A Priest’s Encounter With Revolution
AN AUTOBIOGRAPHY
JOSEPH VADAKKAN
The Christian Literature Society
என்றே குதிப்பும் கிதப்பும் (ஒரு கத்தோலிக்கக் குருவின் சுயசரிதை)
ஜோசப் வடக்கன்
பங்குக்குரு பொறுப்பிலிருந்து வடக்கன் பாதிரியார் மேற்கொண்ட பணிகளையும் எதிர்கொண்ட சிக்கல்களையும் இந்நூலின் இறுதிப்பகுதி வெளிப்படுத்துகிறது.
இச்செய்திகளை அறிந்து கொள்வதற்கு முன் கத்தோலிக்கத் திருச்சபையின் நிர்வாக அமைப்புகள் குறித்து அறிந்து கொள்வது அவசியமாகிறது. ஏனெனில் கத்தோலிக்கர் அல்லாத பெரும்பாலானோருக்கு இதைக் குறித்த புரிதல் இல்லாதிருக்கும் வாய்ப்புள்ளது.
கத்தோலிக்கர்களின் வழிபாட்டு இடமான தேவாலயத்தையும் அச்சமயத்தின் நிர்வாக அமைப்பான திருச்சபையையும் குறிக்க ‘சர்ச்’ என்ற ஆங்கிலச் சொல் பயன்படுத்தப்படுகிறது. பயன்படுத்தப்படும் சூழலுக்கேற்ப இச்சொல்லிற்குப் பொருள் கொள்ள வேண்டும்.
கத்தோலிக்கத் திருச்சபையின் அடிப்படை அலகாக அமைவது வழிபாட்டு இடமான தேவாலயமாகும். இதன் உறுப்பினர்களாக இங்கு வந்து வழிபடும் குடும்பத்தினர் அமைவர். இக்குடும்பத்தாரின் பெயர்கள் அடங்கிய பட்டியல் ஒன்று தேவாலயத்தில் ஓர் ஆவணமாக இடம் பெற்றிருக்கும். இத்தேவாலயமானது பங்கு (Parish) எனப்படும். இதன் உறுப்பினர்கள் பங்கு மக்கள் (Parishners) என்றும், இதனை நிர்வகிப்பவர் பங்குக்குரு, பங்குச்சாமி, பங்குத்தந்தை (Prist) என்றும் அழைக்கப்படுவார்.
ஞாயிறு வழிபாட்டை நடத்துதல், சமயக் கல்வி வழங்குதல், பாவமன்னிப்பு வழங்குதல் என்பன பங்குச்சாமியின் முக்கிய கடமையாகும். இவை தவிர தம் கட்டுப்பாட்டிலுள்ள தேவாலயங்களின் உறுப்பினர்களுக்கு திருமுழுக்கு, புதுநன்மை வழங்குதல், திருமணம், இறப்புச் சடங்குகளை நடத்தி வைத்தல், திருவிழாக்களை நடத்துதல், தேவாலயச் சொத்துக்களைப் பராமரித்தல் என்பனவும் இவரது முக்கியப் பணிகளாகும். முறையான இறையியல், சமயத் தத்துவம் தொடர்பான கல்வியும் நிர்வாகப் பயிற்சியும் பெற்றவராக இவர் இருப்பார்.
பல பங்குகளை உள்ளடக்கிய நிர்வாகப் பகுதி மறைமாவட்டம் (டயசிஸ்) எனப்படும். இதற்கும் வருவாய்த் துறை நிர்வாகப் பகுதிக்கும் எவ்வித உறவும் கிடையாது. மறைமாவட்டத்தின் தலைவர், ஆயர் (பிஷப்) ஆவார். இவரை நியமிக்கும் அதிகாரம் ரோமிலுள்ள போப்பாண்டவருக்கே உள்ளது. இவரது அடிப்படைத் தகுதியாக இவரது பங்குக்குரு பயிற்சியும் பங்குக்குரு பணி அனுபவமும் உயர்கல்வியும் அமையும். இவருக்கு வழிகாட்ட ‘சினாடு’ என்ற பெயரிலான ஆலோசனைக் குழு ஒன்றும் உள்ளது. இக்குழுவின் உறுப்பினர்களாக மறைமாவட்டத்தில் பணியாற்றும் பங்குக்குருக்கள் அமைவர்.
பங்குக்குருக்களைக் கண்காணித்தல், வழிகாட்டல், இடம் மாறுதல் செய்தல், உயர் பதவிகளில் அவர்களை அமர்த்துதல், மறைமாவட்டத்தின் சொத்துகளை நிர்வகித்தல் என்பன இவரது முக்கிய பணிகளாகும்.
பணிகளின் அடிப்படையில் நோக்கினால் சராசரிக் கத்தோலிக்கர் ஒருவரின் சமய வாழ்விலும் ஓரளவுக்கு உலகியல் வாழ்விலும் நேரடியான தொடர்புடையவராக பங்குக்குரு விளங்குவது தெரிய வரும். குடும்பங்களில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்த்து வைத்தல், கல்வி பயில வழிகாட்டுதல் - உதவுதல் என்பனவும் இவரது பணிகளாக அமையும்.
இச்செய்திகளின் பின்புலத்தில் ஃபாதர் வடக்கனின் பங்குக்குரு பணியை அறிந்து கொள்வோம்.
பங்குக்குரு ஆதல்
ஃபாதர் வடக்கன் கனடாவில் சுற்றுப் பயணத்தில் இருந்தபோது கேரள சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. உடும்பன்சோலை நில வெளியேற்றத்தை எதிர்த்துப் போராடிய அணியில் இடம் பெற்றிருந்த கிரிஷி தொழிலாளர் கட்சி மார்க்சிஸ்டுகளுடன் கூட்டு சேர்ந்து கல்பத்தா தொகுதியில் வெற்றி பெற்றிருந்தது.
கம்யூனிஸ எதிர்ப்பு அணியில் ஃபாதர் வடக்கன் உறுதியாக இல்லை என்பதை உணர்ந்திருந்த கேரள கத்தோலிக்கத் திருச்சபை, இவரை அடையாளமில்லாதவராக ஆக்க முடிவு செய்து விட்டது. கனடாவிலிருந்து திரும்பிய உடன் திரிசூரிலுள்ள தெய்தின்காடு திடலில் பிரமாண்டமான பொதுக் கூட்டத்தில் இவர் உரையாற்றத் திட்டமிட்டிருந்தார். இதை அறிந்து கொண்டு தேவாலயத்தில் மறையுரை ஆற்றுவதைத் தவிர பொதுக் கூட்டங்களில் உரையாற்றக் கூடாது என்றும், கட்டுரைகள் எழுதக் கூடாது என்றும் ஆயர் தடை விதித்தார்.
