மேலை நாட்டினர் ஆரம்ப காலத்தில் தமிழ்க் கடற்கரைப் பிரதேசங்களில் தமிழ்நாட்டின் பருவ கால மற்றும் சீதோஷ்ண நிலை குறித்து அறியாத பெழுது நோய்களைக் குணமாக்குவதில் பல இடர்ப்பாடுகளை எதிர்கொண்டனர்.  ஏனெனில் ஐரோப்பாவில் அவர்களால் அறியப்பட்ட நோய் களையும் தமிழ்நாட்டில் காணப்படும் நோய் களையும் ஒத்துநோக்கிய பொழுது, பெருமளவில் குழப்பங்களுக்கு உள்ளானார்கள்.  இதனால் ஐரோப்பிய மருத்துவர்கள் தமிழ் மருத்துவ ஆய்வு களை, நூல்களைப் படித்து, அதிலுள்ள உண்மை களை அறிந்துகொள்ள தமிழ் மொழியைக்

கற்றுக் கொண்டனர்.  ஏனெனில் மொழி அறிவு இன்றி மருத்துவக் கூறுகளை மொழிபெயர்ப் பாளர்கள் மூலம் அறிந்து கொள்வது, அவ்வளவு சிறப்பாக அமையவில்லை.  ஆனாலும் சில நேரங் களில் அவர்கள் துணையும் தேவைப்பட்டது.  தமிழ் மொழி அறிவு பெற்ற பிறகு, அவர்கட்குத் தேவையான மருத்துவச் செய்திகளைத் தங்களுடைய தாய் மொழியில் விரிவாக மொழிபெயர்த்துத் தங்கள் நாடுகளுக்கு அனுப்பினர்.  சில சமயம் தமிழ் மருத்துவ ஓலைச்சுவடிகளையே விலை கொடுத்து வாங்கி, இம்மருத்துவக் களஞ்சியங்களில் உள்ள, மேம்பட்ட மருத்துவ அறிவு, பல தலைமுறை யினருக்கு உதவக்கூடும் என எண்ணி, தங்கள் நாடு களுக்கு அனுப்பி வைத்தனர்.  இப்படியாகவே தமிழ் மருத்துவம் ஐரோப்பாவைச் சென்றடைந்தது.

ஐரோப்பாவில் 1480-இல் 11-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட “The Salerno Regimen of Health” என்ற மருத்துவ நூல், பின்பற்றப்பட்டு வந்தது.  இது நோயாளிக்கு வேண்டிய உணவை மட்டும் கூறி மருத்துவக் குணப்பாட்டைக் குறித்து ஏதும் விளக்க வில்லை.  இதற்கு மாறாக தமிழ்நாட்டில் சித்தா, ஆயுர்வேத மருத்துவ நூல்களில் நூற்றுக்கணக்கான மருத்துவக் குணப்பாடும் மருந்தும் குறிப்பிடப் பட்டிருந்தன.  ஆகவே ஐரோப்பியர்கள் இவ்விரு மருத்துவத் துறைகளைப் பிரித்துப் பாராது மருந்து களைக் குறித்து ஆய்வுகள் நடத்தி, நூல்களில் கூறப்பட்டவைகளைச் சரிபார்த்துக் கொண்டனர்.

மூன்று சித்த மருத்துவ நூல்கள் எழுதிய வீரமாமுனிவர்:

மருத்துவ நூல்கள் மற்றும் அறிவியல் நூல்கள் எழுதும் பணியை, சீர்திருத்தக் கிருத்தவர்களே பெருமளவில் தமிழகத்தில் எடுத்துக்கொண்ட நிலையில் கத்தோலிக்கப் பாதிரியாரான பெஸ்கி என்ற வீரமாமுனிவரும் இதில் நாட்டம் கொண்டார்.  இதற்கு முன் ஜெயசூட் பிரிவினர் தங்களுக்காக மட்டும் 1652-இல் “Seminario de Santa Cruz dos Milagres” என்ற ஐரோப்பிய மருத்துவ நூலைத் தமிழில் வடித்திருந்தனர்.

