mdu saravanan 450இறையன்புவின் பெரும்பாலான சிறுகதைகள் யதார்த்த வாழ்வின் சிக்கல்களை எந்தவிதமான ஒப்பனையுமின்றிப் புனைவாக்கம் செய்கின்றன. அவை மனிதர்களின் மேன்மையை எடுத்துக் கூறுவதன் வழியாக வாசகர்களின் மனதின் இறுக்கத்தைத் தளர்த்துகின்றன.

‘என்னுடைய சிறுகதைகளைப் பெரும்பாலும் சமூக நிகழ்வுகளைக்கொண்டே நான் கட்டமைக்க முடிந்தது’ என இறையன்பு ‘நன்றிகளோடு நான்’ என்ற தலைப்பில் தன்னுரையில் கூறியிருப்பதை இத்தொகுப்பிலுள்ள கதைகளைப் படிக்கும்போது அறிய முடிகிறது.

அவரது அரசுப் பணியின் காரணமாகப் பல்வேறு விளிம்புநிலையினரைச் சந்தித்து இருந்தாலும், அவர் சமூகத்தின் மீது கொண்டிருக்கிற நெருக்கம், அக்கறை அவரைப் புனைகதையாளனாக உருவாக்கி இருக்கிறது என்பதற்கு இத்தொகுப்பு சான்று.

இதுவரை பிரசுரமாகியுள்ள இறையன்புவின் ஐந்து சிறுகதைத் தொகுப்புகளில் இருந்து பதினான்கு கதைகளைத் தேர்ந்தெடுத்துத் தொகுத்துள்ள  ந. முருகேசபாண்டியன், இத்தொகுப்பை ரசனையுடன் உருவாக்கியுள்ளார். 

இறையன்பு கதைகளின் வழியாகத் தன்னுடைய அகமன உறுத்தல்களை நீர்த்துப் போகச் செய்திருந்தாலும், கதைமாந்தர்களை மேன்மையுடையவர்களாகப் படைத்து, வாசிப்பில் நேர்மறை சிந்தனையை வளர்த்தெடுக்கிறார்.

அவர் சந்தித்த அல்லது கேட்டுத் தெரிந்துகொண்ட மனிதர்கள் குறித்து எழுதும்போது அவர்களைச் சிறுகதைகள் வாயிலாக நுட்பமான புனைவாக்கி, விளிம்புநிலை மனிதர்களின் மகத்தான பண்புகளை எழுதியிருக்கிறார்.

இவரின் கதைமாந்தர்கள் எளியவர்களாக இருந்தாலும் அவர்களின் பண்புகள் இப்படியும் மனிதர்கள் இருக்கத்தான் செய்கின்றார்களா என வாசிப்பில் வியப்பினை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக நேர்மை, நின்னினும் நல்லன், கல்லூரிக் காதல் போன்ற புனைகதைகளில் இடம்பெற்றுள்ள மனிதர்கள் பிரமிக்க வைக்கின்றனர். இறையன்புவின் தொடக்ககாலக் கதையில் மொழியானது தட்டையாக, கடினத்தன்மை கொண்டதாக இருப்பதால் மீண்டும் மீண்டும் வாசிப்புக்குள்ளாக்க வேண்டியிருக்கிறது.

எனினும் அவருடைய அடுத்தடுத்த கதைகள் இலகுவாக ,வெகுஜன இதழுக்கு ஏற்ற மொழியில் மாறியிருக்கிறது. தொடர்ந்து வெளியான கதைகள் அவரது எழுத்தை, நடையை மாற்றியமைத்து, எல்லாத்தரப்பு வாசகர்களையும் கவரும்வகையில் இலகுவாக்கியுள்ளன. 

