M9, M89, M45, M175... இந்த எண்கள் எல்லாம் சென்னை நகரில் இயங்கும் நகரப் பேருந்துகளின் வழித்தடம் போன்று தோன்றுகிறதல்லவா? உண்மையில் இவையெல்லாம் மனித மரபணுக்களில் காணப்படும் மார்க்கர்கள் எனப்படும் மரபணுப் பிறழ்வுகளின் அடையாளங்கள் ஆகும். சரி, இந்த பிறழ்வுகள் பற்றிய ஆய்வுகள் எதற்கு பயன்படுகின்றன? இந்தப் பிறழ்வுகளின் வரலாற்றை வைத்து மனிதன் எங்கு தோன்றினான். எப்படி இடம் பெயர்ந்து உலகம் முழுவதும் வியாபித்தான் என்று கூற முடியும். இதற்கான ஒரு தனி அறிவியல் புலமே தோன்றி­விட்டது. அதுதான் பாப்புலேஷன் ஜெனிட்டிக்ஸ் எனப்படும் மக்கட்தொகை மரபணுவியல்.

ஆங்கிலத்தில் ‘ஜர்னி ஆஃப் மேன்' என்ற தலைப்பில் மக்கட்தொகை மரபணுவியலாளர் ஸ்பென்ஸர் வெல்ஸ் எழுதிய இப்புத்தகத்தை மிகவும் தாமதமாக அறிமுகப்படுத்துகிறேன். 2003ஆம் ஆண்டு வெளியான இப்புத்தகத்தை கிட்டத்தட்ட 20 வருடங்கழித்து அறிமுகப்படுத்த வேண்டிய தேவை இருப்பதால் இதைச் செய்ய வேண்டியதிருக்கிறது. குறிப்பாக நிறுவப்பட்ட அறிவியல் உண்மைகள் மக்களுக்குப் போய்ச் சேரவில்லை அல்லது தடுக்கப்படுகிறது. நவம்பர் 2022 டெஹ்ராடூனில் நடந்த ஆகாய தத்துவம் என்ற போலி அறிவியல் மாநாடு பண்டைய இந்தியாவின் பஞ்சபூதம் எப்படி அறிவியல் பூர்வமாக இந்த அண்டத்தைப் பற்றிய விளக்கம் கொடுக்கிறது என்பதற்காக நடந்தது. பஞ்ச பூதங்களில் ஒன்றான ஆகாயம் அல்லது வெளி என்பது ஈத்தர் என்ற ஊடகத்தால் நிரப்பப்பட்டிருக்கிறது என்கிறது பண்டைய தத்துவம். இது உலகம் முழுவதும் நம்பிய விஷயம்தான். ஆனால் 19ஆம் நூற்றாண்டில் மைக்கேல்சன், மார்லே என்ற இரு அமெரிக்க அறிவியலாளர்கள் ஈத்தர் என்ற ஒன்று கிடையாது என்று நிறுவி விட்டனர். அறிவியல் உலகமும் ஈத்தரை கைவிட்டு விட்டது. எனினும் நம்மவர்கள் மாநாடு நடத்துகிறார்கள். புளகாங்கிதம் அடைந்து கணிசமான பேர் ரசிக்கிறார்கள் என்றால் அறிவியல் உண்மைகள் அவர்களிடம் போய்ச் சேரவில்லை என்றே அர்த்தம். எனவேதான் இப்புத்தகத்தை மீண்டுமொரு அறிமுகப்படுத்த முடிவு செய்தேன். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மீண்டும் மீண்டும் இதைச் செய்ய வேண்டும் என்றும் நினைக்கிறேன்.

நூலின் அறிமுகம்

இன்றைய நவீன மனிதர்கள் ஹோமோ சேப்பியன்கள் (Homo Sapiens) என்று அழைக்கப்படுபவர்கள் அனைவரும் ஒரே உயிரினம் என்றும் அவர்கள் அனைவரும் ஆதிமந்தியினத்­திலிருந்து பரிணமித்தவர்கள் என்றும் ஆப்பிரிக்காவில் பரிணமித்து உலகம் முழுவதும் பரவியவர்களின் வாரிசுகள் என்றும் அறிவியல் பூர்வமாக இந்நூலில் நிறுவியுள்ளார். இந்த முடிவானது பல்வேறு ஆய்வுகள் மூலம் பல்வேறு அறிஞர்களின் பணியால் வந்து சேர்ந்த முடிவு. இந்த முடிவு வந்து சேர்ந்த வரலாறும் இங்கே விளக்கப்படுகிறது. மானுடர்கள் சம்பந்தமான பல்வேறு கருத்துகளை முதல் அத்தியாயத்தில் ஆய்வு செய்கிறார். மனிதர்கள் இறைவனின் படைப்பு என்ற படைப்புக் கோட்பாடு பத்தொன்பதாம் நூற்றாண்டில் நொறுங்கிப் போனது. இப்போது பரிணாமக் கோட்பாடு ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டது. இப்படிக் கூறுவதால் பரிணாமக் கோட்பாட்டை ஏற்றுக் கொள்ளாதவர்கள் இருக்கிறார்கள் என்ற உண்மையை நான் மறைக்கவில்லை. உலகம் இன்னும் தட்டையானது என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள். அவர்களைப் போன்றவர்கள்தான் இவர்களும் என்றுதான் முடிவு செய்ய வேண்டும்.

the journey of manபரிணாமக் கோட்பாட்டிற்கு மூலகர்த்தா 19ஆம் நூற்றாண்டு அறிஞர் சார்லஸ் டார்வின். இவர் தனது பீகில் பயணத்தில் பல்வேறு உயினங்களைக் காண்கிறார் அவற்றைப் பற்றி பதிவுசெய்கிறார். அத்துடன் பல்வேறு வகையான மனிதர்கள் வெவ்வேறு கண்டங்களிலும் தீவுகளிலும் காண்கிறார். அவர்களிடம் உள்ள தோற்ற வித்தியாசங்களையும் காண்கிறார். இருப்பினும் பரிணாமமே உயிரினங்களின் தோற்றத்திற்கு அடிப்படை என்ற முடிவுக்கு வந்தடைகிறார். டார்வினுக்கு முன்பு சிலர் மதங்களின் படைப்புக் கோட்பாட்டை நிராகரித்திருக்கின்றனர். அவர்களில் குறிப்பாக லூயிஸ் அகாஸிஸ் போன்றவர்கள் பூமியின் மேற்பரப்பில் ஏற்பட்ட பல்வேறு பேரழிவுகளின் விளைவாகவே உயிரினங்கள் தோன்றின என்கின்றனர். மனிதர்கள் அனைவரும் ஒரே உயிரினம் இவர்கள் பரிணாமத்தில் தோன்றினார்கள் என்றால் பல்வேறு தோற்ற வித்தியாசங்களும் பல்வேறு உடற்கட்டமைப்பு வித்தியாசத்தையும் எப்படி விளக்கப் போகிறோம் என்ற கேள்வியும் எழுகிறது. அத்துடன் உயிரினம் என்பதற்கான விளக்கம் என்ன என்ற கேள்வியும் எழுகிறது. இதையும் இந்தப் புத்தகம் விளக்குகிறது.