வீரமாமுனிவர் (1680-1746) 1711-இல் கிருத்து வத்தைப் பரப்ப தமிழகத்திற்கு வந்து, தஞ்சாவூரில் தமிழைச் சிறப்பாகக் கற்றறிந்தார்.  இவர் பல தமிழ் நூல்களை எழுதினாலும் மருத்துவம் குறித்த நூல்கள் மூன்று எழுதினார்.  தமிழகத்தில் அன்றைய நிலையில் செய்யுள் நடையிலேயே நூல்கள் இருந்ததால் வீரமாமுனிவரும் தன் நூல்களையும் செய்யுள் நடையிலேயே எழுதினார்.  இவர் எழுதிய நசகாண்டம் நூறு பாடல்களைக் கொண்டது.  அவை நான்கு வரி களில் வெண்பாப் பாடல்களாக எழுதப்பட்டுள்ளன.  இச்சுவடிநூல் நூல் வடிவமாக 1874-இல் நாராயண சாமி நாடார் என்பவரால் வெளியிடப்பட்டுள்ளது.  இந்நூலில் முப்பது மருந்துகள் கூறப்பட்டுள்ளன.  இதில் பரங்கிப்பட்டை, சித்தரமூலம், பாதரசம் மற்றும் உலோகங்களின் பயன்பாடுகளுடன் தோல் நோய், வயிற்றுப்புண், செரிமானக் குறைவு, இரத்த சோகை, பெண்களுக்கான வெள்ளைப்படுதல், மூலம், நெஞ்சக நோய்கள் ஆகியவைகளை எவ்வாறு குணமாக்குவது? என்பதற்கான பாடல்களும் உள்ளன.  வீரமாமுனிவரின் இரண்டாவது நூல் ரண வாகடம்.  இது வாகடத்திரட்டு என்று இரண்டு பாகங்களையுடைய 100 செய்யுள் என்றும் குறிப்பிடப்படுகிறது.  மூன்றாவது நூல் அனுபோக வைத்திய சிந்தாமணி, இந்நூல் விருத்தாப்பாவினால் எழுதப்பட்டு 130 வரிகளைக் கொண்டுள்ளது. (European and Tamil Encounters in Modern Sciences: P.534-535)

வீரமாமுனிவரின் நூல்களைக் குறித்து முனைவர் விரிஜின் விமலாபாய் கருத்து

வீரமாமுனிவர் வாகடத்திரட்டு என்ற பெயரில் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு அக்கீர் பா.மு. அப்துல்லா சாயபு முதல் முதலாக ஒரு நூலை வெளியிட்டுள்ளார் என்று கூறுகிறார்.  இதில் அப்துல்லா தனது பதிப்புரையில் “இந்நூலானது ராஜரிஷியும் மகா ஆங்கிலம் மற்றும் தமிழ் முதலியவைகளில் மிகவும் தேர்ச்சியுற்றுத் தமிழில் பல நூற்கள் இயற்றி, கீர்த்தி பெற்றவருமாகிய வீரமாமுனிவரால் செய்யப்பட்டது என்றும் நசகாண்டம், நவரத்தினச் சுருக்கமாலை, மகா வீரியச் சிந்தாமணி என்னும் மூன்றினையும் ஒருங்கு சேரத்திரட்டிய காரணத்தால் வாகடத்திரட்டெனும் திருநாமம் பெற்று விளங்கும் பெருமை வாய்ந்தது” என்று குறிப்பிடுகிறார்.

வீரமாமுனிவரின் தமிழ் இலத்தீன் அகராதி காய்ச்சல் விடுங்காய்ச்சல், விடாக்காய்ச்சல், நாலாம் முறைக்காய்ச்சல், மூன்றாமுறைக் காய்ச்சல், உட் காய்ச்சல், பித்தக் காய்ச்சல், மந்தக் காய்ச்சல், கடுங் காய்ச்சல், தோஷக்காய்ச்சல், பெருவாரிக் காய்ச்சல் என 15 வகையான காய்ச்சல்களைக் குறிப்பிட்டுள்ளது.  (சித்த மருத்துவ நூல்களை வீரமாமுனிவர் எழுதி யிருக்க வாய்ப்பில்லை என முனைவர் மறைதிரு.  இராசமாணிக்கம், ‘வீரமாமுனிவர் தொண்டும் புலமையும்’ என்ற தன் நூலில் குறிப்பிடுகிறார்.  அதற்கான காரணங்களை அவர் கூறுகையில்

(1) நூற்களின் நடையும், கருத்தும் பிற்காலத்தவை யாக உள்ளது.  (2) இல்லறத்தில் ஈடுபட்ட புலவர்கள் கூடப் பயன்படுத்த விரும்பாத சில மகடூஉ முன்னிலைகள் இங்கு வருகின்றன.  (3) கருத்துக்கள் முற்றிலும் முரண்பட்டு கருத்துக்கள் மேல்வாரி யாகவும் விளம்பரமாகவும், சிற்றின்பப் போக்கிலும் அமைந்துள்ளன.  (4) மற்ற நூல்களைப் போல முனி வரும் அவர்தம் கூட்டாளிகளும் இம்மருத்துவ நூல்களில் சான்று பகரவில்லை என்று கூறி இறுதியாக இந்நூல்களையும் முனிவர் எழுதிய பிற நூல்களையும் ஊன்றிப் படிப்போர் மேற்கூறிய கருத்துக்களை எளிதில் கண்டுணரலாம் என்று விளக்கம் அளிக்கின்றார்.

