உயிர் என்பது ஒன்றாக இருந்தாலும் செயற் பாட்டு அடிப்படையில் உயிரினங்கள் ஒவ்வொன்றும் வேறுபடுகின்றன. அவற்றுள்ளும் குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சி பெற்ற மானுடத்தின் தொடக்கம் முதல் இன்று வரையிலான வாழ்க்கை பிரமிக்கத் தக்க ஒன்றாகும். உலகத்தின் ஆக்கம், அழிவு என எல்லாவற்றுக்கும் மக்களின் மூளையே காரணமாக இருக்கின்றது.

மூளைக்குள் சுற்றுலா என்னும் நூல் மூளையின் பாகங்களை அக்குவேறு ஆணி வேறாகப் பகுத்து விளக்குவதோடு நின்றுவிடவில்லை. தனிமனித வாழ்க்கை, சமுதாயம், நாடு, உலகம் முதல் அண்டங்கள் அனைத்தையும் சுற்றிப் பார்க்க நம்மை அழைத்துச் செல்கிறது. நூலாசிரியர் வெ.இறையன்பு தம்முடைய மூளையைக் கசக்கிப் பிழிந்து மூளை தொடர்பான அனைத்துச் செய்திகளையும் ஒன்று விடாமல் தொகுத்து விளக்கியுள்ளார்.

மூளை தொடர்பான அறிவியல் விளக்கங்கள் மருத்துவம் பயில்வோர் அறிந்துகொள்ள பேருதவியாக இருக்கும். நினைவில் நிற்காத நுட்பமான செய்தி களாக இருந்தாலும் மூளை பற்றிய அடிப்படையான தன்மைகளை அறிந்துகொள்ள மூளைக்குள் சுற்றுலா பெரிதும் உதவும்.

இந்த நூலைப் படிக்கும்போது இன்னொன்றையும் உணர்ந்துகொள்ள முடிந்தது. அதுதான் தாய்மொழிக் கல்வி; ஆங்கிலத்திற்கு வாக்கப்பட்டு இத்தனை ஆண்டு காலம் ஆகியும் வயிற்றுப் பிழைப்புக்காகத் தொட்டு உறவாடுகின்றோம். நம்மில் சிலருக்கு வேண்டுமானால் பொருளாதார வளம் இருக்கலாம். பிறமொழியாளர்கள் ஆங்கிலத்தைப் படிப்பதால் அலுவலகப் பிழைப்புக்குப் பயன்படுமே தவிர, அதன் வளர்ச்சிக்கு யாரும் அதிகமாகப் பங்காற்றி விடவில்லை.

தாயிடமிருந்து தொப்புள்கொடி உறவை அறுத்த கொஞ்ச காலத்திலேயே ஏதாவது ஒரு ஆங்கிலக் கல்விக் கடையில் குழந்தைகளைச் சேர்த்து விடுகிறோம். மளமளவென்று மாறிப் பொறியியல் போன்ற பட்டங்களைப் பெற்று விடுகின்றார்கள்.

வேலை வாய்ப்பைத் தேடிச் சென்றால், பொறியியல் கல்லூரிகள் மூடப்படுவதைப் போன்று பல்லாயிரம் பேருக்குப் பணிபுரியும் வாய்ப்புக் கிடைக்கவில்லை; கேட்டால் ஆங்கிலத்தில் புழங்கும் திறன் இல்லையாம்.

ஆங்கிலம் தெரியாவிட்டால் உலகில் வாழ்ந்து பயனில்லை என்பது போலத் தமிழ் மக்கள்போல அனைவரும் நினைக்கின்றனர். ஆங்கிலம் பேசினால் அறிவாளி என்ற எண்ணமும் தமிழகத்தில் பலருக்கு இருக்கிறது. கோமல் சுவாமிநாதன் ஒருமுறை, ‘ஆங்கிலம் பேசுபவர்கள் அறிவாளி என்றால் இங்கிலாந்தில் இருக்கும் பிச்சைக்காரிகூட நம்மை விடப் பிரமாதமாகப் பேசுவாள்’ என்று குறிப்பிட்டது நினைவுக்கு வருகிறது (ப. 541) என்று குறிப்பிடுவது நினைக்கத்தக்கது.

கல்விக் கூடங்களில் ஆங்கிலத்தில் பேசாமல் தாய்மொழியில் பேசினால் தண்டனை. ஆங்கில வழியாகப் படித்து நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றது எல்லாம் என்ன ஆயிற்று? வினாக்கள் எழும் அல்லவா?

தாய்மொழியிலும் மொழி தொடர்பான மொழி யியலிலும் இரண்டு முதுகலைப் பட்டங்கள் பெற்று, ஆங்கில இலக்கியத்திலும் முதுகலைப் பட்டம்பெற ஆசை. பணியின் பொருட்டு அந்த ஆசை ஈடேற வில்லை.

ஆங்கிலத் தேர்விற்குச் செல்வது போலவும் பேருந்தைத் தவற விட்டதுபோலவும் பல்வேறு கனவுகள். சொன்னால் நம்பமாட்டீர்கள். பணி ஓய்வு பெற்றுப் பல ஆண்டுகள் ஆகியும் இப்போதும் கனவில் ஆங்கிலம் என்னைத் துரத்திக் கொண்டிருக் கின்றது. ஆண்டவர்கள் மண்ணை விட்டுச் சென்றாலும் அவர்களின் மொழி இப்படிக் கனவில் கூட மிரட்டு வதைப் பலர் குறிப்பிட்டுள்ளார்கள். நம் கனவுகள் குழந்தைகளைத் துரத்த, ஆங்கிலவழிப்பாடங்கள் அவர்களைத் துரத்த, தூக்கத்திலும் நாய் துரத்திப் பயந்து ஓடுவதுபோல ஓடிக் கொண்டிருக்கிறார்கள். இரண்டாட்டில் ஊட்டிய குட்டிகள் நிலைதான். தாய்மொழியில் பொருள் உணர்ந்து படிப்பது தாய்ப்பால்; அந்நிய மொழியில், எதிர்காலக் கனவு களுக்காகப் படிப்பது புட்டிப்பால். ஒன்றைப் படிக்கும் போது, இணைப்புகள் ஏற்படாவிட்டால் அது மூளையில் பதியவில்லை என்று பொருள். மூளையிலும் கூட்டணி முக்கியம் (ப. 29) என்னும் நூலாசிரியரின் கருத்தோடு அரசியல் கூட்டணிகளை எல்லாம் ஒப்பிட்டுப் பார்க்கக்கூடாது.

இவ்வளவையும் எழுதுவதற்குக் காரணம் மூளைக்குள் சுற்றுலாதான். நூலாசிரியர் வெ.இறையன்பு நூல்கள், கட்டுரைகள், இணையம் எனப் பல்வேறு நிலையில் தரவுகளைத் திரட்டி, மூளைக்கு வேலை கொடுத்து இந்நூலை எழுதி இருக்கின்றார். தமிழில் எழுதப்பட்டுள்ளதால்தான் மூளையின் அருமை, பெருமைகளை எல்லாம் அறிந்துகொள்ள முடிகின்றது. ஆங்கிலத்தில் எழுதி இருந்தால் தமிழகத்தில் பத்தோடு பதினொன்று, அத்தோடு இது ஒன்று என்று ஆகி இருக்கும்.

முத்துக் குளிப்பது போலக் கருத்துகளைத் தெரிவுசெய்து, திணிக்காமல் தெளிவாக நூலாசிரியர் வெ.இறையன்பு நூலை யாத்துத் தந்துள்ளார். படிக்கும்போது உணர்ந்த கருத்தை நூலாசிரியரே பதிவு செய்துள்ளார்.

மூளை குறித்த தகவல்களைப் பல்வேறு புத்தகங்களிலிருந்து திரட்டி அதிக அறிவியல் நெடியில்லாமல் எளிமையாக வாசகர்களுக்குத் தரும் இமாலய முயற்சியில் இறங்கியிருக்கிறேன். இது பசிபிக் பெருங்கடலை ஒரு தெள்ளுப் பூச்சி நீந்திக் கடப்பதைப் போன்ற பேராசை முயற்சி (ப. 2).

உண்மை! தற்புகழ்ச்சி அன்று; இலக்கணப் பாயிரம் போன்ற நுழைவாயில் பகுதியைப் படித்தபோது யாப்பருங்கலக் காரிகை ஆசிரியர் அமிதசாகரரின் அவையடக்கம் நினைவிற்கு வந்தது.

பனிமால் இமயப் பொருப்பகம் சேர்ந்த பொல்லாக் கருங்காக்கையும் பொன்நிறமாய் இருக்கும் என்று இவ்வாறு உரைக்கும் அன்றோ இவ் இருநிலமே (யாப்.கா. 3)

காரிகையார் கூறுவது அவையடக்கம் என்றால், நூலாசிரியர் வெ.இறையன்பு கூறுவதை அறிவடக்கம் என்று கூறுவதில் தவறில்லை.

