கீற்றில் தேட...

(செப்டம்பர் இதழின் தொடர்ச்சி)

தாமஸ் கிறித்தவர்களை அடுத்து முத்துக்குளித் துறையில் வாழ்ந்து வந்த பரதவர்களின் மதமாற்றம் அமைந்தது. அரேபிய மூர்களின் தாக்குதலில் இருந்து தம்மைப் பாதுகாக்கும் வழிமுறையாக இராமேஸ்வரம் தொடங்கி தெற்கே கன்னியாகுமரி வரை உள்ள கடற்கரை ஊர்களில் வாழ்ந்த பரதவர் சமூகத்தினர் போர்ச்சுக்கீசியர் ஆதரவுடன் பதினாறாவது நூற்றாண்டில் கத்தோலிக்கர்களாக மதம் மாறினர்.தொடக்கத்தில் போப் வழங்கிய ஞானாதிக்க சலுகையின் அடிப்படையில் போர்ச்சுக்கல் மன்னர் நியமித்த கத்தோலிக்கக் குருக்கள் இப் புதிய கிறித்தவர்களிடம் பணியாற்றினர். இவர்களையடுத்து பிரான்சிஸ்கன் சபையினரும் சேசு சபையினரும் இம்மக்களிடம் பணியாற்றத் தொடங்கினர்.

சேசு சபையினரும் உபதேசியாரும்:

தொடக்கத்தில் ஐரோப்பியக் குருக்களே இப் புதிய கத்தோலிக்கர்களின் ஆன்மீக மேய்ப்பர்களாக விளங்கினர். இப் பணியில் தமிழ்மொழியில் போதிய பயிற்சியின்மை அவர்களுக்கு இடையூறாக அமைந்தது. இதை எதிர்கொள்ளும் வழிமுறையாக லோங்கோக்கள் (longoas) என்றழைக்கப்பட்ட மொழி பெயர்ப்பாளர்களைப் பயன்படுத்தினர். தேவாலய வழிபாடு, மறையுரையாற்றல், பொறுத்தல் கேட்டல் (பாவமன்னிப்பு) அடிப்படை மன்றாட்டுகளைக் கற்றுக் கொடுத்தல், விவிலிய வாசிப்பு, என பல தரத்ததாக குருக்களின் பணி அமைந்திருந்தமையால் மொழிபெயர்ப்பாளர்களின் பணி அவர்களுக்கு மிகவும் தேவையான ஒன்றாக இருந்தது. மதமாற்ற நிகழ்வு நடந்து முடிந்து சில ஆண்டுகள் கடந்த பின்னர், பிரான்சிஸ் சேவியர் (பின்னாளில் புனிதர் பட்டம் பெற்ற புனித சவேரியார்) இங்கு பணியாற்றியபோது இப்புதிய கத்தோலிக்கர்களுக்கும் ஐரோப்பியக் குருக்களுக்கும் இடையே இணைப்பாகச் செயல்பட ‘கணக்கப்பிள்ளை’ என்ற பதவியை உருவாக்கினார். இது வெற்றிகரமான ஒன்றாக அமைந்தது. இச் செய்திகள் எல்லாம் ஓரளவுக்குப் பரவலாக அறியப்பட்ட செய்திகள்தாம். இங்கு அறிமுகம் ஆகும் இந்நூலில் ஐரோப்பிய நாட்டு ஆவணக்காப்பகங்களில் இடம் பெற்றுள்ள ஆவணங்களின் துணையுடன் சில புதிய செய்திகள் பதிவாகியுள்ளன. இவற்றுள் இரண்டாம் பகுதியில் இடம் பெற்றுள்ள நான்கு இயல்கள்( 7,8,9,10 இயல்கள்) குருக்களாகவும், உபதேசியர்களாகவும் (Catechists) தமிழர்கள் நியமிக்கப்பட்ட வரலாற்றை அறிமுகம் செய்கின்றன.christianity preachingஇவை ஒரு குறிப்பிட்ட சமயத்தின் செயல்பாடு சார்ந்ததாக இருப்பினும் இங்கு புதிதாக அறிமுகமான ஒரு சமயத்திற்குள்ளும் சாதியம் நுழைந்துவிட்டதை நாம் அறியச் செய்கின்றன. இம்முன்னுரையுடன் இரண்டாம் பகுதிக்குள் நுழைவோம். இப்பகுதியில் இடம் பெற்றுள்ள ஏழாவது இயல் பொ.ஆ.1547-1791 காலத்தில் தமிழ்நாட்டில் திருநிலைப்படுத்தப்பட்ட (Ordination) இம் மண் சார்ந்தவர்களை அறிமுகம் செய்கிறது. இவ்வரிசையில் முதலாவது அறிமுக செய்யப்படுபவர் பெரோ லூயிஸ்.