‘நேர்மை’ என்ற கதையில் ஏழ்மையிலும் நேர்மையாக இருக்க முடியும் என்பதைத் தங்கம் என்ற அன்றாடங்காய்ச்சி பாத்திரத்தின் வாயிலாக இறையன்பு காட்சிப்படுத்துகிறார். குப்பன் என்ற கீழ்மட்ட ஊழியர் இறந்தபோது, அவரது இறப்புக்குபின் கிடைக்கும் க்ராஜுவட்டி பணம் குறித்து விரிந்து செல்லும் கதையில், சட்டத்தின் விதிகளின்படி நாமினேசனான முதல் மனைவி தங்கத்திடம்தான் பணத்தைக் கொடுப்பேன் என்கின்றார் நேர்மையைத் தம்பட்டம் அடிக்கும், விநாயகருக்குத் தினமும் பூவைத் தரும் கோபாலன்.

ஆனால், ஜாலியான பேர்வழி என்றாலும் உதவுவதற்காக விதிகளை வளைக்க முயற்சிக்கும் நாத்திகரான சுப்ரமணியன் என்ற மேலதிகாரி, குப்பனுடன் வாழ்ந்து குழந்தைகள் பெற்றுக்கொண்டு, கடைசி காலத்தில் குப்பனை மருத்துவமனையில் பார்த்துக்கொண்ட இரண்டாவது மனைவி செண்பகத்திடம்தான் க்ராஜுவட்டி பணத்தைக் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார். விதிகளில் துரும்பைக்கூட மாறிடாத கோபாலன் நாமினேசன் செய்யப்பட்டுள்ள தங்கத்திற்கு பணத்தைக் கொடுக்க ஆவணம் தயாரிக்கிறார்.

ஆனால், பொருளாதாரரீதியில் நசிந்துள்ள தங்கம், அந்தப் பணம் முழுவதையும் கையெழுத்திட்டு வாங்கியபின், அப்படியே செண்பகத்திடம் கொடுப்பதன்மூலம் கோபாலின் நேர்மையின் மீதான பெருமையைக் கரைத்துவிடுகிறார். பொதுவாக இறையன்புவின் பெரும்பாலான கதைகளில் சமூகத்தின் மீதான, சக அலுவலக ஊழியர்கள் மீதான எள்ளல், பகடி நிரம்பக் காணக்கிடக்கிறது. ஆழ்ந்து வாசிப்பதன் வாயிலாக அவரது பகடியினையும் எள்ளலையும் ரசிக்கலாம். உதாரணத்திற்கு இக்கதையில் கோபாலனை குறிப்பிடும்போது அவர் அலுவலக இருக்கையை விட்டு நகர மாட்டார்.

( இதில் அவர் சீட்டில் இருந்து பைல் நகராது என்ற நக்கல் உள்ளது) அவர் நேர்மையாக இருப்பதில் அலாதியான சந்தோஷம் கொள்பவர். (இதில் தம்பட்டத்துக்காக நேர்மையாக இருக்கிறார் என்றே எள்ளல்கொள்ளச் செய்கிறார்) அதேபோல் சுப்ரமணியத்தை நாத்திகர் என்பதுடன் நின்றுவிடாமல், “ஆனால் யார் நம்பிக்கையையும் கேலி செய்ய மாட்டார்” என்று கூறி இறையன்பு கேலி செய்வதை ரசிக்க முடிகிறது.

அதைவிட உச்சம் அடுத்த வரி: “நாத்திகன் இதுவரை எந்த மதத்தைச் சேர்ந்தவனையாவது கொன்னிருக்கானாப்பா?”. இறையன்பு நுண்ணியவகையில் அழுத்தமான பொருளில் தான் கண்டறிந்த விசயங்களைக் கேலிக்குள்ளாக்குவது, புனைகதைகளில் நுட்பமாக வெளிப்பட்டுள்ளது.

‘அரிதாரம்’ என்ற கதை நாய்களை முன்வைத்து சொல்லப்பட்டாலும், அக்கதை சீமை நாய் குறித்த கதையல்ல என்பது அக்கதையை முழுமையாகப் படித்து முடிக்கும்போது மனதில் தோன்றுகிறது. இந்தியாவின் நானூறு ஆண்டு கால அடிமை வரலாற்றையும் அதற்குப் பின்னால் பொதிந்திருக்கிற குள்ளநரித்தனத்தையும் நாய்களை முன்வைத்து இறையன்பு சொல்லியுள்ளாரா? இறையன்பு கூறுவது போல், என் போன்ற வாசகர்களுக்கு அந்நிய முதலீட்டின் ஆவியை மோப்பம் பிடித்துத் தோண்டி எடுப்பதாகவே சீமை நாய் தோன்றலாம்.

