இந்திய உயர்கல்வி வரலாறு தனித்துக் கற்றுணரப்பட வேண்டிய ஒன்று. பம்பாய் பல்கலைக்கழகம், கல்கத்தா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம் ஆகிய மூன்று பல்கலைக்கழகங்களுமே 1857ஆம் ஆண்டு தொடங்கப்பட்டவை. பிறகு 1882இல் பஞ்சாப் பல்கலைக்கழகமும், 1887இல் அலகாபாத் பல்கலைக்கழகமும் தோற்றுவிக்கப்பட்டன. இவை யாவும் லண்டன் பல்கலைக்கழகத்தை முன்மாதிரியாக வைத்துத் தொடங்கப்பட்டவை. மொழியியல், மானுடவியல் ஆகிய பாடங்களுக்கும் பட்டங்களுக்கும் இத்தகைய தொடக்கக்காலப் பல்கலைக்கழகங்கள் முக்கியத்துவம் கொடுத்தன.
இந்தியக் கல்வி, 1935இல் இந்திய அரசுச் சட்டம் இயற்றப்படும் வரை பிரிட்டிஷ் ஆட்சியினரின் முழுக்கட்டுப்பாட்டிலும் பிடிப்பிலும் இருந்தது. அதற்குப் பிறகுதான் இந்தியப்படுத்தப்பட்ட கல்வி படிப்படியாக வளர்ந்தது.
இந்தியா 1947இல் விடுதலை பெற்றபோது, 20 பல்கலைக்கழகங்களும் 496 கல்லூரிகளும் இருந்தன. அப்போது இந்தியா முழுவதும் மொத்தம் 2,41,369 மாணவர்கள் உயர்கல்வி வாய்ப்புப் பெற்றிருந்தனர். பிரிட்டிஷ் ஆட்சியினர் வெளியேறிய பின்னரும்.... ஏன் 1980கள் வரையிலும் இந்திய உயர்கல்வி நிலையங்கள் மொழியியல் மற்றும் மானுடவியல் பாடங்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்து வந்தன. ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., ஆர்.ஈ.சி., போன்றவை மட்டும் விதிவிலக்காக விளங்கின. பிறகு, அடுத்தடுத்த கட்டத்தில் இந்திய உயர்கல்வி அனைத்துத் துறைகளுக்குமானதாகப் பரிணாம வளர்ச்சி பெற்றது.
2013 – 2014 கல்வியாண்டில் இந்தியாவில் 20,849 மாணவர்கள் பிஎச்.டி., பட்டம் பெற்றுள்ளனர்; 20,425 மாணவர்கள் எம்.ஃபில். பட்டம் பெற்றனர். இவர்களுள் சரி பாதிக்கும் மேற்பட்டவர்கள் அறிவியல், பொறியியல், தொழில்நுட்பம், மருத்துவம், விவசாயம் ஆகிய துறைகளில் ஆய்வு செய்து, இந்த ஆய்வுப் பட்டங்களைப் பெற்றுள்ளனர். இரண்டு லட்சம் இந்திய மாணவர்கள் உலகெங்கும் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்களில் சேர்ந்து உயர்கல்வி பயில்கின்றனர்.
தற்போது இந்தியாவில் ஆயிரம் பல்கலைக்கழகங்களுக்கும் மேல் உள்ளன. அவற்றுள் 51 மத்தியப் பல்கலைக்கழகங்கள், 416 மாநிலப் பல்கலைக்கழகங்கள், 147 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், 316 மாநில தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் 159 தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஐ.ஐ.டி., என்.ஐ.டி., ஏ.ஐ.ஐ.எம். போன்ற நிறுவனங்கள் உள்ளன. 53,354 கல்லூரிகள் உள்ளன.
புள்ளிவிவரங்களை மட்டும் தனியாக வைத்துப் பார்க்கிற போது இந்திய உயர்கல்வி வளர்ந்திருப்பது புலனாகிறது. அதே சமயத்தில், மிகப்பெரும் அளவில் வளர்ந்து நிற்கிற மக்கள் தொகையை ஒப்பிட்டு ஆய்வு செய்தால், இன்னும் பல லட்சக்கணக்கானோர்க்கு உயர்கல்வி எட்டாக் கனியாகவே உள்ளதை உணர்ந்துகொள்ள முடிகிறது.
