உலகில் காலம்தோறும் மாமனிதர்கள் பிறக்கிறார்கள். காலம் அவர்களைப் பயன்படுத்திக் கொள்கிறது. காலத்தை அவர்களும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அவ்வாறு அவர்கள் தோன்றுவதை பிறப்பு என்கிறார்கள். சிலர் ‘அவதாரம்’ என்கிறார்கள். எப்படிச் சொன்னால் என்ன? பொருள் ஒன்றுதான்.
தந்தை பெரியார் என்று அழைக்கப்படும் ஈ.வெ.இராமசாமியும், அறிஞர் அண்ணா என்று அழைக்கப்படும் சி.என்.அண்ணாதுரையும் பிறந்த செப்டம்பர் மாதம் சிறப்புப் பெற்றது. தந்தையாகவும், தனயனாகவும் உறவு முறை கொண்டார்கள். அரசியலில் தலைவராகவும், தளபதியாகவும் செயல்பட்டார்கள்.
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற மாமேதை அறிஞர் அண்ணா தம் எழுத்தாலும், பேச்சாலும் உறங்கிக் கிடந்த தமிழ் மக்களை விழிக்க வைத்தார். அறியாமையில் மயங்கிக் கிடந்த தமிழ்ச் சமுதாயத்துக்கு விழிப்புணர்வை உருவாக்கினார்.
‘மாற்றான் வீட்டுத் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு’ என்று ஒப்புக் கொண்ட உயர்ந்த மனிதர். அரசியல், இலக்கியம், பொருளாதாரம், இதழியல், நாடகம், திரைப்படம் என்று பல்வேறு துறைகளில் கொடிகட்டிப் பறந்தவர். அரசியலில் குதித்துக் குறுகிய காலத்தில் ஆட்சியையும் பிடித்தவர்.
‘தென்னாட்டு பெர்னார்ட்ஷா’ என்றும், ‘இந்நாட்டு இங்கர்சால்’ என்றும் மாற்றாராலும் போற்றப்பட்டவர். அவரது சிந்தனைகள் எல்லாம் பல்வேறு இலக்கிய வடிவங்களாக வெளிப்பட்டன. கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், கடிதங்கள், புதினங்கள், நாடகங்கள், திரைக்கதை வசனங்கள் என்னும் பலவகைப்பட்டவை. காலத்தை வென்ற கருவூலங்கள்.
‘தமிழாய்ந்த தமிழ் மகனே தமிழ்நாட்டின் முதலமைச்சராய் வருதல் வேண்டும்’ என்ற பாவேந்தர் பாரதிதாசனின் கனவை நனவாக்கியவர். தமிழக முதல்வராகி சென்னை மாநிலத்துக்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் மாற்றம் செய்தவர். கடமை, கண்ணியம், கட்டுப்பாடும், எதையும் தாங்கும் இதயமும் இவர் பெயரை எப்போதும் உச்சரிக்கும்.
“பெரியார் ஒரு சகாப்தம். ஒரு திருப்புமுனை. என்னுடைய வாழ்நாளிலே ஒரு தலைவரைத்தான் கண்டேன். ஒரே ஒரு தலைவரைத்தான் கொண்டேன். அவர்தாம் பெரியார்” என்று அண்ணா அவர்கள் பெரியாரைப் பற்றிக் கூறியுள்ளார்.
ஈரோட்டுப் பெரியார் ஈ.வெ.ரா. காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து வந்து சுயமரியாதை இயக்கம் என்னும் தன்மான இயக்கத்தைத் தோற்றுவித்தார். 1929 பிப்ரவரி 17, 18இல் செங்கல்பட்டில் முதல் சுயமரியாதை மாநாடு நடைபெற்றது.
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த திருப்பூரில் 1935 ஆம் ஆண்டு நடைபெற்ற செங்குந்தர் இளைஞர் மாநாட்டில் அண்ணா கலந்து கொண்டார். அங்கு அவரது சொற்பொழிவைக் கேட்ட பெரியார் ஈ.வெ.ரா. அவரைத் தனியே சந்தித்துப் பொதுவாழ்வில் ஈடுபட வைத்தார். முன்னரே தன்மான இயக்கம் பற்றி நன்கு அறிந்திருந்த அண்ணா பெரியாரைத் தம் அரசியல் குருவாக ஏற்றுக் கொண்டுவிட்டார்.
1944 ஆம் ஆண்டு சேலத்தில் கூடிய நீதிக்கட்சி மாநாட்டில் நீதிக்கட்சி என்னும் பெயரை ‘திராவிடர் கழகம்’ என மாற்ற வேண்டும் என்ற அண்ணாவின் தீர்மானம் எதிர்ப்பின்றி நிறைவேறியது. அன்று முதல் திராவிடர் கழகம் செயல்படத் தொடங்கியது.