(தமிழ் இலக்கியங்களில் மருத்துவம் 2005: பக்.: 40-45)

சீகன் பால்கு: (Bartholomaeus Ziegen Balg)

சீர்திருத்த கிருத்துவ மிஷனரிகளில் சீகன் பால்கு பாதிரியார் டேனிஸ் வசமிருந்த தரங்கம் பாடிக்கு முதன் முதலில் டென்மார்க்கிலிருந்து 1906 ஜூலை 9-ல் வந்திறங்கியவர்.  சீகன் பால்கு இங்கு வந்தபின் சமயப் பிரசாரங்கள் செய்யத் தமிழைச் சிறப்புறக் கற்றுணர்ந்தார்.  1708-இல் முதல் முதலாக ஒரு தமிழ் மருத்துவரைத் தரங்

கையில் சந்தித்தார்.  இவரின் உதவியால் மருத்துவச் சுவடிகளைப் படித்ததோடு அச்சுவடிகளை விலை கொடுத்து வாங்கிப் படித்து, தமிழ் மருத்துவத்தை நன்கு புரிந்துகொண்டார்.

அச்செழுத்துக்கள் உருவாகாத கால கட்டத்தில் வழக்கில் இருந்த அறிவியல் கருத்துக்களை ஓலைச் சுவடிகளில் தமிழர்கள் பதிவு செய்துள்ளனர்.  தமிழில் எழுதுமுறை வரலாற்றை ஓலைச்சுவடிகளி லிருந்தே தொடங்க வேண்டும்.

தமிழகத்தில் நிலவிவந்த மருத்துவமுறையை டேனிஸ் மிஷனரியாக தரங்கம்பாடி வந்த சீகன் பால்கு குறிப்பின்படி அறியமுடிகிறது.

“மருத்துவப் பயிற்சியில் சுதேசிகள் நல்ல முறையில் பயிற்சியுடையவர்களாக இருக்கிறார்கள்.  அவர்களின் மற்ற நூல்களைவிட மருத்துவ நூல்களே சிறப்புத் தன்மையுடையனவாகவே இருந்தன.  மருத்துவ நூல்களில் இடம் பெற்ற முக்கிய கருத்துக்கள் பயன்பாட்டு நிலையில் அமைந்திருந்தன.  தாயின் வயிற்றில் உள்ள போதே மனிதர்களுக்கு நோய்கள் வரக்கூடும் என்றும், மற்ற அனைத்து வகை நோய் களும் இதன் வகையிலே அடங்கும் என நம்பினர்.  நோய்களைக் கண்டறிய மூன்று விதமான நடை முறைகளை அறிந்திருந்தனர்.  இதைப் பற்றிய தகவல் களை, பகுதி சாஸ்திரம் என்ற நூலில் எழுதி யிருந்தனர்.  இதன்படி நாடித்துடிப்பு மணிக்கட்டு, கழுத்து, விரல் மூட்டு ஆகிய மூன்று இடங்களி லிருந்து கண்டறியப்பட்டது.  பெண்களுக்கு இடது மணிக்கட்டிலிருந்தும், ஆண்களுக்கு வலது மணிக் கட்டிலிருந்தும் நாடித்துடிப்புகள் கண்டறியப் பட்டன.  வாத நாடி தவளை மாதிரியும், பித்த நாடி கோழி மாதிரியும், மயில் மாதிரியும் துடிக்கின்றன... ... வாத நாடியும், பித்த நாடியும் ஒரே மாதிரி துடித்தால் நோயாளிக்குத் தொண்டைப்புண், இருமல், ஜலதோஷம் மற்றும் உடல் சூடு இருப் பதாகக் கருதப்பட்டது.  ஐரோப்பியர்களிடம் வழக்கில் இருந்த மாதிரியான சிறுநீர்ப் பரிசோதனையும், இவர்களிடம் வழக்கில் இருந்தது... ... பாத்திரத்தி லுள்ள சிறுநீரில் வைக்கோலின் உதவியால் எண்ணெய் தெளிக்கும் போது எண்ணெய் மிதக்காவிட்டால் காப்பாற்ற முடியாது எனவும் கருதப்பட்டது.”

(C.S. Mohanavelu, German Tamilology : p.124)

இம்மாதிரியான சீகன் பால்குவின் குறிப்புகள் தமிழர்களிடம் இருந்த மரபு சார்ந்த மருத்துவத் தொழில் நுட்பத்தையும், அவர்கள் ஓலைச் சுவடி களில் மருத்துவக் குறிப்புகளை நூலாக்கம் செய் துள்ளனர் என்பதையும் உறுதி செய்கின்றன.

