குற்றச் செயல்கள் நிகழாதவாறு தடுப்பதும். குற்றச் செயல்கள் செய்தோரைக் கண்டறிந்து அவர்களுக்கு நீதிமன்றம் வழி தண்டனை பெற்றுத் தருதலும் காவல்துறையின் பணி என்பது நாம் அறிந்த ஒன்றுதான். இப் பணியில் அவர்களின் உளத்திடம், உடல்வலு, சட்ட அறிவு, மக்கள் தொடர்பு, என்பன மட்டுமின்றி சில அறிவுத்துறைகளின் பங்களிப்பும் உண்டு. இவ்வாறு துணைபுரியும் அறிவுத்துறைகளில் மிகவும் குறிப்பிடத்தக்க ஓர் அறிவியல் துறையாக அமைவது குற்றவியல் (Criminology) என்ற அறிவுத் துறையாகும்.

குற்றவியல்:

குற்றங்கள், குற்றச்செயல்பாடுகள் என்பனவற்றை மையமாகக் கொண்ட ஓர் அறிவியல் துறையே குற்றவியல் துறையாகும். அடிப்படையில் இத் துறையானது குற்றம் மற்றும் குற்றவாளிகள் பற்றிய அறிவியல் முறையிலான ஆய்வை அடிப்படையாகக் கொண்டு செயல்படுவது. இந்தியப் பல்கலைக்கழகங்கள் பலவற்றில் இத்துறையில் முதுகலைப் படிப்பும் ஆய்வுப் படிப்பும் இடம் பெற்றுள்ளன.

ஓர் அறிவியல் துறை என்பதன் அடிப்படையில் பல்வேறு அறிவியல் துறைகளின் தாக்கத்திற்கு இத்துறை ஆட்பட்டுள்ளது. இதனால் சமூகவியல். உளவியல், பொருளியியல், புள்ளியியல், மானுடவியல் என்ற பல்வேறு அறிவுத்துறைகளின் சங்கமிப்பாக இத்துறை விளங்குகிறது. இவற்றுள் தலையான இடத்தை, தடய அறிவியல் (Forensic science) என்ற அறிவியல் துறை வகிக்கிறது.

dead man tell talesதடய அறிவியல்:

குற்ற அறிவியல், தடய அறிவியல் துறைகளின் முன்னோடியாகவும் இவ்விரு துறைகளையும் வளர்த்தெடுத்தவராகவும் எட்மண்ட் போகார்ட் (1877-1966) என்ற பிரெஞ்சு நாட்டவரைக் குறிப்பர். இவரது ஆற்றலைப் பாராட்டும் வகையில் பிரான்ஸ் நாட்டின் “ஷெர்லாக் ஹொம்ஸ்” (இங்கிலாந்து நாட்டவரான ஆர்தர் கெனான் டைல் என்பவரின் துப்பறியும் நாவல்களில் இடம் பெற்றுள்ள துப்பறிவாளர். ஒரு கற்பனைப் பாத்திரம்) என்று அழைத்துள்ளனர்.

ஒவ்வொரு தொடர்பும் ஒரு தடயத்தை விட்டுச் செல்கிறது (Every Contact leaves a trace) என்ற இவர் உருவாக்கிய தொடர் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இத்துறையில் இடம் பெற்றுள்ளது.

இத்துறையானது, ஓளிப்படம் எடுத்தல் கைரேகைப் பதிவும் ஆய்வும் என்ற தொழில்நுட்பக் கூறுகளையும் உள்ளடக்கியது. ஆயுதத் தாக்குதல் கொலை போன்ற நிகழ்வுகளில் உண்மையைக் கண்டறிவதில் பிணக் கூறு (Autopsy) ஆய்வறிஞரின் துணை இன்றியமையாத ஒன்றாகும். இதன் அடிப்படையில் இப் பணியை மேற்கொள்ளும் மருத்துவர் காவல்துறை அறுவை மருத்துவர் (போலிஸ் சர்ஜன்) என்றழைக்கப்படுகிறார்.

போலிஸ் சர்ஜன்:

காவல்துறையின் அறுவை மருத்துவர் என்பவர் மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் ஒரு தடயவியல் பேராசிரியராகவோ துணைப் பேராசிரியராகவோ இருப்பார். அடிப்படையில் இவர் மருத்துவக் கல்லூரியில் பணிபுரியும் ஓர் அறுவைச் சிகிச்சை நிபுணர்தான். காவல்துறைக்குத் தேவைப்படும் மருத்துவச் சட்டப்பணிகளைச் செய்வது இவரது கடமையாகும்.

