"....வரலாறென்பது ஆள்வோரை மையமாகக் கொண்ட வரலாறன்று. மன்னரையும் அவனைச் சார்ந்தோரையும் முன்னிறுத்தி எழுதப்படும் வரலாற்று வரைவு இன்று கேள்விக்குள்ளாகியுள்ளது. வரலாற்றின் மையத்தில் இடம் மறுக்கப்பட்டு வரலாற்றின் விளிம்பில் நிறுத்தி வைக்கப்பட்ட ‘விளிம்பு நிலை’ மக்கள் திரளை மையத்திற்குள் கொண்டு வரும் வரலாற்று வரைவுகள் இன்று அறிமுகமாகியுள்ளன.

இப்புதிய வரலாற்று வரைவுக்கு வழக்கமாகப் பயன்படுத்தும் வரலாற்றுத் தரவுகள் மட்டுமே துணைபுரியா நிலையில் புதிய தரவுகளின் தேவை அவசியமாகி விட்டது. இப்புதிய தரவுகளில் ஒன்றாகப் ‘பொருள்சார் பண்பாடு’ இடம்பெறுகிறது. இந்தியச் சூழலில் இது மிகவும் முக்கியமான ஒன்றாகும்."

- ஆ. சிவசுப்பிரமணியன்

aa sivasubramanian 267'நாட்டார் வழக்காற்றியல்’ என்ற புலமைத் துறை தமிழகத்தில் 1960களில் தமிழில் கருக்கொள்ளத் தொடங்கியது. பேராசிரியர் நா. வானமாமலை இத்துறைக்குக் குறிப்பிடத் தகுந்த பங்களிப்பினைச் செய்துள்ளார். இத்துறைக்குள் நா.வானமாமலையால் ஆற்றுப்படுத்தப்பட்டவர் பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன். களப்பணிகள் மூலம் தரவுகளைச் சேகரித்து, வகைப்படுத்தி, பகுப்பாய்வு செய்யும் முறையை நா.வா.விடம் ஆ. சிவசுப்பிரமணியன் கற்றுக் கொண்டது ஆய்வுலகில் அவரைச் சிறப்புடன் தனித்துக் காட்டுகிறது. நாட்டார் வழக்காற்றியல் புலத்தைத் தமிழாய்வு வட்டாரத்தில் வளரச் செய்தவர்களில் ஆ.சி.க்கு முக்கியமான பங்கு உண்டு.

1970கள் முதல் தமிழியல் ஆய்வுலகில் முனைப்புடன் இயங்கத் தொடங்கிய இவர், இன்று வரை நன்கு அறியப்பட்ட ஆய்வாளராக இருக்கின்றார். இவர் பரந்துபட்ட ஆழ்ந்த வாசிப்புப் பழக்கம் கொண்டவர் என்பதை இவருடைய எழுத்துக்கள் மெய்ப்பிக்கின்றன. மரபுவழிப்பட்ட வரலாற்று முடிவுகளையும் எழுத்துக்களையும் விவாதத்திற்கு உட்படுத்தி, மக்களின் வழக்காறுகளை அடிப்படையாகக் கொண்டு அடித்தள மக்கள் வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்யும் பணியினைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். இவர் எழுதிய ஆய்வு நூல்கள் இவ்வகையைச் சார்ந்தவை.

நாட்டார் வழக்காற்றியல் புலத்தில் நிகழ்ந்த ஆய்வுகளையும் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஆய்வுகளையும் ஆ.சி. நேர்மையாகப் பதிவு செய்வதோடு மட்டுமல்லாமல் மதிப்பீடும் செய்கிறார். நாட்டார் பண்பாட்டு உருவாக்கம் இவரின் தனித்தன்மையான ஆய்வுப்புலம். நாட்டார் தெய்வங்கள் (பூச்சியம்மன் வில்லுப்பாட்டு, தர்க்கா வழிபாடு), வாய்மொழி வழக்காறுகள் (வாய்மொழிக் கதைகள், சாமியாடும் மனைவி), நம்பிக்கைகள், சடங்குகள் (ஆடிப்பாவை, மழைச் சடங்குகள், மந்திரம் சடங்குகள்), அடித்தள மக்களின் வாழ்வியல் போன்றவற்றில் கூர்மையான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.