அனைவருக்கும் புரியும் வகையில் எழுதி இருப்பதால் நூலாசிரியரைப் பாராட்ட வேண்டும். சும்மா இருந்துகொண்டு நேரமே கிடைக்கவில்லை என்று சொல்பவர்கள் பலர் இருக்கின்றார்கள். ஆனால் பொறுப்புமிக்க பதவிகளை வகித்துக் கொண்டு ஆய்வுநூல்கள், வழிகாட்டி நூல்கள், படைப்பிலக்கியங்கள் எனப் பல களங்களில் இயங்கிக் கொண்டிருக்கும் நூலாசிரியர் படிப்பவரை ஓர் அண்டச் சுற்றுலாவுக்கே அழைத்துப் போகின்றார்.

அறிவியல், வாழ்வியல் என அனைத்து வகையான தகவல்களும் நூல் முழுவதும் நிறைந்து கிடக் கின்றன. கிராமப்புறங்களில் மூளை தொடர்பான பல கருத்துக்களை நகைச்சுவையாகவும் கிண்டலாகவும் பேசிக்கொள்வார்கள். இன அடிப்படையிலும் உறவு அடிப்படையிலும் மூளையை வைத்துப் பேசினால் கூட அது கிண்டலாகத்தான் இருக்கும்.

ஒரு செய்தியை நினைத்துக்கொண்டு மூளைக்குள் சுற்றுலாவைப் படித்துக் கொண்டிருக்கும்போது அது கண்ணில் பட்டது. மூளையைப் பற்றிய அறிவியல் கருத்துகளோடு மக்களிடம் புழக்கத்திலுள்ள வற்றையும் நூலாசிரியர் விட்டு வைக்கவில்லை என்பதை அறிந்து வியப்பு மேலிட்டது.

முப்பது - நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர்க் கிராமப்புறம் சார்ந்துள்ள நகரங்களில் மதுரை முனியாண்டி விலாஸ் உணவகம் இருக்கும். உணவகத்தில் உள்ள புலால் உணவு வகைகள் எழுதிய பலகை ஒன்று நிற்கும். ஆட்டுக்கறி - ஆட்டுக்கரி என்றும் மூளை - மூலை என்றும் எழுதப்பட்டிருக்கும்.

மாமன் - மச்சான் உறவுடையவர்கள் மதியச் சாப்பாட்டிற்கு ஒரு மதுரை முனியாண்டி விலாஸ§க்குப் போகிறார்கள். ‘எங்க மாப்பிள்ளைக்கு மூளை வேணுமாம்; இருக்கா?’ என்று கேட்க, கல்லாவில் இருப்பவர், ‘அவருக்கும் இல்ல; ஒங்களுக்கும் இல்ல; தீர்ந்து போச்சு’ என்றாராம்.

தமிழகம் முழுவதும் வழக்கில் இருக்கும் இந்த நகைச்சுவை மூளைக்குள் சுற்றுலாவிலும் பதிவாகி இருக்கின்றது.

ஒருவன் அவசரம் அவசரமாக வந்து ஆட்டு மாமிசக் கடையில், ‘மூளை இருக்கிறதா?’ என்று மொட்டையாகக் கேட்டான். கறி விற்பவர், ‘இது வரை வந்தவர்களுக்கு எல்லாம் இருந்தது. உங்களுக்குத்தான் இல்லை’ என்று இருபொருள் படப் பேசினார். (ப. 16).

‘ஒம்மவன் என்னா சொல்லிட்டுப் போறான்; காதுல வாங்குனியா?’ குடும்பத் தலைவர் தாண்டித் தலைகுப்புற விழுகிறார். ‘என்னா இல்லாததயா சொல்லிப்புட்டான்; ஒங்களுக்கு மூளை இருக்கான்னு நான் அடிக்கடி கேட்பேன்; அவன் ஒரே ஒரு தரம் தானே கேட்டுருக்கான்’

‘ஒனக்கு மூளை இருக்கா?’ என்று ஒருவர் கேட்க, எதிரியும் ஒனக்கு மூளை இருக்கா? என்று கேட்டுக் கேள்விக் கணையால், இருவரும் வாய்ச் சண்டை போடுகிறார்கள். சமாதானம் செய்ய வந்தவர் இல்லாத ஒண்ணுக்கு ஏம்பா சண்டை போட்டுக்குறீங்க! என்று வெள்ளந்தியாகச் சொன்னாராம். நல்லவேளை, அவர் உலக வல்லரசு நாடுகளைப் போல ஒன்ன அவன் எப்படிச் சொல்லலாம்? என்று இருவரையும் உசுப்பேற்றி விட்டு அரிவாளையும் கம்பையும் தூக்க விடவில்லை.

இப்படி மூளை தொடர்பான கிண்டல்களையும் நகைச்சுவைகளையும் தொகுத்து ஒரு புத்தகமே எழுதலாம். அந்த அளவிற்கு மூளை தொடர்பான தரவுகள் சமுதாயத்தில் பரவிக் கிடக்கின்றன.

உலகின் ஆக்கம், அழிவு என எல்லாவற்றுக்குமே மூளையே அடிப்படைக் காரணமாக அமைகிறது. காலங் காலமாகவே, காய்கறி நறுக்கப் பயன்படும் கத்தி கழுத்தை அறுக்கவும் பயன்படுவது போலத் தான் மூளை உள்ள மக்களின் செயல்பாடு இருக்கின்றது.

மூளையால் அடைந்துள்ள வளர்ச்சி - அறிவியல் வளர்ச்சியைப் பெருமையாகப் பேசுகின்றோம். உண்மை இல்லாமல் இல்லை. அம்மை, காலரா போன்ற கொடிய நோய்களால் காலங்காலமாகக் கோடிக் கணக்கானோர் மாண்டுள்ளார்கள். பல நோய்கள் அறிவியல் வளர்ச்சியால் கட்டுப்பட்டு உள்ளன; காணாமலும் போய் விட்டன. இன்னொரு பக்கம் புதுப்புது நோய்கள் உற்பத்தி ஆகின்றன. அவை ஒரு தனிக்கதை.

அறிவியல் வளர்ச்சி, தொழிற்புரட்சி, மானுடத்தின் பேராசை இவற்றால் இரண்டு உலகப் போர்களால் துள்ளத்துடிக்க மாண்டு போனவர்களின் உயிர்கள் எல்லாம் வன்மம் நிறைந்த மூளைகளுக்குத் தங்கள் குருதியைக் குடம் குடமாகக் கொட்டி ஆராதனை செய்துள்ளன.

இன்னும் விட்டபாடில்லை; உலகமயம், தாராளமயம், தனியார்மயம், தேசியம் என்னும் வெவ்வேறு பெயர்களில் மூளைகள் குருதியை உறிஞ்சிக் கொண்டுதான் இருக்கின்றன.

ஆய்வோடும் நெருங்கிய தொடர்புடைய நூலாசிரியர் வெ.இறையன்பு மூளைக்குள் சுற்றுலாவை பல இயல்களாகப் பகுத்து 138 உட்பிரிவுகளில் கச்சிதமாக விளக்குகின்றார். இவ்வாறு பகுத்து முறைப்படி எழுதா விட்டால் எழுதும் நூலாசிரியரையும் குழப்பி விடும். படிப்பவரின் மூளையையும் நூல் குழப்பி விடும்.

மூளையின் அருமை பெருமை

நூலாசிரியர் வெ.இறையன்பு மூளையின் அமைப்பு, செயற்பாடு போன்றவற்றை விளக்கும் போது அதன் அருமை, பெருமைகளை நூல் முழுவதும் குறிப்பிடுகின்றார்.

2015 ஆம் ஆண்டு உலகத்தின் நான்காவது சக்திவாய்ந்த சூப்பர் கம்ப்யூட்டர் மனித மூளையின் ஒரு நொடிச் செயல்பாட்டைச் செய்ய 40 நிமிடங்கள் எடுத்துக்கொண்டது (ப. 67). மனிதன் மூளையைக் கசக்கிப் பிழிந்து எதனைக் கண்டுபிடித்தாலும் அவனது மூளைக்கு ஈடு இணை யானது எதுவும் இல்லை என்பதை நூலாசிரியர் பதிவு செய்துள்ளார்.

அவ்வளவு உன்னதமான மூளையின் கண்டு பிடிப்புகள் பெரும்பாலும் பிள்ளையார் பிடிக்கக் குரங்கான கதையாகத்தான் ஆகின்றன. அணுவைப் பிளக்கும் அற்புதத்தைக் கண்டுபிடித்த ஐன்ஸ்டீன் மனம் நொந்தே இறந்து போனாராம். போரில் அணுகுண்டின் அழித்தொழிப்பு, அவர் நினைத்துப் பார்த்ததைவிட அதிகமாக இருந்ததாம்.