பின்னர் 1500 குடும்பங்கள் கொண்ட குரியசிட்ரா கத்தோலிக்கத் தேவாலயத்தின் பங்குக்குருவாக இவரை நியமித்தார். இங்கு வாழ்ந்த கத்தோலிக்கர்களில் பெரும்பாலோர் கூலிவேலை, நகராட்சிகளில் கடைநிலை ஊழியர்கள் போன்ற பணிகளை மேற்கொண்டிருந்த ஏழைத் தொழிலாளிகள். ஒரு பங்குக்குருவாக இவர் பணியாற்றத் தொடங்கியது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்னர் இதழியல், சமூக அரசியல் நடவடிக்கைகளில்தான் இவர் ஈடுபட்டிருந்தார். 1965 தொடங்கி 1971 வரை அவரது பங்குக்குரு பணி தொடர்ந்தது.
பாவம்
இவர் பணியாற்றத் தொடங்கிய பங்கில் பரத்தமை, கொலை ஆகியன மலிந்திருந்தன. இவற்றை பாவமாகக் கருதியோர் ஏழ்மையை ஒரு பாவமாகக் கருதவில்லை. இதனால் தமது அறைக்கு வெளியே ‘ஏழ்மையே மிகப் பெரும்பாவம்’ என்று கொட்டை எழுத்துக்களில் எழுதி வைத்தார்.
ஏழ்மை
பொருள் இல்லாமையை மட்டுமே ஒரு பாவமாக இவர் கருதவில்லை. ஏழ்மை என்பதற்கு விரிவான முறையில் அவரது விளக்கம் இருந்தது. அறிவின்மை - பண்பாடின்மை - அறம் இன்மை என்பனவும் ஏழ்மையே என்பது அவரது கருத்தாக இருந்தது. ஏழ்மையானது அறியாமை- பசி - நோய் - வசிக்க இடமின்மை என்பனவற்றை உருவாக்குகிறது என்பதை வெளிப்படுத்தினார். இதன் அடிப்படையில் ஏழ்மையே மிகப் பெரும் பாவம் என்று சுவரில் எழுதி வைத்தார். பங்குக்குரு பொறுப்பிலிருந்து இவரை வெளியேற்றிய பின் ஆயரின் அறிவுறுத்தலின்படி புதிய பங்குக்குரு இதை அழித்துவிட்டார். தேவாலயத்தின் சுவர்களில் இவ்வாறு எழுதுவது மிகப் பெரிய பாவம் என்று ஆயர் எண்ணியிருக்கலாம் என்று இந்நிகழ்வு குறித்து ஃபாதர் வடக்கன் குறிப்பிட்டுள்ளார்.
பாவம் என்பது குறித்த கத்தோலிக்க சமயத்தின் வழக்கமான வரையறையிலிருந்து இது வேறுபட்டிருந்தது. மேற்கூறிய ஏழ்மைகளிலிருந்து தம் பொறுப்பிலிருந்த பங்கை மட்டுமின்றி அண்டையில் வாழும் சமூகங்களையும் விடுவிப்பது அவரது நோக்கமாக இருந்தது.
கல்வி
ஏழ்மையை ஒழிப்பதில் மதச்சார்பற்ற கல்வியும், மதக் கல்வியும் தேவை என்பது அவரது கருத்தாக இருந்தது. இவர் பணியாற்றிய பங்கில் தொடக்கப் பள்ளிகூட இல்லை. ஆனால் பணக்கார வீட்டுக் குழந்தைகள் படிக்கும் இரண்டு ஆங்கில வழிப் பள்ளிகள் இருந்தன. இவற்றால் ஏழைக் குழந்தைகளுக்கு எந்தப் பயனும் இல்லை. இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் போராட்டத்திற்குப் பின் தொடக்கப் பள்ளி ஒன்று தொடங்க அனுமதி கிடைத்தது.
மற்றொரு பக்கம் கத்தோலிக்க சமயக் கல்வி பயில ஞாயிற்றுக் கிழமைப் பள்ளியும் மழலையர் பள்ளியும் வயது வந்தோர் கல்வித் திட்டமும் ஏற்படுத்தப்பட்டன. படங்கள் திரையிடல், கல்விச் சுற்றுப்பயணம், விளையாட்டு, நாடகம் என்பன இங்கு அறிமுகமாயின. ‘குரியசிட்ரா குழந்தை‘ ‘செல்வி குரியசிட்ரா‘, ‘செல்வன் குரியசிட்ரா‘ என்று போட்டி சார்ந்த விழாக்களும்கூட நடந்தன.
கூட்டுத் திருமணம்
‘திருமணங்கள் சொர்க்கத்தில் உறுதி செய்யப் படுகின்றன‘ என்பது சராசரிக் கிறித்தவர்களின் பொதுவான நம்பிக்கையாகும். என்றாலும் பொருளாதார நிலையே, குறிப்பாக இளம்பெண் ஒருத்தியின் குடும்பப் பொருளாதார நிலையே அவளது வருங்காலக் கணவன் யார் என்பதை முடிவு செய்தது. சில வேளைகளில் இளைஞன் ஒருவனின் பொருளியல் நிலையும்கூட இம்முடிவில் செல்வாக்கு செலுத்தியது. என்றாலும் இளம்பெண்களே இதில் அதிகம் பாதிப்புக்கு ஆளாகி முதிர்கன்னிகளாக வாழ வேண்டிய அவலம் இருந்தது. இதைப் போக்கும் வழிமுறையாக சில தேவாலயங்கள் ‘கூட்டுத் திருமணம்‘ என்ற பெயரில் ஏதிலார் விடுதியில் வாழும் இளம்பெண்கள் சிலருக்குப் பொருத்தமான மணமகனைத் தேர்வு செய்து திருமணம் நடத்தி வைக்கும் வழிமுறையை மேற்கொண்டன. இத்திருமண முறை இன்றும் தொடர்வதை இவர் வெளிப்படுத்தியுள்ளார்.
ஒன்றுக்கு மேற்பட்ட இணையருக்கு ஒரே நேரத்தில் தேவாலயமே கூட்டுத் திருமணத்தை நடத்தி வைக்கும். ரூபாய் 500 அல்லது 1000 மதிப்புள்ள தங்கம் மணமகளுக்கு வழங்கப்படும். செல்வர் வீட்டுப் பிள்ளைகள் திருமணத்தின் பார்வையாளர்களாக இருப்பர்.
இதற்கு நேர்மாறாக இவர் நடத்திய கூட்டுத் திருமணங்கள் அமைந்தன. அன்பு, சமத்துவம், ஒருவர் மீது ஒருவர் கொள்ளும் நம்பிக்கை என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டே கூட்டுத் திருமணம் நிகழ வேண்டும் என்பது இவரது விருப்பமாக இருந்தது. இதன்படி மணக் கொடை, தங்க அணிகலன் என்பனவற்றை மணப்பெண்ணிடமிருந்து பெறக் கூடாது என்று விதி வகுத்தார். பணம் படைத்தோரின் அறச்செயலின் வாயிலாக நடைபெற்று வந்த ஏழைப்பெண்களின் திருமணத்திற்கு முடிவு கட்டினார்.