வரலாற்றுப் புலத்துக்கு ஆ.சிவசுப்பிரமணியன் குறிப்பிடத் தகுந்த பங்களிப்புகளைச் செய்துள்ளார். தற்போது வழக்கிலிருக்கும் வரலாறுகளின் போதாமையை அவர் நன்கு உணர்ந்ததால் வாய்மொழி வரலாறு, கீழிருந்து வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்தல், வரலாற்றை இடைமறித்தல், உள்ளூர் வரலாற்றை எழுதுதல், சமூக வரலாற்றையும் பண்பாட்டு வரலாற்றையும் அரசியல் பார்வையுடன் அணுக வேண்டியதன் தேவை ஆகியவற்றின் அடிப்படையில் பல்வேறு ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளார். அவர் எழுதிய ‘பொற்காலங்கள்’, ‘அடிமை முறையும் தமிழகமும்’, ‘வ.உ.சி.யும் முதல் தொழிலாளர் வேலை நிறுத்தமும்’, ‘ஆஷ் கொலையும் இந்தியப் புரட்சி இயக்கமும்’, ‘வ.உ.சி வாழ்வும் பணியும்’, ‘தமிழ் அச்சுத் தந்தை அண்ட்ரிக் அடிகளார்’, ‘அடித்தள மக்கள் வரலாறு’, ‘கோபுரத் தற்கொலைகள்’, ‘ஆகஸ்ட் போராட்டம்’, ‘சமபந்தி அரசியல்’, ‘பிள்ளையார் அரசியல்’, ‘தமிழக வண்ணார் - வரலாறும் வழக்காறுகளும்’, ‘பிராமண போஜனமும் சட்டிச் சோறும்’ போன்ற வரலாற்று நூல்கள் முக்கியமானவை. ஏறக்குறைய பத்தாண்டுகளாக “உங்கள் நூலகம்” மாத இதழில் முக்கியமான வரலாற்று நூல்களை அறிமுகப்படுத்தும் பணியினைத் தொடர்ந்து செய்து வருகிறார்

தமிழ்க் கிறித்தவம் குறித்து இவர் மேற்கொண்ட ஆய்வுகள் முக்கியமானவை. ‘கிறித்தவமும் சாதியும்’, ‘கிறித்தவமும் தமிழ்ச் சூழலும்’ போன்ற நூல்கள் குறிப்பிடத் தகுந்தவை.

பொருள்சார் பண்பாடு குறித்து ‘உப்பிட்டவரை’, ‘தோணி’, ‘பனை மரமே! பனைமரமே! - பனையும் தமிழ்ச் சமூகமும்’ ஆகிய நூல்களை ஆ.சி. எழுதியுள்ளார். ஓட்டப்பிடாரம் கத்தரிக்காய், விளக்குமாறாகும் தாவரங்கள், மஞ்சணத்தி, எள், பருத்தி போன்ற போன்ற தாவர வழக்காறுகள் சார்ந்த கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