உலக நாடுகள் ஒன்றுக்கொன்று நேசக்கரம் நீட்டிக் கொண்டே உதட்டில் உறவும் உள்ளத்தில் பகையுமாக ஏவுகணைகளைக் குறிபார்த்து வைத்துக் கொண்டிருக்கின்றன.

மற்ற விலங்கினங்கள் அவற்றின் உரிமை யோடு மோதுகின்றவற்றை மட்டுமே எதிர்த்துத் தாக்குகின்றன. நாம் பார்த்திராத, சந்தித்திராத, நமக்குச் சம்பந்தமில்லாத மக்களை அழிப்பதற்காகத் தயாராக இருப்பது மனித இனம் மட்டுமே (ப. 9). முடியாட்சி காலத்திலிருந்து இரண்டாம் உலகப் போர் வரை குருதி சிந்திய கோடிக் கணக்கான மக்கள், தற்காலத்தில் லட்சக் கணக்கில் உள்நாட்டுப் போரால் மடிந்த மக்கள், இனிவரும் காலங்களில் மடியப் போகும் மக்களை எல்லாம் நூலாசிரியர், மேலுள்ள கருத்தின் வழிக் குறுகத்தரித்துக் கூறி விடுகின்றார்.

ஆறாம் அறிவால் பகுத்தறிவு படைத்த மனித இனம் மதங்களை உற்பத்தி செய்து கடவுளைக் கைத்தடியாக வைத்துக் கொண்டு இல்லாததை எல்லாம் இருப்பதாகவும் இருப்பதை இல்லாத தாகவும் கூறி ஒன்றோடு ஒன்று மூர்க்கத்தனமாக மோதிக் கொள்ளும். இயல்புக்கு மாறான ஆறறிவு களின் புனைவுகளை நூலாசிரியர் பிரக்ஞைப் பேரெழுச்சி என்று குறிப்பிடுகின்றார்.

பிரக்ஞைப் பேரெழுச்சியின் காரணமாகவே புராணம் புனைவியல், கடவுள், மதங்கள் ஆகியவை தோன்றின. இல்லாதவற்றைக் குறித்தும் பார்க் காதவை பற்றிப் பேசவும் எழுதவும் மனிதனால் மட்டுமே முடியும். சில நேரங்களில் அவன் சண்டை யிட்டுக் கொள்வதும் குண்டு போட்டு மாய்வதும் பார்க்காதவற்றைப் பற்றிய சர்ச்சையால் (ப. 21).

மூளையின் அளவு

எறும்பு முதல் எல்லா உயிர்களுக்கும் மூளை இருப்பதை நூலாசிரியர் ஆங்காங்கே பதிவு செய் கின்றார். அளவையும் குறிப்பிடுகின்றார்.

நம்முடைய மூளை உடல் விகிதம் ஒன்றுக்கு ஐம்பதாக இருக்கிறது. (1:50). சிம்பன்சிக்கு 1:150. கொரில்லாவிற்கு 1:500. சின்னக் குரங்கினங் களுக்கு 1:17லு நம் உடல் அளவிற்கு அவை இருந்தால் அவற்றின் மூளை நான்கு கிலோ இருக்கும். மூளை பெரிதே தவிர, அதில் சாம்பல் நிறப்பொருள் குறைவு (ப. 55).

காக்கைக்கும் தன்குஞ்சு பொன்குஞ்சு என்பது போல அந்தந்த உயிரினத்திற்கு அதனதன் மூளை ஒரு கருவூலம்தான். அந்த மூளை செயலிழந்து விட்டால் மூளைச்சாவு எனக் குறிப்பிடுகின்றார்கள். மனத்தை அதிகமாகத் திறந்தால் மூளை வெளியே விழுந்து விடுவதற்கான ஆபத்துகள் அதிகம் (ப. 55) என டிம் மிஞ்சின் என்னும் அறிஞர் கருத்தை நூலாசிரியர் குறிப்பிடுகின்றார். இக்கூற்றில் பல பொருள் உண்டு. விபத்தில் கால், கை முறிந்தால் உடலோடு ஒட்டிய படியே இருக்கும். தலையில் பலமாக அடிபட்டால் நுங்கு போல மூளை வெளியே வந்து விழும். அதற்குத் தான் தலைக் கவசம் அணிய வேண்டும்.

இன்று பல நெருங்கிய உறவினர்களை மூளையில் காயம் ஏற்பட்டதால் நான் இழந்திருக் கிறேன். தமிழகத்தில் இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது தலைக்கவசம் அணியாததால் விபத்துக்குள்ளாகி மூளைச் சாவைச் சந்திக்கிறார்கள் (ப. 2)

இக்கருத்தைப் படிக்கும்போது நூலாசிரியரின் சமுதாய அக்கறை நன்கு புலப்படுகின்றது. உறுப்புத் தானத்தில் இந்தியாவில் தமிழகம் முதல் இடத்தில் இருக்கின்றது; பரிசு பெறுகின்றது. பாராட்ட வேண்டிய செய்திதான். ஆனால், இதனை ஊன்றிக் கவனித்தால் தண்ணீர் புகுந்த வளைக்குள்ளிருந்து எலிகள் வெளியே ஓடுவது போலப் பல உண்மைகள் வெளிப்படும்.

ஊடகங்கள்வழி நாள்தோறும் செய்தியைப் படித்தாலும் காட்சிகளைப் பார்த்தாலும் ஈரக்குலை நடுங்குகின்றது; இதயம் படபடக்கின்றது. வாகன விபத்துக்களால் குலைகுலையாக மடிகிறார்கள். இளைஞர்கள் மிகுந்த நாடு இந்தியா என்று பெருமை யாகப் பேசிக் கொள்கின்றோம். அந்த இளைஞர்கள் தான் அதிகம் விபத்தில் சிக்கிக் கொள்கிறார்கள். குடித்து விட்டு வாகனங்களை ஓட்டுவதும் தூங்க வேண்டிய நேரத்தில் வாகனங்களை ஓட்டுவதும் விபத்திற்கு அடிப்படைக் காரணங்களாகின்றன.

வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக் குள்ளானது எனச் செய்தியில் படிக்கலாம். போதையில் ஓட்டும்போது எந்த நொடியிலும் கட்டுப்பாட்டை இழக்கலாம். தூக்கமின்றி வாகனம் ஓட்டும்போது விடியற்காலையில் கட்டுப்பாட்டை இழக்கும். விழிப்பிலிருந்து தூக்கம் தொடங்கும் நேரம் ஒரு புதிர். அந்த ஒரு நொடியை விடியற்காலைச் சாலை விபத்துகளிலிருந்து அறிந்து கொள்ளலாம். விபத்து ஏற்படுத்த வரும் தூக்கத்தை நூலாசிரியர் நுண்தூக்கம் (micro - sleep) (பக். 207, 212) என்று குறிப்பிடுகின்றார்.

விபத்தில் மூளை செத்தால் உறுப்புத்தானம் செய்ய வேண்டிய நிலை வரும். மூளைச் சாவுக் குள்ளானோரின் உறுப்புகளைத் தானம் செய்வோரை வாழ்த்தி, வணங்கவேண்டும். இருப்பினும் விபத்துக் கான காரணத்தைத் தனி மனிதனும் சமுதாயமும் அரசுகளும் உணரவேண்டும்.

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்   (திருக். 948)

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் நயத்தக்க நாகரிகத்துடன் சொல்லியுள்ளார்.

நூலாசிரியரும் தம்முடைய உறவு இளைஞர் களின் இழப்பைச் சொல்லியதில் மேலே கூறி யுள்ளவை எல்லாம் இடியாப்பச் சிக்கலாகப் பொதிந்துள்ளன.

