வேலூர் மாவட்டம், வாணியம்பாடியில் 07-01-2017 அன்று சிந்தனையாளன் பொங்கல் மலர்-2017 வெளியீட்டு விழா, புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு-மருத்துவ நுழைவுத் தேர்வு எதிர்ப்பு இந்தி ஆதிக்கம் - சமற்கிருதத் திணிப்பு எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

இரங்கல் தீர்மானங்கள்

தீர்மானம் - 1

இரஷ்யாவில் நிறுவப்பட்டிருந்த சார் குடும்ப அரசாட்சி யை அகற்றி, உலக அளவில் முதன்முதலாக சமதரும ஆட்சியை 1917இல் நிறுவிய இலெனின் 1924இல் மறைந்தார். சீன நாட்டில் புகழ் பெற்ற மாபெரும் நீண்ட நடைப்பயணத்தை நடத்தி, அங்கிருந்த அர சாட்சியை 1949இல் அகற்றி சமதரும ஆட்சியை நிறு விய மாசேதுங் 1979இல் மறைந்தார்.

இவற்றை அடுத்து, கியூபாவில் நிறுவப்பட்டிருந்த பாடிஸ்டா அரசை எதிர்த்தும், அமெரிக்காவின் மாபெ ரும் சூழ்ச்சிகளை முறியடித்தும் பிடல் காஸ்ட்ரோவும் புரட்சியாளர் சே குவேராவும் இணைந்து மாபெரும் புரட்சியை நடத்தி கியூபாவை சமதரும நாடாக 1959 இல் அமைத்தனர். அமெரிக்காவின் தடைகளையும், நூற்றுக் கணக்கான தடவைகள் அமெரிக்காவால் நடத்தப்பட்ட கொலை முயற்சிகளையும் தாண்டி, ஒரு குட்டி நாடான கியூபா அரசு சமதரும ஆட்சியை வெற்றிகரமாக நடத்தியது.

உலகத்தரம் வாய்ந்த கல்வியையும், அனைவருக் கும் வேண்டப்பட்ட உயர்தரம் வாய்ந்த மருத்துவத் தையும் இலவயமாக இன்றுவரை அளித்துவரும் அரசு உலகில் கியூபா அரசு மட்டுமே ஆகும். அத்தகைய அரசை நிறுவிய ஃபிடல் காஸ்ட்ரோ கியூபாவின் அதிபர் பொறுப்பிலிருந்து, உடல்நிலை காரணமாக விலகிக் கொண்டாலும் உலகப் பெருந்தலைவர்களால் கண்டு பேசப்படும் சமதருமத் தத்துவ மேதையாக விளங்கி வந்தார். அத்தகைய சமதருமப் புரட்சியாளர் ஃபிடல் காஸ்ட்ரோ அவர்கள் 26.11.2016 அன்று மறைவுற்றது உலக அளவில் மார்க்சிய - இலெனினிய - மாவோயியக் கொள்கையாளர்களுக்கு ஒரு பின்ன டைவே ஆகும் என இம்மாநாடு மனமாரக் கருதுகிறது. கியூபா நாட்டு மக்களுக்கும் உலகில் உள்ள பொது வுடைமை இயக்கங்களுக்கும் ஏற்பட்டுவிட்ட இந்தப் பேரிழப்பைக் கருதி இம்மாநாடு மனம் கசிந்த இரங் கலைத் தெரிவித்துக் கொள்வதுடன் மறைந்த புரட்சியாளர் ஃபிடல் காஸ்ட்ரோவுக்குச் செவ்வணக்கத்தை உரித் தாக்குகிறது.

தீர்மானம் - 1அ

மார்க்சியப் பொரியாரியப் பொதுவுடைமைக் கட்சி 08.08.1976இல் நிறுவப்பட்டது. 1978 முதல் மா.பெ.பொ.க.வின் கிளை வேலூர் மாவட்டத்தில் சிறப்பாக இயங்கி வருகிறது. வேலூர் மாவட்டத்தில் வேலூர் துரைசாமி - அம்புசம் இணையரின் மகனாகப் பிறந்த து. மூர்த்தி, தமிழில் பட்ட மேற்படிப்பைக் கற்ற அதே நேரத்தில் இளமையிலேயே மார்க்சியம், பெரியாரியம் அம்பேத்கரியம், பாவேந்தம் இவற்றில் நாட்டங்கொண்டு இளைஞர்களுக்கும் கல்வி மறுக்கப் பட்டவர்களுக்கும் தாம் சார்ந்த கட்சித் தோழர்களுக் கும், மார்க்சியப் பெரியாரியத்தை விளக்கிச் சொல் வதிலும் விளக்கி எழுதுவதிலும் தனித்திறமை பெற்றவ ராக விளங்கினார். அவரைப் பெற்ற தமிழ்நாடு அக்கல்வியாளரைப் புறக்கணித்தபோதும் உத்தரப்பிரதேசத்தில் உள்ள அலிகர் முசுலிம் பல்கலைக் கழகத்தில் நவீன இந்திய மொழிகள் துறையில் தமிழைக் கற்பிக்கும் பேராசிரியராக 30 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றினார்.

