கோயில் கருவறை நுழைவுப் போராட்டம் என்பது ஒரு ஐம்பது ஆண்டு வரலாற்றைக் கொண்டதாகும்.
பெரியார் அவர்கள் இதுதொடர்பாக பல கட்டுரைகளை எழுதியும், சொற்பொழிவுகளை நிகழ்த்தியும் நமக்கு மான உணர்வை ஊட்டினார்.
“இந்துக்கள் என்கிற சமுதாயத்தில் பார்ப்பனர் அல்லாத மக்களாகிய நாம் எல்லோரும் “சூத்திரர்கள்”, “கீழ்ப் பிறவியாளர்” என்று சட்டம், சாத்திரம் முதலியவற்றில் குறிப்பிடப்பட்டிருப்பதோடு, “கோவில்கள் முதலியவற்றின் மூலஸ்தானம், கர்ப்பகிரகம் என்பவற்றில் பிரவேசிக்கக் கூடாதவர்கள்” என்று இழிவுபடுத்தப்பட்டி ருக்கிறோம்...
ஆகவே தமிழ்நாட்டில் தமிழ்நாட்டுப் பார்ப்பனர் அல்லாத மக்களாகிய நம்மை இழிவுபடுத்தவும், கீழ்மைப்படுத்தவும் சட்டத்தின் மூலம் செய்து கொண்டிருக்கிற ஏற்பாட்டை நாம் உடைத்தெறிய வேண்டியது நம் ஜீவிதக் கடமையாக இருக்கிறது” என்று எழுதினார். (விடுதலை 13.10.1969)
மேலும் கருவறை நுழைவுப் போராட்டம் குறித்துப் பெரியார் விளக்கம் அளித்துள்ளார்.
“சூத்திரர் என்கிற இழிவு நீக்கக் கிளர்ச்சி செய்வது என்பது சமுதாய சம்பந்தமான காரியமே தவிர, இதில் அரசியல் எதுவும் இல்லை. மற்றும் இதில் பலாத்காரம் என்பதும் இல்லை.
அதிலும் இந்த இழிவு நீக்கக் கிளர்ச்சி என்பது, உலகில் எங்குமே இல்லாத அக்கிரமக் கொடுமையில் இருந்து மனிதன் விடுதலை - மானம் பெற வேண்டும் என்பதற்கு ஆக நடத்தப்படும் கிளர்ச்சியாகும். இதில் எந்தவித வகுப்புத் துவேஷமோ, வகுப்பு வெறுப்போ இல்லை.” (விடுதலை 15.10.1969)
கருவறை நுழைவுப் போராட்டக் கிளர்ச்சிக்கு பெரியார் அழைப்பு
“கிளர்ச்சி என்பது நமக்குப் புதிது அல்ல; சிறை செல்வதும் புதிதல்ல; சட்டம் கொளுத்தி, பிள்ளையார் சிலை உடைத்து, இராமன் படம் எரித்துப் பல முறை சிறை சென்றிருக்கின்றோம். அதுபோல, சமுதாயத் துறையில் நாம் சாதித்திருக்கிறவை பல உண்டு.
நம் இழிவைப் போக்க நாம் பல கிளர்ச்சி செய்திருந்தாலும், இக்கிளர்ச்சி மிக முக்கியமானதாகும். இதில் நம் மக்கள் ஒவ்வொருவரும் பங்கேற்க வேண்டியது அவசியமாகும். அதற்காக ஒன்றும் பாடுபட வேண்டியதில்லை. வேப்பெண்ணெய்யைக் குடிக்க வேண்டியதில்லை. போய் நுழைய வேண்டியது, தடுத்தால் நின்றுவிட வேண்டியது; அவ்வளவுதான். இங்குள்ள உங்களிலேயும் வசதிப்பட்டவர்கள் நாங்கள் கிளர்ச்சியில் சேருகிறோம் என்று பெயர் கொடுத்து கலந்து கொள்ள வேண்டும். நமக்கிருக்கிற வேலை யெல்லாம் மந்திரியாக வேண்டுமென்பதோ, ஆட்சியைக் கைப்பற்ற வேண்டுமென்பதோ அல்ல. கலெக்டராக வேண்டுமென்பதோ அல்ல. நம் சமுதாயத்திலிருக்கிற இழிவை ஒழிக்க வேண்டும் என்பதேயாகும்.” (12.10.1969 அன்று திருச்சியில் தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவு - விடுதலை 20.10.1969)
கோயில் கருவறைக் கிளர்ச்சிக்குப் பெயர்களைக் கொடுக்குமாறு பெரியார் வேண்டுகோள்
“தமிழர்களின் பிறவி இழிவு நீக்கக் கிளர்ச்சிக்கு அதாவது, கோயில்களில் “சூத்திரர் செல்லக்கூடாத இடம்”, “கர்ப்பக்கிரகம்”, “மூலஸ்தானம்” என்று பார்ப்பனர் அல்லாத இந்து மக்களுக்குத் தடுக்கப் பட்டிருக்கும் இடத்திற்குள் செல்லும் கிளர்ச்சியில் கலந்து கொள்ள இஷ்டமுள்ள ஆண், பெண் ஆகியோர் தயவுசெய்து உடனே தங்கள் பெயரை கையொப்பத்துடன் எனக்கு அனுப்பிக் கொடுக்க வேண்டுகிறேன்.” (விடுதலை 10.10.1969)
