sennel FrontImage 619சுமைதாங்கிகளைப் போல் தான் மனிதர்கள் நினைவுகளைச் சுமந்து திரிகிறார்கள். நினைவுகளை மட்டும் மனிதர்களிடமிருந்து அகற்றிவிட்டால் அவர்கள் யாராக இருக்கக் கூடும்? காலம் என்பது கொள்திறனற்றப் பாத்திரம்போல் எதனையும் தன்னுள் தேக்கி வைத்துக் கொள்வதில்லை. காலம் சுமக்க வேண்டிய நினைவுகளை எல்லாம் உயர்திணைகளும் அஃறிணைகளுமே சுமக்கின்றன.

அதிலும் குறிப்பாக மனிதர்கள் மீச்சுமைத் தாங்கிகள். ஒரு படைப்பாளர் என்ன செய்கிறார் என்றால், காலமும் களமும் தனக்குள் ஏற்றிய சுமையை படைப்பின் வழி இறக்கி வைக்கின்றார்.

அந்தச் சுமையை தூக்கிச் சுமப்பதன் மூலம் வாசகர்கள் இன்னும் கணக்கிறார்கள். தம்மின் தம்மக்கள் நினைவுகளை ஏற்றுவதற்கும் இறக்குவதற்குமான பண்டமாற்று வேலையைப் படைப்புகள் செய்கின்றன.

அப்படி, சுமக்க முடியாத ஒரு பெருஞ்சோகத்தை 30 ஆண்டுகாலம் தன் நினைவுப் பொதியில் சுமந்து பின், சுமைக்கணம் தாங்கவொண்ணாமல் இறக்கி வைத்த பேரிலக்கிய ஆக்கம் தான் ‘செந்நெல்’ நாவல். அல்லும் பகலும் அலைக்கழிக்கும் அந்த வீரப்பெருங்கதையை, வீர வெண்மணிக் கதையை இலக்கியக் கருவாய் 30 ஆண்டுகள் சுமந்து நின்று அந்தப் பெருந்தாய் சோலை சுந்தரபெருமாள்.

செந்நெல் நாவலின் இறுதிப் பக்கங்கள் தூக்குமேடையை நோக்கிச் செல்லும் கைதியைப்போல் ஒரு வாசகனைப் பதைபதைக்க வைப்பவை. தூக்கு மேடைக் கைதி என்று சொல்வதற்கு காரணமுண்டு.

இந்தச் சமூகமே சேர்ந்து தன்னைத் தண்டித்து தூக்கிடும்போது அங்கிருந்து தப்பிக்க அவனுக்கு எந்த வழியும் இல்லை. அப்படித்தான் வீரவெண்மணியின் வரலாறும். தப்பிப் பிழைப்பதற்கு வழிகளேதுமற்ற கொடுந்துயரமான ஒரு சமூகக் கொலைக்களம் தான் வெண்மணிப் படுகொலை.

நாவலின் பக்கங்களை நீங்கள் முன்னகர்த்திச் செல்லும்போது, உங்களைச் சுற்றியிருக்கும் பாதுகாப்பு வளையங்கள் எல்லாம் ஒவ்வொன்றாய் அவிழ்ந்து நீங்கள் மட்டும் தனியாய் கொலைக்களத்தில் இருப்பதாய் உணர்வீர்கள். அந்த உணர்வு தான், அந்தக் கொடூரச் சமூகக் கொலை நிகழ்ந்தபோது, அந்தக்களத்தில் உயிரோடு எரிக்கப்பட்ட அந்த 44 பேர்களின் உணர்வும் அன்று எரிக்கப்படாதவர்களின் உணர்வும் ஆகும்.

வெண்மணி கொடுங்கொலை நிகழ்வுபோல் 19, 20, 21-ஆம் நூற்றாண்டுகளில் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பல்வேறு காலகட்டங்களில் பல நிகழ்வுகளைப் பார்க்கிறோம். இத்தகையக் கொடூர மனிதத் துயரங்களையெல்லாம் படைப்புகளாக ஆக்கும்போது அதில் இருவேறு தன்மையுடைய படைப்புகளாக இலக்கியவாதிகள் அடையாளம் காண்கிறார்கள்.

ஒன்று தொடர்புடைய துயரக்களத்தின் அகத்திலிருந்து எழுகின்ற இலக்கியங்கள்; அந்தக் களத்திற்கு புறத்திலிருந்து வெளிப்படுகின்ற இலக்கியங்கள் மற்றொன்று. இலக்கியம் சத்தம் போடக் கூடாது; பிரச்சாரம் செய்யக் கூடாது என்று வாதிடும் ஒரு தரப்பினர், தொடர்புடைய களத்தின் அகத்திலிருந்து வெளிப்படும் படைப்பிலக்கியங்களை காட்டிலும் அதற்கு புறத்தேயிருந்து வருகின்ற படைப்புகளே செம்மையானவை என்கின்றனர்.