நாட்டார் வழக்காற்றியல் புலத்தில் பொருள்சார் பண்பாடு (Material Culture) பற்றிக் குறிப்பிடும் படியான ஆய்வுகள் இல்லை என்ற குறையைப் போக்குவதற்கு ஆ.சி. முயற்சி செய்துள்ளார். “புழங்குபொருள் பண்பாடு எனும் ஒரு புதிய ஆய்வுக் களத்தில் முதன்முதலாக ‘தோணி’ பற்றிய முன்னெடுப்பும், ‘உப்பிட்டவரை’ எனும் நூலும் பேராசிரியரின் புலமையாக்கங்களில் பெருமதியானது. பண்பாட்டாய்வில் தோணி, உப்பு ஆகியவற்றைத் தொடர்ந்து தமிழர் புழங்கு பொருளாக வந்திருப்பது ‘பனைமரமே! பனைமரமே!’. ‘புழங்கு பொருட்கள் உண்பதற்கும் உடுப்பதற்கும் உறங்குவதற்குமானவை அன்று. அவை சமூகத்தின் சிந்தனை மரபைக் காட்டுபவை’ எனும் கூற்றை மெய்ப்பிக்கும் நூலிது. ‘பனைமரமே! பனைமரமே!’ தாவர வழக்காற்றியல் என்பதாகவும், புழங்கு பொருள் பற்றிய மானிடவியலாகவும் பரிணமிக்கும் வகையில் நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போன்றதாகும்” (பக்தவத்சல பாரதி, முன்னியம்பல் ப. 11-12).

பனை மரம் குறித்துப் பல நூல்கள் வெளி வந்துள்ளன. அவை பெரும்பாலும் பனை பற்றிய தாவரவியல் விளக்கங்களாக உள்ளன. ஆ.சி.யின் இந்நூல் பனை எவ்வாறு தமிழ்ச் சமூக மக்களின் வாழ்க்கையோடும், பண்பாட்டோடும், மரபு சார்ந்த அறிவுத் துறையோடும், மரபு சார்ந்த தொழில் நுட்பத்தோடும், பொருளாதாரத்தோடும், நுண் அரசியலோடும் ஊடாடியுள்ளது என்பதை இந்நூல் விரிவாக எடுத்துரைக்கின்றது.

இந்நூலுக்காக ஆ.சி. விரிவாகவும் நுட்பமாகவும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் களஆய்வு செய்து வாய்மொழித் தரவுகளையும் புகைப்படங்களையும் சேகரித்துள்ளார். அவற்றை ஆய்வுக்கான முதன்மைத் தரவுகளாகப் பயன்படுத்தியுள்ளார். பனையுடனும், பனைபடு பொருள்களுடனும், பனைத் தொழிலுடனும் தொடர்புடைய வாய்மொழி இலக்கியங்களையும் தரவுகளாகச் சேர்த்துள்ளார். பழந்தமிழ் இலக்கிய நூல்கள், இலக்கண நூல்கள், சமய இலக்கியங்கள், தற்கால இலக்கியங்கள், செப்பேடுகள், கல்வெட்டுக்கள், கடிதங்கள் போன்ற எழுத்தாவணங்களில் பனை குறித்த பதிவுகளை அவர் எடுத்துக் காட்டியுள்ளார்.

பனை மரத்தின் அடி முதல் (வேரும் சேர்த்து) நுனி வரை, ஒவ்வொரு பகுதியும் மக்களின் வாழ்வியல் தேவைகளுக்காகப் பயன்படுபவை. அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளும் தொழில் நுட்ப அறிவினை அம்மக்கள் பெற்றிருக்கின்றனர்.

பனைத் தொழில்நுட்பம், பனைமரமே! பனைமரமே!, ஓலையும் ஈர்க்கும், ஓலையும் சுவடியும், கள்ளும் பதநீரும், கருப்புக்கட்டியும் கற்கண்டும், மருந்துப் பொருள் ஆகிய இயல்களில் பனைபடு பொருட்கள் குறித்து ஆ.சி. விரிவாகப் பேசுகிறார். இந்நூல் பற்றிய மதிப்புரையில் மு. அறிவழகன் இதனைச் சிறப்பாக எடுத்தியம்புகிறார் (‘பனையின் நிலப்பரப்பில் தமிழ்ச் சமூகம்: ஆ.சிவசுப்பிரமணியனின் புழங்குபொருள் பண்பாட்டு ஆய்வு நூல்’ புதிய ஆராய்ச்சி, இதழ் 08, பக். 193-208).

13ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிக்கும் பின்னும் (1259) தமிழகச் சைவக் கோவில்களில் படையல் பொருளாகக் கருப்புக்கட்டி இருந்துள்ளது. இதனைத் தமிழகக் கல்வெட்டுச் செய்திகளைக் கொண்டு நிறுவுகிறார்.

“......இன்று சைவக் கோவில்களில் ஓர் உணவுப் பொருளாகக் கருப்புக்கட்டி நுழைய அனுமதிப்பதில்லை. புளியோதரைப் பிரசாதத்தில் போடப்படும் மிளகாய் வற்றலும், தயிர்சாதப் பிரசாதத்தில் போடப்படும் பச்சை மிளகாயும் போர்ச்சுகீசியர்களால் அறிமுகமானவை. பஞ்சாமிர்தம் என்ற பெயரிலான பழக் கலவையில் பேரீச்சம் பழமும் ஆப்பிளும் கலக்கின்றன. சர்க்கரைப் பொங்கலில் முந்திரிப் பருப்பும் உலர் திராட்சையும், புளியோதரையில் நிலக்கடலையும் இடம்பெறுகின்றன. பாரசீகத்திலிருந்து அறிமுகமான ரோஜா மலரிலிருந்து எடுக்கப்படும் பன்னீர் திருநீராட்டுதல் பொருளாகப் பயன்படுகிறது. இவையெல்லாம் இம்மண் சாராப் பொருட்கள். ஆனால், இம்மண்ணின் பாரம்பரிய இனிப்பான கருப்புக்கட்டி விலக்கப்பட்ட பொருளாக முத்திரையிடப்பட்டு விட்டது. இதற்கான காரணம் ஆய்வுக்குரிய ஒன்று. இந்த ஆய்வைக் கருப்புக்கட்டியின் மூலப் பொருளான பதநீரைத் தரும் பனை மரத்திலிருந்து தொடங்க வேண்டும்.”

என்று குறிப்பிடும் அவர் பதநீரைக் கள்ளாகக் கருதுதலையும், தீண்டாமையையும் காரணமாகக் கூறுகிறார். மேலும் அவர்,

சைவ, வைணவக் கோவில்களிலும் மேட்டிமைச் சாதியினரிடமும் கருப்புக்கட்டி மீது நிலை பெற்றுள்ள விலக்கானது வெறும் சமயம் சார்ந்த ஒன்றல்ல. இம்மண்ணின் பாரம்பரிய நுகர்பொருள் ஒன்றின் மீதான பண்பாட்டுத் தாக்குதலாகும். கல்வெட்டுச் சான்றுகளின் அடிப்படையில் பார்க்கும்போது, திருமடைப்பள்ளியில் இடம் பெற்றிருந்த கருப்புக்கட்டி, பின்னர், திட்டமிட்டே புறக்கணிப்புக்காளானது என்பது புலனாகிறது. ஒரு நிறுவன நிலையைத் திருமடைப்பள்ளி பெற்றிருந்ததால் இதை எளிதாகச் செய்ய முடிந்தது என்று கூறுவது சிந்தனைக்குரியது.

ஆனால், அடித்தள மக்களின் சமய வாழ்விலும் சடங்குகளிலும் கருப்புக்கட்டியின் பங்களிப்பு தொடர்கிறது என்பதையும் அவர் எடுத்துக்காட்டுக்களோடு பதிவு செய்கிறார்.

தமிழகத்தில் கிறித்தவம் பரவிய பின்னர் பனை பற்றிய மறை பரப்புநர்களின் பதிவுகள் பற்றியும், கிறித்தவத்தைத் தழுவிய மக்களிடம் பனைபடு பொருள்களின் பயன்பாடுகள் பற்றியும் பல்வேறு சான்றுகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. தத்துவப் போதகர், வீரமாமுனிவர் போன்ற வெளிநாட்டுக் கத்தோலிக்கக் குருமார்கள் தமது படைப்புகளை ஓலைச் சுவடியில் எழுதினார்கள். கௌசானல் அடிகள் சேர்ந்தமரம் (நெல்லை மாவட்டம்) தேவாலயத்தில் 500 ஓலைச் சுவடிகள் இருந்தன என்பதைப் பதிவு செய்துள்ளார்.