பல்வேறு செய்திகள்

நூலாசிரியர் மூளை, நரம்பியல் தொடர்பான செய்திகளை விளக்குவதோடு,

  1. உயிரினங்கள் கருவுற்றிருக்கும் காலம்,
  2. இதயத்தின் பணி 3. நிகோடின் பயண வேகம்,
  3. மனித உறுப்புகளின் எடை, 5. சினை முட்டை, 6. குருதி அளவு, 7. தோலில் உள்ள உறுப்புகள் என நூற்றுக் கணக்கான உடல் தொடர்பாகவும் பிற வகையாகவும் பெட்டிச் செய்திகளைக் கொடுத்து உள்ளார்.
  4. யானையின் கருவுற்றிருக்கும் காலம் 660 நாட்கள். ஒட்டகம் 406. குதிரை 345. குரங்கு 235. சிங்கம் 120. புலி 106. முயல் 40. அணில் 35. சுண்டெலி 23.
  5. நாளன்றுக்கு இதயம் 1,05,120 தடவை துடிக்கிறது. 300 காலன்களுக்கு மேற்பட்ட குருதியை வாரி இறைத்துக் கொண்டிருக்கிறது. 75,00,100 மூளை அணுக்களுக்கு வேலை கொடுக்கிறது (ப. 16)
  6. ரத்தம் - மூளைத்தடுப்பு வெளிப் பொருட்களிலிருந்து மூளையைக் காப்பாற்றுகிறது. அதையும் மீறிப் புகைக்கும்போது நிகோடின் மூளைக்குள் ஏழு வினாடிக்குள் சென்று விடுகிறது (ப. 76).
  7. மூளையின் எடை மூன்று பவுண்டு. மனிதத் தோல் 20 பவுண்டு. குடல்கள் 7.5 பவுண்டு. நுரையீரல் 5 பவுண்டு. கல்லீரல் 3.2 பவுண்டு. இதயம் 0.6 பவுண்டு (ப. 93).
  8. மனித உடலில் இருப்பதிலேயே பெரிய செல் பெண்ணின் சினை முட்டை அது 1/180 அங்குலம் விட்டமுடையது. இருப்பதிலேயே மிகவும் சின்னது ஆணின் விந்து. 1,75,000 விந்துகள் சேர்ந்தால் ஒரு சினை முட்டையின் எடைக்குச் சமமாக இருக்கும் (ப. 124).
  9. ஆணுக்குப் பெண்ணைவிட அதிக ரத்தம். ஆணுக்கு 1.5 காலன். பெண்ணுக்கு 0.875 காலன் ஆண்களின் ரத்தத்தில் சிவப்பணுக்கள் அதிகம். (ப. 128).
  10. நம் தோலில் ஒவ்வொரு சதுர அங்குலத்திலும் 190 லட்சம் செல்களும் 60 முடிகளும் 90 எண்ணெய்ச் சுரப்பி களும் 19 அடி நீள ரத்தக் குழாய்களும் 625 வியர்வைச் சுரப்பிகளும் 19000 உணர்செல்களும் (Sensory cells) இருக்கின்றன (ப. 354).

மூளை, பிற உடல் உறுப்புகளைப் பாடநூல் போல இதற்குமேல் எளிமையாகக் கூறமுடியாது என்னும் நிலையில் நூலாசிரியர் வெ.இறையன்பு விளக்கியுள்ளார். மேலும் இந்த மூளை செய்யும் அற்புதமான பணிகளையும் ஆபத்தான பணிகளையும் சமுதாய அக்கறையுடன் நகைச்சுவையுடனும் அங்கத நிலையிலும் மனதில் பதியும் வகையில் விரிவாக விளக்கிச் செல்கின்றார்.

மூளை அற்புதமான உறுப்பு. நாம் தூங்கி எழுந்ததும் பணிபுரியத் தொடங்கும் அது அலுவலகம் செல்லும் வரை தொடர்ந்து உழைக்கிறது. அலுவலகம் சென்றதும் பணியை நிறுத்தி விடுகிறது (ப. 25).

ராபர்ட் ஃப்ராஸ்ட் என்னும் அறிஞர் கூற்றை நூலாசிரியர் குறிப்பிடுகின்றார். நாடு, இனம், மொழி என வேறுபட்டாலும் மக்கள் மானுட இனத்தவரே. அலுவலகம் மட்டும் இல்லாமல் எல்லாப் பணி களிலும் மூளையின் தந்திரத்தைப் பார்க்கலாம். மதத்திற்காக அடித்துக் கொள்வார்கள். ஆனால் மதங்களுக்காக விடப்படும் விடுமுறையைச் சுகமாக அனுபவிப்பார்கள்!

வயல், கொல்லை வேலைக்குச் செல்லும் கூலி ஆட்கள் நேர் வழியில்தான் செல்வார்கள். அதாவது, வேலை செய்யும் இடத்திற்குச் செல்ல வரப்பு, சிறு உழங்கை இருந்தாலும் அந்த வழியில் போக மாட்டார்கள். சுற்றிப் போகும் சாலையில்தான் போவார்கள். அன்ன நடைதான். வீட்டுக்கு வரும் போது குறுக்காக வந்து மற்றவர் பயிர்களை எல்லாம் மிதித்து நாசம் செய்வார்கள். கிழவிகள் எல்லோரும் குமரிகள் ஆகிவிடுவார்கள். நடையில் அவ்வளவு வேகம் இருக்கும். கூத்துக்காரன் கிழக்கே பார்ப்பான்; கூலிக்காரன் மேற்கே பார்ப்பான் என்று சொலவச் சொல்கூட. இருக்கிறது. மூளை தனக்கென்றால் அழுத்தி உழும்; மற்றவர்களுக்கு வலத்து மாட்டைத் தட்டிவிட்டு உழும். வாய்ப்புக் கிடைத்தால் முந்தைய காலனி ஆதிக்கம் போலவும் இன்றைய உலகமயம் போலவும் தன்னைச் சுற்றியுள்ளவர்கள் நிலங்களையும் சேர்த்து உழுதுவிடும்.

நியாயம், நேர்மை என்பவை ஒருபக்கம் இருந்தாலும் ஒரு செயல் ஒரு கூட்டத்தாருக்கு நன்மையைச் செய்யும்; இன்னொரு கூட்டத்தாருக்குத் தீமையைச் செய்யும். எந்த நிலையில் பார்த்தாலும் நூலாசிரியர் குறிப்பதுபோல மூளை என்பது அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரம் (ப. 3) என்பதில் ஐயமில்லை.

பொதுவாக மக்களுக்குச் சிந்திக்கும் ஆற்றல் கொஞ்சம் கூடுதலாகவும் குறைவாகவும் இருக்கலாம். கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி மூளைக்கு வேலை கொடுத்து, சமுதாயத்தில் ஏற்ற இறக்கங் களை உருவாக்கி விட்டார்கள். பெரும்பான்மையான மக்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டதற்குக் காரணம் மலைக்கும் மடுவுக்குமான வேறுபாட்டை உருவாக்கத் தான்.

உலகமே மாயம்; வாழ்வே மாயம்; வீடுபேறு அடைவதே நிலையானது என்று கருத்துமுதல்வாதம் பேசிய மடங்களிடமும் மதங்களிடமும்தான் இந்தியாவின் பேரளவு நிலங்கள் உரிமையாக உள்ளன.

கிராமப்புறங்களில் ஊருக்கும் ஒன்று, இரண்டு பேரைக் கண்டால் பெரும்பாலான மக்கள் பயப்படு வார்கள். அவர்கள் விழுதாகவும் தெரிவார்கள்; பாம்பாகவும் தெரிவார்கள். அப்படிப்பட்டவர்களை அவருக்கு இராஜாஜி மூளை என்பார்கள்.

1952ஆம் ஆண்டு ஒன்றிணைந்த சென்னை மாகாணச் சட்டசபைப் பொதுத் தேர்தலில் இராஜாஜி போட்டியிடவில்லை. காங்கிரசுக்குப் பெரும் பான்மையும் கிடைக்கவில்லை. பொதுவுடைமைக் கட்சி ஆட்சிக்கு வந்து விடக்கூடாது என்றொரு பயமும் இருந்தது. பொதுவுடைமைக் கட்சியுடன் கூட்டு சேர்ந்து வெற்றி பெற்ற பிறகட்சிச் சட்டமன்ற உறுப்பினர்களைத் தங்கள் பக்கம் இழுத்து, கூட்டு சேர்த்து, அதாவது கூட்டணி அமைத்துக் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தது. இராஜாஜி சென்னை மாகாண முதலமைச்சர் ஆனார்.

இப்போது கொள்கைக் கூட்டணி - கொள்கை இல்லாக் கூட்டணி என்றெல்லாம் பேசுவதற்கும் ஒரு கூட்டணியை உடைக்கலாம் என்பதற்கும் வாய்ப்பாக அமைந்த கூட்டணியின் தொடக்கம் 1952ஆம் ஆண்டுத் தேர்தல்தான்.

குரங்குகளின் தாவலைக் குறிப்பிடும் நூலாசிரியர், எங்குத் தாவுகிறோம் என்பதைவிட, எதற்காகத் தாவுகிறோம் என்பதில் குறிப்பாக இருப்பவர்கள் மனிதர்கள் மட்டுமே (ப. 51) எனக் கூறுவது நகைச் சுவையா? அங்கதமா? இரண்டுமா?

இப்படி மூளையை மூலதனமாகக் கொண்டு இயங்கும் சமுதாயத்தை நூலாசிரியர் வெ.இறையன்பு படிப்பறிவு, பட்டறிவுடன் விளக்குகின்றார். மூளைக்குள் சுற்றுலா மூளையின் சுற்று வேலைகளையும் கணிசமாகப் பதிவு செய்துள்ளது.

மூளையின் எடை

மூளையின் எடை, வடிவம் போன்றவை உயிரினங்களுக்குள் மாறுபட்டிருக்கும்; மனிதர் களுக்கு மூளை பெரிதாக இருந்தால் அறிவாளி என்று கூறமுடியாது போன்ற செய்திகளை நூலாசிரியர் பல இடங்களில் குறிப்பிடுகின்றார். உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரான ஐன்ஸ்டீன் மூளை மிகவும் சிறியது என்னும் கருத்து மூளைக்குள் சுற்றுலாவில் பதிவாகியுள்ளது. (ப. 108).

