சிறு விதைகளைக் கொண்ட, வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய, வறண்ட பிரதேசங்களில் விவசாயிகளின் வரப்பிரசாதமாக, உயிர் ஆதாரமாக, மலைவாழ் மக்கள் மற்றும் கிராம மக்களின் வளமான, வளமையான உடலமைப்பைத் தரக்கூடிய பயிர்களே சிறுதானியங்களாகும். வளமான மலைப்பகுதிகளில் தானாக வளரக்கூடிய இப்பயிர்களில் கிடைக்கும் சத்து மிக உறுதியான உடலமைப்பை தந்து, உழைக்கும் மக்களின் உறுதியை பலப்படுத்தும் உணவாகத் திகழ்ந்து வந்தது. 

              சோளம், கம்பு, கேழ்வரகு, திணை, சாமை, குதிரைவாலி, வரகு, பனிவரகு என்பன சிறுதானியங்களாகும். இச்சிறு தானியங்கள் அதிக நார்ச்சத்து கொண்டவையாகவும் எளிதில் செரிமானம் அடையக்கூடியதுமாகும். இவ்வகை சிறுதானியங்களில் குறைந்தளவே குளுகோஸ் இருப்பதால் இவை மனிதனை சர்க்கரை நோயிலிருந்து காப்பாற்றக் கூடியவை. 

              இச்சிறுதானியங்கள் அதிகளவு தாதுப் பொருட்களான இரும்பு, மெக்னிசியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. இத்தானியங்களில் பி வைட்டமின் மற்றும் நைசின் போலிக் ஆசிட் உள்ளிட்ட அமினோ அமிலங்களும் உள்ளன. மேலும், இவை அதிகளவில் உட்கொள்ளும் போது விரைவில் செரிமானமடைவதுடன் மற்ற சத்துக்களையும் உடம்புக்குத் தேவையான அளவில் மாற்றித்தரக்கூடிய சக்தியையும் கொண்டுள்ளன. மேலும், இவை அதிக நார்சத்து கொண்டுள்ளன. இதனால் இவை இரைப்பை புழுவைத் தடுத்து மலச்சிக்கலை தவிர்க்கும் தன்மை கொண்டவை. மேலும், மக்காட்சோளத்தில் சப்டூஆலிக் அமிலம் மற்றும் சிட்ரிக் அமிலம் அதிகமாக உள்ளது. இது உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்தக்குழாய் நோயை குணப்படுத்தும் வல்லமை படைத்தது.              

கேழ்வரகு 

              இந்தியாவில் விளையும் சிறுதானியத்தில் 25 சதவீதம் கேழ்வரகு ஆகும். அரிசி மற்றும் கோதுமையை விட அதிகளவு ஊட்டசத்து நிறைந்தது இதுவாகும். இதனை கர்நாடகாவில் ராகி என்றும், இந்தியில் மேண்டு என்றும் ஆங்கிலத்தில் பிங்கர் மில்லட் என்றும், கேரளாவில் கேவுரு, ஆந்திராவில் ராகூலு, இலங்கையில் குரங்கன் என்றும் அழைக்கிறார்கள். தமிழில் கிராமங்களில் இப்பயிர் இன்றைக்கும் கேப்பை என்றே அழைக்கப்படுகிறது. இப்பயிர் சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தியாவில் புழக்கத்தில் உள்ளது. 

சத்துக்கள் 

              ராகி என்றழைக்கப்படும் 100 கிராம் கேழ்வரகில் 7.3கி புரதம், 1.3கிராம் கொழுப்பு, 3.9 கிராம் இரும்புச்சத்து, 3.6 கிராம் நார்ச்சத்து, 344 மில்லி கிராம் கால்சியம், 203 மில்லிகிராம் பாஸ்பரஸ், 420 மில்லி கிராம் தய்மின், 72 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளன. இதுதவிர பிகரேட்டின் (42மிகி), நயசின் (1.1மிகி), ரிபோப்ளேவின் (1.1மிகி) போன்ற சிறிய ஊட்டச்சத்துக்களும், அமினோ அமிலங்களும் நிறைந்துள்ளன. இதே நேரத்தில் அரிசி மற்றும் கோதுமையில் முறையே .06 மற்றும் 1.5 கிராம் இரும்புச்சத்துக்கள் மட்டுமே உள்ளன. அதுபோலவே நாம் அதிகமாக உட்கொள்ளும் அரிசி மற்றும் கோதுமையில் முறையே .02 மற்றும் 1.2 கிராம் நார் சத்துக்கள் மட்டுமே உள்ளன. அதுபோன்றே கால்சியம் .045 மற்றும் .041 மில்லி கிராம் மட்டுமே அரிசி மற்றும் கோதுமைகளில் கிடைக்கிறது. எனவே, தான் ராகியை பழங்காலந்தொட்டு முளைக்கட்டி சிறுகுழந்தைகளுக்கு வழங்கும் வழக்கம் நமது நாட்டில் கிராமங்களில் நடைமுறையில் உள்ளது. இதுபோன்று ஊட்டச்சத்து மிக்க தானியங்களை உட்கொண்டதாலேயே நமது முன்னோர்கள் வலிமையுடையவர்களாகவும், நல்ல திடகாத்திரமானவர்களாகவும், உடலுழைப்பாளிகளாகவும் திகழ்ந்து வந்துள்ளனர். 