இவரது கூட்டுத் திருமணத் திட்டத்தில் கட்டாய மணக்கொடை, தங்க அணிகலன் வழங்குவதிலிருந்து ஏழைக் குடும்பப் பெண்கள் மட்டுமின்றி வளம் படைத்த குடும்பப் பெண்களும்கூட விடுவிக்கப்பட்டனர். திருமண நாளன்று பொன் அணிகலன் அணிந்து பகட்டாக வருவது தடை செய்யப்பட்டது. அவற்றை அணியாமலேயே பெண்கள் வந்தனர். இக்கூட்டுத் திருமண விழாவில் அமைச்சர்கள், ஆயர்கள் மற்றும் உயர்நிலையில் உள்ளவர்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
பிற நிகழ்வுகள்
கல்விச் சுற்றுலா, விளையாட்டுப் போட்டிகள் என்பனவற்றை அறிமுகம் செய்து தம் பங்கு மக்களின் குறிப்பாக இளைஞர்களின் அறிவை இவர் வளர்த்தார். இளைஞர்களுக்கும் இளம்பெண்களுக்கும் இடையே நிலவிய இடைவெளியை இவை நீக்கின. இவ்விருவருக்கும் இடையே உரையாடல் கூடத் தடை செய்யப்பட்டிருந்ததை இவர் விரும்பவில்லை. மதச்சார்பற்ற பண்பாட்டை உருவாக்கும் வகையில் பல்வேறு அரசியல் சார்புடையோரையும் சமயம் சார்ந்தோரையும் கண்டு உரையாட சுற்றுலாக்கள் உதவும் என்பது இவரது நம்பிக்கையாகும்.
இவை தவிர ‘திருவாளர் குரியசிட்ரா‘ ‘திருவாட்டி குரியசிட்ரா‘ என்று தேர்வு செய்து அவர்களுக்கு ‘முடி‘ அணிவிக்கும் விழாவினையும் அறிமுகம் செய்தார். இவ்விழாவில் ஆயர்கள் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். ஒரு முறை எழுத்தாளர் தகழி சிவசங்கரபிள்ளையை இவ்விழாவிற்கு அழைத்திருந்தார். அவரது புரட்சிகரமான உரை குரியசிட்ரா மக்கள் மறக்க இயலாத ஒன்றாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அச்சுத மேனன், எம்.என்.கோவிந்த நாயர், இம்பிச்பாவா, வெலிங்டன் என கேரள அரசியல்வாதிகள் சிலரும் சிறப்பு விருந்தினர்களாக இந்நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்கள்.
கூட்டுத் திருமணத்தின் ஓர் அங்கமாக கூட்டு விருந்து முறையும் அறிமுகமானது. கிறித்துப் பிறப்பு நாளன்று நிகழும் விருந்தில் சமூகப் படிநிலை - சாதி மத வேறுபாடு இன்றி அனைவரும் கலந்து கொண்டு ஒன்றாக அமர்ந்து ஒரே உணவை உண்டனர். உணவும் பணமும் மக்களிடமிருந்தே கிடைத்தன. முதல்முறையாக நடந்த கூட்டு விருந்தில் மூவாயிரம் மக்கள் கலந்து கொண்டனர்.
ஒப்புரவு
கத்தோலிக்கர்களின் சமய வாழ்வில் ஒரு முக்கிய அங்கமாக ஒப்புரவு என்ற சடங்கு இடம் பெறுகிறது. தொடக்கத்தில் ‘பாவசங்கீர்த்தனம்’ என்றும் பின்னர் ‘பாவமன்னிப்பு’ என்றும் இது அழைக்கப்பட்டது. இதன்படி தேவாலயத்திற்கு வரும் கத்தோலிக்கர் ஒருவர் குருவிடம் தான் செய்த பாவச்செயல்களை, கமுக்கமாகக் கூறுவது வழக்கம். அவர் அவற்றைக் கேட்டு உரிய பரிகாரங்களைக் கூறுவார். ஒப்புரவு வழங்குதல் தொடர்பாக ஃபாதர் வடக்கன் பின்வரும் கருத்துகளைத் தன் அனுபவ அடிப்படையில் முன்வைத்துள்ளார்.
ஒரு மனிதன் மற்றொரு மனிதனின் காதில் தான் செய்த பாவங்களைக் கூறும் நடைமுறை நிறுத்தப்படவேண்டும்.
இச்சீர்திருத்தத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துவது என்பது எளிதானது அல்ல. என்றாலும் மணமறுப்பு மேற்கொண்ட குருவிடம் இளம்பெண்கள் ஒப்புரவு கேட்பதை நிறுத்த வேண்டும். பெண்களிடம் ஒப்புரவு கேட்க துறவினிகளை (கன்னியாஸ்திரிகள்) அனுமதிக்க வேண்டும்.
ஒப்புரவு கேட்க வரும் எந்தப் பெண்களுக்கும் அய்ந்து மணித்துளிகளுக்கு மேல் குரு அறிவுரை கூறக்கூடாது.
பதினைந்து ஆண்டுகள் ஒப்புரவு கேட்கும் குருவாகப் பணியாற்றிய நிலையில் ஏராளமான பாவச்செயல்களை இவர் கேட்டறிந்துள்ளார். இவற்றில் பாதி பெண்கள் கூறியவை. இவர்களில் பெரும்பாலோர் இளம்வயதினர். தம்மை ஒழுக்கத்தில் உயர்வானவர்களாகவும் தம்மிடம் பொருத்தல் கேட்போர் ஒழுக்கத்தில் இழிவானவர்கள் என்றும் கருதி இவர்களிடம் தாம் ஒருபோதும் உரையாடியதும் இல்லை, நடந்து கொண்டதும் இல்லை என்று எழுதியுள்ளார்.
வீதியில் மறையுரை
கத்தோலிக்கத் திருச்சபையின் வரலாற்றில் சில வருடாந்திர சடங்குகளை தேவாலயத்திற்கு உள்ளே நடத்தாமல் வீதியில் நடத்திய முதல் குரு தாம்தான் என்று வெளிப்படுத்திக் கொள்ளும் இவர், இப்புதிய முறையானது தேவாலயத்திற்குள் மக்களை அழைப்பதற்கு மாறாக தேவாலயத்தை மக்களிடம் அழைத்துச் செல்லும் நடைமுறை என்கிறார். இது எளிதான செயல் அல்ல என்பதையும் ஒப்புக் கொள்கிறார். இரண்டாயிரம் ஆண்டு காலமாக ராயப்பர் (பீட்டர்) உருவாக்கிய திருச்சபை உறுதியாகப் பாறையில் நிற்கிறது. ஆனால் கோடிக்கணக்கான மக்கள் உணவு, உடை, உறைவிடம் இன்றி தேவாலயங்களின் வளாகத்துக்குள் சுற்றித் திரிகிறார்கள்.