2016இல் அத்துறையின் தலைவராகப் பதவி உயர்வு பெற்றார். இந்நிலையில் அண்மையில், முற்றிய புற்று நோய்க்கு ஆளாகி-அலிகரில் அறுவை செய்து கொண்ட போது 24.10.16 அன்று அங்கேயே சில மணி நேரங் களில் உயிரிழந்தார் என்பது தமிழகத்தில் அவரை அறிந்த எல்லோருக்கும் அதிர்ச்சி தருவதாக இருந்தது. அப் புரட்சியாளரை இழந்து துயருறும் அவருடைய குடும் பத்தினருக்கும், மார்க்சிய-பெரியாரிய-அம்பேத்கரியக் கொள்கையாளர்களுக்கும், தமிழ் இயக்கங்களுக்கும் இம்மாநாடு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள் வதுடன் மறைந்த மாமறவர் முனைவர் து. மூர்த்தி அவர் களுக்கு இம்மாநாடு செவ்வணக்கத்தை உரித்தாக்குகிறது.

தீர்மானம் - 1ஆ

மானிட உரிமைக் காப்பாளராகவும் மனித சமத்து வத்தை நிலைநாட்டுபவராகவும் மத மறுப்பாளராக வும், சிறந்த மார்க்சிய-இலெனினிய உணர்வாள ராகவும் விளங்கிய - சாகுல் அமீது எனப் பெயர் கொண்ட புரட்சிப் பாவலர் இன்குலாப் அவர்கள் தம் பொதுவாழ்வுக்காலம் முழுவதிலும் மார்க்சியம், பெரி யாரியம், அம்பேத்கரியம் இவற்றை அடக்கிய பாடல்களை இயற்றுபவராகவும், அப்பாடல்களின் கருத்துக் களைப் பரப்புநராகவும் தமிழ்ப் பேராசிரியராகவும் விளங்கினார். நீரிழிவு நோய்க்கு ஆட்பட்ட அப்பெரு மகனார் அண்மை ஆண்டுகளில் ஒரு காலை இழந்த நிலையிலும் பொது மேடைகளில் தம் கருத்துக்களைப் பரப்புவதில் முன் நின்றார். அத்தகைய மக்கள் கவிஞர் இன்குலாப் அவர்கள் 01.12.2016 அன்று மறைந்து விட்டது கருதி இம்மாநாடு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறது. அன்னாரை இழந்துத் துயருறும் அவரது குடும்பத்தார்க்கும் முற்போக்கு இயக்கங்களைச் சார்ந்தவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன் மறைந்த இன்குலாப் அவர்களுக்கு இம்மாநாடு செவ்வணக்கத்தை உரித்தாக்குகிறது.

தீர்மானம் - 1இ

கடந்த 05.12.2016அன்று மறைவுற்ற தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு ஜெ.ஜெயலலிதா, 07.12.2016 அன்று மறைந்த துக்ளக் ஆசிரியர் சோ. இராமசாமி, 10.12.2016இல் மறைந்த பேரறிஞர் பொறியாளர் வா.செ. குழந்தைசாமி, 01.12.2016இல் மறைந்த இந்தியப் பொதுவுடமைக் கட்சித் தோழர் இரா. நல்லக்கண்ணு அவர்களின் துணைவியார் இரஞ்சிதம் அம்மையார், 26.12.2016இல் மறைந்த தலைசிறந்த தி.மு.க எழுத் தாளரும் பேச்சாளருமான தி.கோ. சீனிவாசன் அவர்களின் துணைவியார் தி.கோ.சீ. சரசுவதி, சோழமண்டலத் தி.மு.க காவலர் கோ.சி.மணி, பெங்களூரில் வாழ்ந்து 15.12.2016 அன்று மறைந்த தனித்தமிழ்க் காப்பாளர் மகிபை பாவிசைக்கோ, 05.12.2016 அன்று மறைந்த காஞ்சிபுரம் கீழம்பி மா.பெ.பொ.க தோழர் வ. வேத கிரியின் தந்தையார் நா. வரதப்பன் ஆகியோரின் மறை வுக்கு இம்மாநாடு வருந்துவதுடன் மனங்கசிந்த இரங் கலை உரித்தாக்குகிறது.

pongal malar 2017 600

பா.ச.க. அரசின் புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு

தீர்மானம் - 2

பாரதிய சனதாக் கட்சியின் இந்திய ஆட்சி 2016இல் அறிவித்துள்ள “புதிய கல்விக் கொள்கை” என்பது இரண்டு பிற்போக்கான நோக்கங்களைக் கொண்டது ஆகும். முதலாவது நோக்கப்படி, பத்தாம் வகுப்புத் தேர்வில் வெற்றி பெறும் மாணவ-மாணவியரை மதிப் பெண் அடிப்படையில் அ-(A) தரப்பிரிவினர் என்றும் ஆ-(B) தரப்பிரிவினர் என்றும் இரண்டு வகையாகத் தரம் பிரிக்கும் நோக்கம் கொண்டுள்ளது. அ-(A) தரம் பெற்றவர்கள் மட்டும் மேற்கொண்டு எந்த வகையான படிப்பையும் பெறுவதற்குத் தகுதி படைத்தவர் என்றும், ஆ - (B) தரம் பெற்றவர்கள் அவரவர் பெற்றுள்ள மதிப்பெண்ணுக்கு ஏற்பச் சான்றிழ்ப் படிப்பு, பட்டயப் படிப்பு முதலான கீழ்நிலைப் படிப்புகளையே படிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட வழி செய்வதாக இருக்கிறது.

