தமிழ் கவிதைத் தளத்தில் தெம்மாங்கு மொழியின் ஒளித்தீற்றல்களாக ஹைக்கூ கவிதைகளை நமக்கு அள்ளித்தந்த அன்பு கவிஞர் மு. முருகேஷ் அவர்கள் “மனசைக்கீறி முளைத்தாய்’’ என்கிற தலைப்பில் ஒரு நீள் கவிதையும், பல கவிதைகளையும் காதல் கவிதைகளாகவே தந்துள்ளார். தன் தோழரின் இறவா காதலுக்கு ஒரு கவிதை கலைக்கோட்டத்தை உருவாக்கியுள்ளார். மனித வாழ்வின் அனுபவங்களில் எவ்வளவோ நினைத்து பார்க்கக்கூட நேரமில்லாமல் போகிறது அவைகளெல்லாம் அந்த நேரத்து வலிகளோடு மங்கி விடுகின்றன. அதேபோல் காதல் அனுபவங்களும் சிலருக்கு இளமைத் துடிப்புடன், என்றும் மன ஆழத்தில் தங்கி விடுகின்றன. அப்படி நேர்ந்த ஒரு அனுபவத்தை தன் வலியாய் உணர்ந்து அந்த காதல் வரிகளுக்கு நினைவுக் கீறலாக கவிதை சரம் தொடுத்து உள்ளார்.

சந்திக்காமலேயே இதயத்துக்குள் உறைந்து விட்ட காதலின் பதிவு என்று அறிமுகப்படுத்தி புல்லாங்குழலுக்குள் புகுந்த காற்றாகவும், கனவில் முகம்பார்த்து தொலை பேசியின் குரலில் மனம் தோய்ந்த அனுபவத்தையும்.நீ கருப்பு பரவாயில்லை வெள்ளை உள்ளம் உனக்கு. நீ அசிங்கம் அதனாலென்ன அன்பை பரிமாறுவதில் பேரழகி என்று மனித அழகுக்கு அர்த்தம் சேர்த்துள்ளார். மா என்ற எழுத்து நிச்சயம் கொடுத்து வைத்த எழுத்துதான் ஒரே எழுத்து உன்வாயில் இரண்டு முறை உச்சரிக்கப்படுகிறதே என்று எதார்த்தம் பொங்க கவிதை யார்த்துள்ளார்.

காதல் உணர்வுகளும், காதல் அவஸ்தைகளும் மனித சமூகத்தில் பிரிக்க முடியாத ஒன்றாக உறவுத் தொடர்களாக வந்து சேர்ந்து விட்டன. கவிதைகள், காவியங்கள், நெஞ்சை பிசையும் வரலாற்றுக் கதைகள் வரலாற்று நிகழ்வுகளும் நம்மை மோதி சிலிர்க்க வைக்கின்றன. பேதங்கள், ஏற்றத் தாழ்வுகள் களைந்து காதலின் நியாயத்தை உணரவைத்து பதிகின்றன. இந்த 21ஆம் நூற்றாண்டில் கூட காதல் தன் மகுடத்தை அலங்கரித்துக் கொள்கிற போது அரசியலில் புகுந்த மதம் காதலையும் விட்டு வைக்காமல் விளாசுகிறது காதலர் தினத்திற்கு மதமுள்முடி தரித்து பார்க்கிறது.

உலகத்தின் ஒட்டுமொத்த காதலில் குளிர்ந்த நெருப்பு அவைகளை புறந்தள்ளிவிட்டு மலர்ந்து கொண்டேதான் இருக்கிறது. வலுவான பேதமற்ற கரங்களில் அதை பாதுகாத்து வளர்க்க வேண்டியும் உள்ளது. நண்பர் மு. முருகேஷ் காதல் குறித்தான தனது அழுத்தமானப் பார்வையையும், கவிதை இலக்கியப் பதிவுகளில் தனக்கென உள்ள தெளிவான இலக்கையும் இந்தத் தொகுப்பிலும் முன்னிருத்தப்பட்டிருப்பது மகிழ்ச்சிக்குரியது. பொதுவாக கவிதை என்பது ஆழ்ந்த படித்துணர்ந்த வாசகனின் வாழ்வெனும் மதிப்பீடுகளை செப்பனிட்டுக்கொண்டே செல்வது என்பதிலிருந்து பார்க்கும் போது இந்த “மனசைக்கீறி முளைத்தாய்’’ என்ற கவிதைகள் நம்மனசையும் கீறி பதிவாகிவிடுகிறது.

காதலுக்கென்ற புதிய வரவு காதல் ஆத்திசூடி வலிமையான தெறிப்பு மறு வாசிப்பு துளிகள் பெண் சொல்கேள் ஒளவியம்களை பேற்றின்வலிஉணர் போன்ற சொற்கதிர்களும், இன்னும் நிறைய நன்றாக வார்த்துள்ளார். கவிஞர் வெண்ணிலா வார்த்தைகளையே முத்தாய்ப்பாய் கொள்வது பொருத்தமானது. தன் வாழ்வின் நிகழ்வுகளை மட்டுமே பதிவு செய்வது என்பது ஒரு எழுத்தை செழுமைப்படுத்தி விடாது அடுத்தவர்களின் அனுபவங்களைப் பார்த்தோ, கேட்டோ, அதை செரித்து மனம் சார்ந்து எழுதும்போது இயல்பாய் வெளிப்பட்டு எழுத்தையும் மனதையும் செழுமைப்படுத்தும்.

“சமூகப் போராளி பி.ஆர்’’ என்ற போராளி காவியத்தை தொடர்ந்து “மனசைக்கீறி முளைத்தாய்’’ என்ற இந்த புத்தகமும் வெளிச்சம் என்ற பெயருக்கு ஏற்ப பளிச்சென்று வெளியிட்ட பதிப்பகத்தார். நண்பர் பாலாஜி அவர்களின் முயற்சியும் தொடரட்டும்.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.