‘ராயப்பரால் பாறையின் மீது கட்டப்பட்ட திருச்சபை புயல் வெள்ளத்தை எதிர்த்து நிற்கிறது’ என்று இரண்டாயிரம் ஆண்டு காலமாக திருச்சபை தவறான போதனை செய்து வருகிறது என்கிறார் ஃபாதர் வடக்கன்.
இவ்வுறுதியான திருச்சபையை அல்லது தேவாலயத்தைத் தகர்த்து மக்கள் வாழும் தெருக்களுக்கு கொண்டு வருவதே தம் திட்டம் என்கிறார்.
ஒவ்வொரு தெருவிலும் மூன்று நாட்கள் பக்திப் பொழிவுகள் நிகழ்ந்தன. ஒன்றரை மாத கால அளவுக்கு இது நீடித்தது. இதுவே வழக்கமான முறையில் தேவாலயத்தினுள் நிகழ்ந்தால் ஒரு வார காலத்தில் நடந்து முடிந்துவிடும். இவரது மறையுரையானது பணிக்குச் சென்று திரும்பும் தொழிலாளர்களை மையமாகக் கொண்டு நிகழ்ந்ததால் இரவு எட்டரை மணிக்குத் தொடங்கியது. மக்களால் நன்கு அறியப்பட்ட குருக்கள் இதில் பங்கேற்றார்கள்.
பார்வையாளர்களைப் போன்று தேவாலயம் செல்லும் ‘பார்வைக் கிறித்தவர்கள்’ என்போரே மிகுதியாக இருந்தனர். தேவாலயச் செயல்பாடுகளில் பக்தி உணர்வுடன் பங்கேற்ற இவர்கள் கிறித்தவக் கோட்பாடுகளுக்கு முரணாக, தேவாலயத்திற்கு வெளியே செயல்படுவார்கள். இதனால்தான் புதிய தலைமுறையினர் சந்தர்ப்பவாதத்திற்கு உட்படுகிறார்கள். மக்களுக்கு எதிரான அமைப்பாக தேவாலயத்தை நோக்குபவர்களை இது உருவாக்குகிறது. கல்வி கற்றோரே கூட இப்போக்குக்கு ஆளாகிறார்கள் என்று வருந்தியுள்ளார்.
இவர் பணியாற்றிய குரியசிட்ரா பங்கில் 75 விழுக்காட்டினர் வழிபாட்டிற்கும் மறையுரை கேட்கவும் முறையாக வருவதில்லை. இக்காரணத்தாலேயே தெருக்களில் மறையுரை நிகழ்த்தியதாகக் குறிப்பிடுகிறார். இது தேவஊழியக்காரர்களால் ஞாயிற்றுக்கிழமை அன்று தெருக்களில் நிகழ்த்தப்படும் கூட்டம் போன்றதல்ல என்று கூறிவிட்டு தமது செயல்பாட்டை விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
தாம் வழிபாடு நடத்தப் போகும் தெருவிலுள்ள வீடுகளில் வாழும் மக்களை பகற்பொழுதில் இவர் சந்திப்பார். அவர்களது வாழ்வியல் பிரச்சினைகளை அறிய இச்சந்திப்பு உதவியுள்ளது. முடிந்தால் பொருளாதார உதவியும் செய்துள்ளார். அவர்களிடையே நிலவும் மனவேறுபாடுகளைத் தீர்த்து வைத்துள்ளார். அடுத்துவரும் கூட்டுத் திருமண நிகழ்வுக்கு மணமக்களைத் தேர்வு செய்துள்ளார். சுருங்கக்கூறின் அவர்களது வாழ்வில் ஏற்பட்ட சிக்கல்களைப் போக்குவதற்கு முடிந்தளவுக்கு உதவியுள்ளார். இதனால் இரவு வழிபாட்டில் கிறித்துவின் வார்த்தைகளைக் கேட்க மக்கள் திரண்டார்கள். திருச்சபை சட்டத்தின்படி பங்கு அமைப்பு தேவையில்லை என்று இவர் கூறும் பின்வரும் செய்திகள் கத்தோலிக்கக் குருக்கள் பலருக்கும் அதிர்ச்சி அளிப்பவையே.
அதிக அளவில் இரும்பு, செங்கல், சிமென்ட் என்பன கிடைத்தால் தேவாலயங்களை கட்டி விடலாம் என்று எண்ணுவதைக் குருக்கள் கைவிட்டு விடவேண்டும். இரும்பாலும் செங்கற்களாலும் கட்டப்பட்ட தேவாலயத்தைக் கிறித்து நிறுவவில்லை என்பதை நான் நன்றாக அறிவேன். ஜெருசலத்திலுள்ள ஆலயத்தைக் கிறித்து அழித்தார். பின்னர் மூன்று நாட்களில் கண்ணுக்குப் புலனாகாத புதிய திருச்சபையைக் கட்டினார். எனக்கு என்ன தண்டனை கிடைப்பதாக இருந்தாலும் இம்மாபெரும் உண்மையை நான் மறக்க மாட்டேன்.
இவ்வாறு கூறிவிட்டு, தேவாலயத்தில் ஞாயிற்றுக் கிழமை அன்று நிகழும் மறையுரை வகுப்புகளில் தாம் மேற்கொண்ட சீர்திருத்தங்களை விளக்கியுள்ளார். அத்துடன் இவர் உருவாக்கிய பல்வேறு அமைப்புகளை அறிமுகம் செய்துவிட்டு இவற்றைத் தாம் உருவாக்கியதற்கான காரணங்களாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிட்டுள்ளார்.
- மந்தையின் மேய்ப்பரே பங்குக்குரு என்றால் மேய்ச்சலுக்கு வரும் செம்மறி ஆடுகளையும் வெள்ளாடுகளையும் பிரித்தறியத் தெரிந்திருப்பது அவசியமாகும்.
- ஒழுக்கமுடையவர்களாகவும் சரியான விழுமியங்களைக் கொண்டவர்களாகவும் கத்தோலிக்கர்கள் வளர்ந்தால் மற்றவர்களுடன் இணக்கமாக வாழ முடியும். இது நட்புறவும் அன்பும் கொண்ட குழுமத்தை உருவாக்கும்.
- நிர்வாக அதிகாரத்தை ஒரே இடத்தில் மையப்படுத்தும் முறையைக் கைவிட வேண்டும்.
- சராசரி மனிதனுடன் உயர்மட்டத்தினரும் செல்வமிக்க குடும்பத்தினரும் பழகி சமத்துவ உணர்வு ஏற்பட வழிவகுக்க வேண்டும்.
