harvest riceதமிழ்நாட்டில் பல்வேறு படையெடுப்புகள் நடந்தன. அதன் காரணமாகவும், உள் அரசியல் ஊடுருவலின் காரணமாகவும், பல்வேறு மொழிகள் பேசும் மக்கள் குடியேறவும், பல்வேறு மொழிகள் பேசவும் காரணமாயின.

தமிழகத்தில் தென் மாவட்டங்களுக்கென தனித்த மண்ணின் மணம் உண்டு. தெலுங்கு பேசும் மக்களிடையே அதுவும் கரிசல் வட்டாரங்களில் சொலவடைகள் அதிகமாகச் சொல்லப்படுகின்றன.

ஒவ்வொன்றும் வாழ்வியல் சூழலில் வெளிப்பட்டு ஆயிரம் அர்த்தங்களைச் சொல்பவை. மொழியை ஆவணப்படுத்துவது போல் சொலவடைகளையும் ஆவணப்படுத்துவது முக்கியமாகும்.

ஏனென்றால் சொலவடைகள் பாமர மக்களிடையே அதிகமாகப் புழங்குகிறது. பழமொழி படித்தவர்கள் மத்தியிலும், சொலவடைகள் பாமரர் மத்தியிலும் நிலவுகிறது. ஒவ்வொரு சொலவடையும் கிராமப்புற வாழ்வியல் இலக்கணத்தை எடுத்துரைக்கிறது. அத்தனையும் குடும்பம் எனும் கட்டுப்பாட்டை மீறாத சொல் மொழிகளாகும்.

சொலவடைகள் வாழ்க்கையில் வாழ்ந்து அனுபவித்த வயதானவர்களிடையே அதிகமாக இருக்கிறது. அதிலும் பெண்கள் தான் அதிகமாக சொலவடையைச் சொல்கிறார்கள். பெரும்பாலும் பொருளாதாரத்திலும் ஒடுக்கப்பட்ட மக்களிடையேயும் அதிகமாக வழக்கில் இருக்கின்றன. வயதானவர்கள் சொல்லும் சொலவடையை ஆவணப்படுத்த வேண்டும்.

இல்லையெனில் தமிழ் மொழியின் வளமை அடுத்த தலைமுறைக்குத் தெரியாமலே போய்விடும். ஒவ்வொரு சொலவடையும் வாழ்வியல் பண்பாட்டு அடிப்படையில் தோன்றியதாகும். இவை மனதில் பதியும்படி மொழி நயத்துடன் விளங்குவதைப் பார்க்க முடிகிறது.

கிராமப்புறங்களில் ஆதங்கம், விருப்பு வெறுப்பு, கோபதாபங்களுக்கு ஆட்பட்ட மனிதர்களை ஆறுதல்படுத்தும் சுக மொழியாகவும், உயிர் மொழியாகவும் சொலவடைகள் இருந்தன. இவை நேரிடையாக இல்லாமல் சாடை வைத்து பேசும்மொழியாகவும் தப்பு செய்தவர்களைத் திருத்தும் மொழியாகவும் இருந்தன.

தெலுங்கு சொலவடைகள் அதிகமாக இருக்கின்றன. அத்தனையும் வெளிக்கொணர வேண்டும். இருப்பினும் அதில் மூன்று சொலவடைகளை மட்டுமே இக்கட்டுரைக்காக தெரிவு செய்திருக்கிறேன். ஆங்கிலத்தில் ‘க’ ஒலிக்கு K,g,h எனவும், ‘ப’ ஒலிக்கு p,b எனவும், ‘த’ ஒலிக்கு t,d எனவும் ஒலிப்புமுறைகள் உள்ளன.

ஆனால் தமிழ்ச் சொற்களில் க,ப,த இடம் பெறுவதைப் பொறுத்து ஒலிப்புமுறை வேறுபடுகிறது. ஆனால் எழுத்து ஒன்றுதான். ‘ஹ’ எனும் கிரந்த எழுத்துக்கு மட்டும் h ஒலிப்பு முறையாகிறது. ஆகையால் இந்த மூன்று தெலுங்கு சொலவடைகளுக்கும் கீழே ஒலிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.

தூட்ட கணங்க உண்டித்ததா தூட கெத்துலு வேசு

Dhutta kananka undithatha dhuda keththulu vesu

தூணுக்கல் பலமாக இருந்தால்தான் அதில் கட்டிப்போட்ட கன்றுக்குட்டி மகிழ்ச்சியாக துள்ளிக்குதித்து விளையாட முடியும்.