அண்ணா, கழகத்தின் கொள்கைகளை நாடெங்கும் பரப்பிட இரவு பகல் பாராமல் உழைத்தார். ‘விடுதலை’ என்ற நாளேடும், ‘திராவிட நாடு’ என்னும் கிழமை ஏடும் கொள்கை விளக்கம் தாங்கி வெளிவந்தன. அவற்றில் எழுதியும், பேசியும் நாடகங்களில் நடித்தும் மக்களிடையே எழுச்சியை உருவாக்கினார்.
இந்நிலையில்தான் ஆட்சியாளரால் கட்டாய இந்தி புகுத்தப்பட்டது. இதனைக் கண்டித்து சென்னையிலும், ஈரோட்டிலும் மாநாடுகள் கூட்டப்பட்டன. தமிழறிஞர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். இந்திமொழி கட்டாயமாவதைக் கண்டித்து அறப்போர் நடத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டது. அறப்போர்ப் படையின் தளபதியாக அண்ணா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஈரோடு மாநாட்டில் அண்ணாவைப் புகழ்ந்து பாராட்டிய பெரியார், “எனக்கு வயது 70க்கும் மேல் ஆகிவிட்டபடியால் தொடர்ந்து உழைத்துக் கொண்டிருக்க என்னால் முடியாமையாலும், வயது முதிர்ந்த தந்தை தம் பொறுப்பை மகனிடம் ஒப்படைப்பது போன்று, நான் இன்று எனது பெட்டிச் சாவியை அண்ணாதுரையிடம் ஒப்படைத்து விடுகிறேன். இதன் மூலம் தந்தை தம் கடமையைச் செய்து விட்டார். தனயன் தன் கடமையையும், பொறுப்பையும் உணர்ந்து நடந்துகொள்ள வேண்டும்” என்று கூறியபோது எங்கும் மகிழ்ச்சி ஆரவாரம்.
இந்த மகிழ்ச்சி ஆரவாரம் தொடரவில்லை. பெரியார் - மணியம்மையார் திருமணம் இருவருக்கும் பெரும் பிரிவை ஏற்படுத்திவிட்டது. 1949 செப்டம்பர் 17 அன்று திராவிட முன்னேற்றக் கழகம் தோற்றுவிக்கப்பட்டது.
பெரியாருடன் நெருங்கிய உறவு கொண்டிருந்த அண்ணா கழகக் கொள்கைக்கு மாறுபட்டு விட்டதாக வெளியேறி புதிய இயக்கம் கண்டார். இவ்வாறு பெரியார் போக்கு ஒத்துவராத போதெல்லாம் அண்ணா அஞ்சாமல் தம் கருத்தை வெளிப்படுத்தியே வந்துள்ளார்.
திராவிடர் கழகத்தினர் எல்லோரும் கருஞ்சட்டை அணிந்தே ஆகவேண்டும் என்று பெரியார் கூறியபோது, அனைவரும் அணிய வேண்டும் என்பது பொருந்தாது என்றும், கழகத்தின் முன்னணித் தலைவர்கள் மட்டும் அணிந்து கொண்டால் போதும் என்றும் அண்ணா எடுத்துரைத்தார்.
1947 ஆகஸ்டு 15 இந்திய விடுதலை நாளை சுதந்திர தினமாகக் கொண்டாடக் கூடாது என்று பெரியார் கூறியபோது, அது விடுதலை நாளே என்றும், இன்ப நாளாகக் கொண்டாட வேண்டும் என்றும் அண்ணா அறிக்கை வெளியிட்டார். ஆனால் இந்தக் கருத்து வேறுபாடுகள் அவரைப் பெரியாரிடமிருந்து பிரித்து விடவில்லை. ஆனால் மணியம்மைத் திருமணம் அவரை நிரந்தரமாகப் பிரித்துவிட்டது.
பெரியார் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய பின் 1931 இல் சிந்தனையாளர் சிங்காரவேலரை அவரது இல்லத்தில் சந்தித்தார். அதுமுதல் சிங்காரவேலரின் புதுமைக் கருத்துக்களைக் கொண்ட கட்டுரைகள் பெரியாரின் ‘குடியரசு’, ‘புரட்சி’, ‘பகுத்தறிவு’ ஆகிய பத்திரிகைகளில் அதிகமாக இடம்பெற்றன.
1931 மார்ச் 29 அன்று பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகிய மூவரும் தூக்கிலிடப்பட்டபோது, ‘பகத்சிங்கின் கொள்கைதான் என் கொள்கை’ என்று பெரியார் தம் பத்திரிகைகளில் வெளியிட்டார். ‘தனக்கு அத்தகைய சாக்காடு கிட்டவில்லையே!’ என்ற தலையங்கமும் எழுதினார்.