கொலை, காயம் ஏற்படுத்தல் போன்ற குற்ற வழக்குகளில் நீதி வழங்க இவரது பங்களிப்பு தவிர்க்க இயலாத ஒன்றாகும். ஒரு மனிதன் மீது ஏற்படும் காயங்களின் தன்மை குறித்தும், இறந்த மனிதனின் இறப்புக்கான உண்மைக் காரணம் குறித்தும் எழுத்து வடிவில் ஆவணமாகத் தருவதுடன் நீதிமன்றத்தில் சாட்சியமும் கூறுவார். குற்றம் சாட்டப் பட்டவரின் வழக்கறிஞரின் குறுக்கு விசாரணையையும் எதிர்கொள்வார். இவர் வழங்கும் சாட்சியம் வழக்கின் தீர்ப்பை முடிவு செய்யும் தன்மை கொண்டது.

நூலாசிரியர்:

இங்கு அறிமுகம் ஆகும் இந்நூலின் ஆசிரியர் உம்மதத்தன் கேரள மாநிலத்தில் காவல்துறையின் அறுவை மருத்துவராகவும் பின்னர் அம்மாநிலத்தின் மருத்துவக் கல்வியின் இயக்குநராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஓய்வை அடுத்து மொரிசியஸ் நாட்டின் மருத்துவக் கல்லூரி ஒன்றின் முதல்வராகவும் பணியாற்றி உள்ளார். கேரளத்தின் "ஷெர்லாக் ஹோம்ஸ்" என்று இவரைக் குறிப்பிடுவர்.

தடயவியல் துறையின் திறமை வாய்ந்த மருத்துவராக அறியப்பட்ட இவர் மலையாள மொழியில் "ஒரு போலிஸ் சர்ஜனின் ஓர்மக்குறிப்புகள்" (ஒரு போலிஸ் சர்ஜனின் நினைவுக் குறிப்புகள்) என்ற தலைப்பில் ஒரு நூலை 2010இல் வெளியிட்டார். இது அவரது தன் வரலாறு அல்ல.

தமது பணிக்கால அனுபவத்தில் அவர் ஆராய்ந்த சுவையான, வியப்பிற்குரிய வழக்குகளைக் குறித்தே இந் நூலில் எழுதியுள்ளார்.நாற்பத்தியொன்று இயல்களைக் கொண்ட இந்நூலில் தொடக்க இயல் தவிர்த்து ஏனைய நாற்பது இயல்களுள் ஒன்றிரண்டு நீங்கலாக ஏனையவை இறந்த உடல்களின் மீது அவர் மேற்கொண்ட தடயவியல் சார்ந்த அறுவைகளின் வாயிலாக அவர் வெளிப்படுத்திய உண்மைகளைக் கூறுகின்றன. இந்நூலின் ஆங்கில மொழியாக்கமே இங்கு அறிமுகமாகிறது

மலையாள மொழியில் இருந்து இந்நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பிரியா கே நாயர் எர்ணாகுளத்தில் உள்ள புனித தெரசா கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.மலையாளத்தில் இருந்து பல நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.

இந்த அறிமுக உரையை இத்துடன் நிறுத்திக் கொண்டு இந்நூலின் மூன்றாவது இயல் வெளிப்படுத்தும் அவர் மேற்கொண்ட ஓர் ஆய்வை மட்டும் அறிமுகம் செய்து கொள்வோம்.

காவல் நிலைய மரணங்கள்:

காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படுபவர் மீது நடத்தப்படும் வன்முறையால் ஒருசிலர் இறந்து போவது பரவலாக அறிந்த செய்திதான். தமது தொழில் அனுபவத்தில் எதிர்கொண்ட காவல்நிலைய இறப்புக்களை இந்நூலின் மூன்றாவது இயலில் நூலாசிரியர் விவரித்துள்ளார். இவற்றுள் ஒன்று சங்கணாச்சேரி இளைஞன் ஒருவனது மரணம்.