காலனிய ஆட்சிக் காலத்தில் அரசாங்கத்திற்கு வருவாய் தரக்கூடியதாகப் பனை மரம் விளங்கியுள்ளது. காலனிய ஆட்சிக்கு முன்னர் வேவ்வேறு காலகட்டங்களில் பனை மரத்திற்கு பலவகையான வரிகளை மன்னர்கள் விதித்திருக்கின்றனர். காலனி ஆட்சியிலும் இது தொடர்ந்தது. ஆப்காரிச் சட்ட விதிப்படி கள் இறக்கும் பனைகளுக்குப் பனைவரி விதிக்கப்பட்டது. பனஞ்சர்க்கரை தயாரிக்கும் ஆலை ஒன்று குலசேகரப்பட்டணத்தில் நிறுவப்பட்டது. அவ்வூரைச் சுற்றியுள்ள பகுதியில் பதனீரும் அதனைக் காய்ச்சுவதற்குரிய எரிபொருளான உடை மரமும் மிகுதி. இப்பொருட்களைக் கொண்டு வருவதற்கு ஏதுவாக குலசேகரன்பட்டணத்திலிருந்து திசையன்விளை, உடன்குடி ஆகிய இடங்களுக்கு தொடர்வண்டித் தொடர்பும் உருவாக்கப்பட்டது. இது போன்ற பல வியப்புக்குரிய தகவல்களை நூல் முழுக்கக் காணலாம்.

பனைத் தொழில் புரிவோர் நாடார் சாதியினர் மட்டுமே என்ற பொதுக் கருத்தினை இந்நூல் மறுக்கிறது. இத்தொழிலைச் செய்பவர்களில் பெரும்பாலானவர்கள் நாடார் சாதியைச் சார்ந்தவர்கள் என்றாலும் தேவேந்திரக் குடும்பர்களும், அவர்களில் ஒரு பிரிவினரான வாதிரியார்களும் பனைத் தொழில் செய்கின்றனர். அவர்கள் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சில ஊர்களில் வாழ்கின்றனர். இவர்களைத் தவிர வலையர்களும், அருந்ததியினரும் இத்தொழிலைச் செய்வதாக நூல் குறிப்பிடுகிறது.

‘ஓலையும் சுவடியும்’ என்ற இயலில் ஆவணங்களுக்கும் தமிழ்ச் சமூகத்துக்கும் இடையிலுள்ள தொடர்பினைப் பனைஓலைச் சுவடிகள் எவ்வாறு பிணைத்திருந்தன என்பதைக் காணலாம். தமிழ்ச் சமூகம் ஓலை ஆவணங்களைப் பாதுகாப்பதற்குரிய முறையைப் பின்பற்றியுள்ளது. ஓலையைப் பதப்படுத்துதல், செய்தி கொண்டு செல்லுதல், எழுத்தாணியின் வகைகள், ஓலைச் சுருள்கள், ஓலையின் வகைகள், ஓலை எழுதுவோர், ஓலை ஆவணங்கள், ஓலை ஊழியம் ஆகியவற்றை நிரல்பட இந்நூல் விளக்குகிறது. ஓலைகளின் உள்ளடக்க விவரங்களையும், அவை சமூகத்தின் அன்றாட நிகழ்வுகளுடன் தொடர்பு கொள்வதையும் ஆ.சி. குறிப்பிடுகிறார். தமிழ்ச் சமூகத்தில் ஆவண அமைப்புகள் இருந்துள்ளன என்பதை இவ்வியல் சிறப்பாக விவாதிக்கிறது.