1931 திசம்பர் 13 அன்று பெரியார் ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் சோவியத் நாட்டிற்கும் சென்றார். அங்கு கண்ட காட்சிகள் பெரியார் சிந்தனையில் திருப்பு முனையாக அமைந்தது. 11-01-1932 இல் பெரியார் தமிழகம் திரும்பினார்.
இந்த இடைக்காலத்தில் நிகழ்ந்த சுயமரியாதை இயக்கச் செயல்பாடுகளுக்கு சிங்காரவேலர் தலைமையில் ஜீவா தீவிரமாகச் செயல்பட்டார். சோவியத் யூனியன் சென்று வந்த பெரியார், ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’, மற்றும் லெனின் எழுதிய ‘மதத்தைப் பற்றி’ ஆகிய நூல்களைத் தமிழாக்கம் செய்து குடியரசு இதழில் வெளியிட்டார்.
தமிழகத்தில் பொதுவுடைமைக் கருத்துகள் பரவ பெரியாரின் இந்தப் பங்களிப்பு பேருதவியாக அமைந்தது. சிங்காரவேலர், பெரியார், ஜீவா இணைந்த சுயமரியாதை இயக்கம் தமிழக அரசியலில் புதிய வெளிச்சத்தைக் கொடுத்தது என்று வரலாறு கூறுகிறது.
காந்திஜி, பெரியார் ஆகியோரின் கருத்துகளோடு மார்க்சியமும் ஜீவாவின் உள்ளத்தை ஈர்த்தது. 1932 திசம்பர் 28, 29 நாள்களில் ஈரோட்டில் நடந்த சுயமரியாதை இயக்க மாநாட்டில் கலந்து கொண்ட ஜீவா, சிங்காரவேலரின் நிலையை ஆதரித்துப் பேசினார்.
தந்தை பெரியார் நீதிக்கட்சியின் பக்கம் சாய்ந்தபோது திருத்துறைப்பூண்டி சுயமரியாதை இயக்க மாநாட்டில் பெரியாரின் கொள்கை மாறுபாட்டை விமர்சித்துவிட்டு சுயமரியாதை இயக்கத்திலிருந்து ஜீவா வெளியேறினார். தோழர் எஸ்.ஏ.டாங்கேயின் வழிகாட்டலில் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியை உருவாக்கி, அதன் தமிழ் மாநில பொதுச் செயலாளராகப் பணியாற்றினார்.
ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலைமையில் செயல்பட்ட காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி காந்திஜியின் வழிகாட்டலில் செயல்பட முயன்றபோது அதிலிருந்து கம்யூனிஸ்டுகள் வெளியேறினர். அவர்களில் ஜீவாவும் ஒருவர். அதன்பின் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து இறுதிக் காலம் வரை பொதுவுடைமைவாதியாகவே வாழ்ந்து மறைந்தார்.
சமதரும புரட்சியின் சோவியத் ரஷ்ய அனுபவத்துக்கும், சீனாவின் அனுபவத்துக்கும் வேறுபாடு உண்டு. இந்த வேறுபாடுகள் அரசியல் நடைமுறை வேறுபாடுகளைத் தீர்மானித்தன. அதுபோலவே, ‘மார்க்சியமும் தமிழ் மண்ணில் தமிழ் மணத்துடன் கலந்தே பரப்பப்பட வேண்டும்’ என்பது ஜீவாவின் நிலைப்பாடாக இருந்தது.
இந்த நடைமுறைக்கு ஏற்ற வகையில் தமிழ்ப் பண்பாடு, இலக்கியம், கலை ஆகிய துறைகளில் ஜீவா செயல்பட்டார். தமிழ் மக்களின் அடித்தள வாழ்க்கையைப் பார்த்து அதன் அடிப்படையில் அரசியல் விடுதலை காண விரும்பினார். அதற்காகவே கம்பனையும், பாரதியையும் முன்னெடுத்தார். ஜனசக்தியோடு தாமரையையும், கலை இலக்கியப் பெருமன்றத்தையும் பயன்படுத்தினார்.
காங்கிரஸ், சுயமரியாதை இயக்கம், காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி என்ற வரிசையில் இறுதியாக கம்யூனிஸ்ட் கட்சிக்கு வந்து சேர்ந்தது ஜீவாவின் அரசியல் பயணம். தேச விடுதலைக்குக் காந்தியடிகளையும், தன்மானக் கருத்துகளுக்குப் பெரியாரையும் முன்னோடியாகக் கொண்டார். அவர் மண்ணுக்குரிய மார்க்சியத்தை விரும்பினார், விதைத்தார்.