சான்றாக, நம்மை சாட்சியாக முன் வைத்து நிகழ்ந்த ஈழ இனவழிப்புப் படுகொலைகள் குறித்து எழும் அக, புற இலக்கியங்களுள் ஈழத்திற்கு வெளியேயிருந்து எழுதப்படும் படைப்புகள் செம்மையானவை என்று அவர்கள் கருதுவதுண்டு.

உள்ளிருந்து எழும் இலக்கியங்களில் வலியும் வேதனையும் உரக்கச் சத்தமிடுவதால் அவை காலம் கடந்து பார்க்கின்றபோது அந்தச் சத்தத்திற்கு பொருத்துப்பாடின்மை தோன்றுவதாகக் கருதுகிறார்கள்.

மாறாக, புறத்திலிருந்து எழும் படைப்புகளில் இந்தச் சத்தம் ஏதும் இருப்பதில்லை; அவை ஆர அமர நிறுத்தி நிதானித்து எழுதப்படுவதால் ஒல்லும் வகையெல்லாமான நியாய - அநியாயங்களை பேசுகின்றன என்பது அவர்தம் கட்சி.

வெண்மணிப் படுகொலை குறித்து எழுந்த இலக்கியங்களை மேற்கண்ட இந்த அக – புற கள வேறுபாடுகளை வைத்துப் பார்க்கும்போது, சோலை சுந்தரபெருமாளின் செந்நெல் நாவல் தான் அதன் அகத்திலிருந்து எழுந்த நாவல். மற்றவை வெண்மணிக்கு புறத்தேயிருந்து நோக்கப்பட்டு எழுதப்பட்டவையே.

செந்நெல் நாவல் அகத்திலிருந்து எழுதப்பட்ட நாவல் என்பதனால் தான் அதன் உயிர்த்துடிப்பு அடங்க மறுக்கிறது; பொசுங்கிப்போன உடல்களிலிருந்து புறப்பட்ட புகை நாற்றம் நம்மை புடைச்சூழ்ந்து ஒப்பாரி ஓலமிடுகிறது. அதீத புனைவு, அலங்காரச் சொல்லாடல் ஏதுமின்றி உள்ளதை உள்ளபடி விளக்கும் திறன் அகத்திலிருந்து எழும் படைப்புக்கே அமைகிறது என்பது நமது கட்சி.

எனவே, வெண்மணி குறித்து புறத்திலிருந்து எழுந்த இந்திரா பாரத்தசாரதியின் குருதிப்புனல், பாட்டாளியின் கீழைத்தீ, மீனா கந்தசாமியின் குறத்தியம்மன் ஆகிய படைப்புகளைக் காட்டிலும் சோலை சுந்தரபெருமாளின் செந்நெல் உண்மைக்கு மிக நெருக்கமாக அமைந்திருக்கிறது எனலாம்.

அக – புற களத்திலிருந்து வெளிப்படும் இலக்கியங்களை ’கண்டது மொழிதல்’, ‘காண்பது மொழிதல்’ என்றும் வகைப்படுத்த முடியும். களத்திற்கு புறத்தேயிருந்து எழும் இலக்கியங்களை ‘காண்பது மொழிதல்’ எனும் பிரிவில் அடக்கினோமேயானால், அகத்திலிருந்து எழும் இலக்கியங்களை ‘கண்டது மொழிதல்’ எனும் பிரிவில் அடக்கலாம்.

ஒரு நிகழ்வைப் பற்றி கேள்வியுற்றவர்கள் தங்கள் கேள்வித் தகவமைப்புகளுக்கேற்ப அதனை அப்படியும் இப்படியும் விளக்க முனையும்போது, அதனை நேரில் கண்ட ஒருவர் பெட்டியேறி சாட்சி சொல்வது போல் அமைவது தான், அகத்திலிருந்து எழும் படைப்பின் தனிச்சிறப்பு.

அவ்வாறு சாட்சி சொல்ல நேரும்போது பாவனைகள் ஒழிந்து உண்மை உரக்க ஒலிக்கும். உள்ளதை ஓங்கி ஒலிக்கும் தேவை ஒரு படைப்பாளனுக்குத் தேவைப்படும்போது தான், அங்கே வட்டார வழக்கு இலக்கிய மொழியாகி விடுகிறது.

கீழ்வெண்மணிப் படுகொலை குறித்த எழுந்த மற்ற இலக்கியங்களைக் காட்டிலும் செந்நெல் மனதிற்கு நெருக்கமாக இருப்பதற்குக் காரணம், அது முழுக்க வட்டார வழக்கில் எழுதப்பட்டது என்பதாக இருக்கலாம்.