சீகன் பால்கு தரங்கம்பாடியில் தாம் நிறுவிய பள்ளியில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.  “தமிழ்ப் பள்ளியின் மூத்த மாணவர்களுக்கு நாள் தோறும் ஒரு மணி நேரமாவது மருத்துவம் கற்றுக் கொடுக்க வேண்டும்.  ஒவ்வொரு திங்கட்கிழமையும் ஏதாவது ஒரு கிராமத்திற்குச் சென்று மாணவர்களுடன் மூலிகைகளை அவர்கள் அடையாளம் காண உதவுவதுடன், மருந்து தயாரிக்கும் முறையை கற்றுக் கொடுக்க வேண்டும்.  அத்துடன் மூலிகை மாதிரிகளைக் கொண்டு வந்து அவற்றைத் தனி அறையில் வைக்க வேண்டும்.  நீண்ட தொலைவி லிருந்து கொண்டு வரப்பட்ட மூலிகைகளையும், அதே அறையில் சேமித்து வைப்பதுடன், மாண வர்கள் அவற்றை அறிந்து கொள்ளும்படி உற்சாகப் படுத்த வேண்டும்.  இறுதியாக, கிடைக்கக்கூடிய அனைத்துத் தமிழ்ச் சுவடிகளையும் சேகரித்து, அவற்றைப் படிக்க வேண்டும். (Daniel Jeyaraj, 2006. Bartholomaus Ziegenbalg - The Father of Modern Protestant Mission).

இதன் மூலம் பள்ளியில் பயின்ற மாணவருக்கு நமது பாரம்பரிய மருத்துவ முறையும் கற்றுக் கொடுக்கப்பட்டது என்பது அறிய முடிகின்றது.  இத்துடன் 27 ஜூன் 1712-இல் ரோமன் கத்தோலிக்கர் ஒருவரை மருத்துவராக நியமித்தார்.

இதனால் தரங்கம்பாடி பள்ளியில் அவர் தமிழ் மருத்துவம் வளர, அவர் செய்த பணிகளை நினைத்துப் பார்க்கும் போது அவர் பெருமை சொல்லாமல் விளங்குகிறது.  இதனை நோக்கும் போது மரபுசார் தமிழ் மருத்துவத் தொழில் நுட்பம் எவ்வளவு தூரம் சிறப்பாக இருந்துள்ளது என்பதையும் மற்றும் தமிழர்கள் ஓலைச்சுவடி களில் மருத்துவக் குறிப்புகளை நூலாக்கம் செய் துள்ளனர் என்பதையும் உறுதி செய்ய முடிகிறது.  (தமிழில் அறிவியல் இதழ்கள் : பக். - 34)

வாகடச்சுவடி என்னும் சுவடி நூலை ஆலப்பன் என்ற தமிழரின் துணையுடன் படித்து, முழுவது மாகப் புரிந்து கொண்டார்.  இந்நூல் 120 பகுதி களைக் கொண்டது.  அவைகளில் நோய்க்கான காரணம், உடல்கூறு, உடல் இயக்கம், நோய்க் குறியியல், குணப்பாடு, நச்சு மருந்து, நச்சுக்கான மாற்று மருந்து ஆகியவைகள் குறிப்பிடப்பட்டிருந்தன.  இந்நூலைச் சீகன் பால்கு விலைக்கு வாங்கி தரங்கையிலிருந்து டென்மார்க்கிற்கு அனுப்பினார்.  இந்த ஓலைச்சுவடி ஜெர்மனி மிஷனரி தலைநகரான ஹாலோ நகரத்திற்கு 1780-இல் வந்தடைந்தது.

இதுபோல சீகன் பால்கு “உடல்கூறு வண்ணம்” எனும் நூலை வாங்கி ஹாலோவிற்கு அனுப்பினார்.  இந்நூல் மனிதன் கடைத்தேறுவதைப் பற்றிக் கூறுகிறது.  தமிழ் மருத்துவர்களால் கூடச் சரியாக புரிந்து கொள்ள முடியாத “தத்துவ விளக்கம்” என்ற நூலும் இவரால் ஹாலோ நகருக்கு அனுப்பப்பட்டது.  இந்த இரண்டு நூல்களும் தற்பொழுது “Franckesche Stiftungen” எனும் ஆவண நூலகத்தில் காணக்கிடைக்கின்றன.  (Europian and Tamil Encounters in Modern Science : Page - 542)

அகஸ்தியர் இரண்டாயிரமும் - கிரண்லரும்: (J.E. Grundler)

1709 ஜூலை 20-ல் தரங்கம்பாடிக்கு வந்தடைந்த கிரண்லர் பாதிரியார் தமிழைக் கற்று மருத்துவச் சுவடிகளைப் படிக்க ஆர்வம் காட்டியதன் விளை வாகத் தரங்கம்பாடிக்கு அருகிலுள்ள பொறை யாறுக்கு சென்று 1710-லிருந்து இரண்டு ஆண்டுகள் மருத்துவச்சுவடி நூல்களைப் படித்தார்.  அப்பொழுது தமிழர்களைப் போலவே, உணவு அருந்தி, உடை உடுத்தி, தமிழ் கலாச்சாரத்தை ஒட்டிய வாழ்க்கை நடத்தினார்.  இக்கால கட்டத்தில் தமிழ் மருத்து வர்கள் எப்படி மருத்துவம் புரிகின்றனர், எவ்வாறு நோயைக் கண்டுபிடிக்கின்றனர்.  மருத்துவம் அளிக் கின்றனர் என்பதை அறிந்து அகஸ்தியர் இரண்டா