மூளையை அதிகமாகப் பயன்படுத்தியதால் இவ்வாறு அவருக்குச் சிறுத்துப் போய் இருக்குமோ? உலக மக்களின் மூளைகளின் விலை பற்றிய ஒரு கதை கூட இருக்கிறது.

வெளிநாட்டில் மூளை விற்கும் கடையில் ஒவ்வொரு நாட்டு மக்களின் மூளையும் கண்ணாடிக்குள் வைத்து விலை ஒட்டப்பட்டிருந்த தாம். இந்திய நாட்டு மூளைக்குத்தான் அதிக விலை குறிக்கப்பட்டிருந்ததாம். காரணம் கேட்டபோது கடைக்காரர் அதிகம் பயன்படுத்தாத மூளை என்றாராம்.

கடைக்காரரின் கருத்து வன்மையாகக் கண்டிக்கத் தக்கதுபோல இருக்கிறது. பயன்படுத்தப்பட்ட மூளைதான்; முறையாகப் பயன்படுத்தவில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம். புராணங் களிலும் இதிகாசங்களிலும் கற்பனையாகக் கூறப் பட்டவை எல்லாம் உண்மை என்று நம்பியதால் நம்மவர்கள் மூளையை அதிகம் பயன்படுத்த வில்லை.

விமானம், ஏவுகணை போன்ற எதைக் கூறினாலும் புராண இதிகாசங்களைத் துணைக்கு அழைத்துக் கொள்கிறார்கள். அண்மைக் காலத்தில் மயில் இணை சேராமலே முட்டை இடுதல் முதல் பலவற்றுக்கு விளக்கம் கூறுகிறார்கள். கப்பல் வாணிபத்திற்கு நம்மிடையே இலக்கிய, கல்வெட்டுச் சான்றுகள் நிறைய உள்ளன. சொர்க்கம், நரகம் போன்ற இடங்களுக்கு எல்லாம் நமது விமானம் சென்றது எல்லாம் புராணத்தில்தான் இருக்கிறது. நாட்டின் பாதுகாப்பிற்கு அந்நிய நாடுகளில் பார்த்துப் பார்த்து வாங்குகிறார்கள். ஒவ்வொரு ஆட்சியிலும் போர்த்தளவாட ஊழல் பேசப்படுவது ஒருபக்கம்.

நம்முடைய தொழில் நுட்பங்களை எல்லாம் அந்நியர் திருடிச்சென்று விட்டார்கள் என்ற கருத்தும் பேசப்படுகின்றது. மானுடம் வளர்ந்து செயல்படத் தொடங்கிய பிறகு மூளையின் பங்கே எல்லா வற்றுக்கும் முதன்மையாக இருக்கின்றது. அதிகார வர்க்கம் கூறுவதால் எல்லாவற்றையும் நம்பி விட வேண்டும் என்பதில்லை. ஆனால் உண்மையை உரத்துக் கூறிய சாக்ரடீஸ், கலிலியோ எனப் பலரின் மூளைகள் பெற்ற பரிசுகளை வரலாறு குறித்து வைத்துத்தான் இருக்கிறது.

தமிழர் மூளை

நூலாசிரியர் வெ.இறையன்பு தமிழர் மூளை, மற்றவர்கள் மூளை என்று தனியாக விளக்கவில்லை; தேவையும் இல்லை. மூளையைச் செலவழித்துச் செய்யும் செயல்கள் அவை நல்லவை, கெட்டவையாக இருந்தாலும் உலகப் பொதுமையைப் பார்க்கலாம்.

சூது - வாது, நியாயம் - நேர்மை, நேர்மை - பரிவு போன்றவை எல்லாம் மக்களுக்கு மூளையின் எடை காரணமில்லை. வாழும் சூழல்தான் என நூலாசிரியர் பல இடங்களில் குறிப்பிடுகின்றார். உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீன் சுவரில் எலி போக ஒரு சிறு ஓட்டையும், பூனை போக ஒரு பெரும் ஓட்டையும் போடச் சொன்னாராம். ‘ஐயா, ஒரு பெரும் ஓட்டையிலேயே இரண்டும் ஓடலாமே’ என்றாராம் உதவியாளர்.

அதனதன் மூளைக்கு ஏற்ப உயிரினங்களில் நரி, நாய், பல்லித் தந்திரங்கள் எல்லாம் உள்ளன. அவை மக்களுக்கும் உவமையாகவோ ஆகுபெயராகவோ பயன்படுத்தப்படுகின்றன.

உருவத்திற்கும் குரலுக்கும் கூட மூளையோடு தொடர்பில்லை என்பதை நூலாசிரியர் குறிப்பிடு கின்றார். கம்பீரமான குரல், ஆற்றொழுக்கான நடை, தெளிவு; வானொலிப் பெட்டிக்கு வெளியே வந்து பெரிய உருவத்துடன் பேசுவது போல மனக்கண் பார்க்கும்; கேட்கும். ஆனால் ஒரு புத்தக அட்டையின் பின்பக்கம் பார்க்கும்போது 25 வயதுள்ள ஓர் இளைஞராகக் காட்சி அளிக்கிறார். வேறு யாரும் அல்லர். நூலாசிரியர் குறிப்பிடும் அவர் நண்பர் சுந்தர ஆவுடையப்பன் (ப. 136).

உலக மொழிகள் பலவற்றில் தொன்மையான இலக்கிய, இலக்கணங்கள் இருக்கின்றன. அவை அக்காலச் சமுதாயச் சூழல் அடிப்படையில் எழுதப் பட்டவை. கிரேக்கம், இலத்தீன், சமஸ்கிருதம் போன்ற மொழிகளில் புராண, இதிகாசங்கள் நிறையத் தோன்றியுள்ளன.

பழந்தமிழ் இலக்கியங்கள் இயற்கையோடு இயைந்து வாழ்ந்த பழந்தமிழர் வாழ்க்கையை விளக்குகின்றன. அவை புராண, இதிகாசங்கள் விளக்குவதைப் போன்று கற்பிதங்கள் நிறைந்தவை அல்ல. தமிழகத்தில் கிடைக்கும் தொல்பொருள் ஆய்வுகள் - குறிப்பாகச் சிவகங்கை மாவட்டத்தில் கீழடியில் கிடைத்துள்ள தொல்பொருள்கள் பழந் தமிழரின் இயல்பான வாழ்க்கையை வெளிப்படுத்து கின்றன.

தற்காலச் சூழலில் அறிவு தொடர்பான நம் மூளையைப் பற்றிச் சொன்னால் சிக்கல் வந்து விடும். ஆனால், நம் முன்னோரின் முற்போக்குச் சிந்தனை மிக்க மூளையைப் பற்றிக் குறிப்பிடலாம். உலகில் பெரும்பாலான மதங்கள் உலகம் இறைவனின் படைப்பு என்று கூற, நம் ஆதித்தமிழர் ஒல்காப் பெரும் புகழ் தொல்காப்பியர்,

நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும்

கலந்த மயக்கம் உலகம்...       (தொல். பெருள். 639)

என்று இன்றைய அறிவியல் கூறும் கருத்தை மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கூறியுள்ளார்.

நில அடிப்படையில் ஐவகையாகப் பகுத்து விளக்கும் முறையும் வேறு எந்த மொழியிலும் இல்லை என அறிஞர்கள் குறிப்பிடுகின்றார்கள். இலக்கியம் மட்டும் அல்லாமல் இலக்கணமும் இயற்கையோடு இயைந்த நிலையிலேயே உள்ளது. இதனை ஒரு மேலை நாட்டுப் பன்மொழி அறிஞர் கூறும்போது நம் முன்னோர் மூளைக்கு நாம் பெரும் மதிப்புக் கொடுக்கலாம்.

குறிப்பாகப் பால்பாகுபாட்டை விளக்கும் பெரும்பாலான உலக மொழிகளில் ஆண்பால் பெண்பாலாகவும் ஒன்றன் பாலாகவும், பெண்பால் ஆண்பாலாகவும் ஒன்றன்பாலாகவும் மாறிமாறி இயற்கைக்கு முரணாகக் கூறப்பட்டுள்ளன. திராவிட மொழியியலின் தந்தை எனப் போற்றப்படும் இராபர்ட் கால்டுவெல் தமிழ் மற்றுமுள்ள திராவிட மொழிகளின் பால்பாகுபாடு பகுத்தறிவுடன் கூடிய முற்போக்குச் சிந்தனையை எடுத்தியம்புவதாகத் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலில் கூறுகின்றார்.

The Peculiar Dravidian law of gender which has now been would appear to be a result of Progressive intellectual and grammatical cultivation... (p. 222). 