ஆம்! சோலை சுந்தர பெருமாளின் தஞ்சை வட்டார வழக்கு என்பது, தி.ஜா, கு.ப.ரா போன்ற பிற தஞ்சை மண் சார்ந்த எழுத்தாளர்கள் கைக்கொள்ளாத உழைக்கும் மக்களின் வட்டார வழக்காகும்.

ஓர் இலக்கியப் படைப்பு கடத்த வேண்டிய மிக நுட்பமான உணர்வுகளை வாசகனுக்குள் கடத்துவதை வட்டார நாவல்கள் தடைசெய்கின்றன, என இலக்கியவாதிகளில் ஒரு தரப்பினர் குறைப்பட்டுக் கொள்வதுண்டு. அவர்கள் வட்டார நாவல்களை ஒரு வகையான அசௌகரியத்துடன் அணுகும் தன்மைக்கொண்ட மெலுக்கான இலக்கியவாதிகள்.

அதாவது, வட்டார நாவல்களில் ஆளப்படும் அந்த உள்ளூர்த்தன்மை வாய்ந்த மொழிப் பயன்பாடு, அந்த வட்டார வழக்கைப் பயன்படுத்தாத வேறொரு வாசகனுக்கு நெருக்கமாக அமைவதில்லை ஆதலால், படைப்பிலக்கியம் சோர்வடைகிறது என்பது அவர்களது வாதம். வட்டார நாவல்கள் அந்த வட்டாரத்தைச் சாராத ஒரு வாசகனுக்கு அன்னியமாக விளங்குகின்றன என்பதும் அவர்தம் கூற்று. இது உண்மையாகக்கூட இருக்கலாம்.

ஆனால், தஞ்சைப் பகுதியைச் சேர்ந்த எமக்கு, நாகர்கோவில் வட்டார நாஞ்சில் நாடனின் படைப்புகளோ, கரிசல் மண்ணைச் சார்ந்த திகசி, கி.ரா, தமிழ்ச்செல்வன் போன்றோரின் படைப்புகளோ, கொங்கு நாட்டைச் சேர்ந்த பெருமாள் முருகன், இரா.முருகவேள் போன்றோரின் படைப்புகளோ அல்லது நீல.பத்மநாபன், தகழி சிவசங்கரம் பிள்ளை போன்றோரின் மலையாளப் படைப்புகளோ கூட நமக்கு அன்னியமாகத் தோன்றவில்லை.

செந்நெல்லில் வரும் செல்வியும் கண்ணுசாமியையும் போலவே, செம்மீனில் வரும் கருத்தம்மாவும் பரீக்குட்டியும் வாசகனின் நெஞ்சைவிட்டு விலக்க முடியாதவர்கள். எரியும் பனிக்காட்டில் வரும் கறுப்பனும் வள்ளியைப் போலவே தான், மோகமுள்ளில் வரும் யமுனாவும் பாபுவும்.

தனது களத்தின் அயண்மைப்பாட்டை நீக்கி, மனதுக்கு நெருக்கமான இலக்கியமாக ஆக்கித் தருபவர்களே சிறந்த படைப்பாளர் ஆகிறார்கள். அந்த வகையில் செந்நெல் நாவல் அந்தக் களத்தோடு தொடர்பற்ற வாசகனுக்கு ஏற்படும் அயற்சியையும் அயண்மைப்பாட்டையும் நீக்கி நெருங்கிப்பிணைக்கும் பேராற்றுலுடையது எனலாம்.

தமிழர்களின் பண்பாட்டுணர்வையும் சனநாயகத் தன்மையும் பற்றி குறிப்பிடும்போது, “பேருந்தில் செல்லும்போது ஒரு குழந்தை அவர்களைப் பார்த்துச் சிரித்துவிட்டால், உடனே அந்தக் குழந்தையை வாங்கித் தங்கள் மடியில் வைத்துக்கொள்வார்கள். அந்தக் குழந்தையின் சாதி, மத, வட்டாரத் தன்மைகளையெல்லாம் பற்றி அவர்கள் கவலைப்பட மாட்டார்கள்” என்பார் தொ.ப.

இந்த சனநாயகத் தன்மையை நாம் இலக்கிய உலகிற்கு பொருத்திப் பார்த்தோமேயானால், படைப்பின் வழி ஒரு படைப்பாளனுக்கும் வாசகனுக்கும் இடையே நடைபெறும் உரையாடல்களில், தங்களைப் பார்த்துப் பேசும் படைப்புகளில் வாசகர்கள் தங்களை ஏதேனும் ஓரிடத்தில் அடையாளம் கண்டுவிட்டாலும் போதும். நாடு, மொழி, பண்பாடு,

இனம் போன்ற அனைத்து எல்லைகளையும் கடந்து அதனைக் கொண்டாட ஆரம்பித்து விடுவார்கள். இலக்கியத்தின் இந்தச் சனநாயகத்தன்மை அகிலத்துவம் வாய்ந்தது. வரலாற்றிற்கும் இலக்கியத்திற்குமான வேறுபாடு இதில் தான் அடங்கியிருக்கிறது. ஒரு நாட்டின் வரலாறு பெரும்பாலும் அந்நாட்டின் மக்களோடு மட்டும் தொடர்புடையது.