இன்னும் சிலருக்குக் கார்ப்பரேட் மேலாதிக்கத்தின் முகமூடியை கிழித்துப் போடுவதாகக்கூடத் தோன்றலாம். அதேவேளையில் ‘வரம் தர வேண்டும்’ என்ற கதை வண்ணத்துப்பூச்சிகள் குறித்துப் பேசுவதாக இருந்தாலும், வண்ணத்துப்பூச்சியின் மீதான ஆசை, அதன் மீதான ஈர்ப்பு, அதனைத் தொடர்ந்து எழும் ஆராய்ச்சி, அதன்பின்பு உண்டான வெறுப்பு, சித்த வைத்தியம் என விரிந்து கதைமாந்தரை மட்டுமல்ல நம்மையும் பட்டாம்பூச்சியாகவே மாற்றிவிடுகிறது. இது ஒரு மேஜிக்கல் ரியலிச வகைக்கான முயற்சி. 

‘நாய்ப்பிழைப்பு’ என்ற கதை ஆரம்பிக்கும்போது, தனியார் நிறுவனம் ஒன்றில் நடந்த உண்மை நிகழ்வு என்று குறிப்பிட்டு வாசகர்களை அரசு அலுவலகம் நோக்கி நகர்த்தி, கதையை உடனே வாசிக்கச் செய்யும் உத்தியாக உள்ளது. இந்நிகழ்வு ஏதேனும் அரசு அலுவலகத்தில் நடைபெற்றிருந்தால் அதற்கு இக்கதையின் வரும் நாய்கள் பொறுப்பு அல்ல என்ற பகடி ரசிக்கவும், சிரிக்கவும் வைக்கிறது. இக்கதையில், கம்பெனி எம்.டி.யின் மனைவி வளர்க்கிற பீகில் என்ற பெண் நாய்க்கு மேட்டிங் செய்வதற்காக ஜோசப் என்ற ஊழியர் பட்ட பாடுகள் வழியாக அலுவலர்கள் படும் நாய் பிழைப்பை, நாயைக் கொண்டே கேலி செய்யப்பட்டுள்ளது. வயிற்றைக் கழுவுவதற்காக விருப்பமில்லாமல் செய்கிற பணிகளைப் பற்றிய குறியீடாக இக்கதை வெளிப்பட்டுள்ளது.

வரலாற்றைப் புனைவாக்கிச் செவ்வியல்தன்மையுடன் சந்திரகுப்த மௌரிய மன்னன் மக்கள் நலனுக்காக அரச வாழ்க்கையிலிருந்து விலகித் துறவியாவதைத் ‘துறந்தான் மறந்தான்’ என்ற கதை வாசகனைப் பரவசப்படுத்துகிறது. டிக்காராம் என்ற ஐ.பி.எஸ். அதிகாரி, ராம்சிங் என்ற கொள்ளையனைப் பிடித்துக் கொல்கின்றார். அதனை உயர் அதிகாரியான மகேஷ்சிங்கிடம் தெரிவிக்கின்றார்.

அவர் ராம்சிங்கை ஏற்கெனவே கொன்று விருது பெற்றவர். ராம்சிங் உண்மையில் எப்போது இறந்தான் என்பது உண்மையின் பல முகங்களைத் தோலுரிப்பதாக ‘விருது’ கதை அமைந்துள்ளது. வரலாறு என்பது ஒற்றையானது அல்ல பல வரலாறுகள் உள்ளன என்று பின்நவீனத்துவம் குறிப்பிடுவது, இறையன்புவின் ‘விருது’ கதையில் நிரூபணமாகியுள்ளது. 