இந்தியா முழுவதிலும் - தமிழகத்திலும் தரமற்ற கல்வி கற்பிக்கும் பள்ளிகளும், கல்லூரிகளும் குவிந்துள்ள இன்றைய நிலையில், ஆ-(B) தரத்திற்குத் தள்ளப்படுபவர்களில் 100க்கு 90 பேர் எல்லா மதங் களையும் சார்ந்த பிற்படுத்தப்பட்டோராகவும் இன்னும் தீண்டப்படாதவராகக் கருதப்படும் பட்டியல் வகுப்பின ராகவும், பழங்குடியினராகவும் இருப்பர். இதனால், இவர்கள் 16 அகவையிலேயே உயர்கல்வி பெறுவதற்கு நாட்டம் கொள்ளாமல் செய்யப்பட்டு நால்வருண - உள்சாதி அடிப்படையில் கல்வி உரிமை மறுக்கப்பட்ட வர்களாகவே தொடர்ந்து வைக்கப்படுவார்கள் என இம்மாநாடு அஞ்சுகிறது.

தீர்மானம் - 3

இரண்டாவது நோக்கப்படி, இந்தியப் பண்பாட்டின் அடையாளமாகச் சமற்கிருத மொழியை எல்லாப் பள்ளி களிலும், கற்பிப்பது திட்டமாகும். இன்று இந்தியாவில் உள்ள 127 கோடி மக்களுள் வெறும் 25 ஆயிரம் பேர்களால் பேசப்படுவதாகவும், மணவினை, பிணவினை, கோயில் பூசை, சோதிடம் இவற்றைக் கற்றுத் தருவ தற்கு மட்டுமே பயன்படும் மொழியாகவும் உள்ள சமற்கிருதத்தைப் பள்ளிகளில் தொடங்கி கல்லூரிகள் வரையும் கட்டாயப் பாடமாக வைத்துக் கற்பிக்கப் படும் திட்டத்தைக் கொண்டுள்ள இந்தப் புதியக் கல்விக் கொள்கையை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.

மேலும், தமிழ்நாட்டில் வாழும் ஏழரைக் கோடி மக்களாலும், உலக நாடுகளில் வாழும் ஒரு கோடி தமிழ் மக்களாலும் பேசப்படுகிற செம்மொழியானத் தமிழ் மொழி இருக்க அதைவிடுத்துச் சமற்கிருதம் பயிற்றுவிப்பது என்பது தமிழ்மக்களுக்கு மானக்குறை வும் இழிவும் ஆகும் என்பதை உணர்ந்து, தமிழர்கள் எல்லோரும் மதம், சாதி, இயக்கம், கட்சி, இவற்றை மறந்து ஒற்றைக்குரலில் “சமற்கிருதம் ஒழிக!” என்று முழக்கம் எழுப்பித் தெருவுக்கு வந்து போராட வேண்டும் என்று தமிழ் மக்களை வணக்கத்துடன் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் - 4

அடுத்து, ஒன்று முதல் 5ஆம் வகுப்பு வரை அவரவர் தாய் மொழியில் கல்வியும் - தமிழர் தமிழ் வழியில் கல்வி கற்கலாம் என்பதே உறுதியானது என்றும்; ஆறாம் வகுப்புக்கு மேல் விரும்பினால் ஆங்கிலத்தில் படிப்பது நல்லது என்றும் புதிய கல்விக் கொள்கை கூறுவது வெவ்வேறுபட்ட 300 தாய்மொழிகளைப் பேசும் 127 கோடி இந்திய மக்களுக்கும், குறிப்பாகத் தமிழர்களுக்கும் இழிவானதும், மானக்குறைவும் ஆகும் என இம்மாநாடு கருதுகிறது. இந்தியாவிலுள்ள மான முள்ள எல்லா மாநில மக்களும், தமிழர் ஒவ்வொரு வரும் ஆங்கில மொழிவழிக் கல்வியை முற்றிலுமாக எதிர்க்க வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

மேலும், பாலர் வகுப்பு முதல் பல்கலைக்கழகப் படிப்பு வரை அவரவர் தாய்மொழி வழியில் பாடங் கள் கற்பிக்கப்படாததால்தான் - இந்தியப் பல்கலைக் கழகங்களுள் ஒன்றுகூட, 2016-17 கல்வி ஆண்டிலும் உலகத்தரம் வாய்ந்த 200 உலகப் பல்கலைக்கழகப் பட்டியலில் இடம் பெற முடியாத மானக்குறைவான நிலை ஏற்பட்டுள்ளது என்பதை எல்லாக் கல்வியாளர் களுக்கும் மாணவர்களுக்கும் இம்மாநாடு சுட்டிக்காட்ட விரும்புகிறது. எனவே, இளைய தலைமுறையினரும், எல்லாத் துறைக் கல்வியாளர்களும் இணைந்து “ஆங்கில மொழிவழிக்கல்வி ஒழிக” என்று கோரி தெரு வுக்கு வந்து போராடவேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