ஆனால், ஒரு நாட்டின் இலக்கியம் என்பது, அந்நாட்டிற்கு மட்டும் உரியதாவது மட்டுமில்லாமல் அனைத்து உலகச் சமூகத்திற்கும் உரியதாய் உள்ளது. இலக்கியங்களின் இந்த வரம்புகளற்றத் தன்மைதான், அதன் சனநாயகப் பண்பாகிறது. இந்தச் சனநாயகப் பண்புகளைப் பெறுகின்ற இலக்கியப் படைப்புகள் உலகம் முழுவதும் புகழ்பெறுகின்றன.

ஒருவரின் மாற்றவியலாப் பண்பை தஞ்சை வட்டார வழக்கில் ‘சுவாசம்’ (குணம்) என்பார்கள். ”அவுசாரிப் போறவ சுவாசத்த மாத்த முடியுமா… ?” என்பது ஒரு சோறு பதம். கீழ்வெண்மணிப் படுகொலை நிகழ்ந்த கதைக்களம், காலச்சூழல், பண்பாட்டு படிமங்கள் என எந்தச் சுவாசமும் மாறாமல் அசலாக எழுதப்பட்டது தான் செந்நெல் நாவல்.

காலங்காலமாக நிலவி வரும் கீழத்தெரு மக்களின் பண்ணையடிமையை எதிர்த்து செங்கொடிப்போர் உயர்த்தும் கண்ணுச்சாமி, அவனுக்கு பக்கபலமாக நின்று குரல் கொடுக்கும் செல்வி, திருமணம் செய்தால் எங்கே கட்சி வேலை தட்டுப்போகுமோ என்கிற நினைப்பில் திருமணமே செய்து கொள்ளாமல் கீழத்தெரு மக்களுக்கு உறுதுணையாகவும் இரவில் கட்சித் தோழர்களுக்கு சிலம்பம் முதல் குத்துச்சண்டை வரை கற்றுக் கொடுக்கும் மாற்றுச் சாதியைச் சேர்ந்த வடிவேலு அண்ணாச்சி, பெரியான், ஆராயி, வேலுநாடார், வீரப்பன், ரெங்கபாசிய நாயுடு, வாய்க்கால், வரப்புகள், பச்சபசேல் வயல்கள், அங்கே சுற்றித்திரியும் கொக்குகள், வெயிலுக்கு சுகமாய் வீசும் காற்று, முழுநிலா, கத்தாழை நாறு கட்டில், கொசுக்கடிக்கு கனப்பு மூட்டம், நடவு சனங்கலின் கிண்டல் பேச்சு, பண்ணையாரின் அதட்டல், சாதி, பொறாமை, வக்கிரம், வைராக்கியம், வஞ்சகம், படுகொலை என்று விரிந்து செல்கிறது நாவல்.

இந்தக் கொடூரக் கொலைகளுக்கு மூலக்காரணமாக விளங்கிய இரிஞ்சியூர் கோபாலகிருஸ்ண நாயுடு, இந்தக் கொடிய சம்பவம் நிகழ்ந்த காலகட்டத்தில், அப்பகுதி கம்யூனிஸ்ட் கட்சி தலைவராக விளங்கிய மணலி கந்தசாமி போன்றவர்கள் இந்த நாவலில் பெயர் மாற்றமின்றி அப்படியே வருவது புனைவுக்கும் வரலாற்றிற்கும் இடையேயுள்ள இடைவெளியை மிகுதியும் குறைத்துவிடுவதென்பது இந்நாவலின் சிறப்புத்தன்மைகளில் ஒன்று எனலாம்.

நம் சங்க இலக்கியம் தொட்டு இக்கால வட்டார நாவல்கள் வரை காணப்படுகின்ற பண்புகளில் இதுவும் ஒன்று. அதாவது வரலாற்றிற்கும் மிகுபுனைவுக்கும் இடையேயிருக்கக்கூடிய இடைவெளியைச் சுருக்கி இது புனைவா வரலாறா என்று கூற முடியாதத் தன்மை. வீர வெண்மணி போன்ற உண்மையாகவே நிகழ்ந்த ஒரு வரலாற்றுச் சம்பவத்தை மையமிட்டு எழும் செந்நெல் போன்ற ஓர் இலக்கியத்தில் வரலாற்று இடைவெளி ஏதும் ஏற்பட்டு விடக்கூடாது என எண்ணுவது, படைப்பாளனின் அகத்திற்குள் ஒலித்துக் கொண்டிருக்கும் அந்த கதியற்ற மக்களின் ஒலமே காரணமாய் இருக்க முடியும்.

