பாஜக அரசு இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுப்பதற்கு பாகிஸ்தான் மற்றும் தாலிபான்களுடன் பேசுவது, சர்வதேச மன்றங்களில் தலையிடுவது, இராணுவத் தயார் நிலையை மேம்படுத்துவது, அதேவேளையில் இவற்றினையெல்லாம் தேர்தல் கண்ணோட்டத்தில் அணுகுவது என்ற உத்தியைக் கையாண்டு வருகிறது. இதன் காரணமாக பயங்கரவாதத் தாக்குதல்களை முற்றிலும் தடுக்கமுடியவில்லை. கூடுதலாக மதத்தீவிரவாதம் நாட்டின் பல பிராந்தியங்களுக்குப் பரவி வருகிறது. எனவே இந்த அரசின் பயங்கரவாத நடவடிக்கை உத்திகளை ஆய்வுக்குட்படுத்தி கைக்கொள்ளவேண்டிய ஒரு மாற்று அணுகுமுறையை இந்நூல் முன்வைக்கிறது என ஆசிரியர் கூறுகிறார். அவற்றினைப் பற்றி கீழே காணலாம்.
1800 ஆம் ஆண்டுகளில் பயங்கரவாதம் என்பதன் முதல் அகராதி வரையறை என்பது ‘பயத்தை உண்டாக்கும் முறைப்பட்ட ஒழுங்கமைவு என்பதாகவே இருந்தது. அதன் பிறகான காலத்தில்’ வெகுஜன ஒடுக்குதல் என்பது வன்முறையின் உபவிளைவாக உருவான பயங்கரவாதமானது வெறும் ஆதாயத்திற்காக வன்முறையை இழைப்பவையல்ல. வெறும் கொடுமையான வன்முறையும் அல்ல. அது தன்னிச்சையாக இயங்கக்கூடிய திடமான ஓர் அரசியல் தந்திரம் என்றாகியது.’
சமகாலத்தில் குறிப்பாக இந்தியா மற்றும் அதனைச் சுற்றியுள்ள நாடுகளில் பல்வேறு பயங்கரவாத அமைப்புக்களின் தாக்குதல் இலக்குகளையும், முறைகளையும் கவனிக்கும்போது, பள்ளி, மசூதிகளைக் குறி வைத்து தற்கொலைப் படைத் தாக்குதல்; பிறநாட்டு வாகனங்களையும், இராணுவ முகாம்கள் மீது தற்கொலைப் படைத் தாக்குதல்; மக்கள் பிரதிநிதிகளை குறிவைத்து தாக்குவது; நாட்டின் பொருளாதாரத்திற்கு அடித்தளமாக விளங்குகின்ற கட்டமைப்புக்களின் மீது தாக்குதல் நடத்துவது ; காவல்துறையினரையும், அரசு நிறுவனங்களையும் குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுவதாக இருக்கின்றது. 2022 ஆம் ஆண்டிற்குப்பிறகு ஆளில்லா விமானம், ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்துவதென்பது பிரபலமாகி வருகிறது.
பொதுவாக அரசாங்கத்தினரின், பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கைகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். அதில் ஒன்று, அல் பயங்கரவாதம். மற்றொன்று, எதிர் பயங்கரவாதம். அல் பயங்கரவாதம் என்பது பாராளுமன்றத்திலிருந்து இராணுவம் வரை, ஒரு அரசு எடுக்கக்கூடிய சட்டபூர்வமான நடவடிக்கைகளைக் குறிக்கும். எதிர் பயங்கரவாதம் என்பது அரசு தன் சொந்தப் படைகளைக் கொண்டு படுகொலைகள், பழிவாங்கல்கள் போன்ற பயங்கரவாத முறைகளைக் கையாள்வதைக் குறிக்கும். சர்வதேச அளவில் பயங்கரவாதத்தைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஐக்கியநாடுகள் சபை எதிர் பயங்கரவாத மையத்தின் மூலமாகவும், ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் எதிர் பயங்கரவாதக்குழு மூலமாகவும் செயல்திட்டங்களை வகுத்துச் செயல்பட்டு வருகிறது.
இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கிடையேயான எல்லையோரக் கிராமங்களில் வசித்துவரும் மக்கள், இரு நாடுகளுக்கிடையே அடிக்கடி நிகழும் துப்பாக்கிச்சண்டைகளின் காரணமாக இளம்வயதினர் கல்வி பயில முடியாமை; விவசாயப்பணியினைத் தொடர்ந்து மேற்கொள்ள முடியாததால் வாழ்வாதாரச்சிக்கல்கள் ; பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இதுமட்டுமின்றி, இராணுவத் தாக்குதலில் ஆண்கள் மரணமடைந்து விட்டதினால், அரசாங்கம் முறையாக இழப்பீடு ஏதும் வழங்காத நிலையில் விதவைப் பெண்கள் பலவித இன்னலுக்கு உள்ளாகுகின்றனர்.
1965, 1971 ஆம் ஆண்டுகளில் இந்தியா - பாகிஸ்தான் போர்களின்போது, எல்லையோர கிராமத்து மக்களை பாதுகாப்பதற்காக கிராமப் பாதுகாப்பு குழுக்கள் அமைக்கப்பட்டன. இதேபோல, 1995 ஆண்டிலும் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு இலக்கான கிராமங்களை பாதுகாப்பதற்காக குழுக்கள் உருவாக்கப்பட்டது. 2022 க்குப்பிறகு கிராமப் பாதுகாப்பு குழுக்களானது ‘கிராமப் பாதுகாப்புப் படைகள்’ என்றாகி, அதன்படி 4248 குழுக்களமைத்து 28,000 பேர் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கு மாதாந்திர ஊதியமும் அளிக்கப்பட்டு வந்தன. .அவ்வாறு நியமிக்கப்பட்டவர்களில் 90 சதவீதத்தினர் ஆர்.எஸ்.எஸ் பின்புலங்கொண்டவர்களாக இருந்திருக்கின்றனர்.
காஷ்மீரில் உரி இராணுவ முகாம் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் செயல்பட்டுக் கொண்டிருந்த பயங்கரவாதிகளின் முகாம்களில் இந்தியா தாக்குதலை நடத்தியது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானிலிருந்து செயல்பட்டுக்கொண்டிருக்கும் பயங்கரவாதிகளைக் கட்டுப்படுத்தும்வரை பாகிஸ்தானுடன் பேச்சு நடத்தப் போவதில்லை என்று இந்தியா கூறியது. அப்படிக் கூறியும், புல்வாமாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதன் விளைவாக இந்தியாவும் பாகிஸ்தானினுள்ள பயங்கரவாத முகாமிருந்த பாலகோட் பகுதியில் தாக்குதல் நடத்தியது. இது ஒரு புறமிருக்க, இன்னொருபுறம் பயங்கரவாதிகளைத் தடுப்பதற்காக பாகிஸ்தானுடன் அதிகாரபூர்வமற்ற முறையில் பேச்சுவார்த்தையும் நடத்தியது.
அமெரிக்காவும் நேட்டோ நாடுகளும் ஆப்கானிஸ்தானத்தின் மீது போர்தொடுத்து தங்களது பொம்மை அரசாங்கங்களை நிறுவிய 20 ஆண்டுகளுக்குப் பின்னர் தாலிபான்கள் ஆப்கானில் ஆட்சியைக் கைப்பற்றினார்கள். இந்த மாற்றங்கள் சர்வதேச அரசியலிலும், தெற்காசியாவிலும் ஏற்படுத்தப் போகும் தாக்கங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தியாவைப் பொறுத்தமட்டில், இந்த ஆட்சிமாற்றம் ஏற்கனவே நடைபெற்று வரும் பயங்கரவாதத் தாக்குதல்களை மேலும் அதிகப்படுத்தும் எனவும் தேசப் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறும் எனவும் அரசியல் நோக்கர்கள் எச்சரித்தனர்.
2008 ஆம் ஆண்டு நவம்பர் 26 மும்பையில் பயங்கரவாத அமைப்பினால் நடத்தப்பட்ட தாக்குதலின் விசாரணையானது பாகிஸ்தான், அமெரிக்கா, இந்தியா ஆகிய மூன்று இடங்களில் நடைபெற்று வருகிறது. இதனால் சம்பந்தப்பட்ட பல குற்றவாளிகள் இன்னும் தண்டிக்கப்படாமலேயே இருக்கின்றனர்.