கேரளத்தின் சங்கணாச்சேரி என்ற ஊரைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் குஜராத்தில் டயர் வல்கனைசிங் பட்டறை ஒன்றில் பணியாற்றி வந்தான். விடுமுறை ஒன்றின் போது தன் குடும்பத்தைக் காண தன் சொந்த ஊருக்குத் தன் நண்பர்களுடன் இரயில் வழிப் பயணத்தை மேற்கொண்டான். பயணத்திற்கு முன் தன் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் அன்பளிப்பாக வழங்க ஏராளமான பொருட்களையும் வாங்கியிருந்தான். சங்கணாச்சேரிக்கான மூன்றுநாட்கள் நெடிய பயணத்தின் போது முதல்நாள் பயணத்தின் போது அவனது மனநிலையில் மாற்றம் தென்பட்டதை உடன்வந்த நண்பர்கள் உணர்ந்தார்கள். ஒரு வகையான மனக்கலக்கம் அவனிடம் காணப்பட்டது. இரயில் திரிசூர் வந்தபோது அவன் முற்றிலும் மாறிப் போனான்.

இரயில் ஒல்லூர் வந்தபோது கீழே இறங்கிய அவன் எவ்வித நோக்கமும் இல்லாமல் சுற்றித் திரிந்தான் அது புறப்பட்டபோது அவன் இரயிலில் இல்லை. அவனது சுமைகளுடன் சங்கணாச்சேரி வந்தடைந்த நண்பர்கள் அவற்றை அவனது மனைவியிடம் ஒப்படைத்தார்கள்.

ஒல்லூரில் இறங்கியிருந்த அந்த இளைஞன் அன்று இரவு ஒரு வீட்டிற்குள் நுழைந்து விட்டான்.அவ் வீட்டார் காவல்துறையை அழைத்தனர்.காவலர்கள் அவனை ஒல்லூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு மிகவும் அடாவடியாக அவன் நடந்து கொண்டமையால் அவனைக் கைதிகள் அறையில் அடைத்தனர். மறுநாள் காவல் நிலைய ஆய்வாளர் வந்தார். அவர் பார்த்த போது படுத்த நிலையில் அவன் இருந்தான். அவனுக்கு மருத்துவ உதவி தேவை என்று உணர்ந்து அவனை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றபோது அவன் இறந்துபோய்விட்டான் என்பது தெரியவந்தது.

அவனது உடல் பிணக் கூறு ஆய்வுக்காக திரிசூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அவனது உறவினர்கள் காவல் துறையினர் அவனை அடித்துக் கொன்றுவிட்டதாகக் குற்றம் சாட்டினர். ஆனால் அவனது உடலில் காயங்கள் எவையும் காணப்படவில்லை. அவனது இறப்பிற்கான காரணத்தைத் தெளிவாகக் கண்டறிய முடியவில்லை. வேதியியல் சோதனையிலும் போதைப் பொருட்களோ மதுவோ அவனது உடலில் கண்டறியப்படவில்லை. பெருமூளை வீக்கம் (cerebral edema) மட்டும் கண்டறியப்பட்டது.

உயர்நீதி மன்றத்தின் ஆணைப்படி குற்றப் புலனாய்வுப் பிரிவு இது தொடர்பான புலனாய்வை மேற்கொண்டது. அப் பிரிவின் துணைக் கண்காணிப்பாளர் இவ் வழக்கின் புலனாய்வை மேற்கொண்டார். இறந்த இளைஞனின் உடல்மீது வன்முறைத் தன்மையுடன் கூடிய தாக்குதல் எதுவும் நடந்ததற்கான தடயம் எதையும் கண்டறிய முடியவில்லை. நள்ளிரவில் மிகமோசமான முறையில் அவன் நடந்து கொண்டமையால் அவனை அறையில் பூட்டியதாக அக் காவல் நிலையத்தின் காவலர்கள் கூறினர்.

அவனுடன் இரயிலில் உடன் பயணித்த அவனது நண்பர்கள் பயணத்தின் இரண்டாம் நாளன்று வேறுபாடான முறையில் நடந்து கொள்ளத் தொடங்கியதாகக் கூறினர். புலனாய்வுத் துறை அதிகாரியால் எந்த முடிவையும் எட்டமுடியவில்லை. இச் சூழலில் மாநிலக் காவல்துறைத் தலைவர் மருத்துவர் உம்மதத்தனைச் சந்திக்கும்படி அந்த அதிகாரியிடம. கூறினார். அதன்படி அவரும் இந் நூலாசிரியரைச் சந்தித்தார்.