மருத்துவக் கல்விக்கான அனைத்திந்தியப் பொதுநுழைவுத் தேர்வு எதிர்ப்பு

தீர்மானம் - 5

“மருத்துவக் கல்விக்குப் பொது நுழைவுத் தேர்வு” என்பது, முதன் முதலாக இந்திய அரசினாலும் உச்ச நீதிமன்றத்தாலும் எல்லா இந்தியர்கள் மீதும் திணிக் கப்படுகிறது. இந்தியா முழுவதிலும் எல்லா மாநிலங் களிலும் இந்திய நடுவண் அரசின் மேல்நிலைப் பள்ளிக் களுக்கான கல்வித்திட்டம், மாநில அரசுக்கான கல்வித் திட்டம் என இரு வேறுபட்ட கல்வித்திட்டங்கள் நடை முறையில் உள்ளன. இருப்பினும், இந்திய அரசின் நடுவண் இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE) பாடத்திட்டம் கொண்டுள்ள பள்ளிகள் மிகவும் குறை வாகவும், அந்தந்த மாநில அரசின் பாடத்திட்டப்படி கற்பிக்கும் பள்ளிகளே அதிகமாகவும் உள்ளன. மேலும், நடுவண் இடைநிலைக் கல்வி வாரியத்தின் கீழ் நடைபெறும் பள்ளிகளில் ஆங்கிலமொழி வழி யிலும் இந்தி மொழி வழியிலும் மட்டுமே பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.

எனவே, இந்திய அளவில் நடை பெறும் போட்டித் தேர்வுகள், பொது நுழைவுத் தேர்வு கள் போன்ற எல்லாத் தேர்வுகளின் வினாத்தாள்களும் ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டுமே இருந்து வந்தன. இந்த ஏற்பாட்டுக்கு மக்களிடம் அண்மையில் பேரெதிர்ப்புத் தோன்றிய உடனே, இந்தி, ஆங்கிலம், அஸ்ஸாமி, வங்க மொழி, குசராத்தி, மராத்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய 8 மொழிகளில் விடைகளை மட்டும் எழுத 2017 தேர்வில் வழி செய்யப்படும் என, மோடி அரசு அறிவித்துள்ளது. இதிலுள்ள சூழ்ச்சி என்ன வெனில், எப்போதும் வினாத்தாள்கள் ஆங்கிலமொழி யிலும், இந்தி மொழியிலும் மட்டுமே இருக்கும்; ஆனால், விடை எழுதும் மாணவர்கள் அவரவர் தாய் மொழியிலும் எழுதலாம் என்பது, இந்தி பேசாத மக்கள் மீது இந்தியைத் திணிப்பதும், மற்ற மொழிகளைச் சார்ந்தவர்கள் வினாவைப் புரிந்து கொண்டு அதற்கு விடை எழுத முடியாமல் செய்வதும் ஆகும்.

இது கல்விபெறும் மாணவர்களின் சம வாய்ப்பு உரிமைக்கு எதிரானது. எனவே, தேசியக் கல்வியின் தரத்தை உயர்த்து வது என்ற பெயரால் நடத்தப்படுகிற பல்வேறு தேசிய இனங்களை - தாய்மொழிகளைக் கொண்ட வெகுசன மக்களுக்கு எதிரான “தேசியத் தகுதிகாண் நுழைவுத் தேர்வு” (National Eligibility Entrance Test - NEET) எனும் மருத்து வக் கல்விக்கான அனைத்திந்திய பொதுநுழைவுத் தேர்வு நடத்தப்படுவதை இந்திய அரசு நீக்கும் வரை யிலும் - உச்சநீதிமன்ற அரசியல் சட்ட அமர்வின் தீர்ப்பு முறியடிக்கப்படும் வரையிலும் இந்திய அளவில் போராட வேண்டும் என இம்மாநாடு அனைவரையும் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் - 6

இப்போதைய வேலூர் மாவட்டம், கிழக்கு மேற்காக ஏறக்குறைய 227 கி.மீ தொலைவு கொண்டதாகவும், 9 வட்டங்கள், 13 சட்டப்பேரவைத் தொகுதிகள், 31 இலட்சம் வாக்காளர்களைக் கொண்டாதகவும் மிகப் பெரிய மாவட்டமாக உள்ளது. பொதுமக்கள் தங்களின் குறை தீர்வுக்காக, மாவட்டத் தலைநகரான வேலூரில் உள்ள பல்துறை அலுவலகங்களுக்குச் சென்றுவர, மாவட்டத்தின் மேற்கு எல்லை ஊரான விளக்கல் நத்தத்திலிருந்து 80 கி.மீக்கு மேலும், கிழக்கு எல்லை ஊரான பேரம்பாக்கத்தில் இருந்து 100 கி.மீ.க்கு மேலும் பயணம் செய்து ஒரு முழு நாளைச் செலவிட வேண்டியுள்ளது. எனவே, பொதுமக்கள் நலன் கருதி யும், நிருவாக வசதிக்காகவும் வேலூர் மாவட்டத்தை இரண்டாகப் பிரிவினை செய்ய வேண்டும் எனத் தமிழ் நாட்டரசினை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது. இரண்டாவதாக அமைக்கப்பட உள்ள மாவட்டத்திற்கு, தற்போது கோட்டத் தலைமையிடமாக உள்ள திருப்பத் தூரைத் தலைநகரமாக்கிடவும் இம்மாநாடு தமிழக அரசினையும், வேலூர் மாவட்ட மக்களையும் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் - 7