16.11.1969-இல் திருச்சியில் நடைபெற்ற தி.க. மத்தியக் குழுக் கூட்டத்தில் 26.1.1970 அன்று கருவறை நுழைவுப் போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
அப்போதைய முதலமைச்சர் கலைஞர் அவர்கள் 17.01.1970 அன்று “அனைத்து சாதியினரையும் அர்ச்சகர்களாக்கிட இந்த அரசு முயற்சி செய்யும். எனவே பெரியார் அவர்கள் போராட்டம் நடத்த வேண்டாம்” என்று அறிக்கை வெளியிட்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு கலைஞர் அவர்களின் வேண்டுகோளை ஏற்று, பெரியார் அவர்கள் 19.1.1970 அன்று கருவறை நுழைவுப் போராட்டக் கிளர்ச்சியை ஒத்தி வைத்தார்.
தமிழ்நாட்டு அரசின் சட்டமன்றத்தில் 30.11.1970 அன்று அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக ஏற்ற வகையில் சட்ட முன்வடிவு முன்மொழியப்பட்டு, 2.12.1970 அன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. சட்டமன்றத் தீர்மானத்தையொட்டி 1971ஆம் ஆண்டில் தமிழ்நாட்டு அரசு அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வருவதற்கு வழிவகைச் செய்யும் சட்டத் திருத்தத்தை கொண்டு வந்தது.
இந்தச் சட்டத் திருத்தத்தை எதிர்த்து 12 பேர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.
அப்போதைய தலைமை நீதிபதியாக இருந்த எம்.எஸ். சிக்ரி தலைமையில் அய்ந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு 14.3.1972 அன்று தீர்ப்பளித்தது.
அந்தத் தீர்ப்பில் “பரம்பரை அர்ச்சகர் முறையை ஒழிக்கும் தமிழக அரசின் சட்டத்தை வரவேற்ற போதிலும், ஆகம விதிகளை மீறக் கூடாது; அப்படி மீறுவது இந்திய அரசியல் சட்டம் 25(1)-இல் அளிக்கப் பட்டுள்ள மத உரிமைகளுக்கு எதிரானது; எனவே இந்தச் சட்டம் செல்லாது" என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை பெரியார் வன்மையாகக் கண்டித்தார். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு “ஆபரேஷன் வெற்றி; நோயாளி செத்தார்” என்று விடுதலையில் 15, 16.03.1972-இல் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் அந்தத் தீர்ப்பை விமர்சனம் செய்து தலையங்கம் எழுதி இருந்தார்.
28.6.1972-இல் சென்னையில் திராவிடர் கழகம் சார்பில் சமூக இழிவு ஒழிப்பு மாநாட்டை பெரியார் நடத்தினார். அம்மாநாட்டில் நம்முடைய இழிநிலையை எடுத்துரைக்கும் தன்மையில், கோயில்களில் வழிபடுவதற்கு வரும் மக்களிடம் நம் இழித்தன்மையை விளக்கிக் கூறி, அவர்களுடைய அறியாமையை நீக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாநாட்டின் தீர்மானத்தையொட்டி, 18.6.1972 மயிலை கபாலீசுவரர் கோயில் முன்பு கிளர்ச்சி செய்ய சென்ற திராவிடர் கழகத் தோழர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. எனவே பெரியார் கிளர்ச்சி ஒத்தி வைப்பதாக அறிவித்தார்.
தந்தை பெரியார் அவர்களின் இறுதி பிரச்சாரத்தில் பயணம் என்பதே இதை விளக்கி உரையாற்றுவதற்கானதுதான். 18.11.1973 முதல் 28.11.1973 வரை எல்லா மாவட்டங்களுக்கும் தன்னுடன் தோழர் ஆனைமுத்து அவர்களை பெரியார் அழைத்துச் சென்றார். ஆனைமுத்து அவர்களின் விரிவான விளக்கச் சொற்பொழிவை செவிமடுத்த பெரியார் அவர்கள் 27.11.1973 அன்று சேலத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ‘பேரறிஞர் ஆனைமுத்து’ அவர்களே என்று விளித்தார்.
