலவக்கூடிய பல்வேறு போக்குகளை யும் அவற்றின் முக்கியத்துவத்தையும் தனது எழுத்து களில் பதிவு செய்தவர். பல்வேறு நாடுகளில் உள்ள தெரிவு செய்யப்பட்ட கவிஞர்களின் அழகான கவிதை களைச் சிறப்பான முறையில் தமிழில் அறிமுகம் செய்தவர்.

காவல்துறை அத்துமீறலை எதிர்த்து மக்களைத் திரட்டிப் போரிட்டவர். தூக்குத்தண்டனை பெற்ற பலரையும் உச்சநீதிமன்றம் வரை சென்று போராடி அவர்களது உயிரைக் காத்தவர். எங்கெல்லாம் மனித உரிமைகள் பாதிக்கப்படுகின்றனவோ அங்கெல்லாம் இன்றுவரை அவரது குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டி ருக்கிறது. அரசு அடக்குமுறைக்கு அஞ்சாமல் அவர் எடுத்த முன்னெடுப்புக்கள் சமூக நலனுக்காகப் போராடுபவர்களுக்கு ஆதர்சத்தையும் உத்வேகத்தையும் அளிக்கக் கூடியதாக இருக்கிறது.

இலக்கிய விமர்சனம், இசை, நவீன ஓவியம், திரைப்படம் ஆகிய துறைகளில் ஞானம் மிக்கவர் எஸ்.வி.ஆர். இப்படிப்பட்ட பன்முக ஆளுமை கொண்ட அறிவுஜீவிகள் இன்றைய தமிழ்ச் சமூகத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே உள்ளனர்.

எஸ்.வி.ஆர். போன்றவர்களின் வாழ்வும் பணியும் இளைஞர்களுக்கு எதிர்காலத்தில் அவர்களது செல்நெறி யைத் தீர்மானிக்கப் பெரிதும் வழிகாட்டியாக உள்ளன. தமிழ்ச் சமூகம் கொண்டாட வேண்டிய ஓர் அறிவுஜீவி குறித்த ஆவணப்படத்தை வெளியிடக்கூடாது என்று தடை செய்வது சனநாயக மரபுகளுக்கு எதிரானது மட்டுமல்ல, அடிப்படை மனித உரிமைக்கே முரணான தாகும்.

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, மார்க்சிஸ்டுக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தமிழகப் பொதுச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் மூத்தத் தலைவர் இரா. நல்லக்கண்ணு, திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கு. இராமகிருஷ்ணன், இந்தியக் கம்யூனிட்டு ம.லெ. (விடுதலை) பொதுச் செயலாளர் பாலசுந்தரம், கவிஞர் இன்குலாப், பேராசிரியர் வீ. அரசு, தலித் முரசு ஆசிரியர் புனிதப் பாண்டியன், ஓவியர் டிராட்ஸ்கி மருது, பத்திரிகையாளர் ஞானி, திரைப்பட ஒளிப்பதிவாளர் செழியன், தீக்கதிர் ஆசிரியர் அ. கும ரேசன், தமிழ்நிலம் ஆசிரியர் பொழிலன், தமிழறிஞர் கோவை ஞானி, எழுத்தாளர் வ. கீதா, புதுவிசை ஆசி ரியர் ஆதவன் தீட்சண்யா, மார்க்ஸ் நூலகப் பொறுப் பாளர் சதீஸ் ஆகியோர் எஸ்.வி.ஆருடைய அறிவு மற்றும் நடைமுறைப் பங்களிப்புக் குறித்துத் தத்தம் கோணத்தில் இந்த ஆவணப் படத்தில் பதிவு செய் துள்ளனர். இதுதான் இந்த ஆவணப் படம். இவை யன்றி ஆட்சேபணைக்குரிய வேறேதும் அதில் இல்லை.

ஆவணப் படம் திரையிடப்படவிருந்த ஒரு மணிநேரத் திற்கு முன்பு சென்னைக் காவல்துறையினர் எனக்கு ஓர் அறிக்கையை அளித்தனர். அதில் கீழ்க்கண்ட சான்றி தழ்களை ஒரு மணி நேரத்திற்குள் நேரடியாக வழங்கு மாறு அறிவுறுத்தினர்.