சென்னை-பெங்களூர்த் தேசிய நெடுஞ்சாலையை (எண். 48-பழைய எண் 46) ஆறு வழிச்சாலையாக அகலப் படுத்துவதற்கு நிலங்களைக் கையகப்படுத்தியபோது, பழைய நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின்படி குறைந்த அளவு இழப்பீட்டுத் தொகையே நில உரிமையாளர் களுக்குக் கொடுக்கப்பட்டது. இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று மேல்முறையீடு செய்த நில உரிமையாளர்களுக்கு மட்டும் இழப் பீட்டுத் தொகை உயர்த்தி வழங்கப்பட்டிருக்கிறது. இது ஆங்கிலேயரின் காலனி ஆட்சிக் காலத்து நடை முறை ஆகும். ஆகவே, இழப்பீட்டுத் தொகைகளை மறுமதிப்பீடு செய்து அனைத்து நில உரிமையாளர் களுக்கும் இழப்பீட்டை உயர்த்தி அளித்திடுமாறு தமிழ் நாட்டரசையும், இந்திய அரசையும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் - 8

பெண்ணை ஆற்றின் குறுக்கே, கிருட்டினகிரியில் உள்ள அணைக்கு, மழைக்காலத்தில் வரும் உபரி நீரை வாணியம்பாடிக்கு மேற்கில் பாலாற்றில் இணைப் பதற்குத் தமிழ்நாடு அரசு ஏற்கெனவே திட்டமிட்ட படி முன்னுரிமை அளித்துச் செயல்படுத்த வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் - 9

வாணியம்பாடி நகரில் நியூ டவுன் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியை, வரும் 2017-18 கல்வி ஆண்டிலேயே, ஆண்-பெண் இருபாலாரும் படிக்கத் தக்க வகையில் அரசு மேல்நிலைப்பள்ளியாக ஆக்கிட வேண்டும் எனத் தமிழ்நாட்டு அரசினை இம்மாநாடு கோருகிறது.

வாணியம்பாடி நகரில் ஆண்-பெண் இருபாலாரும் படிக்கும் வகையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஒன்றினை 2017-18 கல்வி ஆண்டிலேயே தொடங்கவேண்டும் என்று தமிழ்நாடு அரசினை இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது.

ஆற்றுமணல் கொள்ளைக்குத் தடை

தீர்மானம் - 10

தமிழ்நாடு தழுவிய அளவில் தாமிரபரணி ஆறு தொடங்கிப் பெண்ணையாறு, கொசத்தலை ஆறு வரை உள்ள எந்த ஆற்றிலும் எந்தப் பணிகளுக்காக வும் தனியாரோ, அரசோ ஆற்று மணலை அள்ளு வதைத் தமிழக அரசு அடியோடு தடை செய்ய வேண்டும் என்று இம்மாநாடு கோருகிறது. இதில் கேரள அரசை எடுத்துக்காட்டாகக் கொள்ள வேண்டும் என்றும் தமிழக அரசினரை வேண்டிக் கொள்கிறது.

நிலத்தடி நீரை உறிஞ்சிக் குடிநீர்புட்டி மற்றும் சுவைநீர்ப்புட்டி உருவாக்கத்திற்காக கோகோ கோலா, பெப்சி கோலா மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக் குத் தமிழக அரசு 99 ஆண்டுக்குத்தகைக்கு நிலம் கொடுத்திருப்பதால் அவர்கள் சென்ற பல ஆண்டு களாக நிலத்தடி நீரை உறிஞ்சிவிட்டனர். தமிழக ஆறு களில் மணல் எடுப்பதாலும், தனியாரால் உறிஞ்சப் பட்டதாலும் நிலத்தடி நீர் 1000 அடிக்குக் கீழே போய்விட்டது. இதனை உடனே தடுத்து நிறுத்துவது இன்றியமையாதது. எனவே, ஆறுமாதகால முன்னறி விப்புக் கொடுத்து இந்த உரிமங்களை அடியோடி நீக்க வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

நீராதாரங்களைக் காப்பாற்றிடக் கோருதல்

தீர்மானம் - 11

தமிழ்நாடு முழுவதிலும் ஏரிகள், குளங்கள் மற்றும் வேளாண் நிலங்கள், தரிசு நிலங்கள், பாதுகாக்கப் படாத காடுகள் ஆகியவற்றில் சீமைக் கருவேல மரங் கள் கடந்த 60 ஆண்டுகளில் பெரும் காடுகள் போல் வளர்ந்துவிட்டன. அம்மரத்தின் வேர் நிலத்தடியிலி ருந்தும் பக்கவாட்டில் உள்ள மரம், செடிகளிலிருந்தும் நீரை உறிஞ்சிக் கொள்ளும் தன்மை உடையது. அதிக மான கரிவளியை (கார்பன்-டை-ஆக்சைடு) 24 மணி நேரமும் வெளியே கடத்திவிட்டு, காற்று மண்டலத் திலுள்ள நீர்வளியை (ஹைட்ரஜனை) இழுத்துக் கொள்ளும் தன்மையுடையது.