இந்தியாவும், அமெரிக்கவின் பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கைகளைப் பொறுத்தவரை கூட்டாகச் செயல்படுவதென 2000 ஆம் ஆண்டில் முடிவெடுத்தன. இவ்வாறாக ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டும், கூட்டறிக்கைகள் வெளியிடப்பட்ட போதிலும் பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கைகளில் இந்தியா இன்னும் பெரியளவில் பயனடையவில்லை.
ஐக்கியநாடுகள் சபையில் இந்தியா பயங்கரவாத அச்சுறுத்தல்களை தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட பல்வேறு வரைவுத் திட்டங்கள் மற்றும் தீர்மானங்களைத் தயாரிப்பதிலும் முக்கியப் பங்காற்றியிருக்கிறது. ஆனால், இருபது ஆண்டுகளுக்கு முன்னர் முன்மொழியப்பட்ட இதனையே ஒப்பந்தமாக மாற்றுவது குறித்து இன்னும் பேச்சுவார்த்தைகள் துவக்கப்படவில்லை.
இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் ‘குவாட்’ அமைப்பின் 2019 ஆம் ஆண்டு நடந்த கூட்டத்தில் பயங்கரவாதச் செயல்பாடுகள் குறித்து புலனாய்வுத்தகவல்களை உறுப்புநாடுகள் பகிர்ந்து கொண்டு செயல்படுவது என முடிவெடுக்கப்பட்டது. கடந்த 2023 மார்ச் மாதம் டில்லியில் நடந்த வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்தில், பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்துவதற்காக பணிக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த அமைப்பில் பெரும்பாலும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளைவிட ஆசியாவையும் தாண்டிய சீனாவின் எழுச்சி குறித்தே விவாதிக்கப்படுவதாக இருக்கிறது.
1989 ஆம் ஆண்டு பாரீஸில் நடைபெற்ற ஜி-7 நாடுகளின் உச்சிமாநாட்டில் நிதி நடவடிக்கைக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. உலகளவில் பயங்கரவாதம், போதைப் பொருள் கடத்தல், வரிஏய்ப்பு உள்ளிட்ட குற்றச் செயல்கள் மூலம் பெறப்பட்ட பணத்தை முறையாக ஈட்டப்பட்ட பணமாக மாற்றும் நடவடிக்கைகளைக் கண்டறிந்து அதனைக் கட்டுப்படுத்துவதற்காக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. இதனடிப்படையில்தான், இந்த நிதி நடவடிக்கைக்குழு, பயங்கரவாதத்திற்கு நிதி உதவி செய்யப்பட்டு வருவதை தடுக்கும் நோக்கில் சர்வதேசளவில் பயங்கரவாதச் செயல்களை நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஆதரிக்கும் நாடுகளைக் கண்டறிந்து அவற்றினைப் பட்டியலிட்டு வருகிறது. பாகிஸ்தான் நிதி முறைகேடுகளைத் தடுக்கத் தவறிய நாடுகளில் ஒன்றாக மதிப்பிட்டு 2012 ஆம் ஆண்டு சாம்பல் நிறப் பட்டியலில் வைக்கப்பட்டது. இதன் பின்னர் 2022 ஆம் ஆண்டு, நிதி நடவடிக்கைக்குழு வகுத்தளித்த செயல்திட்டத்தை முறையாக பாகிஸ்தான் அமல்படுத்தி வருவதையறிந்து அப்பட்டியலிலிருந்து விடுவிக்கப்பட்டது.
2020 லிருந்து 2022 வரை ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்புக்கவுன்சிலில் இந்தியா தற்காலிக உறுப்பினராக அங்கம் வகித்தது. இதனையொட்டி, பயங்கரவாத நடவடிக்கைக்குழுவின் சிறப்புக்கூட்டமானது 2022 அக்டோபர் மாதம் டில்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பயங்கரவாத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதில் சர்வதேச நாடுகளுக்கிடையே நிலவும் கருத்து வேறுபாடுகளினால், ஒருமித்தக் கருத்தினை ஐக்கிய நாடுகள் சபையினால் உருவாக்க முடியாத நிலையை நன்கு வெளிப்படுத்தியது.
