periyar 352திருவாளர் ஏ.ஜே.அன்பையன் அவர்களால் வெளியிடப்பெற்ற இந்தியாவில் ‘மிஷனெரி உலகம்’ என்னும் பெயரிய நூலொன்று எம் மதிப்புரைக்கு அனுப்பப் பெற்றோம்.

மிகப்பரந்த நோக்கத்துடன் வரையப் பெற்ற இந்நூலின் கண், இந்தியாவிலுள்ள மேனாட்டுக் கிறிஸ்துவப் பிரசாரகர்களின் நிலைமையைப் பற்றித் தெள்ளத் தெளிய எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.

அவர்கள் செந்நெறியில் செல்லாது, தீநெறியாம் சூழ்ச்சியிலும், சுயநலத்திலும், பிரித்தாளும் வழியிலு மேயே செல்லுகின்றனர் என்று, இம்மேனாட்டு மதப் பிரசாரகர்களின் புரட்டை திரு. அன்பையன் பிறர் மனதில் எளிதிற் பதியுமாறு கூறியிருக்கின்றார். ஆங்காங்கே எல்லா மனிதர்களும் வேறுபாடின்றி பாராட்டற்குரிய அரிய உண்மைகள் மிளிர்கின்றன.

ஒரு உண்மையை ஒரு மதம் என்று பெயரிட்டு வரையறுக்கும் போதே, அம்மதம் பொது மதமாய் இருப்பதற்குரிய இலக்கணத்தை இழந்து விடுதலால், எம்மதத்திற்கும் புரோகிதப் புரட்டு வேண்டுவது அவசியமாயிருக்கின்றது.

இதுபோலவே வரையறுக்கப்பட்ட இக்கிறிஸ்துவ மதத்திலும் இப்புரோகிதர்கள் செய்யும் புரட்டை திரு. அன்பையன் வெளிப்படுத்துவதனால், மிஷெனரிகளைத் தெய்வங்கள் என்று கருதி ஏமாற்றமடையும் அநேகர் நல்வழிப்படுதல் கூடும் என்று கருதுகின்றோம்.

‘நம்மிடம் பெருமை, அறியாமை, தன்னலம் என்னும் வியாதிகள் இருந்து வரும் வரை நாம் சகோதர ஐக்கியம் பெற முடியாது’ என்றும், ‘கிறிஸ்துவைப் போலிருந்து உன்னையே முற்றிலும் அறிந்து உலகத்துக்குப் பயன்படு என்னும் உண்மையை அறிந்திருப்பரேல் மேனாட்டுப் பாதிரிகள் 70,000 பேர்கள் இருந்தும் பெரும் போர் நடக்கச் சும்மாயிருந்திருப்பரோ’ என்று திரு. அன்பையன் அவர்கள் கிறிஸ்துவின் அடிப்படையான கொள்கைகட்குப் பாதிரிகளின் கொள்கைகள் எவ்வாறு முரண் படுகின்றனவென்பதை எடுத்துக் காட்டிப் போதருவது பெரிதும் பாராட்டற்குரியதே.

இந்நூலைக் கிறிஸ்துவர்கள் மட்டுமின்றி எல்லா மக்களும் படித்து இன்புற வேண்டுகின்றோம். பொதுநலம் பற்றித் துணிவுடன் வெளிவந்த திரு.அன்பையனுக்கு இக்கிறிஸ்துவ உலகம் மிகவும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளது என்பது எமது துணிபு.

(குடி அரசு - மதிப்புரை - 03.11.1929)

Pin It