- சமூக உணர்வு இன்றி, கடவுளைக் கண்டறிதல் என்பது இயலாத ஒன்று.
தொழில் சார்ந்த இழிவு
தற்போதைய பொருளாதார முறையை மாற்றி சோசலிசத்தை அறிமுகம் செய்தால்தான் வேலையின்றி இருக்கும் கோடிக்கணக்கான மக்களுக்கு விடிவுகாலம் பிறக்குமென்பது இவரது நம்பிக்கையாக இருந்தது. அதுவரை வேலையற்றோர் பட்டினியாக இருக்க முடியாது என்பதால் அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று கருதினார். இவரது பங்கில் வாழ்ந்த மூவாயிரம் குடும்பங்களில் இளைஞர்களும் பெண்களுமாக ஏறத்தாழ ஆறாயிரம் பேர் வரை வேலையின்றி இருந்தது இவரது மனதை உறுத்துவதாக இருந்தது.
இதைப் போக்கும் வழிமுறையாக, ‘நாசரேத்‘ தொழிற்கூடங்கள் என்ற பெயரில் தொழிற்பயிற்சி நிறுவனங்களை நிறுவினார். தச்சுப் பயிற்சிப் பட்டறை ஒன்று முதல் முதலில் தொடங்கப்பட்டது. ஒரு சில கிறித்தவ இளைஞர்கள் இப்பயிற்சியில் சேர்ந்தாலும் வேலையில்லாக் கிறித்தவர்களில் பெரும்பாலோர் இதில் பயில வராமல் இருந்தனர். தச்சுவேலை என்பது ‘ஆசாரி‘ என்ற பிற்பட்ட சாதியினருக்கு உரியது என்றும், கிறித்தவர்கள் அப்பணியை மேற்கொண்டு தங்களைத் தாழ்த்திக் கொள்ளக்கூடாது என்றும் அவர்கள் கருதினர்.
(சகோதரர்களுடன் ஃபாதர் ஜோசப் வடக்கன் - இடமிருந்து வலம்: பேராசிரியர் ஸ்டீபன் வடக்கன், வழக்குரைஞர் பாபு வடக்கன், அவரது மகன், திரு டாம் வடக்கன் மற்றும் அ.இ.கா.கமிட்டி ஊடகச் செயலாளர் சுபாஷ் வடக்கன் ஆகியோர்)
தச்சரின் மகனான யேசுவைப் பின்பற்றுவோர் தச்சுத் தொழிலைக் கிறித்தவர்கள் மேற்கொள்வது இழிவானது என்று கருதியுள்ளனர்.
இந்தியாவில் தாழ்ச்சியான வேலைகள் எனக் கருதும் வேலைகளை மேற்கொண்டு உயர்தரமான வாழ்க்கை வாழ்வோரைத் தமது அய்ரோப்பிய பயணத்தின்போது, தாம் கண்டுள்ளதாகவும் கசாப்புக் கடைக்காரரும் முடி திருத்துவோரும் மகிழ்ச்சியுடன் இருந்ததாகவும் இப்பணிகள் தாழ்வானவை என்று கருதியதில்லை என்பதைத் தாம் அறிந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ரோம் நகரில் முகமழித்துக் கொள்வதற்காக முடிதிருத்தகம் ஒன்றிற்குத் தாம் சென்றபோது அங்கிருந்த நாற்காலி ஒன்றில் பேராயர் ஒருவர் அமர்ந்திருந்ததைத் தாம் பார்த்ததாகவும், சராசரி மனிதன் செல்லும் முடிதிருத்தகத்திற்கு கேரளத்தின் ஆயர்களும் பேராயர்களும் செல்வதைக் காண ஒரு நூற்றாண்டு காலம் ஆகும் என்றும் குறிப்பிட்டுள்ளார். சராசரி மனிதனுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் கலையை நமது ஆயர்களும் குருக்களும் கற்றறியவில்லை என்றும் விமர்சனம் செய்துள்ளார்.
பீடி சுற்றும் தொழிலை மேற்கொள்ள, பெண் பிள்ளைகளுக்குப் பயிற்சி அளித்துள்ளார். பீடித் தொழிலில் ஏற்கனவே இருந்த பெருமுதலாளிகள் இவர்கள் தயாரித்த பீடிக்கு சந்தை கிடைக்காமல் செய்து இதை அழித்துவிட்டனர் என்றும் கூறியுள்ளார். சிறுதொழில் முனைவோரை பெருமுதலாளிகள் எப்படியெல்லாம் அழிக்கின்றனர் என்பதை விரிவாக எடுத்துரைத்துள்ளதுடன் எந்திரமயமாக்கல் என்பது ஆயிரக்கணக்கானோரைத் தெருவில் நிறுத்தியுள்ளதாகவும் வருந்தியுள்ளார்.
இவருடைய முற்போக்கான கருத்துகள், குறிப்பாக ஒரு பொதுத்திட்டத்தின் அடிப்படையில் கம்யூனிஸ்டுகளுடன் ஒத்துழைத்தல் என்பதை கத்தோலிக்கத் திருச்சபை ஏற்றுக் கொள்ளவில்லை. இதற்காக இவருடன் பகையுணர்வு கொண்டது.
கத்தோலிக்கத் திருச்சபையில் நிலவும் ஊழலையும் அதிகாரக் குவியலையும் இவர் எதிர்த்தது அவர்களுக்கு உகப்பாயில்லை. பொருள் வளம் படைத்தோரை நோகடிக்காமல் ஏழைகளுக்கு உதவுதல் என்பதே திருச்சபையின் திட்டமாக இருந்தது என்றும் கூறியுள்ளார்.
இவை தவிர மேற்கத்திய நாட்டின் கான்வென்டுகளுக்கு, கேரளத்திலிருந்து இளம்பெண்களை அனுப்புவதை எதிர்த்து இவர் கூறிய கருத்துகள் திருச்சபையை வெகுவாக பாதித்தது.
அய்ரோப்பாவில் கேரளத் துறவினிகள்
ஆயர் குண்டுகுளம் என்பவர் இது காரணமாக இவருடன் பகையுணர்வு பாராட்டினார். புள்ளாளி என்ற இடத்திலிருந்து ஏராளமான இளம்பெண்கள் துறவினிப் பயிற்சிக்காக அய்ரோப்பாவிற்கு அனுப்பப்பட்டனர். இது ஆயர் குண்டுகுளத்தின் மேற்பார்வையில் நடந்தது. இதில் நிகழ்ந்த ஊழல்கள் குறித்தும் இழிவுக்கும் வசவுக்கும் பாகுபாட்டிற்கும் இப்பெண்கள் ஆளானமை குறித்தும் சில செய்திகளைப் பதிவு செய்துள்ளார். இப்பெண்களுக்குப் பயிற்சி அளிக்கச் சென்ற முதுகலைப் பட்டதாரியான துறவினி ஒருவர் உள்ளத்தை உருக்கும் முறையிலான கடிதம் ஒன்றை இவருக்கு எழுதியுள்ளார். இக்கடிதத்தை இவரது பொறுப்பிலிருந்த ‘தொழிலாளி’ இதழின் ஞாயிறு இணைப்பில் இவர் வெளியிட்டார்.