அந்த வலியையும் வேதனையையும் பிசிறின்றி அசலாய் இலக்கியத்திற்குள் இறக்கி வைத்து விட வேண்டுமென்ற மனபாரம், வட்டார இலக்கியமாய் மலர்கிறது.

நாட்டுப்புற இலக்கியங்களிலும் இத்தகைய வரலாற்று அணுக்கத்தை காண முடியும். அதில் காணப்படுகின்ற புனைவு என்பது, மனதிற்குள் தேங்கி நிற்கும் மீயுணர்ச்சியை வெளிக்காட்டும் உயர்வு நவற்சி தான்.

நான் நேரில் கண்ட மிக அன்னியன்னியோமாக வாழ்ந்த கனவன் – மனைவி, கனவன் இறந்தபொழுது அந்த மனைவி வைத்த ஒப்பாரியில் மீண்டும் மீண்டும் இடம்பெற்ற வரியென்பது, “…எனக்கு மாலையிட்ட மன்னவரே...” . மன்னவரே என்கின்ற உயர்வு நவற்சி உணர்ச்சி மேலிடும்போது வெளிப்படுகின்ற குரல். ஆயினும் அதில் உண்மை பெரும்பாலும் நொறுங்கிவிடுவதில்லை.

”அரைப்படி நெல் கூலி உயர்வாய்க் கேட்டதற்காக 44 உயிர்களை உயிரோடு எரித்த கொடும்பாவிகள்” என்று இந்தப் பிரச்சனையின் மையப்பொருளைப் பொதுவாகக் குறிப்பிட்டு விளக்க முற்படுவார்கள் பொதுவுடைமைத் தோழர்கள். ஆனால், இது பிரச்சனையை குறை மதிப்பிடல் (over simplification) அல்லது பின்ன மதிப்பிடல் என்று கூறுவதற்கு இடமாகிறது. வீர வெண்மணி வரலாற்றை நினைவுக்கூறும்போது, தோழர் ஏ.ஜி.கே செங்கொடி இயக்கம் என்ன சாதித்தது? என்பதனை எடுத்துக் காட்டிப் பேசுவார்.

அதில், “நியாயமானக் கூலிக் கேட்டோம் உரிய நேரத்தில் கேட்டோம்” என்று பொருளாதாரப் பிரச்சனையில் தொடங்கும் அவர், ”உழைக்கும் மக்களான சேரி மக்களை மரியாதைக் குறைவாகப் பேசுவதைத் தடுத்து நிறுத்தினோம்; பெண்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு முடிவு கண்டோம்; தோளிலே துண்டுபோட்டோம்; காலிலே செருப்பணிந்தோம்; மானத்துடனும் மரியாதையுடனும் வாழத் தொடங்கினோம்” என்று உழைக்கும் மக்களின் சமூகப் பிரச்சனையை கம்யூனிஸ்ட் கட்சி கையிலெடுத்ததை அவர் சுட்டிக்காட்டிச் செல்வர்.

ஒடுக்கப்பட்ட மக்களின் மீது நிலவடைமைச் சமூகம் காலங்காலமாக நிகழ்த்தி வந்த சமூக இழிவுகளைச் சுட்டி, அவர்களை அதிலிருந்து மீட்டெடுக்க செங்கொடி இயக்கம் அவர்களை ஊக்கப்படுத்தியதால் ஏற்பட்ட மாறுதல்கள்; அது காலங்காலமாக நிலவி வந்த மேல்சாதி மனப்பான்மையை தகர்த்தெறிய முனைந்தது தான் வெண்மணிப் படுகொலைக்கு மிக முக்கியமானக் காரணம், என்பதனை செந்நெல் நாவலாசிரியர் மிகச் சரியாக எடுத்துக் காட்டியுள்ளார்.

தங்களுடைய நிலவுடைமை அதிகாரம் கேள்விக்குள்ளாவதைக் காட்டிலும் தங்கள் சமூக அதிகாரம் கேள்விக்குள்ளாவதை அவர்களால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

சாதியத்தின் பேரால் காலங்காலமாக நிலவி வந்த சமூக இயங்கியலின் போக்கு, அண்மைக்கால அரசியல் – சமூக மாற்றங்களினால் தங்கள் கையைவிட்டுப் போவதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதிலிருந்து தான் வெண்மணிப் படுகொலை நிகழ்த்தப்படுகிறது என்பதற்கு நிறைய சான்றுகளை நாவலிலிருந்து எடுத்துக்காட்டி நம் கருத்திற்கு வலுச்சேர்க்க முடியும்.