“கொடுமை கொடுமை
மானிடராய்ப் பிறப்பது;
அதனினும் கொடுமை
பெண்களாய்ப் பிறப்பதே;”

மனித சமூகம் தோன்றிய காலத்தில் இருந்தே பெண்ணை சக, மனுசியாகப் பார்க்கும் எண்ணம் இல்லாமல் அவளை அடிமைப்படுத்தி, ஆண்சமூகத்திற்கு அடிமைப்பட்ட சமூகமாகக் காலங்காலமாக இருப்பது எழுதப்படாத விதியாகும்.

விதிவிலக்காக 21 ஆம் நூற்றாண்டில் பெண்கள் கல்வி கற்று தன்னம்பிக்கையுடன் வாழக் கற்றுக் கொண்டதால் நீ என்ன எனக்கு உரிமையும் மரியாதையும் தருவது, எனக்கு நானே தேடிக்கொள்வேன் என்ற நிலையில் பல்வேறு சிரமங்களையும் இடர்பாடுகளையும் கடந்து முன்னேறி வருவதைப் பார்க்க முடிகிறது.

பெண்களுக்குத் திருமணமாகி புகுந்த வீடான கணவன் வீட்டிற்குச்சென்று வாழ முற்படும்போது எல்லோருக்கும் இனிமையான சூழல் அமைவதில்லை. பலர் பல்வேறு இன்னல்களைச் சந்திக்கின்றனர்.

தான் சார்ந்த குடும்பத்தைப் பற்றியும் தன்னைப் பற்றியும் புகுந்த வீட்டார் தரக்குறைவாகப் பேசும்போது ஏதும் பேசா மடந்தையாகவே இருக்கிறாள். கணவன் புரிந்துகொண்டு தனக்காக பரிந்துபேசப்பட்டாலொழிய பெண்ணுக்கு நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டு.

அது இல்லாத பட்சத்தில் மண்ணுக்கும் கேடாக மதித்தீரோ பெண்ணினத்தை என்னும் பாவேந்தரின் கருத்தே கண்கூடு. இவற்றில் இருந்தெல்லாம் விடுபட கணவன், குடும்பத்திற்கு பொருளாதார ரீதியாகவும் பொறுப்புள்ளவனாகவும் குடும்பக் கடமை ஆற்றுபவனாகவும் இருக்கவேண்டும். இல்லையென்றால் அந்த இடத்தில் இந்த சொலவடை சாத்தியமாகிறது.

தூட்ட (dhutta) (கண்ணுக்குட்டியைக் கட்டிப்போடும் தூணுக்கல்லோ, மர நுகத்தடியோ)

கணங்க (kananka) (பலமாக), உண்டித்ததா (undithatha) (இருந்தால்தான்), தூட (dhuda) (கன்றுக்குட்டி)

கெத்துலு வேசு (kethulu vesu) (மகிழ்ச்சியாக துள்ளிக் குதித்து விளையாடும்)

அதாவது மாட்டுக்கொட்டிலில் மாடு, கன்றுக்குட்டிகளைக் கட்டிப்போடும் தூணுக்கல்லோ மர நுகத்தடியோ பலமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் கன்றுக்குட்டி போடும் ஆட்டத்திற்கு கல்லோ மரமோ பிடுங்கிக்கொண்டு வந்துவிடும். தூணுக்கல் பலமாக இருந்தால்தான் கன்றுக்குட்டி மகிழ்ச்சியாக துள்ளிக்குதித்து விளையாட முடியும்.

அதுபோல ஒரு பெண்ணானவள் திருமணமான கணவன் வீட்டில் (அன்னையும் (தாய்) அத்தனும் (தந்தை) அல்லரோ தோழி, குறுந்தொகை) தனக்கு எல்லாமுமாக இருக்கும் கணவன் சரியாக இருந்தால்தான் அவ்வீட்டில் வாழ வந்த பெண் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க முடியும்.

நியாயமான பேச்சைக்கூட கேட்க மறுக்கும் அவல சூழலில் எழுந்ததுதான் இச்சொலவடை. கணவனுக்கு மரியாதையும் மதிப்பும் இருக்கும் வீட்டில்தான் மனைவிக்கும் அது கிடைக்கும். கிடைக்காத பட்சத்தில் அவளுக்கு தினம் தினம் வேதனைதான் மிஞ்சும்.

ஆகட்டிகு அட்டமா சிகட்டிகு தோடா

Akattiku addama sikattiku thoda

திருமணமாகி குழந்தைகள் பெற்று வாழ்க்கை நடத்தும் குடும்பச் சூழலில் தன் வருத்தத்திலும் வலியிலும் பங்கெடுக்காத கணவனைக் குறித்து சொல்லும் சொலவடை. என்னதான் கணவன் தன் சுகதுக்கங்களில் பங்கெடுக்காவிட்டாலும் கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன் எனும் பழமொழிக்குச் சான்றாகத்தான் இன்றைய பெண் சமூகம் இருக்கிறது.