* ஆவணப்படம் திரையிடுவதற்கு மாவட்ட ஆட்சியரிடமிருந்து பெறப்பட்ட சான்றிதழ்.

* தமிழ்நாடு திரைப்படப் பிரிவுக் குழுமத்திடம் இந்த ஆவணப்படம் பதிவு செய்யப்பட்டதற்கான சான்றிதழ்.

* திரைப்படத் துறை (சினிமாடோகிராபி) சட்டம் 1952 இன்கீழ் பெறப்பட்ட தணிக்கைக்குழுச் சான்றிதழ்.

* அரசியல், மதம் அல்லது பரபரப்பான சமூகப் பிரச்ச னைகளை உள்ளடக்கி சட்டம் ஒழுங்கைப் பாதிக்கக் கூடிய எவையும் இந்த ஆவணப்படத்தில் இல்லை என்னும் சான்றிதழ்.

மேற்காண் சான்றிதழ்களை ஒரு மணி நேரத் திற்குள் வழங்காவிட்டால், குறுவட்டுக்கள் மற்றும் கருவி கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும் என்றும் காவல்துறை அறிக்கை எச்சரித்தது. காவல்துறையினர் கேட்டிருந்த சான்றிதழ்கள் எந்தச் சட்டப்பிரிவு களின் அடிப்படையில் கேட்கப்பட்டுள்ளன என்ற விவரம் இந்த அறிக்கையில் இல்லை. மேலும் எஸ்.வி.ஆர். குறித்த ஆவணப் படத்தை மிகப் பரவலாக விளம்பரம் செய்து அனைவரையும் திரட்டும் முயற்சி எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

எஸ்.வி.ஆர். மீது அன்பும் கரிசனமும் மிக்க அவரது நட்பு வட்டத்தைச் சார்ந்த நண்பர்கள் மட்டுமே இந்த ஆவணப்படத்திற்காக அழைக் கப்பட்டிருந்தனர். இத்தகைய சூழலில் இந்த ஆவணப் படத்தை மிகவும் அவசரமாக சில தொழில்நுட்பக் காரணங்களைக் காட்டித் தடை செய்ய வேண்டிய தேவை என்ன என்ற கேள்விக்கு பதிலேதும் இல்லை. எனினும் எஸ்.வி.ஆர். மீது பேரன்பும் பெருமதிப்பும் கொண்டிருந்த நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க தனிப்பட்ட முறையில் ஓர் உள் அரங்கில் இப்படம் அன்றே திரையிடப்பட்டது.

கருத்துகளைத் தடை செய்வது, அந்தக் கருத்து களைக் கூறுபவர்களுக்குக் கடும் தண்டனை வழங்கு வது போன்றதுதான். வரலாற்றில் இதைப்போன்ற தடைகள் சனநயாக சக்திகளால் தூக்கியெறியப்பட் டுள்ளன. தமிழகத்தில் கருத்துரிமைக்கான வெளி சுருங்கி வருவது ஏற்கத்தக்கதல்ல. அதுமட்டுமல்லாமல் கடும் கண்டனத்திற்கும் உரியதாகும். எஸ்.வி.ஆர். ஆவணப் படத்திற்கான தடை என்பது ஒரு தொடக்கம் தான். இதைத் தமிழ்ச் சமூகம் அனுமதித்தால் கருத்துரி மையின் குரல்வளை எதிர்காலத்தில் முழுமையாக நசுக்கப்படும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

எனவே நெருக்கடியான இத்தருணத்தில் சனநாயக சக்திகள் இத்தடையை எதிர்த்துப் பல்வேறு தளங் களிலும் தங்களது குரலை வலிமையாகப் பதிவு செய்ய வேண்டும். இது ஏதோ எஸ்.வி.ஆர். என்ற தனி மனிதருக்கு நாம் காட்டக் கூடிய சலுகை அல்ல. மாறாக ஓர் ஆரோக்கியமான சமூகத்தைக் கட்டி யெழுப்புவதற்கான எளிய முயற்சியாக இத்தகைய எதிர்ப்புகள் பதிவு செய்யப்படவேண்டும்.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.