வெண்மணி வேலுநாடார் பெரியாண்டையின் பண்ணையடிமையான பெரியானின் மகன் கண்ணுசாமியையும் பண்ணையில் அடிமையாய்ச் சேர்க்க வேண்டுமென பெரியாண்டை கேட்கும்போது, பண்ணையடிமை பெரியான் சொல்வான்:

“…அவனை விட்டுடுங்க பெரியாண்டே. குடியானத்தெரு பிள்ளைகளைப் போல பள்ளிக்கூடம் போய் படிக்கப் பொறேன்னு நிக்கிறான். நானும் தேவூர் பள்ளிக்கூடத்துக்குப் போய் வாத்தியாரய்யாகிட்ட கேட்டுட்டு வந்தேன். அவரும் அனுப்பச் சொன்னாங்க. பத்து நாளா பய பள்ளிக்கூடம் போறான். இப்ப அவன பார்த்து ரெண்டு மூனு பசங்க பள்ளிக்கூடம் போவ ஆரம்பிச்சிருக்காங்க..”

இதனைச் சொல்லும்போது பெரியான் முகத்தில் ஏற்பட்ட சந்தோசத்தைப் பார்த்து,

“..அப்ப உன்னோட மகன பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி, கலகத்துக்கு கையெழுத்து போட வச்சிருக்கேன்னு சொல்லு..” என்று வேலுநாடார் ஆண்டை கோபமும் ஏமாற்றமும் தொனிக்கக் கேட்கும்போதும், மற்றோர் இடத்தில்

“…பெரியான்! ஒன்னோட சின்ன மவன் பள்ளிக்கூடம் போய் பெரிசா படிச்சிட்டு வராட்டாலும் இப்ப வெதரனையா இருக்கான்பா. கட்சி தலைவருங்க எல்லாம் அவன மெச்சிக்கிட்டத பாக்கனுமே… தன்னோட சனங்களுக்கு விடிவுகாலம் வரனுன்னு உழைச்சி அவங்கள முன்னேத்தி கொண்டாந்து மத்த சாதி சனங்களுக்கு சமதையா கொண்டாந்துடன்னுங்கிற வெறிய அவன் மனசில வச்சிக்கிட்டு இருக்கான்…” என்று கீழத்தெரு ஆட்கள் பெரியானிடம் சொல்லும்போதும்,

இவற்றிற்கெல்லாம் மகுடம் வைத்தாற் போன்று நாவலின் இறுதிப்பகுதியில், கோபாலகிருஸ்ண நாயுடுவின் அடியாள் வீரப்பனின் வழிக்காட்டலின் பேரில் உள்ளூர் ரெங்கபாஸ்ய நாயுடு கண்ணுசாமியையும் வடிவேலு அண்ணாச்சியையும் கடத்திக் கொண்டுபோய் ரெங்கபாசைய நாயுடுவின் வீட்டில் கட்டிப் போட்டு விட்டு காரியமாக வெளியில் செல்ல, தகவல் கேள்விப்பட்டு கீழத்தெரு ஆளும் சனமும் தடியும் கம்புமாய் குடியானத் தெருவுக்குள் புகும் நேரம், ரெங்கபாஸ்ய நாயுடுவின் மனைவி பயந்துபோய் இருவரின் காலிலும் விழுந்து அசாம்பாவிதம் ஏதும் நடந்துவிடக் கூடாதெனில், தயவுசெய்து கொல்லைப்புறமாக வெளியே சென்றுவிடுங்கள், என்று கூறி கட்டுகளை அவிழ்த்துவிட்டப் பின்னால், யாருக்கும் தெறியாமல் வெளியேறிய கண்ணுசாமியும் வடிவேலும் டீக்கடைக்குச் செல்ல, பின்பு கண்ணுசாமி மட்டும் சைக்களில் குடியானத்தெருவுக்குள் சென்ற மக்களைப் பார்க்க வரும்போது, கதறி அழும் மக்களையும் பெரியானையும் பார்த்து, கண்ணுசாமி சொல்வது தான் கீழ்வெண்மணிப் பிரச்சனையின் மையப்புள்ளி:

“… யப்பா… நம்ம செங்கொடிக்கும் அவனுங்க மஞ்சக் கொடிக்கும் நடக்கிறப் போராட்டம்பா இது. நம்ம கொடிக்காவ எது நடந்தாலும் அத மனசார நாம ஏத்துக்கிட்டு தான்… அதுக்காவ என்னை ஒப்படைச்சிக்கிட்டேன். ஒனக்கு ஒரு புள்ள இல்லேன்னு நெனைச்சிக்கப்பா…” கண்ணுசாமி உணர்ச்சி வசப்பட்டு சொல்லும்போது கூடிநின்ன சனங்களுக்கும் சிலிர்த்துக்கிட்டு. அதுங்க மனசுலேயும் நாமலும் செங்கொடிக்காவப் போராடித்தான் ஆவனுன்னு எழுச்சி கிளந்துட்டு. அது வெறியா ஆயி நம்பிக்கையா பொறிதட்டி கெளம்பிட்டு.

