‘மச்சகந்தி’ எனும் இந்நூல் குறுங்காவியமாகும். இந்து சமயத்தின் புகழ் பெற்ற இதிகாசங்களில் ஒன்றான பாரதக் கதையில் இருந்து கதையை எடுத்து ஒரு முழுமைபெற்ற சிறுகாப்பியமாகக் கவிஞர் இந்நூலைப் படைத்துள்ளார். மானிடக் காதலின் மகத்துவத்தை இந்த ‘மச்சகந்தி’ எடுத்துரைக்கிறது.

அகவல், அறுசீர், எழுசீர் விருத்தப்பாக்களில் கவிஞர் இந்தக் காவியத்தை இயற்றியுள்ளார். 1963 ஆம் ஆண்டு கவிஞர் தொடர் காவியமாகத் தெசிணியின் கவிதை இதழில் இக்காப்பியத்தை வெளியிட்டுள்ளார். பிறகு கவிஞரின் தமிழ் முழக்கம் ஏட்டிலும் வெளியிடப்பட்டது. பின்னர் முதற் பதிப்பாக 1972 இல் கவிஞர் தேவி நிலையம் மூலம் வெளியிட்டடார்.

“வந்த பதவியை வேண்டாம் என்றவன் பரதன்!"

"வரும் உனக்குப் பதவி” என்ற போதே அதை மறுத்துத் துறவு பூண்டவன் இளங்கோ!

தந்தைக்காகத் தனது இளமையைத் துறந்து முதுமையை ஏற்றவன் யயாதியின் மகன் பூரு.

இவர்கள் வரிசையிலே கம்பீரமாக இடம் பெற்று நிற்பவன் பீஷ்மன்.

ka mu sherifஇந்த நால்வரின் வரலாற்றையும் காவியமாக ஆக்க நினைத்து அதன் முன்னோடியாக பீஷ்மனின் சூளுரை வரையுள்ள இக்குறுங்காவியத்தை இயற்றியுள்ளேன். நான் எடுத்துக்கொண்ட நால்வரையும் காவியமாக ஆக்கி அளிக்கும் ஆற்றலை இறைவன் எனக்கு அருளட்டும்.

தந்தையின் சுகத்திற்காகத் தன் சுகத்தைத் துறந்தவன் பீஷ்மன். தன் இளம் பிராயத்தில் அவன் செய்த தியாகத்தைத் தமிழில் தனிக்காவியமாக்கும் பேறு பெற்றமைக்கு மகிழ்ச்சி அடைகிறேன் என்று இக்காப்பியத்தின் தோற்றப் பின்புலத்தைக் கவிஞர் முதற்பதிப்பிற்கான ஆசிரியர் உரையில் எடுத்துரைக்கிறார்.

இந்தக் குறுங்காவியத்தின் இரண்டாம் பதிப்பு ஜுலை 1987 இல் வெளிவந்துள்ளது; தமிழ் முழக்கம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இவ் இரண்டாம் பதிப்பிற்கான ஆசிரியர் உரையில் கவிஞர், “‘கவிதை’ எனும் திங்களேட்டில் இக்குறுங்காவியத்தை எழுதுங்கால் நான் இதற்கிட்ட பெயர் “தியாகம்” என்பதாகும். நூலாக்கம் காணுங்கால் ‘வீடுமச் சூளுரை’ அல்லது ‘பீஷ்ம சபதம்’ எனப் பெயரிட விருப்புற்றேன் நூலினை வெளியிட வந்த பதிப்பகத்தார், தலைப்பு கவர்ச்சியாக இருக்கவேண்டுமெனக் கருதி, ‘மச்சகந்தி’ எனத் தலைப்பிட்டு வெளியிட்டனர்” என்று குறிப்பிடுகிறார். மேலும் அவர், “முன்பதிப்பில் வெளிவந்த பெயரை இரண்டாம் பதிப்பில் மாற்றுவது முறையன்று என்பதால் ‘மச்சகந்தி’ எனும் தலைப்பே நிலைபெற்றுள்ளது. இந்தத் தலைப்பின்படி பார்த்தால் இக்காப்பியம் முழுவதிலும் மச்சகந்தி பேசாப் பாத்திரமாக உள்ளாள். இப்படி ஒரு காவியம் ஆங்கிலத்தில் இருப்பதாகக் கேள்வியுற்றுள்ளேன். ஆகவே, பேசாப் பாத்திரமாகக் கதாநாயகியை வைத்துக் காவியம் பண்ணுவது உலக இலக்கியத்திற்குப் புதுமையன்று என்றாகிறது. எனினும், தமிழ் இலக்கியத்தில் இதற்குமுன் இவ்வாறில்லை எனக் கருதுகிறேன்” எனவும் பதிவு செய்கிறார்.