யிரம் எனும் சுவடி நூலைத் தமிழிலிருந்து ஜெர் மானிய மொழியில் மொழி பெயர்த்தார்.  இதன் பெயர் “தமிழ் மருத்துவர்” (Tamil Physician).  1711-இல் மொழிபெயர்க்கப்பட்ட இந்நூலைக் கப்பல் மூலம் கோப்பன் ஹேகன் வழியாக ஹாலோ நகருக்கு 1712-இல் அனுப்பி வைத்தார்.  இத்துடன் மூலிகைச் செடியின் மாதிரிகளையும் அனுப்பி வைத்தார்.  இந்த நூலும் சீகன் பால்கு அனுப்பிய நூலைப் போலவே ஹாலோ நகரின் ஆவணக் காப்பகத்தில் உள்ளது.  இந்நூலில் உள்ளூர் மக்கள் எப்படி மருத்துவம் பெற்றுக் குணமடைகின்றனர் என்பதுடன் ஒரு பிராமணர் துணையுடன் தமிழ்ப் பள்ளிகளில் எப்படி மருத்துவம் கற்றுத் தரப் படுகிறது என்பதைக் குறித்தும் நூலின் முகவுரையில் குறிப்பிட்டுள்ளார்.

இவருடைய “தமிழ் மருத்துவர்” (Tamil Physician). நூல் இரண்டு பாகமாக உள்ளது.  முதல் பாகத்தில் நோயாளியை எப்படி வரவேற்பதிலிருந்து, நோயாளி குணமாவாரா? அல்லது இறப்பாரா? என்பது வரை உள்ளது.  இரண்டாம் பகுதியில் உடல் உறுப்பு களில் ஏற்படும் நோய்களும் அவற்றிற்கான மருந்து களும் குறிப்பிடப்பட்டுள்ளது.  இத்துடன் முதல் பாகத்திலுள்ளது போல இரண்டாம் பாகத்திலும் மருத்துவ அகராதி இடம் பெற்றுள்ளது.

இவர் நூலில் குறிப்பிடப்பட்டுள்ள மருத்துவ முறைகள் அகஸ்தியர் இரண்டாயிரம் என்ற நூலில் குறிப்பிடப்பட்டவைகளாகவே உள்ளன.  இவர் நூல் அக்காலகட்டத்தில் (1712) கோப்பன் ஹோமின் ஜெர்மானிய மருத்துவர்களால் படிக்கப்பட்டுக் கற்பிக்கப்பட்டது.  கிரண்லர் இத்துடன் நில்லாது, சித்த மருந்துகளைக் குறித்து ஜெர்மனியில் உள்ள தன் நண்பர்களுக்கு அவ்வப்பொழுது தன் கடிதத்தின் மூலம் தெரிவித்தார்.  இதன்படி சித்த மருத்துவம் ஜெர்மானியர்களுக்கும் கிடைக்கும் வகையில் பணியாற்றியது கிரண்லரின் சிறப்பாகும்.

அகஸ்தியர் வைத்தியச் சுவடியும் தியோடர் லுட்விக் ஃப்டிரிச் ஃபோலியும்

டேனிஷ் அறுவைச் சிகிச்சை மருத்துவராகத் தியோடர் லுட்விக் ஃப்டிரிச் ஃபோலி தரங்கம் பாடியில் ராணுவ மருத்துவமனையில் 1777-இல் பணிபுரிந்தார்.  அப்பொழுது மருத்துவச் சுவடிகளை உள்ளூர் வாசிகள் துணையுடன் கற்றுக்கொண்டார்.  இதன் படி அகஸ்தியர் மருத்துவச் சுவடிகளைக் கற்றுக் கொண்டு பல கட்டுரைகளை 1795-