ஒருசிலர் மட்டுமே காலுக்குச் சேராத செருப்பை கழட்டி எறி என்பது போல் எதற்குமே உதவாத ஆணை விட்டு விலகி தன்னம்பிக்கையால் குடும்பத்தைக் கொண்டுசெல்லும் பெண்கள் உருவாகியும் உருவாக்கியும் வருகின்றனர்.

என்னதான் கணவனால் உதவி இல்லாவிட்டாலும் அவ்வளவு சீக்கிரம் ஒரு பெண் தன் கணவனை விட்டு விலகமாட்டாள். எப்படியாவது திருத்துவதற்குத்தான் முயற்சி செய்வாள். முடியவில்லையென்றால் ஒரு ஆணாக அக்குடும்பத்தில் இருப்பதே தன் குடும்பத்திற்குக் கிடைக்கும் சமூகப் பாதுகாப்பு என எண்ணும் பெண்கள்தான் அதிகம்.

எச்சிலை விழுங்கவும் முடியாமல் துப்பவும் முடியாமல் தவிக்கும் சூழல் எப்படி இருக்குமோ அப்படித்தான் பெண்ணின் நிலையும். பிறரிடமும் பிறந்த வீட்டாரிடமும் தன் கணவனை விட்டுக்கொடுக்காத பெண்ணின் பிடிவாதத்தைக் கண்டு இந்த சொலவடை சொல்லப்பட்டது.

ஆகட்டிகு (akattiku) (பசிக்கு), அட்டமா (addama) (உதவியா)

சீகட்டிகு (sikattiku) (இரவில்), தோடா (thoda) (துணையா)

அதாவது பசிக்குதே என்ற வயிற்றுக்கும் கஷ்டப்படும் குடும்பத்திற்கும் உதவப்போகிறானா, இல்ல நீ போகிற இடத்திற்கெல்லாம் துணைக்கு வரப்போகிறானா. மொத்தத்தில் உன்னுடைய கஷ்டத்தில் பங்கெடுக்கலையே பிறகு ஏன் எதுக்கு அவனையே நினைச்சு மனசு மருகுற எனப் பெரியவர்கள் ஆறுதல்படுத்தும் பொருட்டு இச்சொலவடை சொல்லப்படுகிறது.

இல்லு ரேனே அம்ம ஈனஞ்செட மூண்டு ரேனே அம்ம மானஞ்செட.

Illu rene amma inancheda muundu rene amma manancheda

வீடு என்பது எல்லோருக்கும் பெரிய கனவு. என்னதான் கஷ்டப்பட்டாலும் தன் வாழ்நாளில் ஒரு சொந்த வீடு வாங்கிவிடவேண்டும் என்பதே எல்லோருடைய வாழ்க்கையிலும் தீராத கனவாக இருக்கிறது. எலி வளையானாலும் தனி வளை வேண்டும் என்பது மானத்திற்காகச் சொல்லப்பட்டது.

அதாவது வாடகை வீட்டில் இருப்போருக்குத்தான் அவலம் புரியும். ஒவ்வொருமுறையும் வீடு எங்களுக்கு வேணும். வீடு காலி பண்ணிக்கோங்க எனும்போது அதற்கு முன்பு வரை நல்லவர்களாகத் தெரிந்தவர்கள் அப்போது பகையாளியாகத் தெரிவர்.

எவ்வளவோ மன வேதனை. சட்டிபானை எல்லாம் எடுத்துட்டு சின்னக்குழந்தைகள் வைத்திருப்பவர்களுக்கோ, பருவம் வந்த பிள்ளைகள் உள்ளவர்களுக்கோ, கணவன் இல்லாதவர்களுக்கோ எதுவுமே ஆதரவு அற்றோர்களுக்கோதான் தெரியும் வீடு காலி செய்வது என்பதும் வேறொரு வீடு தேடுவது என்பதும் எவ்வளவு சிரமம், மனஉளைச்சலைத் தரும் என்பது. நகரத்திலாவது பரவாயில்லை.