பரிணாமக் கோட்பாடு நிறுவப்பட்ட பிறகு வந்தவர்கள் பல்வேறு வித்தியாசமான மனிதர்கள் மனித இனத்தின் உபஇனங்கள் என்று கூறி வந்தனர். இது தவறு என்பதை இப்புத்தகத்தில் விளக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்க மானுடவியலாளர் சார்ல்டன் கூன் என்பவர் பல்வேறு தோற்ற வித்தியாசங்களுக்குக் காரணம் அவர்கள் பரிணாமத்தின் வெவேறு கட்டங்களில் உள்ளவர்கள் என்கிறார். இதுவும் தவறு என்று ஸ்பென்ஸர் நிறுவுகிறார். மனிதர்களுக்குள்ள வித்தியாசத்தை டார்வினின் பரிணாமக் கோட்பாட்டை மீறாமல் விளக்க முயன்ற இன்னொரு குழுவும் உண்டு.

கூனைத் தொடர்ந்து வந்தவர் பிரான்ஸில் கால்டன். இவர் இன்னொரு படி மேலேபோய் மனிதர்களுக்கு ஐந்துவகை உபஇனங்கள் உண்டு என்று அதற்கு பெயரிட்டு அழைத்தார். டார்வினின் ஒன்றுவிட்ட சகோதரர் கால்டன். கால்டனின் உபஇனங்கள் வாதமானது மனிதர்களை மனிதர்கள் சுரண்டும் அரசியலை தீனிபோட்டு வளர்த்தது. இதன் ஒரு பகுதியாக தோற்ற மானுடவியல் (Physical Anthropology) என்றொரு போலி அறிவியல்முறை வேகமாக வளர்ந்தது, தோற்ற மானுடவியலின் முக்கிய புள்ளியாக அலேஸ் ஹ்ரிலிக்கா (Ales Hrdlicka) விளங்கினார். இவர்களைப் பின்பற்றியவர்கள் நற்பிறப்புவாதிகள் (Eugenics) என்று அழைக்கலாம். ஐரோப்பாவில் நற்பிறப்புவாதம் செல்வாக்கு பெற்று விளங்கியது. இதன் விளக்கங்கள் போலி அறிவியல் வகையினத்தைச் சார்ந்தது என்று ஸ்பென்ஸர் நிறுவுகிறார். நற்பிறப்பு வாதம் கொண்டு வந்ததெல்லாம் பேரழிவுதான். இதற்கு உதாரணம் ஹிட்லர். நற்பிறப்புவாதத்தின் விளைவாக பாரபட்சமான குடியேற்றச் சட்டங்களை சில நாடுகள் நிறைவேற்றின.

மனிதர்களின் வித்தியாசங்களைப் பற்றிய ஆய்வின் வரலாறு

சரி, தோற்றத்திலும் தோற்றப் பண்புகளிலும் விதவிதமான மனிதர்களைப் பார்க்கிறோம். இவற்றை விளக்க போலி அறிவியல் தலைதூக்கியதும் அதன் பின்னணியில் சுரண்டல் அரசியல் இருந்ததையும் விட்டுவிட்டு உடற்கூறியல் அடிப்படையில் அறிவியல் பூர்வமாக எப்படி விளக்கப்போகிறோம் என்ற கேள்வி எழுகிறது. மனிதர்களுக்கிடையிலான தோற்ற வேற்றுமைகளை வகைப்படுத்தியது தோற்ற மானுடவியல் என்றால் அதற்கான உடற்கூறு அடிப்படையை ஆய்வு செய்யும் முதல் முயற்சியைத் துவங்கியவர் கார் லேண்ட்ஸ்டீனர் என்பவர். இவர் 1901ம் ஆண்டு ரத்த உறவு இல்லாத இரு நபர்களின் ரத்தத்தை எடுத்து ஒரு குடுவையில் போட்டு கலக்கியதில் இரண்டும் ஒன்று சேராமல் கட்டி கட்டியாக உறைந்து போனதைக் கண்டார். இதிலிருந்து ரத்தங்களை வகைப்படுத்தும் முயற்சி துவங்கியது. இதுதான் மரபணு வேற்றுமைகளை அடையாளம் காணத்துவங்கிய துவக்கப்புள்ளி எனலாம். 20ஆம் நூற்றாண்டின் மையப்பகுதிக்குள் நுண்ணுயிரியல் அடிப்படையில் மனித ரத்தம் நான்கு வகைகள் என்று அடையாளம் காணப்பட்டுவிட்டது. கூன், லின்னஸ், கால்டன் ஆகியோர் வரையறுத்த உப இனங்களின் ரத்த மாதிரிகளை பரிசோதித்தபோது அவையும் இதே நான்கு வகைகளில் வருவதை கண்டறிந்ததில் உபஇனக்கோட்பாடு நிராகரிக்கப்படுவதில் போய் முடிந்தது. இனவாதம் அறிவியல் ரீதியாக நிராகரிக்கப்பட்டுவிட்டது. மனிதர்களுக்குள் உள்ள வேறுபாடுகள் பற்றிய டார்வினின் மதிப்பீடு சரியென்று நிரூபணமானது,

இரத்தவகை மாறுபாடுகளில் மேலும் ஆராய்ச்சியைத் தொடர்ந்து இத்தாலிய மருத்துவர், அறிஞர் காவோலி ஸ்போர்ஸா (Lui Lucca Kavoli Sforza) இவற்றிற்கும் மனிதர்களுக்கிடையிலான உறவிற்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்விக்குள் சென்றார். இவர் புள்ளியல் கணித உத்திகளை கையாண்டு ஆய்வுகளைத் தொடர்ந்தார். எந்த அடிப்படையில் இந்த மாறுபாடுகள் தொடர்ச்சியாக நீடிக்கின்றன அல்லது அழிகின்றன என்பதே இவருடைய ஆய்வு. இயற்கைத் தெரிவுக்கும் மாறுபாடுகளுக்கும் உள்ள உறவு ஆய்வுக்குட்பட்டது. இதில் இரண்டு முகாம்கள் தோன்றின. ஒன்று மாறுபாடுகளுக்கும் இயற்கை தெரிவிற்கும் சம்பந்தமில்லை என்று வலியுறுத்தும் ஒரு குழு. சம்பந்தமுண்டு என்று கூறும் மற்றொரு குழு. முதலாவது குழுவில் முக்கியமானவர் ஜப்பானிய ஆய்வாளர் கிமூரா. அரிஸ்ட்டாட்டிலின் சீடராக வாழ்ந்தவர் 14ம் நூற்றாண்டில் வாழ்ந்த வில்லியம் ஓக்ஹாம். இவருடைய கோட்பாட்டின் படி தேவையில்லாமல் எந்த விஷயமும் நீடிக்க முடியாது. இதை ஓக்ஹாம் கத்தி என்பார்கள். மரபணு மாறுபாடுகள் சம்பந்தமான ஆய்வுகளில் ஓக்ஹாம் கத்தி பயன்படுத்தப்பட்டது. ஓக்ஹாம் கத்தியானது மாறுதல்கள் மிகக் குறுகிய பாதையில் பயணிக்கும் என்ற கோட்பாட்டிற்கு இட்டுச் சென்றது. இதைப் பயன்படுத்தி காவோலி மனித வேறுபாடுகளை 1964ம் ஆண்டு வகைப்படுத்தினார். மாறுபாடுகளை பின்னோக்கி ஆய்வு செய்து கொண்டே போனால் மனிதன் எங்கு தோன்றினான் என்ற கேள்விக்கான விடை கிடைத்துவிடும்.

