யு.ஆர். அனந்தமூர்த்தி எழுதி வெ.ஜீவானந்தம் மொழிபெயர்ப்பில் NCBH வெளியீடாக விரைவில் வெளிவர உள்ள இந்துத்துவாவாஇந்திய சுயராஜ்ஜியமா?’ என்ற நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரையின் ஒரு பகுதி.

ghandhi 350இந்தியர்கள் நாங்கள் அகிம்சாவாதிகள் என்று உரக்கச் சொன்னபோதும் நமது திரைப்பட வன்முறைகள், அதற்கு நம் மக்கள் தரும் கைதட்டல், நாம் எவ்வளவு வன்முறை நாட்டம் கொண்டவர்கள் என்பதைச் சொல்கிறது.  மக்கள் சாந்தமான முகத்துடன் உலவலாம்.  ஆனால் அவர்கள் மனம் அர்த்தமற்ற வன்முறைகளை ஆராதிக்கிறது.  இதற்கு நம் கடவுளர் பெயர்களே சான்று.  முரா என்பவனைக் கொன்றவன் முராரி.  சிவாஜி நல்லாட்சியின் சின்னமல்ல, பலரைக் கொன்றவராகிறான்.  சாந்தியைப் பின்பற்றிய அசோகர் புறக்கணிக்கப்படுகிறார்.

ஐரோப்பாவின் பண்பாடும் அப்படித்தான்.  ஆதிக்கமும் அடக்குமுறையும் ஆண்களின் பெருமையாகக் கருதப்பட்ட காலம். லண்டன் கோபுரத்தடியில் ஆண் குழந்தை பெற்றுத்தராத இளவரசிகள் பலர் கொன்று புதைக்கப்பட்டதை வரலாறு சொல்லும்.  வரலாறு என்பது வெற்றி பெற்ற வன்முறையாளர்களின் கதையே தவிர, மக்களின் வாழ்வு பற்றிய பதிவாக இல்லை.  காந்தியின் அகிம்சை வழிப் போராட்டம் உலகுக்கே பெரும் செய்தியானது.  அதில் வன்முறையும் அவ்வப்போது கலந்ததுண்டு.  பிரிவினையின்போது எத்தனை இந்துக்களும், முஸ்லீம்களும் கொன்று குவிக்கப்பட்டனர்.  நாடு முழுதும் ரத்த ஆறு ஓடியது.  தனது அகிம்சை தன் கண்முன் பொருளற்றதாக மாற்றப்படுவது கண்டு கலங்கி, காந்தி தன்னைவிட உயரமான தடியை ஊன்றி, வெறுங்காலுடன் கலவர பூமி நவகாளியில் தனிமனித ராணுவமாக நடந்தார். தில்லியில் விடுதலை நாள் கொடியேற்றமும், கொண்டாட்டமும் காந்தியின்றியே நடந்தது.

குஜராத் இன்று ஓர் இந்தியா தழுவிய மற்றொரு தலைவரை உருவாக்கி உலவவிட்டது எப்படி? மோடி முதல்வராக இருந்தபோதே குஜராத் படுகொலை நடந்தது. அவர் தடுக்க முயன்றார் முடியவில்லை என்பது அவரது பலவீனத்தையே கூறும். பெரிய யாகம் நடக்கும்போது பலரும் பல வேலைகளை ஓடி ஓடிச் செய்வர்.  ஆனால் மூலகர்த்தா ஓரிடத்தில் அமைதியாக அமர்ந்து தனது கட்டளை நிறைவேற்றப்படுகிறதா என்பதை மட்டும் கண்காணிப்பார்.  அவரே பிரம்மா, சூத்திரதாரி. மோடி சூத்திரதாரி. நடந்தது நடந்தது தான்.

தாஸ்தயேவ்ஸ்கியின் கதைப் பாத்திரமான ராஸ்கோல்னிகோவ் என்பவன் தன் தவறுக்காக குற்றவுணர்ச்சியில் வாடினான். ஒரு விலைமகள் அவனுக்குக் காதலின் மகிமையை உணர்த்துகிறாள். மோடியும் வருந்தலாம். ஆனால் அது வேறு மாதிரியானது.  ஒரு நாய்க்குட்டி காரில் அடிபட்டால் உண்டாகும் இரக்கம் போன்றது அது.  அதற்கு என்ன செய்ய முடியும் என ஒருவர் கூறக்கூடும். ஒருவர் பாவம் நாய் என்று வருந்தவும் கூடும். கார் நின்றிருந் தால் நாய் அடிபட்டிருக்காது எனவும் கூறலாம்.