கிராமத்திலோ ஏளனமாகப் பார்க்கும் பார்வை இருக்கே அவ்வளவு சீக்கிரம் அதில் இருந்து கடக்கமுடியாது. அதனால்தான் கஷ்டப்படும் அம்மா சொல்வாள், நான் தான் அந்தக் காலத்திலே சட்டிபுட்டியைத் தூக்கிட்டு வீடுவீடா அலைஞ்சேன், என் பிள்ளை அந்த அவலத்தைச் சந்திக்கக்கூடாது என்று எத்தனையோ பெற்றோர்கள் எதிர்கால தலைமுறையினர்க்கு தேவைக்கேற்ப நிலையாக ஒதுங்க நிழலை தன் தகுதிக்கேற்ப அமைப்பதில் பெரும்பாடுபடுவதைப் பார்க்கிறோம்.

வீடு இல்லாதவர்களுக்குப் பிறர் பார்க்கும் பார்வை ஏளனத்தையும் இழிவையும் கேவலத்தையும் பெருமையைக் குலைப்பதாகவும் இருப்பதால் ஈனம் என்ற சொல் பயன்பட்டிருக்கிறது. அதைப்போல திருமணமான பெண்ணுக்குத் தன் கணவனே துணை என்ற நிலையில் கணவனை விட்டோ கணவன் இறந்துவிட்டாலோ அந்தப் பெண் சமூகத்தில் சந்திக்கும் அவல நிலை சொல்லி மாளாது.

இன்றைய சூழலில் கணவனை இழந்த அல்லது விட்டு விலகிய பெண்கள் சுயமாக சம்பாதித்து தன் காலில் நின்று குடும்பத்தைத் தாங்கும் மனவலிமையைப் பெற்றிருக்கின்றனர். தன் மானத்திற்கு இழுக்கு வரும் சூழலில் அதையெல்லாம் வீணர்களின் வெற்றுப்பேச்சு என ஒதுக்கிவிட்டு தன் பாதையில் தனிமனித ஒழுக்கத்துடன் வாழும் பெண்கள் விதிவிலக்கு.

கிராமத்து சூழலில் வாழும் பெண்களுக்குப் பொருத்தமானதாய் இச்சொலவடை அமைகிறது. எப்போதும் சொந்த வீடு என்பதிலும் வாடகைவீட்டில் இருந்து வெளியேறும்போதும் பெண்களுக்கே அதிக கவலையும் மன உளைச்சலும். அதனால் இது பெண்களை மையப்படுத்திய சொலவடை ஆகும்.  

இல்லு (illu) (வீடு) தெலுங்கில் ‘இல்’ கன்னடத்தில் ‘மனை’ மலையாளத்தில் ‘பொறை’ சங்க இலக்கியத்தில் குடிசை (குரம்பை) எனப்படுகிறது.

ரேனே (rene) (இல்லாத)

அம்ம (amma) (பெண்களைக் குறிப்பிடுவது)

ஈனம் (inam) (இழிவு, கேவலம், அவமானம், பெருமையைக் குலைத்தல்)

செட (cheda)  (அழிவது)

மூண்டு (muundu) (கணவன்)

ரேனே (rene) (இல்லாத)

அம்ம (amma) (பெண்களைக் குறிப்பிடுவது)

மானம் (manam) (உயிரினும் மேலாகக் கருதப்படுவது)

செட (cheda)  (அழிவது)

சொலவடைகள் என்பதே தென் மாவட்டங்களில் உலா வருகின்ற சொல். அதாவது தென்மாவட்ட கரிசல் மண்ணின் வாசனையும் மக்களின் மனமும் சேர்ந்து வருகிறபோது அதற்கென தனிச்சிறப்பு உண்டு.

நாட்டார் வழக்காறுகளைக் கண்டறிந்த பேராசிரியர் நா.வானமாமலை, கரிசல் வட்டார மக்களின் மொழியை நிலைநிறுத்திய மக்கள் படைப்பாளி கி.ராஜநாராயணன், மக்களோடு மக்களாகக் கேட்டு சேகரித்த எஸ்.எஸ்.போத்தையா, எஸ்.எம்.கார்க்கி, எம்.பி.எம்.ராஜவேலு,

கு சின்னப்பபாரதி, அன்னகாமு, கழனியூரன், பாரதிதேவி போன்றவர்கள் போட்ட விதைதான் நாட்டுப்புற மக்களின் வழக்காறுகளாகும். நாட்டுப்புற மக்களின் வாழ்வியல் துயரங்களை, விருப்பு வெறுப்புகளை, சுக துக்கங்களை, இலைமறை காயாக உணர்த்துவது சொலவடைகள். இது தமிழ்மொழியின் வளமைக்கும் மக்களின் பண்பாட்டிற்கும் சான்றாகவும் வலு சேர்ப்பதாகவும் அமைகிறது.

- முனைவர் நா.சுலோசனா

Pin It