தோலில் ஏற்படும் புற்றுநோய்க்கு காரணமாக இருக்கும் மெலனோமா (melanoma) செல்களை குணப்படுத்த உதவும் புதிய சிகிச்சை முறையை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதில் பக்கவிளைவுகள் குறைவாக இருக்கும் என்றாலும், இந்த நோயை முற்றிலும் குணப்படுத்த முடியாது என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். தோலில் நிறமிகளை உருவாக்கும் மெலனாசைட்ஸ் (melanocytes) என்ற செல்களால் ஏற்படும் இந்த வகை புற்றுநோய் மெலிக்னெண்ட் மெலனோமா (malignant melanoma) என்றும் அழைக்கப்படுகிறது.

சூரியக்குளியல்

1990களில் மக்கள் பெரும் ஆர்வத்துடன் கடற்கரைகளுக்குச் சென்று நடத்திய சூரியக்குளியல் மற்றும் பிற காரணங்களால் இப்போது பிரிட்டன், மேற்கித்திய நாடுகள் உட்பட பல உலக நாடுகளில் தோல் புற்றுநோய் மும்மடங்காக அதிகரித்துள்ளது. இதனால் இந்த கண்டுபிடிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. வரும் ஆண்டுகளில் இந்த பாதிப்பு அதிகமாகும் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். ஒரு காலத்தில் அரிதாக இருந்த இந்நோய் இப்போது பிரிட்டனில் சாதாரணமாகக் காணப்படும் ஒன்றாக மாறியுள்ளது.sun bathவரும் இருபது ஆண்டுகளில் இந்த பாதிப்பு இப்போதுள்ளதைவிட 50% அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. 55 மற்றும் அதற்கும் மேற்பட்ட வயது உடையவர்களிடையில் இந்தப் புற்றுநோய் அதிகமாகக் காணப்படுகிறது. 1990களில் இருந்ததை விட இப்போது இந்நோய் 195% அதிகமாகியுள்ளது என்று பிரிட்டன் புற்றுநோய் ஆய்வு அமைப்பு கூறுகிறது. மலிவான பணச்செலவில் ஏற்பாடு செய்யப்படும் சுற்றுலாப் பயணங்களும் இதற்கு காரணம் என்று கருதப்படுகிறது. 1960-70களில் குறைந்த பட்ஜெட் சுற்றுலாத் திட்டங்கள் அதிக அளவில் நடந்தன.

புதிய தொழில்நுட்பம்

முன்கூட்டியே கண்டறியப்படுவது மற்றும் சிகிச்சையால் உயிரிழப்போர் எண்ணிக்கை குறைவாக உள்ளது. என்றாலும் தோலில் ஏற்படும் மெலனோமா செல்கள் உடலின் மற்ற பாகங்களுக்குப் பரவுகிறது என்பதால் இவற்றை நடுநிலையாக்க உதவும் புதிய தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

புதிய முறை நோய் சிகிச்சையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இதை முற்றிலும் குணமாக்கும் முறை இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று லன்டன் பல்கலைக்கழக செயிண்ட் ஜார்ஜ் மூலக்கூறு மற்றும் க்ளினிக்கல் அறிவியல் ஆய்வு மையத்தின் ஆய்வாளர் பேராசிரியர் டாட் பேனட் (Prof Dot Bennett) கூறுகிறார். புதிய முறை தோன்றிய இடத்தில் இருந்து உடலின் வேறொரு பகுதிக்கு பரவும் தன்மையுடையது. இந்த நோயை சிகிச்சை செய்வதில் இக்கண்டுபிடிப்பு பெரிதும் உதவும் என்று ஆய்வுக்குழுவினர் நம்புகின்றனர்.

பெப்டைடு

புதிய தொழில்நுட்பத்தில் செல் ஊடுருவும் பெப்ட்டைடு (peptide) புரதம் உருவாக்கப்படுகிறது. இந்த வேதிப்பொருள் மெலனோமா செல்களைத் தேர்ந்தெடுத்து நோயாளிக்கு ஒரு சில பக்க விளைவுகளை மட்டுமே ஏற்படுத்தி திறம்பட அழிக்கிறது. வியப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்படும் இந்த வேதிப்பொருளை மனிதர்களிடையில் பயன்படுத்துவது பற்றி மேலும் தீவிர ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

தோல் செல் பகுப்புடன் மெலனோமா செல்கள் தொடர்புடையவை. சில நேரங்களில் ஒரே ஒரு திடீர் மாற்றத்திற்கு (mutation) பிறகு இவை வடுக்களை ஏற்படுத்துகின்றன. ஆனால் ஒரு சில பகுப்புகளுக்குப் பிறகு செல்களின் இயல்பான பகுப்படையும் ஆற்றல் மற்றும் வளர்ச்சியைப் பாதிக்கும் இக்குறைபாட்டை செல் செனசன்ஸ் (cell senescence) என்ற உடலின் பாதுகாப்பு செயல்முறை தடுத்து நிறுத்துகிறது.

அதனால் தோலில் திடீரென்று தோன்றும் வடுவை ஒழிக்கப்பட்ட புற்றுநோயாகக் கருதலாம். நீக்கப்படவில்லை என்றால் இது வளர்ந்து பரவியிருக்கலாம். சில சமயங்களில் மேலும் சில திடீர் மாற்றங்கள் ஏற்பட்டு செல்கள் பகுப்படையும் செயல்முறை கட்டுப்படுத்தப்படுவதைத் தடுக்கிறது. விளைவாக மெலனோமா புற்றுநோய் ஏற்படுகிறது. இந்த மாற்றங்கள் புற ஊதாக்கதிர்களால் மேலும் தூண்டப்படுகிறது.