நுண்ணுயிரியலில் ஏற்பட்ட முன்னேற்றங்களில் ஒன்று இரத்தத்தில் உள்ள ஹிமோகுளாபின் மூலக்கூறின் கட்டமைப்பு கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. இதை மற்ற மிருகங்களின் ரத்த ஹிமோகுளாபினை தொகுத்துப் பார்த்ததால் மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் தெரியவரும். ஜுக்கர்காண்டில், பாலிங் ஆகிய இரு விஞ்ஞானிகள் இந்த ஆய்வில் இறங்கினார்கள். கொரில்லாவிற்கும் மனிதனுக்கும் உள்ள ஹிமோகுலோபின் வேறுபாடுகள் என்பது இரண்டு இடங்களில்தான் தெரிகிறது. இதை வைத்து கொரில்லாவும் மனிதனும் எப்பொழுது கிளைபிரிந்தான் என்று கூறிவிட முடியும். அத்துடன் இயற்கைத் தெரிவானது விதவிதமான ஹிமோகுளோபின் கட்டமைப்பிற்கு எப்படி காரணமாகிறது என்பதையும் ஓரளவு கண்டறிந்தனர்.

ஏவாளைத் தேடி

நமது டிஎன்ஏவானது நீண்ட சுழலேணி. இது 23 ஜோடி மடிப்புகளாக மடித்து வைக்கப்பட்டிருக்கிறது என்று கொஞ்சம் கச்சாவான கருத்தாகச் சொல்லலாம். ஒவ்வொரு மடிப்பையும் நாம் குரோமோசோம் என்றழைக்கிறோம். மடிப்புகளைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் மலைப்பாதையை மலை உச்சியிலிருந்து பார்க்கும் போது கொண்டை ஊசி வளைவுகளில் சேரும் இரு பாதைகளைச் சேர்த்து பார்த்தால் கிடைக்கும் வடிவம் ஒரு ஜோடி குரோமோசோம். குழந்தை உருவாகும்போது தாயிடமுள்ள 23 ஜோடிகளில் 23 குரோமோசோம்களும் தந்தையின் 23 குரோமோசோம்களும் இணைந்து புதிய டிஎன்ஏ உருவாகிறது. எனவே தாயிடமே அல்லது தந்தையிடமே தங்கியுள்ள குரோமோசோம்களில் உள்ள பிறழ்வு அடைந்த மரபணுவின் ஆயுட்காலம் அத்துடன் முடிந்து போகிறது. எனினும் தாயின் அல்லது தந்தையின் எந்த 23 குரோமோசோம்கள் அடுத்த தலைமுறைக்குச் செல்கிறது என்பது புள்ளியில் ரீதியாகவே கணிக்க முடியும். அடுத்தது, குழந்தை உருவாகும் போது தாயின் கருமுட்டைக்குள் இருக்கும் செல்லும் (இதில் தாயின் 23 குரோமோசோம்கள் மட்டுமே உள்ளன) தந்தையின் விந்தணு செல்லும் (இதிலும் தந்தையின் 23 குரோமோசோம்கள் மட்டுமே உள்ளன) இணைந்து 23 ஜோடி குரோமோசோம்களைக் கொண்ட குழந்தையின் கரு உருவாகிறது. ஆனால் இக்கருவானது தாயின் கருமுட்டை செல்லுக்குள் உருவாவதால் அச்செல்கருவிற்கு வெளியே உள்ள அத்துனை வேதிப்பொருட்களும் தாயிடமிருந்தே குழந்தைக்கு வருகிறது. அதில் ஒன்று மிட்டோகாண்ட்ரியா என்ற கூட்டுப்பொருள். இதுவும் மரபணுச்செய்திகளை தாங்கி நிற்பவை எனினும் இவை குழந்தையின் உடற்கூறை தீர்மானிப்பதில் எந்தப் பங்கும் வகிக்காது. எனவே மிட்டோகாண்ட்ரியாவை வைத்து தாயைப் பற்றி ஓரளவு புரிந்து கொள்ள முடியும்.

1970களில் மனித மரபணுத் தொகுப்பை அடையாளம் காணும் வழிமுறையின் அடிப்படைகள் ஓரளவுக்கு கண்டறியப்பட்டது. இந்த கண்டுபிடிப்புக்காக வால்டர் கில்பர்ட், ஃபிரட் சாங்கர் ஆகியோருக்கு 1977ம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதைப் பயன்படுத்தி முதன் முதலில் மிட்டோகாண்ட்ரியா டிஎன்ஏஐ தொகுக்கும் பணி நடைபெற்றது. புதைபொருள் படிமங்களை எடுத்து அவற்றின் வயதைக் கண்டுபிடித்தபின் அதில் உள்ள டிஎன்ஏக்களை தொகுத்துப் பார்க்க முடிந்தது.

தாயின் மிட்டோகாண்டிரியாவில் ஏற்படும் பிழை மகனுக்கு அல்லது மகளுக்கு கடத்தப்படுகிறது. மகனுக்கு செல்லும் மிட்டோகாண்டிரியா அவனோடு நின்றுவிடுகிறது.ஆனால் மகளுக்குச் செல்லும் மிட்டோகாண்டிரியா அவளது மகளுக்கும் அவளிடமிருந்து அவளது மகளுக்கும்ஞ் என்று தலைமுறை தலைமுறையாகத் தொடர்கின்றது.இதேபோல் பின்னோக்கிச் சென்றால் பிழைகள் தோன்றிய தலைமுறையையும் அது வாழ்ந்த காலத்தையும் அவதானிக்கலாம். இப்படியே தேடிக் கொண்டே போனால் நாம் ஏவாளைக் கண்டுபிடித்துவிட முடியும். மனிதனின் மிட்டோகாண்ட்ரியா மாறுபாடுகளை ஆய்வு செய்தவர் ரிபேக்கா கான் என்பவர். இவரது ஆய்வு முடிவுகள் 1987ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இவரின் ஆய்வு முடிவுப்படி எல்லாருடைய மிட்டோகாண்டிரியா டிஎன்ஏவும் 2 லட்சம் வருடத்திற்கு முன்பு வாழ்ந்த ஒரு பெண்ணிடமிருந்து வந்திருக்கிறது என்பதுதான். ரிபேக்காவின் கணக்கீடுகள் மறுபரிசீலனைக்கு உட்பட்டு அந்த மூதாட்டி 1.5 லட்சம் ஆண்டுக்கு முன்பு என்று பிறகு திருத்தம் செய்யப்பட்டது. அவள் ஆப்பிரிக்காவில் வாழ்ந்ததற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. அவள் வாழ்ந்த இடத்தை ஈடன் தோட்டம் என்றும் அவளை ஏவாள் என்றும் நாம் அழைத்தால் அவளுடன் வாழ்ந்த மற்ற பெண்களின் வாரிசுகள் எங்கே என்ற கேள்வி எழுகிறது. இக்கேள்விக்கான விடையையும் ரிபேக்காவின் ஆய்வைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள இந்த நூலைப் படிக்க வேண்டும்.

மனிதப் பேரினம்

மனிதப் பேரினத்தில் (Genus : Homo) உள்ள நம்முடைய இனம் நவீன மனித இனம். இதை ஹேமோ சேப்பியன் என்று பெயரிட்டு அழைத்தவர் லின்னஸ். இதேபோல் இரண்டு கால்கள், நிமிர்ந்து நிற்கும் உடல் என்று இதர மனித இனங்களும் உண்டு என்பது 1856ம் ஆண்டு ஐரோப்பாவில் உள்ள நியாண்டார்தால் பள்ளத்தாக்கில் கண்டெடுக்கப்பட்ட மண்டை ஓடு கூறுகிறது. இந்த மண்டை ஓடு நியாண்டார்தால் மனிதன் என்று அழைக்கப்பட்டாலும் இதை மனிதப் பேரினத்திற்குள் உள்ள இன்னொரு மனித இனம்தான். இது ஹோமோ எரக்டஸ் என்ற இனத்தைச் சேர்ந்தது. அடுத்து யூகின் ட்யூபோயிஸ் என்ற டச்சு அறிவியலாளர். இவர் ஜாவாத் தீவில் கண்டுபிடித்த மண்டையோடும் மனித இனத்தைச் சேர்ந்தது. இந்த இனத்திற்கு பித்தேகேன்த்ரோப்பஸ் எரக்டஸ் என்று பெயரிட்டார். இதுவும் ஹேமோ எரக்டஸ் இனத்தைச் சேர்ந்ததுதான்.