சேக்கிழார் அடிப்பொடி தஞ்சாவூர் டி.என். இராமச்சந்திரன் இந்நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து 1991 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார்.

முதிய மன்னன் சந்தனு இளைய மங்கை மீது கொண்ட பொருந்தாக் காதலுக்காக மகன் செய்த ஈகத்தின் மாண்பை எடுத்துரைக்கிறது. மச்சகந்திக் காவியம். எல்லாச் சமயங்களையும் அரவணைத்துச் செல்லும் இயல்புடைய கவிஞர் தம் வாழ்நாள் முழுவதும் சமய உறவுப் பாலமாகத் திகழ்ந்தார். அதனால் எல்லாச் சமய இதிகாசங்களையும் புராணங்களையும் இலக்கியங்களையும் விருப்பு வெறுப்பின்றிப் பயின்றார். அதற்குச் சான்றாகக் கவிஞர் படைத்த ‘மச்சகந்தி’ திகழ்கிறது என்றால் அது மிகையில்லை. இந்து சமய இதிகாசமான மகாபாரதத்தில் கவிஞர் ஆழ்ந்து ஈடுபட்டதன் விளைவாகத் தோன்றியதுதான் ‘மச்சகந்தி’. தமிழ் முழக்கம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

பரதன், இளங்கோ, யயாதி, பீஷ்மன் ஆகிய நால்வரின் வரலாற்றைப் பாட நினைத்த கவிஞர் ‘மச்ச கந்தி’ எனும் ‘பீஷ்ம சபதத்தை மட்டும் பாடியது குறித்து ஓவியப் பாவலர் மு. வலவன், “தந்தை சுகத்துக்காகத் தன் சுகத்தை இழந்த பீஷ்மன் போலத் தான் ஏற்றுக் கொண்ட (அரசியல்) தலைவனுக்காக இறுதிவரைத் தன் சுகத்தை இழந்து பாடுபட்ட பாட்டாளிதான் நம் செரீபு ஐயா அவர்கள் ‘கற்றாரைக் கற்றாரே காமுறுவர்’ எனும் பழமொழிக்கு ஏற்ப தியாகியின் வரலாற்றைத் தியாகியே பாட விழைந்ததில் வியப்பென்ன?” என்று தம் நெஞ்சத்திரையில் நினைவுக்கோடுகள் எனும் நூலில் குறிப்பிடுகிறார்.

கவியரசு கண்ணதாசன் வழங்கிய முன்னுரையில், “கவிஞர் கா.மு. ஷெரீப் அவர்கள் இன்று கவிதை எழுதுகிற அனைவருக்குமே மூத்தவர். நான் எழுதத் தொடங்கிய காலத்திலேயே அவரது கவிதைத் தொகுதி வெளிவந்து விட்டது. ‘ஒளி’ என்ற தலைப்புடைய அந்தத் தொகுதியினை நான் சுவைத்திருக்கிறேன். அதன் பின்னரும் அவர்கள் ஏராளமான கவிதைகள் யாத்திருக்கின்றார்கள். இந்த ‘மச்சகந்தி’ காவியமும் அவர்களது திறமைக்கும் சிறப்புக்கும் எடுத்துக்காட்டாகும்” என்று கவிஞர் குறித்துக் கூறுவதுடன் மச்சகந்திக் காவியம் குறித்தும் அவர், “தமிழில் இதுவரை வராத ஒரு கருவினை வைத்துக் கொண்டு, இந்தக் காவியத்தை அவர்கள் பின்னியிருக்கின்றார்கள்.