பெரோ லூயிஸ்:

இவர் 1532 இல் கொல்லம் அருகில் உள்ள கிராமத்தில் பிறந்தவர். சேசு சபையினருடன் ஏற்பட்ட தொடர்பால் தமது சிறுவயதிலேயே 1546 இல் கத்தோலிக்கரானார். மலையாளம், தமிழ் என்ற இருமொழிகளை அறிந்திருந்தமையால் துபாஷி(மொழிபெயர்ப்பாளர்) ஆக 1547 இல் பணியாற்றினார். பின்னாளில் வேதசாட்சியாக (உயிர்த்தியாகி) கத்தோலிக்கத் திருச்சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்ட அந்தோணி கிரிமினாலி என்ற சேசு சபைத் துறவி இவரை கோவாவில் இருந்த புனித சின்னப்பர் குருத்துவக்கல்லூரிக்கு அனுப்பியதுடன் சேசு சபையில் சேரும்படி ஊக்கப்படுத்தினார். அவரை ரோம் நகருக்கு அனுப்பவும் திட்டமிடப்பட்டது.ஆனால் அது வெற்றி பெறவில்லை. நான்கு ஆண்டுகள் (கோவாவில் தங்கி இலத்தின் மொழி இலக்கணம் தர்க்கவியல்ஆகியனவற்றைக் கற்றறிந்தார் பின்னர் அந்தோனி கோமாஸ் என்ற சேசுசபைத் துறவியின் மொழி பெயர்ப்பாளராகவும் பணியாற்றினார்.

புன்னைக்காயலில் சேசு சபையினரின் இல்லத்தில் தங்கி அங்குள்ள குருக்களுக்கு தமிழ் கற்றுக்கொடுத்துள்ளார். இது குறித்து சேசு சபையின் நிறுவனரான இக்னேசியஸ் லயோலாவுக்கு எழுதப்பட்ட கடிதத்தில் இச்செய்தி இடம் பெற்றுள்ளது. 1561இல் தமது முப்பதாவது வயதில் சேசு சபையில் இவர் இணைந்தார். புன்னைக்காயலில் சேசு சபைக் குருக்களுக்கு இவர் தமிழ் கற்றுக் கொடுக்கும் போது தவக்காலத்தில் (lent period) மக்களிடம் பொறுத்தல் கேட்டல், முக்கிய சேசுசபைக் குருக்களுக்கு மொழிபெயர்ப்பளராகப் பணியாற்றல் என்ற பணிகளை மேற்கொண்டார்.பேச்சுத் தமிழில் ஐரோப்பியர் செய்யும் தவறுகளை எளிதில் கண்டறிந்தார். தம் பேச்சுத் தமிழைத் திருத்தும் வகையில் தங்களுக்குள் தமிழிலேயே உரையாடிக் கொண்டனர். இவ் விதியைக் கடைப்பிடிக்காதவர்களுக்குத் தண்டனை வழங்கினர்.

1564 இல் கோவாவில் இருந்த புனித சின்னப்பர் கல்லூரிக்கு மீன்டும் சென்று தன் இறையியற் கல்வியைத் தொடர்ந்தார்.அத்துடன் தமிழ் மொழியில் முதல் அச்சுநூல்களை அறிமுகம் செய்த அண்டிரிக் அடிகளாரின் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். 31 திசம்பர்1567 இல் மறைமாநிலத் தலைவருக்கு (Provincial) எழுதிய கடிதத்தில் பெரோ லூயிஸ் இலத்தின் மொழியில் தேர்ச்சி பெற்றுவிட்டமையால் அவரை சேசுசபையில் குருவாக உயர்த்தலாம் என்று பரிந்துரைத்துள்ளார். இறுதியில் 1576 இல் இவர் சேசு சபையின் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார் (Ordination).