2022 நவம்பர் மாதம் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி கிடைப்பதைத் தடுப்பது குறித்து விவாதிப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சிலில் அங்கம் வகிக்கும் நாடுகளின் அமைச்சர்கள் அளவிலான மாநாடு டில்லியில் நடைபெற்றது. மாநாட்டின் முடிவில், பயங்கரவாதம் குறித்து உறுப்பு நாடுகளுக்கிடையே மாறுபட்டக் கருத்துக்கள் நிலவிய போதிலும், இறுதியில் பிரகடனம் ஒன்று வெளியிடப்பட்டது. அதன்படி, ஐக்கிய நாடுகள் சபையின் முகமைகள், சிவில் சமூகச் செயல்பாட்டாளர்கள், மற்றும் தனியார் துறையினரும் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளில் கூட்டாகச் செயல்படுவது என்றும், இந்த முன்முயற்சிக்கு மனித உரிமைகளை அடிப்படையாகக் கொள்வது எனவும் ஒப்புக் கொள்ளப்பட்டது.
2020 ஆம் ஆண்டு காஷ்மீரில் காவல்துறையினர் பாதுகாப்புச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக வந்த கார் ஒன்று நிற்காமல் போனது. அதனைத் துரத்திப் பிடித்தபோது அக்காரில் காவல் துறையைச் சேர்ந்த தாவிந்தர் சிங், அவருடன் பயங்கரவாத அமைப்பைச்சேர்ந்தவர்கள், வழக்கறிஞர் இருந்திருக்கின்றனர். பயங்கரவாதிகள் இருவரையும் டில்லிக்கு அனுப்ப தாவிந்தர் சிங் லஞ்சம் பெற்றுள்ளதாகக் குற்றஞ்சுமத்தி வழக்கினைப் பதிவு செய்து குற்றப் பத்திரிக்கையையும் தாக்கல் செய்தது. அதேபோல், இந்தியப் புலனாய்வு அமைப்பும் தாவிந்தர்சிங்மீது டில்லியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகக் கூறி, கைதுசெய்து, வழக்கும் பதிவு செய்து செய்தது. ஆனால் 90 நாட்கள் கடந்த பின்னரும் அவர்கள் மீது குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்யாததால் டெல்லி சிறப்பு நீதிமன்றம் தாவிந்தர் சிங்கிற்கு ஜாமின் வழங்கி விட்டது. இவ்வாறாக ஊழல் மற்றும் தவறான செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்த தாவிந்தரின் நடவடிக்கைகள் குறித்து காவல்துறையும், நீதிமன்றங்களும் முறையாக விசாரிக்கத் தவறியுள்ளது.
2021 ஜூன் மாதம் இந்தியா - பாகிஸ்தான் கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டிலிருந்து 14 கி.மீ தொலைவில் உள்ள ஜம்மு விமானப்படைத்தளத்தில் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் தொடுக்கப்பட்டது. இந்திய விமானப் படை, எதிரி நாட்டுப் போர் விமானங்களை கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டைத் தாண்டி இந்தியப் பகுதிக்குள் நுழைவதைக் கண்காணிக்க ரேடார்களை நிறுவியுள்ளது. ஆனால், இந்தவகை ரேடார்களால் சிறிய வகை ட்ரோன்களைக் கண்டறிய முடியாது. இதனை அழிப்பதற்கான சாதனம் எதுவும் இந்தியாவிடம் இல்லை. தற்போதுதான் ட்ரோன் தடுப்புச் சாதனங்களைக் கொள்முதல் செய்ய அறிவிப்பினை வெளியிட்டிருக்கிறது.
இந்நூலில் பயங்கரவாதம் தொடர்புடைய 25 கட்டுரைகள் இடம் பெற்றிருக்கின்றன. பக்க விரிவஞ்சி அவற்றினுள் 14 கட்டுரைகளிலுள்ள முக்கிய அம்சங்களை மட்டுமே சுருக்கித் தந்துள்ளேன். இதுதவிர இந்நூலில், போராடும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மீது ‘உபா’ சட்டம் பாய்வது; சிதைக்கப்படுகிற மதராஸாக்கள்: பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மீதான தடை; ஜனநாயகத்திற்காகக் காத்திருக்கும் ஜம்மு - காஷ்மீர்; புல்வாமா தாக்குதல்கள்; வாக்குவங்கி அரசியலும் பயங்கரவாதமும் குறித்த கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன.
பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கைகளின் அரசியல் | சு.அழகேஸ்வரன்
வெளியீடு: Vashviya, H- 242, Phase -2, Anna Nagar, Tiruchirappalli -620 026.
விலை: ரூ 100/-
- நிகழ் அய்க்கண்