சீனாவில் 1920களில் கண்டெடுக்கப்பட்ட மண்டை ஒடு சைனாத்ரோப்பஸ் என்னும் பீகிங் மனிதன் என்றழைக்கப்பட்டாலும் அதுவும் ஹேமோ எரக்டஸ் இனத்தைச் சேர்ந்ததுதான். அடுத்தது ஆப்பிரிக்காவில் டான்சானியாவில் கண்டெடுக்கப்பட்ட மண்டையோடு. இதை ஆஸட்ரலோபித்தேகஸ் என்று அழைத்தாலும் இதுவும் ஹேமோ எரக்டஸ் இனத்தைச் சேர்ந்ததுதான். இப்படி மனிதப் பேரினத்திற்குள் பல்வேறு மனித இனங்கள் இருப்பதை வைத்து சார்ல்டன் கூன் மனிதப் பேரினத்தின் மூதாதையர்கள் ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேறி உலகின் வெவ்வேறு பகுதிகளில் பரவி வெவ்வேறு திக்குகளிலும் ஆங்காங்கு தனித்தனியாக பரிணமித்ததன் பயனாகத் தோன்றியது ஹோமோ சேப்பியன் என்ற முடிவுக்கு வந்திருந்தார். ஒற்றைப் பரிணாமம் என்பதிலிருந்து பன்முகப்பரிணாமம் என்ற கோட்பாட்டிற்கு இந்த இதர மனித இனங்கள் வழிவகுத்தது.

ஆப்பிரிக்காவின் ஹோமோ எரக்டஸ்க்கும் ஐரோப்பாவின் ஹோமோ எரக்டஸ்க்கும் 2 மில்லியன் ஆண்டுகள் வித்தியாசம். ஆக நவீன மனிதனின் தோற்றம் ஆப்பிரிக்கா என்று எப்படிக் கூறமுடியும் என்ற கேள்வி எழுகிறது. தொல்லியல், மானுடவியலால் தீர்க்க முடியாத பிரச்சனை இது. இதற்கு தீர்வு கண்டது மரபணுவியல். மிட்டோகான்டிரியா ஆய்வுகள் தெளிவுபடுத்துவது என்னவென்றால் பிரேஸில் பழங்குடியினராக இருந்தாலும் சரி, தாய்லாந்து பழங்குடியினராக இருந்தாலும் சரி ஐரோப்பியப் பழங்குடியினராக இருந்தாலும் சரி இவர்கள் எல்லாருக்கும் ஒரே தாய் 1.5 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பெண் என்பது தான்.

ஆதாமைத் தேடி

மிட்டோகாண்டிரியா டிஎன்ஏவில் உள்ள வேறுபாடுகளை அல்லது இரு வேறுபாடுகளுக்கு முந்தைய நிலையின் பிளவு என்று மைட்டோகாண்ட்டிரியா வேறுபாடுகளை ஒரு மரமாக சித்தரித்தால் ஒவ்வொரு கிளையின் உச்சியிலும் ஒரு குழு இருக்கும்.அதன் அடிவேர் ஒரே ஒரு பெண்ணுடையது என்று தெரிந்தது. அப்பெண்ணை ஏவாள் என்றோம். எனினும் மனித இனத்தின் பயணத்தைத் தெரிந்து கொள்ள மிட்டோகாண்டிரியா டிஎன்ஏயில் உள்ள வேறுபாடுகள் மட்டும் போதாது. ஆகவே செல்கரு டிஎன்ஏயில் உள்ள வேறுபாடுகளில் கவனம் செலுத்த வேண்டும். செல்கரு டிஎன்ஏ சுழலேணி வடிவத்தில் உள்ளது என்று கண்டறியப்பட்டிருக்கிறது. இதில் 300 கோடி ஏணிப்படிகள் உள்ளன. கார (Base)இணைவுகளே அந்த ஏணிப்படிகள். சரி 300 கோடி படிகளைஎவ்வாறு வரிசைப் படுத்துவது.இதில் குறிப்பிட்ட சில படிகளே மரபுச் செய்திகளை தாங்கி நிற்பவை. மற்றவை இண்ட்ரான்கள் எனப்படும் மரபணு செய்தியில்லா படிகள். இவற்றில் ஏற்படும் பிறழ்வுகளே மார்க்கர்கள் என அழைக்கப்படுகிறது. இவற்றை எவ்வாறு அடையாளம் காணுவது. இதற்கான முயற்சியை நூலாசிரியர் விளக்குகிறார். மரபணுவைத் தொகுக்கும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை நாம் அறிந்து கொள்ள முடியும். Gel method, HPLC, dHPLC என்று தொழில்நுட்பம் வளர்ந்ததை நாம் அறியலாம்.

செல்கரு டிஎன்ஏ தாய் தந்தையரிடமிருந்து பெறப்படுவதால் இதில் உள்ள மாறுபாடுகள் அடுத்தடுத்த தலைமுறைகளில் மறைந்துவிடும். இதைப் பின்தொடர்ந்து செல்வது பயனில்லாத வேலை. எனினும் செல்கரு டிஎன்ஏயில் உள்ள 23வது ஜோடி குரோமோசோம் நமது பயணத்தை தொடருவதற்கு வழி செய்கிறது. ஆம் அந்த குரோமோசோம் ஜோடிதான் ஒரு மனிதனுடைய பாலினத்தைத் தீர்மானிப்பது. அந்த ஜோடியில் ஒன்று X ஆகவும் மற்றொன்று X ஆகவும் இருந்தால் அது பெண் என்றும் ஒன்று X ஆகவும் மற்றொன்று Y ஆகவும் இருந்தால் அது ஆண் என்றும் தீர்மானிக்கப்படுகிறது. எனவே Y குரேமோசோம் ஆணிடமிருந்துதான் வரமுடியும். Y குரேமோசோம்களில் 1500 மரபணுக்கள் மட்டுமே செயலூக்கம் உள்ளவை இவற்றில் 21 மரபணுக்களே ஆண்தன்மையை தீர்மானிப்பவை, எஞ்சியுள்ள மரபணுக்கள் ஆணின் இதர அம்சங்களைத் தீர்மானிக்கிறது. 1500 போக மற்றவை எல்லாம் இன்ட்ரான்கள். இவை ஜங்க் என்று அழைக்கப்பட்டாலும் இவை நமது ஆண்வழி வரலாற்றை தாங்கி நிற்பவை. ஆகவே Y குரேமோசோம்களில் உள்ள பிழைகள் அல்லது மார்க்கர்களை பின்தொடர்ந்து சென்றால் மூதாதையரை அடையாளம் காணலாம்.