              இதுபோலவே சிறுதானியங்களான திணை (8 கிராம்), சாமை (7.6 கிராம்), பனிவரகு (7.2கி), வரகு (9கி), குதிரைவாலி (9.8கி) ஆகியவை அரிசியைக் (.02கி) காட்டிலும் எட்டு மடங்கு அதிகமான நார்ச்சத்தினைக் கொண்டுள்ளன. அதேபோன்றே தாதுப்பொருட்களையும் அதிகளவில் கொண்டுள்ளன. திணையை உட்கொண்டால் இது இரைப்பையிலுள்ள ஈரம் நீக்குவதற்கு உதவும். எனவே தான் மலைகளில் வாழக்கூடிய பழங்குடி இன மக்கள் தேனும் திணை மாவும் தங்களுடைய முக்கிய உணவுப் பொருளாக உட்கொண்டு வந்துள்ளனர். 

              இவ்வளவு மிகுதியான சத்துக்களைக் கொண்ட இப்பயிர்கள் குறைந்த காலத்தில் விளைச்சலைத் தரக் கூடியவையாகவும், குறைந்தளவிலான தண்ணீருடன் அதிகளவு வறட்சியைத் தாங்கி வளரக்கூடியவையாகவும் உள்ளன. 

இந்தியாவில் சிறுதானிய உற்பத்தி 

              இந்தியாவில் தான் உலகிலேயே மிக அதிக அளவிலான சிறுதானியங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. 2007-08ஆம் ஆண்டில் இந்தியாவில் 39.56 மில்லியன் டன் சிறுதானியங்கள் உற்பத்தி செய்யப்பட்டது. இது 2008-09ஆம் ஆண்டில் 38.34மில்லியன் டன்னாகக் குறைந்துள்ளது. 2007ஆம் ஆண்டில் இந்த உலகில் முதல் பத்து நாடுகள் சிறுதானிய உற்பத்தி விவரம் (டன்களில்) இந்தியா 1061. நைஜீரியா 77,00,000, நிகார் 27,81,000, சீனா 21,01,000, பர்க்கினா பாசோ 11,04,010, மாலி 10,74,440, சூடான் 7,92,000, உகாண்டா 7,32,000, சாட் 5,50,000, எத்தியோப்பியா 5,00,000 ஆகும். இந்தியாவில் உற்பத்தியாகும் உணவுதானிய உற்பத்தியில் அதே அளவு விகிதத்தில் சிறுதானியங்கள் உற்பத்தியாவதில்லை. 2003-04ஆம் ஆண்டில் 213.19 மில்லியன் டன்னாக இருந்த உணவு தானிய உற்பத்தி 2008-09ல் 234.47 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் 2003-04ஆம் ஆண்டில் 36.3 மில்லியன் டன்களாயிருந்த சிறுதானிய உற்பத்தி 2008-09ல் 38.4 மில்லியன் டன்களாக மட்டுமே உயர்ந்துள்ளது. 2003-04ல் மொத்த உணவு தானிய உற்பத்தியில் 17 சதவீதமாயிருந்த சிறுதானிய உற்பத்தி 2008-09ஆம் ஆண்டில் 16 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது மிகவும் கவலை கொள்ள வேண்டிய ஒன்றாகும். இதற்குக் காரணம் இத்தானியங்களுக்கான நுகர்வு குறைந்து கிராமங்களில் கூட அரிசியையும், கோதுமையையும் பிரதானமாக உட்கொள்ள ஆரம்பித்ததுதான். ஒரு சில கிராமங்களில் சிறுதானியங்களை விற்று அரிசியை வாங்கி நுகரும் கலாச்சாரம் வெகுவாகப் பரவி வருகிறது.