இந்த மரங்களை விரைவில் வேரோடு அழிக்காமல் இனியும் காலம் தாழ்த்தினால் காற்று மண்டலம் நஞ்சாக மாறுவதையும் நிலத்தடி நீர் வற்றுவதையும் தடுக்க முடியாது. ஆகையால் தமிழக அரசும், தமிழகப் பெரு மக்களும், மாணவர்களும் போர்க்கால அடிப்படை யில் இயந்திரங்களைப் பயன்படுத்தி வேரோடு உழுதுத் தள்ளி இம்மரங்களை அழித்திட இம்மாநாடு வலியுறுத் திக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் - 12

1972க்குப் பிறகு தமிழ்நாட்டில் உள்ள 41,127 பெரிய, சிறிய ஏரிகளையும், அதனதன் கொள்ளளவுக்கு (ஆயக்கட்டு) நீர்பிடிக்கும் தன்மையில் தூர் வாராத தாலும், நீர்வரத்து வாய்க்கால் - நீர்ப்போக்கு வாய்க் கால்களையும் தூர்வாராததாலும் குளங்களிலும், குட் டைகளிலும், ஆகாயத்தாமரை, பாசி, ஊர் அழுக்குகள் கலந்து நீர் கெட்டு விட்டதாலும் வேளாண் பாசனத் திற்கு ஒரு போகத்திற்குக் கூட நீர்கிடைக்கவில்லை. மக்கள் குடிநீருக்கான நீர் ஆதாரங்கள் வற்றிவிட்டன. ஆடு, மாடுகள் குடிப்பதற்கு நீரின்றியும் குளிப்பதற்குக் குட்டையின்றியும் நோய்வாய்ப்படுகின்றன; பால் வற்றி விடுகின்றன; கன்றுகளை ஈனுவதும் குறைந்து வருகிறது. இவ்வளவு இடர்ப்பாடுகளையும் மனத்திற்கொண்டு தமிழக அரசினரும், அரசியல் கட்சிகளும், சமூக நல அமைப்புகளும், படித்த இளைஞர்களும் சீமைக் கரு வேல மரங்களை அழிப்பதிலும், ஆற்றுமணல் எடுப்பதை முற்றிலுமாகத் தடுப்பதிலும், ஏரிகளைத் தூர்வாரச் செய் வதிலும் எல்லோரும் முனைப்பாகச் செயல்பட வேண்டும் என இம்மாநாடு அனைத்துப் பிரிவினரை யும் கோருகிறது.

தீர்மானம் - 13

பார்த்தினியம் எனும் நச்சுச்செடி அயல் நாட்டி லிருந்து இங்குப் பரப்பப்பட்டுள்ளது. அதில் ஆடு தின்பவை, ஆடுதின்னாதவை என இரண்டு வகைகள் உண்டு. இரண்டு வகைப் பார்த்தினியச் செடிகளின் இலையோ, பூவோ மனிதர்களின் உடம்பில் உரசினால் உயிருக்கு உலை வைக்கும் ஒவ்வாமை நோயையும், தோல் அரிப்பு நோயையும் மனிதர்களுக்கும் கால்நடை களுக்கும் உண்டாக்குகின்றன. எனவே, ஒவ்வொரு ஊரிலும் உள்ள மாணவர்களும் இளைஞர்களும் ஊர்ப் பொதுமக்களும் இணைந்து ஒரே நேரத்தில் இச்செடி களை வேரோடு பிடுங்கி எரித்துவிடவேண்டும் என்று பேரன்போடு அனைத்துப் பிரிவினரையும் இம்மாநாடு வேண்டிக் கேட்டுக் கொள்கிறது.

வேளாண்மையையும் வேளாண் தலைமக்களையும் காக்கக் கோருதல்

தீர்மானம் - 14

2016-17ஆம் ஆண்டில் தென்மேற்குப் பருவமழை யும், வடகிழக்குப் பருவ மழையும் பொய்த்து விட்ட தாலும், கருநாடக அரசின் பிடிவாதத்தால் காவிரியில் நீர் விடப்படாததாலும் தமிழ்நாடு வேளாண் பயிர்கள் 25 மாவட்டங்களில் அடியோடு அழிந்து விட்டன. நன்செய்ப் பயிர்கள் கருகிவிட்டன. புன்செய்ப் பயிர்கள் சாவி ஆகிவிட்டன. பயிர்கள் நாசமடைந்துவிட்டதைக் கண்டு மனங்கொதித்தும், நெஞ்சு வெடித்தும், நஞ்சு உண்டும் தஞ்சை, நாகை, திருவாரூர், திருவண்ணாமலை, இராமநாதபுரம், பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட் டங்களில் 05.01.2017க்குள் 200க்கும் மேற்பட்ட வேளாண் தொழில் தலைமக்கள் மடிந்துவிட்டார்கள். இது 1876இல் தமிழகத்தில் ஏற்பட்ட தாதுப் பஞ்சத்தை நினைவூட்டுகிறது.