ஒருவருக்கு பெற்றோர் இருவர். தாத்தா பாட்டிகள் 4. முப்பாட்டனார்கள் 8. இப்படியே 20 தலைமுறைக்கு முன்னாள் வாழ்ந்த முன்னோர்கள் 2^20 = 1 டிரில்லியன் (1,000,000,000). தலைமுறை இடைவெளி 25 ஆண்டுகள் என்று கணக்கிட்டால் 500 ஆண்டுகளுக்கு முன்பு இத்தனை பேர் இருந்திருப்பார்களா என்றால் இல்லை என்றுதான் கூறவேண்டும். ஆக மரபணு வேறுபாடுகள் நாம் நினைப்பதுபோல் தலைமுறைக்கு தலைமுறை விரிவாக பரவியிருக்க வாய்ப்பில்லை. ஒரே குடும்பத்திற்குள் திருமண உறவு என்பதை கணக்கிட்டால் இந்த எண் சுருங்கிவிடும். இதன்விளைவாக நாம் செல்கருமரபணுக்களில் உள்ள மாறுபாடுகளை வைத்து பின்னோக்கிச் செல்வதில் பிரச்சனைகள் உள்ளது. அடுத்தது, திருமண உறவுகளைப் பொறுத்தவரை, பொதுவாக மனிதன் தன் துணையை அருகாமைக்குள் தேடிக் கொள்கிறான். இதுவும் மரபணுக்கள் கலப்பதற்கு வழிவகுப்பதால் நாம் பின்னோக்கிச் சென்று ஆய்வதில் கூட்டம் கூட்டமாகவே அடையாளம் காண முடியும். மிட்டோக்காண்டிரியா டிஎன்ஏயில் உள்ள வேறுபாடுகளை பின்தொடர்ந்து சென்றபொழுது மூல மிட்டோகாண்டிரியா டிஎன்ஏஐ நாம் ஆப்பிரிக்காவில் 200000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பெண்ணுடையது என்று பார்தோமல்லவா அதேபோல் Y குரோமோசோம் மார்க்கர்களையும் நாம் பின்தொடர்ந்து சென்றால் அதுவும் ஆப்பிரிக்காவில் போய் முடிகிறது. இந்தக் கண்டுபிடிப்பை நிகழ்த்தியவர்கள் இந்த நூலாசிரியர் உள்ளிட்ட 19பேர். இவர்கள் கண்டுபிடிப்பானது நேச்சர் ஜெனிடிக்ஸ் இதழில் 2000ம் ஆண்டு வெளியானது. இந்த ஆண் 59000 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் வாழ்ந்தவர் என்ற முடிவுக்கு வந்தனர். இவரை நாம் ஆதாம் என்றால் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் 80000 ஆண்டுகள் வித்தியாசம் வருகிறது. இதை எப்படிப் புரிந்து கொள்வது என்பதற்கு இந்நூலை வாசிக்க வேண்டும்.

கடற்கரை நெடும்பயணம்

மனிதர்களின் மரபணுத் தொகுத்தலும் அவற்றில் உள்ள வேறுபாடுகள் சம்பந்தமான ஆய்வுகளும். இன்றைய நவீன மனிதன் எங்கு தோன்றினான் என்ற கேள்விக்கு சந்தேகத்துக்கிடமின்றி பதிலைத் தந்துவிட்டது. ஆம் இன்றைய மனிதர்கள் அனைவரும் ஒருதாய்ப் பிள்ளைகள் என்பதும் இவர்கள் அனைவரும் ஆப்பிரிக்க மூதாதையர்களின் வழித்தோன்றல்களே என்பதும் தெளிவாகி விட்டது. அப்படியென்றால் உலகின் மூலை முடுக்குகளுக்கு எப்படி இந்த மனிதர்கள் பயணித்தார்கள். குறிப்பாக தனித்தனியாய் உள்ள தீவுகளுக்கு இவர்கள் எப்போது போய்ச் சேர்ந்தார்கள், எப்படிப் போய் சேர்ந்தார்கள் என்ற கேள்வி எழுகிறது. இதுவரை நாம் பார்த்ததை புத்தகத்தின் ஒரு பாகம் விளக்குகிறது என்றால் மற்ற இரண்டு பாகங்களும் இக்கேள்விக்கான விடையையும் அவற்றை விளக்குவதிலும் கவனம் செலுத்துகிறது. இவற்றை விளக்குவதற்கு வெறும் மரபணுவியல் ஞானம் மற்றும் போதாது. அத்துடன் மானுடவியல், தொல்லியல், புவியியல், நிலவியல், புவியின் பருவநிலைகளின் வரலாறு, மொழியியல், இயல்பியல், தடயங்களின் காலத்தை ஆய்வு செய்யும் தொழில்நுட்பம் போன்ற அனைத்து அம்சங்களையும் கற்றுத் தேர்ந்தால்தான் மனிதப்பரவலை விளக்க முடியும்.

ஆப்பிரிக்காவின் மத்திய பகுதியானது அடர்த்தியான மழைக்காடுகளையும் அதே நேரத்தில் மரங்களல்லாத புல்வெளிகள் நிரம்பிய சவென்னா வெளிகளையும் கொண்டது. மழைக்காடுகளில் ஏராளமான பாலூட்டி விலங்கினங்கள் உருவாயின. சவென்னா வெளிகள் இருகால் உயிரினங்களுக்கே ஏற்றது. இங்கேதான் விதவிதமான மனித இனங்களின் மூதாதை மந்தியினம் பரிணமித்திருக்கிறது. ஆப்பிரிக்காவின் நிலப்பகுதிகளில் வாழ்ந்த மந்திகள் சிம்பன்ஸி, கொரில்லா ஆகியவையாக பரிணமித்தன. இன்னொரு மந்தியினம் பல்வேறு மனித இனங்களாக 50 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பரிணமித்தன. ஆப்பிரிக்காவின் நிலவியல் வரலாற்றையும், பூகோள விபரங்களையும் ஆசிரியர் இங்கே தொகுத்தளிக்கிறார்.

ஆப்பிரிக்காவின் மத்திய கிழக்கு பகுதியான ரிஃப்ட் பள்ளத்தாக்கில் பரிணமித்த இன்றைய நவீன மனிதன், கடைசி பனி ஊழிக் காலத்தில் அங்கு வாழமுடியாத அளவுக்கு வறட்சி நிலவியதால் கிழக்கு நோக்கி பயணிக்கத் துவங்கினான். பண்டை பருவநிலை­யியல் (Palaeoclimatology) ஆய்வுகள் ஆப்பிரிக்காவில் நிலவிய பருவநிலைகளையும் அவற்றில் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றிய அறிதலை வழங்குகிறது. தொடர்ச்சியாக நிலவிய வறட்சியானது அங்கு வாழ்ந்த உயிரினங்களை கடற்கரையை நோக்கித் தள்ளியது. இப்படித்தான் இன்றைய மனிதன், ஆப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரைக்கு வந்து சேர்ந்தான். கிழக்கு கடற்கரையை அடைந்ததும் அங்கிருந்து கடற்கரை ஓரமாகப் பயணம் துவங்கியது. வடக்கு கடற்கரையில் பயணித்த மனிதர்கள் அரேபியாவை வந்தடைகிறார்கள். அங்கிருந்து கடற்கரையோரப் பயணம் துவங்குகிறது அரேபிய தீபகற்ப கடற்கரைகளை தாண்டி ஈராக் கடற்கரையையும் அதையொட்டிய பாகிஸ்தான் இந்திய மேற்கு கடற்கரை என்று பயணம் நீடிக்கிறது. இந்திய கிழக்குகடற்கரையில் வந்தவர்கள் தொடர்ந்த கடற்கரைப் பயணமானது வங்காளம் பர்மா என்று தென்கிழக்கு ஆசியநாடுகளின் கடல்கரை வழியாகத் தொடர்கிறது. அது ஆஸ்திரேலியாவில் போய் முடிகிறது. கடற்கரைகளின் ஒவ்வாரு புள்ளியிலும் தங்கிய மனிதர்கள் பரவி நிலத்தின் உட்பகுதிக்கு பரவுகிறார்கள். இதை மனிதப்பரவலின் முதல் அலை என்கிறார். இந்த முதல் அலையை வெவ்வேறு இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட படிமங்கள் இந்த மனிதர்களின் எச்சங்கள் ஆகியவற்றின் டிஎன்ஏக்களில் உள்ள மார்க்கர்களை ஆய்வு செய்ததன் மூலம் வந்தடைகின்றனர்.