அவரிடம் இருந்து பிணக்கூறு ஆய்வறிக்கை. குற்றப் பதிவேடு என்பனவற்றைப் பெற்றுப் படித்தறிந்திருந்த நூலாசிரியர் புலனாய்வு அதிகாரியுடன் விவாதிக்கவும் செய்தார். இவற்றின் அடிப்படையில் சில அனுமானங்களுக்கு அவர் வந்தார். இறந்த இளைஞனின் உடலில் எவ்விதக் காயமும் இல்லை.ஆனால் பெருமூளை வீக்கம் அறிகுறிகள் மூளையில் காணப்படுகின்றன. எனவே அவனது மூளையைத் தாக்கிய ஏதோ ஒரு நோயால் அவன் இறந்து போயிருக்கக் கூடும் என்பதே அந்த அனுமானமாகும்.

இதை உறுதி செய்ய மேலும் சான்றுகள் அவருக்குத் தேவைப்பட்டன. குறிப்பாக இறந்து போன இளைஞன் தனிப்பட்ட வாழ்க்கையில் மது,போதைப் பழக்கம் உடையவனாக இருந்தானா என்பதைக் கண்டறியவேண்டியிருந்தது. இதன் பொருட்டு குஜராத் சென்ற வழக்கின் புலனாய்வு அதிகாரி. இறந்து போன இளைஞன் மிகுதியாகக் குடித்து விட்டுத் தகராறு செய்யும் பழக்கம் கொண்டவன் என்ற உண்மையைக் கண்டறிந்தார். இவ்உண்மை நூலாசிரியரின் அனுமானம் சரியானது என்பதை உறுதி செய்தது. நாள்தோறும் குடிக்கும் பழக்கம் அவனிடம் இருந்தமையும் அவனது மூளையில் காணப்பட்ட வீக்கமும் அவனது இறப்புக்கான அறிவியல்பூர்வமான விளக்கத்தைத் தருவதற்குத் துணை நின்றன.

குடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ள ஒருவன் திடீரென்று அதை நிறுத்திவிட்டாலோ, வழக்கமான அளவை விடக் கூடுதலாகக் குடித்தாலோ மூளையின் செயல்பாட்டில் தடுமாற்றத்தை ஏற்படுத்தும். இவ்வாறு ஏற்படும் தடுமாற்ற நிலையைக் குடிப்பழக்கத் தடுமாற்றம் (Delirium tremens) அல்லது நடுக்கம் என்பர். குடிப் பழக்கத்தை நிறுத்திய எழுபத்திரண்டு மணிநேரம் கழித்து இந்த அறிகுறிகள் தோன்றும். பின்னர், பிதற்றல், தடுமாற்றம், நடுக்கம், கவலை, உறக்கமின்மை, வலிப்பு, மனச்சோர்வு என்பனவற்றிற்கு ஆளாவார்கள்.

வழக்கமான குடிகாரர்களது மூளையின் வேதியியில் சமநிலையில் மாறுதல்கள் நிகழலாம்.அவர்கள் திடீரென்று குடியை நிறுத்தும் போது அட்ரீனல் சுரப்பியானது அதிக அளவில் அட்ரீனலைச் சுரக்கும். இவ்வாறு சுரப்பதால் இதயத் துடிப்பு அதிகரிக்கும். உயர் இரத்த அழுத்தம் உருவாகி மூளையைப் பாதிக்கும். இது இதயத் தாக்குதலையும் பக்கவாதத்தையும் விளைவிக்கும். உரிய காலத்தில் சிகிச்சை அளிக்கப்படாவிடில் இறப்பும் நேரிடும். இம் மருத்துவ உண்மைகளின் பின்புலத்தில் சங்கணாச்சேரி இளைஞனின் மரணம் குறித்துப் பின்வரும் விளக்கத்தை நூலாசிரியர் தந்துள்ளார்.

*             இந்த இளைஞர் குடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தவர்.

*             அவரது மூன்று நாள் இரயில் பயணத்தில் குடியை நிறுத்தி இருந்தார்.

*             அவர் வெளிப்படுத்திய அறிகுறிகள் குடிப்பழக்கத் தடுமாற்றத்துடன் தொடர்புடையன.