இக்கடிதம் வருவதற்கு முன்பே இந்நிகழ்வுகள் குறித்துத் தாம் அறிந்துள்ளதாகக் கூறும் இவர் இவ்வாறு பயிற்சிக்காக அனுப்புவதை ‘ஏற்றுமதி’ என்ற பொருள் தரும் ஆங்கிலச் சொல்லாலேயே குறிப்பிட்டுள்ளார்.
1961இல் இவர் ஜெர்மனிக்குச் சென்றபோது கேரளத்தைச் சேர்ந்த பத்து பெண்களே அங்கு இருந்ததாகக் குறிப்பிட்டுவிட்டு 1973இல் தாம் எழுதிய சுயசரிதையில் ரெண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் இருந்ததாக எழுதியுள்ளார்.
‘தொழிலாளி‘ இதழில் வெளியான இக்கடிதம் ஆயருக்குக் கோபத்தை ஏற்படுத்தியது. இவர் மீது பொய்யான குற்றச்சாட்டுகளைப் பொதுவெளியில் பரப்பியதுடன் அதற்கு விளக்கம் அளிக்கும் வாய்ப்பைத் தருவதற்கும் மறுத்தார். இது தொடர்பாக இவர் அனுப்பிய முறையீடுகளை கத்தோலிக்கத் திருச்சபையும் அதை நிருவகிக்கும் உயர்மட்ட அதிகாரிகளும் புறக்கணித்தனர். அதிகாரத்தின் பக்கமே அவர்கள் நின்றனர். இவருக்கு ஆதரவாகத் திரண்ட சராசரிக் கத்தோலிக்கர்களின் வேண்டுகோளுக்கு அவர்கள் செவி சாய்க்கவில்லை.
ஆயருடன் முரண்பாடு
குடியிருப்பு மனைகளில் குடிசைவாசிகளாகப் பல ஆண்டுகாலம் குடியிருந்த ஏழைக் கத்தோலிக்கர்களை வெளியேற்றுவதில் ஆயர் ஆர்வம் காட்டினார். குடிசைகளிலிருந்து வெளியேற்றப்படும் கத்தோலிக்கர்களுக்கு ஆதரவாக கம்யூனிஸ்டுகளுடன் இணைந்து இவர் போராடினார். இவரையும் இவரது ஆதரவாளர்களையும் தாக்குவதற்கு அடியாட்களை, கத்தோலிக்கத் திருச்சபை ஏவியது. கம்யூனிஸ்டுகளின் துணையால் அடியாட்கள் விரட்டியடிக்கப்பட்டனர். இது குறித்து:
கிறித்துவ மதகுரு ஒருவர் திருச்சபையின் நடவடிக்கைகளில் தீவிர மாற்றம் ஏற்படுத்தப் பாடுபடும்போது திருச்சபை நிர்வாகிகள் அவரைத் தாக்க முயற்சி செய்கின்றனர். ஆனால் அவர் கம்யூனிஸ்டுகளின் துணையுடன் வரும்போது கிறித்துவின் சீடர்கள் காணாமல் போய்விடுவார்கள்.
என்று எழுதியுள்ளார். குடிசைவாழ் கத்தோலிக்கர்கள் நலனுக்காக இவர் நடத்திய போராட்டங்களையும் இப்போராட்டங்களில் கம்யூனிஸ்டுகளுடன் இணைந்து செயல்பட்டமையும் ஏற்றுமதி சரக்காக அய்ரோப்பிய நாடுகளுக்கு கேரளப் பெண்களை அனுப்பி வைத்ததைக் கண்டித்ததும் இவர்மீது கடும் கோபத்தை ஆயருக்கு ஏற்படுத்தியது. இவருக்கு முந்தைய ஆயர் இவரது பேச்சுரிமையையும் எழுத்துரிமையையும் தடை செய்திருந்தார். பத்தாண்டுக் காலம் இத்தடையாணைக்கு இவர் கட்டுப்பட்டிருந்தார். இத்தடை தமது இறப்பு வரை நீடிக்கும் என்பதையும் இவர் உணர்ந்திருந்தார்.
வேறு வழியின்றி தம் மீது ஆயர் பரப்பிய பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு விரிவான முறையில் குரியசிட்ரா தேவாலயப் பங்கு மக்களுக்கு விளக்கமளித்தார். இதுதான் ஆயரின் கட்டளையை மீறிய இவரது முதற்செயலாக அமைந்தது.
1967இல் ஈ.எம்.எஸ் தலைமையில் மீண்டும் கம்யூனிஸ்ட் அரசு உருவானது. முந்தைய அரசால் நான்காண்டுகளுக்கு முன்னர் காவல்துறையின் தடியடியாலும் துப்பாக்கிச் சூட்டாலும் வெளியேற்றப்பட்ட ஏழை மக்களைக் குடியேற்ற 1968இல் முடிவு செய்தது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் மூன்று ஏக்கர் நிலத்தை வழங்கியது.
நான்காண்டு கால இடைவெளிக்குப் பின்னர் கேரள மாநிலம் முழுவதும் சிதறிக் கிடந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள் திரும்பி வரலாயின. இந்நிகழ்வு எகிப்திலிருந்து ‘வாக்களிக்கப்பட்ட நாட்டிற்கு’ யூதர்கள் மேற்கொண்ட பயணத்தை ஒத்திருந்ததாக உணர்ச்சி பொங்கக் கூறுகிறார். (அங்கு ஆண்டவர் நாடு வழங்குவதாக வாக்குறுதி தந்திருந்தார். இங்கு கம்யூனிஸ்டு அரசு நிலம் வழங்கியுள்ளது.)
இது ஒரு பெரிய விழாவாக நடந்தது. அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் இவ்விழாவில் கலந்து கொண்டனர். இங்குக் கட்டப்பட இருந்த முதல் வீட்டிற்கு அடிக்கல் நாட்ட அவரை அழைத்திருந்தனர். இப்பணியில் ஈடுபட்டிருந்த வருவாய்த் துறையினர் வனத்துறையினர் நான்காண்டுகளுக்கு முன் ஈவு இரக்கமின்றி இந்த மக்களை வெளியேற்றினர். இப்போது அவர்களுக்கான வீடுகள் கட்ட உற்சாகத்துடன் ஒழுங்கு செய்திருந்தனர். இந்நிகழ்வில் உரையாற்ற இவர் ஆயரிடம் அனுமதி பெறாததால் ஒரு சொல்கூட பேசாமல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இவர் உரையாற்ற வேண்டும் என்று மக்கள்திரள் ஆரவாரம் செய்தது. ஆனால் இவர் வாய் திறக்கவில்லை.