லிருந்து 1801 வரை டேனிஷ் மொழியில் எழுதினார்.  ஆனால் அவைகள் அச்சாகவில்லை என்றாலும், அக்கட்டுரைகள், கோப்பன் ஹேகனில் அரிய ஓலைச்சுவடிகள் காப்பகத்தில் உள்ளன.  இந்த மருத்துவ மொழிபெயர்ப்பில் ஃபோலி பாதரசத்தை அகஸ்தியர் சுவடியில் உள்ளபடி ஆவியாக்கி உறை படிவமாக்குவதைக் குறிப்பிடுகையில் ஜெர்மன், டேனிஷ் மருத்துவர்களுக்கு மருந்து தயாரிக்க மிகவும் உதவக்கூடும் என திட்டமிட்டு மொழி பெயர்த்ததாகக் கூறுகிறார்.  ஆனாலும் இப்பாதரச உறை படிவம் குறித்த கருத்தை ஐரோப்பிய மருத்து வர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றும் குறைபட்டுக் கொள்கிறார்.  எனினும் தரங்கைக்கு மருந்து விற்பனை செய்ய வந்த இரண்டு தமிழ் மருத்துவர்களிடம் (அப்பா, மகன்) தமிழ் மூலிகை மருத்துவம் தயாரிக்கும் முறையைக் கேட்டறிந்து அவர்களுக்கு ஒரு பவுண்ட் சுத்திகரிக்கப்பட்ட பாதரசத்தை அளித்தார்.  இச் செய்தி குறிப்பிடப் பட வேண்டிய ஒன்றாகும்.  ஏனெனில் அக்கால கட்டத்தில் ஐரோப்பிய வணிகர்களால் பாதரசம் சைனாவிலிருந்து பெறப் பெற்று தமிழ் மருத்துவர் களுக்கு விற்பனை செய்யப்பட்டது.

அகஸ்தியர் வைத்தியம் 500 - ஓலைச் சுவடியும் ஒயிட்லா அன்சிலியும்

ஒயிட்லா அன்சிலி உதவி மருத்துவராக இங்கிலீஷ் குடியிருப்பில் 1788ல் பணிபுரிந்த பிறகு கிழக்கிந்திய கம்பெனியில் முழு நேர அறுவை மருத்துவராக 1794-ல் சேர்ந்து, உள்நாட்டு தாவரங்களை அறிந்து கொள்ள விருப்பத்தைத் தெரிவித்தார்.  இதன்படி உள்ளூர் தாவரங்கள் மருத்துவ குணங்களைக் கொண்டது என்றும், இங்குள்ள மூலிகைகள் ஐரோப்பியர்களுக்கு ஆராய்ச்சி செய்ய அவ்வளவு எளிதானதல்ல என்று கூறும் அன்சிலி 20 ஆண்டுகள் கடை மருந்துகளைக் கண்டு கேட்டு, அறிந்து அவற்றை மேலை நாட்டினர் புரிந்து கொள்ளும் விதமாக ஆய்வுகளை மேற்கொண்டார்.

அன்சிலி தமிழ் மருத்துவ நூலான அகஸ்தியர் வைத்தியம் 500-ஐக் கற்றுணர்ந்து ஹிந்துஸ்தான் மருந்துகளின் கையேட்டை 1813-இல் தயாரித்து மதராஸ் அரசின் உதவியுடன் வெளியிட்டார்.  இதில் ஜான் பீட்டர் ராட்லர் எனும் புகழ் பெற்ற தாவர இயல் நிபுணர் தனக்குச் செய்த உதவிகளைக் குறிப்பிட்டு, அவருக்கு அந்த நூலைக் காணிக்கை யாக்கினார்.

மருத்துவக் குணமுள்ள மூலிகைகளின் பெயர் களை ‘டாக்டர் அன்சிலி’ கூர்ந்து கற்று தெலுங்கர், முஸ்லீம் ஆகியோருக்கும் இம்மருந்துகள் பொது வாகவே உள்ளன என்று கூறினார்.  ஆனால் சில மருந்துகள் வேறுபட்டிருந்ததால் ஐரோப்பிய மருத்துவர்கள் கேள்வி எழுப்பினர்.  மதராஸில் முக்கிய தாவரங்கள் உள்ள தோட்டத்தின் பொறுப் பாளர் ராபர்ட் ரைட் அன்சிலியின் நூலில் படங்கள் இல்லாத குறையைச் சுட்டிக் காட்டினார்.  ஆனாலும் அன்சிலியின் நூல் இரண்டு பதிப்புகளைக் கண்டு இரண்டு பகுதிகளாக லண்டனில் 1826-இல் வெளி யிடப்பட்டது.

அன்சிலி மருத்துவ நூல்களின் தமிழ் இலக்கணத்தை 1813-இல் பட்டியலிட்டார்.  இந்தப் பட்டியலில் வைத்தியர் வாகடம் முதல் அகஸ்தியர் வைத்தியம் 300 வரை பல நூல்கள் இருந்தன.  இதில் “மருத்துவம் சமயத்துடன் பின்னிப்பிணைந்து, கடவுளே எல்லாம் என்று கூறுவதால் தமிழ் மருத்துவம் வளராது ஒரு தேக்க நிலையை அடைந்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவர் இல்லாத ஊருக்கான மருத்துவ நூல் பண்டிதர் ஏ.ஜா. உவேரிங் துரை (1860)

திருவிதாங்கோடு சமஸ்தான மஹாராஜாவின் மருத்துவர் ஏ.ஜா. உவேரிங் துரை என்பவரால் எழுதப் பட்ட நூல்.  இது இங்கிலீஷ் வைத்திய முறையால் எழுதப்பட்ட சில கடை ஒளஷதங்களுடையவும் இந்திய தேசத்தில் சாதாரணமாய் உண்டாகும் சில பூண்டுகளுடையவும் பலன்களைப் பற்றிக் காட்டிய குறிப்புகள்.  இதற்கு ஆங்கிலத் தலைப்பாக “Remarks of the uses of some Bazaar Medicines and on a few of the common indigenous practice according to European Practice” என உள்ளது.