ஸ்பானிய மொழியில் கிறித்தவ அடியார்கள் குறித்து எழுதப்பட்ட பிளாஸ் சாங்டரோம் (Flos Sanctorum) என்னும் நூலை அண்டிரிக் அடிகளார் தமிழில் மொழிபெயர்த்து அடியார் வரலாறு என்ற தலைப்பில் நூலாக்கினார். இது புன்னைக்காயலில் அச்சானது என்பது பொதுவான நம்பிக்கை. புத்தகத்தின் முதல் பக்கம் இன்று கிடைத்துள்ள நூலின் பிரதியில் இல்லாமையால் இந்நூல் அச்சான இடம் குறித்த உறுதிபடக் கூறமுடியாத நிலை. மற்றொருபக்கம் புன்னைக்காயல் மக்கள் இந்நூல் தங்களுடைய ஊரில்தான் அச்சானது என்று உறுதிபட நம்புகிறார்கள். இதற்குச் சான்றாக அங்கு இடிபாடுகளுடன் காட்சியளித்த ஒரு தொன்மையான கட்டிடமே அச்சகம் இருந்த இடம் என்பது மரபுவழிச் செய்தியாக வழக்கில் உள்ளது.பதினேழாவது நூற்றாண்டில் அண்டோ புரயன்சா (Antao proenca) என்ற சேசு சபைத் துறவி தாம் தொகுத்த தமிழ் போர்ச்சுக்கீஸ் அகராதி என்ற நூலுக்கு எழுதிய முன்னுரையில் அடியார் வரலாறு நூல் புன்னைக்காயலில் அச்சிடப்பட்டது என்று பதிவிட்டுள்ளார்.

இத்தகைய கருத்துமாறுபாடுகளுக்கு இடையே ஜோவோ ரோட்ரிக்கோஸ் என்ற சேசு சபைத் துறவி 1582 இல் ரோமில் உள்ள சேசுசபைத் தலைமைக்கு எழுதிய கடிதத்தில் அடியார் வரலாறு நூலின் அச்சாக்கத்தை மேற்பார்வையிட பெரோ லூயிஸ், கோவாவுக்கு அனுப்பப்பட்டதாக எழுதியுள்ளார். இந்தியாவில் பணிபுரிந்த சேசு சபையினர் ஆண்டறிக்கை போன்று அனுப்பிய கடிதங்கள் டாக்குமெண்டா இண்டிகா என்ற பெயரில் தொகுப்பு நூல்களாக வெளிவந்து கொண்டுள்ளன. இந்நூல் வரிசையில் பத்தாவது தொகுப்பில் ஜோவோ ரோட்ரிக்கோஸ் எழுதிய கடிதம் வெளிவந்துள்ளது என்பதை நூலாசிரியர் சான்றாகக் காட்டியுள்ளார். அடியார் வரலாறு 1586 இல் வெளியானது என்ற கருத்துள்ள நிலையில் இதற்கான ஆயத்த வேலைகளுக்காக பெரோ லூயிஸ் சென்றிருக்கும் வாய்ப்புள்ளது.

சேசுசபைக் குருவாகப் பணியாற்றி தமிழ் நூல் அச்சாக்கத்தில் பங்காற்றிய பெரோ லூயிஸ் 1596 இல் காலமானார்.

கப்புச்சின் சபை:

சேசுசபையினரை அடுத்து கத்தோலிக்கத்தின் மற்றொரு துறவற சபையான கப்புச்சின் சபையினர் 18 ஆவது நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ்நாட்டின் கடற்கரைப் பகுதிகளில் தம் சமயப் பணியைத் தொடங்கினர். இக்காலத்தில் போர்ச்சுக்கீசியக் குருக்களின் பணியில் நிறைவடையாத மன நிலை உலகக் கத்தோலிக்கத்தின் தலைமைப் பீடமான வத்திகனில் இருந்த சமயத்தலைமை யிடம் உருவாகியிருந்தது. உள்ளூர் மக்களிடமிருந்து சமயக் குருக்களை உருவாக்க விரும்புயது. இதனை நிறைவேற்றும் வகையில் சிலரைத் தேர்வு செய்த கப்புச்சின் சபையினர் அவரகளை இறையியல் பயிற்சிக்காக உரோமுக்கு அனுப்பினர். இவர்கள் பிராமணர், வெள்ளாள சாதியினராக இருந்தனர். இவர்களைக் குறித்த ஐரோப்பியக் குருக்களின் பதிவுகளை நூலாசிரியர் ஆவணங்களின் துணையுடன் எடுத்துக் காட்டியுள்ளார். இப்பதிவுகளைப் பார்க்கும் போது மேட்டிமை சாதியினர் மீதான ஒருவகை ஈர்ப்பு ஐரோப்பிய நாட்டுக் கத்தோலிக்கத் துறவிகளிடமும் குருக்களிடமும் நிலவியது தெரியவருகிறது. இதே சிந்தனைப் போக்கு பிராட்டஸடண்ட் கிறித்தவத்திலும் இடம் பெற்றிருந்ததையும் ஆசிரியர் எடுத்துக் காட்டியுள்ளார். சீர்திருத்தக் கிறித்தவ சபையின் முதல் குருவான ஆரோன் வெள்ளாளர் தான்.