“செங்கொடி”

“ஓங்குக”

“தொழிலாளர் ஒற்றுமை”

“வளர்க”

எல்லாச் சனங்களும் உரத்தக் குரலில் சத்தமிட்டபோது குடியானத் தெருவைத் தாண்டி வெண்மணியே அதிர்ந்த போது, அப்போது எதிரே வந்த போலீசு ஜீப்பில் இருந்த கோபாலகிருஸ்ண நாயுடுவின் அடியாட்களும் வீரப்பனும் இருக்க, போலீசு ஜீப்பை மறைத்த கீழத்தெரு சனங்களும் ஆட்களும் வீரப்பனை வெளியேயிழுத்து,

”ஏய்… எங்க பொண்டுக எத்தனைய நீயும் உன்னோட கும்பலுமா சேர்ந்து நாசம் பண்ணீருப்பீங்க…? எல்லாத்துக்கும் சேத்து வட்டியும் மொதலுமா இந்தா வாங்கிக்க பொறப்படி, நெஞ்சுக்குத்து..” ன்னு சொல்லிச் சொல்லி வீரப்பன அடிக்கும் போது குஞ்சி நசுங்கி இரத்தம் பீறிட்டதப் பாத்துட்டு வந்த ஆளுக சொன்னதோடயில்லாம “அடுத்த அடி அந்த நாய்க்கப் பயலுக்குத் தாண்டா..”ன்னு சொல்லி அடிச்சதையும் நெனைச்சி நெனைச்சி கோபாலகிருஸ்ண நாயுடு,

“இப்ப வாறேண்டா… என்கிட்ட, உங்க வீரசாகசத்தப் போட்டுக் காட்டுங்கடா, பாக்கிறேண்டா உங்க சேப்புக்கொடிய.. அதை அடக்கப் பொறந்தவன் தாண்டா இந்த வெங்குட்டு நாய்க்கன் மவன்..” என்று, செங்கொடி இயக்கம் ஏற்படுத்திய சமூக மாற்றத்தை நோக்கிய அரசியலை ஏற்றுக்கொள்ள இயலாமையால் வெளிப்படும் ஆற்றாமையை கோபாலாகிருஸ்ண நாயுடுவின் சொற்களில் அசலாகக் காணலாம்.

மற்றோர் இடத்தில்,

“…நீங்க கேட்ட கூலிய நாங்க தரத்தயார இருக்கோம்… ஆனா.. உங்க செங்கொடிய கீழ எரக்கிப்புடனும்..” என்று நெல் உற்பத்தியாளர் சங்கத்தினர் கேட்க,

”..கேட்ட கூலி குடுக்கலானாலும் பராவாயில்ல… ஆனால், எங்களை மானத்தோடும் மரியாதையோடும் வாழச்சொன்ன செங்கொடிய மட்டும் எரக்கமாட்டோம்..”

என்று வெண்மணி மக்கள் உறுதியாகக் கூறிவிடுவார்கள்.

தன்மானமும் சமத்துவமும் மிக்க வாழ்வியல் என்பது ஆதித்தமிழ்க் குடிமக்களின் மரபுகளில் பன்னெடுங்காலமாய்ப் பயின்றுவந்த ஒரு மரபுக் குறியீடு. ஆனால், வரலாற்றின் காலவோட்டத்தில் ஏற்றத்தாழ்வுமிக்க சாதியச் சமூகம் தமிழ் நிலத்திற்குள் புகுத்தப்பட்ட பொழுது, உழைக்கும் மக்களான இந்த ஆதிதிராவிடர்கள் கீழ்ச்சாதியினர்களாக கட்டமைக்கப்பட்டு புறக்கணிக்கப்பட்டனர். ஆனால், அவர்களின் மரபுகளில் அந்தத் தன்மானச் சமத்துவக் குறியீடு படிந்துக் கிடந்தது.