இதில் Plants என்பது பூண்டு என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.  அன்றைய நிலையில் மூலிகை அல்லாத செடிகளுக்கு இம்மொழிபெயர்ப்பு அமைந் திருக்கலாம்.  அதேபோல் இந்நூலின் ஆசிரியர் பெயர் Waring-உவேரிங் ஆகியுள்ளது.  மேலும் முகவுரையின் கடைசியில் “செய்கிறதில் (இம்மருந்தை) அனுகூல மில்லாவிட்டாலும் யாதொரு கெடுதல் சம்பவிக்க மாட்டாது” என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்நூலில் முகவுரையில், “வாக்சினேற்றரால் தாங்கலிருக்கும் அந்தந்த ஸ்தலங்களில் தகுந்த வைத்தியர்களில்லாமல் தங்களைச் சுற்றியிருக்கும் சனங்களுக்கு வியாதி உண்டானால் அதைத் தணிக்கிற தற்கும் சில சமயங்களில் ஒன்றாய் சுகமளிக்கிறதற்கு ஏற்ற வழிகளை இதனால் அவர்கள் அறிய வேண்டும் என்கிற நோக்காய் செய்யப்பட்டிருக்கிறது” என்று இந்நூலின் அவசியத்தையும் எழுதப்பட்ட காரணத் தையும் எடுத்துக் கூறுகிறது.

இதில் கடை மருந்துகள் ஒளஷதங்கள் என்று கூறப்பட்டிருப்பவை படிகாரம் அல்லது சீனக் காரம் கரியபோளம் (Aloes), வெள்ளைப் பாஷாணம் (Arsenic White), கூவிளம் என்னும் வில்வப்பழம் (Baelw Bilva Fruit), குடம் என்ற கற்பூரம் (Champhor), துரிசு (Sulphate of Copper), தண்ணீர் (Water), கோழிக் குஞ்சின் சாறு (Chicken Broth),, ஆட்டிறைச்சியின் சாறு (Mutton Broth).

இந்நூல் According to English Practice என்று முகப்பு அட்டையில் குறிப்பிட்டிருந்தாலும் அன்றைய காலகட்டத்தில் இம்மருத்துவம் எம்மாதிரி இருந்தது என்பதை கீழ்க்கண்ட மருத்துவ முறைகளையும் உரைநடையையும் கொண்டு அறியலாம்.

“விப்புருதி (Abscess) முதலாவது சுடுதண்ணீர் ஒற்றல் இடவும் மருந்து வலியுமிருக்கில் அட்டை களை விடவும், பின்பு அதன் மேல் நவசாரத் தண்ணீரை அடிக்கடி விடவும், சீழ் கட்டத் துவங்கின உடன் அரிசி மாவின் போல்ட்டிசையாவது.  அவித்த வெண்காயத்தின் போல்ட்டிசையாவது அவித்த வெங்காரத்தின் போல்ட்டிசையாவது வைத்துக் கட்டவும், விப்புருதியின் மேற்பக்கம் விரலை வைத்து அழுத்தும் போது கீழ் பிதுக்கி தளம்பிக் காணுகில் மிகுதியாய் முளைத்திருக்கும் பக்கத்தில் கருவியால் கீறி அரிசி மாவின் போல்டிசை வைத்துக் கட்டவும்...  தூக்கத்துக்கு விரோதமாய் வலி அதிக மிருக்கில் சொல்லியிருக்கிறது போல் அபினைக் கொடுக்கவும்.  நோயாளி அதிக பலவீனமாயிருக்கில் கோழிக் குஞ்சின் கஷாயம் அல்லது ஆட்டிறைச்சியின் கஷாயம் தினந்தோறும் கொடுத்து நல்ல சாப்பாடும் செய்விக்கிறதுமன்றி அப்போது வேப்பம் பட்டைக் கஷாயமாவது கிரியாத்துக் குடிநீராவது கொடுக்கவும்.”

கலைச்சொற்கள்

நூல் முழுவதும் ஒவ்வொரு மருந்திற்கும் தமிழின் தலைப்பிற்குப் பிறகு அடைப்புகளில் அதற்கான ஆங்கிலச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

Sulphate of Iron  -   அன்னபேதி

Sulpher  - கெந்தகம்

Toddy Poutice - கள்ளுப்போல்ட்டிஸ்

Borax  -  வெங்காரம்

One Scruple  - இசுக்குருப்புகள்

Half a drachm - 20 கிறேன் (grains), திரும் = 30 கிறேன்.