பெரியார் அவர்கள் 1973-ஆம் ஆண்டு திசம்பர் திங்கள் 8, 9 இரண்டு நாள்கள் ‘இன இழிவு ஒழிப்பு மாநாடு’ என்ற பெயரில் மாநாடு நடத்தினார். தோழர் வே. ஆனைமுத்து அவர்கள் இம்மாநாட்டில் பல சட்ட நூல்களை மேற்கோள்காட்டி இரண்டு மணிநேரம் உரையாற்றினார்.
1974 சனவரி 26-க்குள் இந்திய அரசு இன இழிவு ஒழிய வழிவகை காணாவிட்டால் மிகப்பெரிய கிளர்ச்சியை நடத்துவது என்று இம்மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
24.12.1973-இல் பெரியார் மறைவுற்றதையொட்டி அவர் அறிவித்த கிளர்ச்சி நடைபெறாமலே போய் விட்டது.
அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்க வேண்டும் என்று திராவிடர் கழகம் பல போராட்டங்களை நடத்தியதன் காரணமாக, 1979-இல் முதலமைச்சராக இருந்த எம்.ஜி. இராமச்சந்திரன் அவர்கள், 24.9.1979-இல் ஓய்வுபெற்ற நீதிபதி மகராசன் தலைமையில் ஒரு குழுவை அமைத்தார். அந்தக் குழுவின் அறிக்கை 27.8.1982-இல் அரசிதழில் வெளியிடப்பட்டது. அதன் பரிந்துரைகள் :
- இந்து சமயம் சிறப்பாக வளரும் பொருட்டு, இந்துக்களுக்குள் சாதி வேறுபாடின்றி தீவிரமான பயிற்சி அளித்துக் கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிப்பது, ஆகமத்திற்கு மாறுபட்டதாகும் என்று கருதுவதற்கு இடமில்லை.
- அர்ச்சகராகத் தேர்ந்தெடுப்பவருக்கு
அ) அய்ந்தாண்டுகால தீவிரமான கல்விப் பயிற்சியும் செயல்முறைப் பயிற்சியும் அறநிலையத் துறையின் பொறுப்பில் அளிக்க வேண்டும்.
ஆ) பயிற்சி சம்பந்தமான சேர்க்கை விதிகள் பயிற்சி பாடத்திட்டம் - தேர்வுத் திட்டம் பாடப் புத்தகங்கள் முதலான அனைத்து காரியங்களையும் நிர்வகிப்பதற்கு அறநிலையத் துறை ஆகமச் சபை ஒன்றை நிறுவ வேண்டும்.
இ) இப்போது நடந்து வருகிற ஆகமப் பாடசாலைகள் அனைத்தையும் ஒரே தரமான நிலைக்குக் கொண்டு வரும் பொருட்டு, அங்குள்ள சேர்க்கை முறை, கல்வி முறை, தேர்வு முறை ஆகிய அனைத்து அம்சங்களை யும் மேற்கூறிய ஆகமச் சபை நிர்வகித்து வர வேண்டும்.
ஈ) இப்போது பூசகராயுள்ளவர்களின் குடும்பங்களில் இருந்து வரும் மாணவர்களுக்கு ஆகமக் கல்லூரிச் சேர்க்கையில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
உ) செயல் திட்டத்தில் கூறிய படி, வெற்றிகரமாகத் தேர்வை முடித்து வருகின்ற மாணவர்களுக்கு உடனே வேலைக்கும் தகுந்த ஊதியத்திற்கும் உறுதியளித்து, பிற எல்லா வசதிகளையும் செய்து தரவேண்டும்.
ஊ) செயல் திட்டத்தில் கூறியுள்ளபடி, அறநிலையத் துறை ஆகம நூல்களை உரையோடு வெளியிட்டு, மாணாக்கர்களுக்குத் தேவையான புத்தகங்களையும் அச்சிட்டுத் தரவேண்டும்.
- நெடுங்காலமாக சிவாச்சாரியாரும், பட்டாச்சாரியாரும் செய்துவந்த கோயில் பணிகளை இன்று நாம் நினைவுகூராமல் இருக்க முடியாது. இந்த சமயப் பண்பாட்டு நிலைகளை அரசு கருத்தில் கொண்டு, பூசகர் சுமாரான வாழ்க்கை நடத்துவதற்கு வேண்டிய வாழ்க்கை வசதியும், தொழிலுக்குத் தொடர்ந்து வேலை வாய்ப்பு உண்டு என்ற உறுதியும், சமூகத்தில் போதிய அந்தஸ்தும் குறைந்த அளவிலேனும் அரசு செய்து தரவேண்டும்.