ஆய்வுகள் பற்றிய தொழில்நுட்பங்களை இந்நூலில் தொட்டுச் செல்கிறார். தொன்மங்களின் வயதைக் கண்டறிய கார்பன் டேட்டிங் தொழில் நுட்பம், தெர்மோலுமினிஸன்ஸ், ஆப்டிக்கலி ஸ்டிமுலேட்டட் லுமினஸன்ஸ், எலக்ட்ரான் ஸ்பின் ரெஸனன்ஸ் ஆகிய தொழில்நுட்பங்களின் அடிப்படைகளையும் விளக்குகிறார். Y குரேமோசோம் மார்க்கர்களின் வரலாற்றைத் தேடினால் 1,50,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த மார்க்கருக்குப் பிறகு ஆப்பிரிக்காவிற்கு வெளியே கிடைக்கும் மார்க்கர் 60000 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததுதான். இந்த மார்க்கரின் அடிப்புள்ளியை M168 என்று அழைக்கிறார்கள். 1,50,000 - 60,000 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கிடைத்த மார்க்கர்கள் எல்லாம் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தது. எனவே ஆப்பிரிக்கர் அல்லாத மக்களின் ஆப்பிரிக்க மூதாதை M168. இவருடைய மூதாதையர்கள் ஆப்பிரிக்கர்கள். முதல் M168 மார்க்கர் உள்ளவர் 70,000 - 31,000 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்திருக்கலாம். இதே காலகட்டத்தில் உள்ள மிட்டோகாண்டிரியா மார்க்கரை நாம் L3 என்று அடையாளம் காணப்படுகிறது. ஆக, ஆப்பிரிக்கர் அல்லாதவர்களில் ஆகப் பெரும்பாலான ஆணிடம் M168 Y குரோமோசாம் மார்க்கரும் L3 மிட்டோகாண்டிரியா மார்க்கரும் இருக்கிறது. இவர்களில் வடகிழக்காப்பிரிக்காவிலும் காணலாம்.

தாவிப்பாய்ச்சல் முன்னேற்றம்

ஆப்பிரிக்க மழைக்காடுகள், மழை குறைந்ததால் மரங்கள் போய் புதர் மண்டிய சவென்னா வெளிகள், இன்னும் மழை குறைய அது ஸ்டெப்பி வெளிகள், இன்னும் குறைந்தால் அது பாலைவனம் என்ற நிலையில் மழைக்காட்டு மந்திகள், இரண்டுகால் உயிரினங்கள், அதிலிருந்து தோன்றிய பல்வேறு மனித இனங்கள் அதில் உருவான இன்றைய நவீன மனிதன். இதில் மூளை வளர்ச்சியும் படிப்படியாக மேம்பட்டு, சூழலுக்கேற்ப தகவமைக்கும் தன்மை, தொடர்பாடலுக்கு முக்கியமான பேச்சு, மொழி என்று தனிப்பாதையில் பயணித்த நவீன மனிதன் உலகெங்கும் பரவியதில் அவன் கால்பதித்து வாழாத பூமிப்பகுதி இல்லையென்ற நிலை உருவானது.

ஒவ்வொரு கட்ட இடப் பெயர்வுக்கும் அதற்கே உரித்தான தட்பவெப்ப பருவ நிலை காரணங்கள், எல்லாவற்றிலும் வாழ்வதற்கு தகவமைக்கும் ஆற்றல், இவை பற்றிய விரிவான ஆய்வுகளுக்கு ஆசிரியர் சில பக்கங்களை ஒதுக்கியிருக்கிறார். இத்துடன் இன்னொரு கோட்பாடும் ஹென்றி ஹார்பெண்டிங்கால் முன்வைக்கப்பட்டிருக்கிறது. ஆம் ஒன்று இரண்டாவது இரண்டு நான்காவது, நான்கு எட்டாவது என்று போய்க்கொண்டே இருந்தால் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு இந்த எண்ணிக்கை எப்படி கூடியிருக்கும் என்று அனுமானிப்பதே சிரமம். இதுபோல் நவீன மனிதனின் மக்கட் தொகைப் பெருக்கமும் அவனை ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறச் செய்ததில் முக்கிய பங்காற்றியிருக்க வேண்டும். இதில் மூன்று முக்கிய காரணிகள் உள்ளன என்று ரிச்சர்ட் கிளைன் கூறுகிறார். ஒன்று கருவிகளை உருவாக்கும் திறன், இரண்டு தொடர்பாடலுக்கு முக்கியமான மொழி, மூன்று உணவு வளங்களை சிக்கனமாகப் பயன்படுத்தும் ஆற்றல். இந்த மூன்றின் விளைவாக உருவானது பண்பாடு. மனிதப் பேரினத்தில் உள்ள அத்தனை மனித இனங்களிலும் பண்பாட்டின் தோற்றக் கூறுகளைக் காணலாம். நமது நெருங்கிய சகோதரரான நியாண்டார் மனிதர்களிடம் பண்பாட்டுக் கூறுகளை அடையாளம் காண முடிந்திருக்கிறது.

நவீன மனிதனின் உலகம் முழுவதும் பரவியதற்கான புறச்சூழல்களிலும் கவனம் செலுத்துகிறார். வெறும் டிஎன்ஏக்களையும், மார்க்கர்களையும் வைத்து வரலாற்றை கட்டமைக்க விரும்பவில்லை. மனிதன் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பரவுதற்கு வேண்டிய அவசியமான காரணிகள் என்ன? பரவிய இடத்தில் என்ன சூழ்நிலை நிலவியது, அதற்கேற்றாற்போல் எப்படி தகவமைத்துக் கொண்டான் என்பதையும் ஆசிரியர் சுட்டிக்காட்டுகிறார். வெப்ப மண்டலம், மிதவெப்ப மண்டலம், பூமியில் ஏற்படும் பருவ மாற்றங்கள் ஆகிய மூன்றும் இதற்கு பங்களித்திருக்கின்றன. மிதவெப்ப மண்டலத்தில் வாழும் விலங்குகள் உருவத்தில் பெரியவையாகவும் கடுங்குளிரை எதிர்கொள்ள தோதான உடலமைப்பும் கொழுப்பைச் சேமித்து வைத்து உணவுகிடைக்காத குளிர்காலங்களில் அவற்றை செலவழித்து பாதுகாத்துக் கொள்வதும் நடக்கிறது. வெப்பமண்டலப் பகுதிகளில் உள்ள விலங்குகளில் கொழுப்பு சேமிக்கும் உடலமைப்பு இல்லாத வகையினங்கள் ஏராளம். உருவத்தில் சிறியவையாகவும் இருக்கின்றன. 80000 வருடங்களுக்கு முன்பு பனிக்காலத்தின் உச்சி இருந்தது. 110000 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோஷ்யா பகுதிக்குள் புகுந்த மனிதன் தாக்குப்பிடித்து வாழ முடியவில்லை. மடிந்திருக்க வேண்டும் அல்லது ஆப்பிரிக்காவிற்கு திரும்பியிருக்க வேண்டும். இதற்குப் பிறகு 65000 ஆண்டுகள் கழித்து அவன் இடப்பெயர்ச்சிக்குச் சாதகமான மூன்று காரணிகள் வளர்ச்சியடைந்தன.