எனவே, வேளாண் மக்களின் இழப்பீடுகளுக்கு நன் செய்க்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 40,000/-உம் புன்செய் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25000/-உம் வழங்க வேண்டும் என்பதுடன் உயிரிழப்புகளுக்கு ஆளான குடும்பங்களுக் கும் ஒரு குடும்பத்திற்கு மிகக் குறைந்தது ரூ.2.5 இலக்கம் வழங்குமாறும் தமிழக அரசினையும், இந்திய அரசி னையும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

தமிழ்நாட்டில் வேளாண் தொழிலாளர்கள் எண்ணிக்கை 60 விழுக்காடு ஆகும். பயிர்கள் கருகிப் போனதால் வேலை இழந்த வேளாண் தொழிலாளர்கள் வறுமை யில் செத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் குடும்பம் ஒவ்வொன்றிற்கும் ஐம்பதாயிரம் வழங்கிட வேண்டும் என இம்மாநாடு தமிழக அரசையும், இந்திய அரசை யும் கேட்டுக் கொள்கிறது.

தாய்மொழி வழிக் கல்வி

தீர்மானம் - 15

பாரதிய சனதா கட்சி தலைமையிலான இன்றைய இந்திய ஆட்சி, இந்தியாவில் ஒற்றை ஆட்சி என்கிற பெயரால் ஒரு சர்வாதிகார ஆட்சியை நிலை நாட்டு வதையும், இராமராச்சியம் அமைப்பதையும் கொள்கை யாகக் கொண்டுள்ளது. இதற்கு ஏற்றாற்போல் இந்தியா முழுவதிலும் ஒற்றைக் கல்வித் திட்டத்தைத் திணித்து ஆங்கிலம் அல்லது இந்தியைப் பாடம் கற்பிக்கும் மொழி யாக்கிடவும் பகவத்கீதை, இராமாயணம், பாரதம், சோதிடம் முதலானவற்றைப் பள்ளிக் கல்வி முதல் பல் கலைக்கழகம் வரை பாடத்திட்டங்களில் புகுத்தவும் கடந்த இரண்டரை ஆண்டுகளாக முயல்கிறது. இதற்கு ஏற்ற தன்மையில் ஏற்கெனவே மாநில அதிகாரப் பட்டியலில் (State List) இருந்த கல்வித் துறையை நடுவண் அரசுக்கும், மாநில அரசுக்கும் உரிமையுடைய பொது அதிகாரப் பட்டியலுக்கு (Concurrent List)  அப்போ தைய அரசு 03.01.1976இல் மாற்றிவிட்டது.

கல்வி பொதுப்பட்டியலில் சேர்க்கப்பட்டதன் விளை வாக, கல்வியை முற்றிலுமாக நடுவண் அரசு அதிகாரப் பட்டியலில் உள்ள துறை (Union List)  கல்வியில் கை வைக்க மேலதிகாரம் பெற்றதாகக் கருதி, இந்திய அரசு 03.01.1976 முதல் இப்போது வரை நடந்துகொள்கிறது. அதன் விளைவாகத்தான் பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு (UGC), தேசியப் பண்பாட்டுக் கல்வி ஆராய்ச்சி நிறுவனம் (NCERT), நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) முதலான அதிகாரம் வாய்ந்த நிருவாக அமைப் புகள் நடுவண் அரசில் தோன்றின. இவற்றின் விளை வாகத்தான், இன்றைய மோடி அரசு இந்தியா முழு வதற்குமான கல்விக் கொள்கையையும், தேசியத் தகுதி காண் நுழைவுத்தேர்வு நடத்துவதையும் மற்றும் பள்ளி களில் சமற்கிருதம் கற்பிப்பதையும் திணிக்க முற்பட்டுள்ளது. இவை இந்தியாவில் உள்ள எல்லா மொழி மக்களின் உரிமையையும் மாநிலங்களின் உரிமையை யும் அடியோடு பறிப்பதில் முடிந்து விடும்.

இந்த வெளிச்சத்தில் இவை அனைத்தும் அனைத் திந்தியத் தன்மையிலான சிக்கல்கள் ஆகும். இதை எதிர்த்து முறியடிக்க அனைத்திந்திய அளவில் விழிப்புணர்வுப் பரப்புரை மேற்கொள்ளுதல், பேரணிகள் - போராட்டங்கள் - மாநாடுகள் நடத்துதல், ஆங்கிலம் உட்பட்ட எல்லா மொழிகளிலும் விளக்கக் குறுநூல்கள் (Pamplets) வெளியிடல் வேண்டும் என்றும் தமிழக மக்களையும், தமிழகக் கல்வியாளர்களையும் இம்மா நாடு வேண்டிக் கொள்கிறது.

இதற்கு உறுதியான நடவடிக்கையாக 26.01.1950 முதல் 02.01.1976 வரையில் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கண்டிருந்தபடி மாநில அரசு அதிகாரப் பட்டியலுக்குக் கல்வித் துறையை மாற்றுவது ஒன்று தான், இடைக்காலத் தீர்வாக அமையும் என இம் மாநாடு உறுதியாக நம்புகிறது. இந்தப் பார்வையை எல்லோரும் வரவேற்று, எல்லாப் பிரிவினரும் ஒன்று பட்டு அனைந்திய அளவில் செயல்பட முன்வர வேண்டு மென இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது. இத்தன்மை யான கோரிக்கையை மற்ற அமைப்பினரும் மேற் கொண்டுள்ளது மிகவும் வரவேற்புக்குரியது.