- தமிழில் அர்ச்சனை செய்வது ஆகமத்துக்கு உடன்பாடே. ஆதலால், தமிழ் அர்ச்சனைப் பயிற்சியைக் கல்லூரிகளில் பாடத் திட்டத்தின் பகுதியாகச் செயல்படுத்துவதோடு கூட, அத்தலைப்பில் சொல்லப்பட்டபடி அஷ்டோத்திரம், சகஸ்ரநாமம் முதலியவற்றைத் தயாரித்து வெளியிட்டு, கோயில்களில் கடைபிடிக்க செய்ய வேண்டும்.
- உள்துறை ஊழியர்களைப் பொறுத்தவரையில் முக்கியமாகப் பாசகர், பரிசாரகர் என்ற நிலையில் பணிபுரிபவர்களை அவர்களுடைய பண்பாடு, பக்தி, ஆசாரம் இவற்றை அனுசரித்துத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆகமத்தில் சொல்லியபடி இவர்களுக்கும் தீட்சை அளிப்பது அவசியம்.
மகராசன் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகர் ஆக்குவதற்கு உரிய வழிமுறைகள் வகுத்து அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக 12 பேர் கொண்ட வல்லுநர் குழு ஒன்றை ஓய்வு பெற்ற நீதிபதி என். கிருட்டிணசாமி ரெட்டியார் தலைமையில் 2.6.1984-இல் தமிழக அரசு அமைத்தது. மூன்று மாதத்தில் அக்குழு சில பரிந்துரைகளை அரசுக்கு வழங்கியது.
தமிழ்நாட்டில் அய்ந்து இடங்களில் அர்ச்சகர் பயிற்சிக் கூடங்களை நிறுவிட வேண்டும் என்றும் அர்ச்சகர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியம் மாதம் ஒன்றுக்கு 500 ரூபாய் வழங்க வேண்டும் என்றும் அக்குழுவும் பரிந்துரை செய்தது.
அ.தி.மு.க. ஆட்சியில் இதற்கான முயற்சிகள் எதையும் செய்யவில்லை.
தி.மு.க. ஆட்சியில் மீண்டும் அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்கும் சட்டத்தை நீதிபதி மகராசன் குழு பரிந்துரையின்படியும், தமிழ்நாட்டு அரசுக்கு வழிகாட்டுவதற்காக நீதிபதி ஏ.கே. இராசன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அக்குழு, தமிழக அரசுக்கு அளித்த சில பரிந்துரைகளின் அடிப்படையிலும் 23.5.2006-இல் சட்டம் இயற்றியது. இச்சட்டத்தை எதிர்த்தும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப் பட்டது. 9 ஆண்டுகள் கழித்து 16.12.2015-இல் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்தத் தீர்ப்பும் ஆகம விதிகள் மீறப்பட்டதாகக் கூறி அந்த சட்டத்தையும் செல்லாததாக ஆக்கிவிட்டது.
தமிழ்நாட்டு அரசின் ஆகமப் பள்ளியில் படித்த 206 பேர் கோயில்களில் பணியமர்த்தம் செய்யப்படாமல் 13 ஆண்டுகள் காத்திருந்தனர்.
2021 ஏப்ரலில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக் கான தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தபடி, ஆட்சிக்கு வந்த 100-ஆவது நாளில் 14.8.2021 அன்று மயிலாப்பூர் கபாலிசுவரர் கோயி லுக்குச் சொந்தமான கற்பகாம்பாள் திருமண மண்டபத் தில் பேரூர் ஆதினம், குன்றக்குடி அடிகளார் முன்னிலையில் அந்த விழாவில் மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் 58 கோயில் பணியாளர்களுக்குப் பணி ஆணையை வழங்கினார். அதில் 24 பேர் தமிழ்நாட்டு அரசின் ஆகமப் பள்ளிகளில் 1.5 ஆண்டுகள் படித்து முடித்தவர்கள். இந்த 24 பேரில்,
பட்டியல் பிரிவினர் - 5
மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் - 6
பிற்படுத்தப்பட்டவர்கள் - 12
பெண் (ஓதுவார்) - 1
ஆவர். தந்தை பெரியார் அவர்கள் 24.2.1973-இல் மறைந்த போது அன்றைய முதல்வர் கலைஞர் அவர்கள் “பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை நீக்கப்படாமலே அவரை அடக்கம் செய்கின்றோம்” என்று வேதனைப்பட்டார். அந்த வேதனையை அவருடைய மகன் தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் நீக்கினார். திராவிடர் இயக்கத்தின் அய்ம்பதாண்டுக் காலக் கனவை நனவாக்கிய மாண்புமிகு முதல்வர் அவர்களை மனதாரப் பாராட்டுகிறோம்.
- வாலாசா வல்லவன்