உலகம் போற்றும் ஆங்கிலத்திலும் இயல்பான பால்பாகுபாடு இல்லை; எழுத்துக்கு ஏற்ற உச்சரிப்பும் இல்லை. ஆங்கிலம் பேசினால்தான் அறிவாளி (ப. 541) என்று நினைக்கும் தமிழர்கள் அறிந்தது கொள்ளவே விளக்கம் கொடுக்கப்படுகின்றது.

குழந்தைகள்

நூலாசிரியர் வெ.இறையன்பு எந்த உயிரினத் தையும் விட்டு வைக்கவில்லை. குறிப்பாகக் குழந்தைகளின் மனநிலையை விளக்கும்போது பிள்ளைகள், பேரப் பிள்ளைகளின் செயல்பாடுகள் எல்லாம் நினைவுக்கு வருகின்றன.

சில வீடுகளில் ஆண்குழந்தை ஒன்றும் பெண் குழந்தை ஒன்றும் இருப்பார்கள். பெண் குழந்தை ஒரு பொருளைக் கூடத் தொலைக்காமல் பத்திரமாக வைத்திருக்கும். ஆண் குழந்தையோ கண்டபடி பொருட்களைப் பரப்பி வைப்பதையும் அடிக்கடி பொருட்களைக் காணவில்லை என்று வீட்டையே இரண்டாக்குவதையும் பார்க்கலாம். மகளை வளர்க்கும்போது சிறிதும் சிரமப்படவில்லை என்று பெற்றோர்கள் அங்கலாய்ப்பதையும் காண நேரிடலாம். (ப. 112).

ஆணுக்கும் பெண்ணுக்கும் சமுதாய நிலையில் வேறுபாடு பார்க்கத் தேவை இல்லை என்றாலும் உடல் அடிப்படையில் வேறுபாடு இருப்பதைப் போன்று மூளை அடிப்படையிலும் வேறுபாடு உள்ளது என்பதை, இவை எல்லாம் மூளையோடு தொடர்புடையவை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். (ப. 112) என்று நூலாசிரியர் தெளிவாகக் கூறுகிறார்.

ஆணாதிக்கம் எனப் பெருஞ் செய்தியாகவும் பெண்ணாதிக்கம் எனக் குறுஞ்செய்தியாகவும் பேசப் படுகின்றன. ஆணாதிக்கத்தால் பெண் குழந்தை, பெண்களின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டாலும் இயல்பாகவே தாய்மையின் ஊற்று அவர்களிடம் பொங்கிக் கொண்டிருக்கும்.

ஒரே பள்ளிக் கூடத்தில் படித்து விட்டுச் சகோதர சகோதரிகள் வீடு திரும்புவார்கள். பையன்கள் புத்தக மூட்டையைத் தூக்கிப் போடுவார்கள். காலை உதறும்போது காலணிகள் ஒவ்வொரு பக்கமாகப் பறக்கும். உடைகளும் கழற்றி வீசப்படும்.

பெண் பிள்ளைகள் எல்லாவற்றையும் ஒழுங்காக வைப்பார்கள். ‘அது அத அந்த எடத்துல வைக்கணும்ன்னு அம்மா தினந்தினம் சொல்லுறாங் கன்னா? கொஞ்சம் கூட அறிவே இல்லையா?’ என்று திட்டுவார்கள். சகோதரர்கள் வீசியவற்றை எல்லாம் ஒழுங்குபடுத்துவார்கள்.

வாசல் முழுவதும் சீவுகள் கொட்ட, பெண் குழந்தைகள் கூட்டிப் பெருக்குவதைக் காணக் கண்கள் கோடி வேண்டும். நூலாசிரியர் வெ.இறையன்பு ஆண், பெண் குழந்தைகளின் இயல்பைக் குறிப்பதைப் போன்று ஆண், பெண் குரங்குக் குட்டிகளுக்குச் செய்யப்பட்ட சோதனையையும் குறிப்பிடுகின்றார் (பக். 112-114). நூலாசிரியரின் நுட்பமான நோக்கு நன்கு வெளிப்படுகின்றது.

இன்றைய வாழ்க்கைச் சூழலில் கல்வி ஒன்றையே முதன்மையாகக் கருதிப் பெற்றோர்களும் கல்வி நிறுவனங்களும் குழந்தைகளின் உடல் நலத்தைக் கெடுத்து விடுவதையும் நூலாசிரியர் பதிவு செய்துள்ளார். (பக். 219-222).

அழித்தொழிப்பு

இடையன் கெடுத்தது பாதி; மடையன் கெடுத்தது பாதி என்றொரு சொலவச் சொல் இருக்கிறது. இடையன் என்பதற்கு இடையில் வந்து ஆண்ட அந்நியர்களைச் சொல்லலாம். மடையன் என்பது யாரைக் குறிக்கும்? நூலாசிரியர் கூற்று வழியே உய்த்துணர்ந்து கொள்வோம்.

இந்த உலகத்தில் பூச்சிகள் இல்லாத நிலையை நினைத்துப் பார்க்க முடியாது. இன்று நாம் பயன்படுத்துகிற காய்கறிகளும் பழங்களும் பெரும்பாலும் அயல் மகரந்தச் சேர்க்கையால் உருவாகின்றன. தேனீக்கள் இப்போது மனிதர்கள் பயன்படுத்தும் பூச்சிக் கொல்லி மருந்துகளால் அழிந்து வருகின்றன. அதிக அளவிற்கு வனங்களும் விவசாய நிலங்களும் அழிக்கப்படுவதால், பயனுள்ள பூச்சிகளாகிய தேனீ, குளவி போன்றவை நாசமடைகின்றன. இப்படியே போனால் எதிர் காலத் தலைமுறைக்கு இரட்டைக் கிளவியும் தெரியாது; கொட்டும் குளவியும் தெரியாது. (பக். 33-34)

நூலாசிரியர் சுருக்கமாகச் சொல்லி விட்டார். இதற்குள் பொதிந்து கிடக்கும் கருத்துக்களைச் சொன்னால் சொல்லி மாளாது. எழுதினால் எழுதி மாளாது. சிவனே என்று சாகுபடி செய்து கொண் டிருந்த விவசாயப் பெருங்குடி மக்களிடம் பசுமைப் புரட்சியைக் கொண்டுவந்து அது நிலத்தையும் இயற்கையையும் சீரழித்து விட்டது என்பதை விடச் சாகடித்து விட்டது. உடல் உழைப்பு, நடைப்பயிற்சி இல்லாமல் வரும் நோய்கள் ஒருபக்கம் இருந்தாலும் இரசாயன உரம், பூச்சிக் கொல்லி, களைக் கொல்லிப் பயன்பாட்டால் விளைந்தவற்றை உண்பதாலேயே குணப்படுத்த முடியாத பல நோய்கள் ஊனுடம்பாகிய ஆலயத் துக்குள் குடியிருக்கின்றன.

இவற்றை நேரடியாகக் குடித்தாலும் காதில் ஊற்றிக் கொண்டாலும் உடனே ஆளைக் கொல்லும். உணவுப் பொருள்கள் வழியாகவும் காற்றின் வழியாகவும் உடம்புக்குள் சென்று சர்க்கரை, மாரடைப்பு, புற்றுநோய், மூட்டு வலி, சிறுநீரகப் பாதிப்பு என இன்னும் பல நோய்களை உருவாக்கிக் கொஞ்சம் கொஞ்சமாக ஆளைக் கொல்லும். குடும்பங்கள் - குறிப்பாக விவசாயக் குடும்பங்கள் சாகுபடி செய்து அழிந்தமை போல மருத்துவச் செலவாலேயே பல குடும்பங்கள் ஓட்டாண்டி ஆகிவிட்டன.

மூளை வளர்ச்சியால் அறிவு வளர்ந்தது. அறிவு வளர்ச்சியால் அறிவியல் வளர்ந்தது. அது படுத்தும் பாட்டில் எல்லாமே தலைகீழாக மாறுகின்றன. ஓசோன் படலத்திலேயே ஓட்டை போடும் அளவிற்கு மூளை வளர்ச்சி; சுற்றுச் சூழல் உலக அளவில் சீர்கெட்டுள்ளது. எப்போதாவது வெள்ளம்; ஆனால் எப்போதுமே வறட்சி; அதனால் தண்ணீர்த் தட்டுப்பாடு.

தாவரங்கள், உயிரினங்கள் எல்லாம் அழிவின் விளிம்பில் இருக்கின்றன. போதாக் குறைக்கு நூலாசிரியர் குறிப்பிடுவதைப் போலப் பூச்சிக் கொல்லி மருந்துகளால் மண்புழு, கறையான், எறும்பு, வண்டு, தட்டான் போன்ற சிற்றினங்களும் பறவைகளும் காட்டு விலங்குகளும் அழிந்து விட்டன.

இவற்றை எல்லாம் விட நம் முன்னோர்கள் - குறிப்பாகப் புலவர்கள் மலை போல நம்பிப் பாடிய கருத்துகள் எல்லாம் இப்போது மலைகள் பாளம் பாளமாகவும் சுக்கு நூறாகவும் சிதைவது போலச் சிதைந்து விட்டன. சொல்வதற்கு என்ன வெட்கம்; புலவர் பெருமக்கள் கூறிய கருத்துகள் பொய்த்து விட்டன!