மாணவர்கள் என்பவர்கள் போக்கிரித்தனம் செய்பவர்கள், ஊர் சுற்றுபவர்கள், வீண் அரட்டை அடிப்பவர்கள், பெண்கள் பின் திரிபவர்கள் என்ற சராசரி மனநிலையின் போக்கை, பிம்பத்தை உடைக்கும் விதமாகவும், அதேவேளையில் காதல் என்பது உடல்ரீதியான வேட்கை என்ற பொதுப்புத்தியை நொறுக்கும்விதமாக ‘கல்லூரிக் காதல்’ கதையை இறையன்பு எழுதியுள்ளது வியக்க வைக்கிறது. சேதுபதி என்ற சீனியர் மாணவர் அறிவுரை , மாணவர்களின் நட்பு, உடன் படிக்கும் மாணவி மல்லிகையின் ஈர்ப்பு ஆகியவற்றைக் கல்லூரி மாணவனான கதைசொல்லியின் பார்வையில், எளிய சொற்களைக்கொண்டு கல்லூரி வாழ்வை வித்தியாசமாகக் கதையாக்கியுள்ள இறையன்புவின் புனைகதையின் வீச்சு தனித்து விளங்குகிறது.

இறையன்பு, புனைகதைகளைச் சொல்லிட வெவ்வேறு வடிவங்களையும் முறைகளையும் கையாண்டுள்ளார். இறையன்புவின் புனைகதைகள், ஜெயகாந்தனின் பாணியிலானவை என்று நாவலாசிரியர் எஸ்.ரா. கூறியிருப்பதாக ந.முருகேசபாண்டியன் தொகுப்புரையில் கூறியிருப்பது ஏற்புடையது. இறையன்புவின் புனைவுகள் அனுபவத்தின் அடிப்படையில் எழுதப்பட்டிருந்தாலும், வாழ்வின் யதார்த்த மனிதர்களை, அவர்களின் வாழ்வின் உன்னதங்களைக்கொண்டு புனைவாக்கம் செய்யப்பட்டவை என்பதில் வித்தியாசப்படவே செய்கின்றன.

அவரது சொற்கள் மென்மையானவையாகவும், விழுமியங்களை முன்னிறுத்துபவையாகவும், அறச்சீற்றம் கொள்பவையாகவும் இருப்பதுடன், அதிகாரம், ஆணவம், வன்முறை போன்றவற்றைத் தகர்த்து எறிந்து மனித மாண்பின் உயர்வுக்கு வழிகாட்டுபவையாக உள்ளன. 

தொகுப்பில் இடம் பெற்றிருக்கிற கதைகள், இறையன்புவின் கதை சொல்லும்முறை காரணமாக ஒவ்வொரு கதையிலும் வித்தியாசப்படுகின்றன. அந்த வேறுபாடு வாசகனை அயர்வின்றி அனைத்துக் கதைகளையும் வாசிக்கத் தூண்டுகிறது. அதற்கு இக்கதைகளைத் தேர்வு செய்து தொகுத்துக் கொடுத்துள்ள விமர்சகர் ந. முருகேசபாண்டியனின் உழைப்புக் காரணமாக இருக்கிறது.

“வெறுமனே சம்பவங்கள் அல்லது அதிர்ச்சியளிக்கிற அனுபவங்களைக் கதையாக்குவது மட்டும் அவருடைய நோக்கமல்ல. ஒரு புனைகதையின் மூலம், அவர் நடப்பு வாழ்க்கையில் கண்டறிந்த உண்மைகளைப் பதிவாக்குவதுதான் முக்கியம்” எனத் தொகுப்புரையில் இறையன்புவின் கதைசொல்லல் குறித்து ந.முருகேசபாண்டியன் குறிப்பிட்டுள்ளதை இக்கதைகளை வாசிக்கும்போது, அறிய முடிகிறது. 

தேர்ந்தெடுக்கப்பட்ட இறையன்பு சிறுகதைகள். 

தேர்வும் தொகுப்பும்: ந.முருகேசபாண்டியன். 

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி)லிட்., சென்னை, பக்கம்:132; விலை.110/-

Pin It