இவ் விளக்கத்துடன் இதையொத்த வேறுஒரு நிகழ்வையும் அவர் சுட்டிக் காட்டுகிறார். வழக்கமாகக் குடிப்பழக்கம் உடைய ஒருவன் இதய அறுவைச் சிகிச்சை செய்து கொண்டான். அறுவைச் சிகிச்சை முடிந்ததும் தீவிர சிகிச்சைப் பிரிவில்(ஐ.சி.யூ)அனுமதித்தனர். மறுநாள் மிகவும் மூர்க்கத்தனமாக நடந்து கொண்டதுடன் தன் உடலில் பொருத்தப் பட்டிருந்த ரப்பர் குழாய்களை அகற்றிவிட்டு ஓடிச் சென்று சன்னல் ஒன்றின் வழியாகக் கீழே குதித்து விட்டான். ஐந்தாவது மாடியில் இருந்து குதித்த அவனுக்கு என்ன நிகழ்ந்திருக்கும் என்பதைக் கூற வேண்டியதில்லை.

சங்கணாச்சேரி இளைஞனின் மரணம் தொடர்பான தன் கருத்துக்கள் அடங்கிய விரிவான குறிப்பை உயர்நீதிமன்றத்தில் வழங்கும்படி வழக்கின் புலனாய்வு அதிகாரியிடம் நூலாசிரியர் வழங்கிவிட்டார். அதனைப் படித்துப் பார்த்ததும் நீதிபதி அவரை அழைத்து விளக்கம் கேட்கவுமில்லை பாராட்டவுமில்லை. மாறாக இறந்த இளைஞனின் மரணத்திற்குக் காரணம் என்று குற்றம் சாட்டப் பட்டிருந்த காவலர்களைப் பாதுகாக்கும் நோக்கில் இப்படி ஒரு குறிப்பைத் தயாரித்தமைக்காக மருத்துவர் உம்மதத்தன் பெயரையும் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கும்படி அரசு வழக்கறிஞரிடம் கூறினார். இவரது நண்பரான அரசு வழக்கறிஞர் ஜோஸ் தெட்டயல் இதை அவரிடம் தெரிவித்தார்.

இதன் பின்னர் ஆதாரப்பூர்வமான பத்து நூல்களில் இருந்து “குடிப்பழக்கத் தடுமாற்றம்" தொடர்பான செய்திகளைத் திரட்டி நீதி மன்றத்தில் வழங்கினார்.

இவ் இயலில் காவல் நிலைய மரணங்களைக் குறித்து ஒரு மருத்துவராக அவர் கூறும் செய்திகள் கவனத்திற்குரியன.

காவல் நிலையங்களில் மரணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாகக் குறிப்பிடும் இவர் மன அழுத்தத்தால் ஏற்படும் இதயத்தாக்குதலை ஒரு காரணமாகக் கருதுகிறார். காவல்துறையின் ஒத்துழைப்பால் இதைக் குறைக்கமுடியும் என்பது அவரது நம்பிக்கையாக உள்ளது. இது தொடர்பாக அவர் முன்வைக்கும் மருத்துவ அறிவியல் தொடர்பான செய்திகள் வருமாறு:

ஒரு குற்றவாளியாகவோ. புகார் அளிக்கவோ காவல் நிலையத்திற்கு வரும் ஒருவர் மிகுந்த மன(மூளை) அழுத்தத்திற்கு ஆளாகிறார். இது அவரது உடல்நிலையில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது.அவரது இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. நாடித்துடிப்பு உயர்கிறது. அட்ரீனியன் நார் அட்ரீனியன் என்ற ஹார்மோன்கள் அதிக அளவில் சுரக்கின்றன. இதனால் இதயத் துடிப்பு அதிகரிக்கிறது. இது இதயத்தைப் பாதிக்கிறது. ஏற்கெனவே இதயக் கோளாறு உள்ளவர்களின் இறப்புக்கு இது காரணமாக அமைந்து விடுகிறது. தமக்கு நெருக்கமானவர்களின் இறப்புச் செய்தியைக் கேட்டவுடன் சிலர் இறந்துபோவதற்கு இதுதான் காரணம். மருத்துவ அறிவியல் சார்ந்த இச் செய்திகளைக் கூறிவிட்டு கேரள மாநிலக் காவல் துறைக்குப் பின்வரும் அறிவுரைகளையும் கூறுகிறார்:

இவ் உண்மையைக் காவல்துறை அதிகாரிகள் புரிந்துகொள்ளும்படிச் செய்ய வேண்டும்.