சாதிக்கு ஒரு நீதி கூறியோரின் கருத்துகள் கால வளர்ச்சியில் பொய்த்துத்தான் போகும்; ஆனால் தமிழ்ப் புலவர் பெருமக்கள் கூறிய கருத்துகள் அப்படிப்பட்டவை அல்ல. எறும்பு முதல் எண்ணாயிரம் கோடி உயிர்களும் வாழ்வதற்கான கருத்தைக் கூறியுள்ளார்கள்.

பூமியில் மரம், மட்டைகளுடன் அவ்வளவு செழிப்பு இருந்தால் வானமே பொய்த்தாலும் தான் பொய்யாதது காவிரி என்பதை, வான் பொய்ப்பினும் தான் பொய்யா, மலைத்தலைய கடற் காவிரி (பட். 5-6) எனக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் எவ்வளவு நம்பிக்கையோடு பாடுகின்றார்.

மழை குறைந்தது ஒரு பக்கம் இருந்தாலும் எதற்கும் கட்டுப்படாத கர்நாடகத்தாலும் மாற்றாந் தாய்ப் பிள்ளையாக நினைக்கும் மத்திய அரசு களாலும் காவிரியைக் கடக்க இனி ஓடம் தேவை யில்லை; ஒட்டகம் இருந்தால் போதும் என அவலம் பாடும் நிலைக்குக் காவிரி ஆளாகிவிட்டது.

முதல் கோணினால் முற்றிலும் கோணும் என்பது போல இளங்கோவடிகளின் கருத்தும் பொய்த்துப்போய் விட்டது. முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து... பாலை என்பதோர் படிவம் கொள்ளும்... (சிலப். 11: 64-65). அடிகளாரின் கருத்துப்படியும் பழந்தமிழக நெடுங்கால முறைப்படியும் குறிஞ்சி எனப்படும் மலையும் மலை சார்ந்த பகுதியும் முல்லையாகிய காடும் காடு சார்ந்த பகுதியும் மட்டுமே வறட்சியால் தற்காலிகமாகப் பாலை நிலமாகும். ஆனால் தற்போது வயலும் வயல் சார்ந்த மருத நிலமும் பாலை ஆகிவிட்டது. மனித மூளையின் உச்சக் கட்ட அறிவு வளர்ச்சியாகிய தொழிற்புரட்சி, பசுமைப் புரட்சி போன்றவற்றின் சாதனை தான் இவ்வகைச் சீர்கேடுகள்.

‘இவற்றை எல்லாம் செய்யாவிட்டால் வளர்ச்சி எவ்வாறு வரும்?’ என்னும் வினா எழலாம். பல்லாயிரம் கோடி உயிர்களை அழித்துச் சிலர் மட்டும் வாழ்வது வளர்ச்சி அன்று. பயன் படுத்தித் தூக்கி எறியப்படும் நெகிழி அன்று பூமி. பூமி ஒரு கற்பகத்தரு, காமதேனு, அமுதசுரபி, எண்ணெய்க்குடம், கண்ணாடிப் பாத்திரம், நாம் பயன்படுத்திய பிறகு வரும் தலைமுறைகளிடம் பத்திரமாகக் கொடுக்கவேண்டும்.

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்

வைத்தூறு போலக் கெடும்     (திரு. 435)

வள்ளுவப் பெருந்தகையின் இந்த எச்சரிக்கை தனிமனித வாழ்க்கைக்கு மட்டுமன்று. ஊர், நாடு, உலகம் என எல்லாவற்றுக்கும்தான்.

இருப்பதை விட்டுப் பறப்பதைப் பிடிக்க அலைவதால் தாய்மொழிக் கல்வி இல்லை; சுற்றுச் சூழல் சீர்கேட்டால் பெரும்பாலான உயிரினங்கள் அழிந்து கொண்டிருக்கின்றன. யானைகளும் புலிகளும் முதலைகளும் காட்டெருமைகளுமே தீனிக்கும் தண்ணீருக்கும் இந்தப்பாடு படுகின்றன. ஊருக்குள் படை எடுக்கின்றன. சிற்றுயிரினங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை.

அறிவு - நுண்ணறிவு

மூளை, நரம்பு மண்டலம் என்னும் அடிப் படையான பகுதிகளை விளக்கிப் பிறகு நூலாசிரியர் அறிவு சார்ந்த எந்தப் பகுதியையும் விட்டு வைக்க வில்லை. நம் உடலைப் பேண நாம்தான் உண்ண வேண்டும்; நாம்தான் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அறிவைப் பெருக்கிக் கொள்ள நாம்தான் படிக்க வேண்டும்; பிறர் பேசுவதைக் கேட்கவேண்டும்; கண்ணில் படுகின்றவற்றைப் பார்க்க வேண்டும்.

பணி நிமித்தமாகச் சென்ற இடங்களில் கண்டவை, நண்பர்கள் வழி அறிந்தவை, புத்தகங் களில் படித்தவை, திரைப்படம், தொலைக் காட்சியில் பார்த்தவை என அனைத்து வகையிலும் அறிந்தவை எல்லாம் நூல்முழுவதும் அரும்பாகவும் மொட்டாகவும் மலராகவும் பிஞ்சாகவும் காயாகவும் கனியாகவும் கண்ணில் படுகின்றன.

அறிவும் நுண்ணறிவும் நெருங்கிய தொடர்பு உடையவையாக இருந்தாலும் நுட்பமான வேறு பாடுடையவை என்பது பின்வருமாறு விளக்கப் பட்டுள்ளது.

அறிவு வேறு, நுண்ணறிவு வேறு. ஒன்றைப் பற்றிய செய்தியை ஒருவர் தெரிந்து வைத்திருந்தால் அது அறிவு; அதை வாழ்க்கையோடு தொடர்பு படுத்திப் பார்ப்பது நுண்ணறிவு. அதற்குப் புரிதலும் செயல்படுத்தும் தன்மையும் அவசியம். ஜே.கிருஷ்ணமூர்த்தி குறிப்பிடுவதைப் போல அறிவு கடந்த காலத்துக்கச் சொந்தமானது. நுண்ணறிவு நிகழ்காலத்துடையது (ப. 184).

மழை பெய்ய அறிகுறியாக மேகம் கருத்திருக்கும்; கார் இறங்கி இருக்கும்; மின்னலும் இடியும் வெளிப்படும். இவ்வகைச் சூழலில் மழை பெய்யப்போகிறது என்பதை எல்லோரும் அறிந்திருப் பார்கள். ஆனால் அனுபவமுள்ள தாத்தாக்களுக்கு மட்டும் விரைவில் மழை பெய்யப்போவது சில நாட்களுக்கு முன்பே தெரிந்துவிடும். உடலில் ஏற்படும் மாற்றத்தை அறிந்து நுண்ணறிவால் கூறுவார்கள். இயல்பாக உள்ள உடம்பில் வியர்த்துக் கொட்டாது; ஆனால், கசகசப்பாக இருக்கும். எல்லோருக்கும் இப்படி இருந்தாலும் எல்லோராலும் சொல்லிவிட முடியாது. இந்த நுண்ணறிவுக்குக் கூடப் பட்டறிவு ஒரு காரணமாக இருக்கலாம்.

வாய்ப்புக்கு ஏற்ப வளர்ச்சி

மூளைவழிச் சிந்திப்பதில் உயர்வு, தாழ்வு கிடையாது, சூழல்தான் வாழ்க்கையை மேலும் கீழுமாக மாற்றி விடுகிறது.

முதல் தலைமுறை அரும்பாடுபட்டு முன்னேறி யதும் அடுத்த தலைமுறைக்கு மிகச் சிறந்த கல்வியையும் பழக்க வழக்கங்களையும் கற்றுத் தருகிற சூழலை உருவாக்கி விட்டால், அந்தத் தலைமுறையைச் சார்ந்தவர்கள் நான்குகால் பாய்ச்சலில் முன்னேறுவதையும் அவர்களுடைய ஒட்டுமொத்தத் தோற்றமும் மூன்று தலை முறைக்கு முன்பு இருந்ததற்குச் சம்பந்தமே இல்லாமல் இருப்பதையும் காண முடிகிறது. (ப. 189).

நூலாசிரியர் வெ.இறையன்பு கூறுவது அப் பட்டமான உண்மை. கல்வியைப் பெருவாரியான மக்களுக்குக் காட்டாமல் ஒளித்து வைத்து அனுபவித்தவர்கள் இன்றைய சூழலைப் பார்த்து மிரண்டுபோய் இருக்கிறார்கள்.