ஆயரின் தடையாணை குறித்து சலிப்புற்ற நிலையில் ‘போப்பாண்டவர் மட்டுமே தவறிழைக்காதவர்’ என்று திருச்சபை போதிக்கின்றது. ஆயர்களையும் குருக்களையும் இவ்வாறாகக் குறிப்படவில்லை என்று பகடியாக எழுதியுள்ளார். தம் பேச்சுரிமை பறிக்கப்பட்டமை குறித்து போப்புக்கு இவர் எழுதிய முறையீடு கண்டு கொள்ளப்படவில்லை. அதைப் பெற்றுக் கொண்டதைக்கூடத் தெரிவிக்கவில்லை என்று கூறிவிட்டு போப்பாண்டவரும் தவறு இழைக்காதவர் அல்லர் என்ற முடிவுக்கு வந்துள்ளார்.
ஆயருடனான முரண்பாட்டின் இறுதிக்கட்டமாக குரியசிட்ரா பங்கின் பங்குக்குரு பொறுப்பிலிருந்து ஆயர் இவரை நீக்கியதுடன் வீடற்றோருக்கு வீடு கட்டும் திட்ட அமைப்பின் தலைவர் பதவியிலிருந்தும் நீக்கினார். இவர் நீக்கப்பட்டதை எதிர்த்து பங்கு மக்கள் ஆயருக்குத் தூதுக்குழுக்கள் அனுப்பினர். ஆயிரக்கணக்கானோர் கையெழுத்திட்ட மனுவும் ஆயரிடம் வழங்கப்பட்டது. ஆனால் ஆயர் கண்டுகொள்ளவில்லை. பின்னர் தம் தோள்களில் மரச்சிலுவையைச் சுமந்தபடியே ஆயரின் இல்லம் நோக்கி ஆயிரக்கணக்கான மக்களுடன் ஊர்வலமாகச் சென்றார்.
இந்தியாவிலேயே பெரிய கத்தோலிக்க மறைமாவட்டம் திரிசூர் மறை மாவட்டம். இதிலுள்ள பெரிய அளவிலான பங்கு ‘உள்ளூர்’ என்ற ஊர்ப் பங்கு ஆகும். கேரளத்தின் மிகப் பெரிய நிலஉரிமையாளர்களில் ஒன்றாக உள்ளூர் பங்கு விளங்கியது. இத்தேவாலயத்துக்கு உரிமையான நிலங்களில் அய்ம்பது குடிசைவாசிகள் வாழ்ந்து வந்தனர். குடியிருப்போருக்கு நிலஉரிமை வழங்கும் புதிய சட்டம் நடைமுறைக்கு வந்தபின்னரும் இம்மக்களுக்கு குடியிருப்பு மனை வழங்க தேவாலய நிர்வாகிகள் விரும்பவில்லை.
இவர் குரியசிட்ராவில் இருக்கும்போது இது தொடர்பாக இக்குடிசைவாசிகள் இவரைக் காண வந்தனர். இது ஓர் இக்கட்டான நிலைக்கு இவரை ஆழ்த்தியது. இவ்ஏழைக் குடிசைவாழ் மக்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டால் திருச்சபை இவர் மீது கோபம் கொள்ளும். திருச்சபையின் பக்கம் இவர் நின்றால் முதலில் கடவுளும் இரண்டாவதாக கடவுளின் அன்பிற்குரிய இம்மக்களும் இவரைப் புறந்தள்ளிவிடுவர்.
இறுதியில் தம் உரிமைக்காகப் போராடும்படி அவர்களிடம் கூறினார். அதை ஏற்று அவர்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாக அங்கு இறுக்கமான சூழல் உருவாகி, இறுதியில் அதிகார பலமிக்க திருச்சபையே வென்றது. இம்மறைமாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இத்தகைய நிலஉரிமைப் போராட்டங்கள் நிகழ்ந்தன. நிலவுரிமைச் சட்ட்ம் நடைமுறைக்கு வந்து நான்காண்டுகள் கடந்த பின்னரும் குடிசைவாழ் மக்களுக்கு, குடியிருப்பு மனையை, திருச்சபை வழங்கவில்லை. நிலம் கேட்டவர்கள் மீது திருச்சபை சட்டத்தின்படி ஒழுங்குநடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆயர் அச்சுறுத்தினார்.
ஆலப்புழை, எர்ணாகுளம், திரிசூர் மாவட்டங்களில் நிலஉரிமைப் போராட்டங்கள் தீவிரமடைந்தன. ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் காவல் துறையினர் மற்றும் குண்டர்களின் கொடூரமான தாக்குதல்களுக்கு ஆளாகினர். இறுதியில் லட்சக்கணக்கான குடிசைவாசிகளுக்கு நிலம் கிடைத்தது. இது நிலவுடைமையாளர்களின் அன்பினால் நிகழ்ந்ததல்ல. நிலமற்றவர்களின் கூட்டுப் போராட்டத்தின் மீது கொண்ட அச்சத்தால்தான் நிகழ்ந்தது என்று இவர் குறிப்பிட்டுள்ளார்.
குடிசைவாழ் மக்களுக்கெதிரான கத்தோலிக்கத் திருச்சபையின் செயல்பாடுகள், ஏழைகளுக்கென்று ஒரு தனித்த திருச்சபையை உருவாக்கலாம் என்ற எண்ணத்தைக்கூட அம்மக்களிடம் உருவாக்கியது. இந்நிகழ்வானது ‘விடுதலைக்கான இறையியல்’ குறித்த சிந்தனையை இவரிடம் வளர்த்தெடுத்தது. ஆதிக்க சக்திகளுக்கு ஆதரவாக நேரடியாகவோ மறைமுகமாகவோ திருச்சபை செயல்படுவதை இவர் உணரும்படிச் செய்தது.