ஆங்கிலேய ஆட்சியரின் பின்னணியில் எழுந்த விடுதலைப் போராட்ட உணர்வோடு, சமூகத்திற்கான விடுதலைப் போராட்டமும் சேர்ந்த எழுந்தபொழுது செங்கொடி இயக்கமும் பெரியாரிய இயக்கமும் தமிழர்களின் அந்தப் பழைய தனமானச்- சமத்துவ மரபுக் குறியீட்டை மீண்டும் புதுப்பித்து அவர்களுக்கு வழங்கியதால் தான், பெரும்பாலான ஆதிதிராவிடர்கள் இந்த இருபெரும் இயக்கங்களில் முழு வேகத்துடன் இணைந்து கொண்டனர். இன்றும் கூட செங்கொடி இயக்கத்தையும் பெரியாரிய இயக்கத்தையும் பள்ளர், பறையர் கட்சி என்றே கூறுவார்கள்.

செங்கொடி இயக்கத்திற்காக தங்கள் உயிரையும் கொடுப்போம் என்று அம்மக்கள் கிளர்ந்தெழுந்ததன் உண்மையானக் கரு என்பது, அவர்களது மரபில் உறங்கிக்கிடந்த அந்தப் பழைய தன்மான - சமத்துவ வாழ்க்கை முறையை செங்கொடி இயக்கம் மீண்டும் மீட்டுருவாக்கம் செய்து கொடுத்ததனால் தான் என்று உறுதியாகக் கூற முடியும். செந்நெல் நாவலின் ஆசிரியர் சோலை சுந்தரபெருமாள் இந்த மையப்புள்ளியை மிகச்சரியாகவே அடையாளம் காட்டி எழுதியிருக்கிறார் என்பது தான் இந்த நாவலின் தனிச்சிறப்புக்கு காரணமாக அமைகின்றது எனலாம்.

ஓர் இனத்தின் மரபில் உறங்கிக்கிடக்கும் குறியீடுகளை புதுப்பித்துக் கொடுக்கும் செயல்களை மக்கள் மனமுவந்து போற்றுவார்கள் என்பதற்கு இன்னொரு சான்றை தொ.ப.வின் ஆய்விலிருந்து கூற முடியும்.

கிறித்துவ மதம் இங்குத் தீவிரமாக பரவியதற்கு மிக முக்கியமானக் காரணம், அது தமிழர்களின் பண்டைய வழிப்பாட்டு முறையான தாய்த்தெய்வ வழிப்பாட்டு முறையை, அன்னை மாதாவின் வடிவில் மீட்டுருவாக்கம் செய்துக் கொடுத்தது என்று அவர் விளக்குகிறார்.

மேரியம்மை தமிழக மக்களைப் பொறுத்தவரை மாரியம்மாள் தான். மாரியம்மாளுக்கு கஞ்சி வார்ப்பது போலவே, சில கிறித்துவ கிராமங்களில் மேரியம்மைக்கும் கஞ்சி வார்த்தனர். தமிழர்கள் தங்களின் மரபான தாய்த்தெய்வ வழிப்பாட்டை மேரி உருவில் கண்டதனால் தான் கிறித்துவ மதத்தை விரும்பி ஏற்றுக்கொண்டனர் என்று ஆய்வு விளக்கம் தருகிறார் தொ.ப.

இந்த ஒப்புநோக்கில் ஹெர்மன் ஹெஸ்ஸே எழுதிய சித்தார்த்தன் நாவலைக் காண்கிறோம். சித்தார்த்தன் நாவல் உலகம் முழுவதும் பேசப்ப்பட்ட நாவல் மட்டுமல்லாது, இலக்கியத்திற்கான நோபல் பரிசையும் வென்றது.

2300 ஆண்டுகளுக்கும் முன்பு வாழ்ந்த ஒரு அறிவுத்துறவியைப் பற்றி அண்மையில் எழுதப்பட்ட ஒரு நாவல், ஏன் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது என்றால், புத்தர் எனும் அறிவும் அன்பும் சமத்துவமும் மிகுந்த குறியீடு உலக மக்களின் மரபுகளில் படிந்து கிடக்கிறது.

அந்தக் குறியீட்டை அவர்கள் மீளக் காணும்போது அதனைக் கொண்டாடித் தீர்க்கிறார்கள். இந்தியாவில் எழுதப்பெற்ற ஒரு நாவலுக்கு நோபல் பரிசு கொடுப்பதெனில் என்னுடைய தேர்வு செந்நெல் நாவலாக இருக்கும் என, இந்நாவலை வாசித்து முடித்த பின்னர் எனது நட்புத் தோழமைகளிடம் உணர்ச்சி மேலிடக் கூறினேன்.

ஆம்! செந்நெல் நாவல் நோபல் பரிசுக்கு உரியது தான். ஏனெனில், அது உலக மனிதச் சமூகத்தின் மரபுகளில் படிந்து கிடக்கிற சமத்துவமிக்க சமுதாயத்தைப் படைக்கும் கருவைச் சுமந்து நிற்கின்றது.

- ப.பிரபாகரன்