‘பனையின் சிதைவு’ என்ற இயலில் தற்போது பனைமரங்கள் பேரழிவினைச் சந்திக்கின்றன. பனைத் தொழிலும் அருகிவிட்டது. இந்நிகழ்வுகளுக்கான இரண்டு முக்கியக் காரணங்களை ஆ.சி. முன்மொழிகிறார்: 1. பண்பாட்டு இழிவுக்காளானமை, 2. மாறுதல்களுக்கு உட்படாமை. கள்ளைத் தரும் பனைமரத்தையும் பனைத் தொழிலையும் பனைத் தொழில் செய்வோரையும் இழிவாகக் காணும் போக்கு சமூகத்தில் வளர்ந்தது. பனையேறி என்பது இழி சொல்லாயிற்று. எனவே பனைத் தொழில் செய்வோர்களே அத்தொழிலை வெறுக்கத் தொடங்கினர். நுகர்வோர்கள் கள், பதநீர், கருப்புக்கட்டி ஆகியவற்றைப் பயன்படுத்துவது மதிப்புக் குறைவானது என்று கருதினர்.

பனை குறித்த தாவரவியல் ஆய்வுகள் பெரிதும் வளராமையால், உயரம் குறைந்த பனையைக் கண்டுபிடிக்கவில்லை. பனை அதிக உயரமிருப்பதால் பனைத் தொழில் செய்வதும் கடினமானது. காலத்துக்கேற்ற மாற்றம் பனையைப் பொறுத்தவரை நிகழாததும் பனையின் அழிவுக்குக் காரணம்.

பனை விதை விதைத்தல் என்பது தற்போது இயக்கமாக ஆங்காங்கே நிகழ்வது பாராட்டுதற்குரியது.

இந்நூல் எழுதுவதற்குரிய நோக்கத்தை ஆ. சிவசுப்பிரமணியன் பின்வருமாறு கூறுகிறார்:

பனை என்ற மரத்திற்கும் இம்மரம் வளர்ந்து நிற்கும் தமிழ் மண்ணிற்கும் இடையிலான தொன்மையான உறவையும் தமிழரின் பண்பாட்டு வாழ்வில் இதன் தாக்கத்தையும் பனை தொடர்பான தொழில்நுட்பச் செய்திகளையும் வாய்மொழி வழக்காறுகளையும் உரிய முறையில் பதிவு செய்வது என் அடிப்படை நோக்கமாகும்.

பனை என்ற ஒரு தாவரத்தை எடுத்துக் கொண்டு, அதைப் பற்றிய இலக்கியப் பதிவுகள், தொல்லியல் பதிவுகள், தலவிருட்சமாகக் கருதும் ஊர்கள், வாய்மொழி வழக்காறுகள், பனையின் பயன்பாடுகள், பனைபடு பொருட்களைப் பயன்படுத்துதல், பொருளாதாரச் செயல்பாடுகள், பனைத் தொழில் செய்வோர் வாழ்க்கை, பனைபடு பொருள்கள் குறித்த அரசியல் என இன்னும் இன்னும் விரிந்து செல்லும் ஆய்வு மலைப்பைத் தருகிறது. பொருள்சார் பண்பாடு குறித்து இன்னும் நாம் ஆய்வு செய்ய வேண்டியவை பல என்பதை இந்நூல் உணர்த்தி நிற்கிறது.

இந்நூலுக்காகப் பேராசிரியர் மேலைநாட்டுக் கோட்பாடுகளைத் தேடிச் செல்லவில்லை. அதற்கான தேவையும் அவருக்கு உருவாகவில்லை. பக்தவத்சல பாரதி இந்நூல் குறித்துப் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