கல்வி நிலையங்களின் எண்ணிக்கையும் கற்போரின் எண்ணிக்கையும் பெருகியிருப்பது உண்மை எனினும், கல்வித் தரம் முழுமையாக மேம்பட்டிருக்க வேண்டிய அளவுக்கு மேம்பட்டுள்ளதா என்று கேட்டால், ‘இல்லை’ என்பதே பதிலாக உள்ளது. வெறும் பட்டதாரிகளை உருவாக்குகிற பட்டறைகளல்ல பல்கலைக்கழகங்கள்.
உலகத்தர வரிசையில் இந்தியப் பல்கலைக்கழகங்கள் எந்த இடத்தில் இருக்கின்றன என்பதை ஆய்வு செய்தால் ஆழ்ந்த கவலைதான் மிஞ்சுகிறது.
‘கல்வி என்பது ஏதோ தனிநபர்கள் சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல: ஒரு நாட்டின் குடிமக்களை நல்லவர்களாகவும் பொறுப்புள்ளவர்களாகவும் உருவாக்குவது கல்வியின் வேலை’ என்கிறார் அரிஸ்டாட்டில்.
‘கல்வி என்பது உண்மையைத் தேடுதல்; தகவல்களைத் திணிப்பது அல்ல!’ என்று கூறியதோடு, ‘கல்வி வணிகமயமாகிவிடக்கூடாது’ என்று அழுத்தமாக எச்சரித்துள்ளார் பிளேட்டோ.
ஐ.நா. சபையின் பொதுச்செயலாளராக விளங்கியவரும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான கோஃபி அன்னான் ‘உலகெங்கும் நடக்கும் போர்களையும் வன்முறைகளையும் தடுப்பதற்குக் கல்வி அவசியம். மக்களிடையே சகிப்புத்தன்மை, மனிதநேயம் மற்றும் பிற கலாசாரங்களை மதிக்கும் பண்பைக் கல்வி மட்டுமே அளிக்கும்!’ என்கிறார்.
‘கல்வி என்பது ஒரு மனிதனுக்குப் பொய் எது, உண்மை எது என்று பகுத்தறியும் பகுத்தறிவை வழங்க வேண்டும். ஊடகங்கள் மற்றும் வெற்று விளம்பரங்களாலும் பிரசாரங்களாலும் ஏமாந்து போகாமல் விழிப்புணர்வுடன் செயல்பட வழி வகுக்க வேண்டும்’ என்று முழங்கினார், மார்ட்டின் லூதர் கிங்.
இத்தகைய அடிப்படை அம்சங்களை விட்டு விலகி நிற்கும் உயர்கல்வியால் எதிர்பார்க்கிற விளைவை ஏற்படுத்த இயலாது.
உயர்கல்வி என்பது ஆராய்ச்சியை வளர்க்கும் உந்துசக்தியாக விளங்கவேண்டும். சமூகப் பிரச்சினைகளைப் பற்றியும் மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்துமான ஆழமான தலைப்புகளில் தனித்துவம்மிக்க ஆய்வுகள் பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ளப்பட வேண்டும். அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு நிகரான முக்கியத்துவம் சமூகவியல் தலைப்புகளுக்கும் இருக்க வேண்டும். ஆய்வுகள் பட்டம் பெறுவதற்கானவையாக மட்டுமல்லாது, சமூக மாற்றம், முன்னேற்றம் பற்றியவையாகவும் அவை அசலானவையாகவும் தீர்வுகளை முன்வைப்பவையாகவும் சமூகப்பொறுப்புடனான அணுகுமுறையோடு மேற்கொள்ளப்படுபவையாகவும் இருக்க வேண்டும்.
உயர்கல்வி என்பது பட்ட மேற்படிப்பு என்ற கருத்து மேலோட்டமானதாகும். அது உயர்ந்த கல்வியாகவும் திகழ்தல் அவசியம். உயர்கல்வியின் உண்மையான வளர்ச்சி நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமிடும் என்பதில் சந்தேகமில்லை.
- உங்கள் நூலகம் ஆசிரியர் குழு