தமிழகத்தில் சிறுதானிய உற்பத்தி

              தமிழகத்தில் 1998-99ஆம் ஆண்டில் 7,56,523 ஹெக்டேர் நிலப்பரப்பில் சிறுதானியங்கள் பயிரிடப்பட்டுள்ளது. இது 2008-09ஆம் ஆண்டில் 7,18,396 ஹெக்டேராக குறைந்துள்ளது. அதிலும் மக்காச்சோளம் உற்பத்தி இப்பத்தாண்டு கால இடைவெளியில் ஐந்து மடங்கு உயர்ந்துள்ளது. மக்காட்சோளம் தவிர்த்து இதர சிறுதானியங்களைக் கணக்கிட்டால் இதன் பரப்பளவில் பெரும் அளவில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இப்பத்தாண்டு காலத்தில் சோளம் பரப்பு 3,64,944 ஹெக்டேரிலிருந்து 2,58,876 ஹெக்டேராகவும், கம்பு பரப்பு 1,53,937 ஹெக்டேராகவும் 56,672 ஹெக்டேராகவும், வரகு பரப்பு 15654 ஹெக்டேரிலிருந்து 4086 ஹெக்டேராகவும், சாமை பரப்பு 43,799 ஹெக்டேரிலிருந்து 21231 ஹெக்டேராகவும், கேழ்வரகு பரப்பு 1,20,047 ஹெக்டேரிலிருந்து 90,079 ஹெக்டேராகவும் குறைந்துள்ளது. இதில் மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டிய விசயம் மக்காட்சோளம் கோழித்தீவனமாக பயன்படுத்தப்படுவதால் உத்தரவாதமான விலையும், பல கோழிப்பண்ணைகள் நேரடியாக விதை உட்பட அனைத்து இடுபொருட்களும் வழங்கி நல்ல நிலையில் விளை பொருளை வாங்கிக் கொள்வதாலும் இதன் பரப்பு கடந்த பத்தாண்டுகளில் ஐந்து மடங்கு உயர்ந்திருக்கிறது. துரித உணவு மற்றும் அரிசி, கோதுமை ஆகியவற்றின் உணவு நுகர்வு காரணமாக இதர சிறுதானியங்களில் பரப்பு சிறிது சிறிதாகக் குறைந்து முழுவதும் அழியும் நிலையில் உள்ளது.

              தமிழகத்தின் கேழ்வரகு உற்பத்தியில் 50 சதவீதத்திற்கும் மேலான பரப்பும், உற்பத்தியும் கிருக்ஷணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டத்திலேயே கடந்த பத்தாண்டுகளாக நீடித்து வருகிறது. ஆனால் நடப்பு ஆண்டில் இம்மாவட்டத்தில் பயிரிடப்பட்ட 70,000 ஹெக்டேர் பரப்பில் டிசம்பர் 2010ல் அறுவடை சமயத்தில் மழை பெய்ததால் 50,000 ஹெக்டேரில் உற்பத்தியான கேழ்வரகு விளைச்சல் முழுவதுமாக அழிந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது மேலும் உற்பத்திக் குறைப்பை ஏற்படுத்தும்.

              இந்திய மெடிக்கல் கவுன்சில் நடத்திய ஆய்வு, தமிழகத்தில் சர்க்கரை நோய் உள்ளவர்கள் 42,00,000 எனவும், மேலும் சர்க்கரை நோய் அறிகுறிகளுடன் 30,00,000 வாழ்வதாகவும் தெரிவிக்கிறது. ஏறத்தாழ 72 இலட்சம் பேர் உணவுப் பழக்க வழக்கங்களில் ஏற்பட்ட மாறுதல் காரணமாக சர்க்கரை நோய்க்கு உள்ளாகியுள்ளனர். எனவே, தற்போதைய தேவை துரித உணவை விடுத்து சிறுதானியங்களை அதிகளவில் உட்கொள்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகும். இதனால் உடல் ஆரோக்கியமடைவதுடன் உழவர்களையும் காப்பாற்றிட முடியும். நிரந்தரமான விலையும், பொதுமக்களின் ஆதரவும் இல்லாதுதான் இதுபோன்ற சத்தான சிறுதானியங்கள் அழிவிற்கு முதன்மையான காரணம் என்பது மக்காட்சோள உற்பத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைக் கொண்டே அறிய முடியும். இதுபோன்றே தற்போது குதிரைவாலிப் பயிர் உற்பத்தியும் மதுரை மாவட்டத்தில் அதிகளவில் பயிரிடப்பட்டு வருவதும் நிரந்தரமான அங்காடி இருப்பதனால் தான். எனவே, இப்பொருட்கள் உற்பத்தியை, பரப்பை அதிகரிக்க நுகர்வு குறித்த விழிப்புணர்வை, கலாச்சார மரபை உருவாக்குதல் வேண்டும். அரசு சர்க்கரைநோய்க்கு அருமருந்தாய் உள்ள இச்சிறுதானிய உற்பத்திக்கு சிறப்புத் திட்டங்களை அறிவித்து உற்பத்தியை பெருக்கிடல் வேண்டும். இப்பொருட்களிலிருந்து செறிவூட்டப்பட்ட சத்தான ஆதாரங்களைத் தயாரித்து விற்பனை செய்ய தக்க முயற்சி செய்து நமது நாட்டின் ஆரோக்கியமான உணவுப் பொருட்களை அழிவிலிருந்து காப்பாற்றுதல் வேண்டும்.

- மதுரை சு.கிருஷ்ணன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

ஆதாரங்கள் 

1) பருவமும் பயிரும் பற்றிய அறிக்கை பசலி 1408 மற்றும் 1418

 பொருள்இயல் மற்றும் புள்ளிஇயல் துறை, சென்னை‍-6.

2) இந்து நாளிதழ் 14.12.201.0

3) தினமலர் நாளிதழ் 11.12.201.0

4) வீழ்ந்துவரும் விவசாயம், சு.கிருக்ஷணன் டிசம்பர் 20,2010 www.keetru.com

Pin It