அறிவுப்புல நிலையிலிருந்து பார்த்தால் பனை பற்றிய ஒரு புழங்கு பொருளின் தேடுதலில் தொடர்புடைய பல அறிவுத் துறைகளின் சங்கமத்தை முன்னெடுத்துள்ளார் ஆ.சிவம். மேற்குலக ஆய்வு மரபிலிருந்து விலகி ஓர் மண்சார்ந்த தேடுதல் மரபொன்றை நம் கண்முன் நெடிதுயர்த்தி நிறுத்தியுள்ளார். தனக்கேயுரிய சுயாதீனமான புலமை மரபை இந்நூலில் மீண்டும் ஒரு முறை நிரூபித்துக் காட்டியுள்ளார். இனி நாம் மேற்குலகக் கோட்பாடுகளைச் சார்ந்திருக்க வேண்டியதில்லை என்ற ஒரு வலுவான தடத்தையும் இந்நூலில் அவர் காட்டுகிறார். இது ஓர் அச்சு அசலான மண்சார்ந்த ஆய்வுமுறை எனலாம்.

இந்த நூலை நாட்டார் வழக்காற்றியல் புலத்தினர் பொருள்சார் பண்பாட்டு ஆய்வு நூல் எனலாம்; வரலாற்றாய்வாளர்கள் வரலாற்று எழுதியல் என்பதற்கான எடுத்துக்காட்டாகக் கருதலாம். மொத்தத்தில் இந்த நூலின் அணுகுமுறை பண்பாட்டாய்வாளர்களுக்குப் பெரிதும் பயன்படும். நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர்கள் ஒரு விடயத்தைத் தேர்வு செய்து எவ்வாறு களஆய்வு மேற்கொள்வது, எவ்வாறு பல்துறை இணைப்பாய்வு செய்வது என்பவற்றை இந்நூலிலிருந்து கற்றுக் கொள்ளலாம்.

இந்த நூல் வெளிவந்த வேளை; தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலத் தலைவர் திரு. சி.சொக்கலிங்கத்திடம் இந்நூல் குறித்துப் பேசிக் கொண்டிருந்தேன். “மணி அண்ணாச்சி நிமிர்ந்து நிற்கிறார். நூல் முழுவதும் மார்க்சிய அணுகுமுறையிலானது. மண்சார்ந்த மார்க்சியம். ஆனால், மார்க்சியக் கலைச் சொற்கள் ஏதும் இடம்பெறவில்லை. இவ்வாறுதான் பண்பாட்டாய்வு செய்ய வேண்டும் என்பதற்கு இந்நூல் எடுத்துக்காட்டு” என்றார். நான் இதனை பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன் அவர்களிடம் சொன்னேன். “இதனை நான் நம்முடைய பேராசிரியரிடமிருந்துதான் (நா.வானமாமலை) கற்றேன். அவர் பதிப்பித்த கட்டபொம்மன் கதைப்பாடலுக்கு எழுதிய முன்னுரைதான் இந்த முறையியலை எனக்குக் கற்றுத் தந்தது” என்று கூறினார். அவருடைய எல்லா நூல்களும் இந்த அணுகுமுறையில் எழுதப்பட்டவை தாம்.

இந்தக் கட்டுரையைப் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் கூற்றோடு முடிக்கிறேன்:

“இந்திய வரலாற்றில் வர்க்கங்களுடன் வருணமும் இணைந்தே வந்துள்ளது. இதன் அடிப்படையில், பொருள் உற்பத்தி முறை என்ற எல்லைக்குள் அடங்காத சில வரலாற்றுச் சிக்கல்கள் இந்திய வரலாற்றில் உண்டு. எனவே, முதலாளி, குட்டி முதலாளி, தொழிலாளி, உதிரித் தொழிலாளி, நிலப்பிரபு, குடியானவன் என்ற வர்க்கப் பாகுபாடுகளைத் தாண்டி நிற்கும் சாதியப் பாகுபாடுகளும் கணக்கில் கொள்ளத்தக்கவை. இந்திய மார்க்சிய வரலாற்று வரைவியல் இதை உள்வாங்கியாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. குறைந்தபட்சம் இது குறித்துச் சிந்தித்து விவாதிக்க வேண்டிய தார்மீகக் கடமை அதன்முன் உள்ளது.”

(வரலாறும் வழக்காறும், 2008: 23)

Pin It