குறிப்பாகக் கு.காமராசர் முதலமைச்சர் ஆனபிறகு பட்டிதொட்டி எங்கும் பள்ளிக்கூடங்களை நிறுவினார். பிள்ளையைப் படிக்க வைத்தால் நிலத்தில் புல் மண்டிப் போய்விடும் என்று எண்ணி யவர்கள் எல்லோரும் பிள்ளைகளைப் படிக்க வைத்தார்கள். படித்தவர்கள் பள்ளி ஆசிரியர் களாகவும் அலுவலக ஊழியர்களாகவும் ஆனார்கள். அவர்கள் பிள்ளைகள் பலர் பேராசிரியர், மருத்துவர், பொறியியலாளர், வழக்குரைஞர், மாவட்ட ஆட்சியர் எனப் பல்வேறு நிலையில் உள்ளனர். நூலாசிரியர் களின் கருத்தைப் படித்தபோது கல்வியால் ஏற்பட்டு உள்ள மாற்றங்கள் எல்லாம் நினைவுக்கு வருகின்றன.

மூளை, வாழ்வியல் தொடர்பான எந்தச் செய்தியையும் நூலாசிரியர் விட்டு வைக்கவில்லை. உணவு கொள்ளாமல் புத்தர் செய்த தியானம்

(ப. 244). வயோதிகர்களின் பிரச்சினை, அவர்களின் சாதனை (பக். 255-258), போதைப் பழக்கத்தின் விளைவு (ப. 271) என எல்லாவற்றையும் தொட்டுக் காட்டுகிறார்.

வெள்ளம், சுனாமி, கடும் வறட்சி, பஞ்சம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களும் நெருங்கிய சொந்தங்களை இழந்தவர்களும் சொத்துக்களைப் பறிகொடுத்தவர்களும் திடீரென வியாபாரம் நொடித்தவர்களும் எக்கச்சக்க எதிர்பார்ப்புக்குப் பிறகு தோல்வி யடைந்தவர்களும் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். (ப. 469)

போரால் பாதிக்கப்பட்டு அகதிகளாக அல்லற் பட்டு வாழ்வோரையும் இந்தப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம். உலக நாடுகள் மக்களின் வாழ் வாதாரத்திற்கு ஒதுக்கும் நிதியைவிட எப்போதோ வரும்- வராமலே போகும் போருக்காக, உள்நாட்டுப் பாதுகாப்பு என்று ஒதுக்கும் நிதியே அதிகமாக உள்ளது.

சித்தர்களும் யோகிகளும்

சிந்தனையில் ஞானிகளும்

புத்தரோடு ஏசுவும்

உத்தமர் காந்தியும்

எத்தனை உண்மைகளை

எழுதி எழுதி வச்சாங்க

எல்லாந்தான் படிச்சீங்க

என்ன பண்ணிக் கிழிச்சீங்க (பட். பாட. ப. 2).

பள்ளிப் படிப்பு அதிகம் இல்லாத ஆனால் புள்ளிக்கு உதவும் பட்டுக்கோட்டையாரின் பாடலடிகள் மறைந்த - வாழ்கின்ற ஒட்டுமொத்த மானுடத்தையே சவுக்கால் அடிப்பதுபோல உள்ளன.

மூளைக்குள் சுற்றுலாவின் மூலை முடுக் கெல்லாம் மானுட நேயமே மண்டிக்கிடக்கின்றது. நூலாசிரியர் வெ.இறையன்புவை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

மூளைக்குள் சுற்றுலாவை ஒரே மூச்சில் படித்தால் உன் மூளைக்குள் ஏறாது (ப.16). என்பதைக் குறிப்பாக உணர்த்திய நூலாசிரியரின் நெறிமுறைப்படி படித்தபோது மூளையின் பாகங் களை விட அதன் செயல்பாடுகள் மலைக்க வைக் கின்றன. நாடு, மொழி, இனம் என வேறுபாடு இல்லாமல் எவ்வளவு ஒற்றுமை! எவ்வளவு வேற்றுமை!

மூளையின் ஆற்றலை அறியும்போது வியப்பாக இருக்கிறது. அது செய்யும் தந்திரங்களை நினைக்கும் போது அற்பமாக எண்ணத் தோன்றுகின்றது. ஒரு சாண் வயிற்றுக்குத்தான் இந்தப்பாடு என்று கிராமத்தில் பெரியவர்கள் கூறுவார்கள்.

ஒட்டு மொத்தமாக நூலைப் பார்க்கும்போது எல்லா உயிரினங்களும் வாழ்க்கைக்கு ஆதாரமாகவே மூளையைப் பயன்படுத்துகின்றன. மனிதன் சிந்திக்க ஆரம்பித்த காலத்திலிருந்து மூளை இருவழிச் சாலையை அமைத்துக் கொடுத்துள்ளது. ஆத்திகம் - நாத்திகம்; கருத்துமுதல்வாதம் - பொருள்முதல் வாதம். அடிப்படையில் சுரண்டலும் சுரண்டலுக்கு எதிர்ப்பும் என்னும் நிலையிலேயே இயங்கி இருப்பதை அறிய முடிகின்றது.

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்

தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்        

(பாட. 1787)

ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு எவ்வளவு தீர்க்க தரிசனமானது மகாகவியின் பார்வை! அறிவியல் வழி ஆராய்ச்சி எந்த அளவு இந்தியாவில் வளர்ந்துள்ளதோ தெரியவில்லை; வல்லுநர்கள் தான் சொல்ல வேண்டும். ஆனால் அறிவியல் பற்றிய புரிதல் உள்ளது. அறிவியல், இலக்கியம் போன்ற வற்றில் நோபல் பரிசு பெறும் அளவுக்கு இந்தியர்கள் வளரவேண்டும்.

மகாகவியின் கனவுக்கு மூளைக்குள் சுற்றுலா ஒரு நல்வரவு. மருத்துவம், அறிவியல், மனவியல், பொருளியல், சமுதாயவியல், நிர்வாகவியல், தத்துவவியல் என அனைத்துத் துறைகளைச் சார்ந்தோரும் பொதுவாக அனைவரும் படிக்க வேண்டிய நூல் மூளைக்குள் சுற்றுலா.

நூலாசிரியர் வெ. இறையன்பு பசிபிக் கடல் போன்ற மூளை தொடர்பான செய்திகளைத் திரட்டத் தெள்ளுப் பூச்சியைப் போல் அல்லாமல் அதி நவீன கப்பலை - மூளையைப் பயன்படுத்தி இருப்பது நூலைப் படிக்கும்போது நன்கு தெரிகின்றது. நூலாசிரியர்க்கு மீண்டும் பாராட்டுகள். நூலாசிரியரைச் சந்தித்தவர்கள் பார்த்துப் பாராட்டி இருப்பார்கள்; படித்துப் பார்த்துவிட்டுப் பாராட்ட வேண்டும்.

மூளையைப் பற்றி அறிந்துகொள்ளும் நூலாக மட்டுமல்லாமல் ஆய்வு நெறியியல் முறைப்படி அமைந்திருப்பதைக் கலைச்சொல் விளக்கத்தில் காண முடிகிறது. (பக். 559 - 595).

பொதுவுடைமை, முற்போக்கு, பகுத்தறிவு தொடர்பான நூல்களை வெளியிடும் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் ஆர்வத்தோடு இந்நூலை வெளியிட்டுள்ளது. நம் முதுகு நமக்குத் தெரியாது என்பார்கள். நூலில் மூளை, நரம்பு மண்டலம், பிற பாகங்கள் வண்ணப் படங்களில் துல்லியமாக நம் கண்ணுக்குத் தெரிகின்றன.

நியூ செஞ்சுரி புத்தக நிறுவன மேலாண்மை இயக்குநரும் பொதுமேலாளரும் நூலுக்கு எதிர்பார்த்ததைவிட அதிக வரவேற்பு இருப்பதாகக் கூறினார்கள். மகிழ்ச்சியாக இருந்தது.

உனக்கிருப்பது மூளையா? களிமண்ணா? என்கிற கேள்வி அடிக்கடி கேட்கப்படுவதுண்டு. இரண்டிற்கும் நெகிழித் தன்மையில் ஒற்றுமை யுண்டு (ப. 178). இரண்டும் நெகிழித் தன்மையில் ஒற்றுமை பெற்றிருப்பதை நூலாசிரியர் நயம்படக் கூறுகின்றார். நமக்கிருப்பது எது என்பதை அறிய எல்லோருக்கும் ஆர்வம் இருக்கும்தானே! அதனால் மூளைக்குள் சுற்றுலாவுக்கு நல்ல வரவேற்பும் இருக்கும்.

அண்மையில் மூளைக்குள் சுற்றுலா செய்த நூல்களில் ஆகச்சிறந்த நூல் மூளைக்குள் சுற்றுலா. உண்மை! வெறும் புகழ்ச்சி இல்லை.

மூளைக்குள் சுற்றுலா

வெ,இறையன்பு

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,

41-பி சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்.,

அம்பத்தூர், சென்னை - 600 098

தொலைபேசி எண் : 044-26359906

ரூ. 1500/-

Pin It