இதன் விளைவாக வேளாண் தொழிலாளர்களுக்கு ஆதரவாகத் தோழர் ஏ.கே.ஜி., ஜான் மஞ்சுரன் ஆகியோருடன் இணைந்து செயல்படத் தொடங்கினார். இவர்களுடன் கேரளம் முழுவதிலும் சுற்றுப்பயணம் செய்து பல்லாயிரக்கணக்கானோரை போராட்டத்துக்கு ஆயத்தப்படுத்தினார். இப்போராட்டத்தில் இரண்டு லட்சம் பேர் வரை கைதாகினர். பத்தாயிரம் பேர் சிறைக்கு அனுப்பப்பட்டனர். பொதுக்கூட்டங்களில் உரையாற்றுவது, ஜீப் ஊர்வலத்தில் பங்கேற்பது என்பன இவர்களின் முக்கியப் பங்களிப்பாக இருந்தது. இப்பயணத்தின்போது, தோழர் ஏ.கே.ஜி., எழுபது வயது முதுமையில் ரத்த அழுத்தம் மற்றும் உடல் நோவுகளுக்கு இடையே உற்சாகத்துடனும் ஆற்றலுடனும் வெளிப்படுத்திய உணர்வும் அர்ப்பணிப்பும் தம்மையும் ஜான் மஞ்சுரனையும் வெட்கும்படிச் செய்ததாகப் பதிவு செய்துள்ளார். பயண அனுபவத்தின்போது மக்கள் வெளிப்படுத்திய உற்சாகமும் அளித்த வரவேற்பும் இவரை ஈர்த்தன. என்றாலும் திருச்சபையானது பங்குக்குரு பணியிலிருந்து இவரை நீக்கியது.
சில சிந்தனைகள்
இந்நூலில் அவர் விவரித்துச் செல்லும் நிகழ்ச்சிகளின் ஊடாக சில கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார். இவை சிலருக்கு அதிர்ச்சியையும் எரிச்சலையும் ஊட்டலாம். சிலரை சிந்திக்கத் தூண்டலாம். அவை வருமாறு:
* முதலில் சமயம், பின்னர்தான் நாடு என்ற பழமைவாதக் கருத்துநிலையை நான் எதிர்க்கிறேன். இதை முதலில் நாடு, பின்னர் கடவுள் என்று மாற்றலாம். இங்கு நாடு என்பது நாட்டின் மக்கள். மனிதர்கள் இல்லாமல் மதம் எப்படி இருக்க முடியும்? எனவே முதலில் மனிதன் பின்னர் மதம் என்று கூற வேண்டும்.
* முதலில் சமயம் என்ற முழக்கம் ஏகாதிபத்தியவாதிகள் காலனியவாதிகள் என்போரின் கருவியாகச் செயல்பட்ட திருச்சபைத் தலைவர்களால் உருவாக்கப்பட்டது. முதலில் சமயம் பின்னர் நாடு என்பதில்கூட அவர்கள் உண்மையாக இல்லை. அது உண்மையென்றால் ஏன் பெரும்பாலும் இத்தாலியர்களே போப்பாண்டவர்கள் ஆனார்கள்? போப்பின் தேர்வு முதலில் இத்தாலி பின்னர் சமயம் என்று அமைந்து, தேர்வு செய்யப்பட்ட பின் முதலில் சமயம், பின்னர் நாடு என்று மாறுகிறது.
* ஆசியா, ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த ஒருவர் போப் ஆனால் கத்தோலிக்கத் திருச்சபை மறைந்துபோய் விடுமா? கிறிஸ்து ஆசியாவில்தானே பிறந்தார்? முதலில் ஆப்பிரிக்காவில்தானே கிறித்தவம் பரவியது?
* ‘முதலில் சமயம் பின்னர் நாடு’ என்ற முழக்கமானது முதலில் ஆன்மீக மதிப்பீடுகளையும் நாடு என்பது மண் சார்ந்த உலகிய பொருட்களையும் குறிக்கிறது. ஆனால் முதலில் சமயத் தலைவர்கள், பின்னரே அரசியல் தலைவர்கள் என்று ஆகிவிட்டது. முதலில் சமய அதிகாரத்திற்கும் பின்னர் அரசியல் அதிகாரத்திற்கும் கீழ்ப்படிய வேண்டும். இதன்படி முதலில் சமய நிறுவனங்களையும் பின்னர் அரசியல் நிறுவனங்களையும் பாதுகாக்கவேண்டும் என்ற விளக்கமே நடைமுறைப்படுத்தப்படுகிறது. முதலில் சமயம் பின்னர் நாடு என்ற முழக்கமானது திருச்சபையின் தலைவர்களை மக்களுக்கு எதிரானவர்களாகவும் பின் நாட்டுக்கு எதிரானவர்களாகவும் மாற்றியுள்ளதே, வரலாறு கூறும் உண்மையாகும்.
* கத்தோலிக்கத் திருச்சபையின் குருக்களும் ஆயர்களும் போப்பும் கடவுளின் மக்களால் தேர்வு செய்யப்படவில்லை. கடவுளால் நேர்முகமாக அதிகாரம் வழங்கப்பட்டவர்களாக உள்ளனர். இதன்படி தன் மக்களின் மீது நம்பிக்கை இழந்த கடவுள் மக்களாட்சிக் கூட்டமைப்பைக் கலைத்து சர்வாதிகார அமைப்பை உருவாக்கியுள்ளார். குறிப்பிட்ட பகுதியில் வாழும் இறைநம்பிக்கை உடையோரின் கருத்துகளைக் கேளாமலேயே தம் விருப்பப்படி ஆயர்களை, போப் தேர்வு செய்கிறார். மக்களின் விருப்பங்களை அறியாமலேயே ஆயர்கள் குருக்களை திருநிலைப்படுத்துகின்றனர். அதிகார தோரணையே குருக்களின் செயல்பாடாக உள்ளது.
* என்னுடைய ஆண்டவர் தேவாலயங்களுக்குச் சென்று வழிபாடு நடத்தியதாகவோ வழிபாட்டில் பங்கேற்றதாகவோ விவிலியம் குறிப்பிடவில்லை. தேவாலயத்திற்கு என் ஆண்டவர் சென்றதாக விவிலியம் கூறுகிறது. ஆனால் வழிபாடு செய்ய அவர் சென்றதாகக் கூறவில்லை. ஆலயத்தைத் தவறாகப் பயன்படுத்தியோரை விரட்டுவதற்காகவே சென்றார்.
***
இச்சுயசரிதை மனிதநேய உணர்வுகொண்ட கத்தோலிக்கக் குரு ஒருவரின் செயல்பாடுகளையும் தத்துவ அடிப்படையில் அவரிடம் இருந்த குழப்பங்களையும் பதிவு செய்துள்ளது. ‘அமைப்பு’ என்ற ஒன்று இல்லாமல் தன்னிச்சையாகச் செயல்படுவதால் ஏற்படும் பின்னடைவு இவருக்கும் ஏற்பட்டுள்ளதை இந்நூல் வெளிப்படுத்தியுள்ளது. இருப்பினும் அரசியல்வாதிகளும் அறிவுஜீவிகளும் சமயவாதிகளும் கருத்துப் பரிமாற்றம் மேற்கொள்வதின் அவசியத்தை வலியுறுத்தும் இன்றைய, சமூகச்சூழலில் இந்நூல் வாசித்து விவாதிக்கப்பட வேண்டிய ஒரு நூல் என்பதில் அய்யமில்லை.
- ஆ.சிவசுப்பிரமணியன்