உயிர்ப் புதையல்

காட்டுயிர் ஆவணப் பட இயக்குநரான கவிஞர் கோவை சதாசிவம் காடும் காடு சார்ந்த உலகமும் பற்றி "உயிர்ப் புதையல்" என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். ஏற்கெனவே, சிட்டு, மயில் பறவைகளைப் பற்றி குறிப்பிடத்தக்க ஆவணப் படங்களை எடுத்துள்ள இவர், பசுமை இலக்கியத்தில் கால்பதித்துள்ளார். இயல்பிலேயே கவிஞர் என்பதால் இயற்கையைப் பார்த்து வியந்த அவரது உணர்வுகளும், அழிவின் வலியும் ஒரு சேரப் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒசை சூழல் இயக்கத்தின் சார்பில் அவர் மேற்கொண்ட செயல்பாடுகளும் நண்பர்களுடன் நேர்ந்த அனுபவங்களும் சூழலியல் பார்வையில் இதில் பதிவாகியுள்ளன. இனிமையான நண்பர் ஒருவரின் கையைப் பிடித்துக் கொண்டு காட்டுக்குள் செல்வதைப் போன்றிருக்கிறது. புத்தகம் முழுக்க வண்ணப்படங்கள் அணிவகுத்துள்ளன.

தொடர்புக்கு: கோவை சதாசிவம்,

4-610, குறிஞ்சி நகர்,

வீரபாண்டி அஞ்சல்,

திருப்பூர்- 641605,

பேசி: 99650 75221

விலை ரூ. 120

 

நம்பிக்கையும் நடப்பும்

ஏழ்மை, வறுமை என்பது பொய். ஆளும் வர்க்கத்தின் அணுகுமுறையில் உள்ள தவறு காரணமாகவே இவை ஏற்படுகின்றன. உலகிலுள்ள அனைவரும் வளமாக வாழ்வதற்குத் தேவையான இயற்கை வளம் இருக்கிறது. மனித குலம் அதைப் பகிர்ந்து கொள்வதில் ஏற்படும் பிரச்சினைகள்தான் நம்மை சீரழித்துள்ளன. எடுத்துக்காட்டாக, மேல்தட்டு மோஸ்தருடன் ஒரு பருத்தி டி ஷர்ட் உற்பத்தி செய்வதற்கு 10,000 லிட்டர் தண்ணீர் செலவழிக்கப்படுகிறது. இப்படி பல்வேறு வகைகளில் தொடரும் அளவுக்கு அதிகமான நுகர்வு சூழலையும் பூமியையும் நம்மையும் அழிக்கும். இதுபோன்று நம்மை பாதிக்கும் செயல்பாடுகள் பற்றி அவசியம் கேட்கப்பட வேண்டிய கேள்விகளுக்கு சூழலியல் பார்வையில், வளங்குன்றாத வளர்ச்சியை அடையும் வகையில் விடை அளித்துள்ளார் இந்நூலாசிரியர் தி. ராமகிருட்டிணன். சத்தியமங்கலத்தில் 35 ஏக்கர் பரப்பில் 200க்கும் மேற்பட்ட அரிய மரங்களை வளர்த்து வருபவர் இவர். சமூக செயல்பாட்டாளர்கள் மட்டுமின்றி அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய தகவல்களை இப்புத்தகத்தில் உள்ளன.

தொடர்புக்கு: நிறைவு பதிப்பகம்,

35, அலமேலு நகர், உப்பிலிப்பாளையம் அஞ்சல்,

கோயம்புத்தூர் - 641 015

பேசி: 94425 60429

விலை: ரூ. 150

 

அழிந்து வரும் தமிழக நதிகள்

அரசியல் காரணமாகவும் சுற்றுச்சூழல் பாதிப்பாலும் அழிந்து வரும் காவிரி நதியைப் பாதுகாக்கவும், அதன் மீதான உரிமையை மீட்கவும் போராடி வரும் அமைப்புகளில் ஒன்று "காவிரி நதிப்படுகை பாதுகாப்பு இயக்கம்". இந்த இயக்கத்தின் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் தமிழகன், தமிழக நதிகளின் அழிவு பற்றி இந்த நூலில் எழுதியுள்ளார். நீரின்றி அமையாது உலகு என்று மதித்த, உழவுத் தொழிலை தலையாயதாகக் கொண்ட நம் நாட்டில் சில பத்தாண்டுகளாக ஒவ்வொரு நதியாக இழந்து வருகிறோம். இன்று அன்றாடப் பயன்பாட்டுக்கும் குடிப்பதற்கும்கூட நீரின்றி தவிக்கிறோம். இந்த நிலை ஏன் ஏற்பட்டது என்று ஆராய்கிறது இந்த நூல்

தொடர்புக்கு : வழக்கறிஞர் தமிழகன்

210, காவிரிநகர், முத்தரசநல்லூர், திருச்சிராப்பள்ளி - 620 101,

பேசி : 9688169297

விலை : ரூ.50

 

Pin It