இந்நூலின் மூலம் பத்தொன்பதாம் நூற்றாண்டில் அலோபதி மருத்துவத்தின் முதலுதவி மருந்துகள் என்னவென்று அறிந்து கொள்ள முடிகிறது.  இதில் வெண்பாஷாணம் போன்ற சில மருந்துகளைத் தவிர மற்றவை வீட்டு உபயோகத்தில் உள்ள பொருட்களாக இருக்கின்றன (எ.கா. தண்ணீர்) என்பதைப் பார்க்கும்பொழுது இன்றைய முன்னேற்றத் துடன் ஒத்துப் பார்க்கையில் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடாகத் தெரிய வருகிறது.

தமிழ் மருத்துவ ஓலைச்சுவடியை எப்படி ஐரோப்பியர்கள் கற்றுணர்ந்தனர்

17-ஆம் நூற்றாண்டில் அச்சு இயந்திரம் தமிழகத் திற்கு வரும் வரை மருத்துவ ஓலைச்சுவடிகள் செய்யுள் வடிவத்திலேயே இருந்தன.  சில செய்யுள் சிறியதாகவும், சில நீண்டும் எழுதப்பட்டிருந்தன.  சித்த மருத்துவச்சுவடிகள் பெரும்பாலும் அந்தாதி யாப்பு வடிவத்திலேயே அமைந்திருந்தன.  இச்சுவடியின் ஆசிரியர்கள் எந்த ஆண்டு, மாதம் நாட்களில் எழுதினார்கள் என்ற குறிப்புகள் அதில் இல்லை.  மேலும் அச்செய்யுளைக் கொண்டு எந்தக் காலத்தில் எழுதியிருப்பார்கள் என்று கணிப்பதும், மிகவும் கடினம் ஆகும்.  இச்சுவடிகள் 200- 300 ஆண்டு களுக்கு மேல் கேடுறும் என்பதால் மறுமுறை இது பெயர்த்து பனை ஓலைகளில் எழுதப்படுவது வழக்கம்.

இவ் ஓலைச்சுவடிச் செய்யுளில் பெரும்பாலும் அக்கால கட்டத்தில் நடைமுறையில் இருந்த சமஸ்கிருத வார்த்தைகளே காணப்படுகின்றன.  மேலும் அன்றாடப் பேச்சு வழக்கிலுள்ள சொற்கள்.  எ.கா. : அரைச்சு, குளுந்து, வெடிச்சு, வீங்க போன்ற வைகள் காணப்படுகின்றன.  இது போல இலக்கியத்தில் காணப்படும்.  எ.கா. தென்னெண்ணெய், தாமரை வழயம், போன்ற சொற்களும் சுவடிகளில் உள்ளன.  மூலிகையின் பெயர்களும் உச்சரிப்புகள் மாறி திரிபலா (திரபலை), கரி கொனை (கரி கொன்றை) எனச் சில வார்த்தைகள் மாறியும் உள்ளன.  எ.கா.: முடக்கொட்கை (முடக்கற்றான்), கொடிசப்பாலை (குடுசப்பாலை).  இவைகள் வேண்டுமென்றே மாற்றப்பட்டதா என்பதற்கு விடையாக, இது அறிந்தோர்க்கு மட்டும், சுவடிப் பாடல்கள் பயன்பட வேண்டும் என்று எழுதப் பட்டதாக அறிய வருகிறது.  இதன் காரணமாக ஐரோப்பியர்கள் இவைகளை எளிதில் அறிந்து நடைமுறைப்படுத்துவது கடினமாக இருந்தது. ஆகவே பல நேரங்களில் மேலை நாட்டினருக்கு மொழி பெயர்ப்பாளர்கள் தமிழ் மருத்துவத்தை அறியத் தேவைப்பட்டது.

இக்கடினமான சூழலில் மேலை நாட்டவர் தமிழ் மருத்துவத்தை அவர்கள் மொழியில் மொழி பெயர்க்க குறிப்பிட்ட நிலையில் சில சமயம் வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்த்தனர்.  சில சமயம் அச்செய்யுளின் சாரத்தைக் கொடுத்தனர்.  இன்னும் சில நேரங்களில் ஐரோப்பிய மருத்துவர் களுக்குத் தேவையற்றவைகளை ஒதுக்கி தேவை யானவற்றை மட்டும் சுருக்கி எழுதினர்.  ஏனெனில் தமிழ் மருத்துவப்பாடல்களில் உள்ள உவமைகள், உருவக வழக்குகள் செறிவாக இருந்த காரணத் தாலும் செய்யுள் வடிவில் விளங்காததாக இருந்தமை யாலும், தமிழ் மருத்துவச் சுவடி மொழிபெயர்ப்பு என்பது ஐரோப்பியர்களுக்கு ஒரு சவாலாகவே இருந்தது.

Pin It