ஆப்பிரிக்காவை விட்டு இடம் பெயர்ந்தவர்களின் Y குரோமோசோமில் ஏற்பட்ட முதல் பிறழ்வு M168. இது 70000 வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்தது. இதற்கு அடுத்த பிறழ்வு M130, M89, முதலாவது இந்தியா முதல் ஆஸ்திரேலியா வரை காணப்படுகிறது, இரண்டாவது யுரேஷியாவில் நிகழ்ந்தது. இவை 40000 வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்தது. மார்க்கர் M168 உள்ளவர்கள் ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறிவிட்டார்கள். இவர்களில் ஒரு பிரிவினர் இந்தியா வழி ஆஸ்திரேலியா நோக்கி கடற்கரைப் பயணம் மேற்கொண்டனர் இவர்களிடம் மார்க்கர் M130 உள்ளது. இன்னொரு பிரிவினர் வடக்கு நோக்கி நகர்ந்து ஐரோப்பாவையும் ஆசியாவையும் பிரிக்கும் லெவெண்டா பகுதிக்கு வந்து சேர்ந்தனர். இவர்களிடம் M89 பரவலாக காணப்படுகிறது. இவர்கள் கிழக்கே பயணித்து ஆசியா முழுவதும் பரவினர். மேற்கே பயணித்தவர்கள் ஐரோப்பா முழுவதும் பரவினர். M89 வழித் தோன்றல்களிடம் தோன்றியது M9. இது 30000 வருடங்களுக்கு முன்பு தோன்றியது. இது தோன்றி­யிருக்க கூடிய இடம் ஈரான். M9லிருந்து M45, M175, வி20 ஆகியவை தோன்றியிருக்கின்றன. இவையெல்லாம் சென்னை பெருநகரப் பேருந்துகளின் வழித்தடங்கள் போல் தோன்றுகிறது அல்லவா. ஆம் இதற்கும் இதைத்தாங்கி நின்று இடம் பெயர்ந்த கூட்டத்திற்கும் பொருந்தக்கூடிய வழித்தடங்கள்தான். இப்படியாக மரபணுப்பிறழ்வுகளை குறிப்பாக Y குரோமோசோமில் இருக்கும் மார்க்கர்களை வைத்து அதை தாங்கிநிற்கும் மக்கள் கூட்டம் எங்கு பரவலாக காணப்படுகிறது. ஒவ்வொரு மார்க்கரும் எந்த காலகட்டத்தில் தோன்றி­யிருக்கக் கூடும் என்ற வாதங்களை அறிவியல் பூர்வமாக முன்வைக்கிறார்.

சீனப் பகுதியை எடுத்துக் கொண்டால் ஜௌகாவ்டியன் என்ற இடத்தில் கிடைத்த பண்டைய மனிதனின் தடயங்களை ஆய்வு செய்கையில் எதுவும் 1 லட்சம் வருடத்திற்கு பிந்தையது அல்ல என்று தெரிகிறது. நவீன மனிதனின் தடயம் 40000 வருடங்களுக்கு முன்பிருந்து துவங்குகிறது. இந்த இடைவெளிகளில் என்ன நிகழ்ந்தது என்று தெரியவில்லை எனினும் 2,50,000 க்கும் 1,50,000க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் நிலவிய கடும் பனிக்காலம் பண்டைய மனிதனை அதாவது ஹோமோ எரக்டஸ் இனத்தைச் சேர்ந்த பீகிங் மனிதனை அழித்திருக்க வேண்டும். எனினும் பீகிங் மனிதன் பரிணாம வளர்ச்சியடைந்து நவீன மனிதன் ஆப்பிரிக்காவிற்கு வெளியே சுயேட்சையாக தோன்றி­யிருக்க கூடும் என்ற கோட்பாடு உலா வருகிறது. ஆனால் சீனப்பகுதியில் வாழ்பவர்களின் டிஎன்ஏ பரிசோதனையில் அனைவருக்கும் 50,000 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்த ஆப்பிரிக்கப் பிறழ்வின் மூலம் அனைவருக்கும் ஆப்பிரிக்கத் தோற்றம் இருப்பதை உறுதி செய்கிறது. இதேபோல் மைட்டோகாண்ட்ரியா ஆய்வுகளும் ஆப்பிரிக்கத் தோற்றத்தையே உறுதி செய்கிறது.

நியாண்டார்தால்

நியாண்டார்தால் பள்ளத்தாக்கில் கண்டெடுக்கப்பட்ட மண்டையோட்டின் மூலமாக தீர்மானிக்கப்பட்ட நியாண்டார்தால் மனிதனுக்கும் ஐரோப்பாவில் உள்ள தற்கால நவீன மனிதனுக்கும் என்ன உறவு? ஒருவேளை ஐரோப்பா மனிதன் நியாண்டார்தால் மனிதனின் பரிணாம வளர்ச்சியா? போன்ற கேள்விகள் எழுந்தன. இதற்கு விடை கிடைக்க வேண்டுமானால் நியாண்டார்தால் மனிதனின் டிஎன்ஏஐ தொகுக்க வேண்டும். இது சவால் நிறைந்த பணி. இதை வெற்றிகரமான செய்து முடித்தவர் ம்யூனிக் பல்கலைகழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஸ்வெண்டே பாபோ. இவருக்கு 2022ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு கிடைத்திருக்கிறது. பேராசிரியரின் இந்தப் பணியானது ஐரோப்பிய மனிதன் நியாண்டார்தால் மனிதனின் பரிணாமமே என்ற கோட்பாடு தவறு என்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

மேற்கு ஐரோப்பிய குகை ஓவியங்கள் இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் வெளிச்சத்துக்கு வந்தன. குறிப்பாக, ஃபிரான்ஸின் கேப்ரேரெட்ஸில் உள்ள பெக் மெர்லி குகை ஓவியங்கள், ஃபிரான்ஸின் சுவட்டே குகை ஓவியங்கள், இத்தாலியின் ஃப்யூமேன் குகை ஓவியங்கள் மற்றும் இதர குகை ஓவியங்கள் காட்டுவது என்னவென்றால் இவையெல்லாம் 35,000 ஆண்டுகளுக்கு முற்பட்டவைதான். இந்த ஓவியங்கள் படிப்படியாக வந்தவையல்ல. திடீரென்று தோன்றியவை. இவற்றை வரைந்த மனிதர்கள் எப்படி 35,000 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வந்தனர் என்ற கேள்வி எழுகிறது. நூறாண்டுகளாக தொக்கி நின்ற இந்தக் கேள்விக்கு மரபணுவியல் விடை பகர்கிறது. மத்திய கிழக்கு ஆப்பிரிக்காவிலிருந்து கிளம்பி வந்து மேற்கு ஆசியாவிற்கு வந்த மனிதர்களிடம் M89 மார்க்கர் இருக்கிறது என்று பார்த்தோம். இது 45,000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய மார்க்கர்கள். அடுத்த பத்தாண்டுகளில் மேற்கு ஐரோப்பியாவில் தோன்றிய மார்க்கர் M173, மனித மரபணுக்களில் 300 கோடி படிகள் இருக்கின்றன என்று பார்தோம்.ஒவ்வொரு படியும் இரட்டை எழுத்துக்களால் ஆனது. இந்த இரட்டை எழுத்துக்கள் தொடர்ச்சியாக மீண்டும் மிண்டும் அருகருகில் அமையும் பகுதிகளை மைக்ரோ சேட்டிலைட் என்று கூறுவார்கள். மரபணுக்களை பிரதி எடுக்கும் போது ஏற்படும் பிழைகளில் மைக்ரோ சேட்டிலைட் பகுதிகளில் பிழை ஏற்பட அதிக வாய்ப்புண்டு. மரபணுப் பிரதியெடுப்பதில் ஒவ்வொரு தலைமுறைக்கும் 30லிருந்து 40 பிழைகள் ஏற்பட வாய்ப்புண்டு. ஆனால் மைக்ரோசேட்டிலைட் பகுதிகளில் ஏற்படும் பிழைகள், இதைவிட ஒரு லட்சம் பங்கு அதிக வாய்ப்புள்ளவை. இந்த இரண்டு நிகழ்தகவு இடைவெளியை வைத்து புதிய பிழைகளின் ஆண்டுகளை கணித்துவிடலாம். இப்படித்தான் M173 மார்க்கர் 30,000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியவை என்று கணக்கிடப்பட்டது. இது மேற்கு ஐரோப்பியர்களில் 90 சதவீதத்தினருக்கு இருக்கிறது என்பதை வைத்து மேற்கு ஐரோப்பியர்கள் நியாண்டார்தால் மனிதர்களிடம் இருந்து பரிணமித்தவர்கள் இல்லை என்பது உறுதியாகிறது.