இங்கு நான் என் கருத்தைத் துணிவுடன் கூற வேண்டும். மோடி எவ்வளவு திறமையாக சிறுபான்மையினரை அடக்கிவிட்டாரெனச் சிலர் பாராட்டவும் கூடும்.  NDTU யில் பர்காதத் ஓர் இஸ்லாமியரை அழைத்து மோடியைப் பாராட்டச் செய்தார்.  இப்போது நாம் மோடியின் ஆவேசப் பேச்சைக் கேட்க முடிவதில்லை. மோடி இப்போது அனைவரின் நேயராகிறார். ஊடகம் உட்பட அனைத்தையும்  உருவாக்கிய இந்த மோடி யார்?

காந்தியின் சிறிய புகைப்படத்திற்கு மாலையிடும் படம் நம்மைத் தாக்குகிறது.  ஒரு புதிய தலைவர் உருவம், உறங்காமல் உழைக்கும் தலைவர், கவர்ச்சிகரமான ஆடைகளில் உலா வருபவர். புறம் மாறியுள்ளது, அகம் மாறவில்லை.  தன் மனைவியைத் தள்ளி வைத்து, ஜாதியை ஒதுக்கிப் புதிய சிவாஜி, படேல் ஆகிறார்.  நாடே மறதி மேகத்தில் மறைகிறது.  காந்தியை மறந்தால் என்ன? லண்டனில் காந்தி சிலை திறந்து வணிக ஒப்பந்தம் கையெழுத்திட்டால் சரி.

மோடியின் முதல் நிதிநிலை அறிக்கையில் சர்தார் படேல் சிலையமைக்கப் பல கோடிகள் ஒதுக்கப்பட்டது.  இது ஏன்? முதலாவதாக நேருவை ஒரு முதன்மைத் தலைவராகக் காட்டி, பட்டேலை பின்தள்ளினர் அவரது வழித்தோன்றல்கள். எனவே இப்போது அவர்கள் இதை எதிர்க்க முடியாது.  மோடி நேரடியாகத் தனது வழிகாட்டி சவர்க்கரின் சிலையை வைக்க முடியாது.  காந்தி கொலை வழக்கிலிருந்து சவர்க்கர் விடுவிக்கப்பட்ட போதும், அதன் கறை நீங்கவில்லை.  அவரது புகைப்படம் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டுள்ளது.  இப்போதைக்கு இது போதும்.  பின் விமான நிலையம், பல்கலைக்கழகம், கட்டிடங் களுக்குப் பெயர் சூட்டலாம்.  நேருவின் சீடர்கள் செய்ததையும் மோடி செய்வதையும் யாரும் தடுக்க முடியாது.  அத்வானிக்குக் கூடச் சிலை எடுத்து கௌரவிப்பார்.

காந்தி யுகம் முடிவுக்கு வந்து விட்டதெனவே நான் நினைக்கிறேன்.  சவர்க்கர் வென்றுள்ளார். இது தற்காலிகமானதாக இருக்கலாம்.  ஆனால், நம்மீது தற்போது வெற்றி பெற்றுள்ளார். “நமக்கு மூடநம்பிக்கை, ஜாதிப் பிரிவினை,  சடங்குகள்  மலிந்த இந்து மதம் வேண்டாம்.  இப்போது அனைத்து இந்துக்களும் இணைந்தால் போதும், முஸ்லீம்களைப் போல.  நாம் அவர்களைச் சேர்ந்து எதிர்ப்போம். ஒரு வலிமைமிக்க இந்து பாரதத்தை உருவாக்குவோம்.”

வலிமையான பாரதம் இது சவர்க்கரின் கோஷம். அவர் கடவுளை நம்பாத நாத்திகரே.  அவர் தீண்டாமையைக் கண்டித்தார். காந்தி போல ஜின்னாவுடன் சமமாகப் பேச்சு வார்த்தை நடத்தியவர்.  மதம் அவர்களுக்குத் தடையாக இல்லை.