மாநில மொழியே மாநிலத்தின் ஆட்சிமொழி - இந்திய அரசின் அலுவல் மொழி

தீர்மானம் - 16

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் எட்டாவது அட்ட வணையில் கண்டுள்ள 22 மொழிகளும் வெறுமனே “மொழிகள்” (Languages) என்ற தலைப்பில் அரசமைப் புச் சட்ட விதிகள் 344(1) மற்றும் 351 ஆகியவற்றின் படி வைக்கப்பட்டுள்ளன. இவை பேசப்படும் மொழி களாகவும் தாய்மொழிகளாகவும் இருக்கின்றன. பல மாநிலங்களில் இவை ஆட்சி மொழிகளாகவும் இருக் கின்றன. எனவே, இந்த 22 தாய்மொழிகளுள் ஒன்றான இந்தி மொழியை மட்டும் இந்திய நடுவண் ஆட்சி அலகுகளின் “அலுவல்மொழியாக” (Official Language) அரசமைப்புச் சட்டப்படி ஆக்கியுள்ளது என்பது, இந்தி பேசும் மக்களின் மேலாதிக்கம் இந்தியா முழுவதும் பரவுவதற்கு வழிவகுக்கும் என இந்தியா முழுவதிலும் உள்ள இந்தி பேசாத மக்களைப் புரிந்து கொள்ளச் செய்யவேண்டும்.

எனவே, 8ஆவது அட்டவணையில் இன்றுவரை பட்டியலிடப்பட்டுள்ள 22 மொழிகளுடன் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேற்பட்ட மக்களால் பேசப்படும் மற்றெல்லா இந்திய மொழிகளையும் இப்பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும். மேலும், இந்தி மட்டுமே இந்திய அலுவல் மொழியாவதைத் தடுப்பதுடன் இப்போதுள்ள அரசமைப்புச் சட்டவிதி கள் 343 முதல் 351 வரையில் உள்ளவை அடியோடு நீக்கப்பட்டு 8ஆம் அட்டவணையில் கண்டுள்ள இந்தி உள்ளிட்ட எல்லா மொழிகளும் அலுவல் மொழிகளாக ஆக்கப்படும் வகையில் புதிய விதிகள் சேர்க்கப்பட வேண்டும். இதற்கு உடனடியாக ஆவன செய்யவேண் டும் என இந்திய அரசினரையும் மற்ற மாநில அரசு களையும், தமிழ்நாட்டு அரசினரையும் மற்றும் எல்லாக் கட்சிகளையும் இம்மாநாடு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் - 17

தமிழ்நாட்டில் கல்வி மொழியாக, ஆட்சி மொழி யாகத் தமிழ் மட்டுமே இருக்கவேண்டும் என்றும், தமிழிலிருந்து மதத்தைப் பிரித்துவிட வேண்டும் என்றும் தம் மொழிக்கொள்கை பற்றித் தந்தை பெரியார் அவர் கள் 28.06.1964இல் விடுதலை தலையங்கத்தில் தெளி வாகக் குறிப்பிட்டுள்ளார். தந்தை பெரியார் பெய ரையும், அறிஞர் சி.என். அண்ணாத்துரை பெயரையும் மூச்சுக்கு முந்நூறு முறை உச்சரிக்கும் திராவிடக் கட்சிகள் தாம் 06.03.1967 முதல் 06.01.2017 வரை 50 ஆண்டுகள் தமிழ்நாட்டில் ஆட்சி நடத்திக்கொண் டுள்ளன.

ஆனால், தமிழ் நாட்டில் அரசுத் தொடக்கப் பள்ளிகள் சிலவற்றிலேயே எல்லாப் பாடங்களும் ஆங்கில மொழி வழியில் இன்று கற்பிக்கப் படுவதும், அரசுப் பள்ளிகளில் மட்டும் பெரும்பாலான பள்ளிகளில் 12ஆம் வகுப்பு வரை தமிழிலும், ஆங்கிலத்தி லும் கற்பிக்கப்படுவதும் மற்றும் பல்லாயிரக்கணக்கான தனியார் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஆங்கில மொழி வழியில் மட்டுமே கல்வி கற்பிக்கப்படுவதும், தமிழ்நாட்டு தலைமைச் செயலகம் தொடங்கி ஊராட்சி வரையிலும் தமிழ் மட்டுமே ஆட்சிமொழி என்கிற நிலை உருவாக்கப்படாமல் இருப்பதும், தமிழ்நாடு உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாகவும் தீர்ப்பெழுதும் மொழியாகவும் இல்லாத நிலை இருப் பதும், தமிழ்நாட்டரசின் மேற்பார்வையில் உள்ள 58,000 இந்துக் கோயில்களில் 2017இலும் தமிழன் தமிழில்  வழிபாடு (பூசை) செய்ய முடியாமல் இருப்ப தும், தமிழகத்தில் உள்ள எல்லாத் தமிழர்க்கும், இந்தியாவில் உள்ள எல்லாத் தமிழர்க்கும், உலகில் உள்ள எல்லாத் தமிழர்க்கும் இழிவும், மானக் குறைவும் ஆகும். இந்த இழிநிலையைப் போக்கிடத் தமிழ்நாட்டில் உள்ள எல்லாக் கட்சிகளும் இயக்கங்களும் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்த வேண்டும் எனவும் இம்மாநாடு முழுமுதற் கோரிக்கையாக, மக்கள் முன் வைக்கிறது என்பதை அன்புடனும், பணிவுடனும் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறது.

Pin It