வெய்யிலில் நீண்ட நேரம் இருந்தால்

சூரியன் புற ஊதாக்கதிர்களின் முக்கிய இயற்கை மூலம். அதனால் தகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை எடுக்காமல் வெய்யில் படும்படி நீண்ட நேரம் இருந்தால் தோலில் புண்களுடன், நீண்ட நாட்களுக்குப் பிறகே வெளிப்படும் மெலனோமா புற்றுநோயும் ஏற்படுகிறது. அறுவை சிகிச்சை அல்லது கதிரியக்க சிகிச்சை இந்நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது. ஆனால் சில நோயாளிகளில் நோய் ஏற்பட்டிருப்பதைக் கண்டறியும் முன்பே நோய் மற்ற உடற்பகுதிகளுக்கும் பரவுகிறது.

இதைப் பற்றி பிரிட்டிஷ் புற்றுநோய் ஆய்வு அமைப்பு மற்றும் பிரிட்டிஷ் தோல் அறக்கட்டளையின் நிதியுதவியுடன் இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டன. இதற்காக ஆய்வுக்குழுவினர் பி16 என்ற புரதத்தை அடையாளம் கண்டு ஆராய்ந்தனர். இது புற்றுநோய்க் கட்டிகளை குறைக்க உதவுகிறது என்பது முன்பே கண்டறியப்பட்டது. முன்பே ஆய்வாளர்களால் ஆராயப்பட்ட பெப்டைடு என்று அழைக்கப்பட்ட இதன் ஒரு சிறு பகுதியில் மாற்றங்கள் செய்யப்பட்டபோது அது பலனளிக்கக் கூடியது, செல்களில் நுழைகிறது என்று இப்போது அறியப்பட்டுள்ளது.

புற்றுநோய் செல்களை அழிக்கும் புரதம்

இது பின்னர் மெலனோமா செல்லின் மூன்று அடுக்குகளில் சேர்க்கப்பட்டு ஆய்வகத்தில் ஆராயப்பட்டது. புற்று செல்கள் பகுப்படைவதை இது தடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த புரதம் அவற்றை அழித்துவிட்டது. மேலும் இது மற்ற ஆரோக்கியமான செல்களை அழிக்கவில்லை. மற்ற புற்றுநோய்கள் போல மெலனோமா அடையாளம் காணப்படுவது நோயாளியை உயிருடன் வாழவைக்க உதவும் ஒரு முக்கிய கண்டுபிடிப்பு என்று கருதப்படுகிறது.

நோயை முன்கூட்டியே கண்டறிவது சிகிச்சையின் பலனை அதிகரிக்கும் என்று பிரிட்டிஷ் புற்றுநோய் ஆய்வு அமைப்பின் தலைமை செயல் அலுவலர் மிஷேல் மிச்சல் (Michelle Mitchell) கூறுகிறார். முன் கூட்டியே கண்டறிந்து அதனால் உயிருடன் வாழ்பவர்களுக்கும் நோயின் பிற்பகுதியில் கண்டறியப்பட்டு உயிருடன் இருப்பவர்களுக்கும் இடையில் உள்ள உயிரிழப்பு விகிதத்தில் பெரிய இடைவெளி உள்ளது. பி16 புரதம் நோய் பரவிய நிலையில் இருக்கும் நோயாளிகளின் சிகிச்சையில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

பிஃப்ரப்ளாஸ்ட்

பி16 பெப்டைடுடன் தொடர்புடைய புரதம் மெலனோமா செல்களைத் தாக்குகிறது. தோல் பழுது நீக்கம் மற்றும் மறு உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் ஃபிஃப்ரப்ளாஸ்ட்ஸ் என்ற செல் பொருளைப் பாதுகாக்க இந்த பெப்டைடு உதவுகிறது என்று பிரிட்டிஷ் தோல் அறக்கட்டளையின் நிபுணர் ஆடில் ஷெராஸ் (Adil Sheraz) கூறுகிறார்.

ஃபிப்ரப்ளாஸ்ட்ஸ் (fibroblasts) என்பது உடலின் மற்ற திசுக்கள் அல்லது உறுப்புகளை இணைக்க உதவும் ஒரு ஆதரவு செல் பொருள். இது திசுக்களில் காலஜன் (collagen) புரதங்களை உற்பத்தி செய்து அவற்றின் கட்டமைப்பை பேணிப் பாதுகாக்கிறது. மெலனோமா நோய் செல்களின் மூன்று அடுக்குகளில் பி16 பரிசோதிக்கப்பட்டது. நோய் பாதித்த செல்கள் அனைத்தும் அழிக்கப்பட்டன.

இந்த சிகிச்சைமுறை மனிதர்களிடம் பரிசோதிக்கப்படுவதற்கு முன் இது பற்றி மேலும் தீவிர ஆய்வுகள் நடத்தப்படவுள்ளன. இதன் முடிவுகள் வெளிவர ஒரு சில ஆண்டுகள் ஆகும் என்றாலும் தோல் புற்றுநோய் சிகிச்சையில் இது ஒரு நல்ல தொடக்கம் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

மேற்கோள்: https://www.theguardian.com/society/2023/sep/02/hope-for-new-skin-cancer-therapy-as-uk-cases-soar?

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It