மனிதப் பரவலும் பண்பாடும்

பூமியின் இண்டு இடுக்குகளுக்குள் நவீன மனிதன் பரவியதில் பருவநிலை மாற்றங்கள் மட்டுமல்ல பண்பாட்டு வளர்ச்சியும் ஒரு முக்கியமான அங்கம் என்கிறார் நூலாசிரியர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்ட பாலினீஷியாவின் (மத்திய தெற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவுகள் பாலினீஷியா) ஒவ்வொரு தீவிலும் மனிதன். 1778ல் இதிலுள்ள ஒரு தீவிற்கு சென்ற கேப்டன் குக் அங்கு வாழும் மனிதர்கள் இன்னும் கற்காலத்தில் இருப்பதை பார்க்கிறார். கற்கால மனிதன் எப்படி கடலைக் கடந்து தீவுக்கு வந்தான்? இது எப்படி சாத்தியமாயிற்று. இதை விளக்குவதே நூலின் இப்பகுதி. விவசாயம் கண்டுபிடிக்கப்பட்டது பண்பாட்டு வளர்ச்சியில் ஒரு முக்கியத் திருப்புமுனை என்கிறார். 50,000 ஆண்டுகளுக்கு முன்பு வேட்டையாடி வாழ்ந்த மனிதன் சில ஆயிரங்களில் இருந்தான் 10,000 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயம் தோன்றிய கட்டத்தில் உலக மக்கள் தொகை 1 கோடியாக இருந்தது, தொழிற்புரட்சி துவங்கிய 1750ல் 50கோடியானது இன்று 900 கோடி. இந்த அதிவேக மக்கட்தொகை பெருக்கம் மனிதர்களை வெவ்வேறு இடம் தேடி நகரச் செய்ததில் முக்கிய பங்காற்றியது. இதற்காக அறிவியல் ஆதாரத்தை நடைபெற்ற மரபணுவியல் ஆய்வுகள் முடிவுகளிலிருந்து தொகுத்தளிக்கிறார். சீனாவின்

மஞ்சள் ஆற்று நதிக்கரை நாகரீகத்தில் உருவான அரிசி 5000 ஆண்டுகளில் ஆசியா முழுவதும் பரவியது. அரிசி உணவுக்கும் மக்கட்தொகை பெருக்கத்தையும் Y குரோமோசோம் மார்க்கர்களுக்களுக்கும் உள்ள இணைப்பை நாம் இந்நூலில் காணலாம். பண்பாட்டு வளர்ச்சியில் மக்கட்தொகை பெருக்கம் ஏற்பட்டது ஆனால் சராசரி ஆயுட்காலம் விழ்ந்தது. இதையும் இந்நூலில் விளக்குகிறார். பண்பாட்டு வளர்ச்சியில் உணவு உற்பத்திக்கு அடுத்தபடியாக மொழிகளின் தோற்றமும் வளர்ச்சியும் வருபவை. இவையும் மனிதப் பரவலுக்கு ஒரு காரணியாக அமைந்திருக்கிறது.

ஆக மார்க்கர் களையும் ஹாப்லோ குரூப்களையும் வைத்து பார்த்தால் மனிதப் பரவல் பற்றிய கீழ்க்காணும் சித்திரம் நமக்கு கிடைக்கிறது. தாய்வழிக் கொடி ஆய்வுகள் மைட்டோ காண்டிரியாவை வைத்தும் தந்தைவழிக் கொடியை Y குரோமோ சோமை வைத்தும் அடையாளப்படுத்தப்படுகிறது. மைட்டோ காண்டிரியா மாறுதல்களை நாம் ஹாப்லோகுரூப்களாக அடையாளம் காண்கிறோம். தந்தைவழிக் கொடி மாறுதல்களை மார்க்கர்களாக அடையாளம் காண்கிறோம். அடியில் உள்ள M168 ஆப்பிரிக்காவில் 60,000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியிருக்கிறது என்பதை வைத்து இலைகள் ஒவ்வொன்றும் உலகின் ஒவ்வொரு மூலையிலும் இன்றைக்கும் இருக்கிறது என்பதை வைத்து நமது பரவல் வரலாற்றை அறிய முடிகிறது. M168க்கு கீழே L இருக்கிறது இது 1,50,000 வருடத்திற்கு முந்தையது.early man migration

மேலே உள்ள படத்தில் மனிதப் பரவல் தடத்தை Y குரோமோசோம் மார்க்கர்களை வைத்து குறிக்கப்பட்டிருக்கிறது.y chromosome markers

HumanMigrationMap

மேலே உள்ள படத்தில் மனிதப் பரவல் தடத்தை மிட்டோ காண்ட்ரியா மார்க்கர்களை வைத்து குறிக்கப்பட்டிருக்கிறது

ஏற்கனவே குறிப்பிட்டபடி இப்புத்தகம் 2003ல் வெளிவந்தாலும், மீண்டும் மீண்டும் வாசிக்கப்பட வேண்டிய புத்தகம் இது. ஆங்கிலத்தில் 237 பக்கங்களை கொண்டிருக்கிறது, ஒன்பது அத்தியாயங்களைக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு அத்தியாயமும் கிட்டத்தட்ட தனித்தனியாக ஒவ்வொரு அறிவியல் புலத்தில் நகர்ந்து செல்கிறது. வரலாறு, அறிவியல், பண்பாடு அகியவற்றுக்குள்ள நெருக்கமான இணைப்பை இப்புத்தகம் வாசிப்பவர்கள் புரிந்து கொள்ளலாம். அத்துடன் சிக்கலான அறிவியல் கோட்பாடுகளையும் ஆய்வு முறைகளையும் எளிமையாகவும் இந்த நூல் விளக்குகிறது. அனைவரும் வாசிக்க வேண்டிய புத்தகம் இது. என்.சிபி.ஹெச் போன்ற நிறுவனம் இதுபோன்ற நூல்களைத் தமிழில் கொண்டு வந்தால் பரந்து பட்ட வாசகர்களுக்கு அது உதவும்..

- எஸ்.விஜயன், உயர் தொழில் நுட்ப வல்லுநர், தமிழ்நாடு அறிவியல் இயக்க செயல்பாட்டாளர், அரசியல்- அறிவியல்- பொருளாதார- சமூக கட்டுரைகள், நூல்களின் ஆசிரியர்

Pin It