சவர்க்கர் ஒரு பகுத்தறிவுவாதி.  அனைத்து மாநிலங்களையும் சமஸ்தானங்களையும் இணைத்து வலிமைமிக்க இந்து பாரதம் உண்டாக்க வேண்டு மென்பதே அவர் லட்சியம்.  நாம் தாராளவாதிகள். எதையும் அடக்கி ஒடுக்கும் வெறியற்ற சமாதானவாதிகள். சில முஸ்லீம்கள் கலவரங்களில் ஈடுபடக் கூடும்.  அது போலவே சில தலித்துகளும் பிராமணர்களும் வன்முறையில் ஈடுபடுகின்றனர்.  ஒவ்வொருவரும் பெரும் குழப்பத்திற்குக் காரணமா கின்றனர். நம்மைப் போன்ற நல்லிணக்கவாதிகளே சமூக நல்லிணக்கத்திற்காகச் சிந்திக்க வேண்டியுள்ளது.  மனித  நேயத்தை வளர்க்கும் பொறுப்பும் நம்மிடமே உள்ளது.

மோடி உத்திரப்பிரதேசத்தில் அம்பேத் கரிஸ்ட்டுகளை வாயடக்க, அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செய்தார். அதுபோல லோகியா யிஸ்ட்டுகளாக இருந்து ஜாதிக்கட்சியினரான யாதவ்களை எவ்விதம் அடக்கினார்.  எதிர்காலத்தில் 24 ஜ் 7 தொலைக்காட்சி ஊடகத்தின் நவீன பிராமணர்களும், மனுவாதிகளும் நல்லிணக்கவாதிகளை  விவாதத்திற்கு அழைப்பார்களா? மோடி அவர்களின் வாயையும் என்று அடைப்பாரோ? மண்டல் ஜாதியைச் சேர்ந்த நான் பிரதமராகவில்லையா என்று கேட்பாரோ?

மத்தியதர வர்க்கம், தலித்துகள், சூத்திரர்கள், முஸ்லீம்கள் கூட மோடி முழக்கத்தில் வீழ்வார்கள் போல் உள்ளது.  அவர்கள் இடதுசாரிக் கொள்கைகளைக் கைவிட்டு விட்டார்கள்.  இனி இந்த மண் மட்டுமே இடதுசாரிக் கொள்கைகளைப் பேசக் கூடும்.  மோடியின் வளர்ச்சித் திட்டத்தில் இயற்கை தலைகீழாகப் புரட்டப்பட்டுக் கொண்டுள்ளது.  மண் அன்னையின் கோபம் புயலாக, இடியாக, மழையாக, வெள்ளமாக, நிலநடுக்கமாகத் தாக்கக் கூடும்!

மத நல்லிணக்கவாதிகள் இப்போது ஒதுக்கப் பட்டுள்ளனர்.  இந்த தேசபக்தி, தேசியவாதம்  எப்போது எல்லை கடந்து பாசிசமாகுமோ தெரியவில்லை. இந்த அச்சம் நியாயமானதே.  இதுதானே இரண்டு உலகப் போர்கள் நமக்குச் சொல்லும் பாடம்? இந்தக் குறுகிய தேசியவாதம் சீனாவிலும் தலைதூக்குகிறது. மாவோவின் கொள்கைகள் கைவிடப்பட்டு வருகின்றன. சீனா உலக முதலாளித்துவமாகி வருகிறது.  வேகமான அசுர வளர்ச்சியில் பயணிக்கிறது.

கனவுகளற்றவன் மனிதனல்ல.  மனிதகுல நலன், மேம்பாடு, பசுமை உலகம், தெளிவான வானம் என்பன காண வேண்டிய கனவுகள்.  காந்தியின் கனவு அகிம்சை.  கனவுகளை மனிதர்கள் உழைப்பால் நனவாக்குகின்றனர். அறிவியல் அதற்குத் துணை நிற்க வேண்டும்.  விஞ்ஞானம் இயற்கையை அழிக்க உதவக்கூடாது.

காந்தியின் இந்திய சுயராஜ்யம் இத்தகைய கனவின் சாரமே. மோடியின் வெற்றியும் கனவும் அதற்கு நேர் எதிரானது.  மோடியின் கனவு சவர்க்கரின் லட்சியமான இந்துத்துவாவே.  ஆனால் அவர் அதை நேரிடையாகச் சொல்லமாட்டார்.

Pin It