“மன நிலையில் மென்மை செயலில் உறுதி”என்பது இத்துறையின் விருது வாக்கியமாக அமையவேண்டும். அச்சமின்றி மக்கள் காவல் நிலையத்தில் நுழையும் நிலை இருக்க வேண்டும். அமைதியாகப் பேசி கண்ணியமான முறையில் நடத்தினால் மக்களின் பாராட்டுதல்களை இத்துறையினர் பெறுவார்கள்”

நூலாசிரியரின் அறிவுரை கேரள மாநிலத்திற்கு மட்டுமின்றி அனைத்திந்தியாவுக்கும் பொருந்தும்தானே! (தொடரும்)

சாணக் குழியில் இருந்து:

திருவனந்தபுரத்திற்கு அருகில் உள்ள சிறு நகரம் கிளிமானூர். இராதாகிருஷ்ணன் என்ற விவசாயத் தொழிலாளி தன் மனைவி சாந்தாவுடனும் தம்பி இரவியுடனும் வாழ்ந்து வந்தார். இவரது மனைவிக்கும் தம்பிக்கும் இடையே கள்ள உறவு இருந்து வந்தது. ஒருநாள் படுக்கை அறையில் இருவரும் ஒன்றாக இருப்பதைப் பார்த்தபோது தம்பியை அடிக்க அவர் பதிலுக்குக் கத்தியால் குத்த அண்ணன் இறந்து போனார்.

அண்ணனது மனைவி சாந்தியும், தம்பி ரவியும் சேர்ந்து இராதாகிருஷ்ணனின் உடலை வீட்டின் சாணக்குழியில் போட்டு மூடி விட்டார்கள். மறுநாள் இராதாகிருஷ்ணனை வீட்டில் காணாத ஊரார் அதைக் குறித்து விசாரித்த போது மனைவியுடன் சண்டை போட்டுவிட்டு அவர் வீட்டை விட்டு வெளியேறி விட்டதாகக் கூறிவிட்டனர். இரு வாரங்கள் கழித்து அவர் எழுதியதாக ஒரு கடிதம் அவர்களிடம் காட்டப்பட்டது. மனைவியுடன் வாழப் பிடிக்காததால் தான் திரும்பி வரப் போவதில்லை என்ற செய்தி அதில் இருந்தது.

சில மாதங்கள் கழித்து மதுக்கடையில் போதை ஏறிய நிலையில் தன் நண்பனிடம் தான் செய்த குற்றச் செயலைத் தம்பி ரவி கூற, அவன் உடனடியாக உள்ளூர்க் காவல் நிலையம் சென்று உதவி ஆய்வாளரிடம் இச்செய்தியைத் தெரிவித்து விட்டான். தொடக்க நிலை விசாரணையை அடுத்து வருவாய்த் துறைக் கோட்ட அதிகாரியிடம் (ஆர்.டி.ஓ.) அனுமதி பெற்று அவர் முன்னிலையில் சாணக்குழி தோண்டப்பட்டதுடன் அங்கேயே பிணப் பரிசோதனையும் நடத்தப்பட்டது. அடையாளம் காண முடியாதபடி முகம் அழுகியிருந்தது. அழுகிய உடலில் கிடைத்த ஆடைகளையும் தாயத்து ஒன்றையும் இராதாகிருஷ்ணனுக்கு உரியதென்று சுற்றி நின்றோர் அடையாளம் காட்டினர். இரவியிடம் கைப்பற்றப்பட்ட கத்தி உடலில் காணப்பட்ட காயத்துடன் ஒத்துப் போனது.

இருப்பினும் சாணக்குழியைத் தோண்டி எடுக்கப்பட்ட உடல் இராதாகிருஷ்ணனின் உடல்தான் என்பதை நீதிமன்றத்தில் உறுதிப்படுத்த இவை போதுமானவையல்ல. அதை உறுதி செய்வதைப் பொருத்தே வழக்கின் தீர்ப்பு அமையும். இப்படிப்பட்ட சூழலில் தடயவியலாளருக்கு உதவும் அறிவியல் முறை ஒன்றிருந்தது. அது என்ன முறை?

(தொடரும்)

DEAD MEN TELL TALES. THE MEMOIR OF A POLICE SURGEON
Dr.B.UMADATHAN (2021)
Translated from the Malayalam By Priya k.Nair | HarperCollins Publishers, India

நன்றி:இந்நூலில் இடம் பெற்றுள்ள மருத்துவ அறிவியல் தொடர்பான கலைச் சொற்களுக்குப் பொருத்தமான தமிழ்க்கலைச் சொற்களைக் கூறி உதவிய தஞ்சை மருத்துவக் கல்லூரியின் மேனாள் பேராசிரியர் டாக்டர் சு.நரேந்திரன் அவர்களுக்கு நன்றி.

ஆ.சிவசுப்பிரமணியன்