உபதேசியார்கள்:

குருக்களுக்கு உதவிபுரியுவும், குருக்களின் பணி கிடைக்காத இடங்களில் சமயக் கடமைகளை நிறவேற்றவும் உபதேசியார் என்ற பதவி வகித்தோர் உதவி வந்தனர். வீரமாமுனிவர் இவர்களை வேதியர் என்றழைத்துள்ளார். இவர்களுக்கு வழிகாட்டும் வகையில் வேதியர் ஒழுக்கம் என்ற நூலையும் எழுதியுள்ளார். உபதேசியார் தேர்விலும் மேட்டிமை சாதி ஆதிக்கம் இருந்த போதிலும் ஓரளவுக்கு ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவினரும் அனுமதிக்கப் பட்டுள்ளதும் தெரியவருகிறது. இது குறித்து நூலாசிரியர், பறையர், தொட்டியநாயக்கர், செட்டிநாயக்கர், கம்பளத்தார், கம்மாளர் கள்ளர், மறவர், நாடார் எனப் பல்வேறு சாதியினரையும் கத்தோலிக்கர்களாக மதம் மாற்றியதால் இவர்களிடம் உறவாட உதவும் வகையில் இச்சாதிகளில் இருந்தே உபதேசியார்களைத் தேர்வு செய்து கொண்டனர் என்கிறார்.

நூல் வெளிப்படுத்தும் உண்மை:

நூலின் தலைப்பிற்கேற்ப மதமாற்றம் குறித்த ஐரோப்பிய மற்றும் உள்நாட்டு ஆவணங்களின் துணையுடன் எழுதப்பட்ட இந்நூல் அதன் எல்லையைக் கடந்து தமிழ்நாட்டின் கடந்தகால வரலாற்றில் சாதிகளின் ஆய்வுகான தரவுகளையும் தன்னுள் அடக்கிக் கொண்டுள்ளது.

அடிப்படையில் இந்நூல் சமயவரலாற்று நூலாகும்.ஓர் அயற் சமயம் இங்கு பரவியபோது அது தன் பரவலுக்குத் துணை புரியும் வகையில் பாதிரியார்,உபதேசியார், என்ற இரு சமயப் பணியாளர்களை உள்ளூர் மக்களிடம் இருந்து தேர்வு செய்து கொண்டதை வெளிப்படுத்தும் நூல் என்று மிக எளிதாகக் குறிப்பிட்டால் அது சரியான மதிப்பீடாக அமையாது. ஏனெனில் சமயவரலாறு என்ற எல்லையைக் கடந்து, சாதி என்ற சமூகவியல் சிக்கல் இப்பதவிகளுக்கான தேர்வில் ஊடுறுவி நின்றதை வெளிப்படுத்தி நிற்கிறது. இவ்வகையில் இந் நூலின் இரண்டாம் பகுதி கூறும் செய்திகள் ஒரு சமூகவியல் நூலாகவும் இதைக் கொள்ள இடம் தருகின்றன. மேலும் நூலின் முடிவுரையிலும் நூலாசிரியர் இதைச் சுட்டிக் காட்டியுள்ளார். நூலாசிரியர் கல்விப்புலம் சார்ந்த ஓர் ஆய்வாளர். அவர் ஓர் இயக்கவாதியல்ல.அதே நேரத்தில் இச்சிக்கலை அவர் தெளிவாகவே வெளிப்படுத்தியுள்ளார். இன்றும் கூட ஆங்காங்கே சாதியை மையமாகக் கொண்டு கிறித்தவத் தேவாலயங்களில் எழும் முரண்பாடுகளும் பூசல்களும் இப்பழைய வரலாற்றின் தொடர்ச்சியே என்பதை இந்நூலை வாசிப்போரால் புரிந்து கொள்ள முடியும்.

S.Jeyaseela Stephen (2023): Tamil christian Converts & European Missionaries.
(The spiritual and Worldly Life Experience Inside and Outside, 1510-1858)
Institute for Indo- Europeean Studies.
Puducherry 605 011.

- ஆ.சிவசுப்பிரமணியன்