இந்தக் காவியத்தில் சுவைக்கக்கூடிய பல அம்சங்கள் உண்டு. கவிஞரின் மனவளத்தால் காவியப் பாத்திரங்களும் மனவளம் பெற்றிருக்கின்றன. ஓர் இடத்தில்,

“அமைச்சர் நடந்தார் மெதுவாக

அறிவோ கிளர்ந்தது விரைவாக"

என்கிறார்.

அங்கங்களைத் தாண்டி அறிவு முந்தியோடுவதைக் கவிஞர் இப்படி வர்ணிக்கிறார். இன்னோர் இடத்தில் :

“கொள்கைக்காக உயிர்நீத்தான்

கோமான் என்ற சரித்திரத்தை

எல்லை விரிந்த உலகினுக்கே

ஈந்து சாகத் துணிந்துவிட்டேன்”

என்கிறார்.

காலங்காலங்களாக ஒரே தேசியக் கொள்கையில் ஊறியவர் கவிஞர். ஆகவே, கொள்கையை அவர் வலியுறுத்துவதில் ஆச்சரியமில்லை.

அற்புதமான கற்பனைச் சிறகுகளோடு தமிழுக்கு ஒரு அரிய காப்பியம் கிடைக்கின்றது என்று பாராட்டி மொழிகிறார்.

“இன்றுள்ள கவிஞர்களுள் முதுபெரும் புலவராக விளங்கி வருபவர் நம் கலைமாமணி ஐயா கா.மு.ஷெரீப் அவர்கள் ஆவார். அவர் எழுதியுள்ள ‘மச்சகந்தி’ எனும் குறுங்காவியத்தின் இரண்டாம் பதிப்புக்கு முன்னுரை எழுதுமாறு பணித்து என்னைப் பெருமைப்படுத்தியுள்ளார்கள்; அதற்கென உளமார்ந்த நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன். ஐயா அவர்களின் தெளிந்த புலமை, தீந்தமிழ் நடை, சிந்தனைச் செறிவு ஆகியவற்றிற்கு ஓர் எடுத்துக்காட்டே இக் குறுங்காப்பியம்” என்று குறிப்பிடும் சிலம்பொலி சு. செல்லப்பன் இந்நூல் குறித்த தம் கருத்துரையையும், பாரதத்திலுள்ள செய்திகளைக் கருப்பொருள்களாகக் கொண்டு கதைகள் பல புனையப்பட்டுள்ளன. பெரும்பாலும் கிருட்டிணன் தூது, துரெளபதி துகிலுரியப்படுதல், கீசக வதம் போன்றனவே நாடகங்களாவும் குறுங்காவியங்களாகவும் வெளிவந்துள்ளன. அவர்கள் இந்நூலின் முதற்பதிப்பின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளது போல ‘தமிழில் இதுவரை வெளிவராத ஒரு கருவினை வைத்துக்கொண்டு இக்குறுங்காப்பியத்தைக் கவிஞர்கள் பின்னியிருக்கிறார்கள்!” பாரதியார் பஞ்சாலி சபதத்தைப் பாடியுள்ளார்; நம் கவிஞரோ பீஷ்ம சபதத்தைப் பாடுகிறார். இந்நூலுக்கு மச்சகந்தி என்னும் பெயரைவிட ‘பீஷ்ம சபதம்’ அல்லது ‘வீடுமன் சூளுரை’ என்பதையே பெயராகத் தந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது” எனப் பகர்கிறார்.

‘மச்சகந்தி’ எனும் காவியத்தை மொழிபெயர்த்த சேக்கிழார் அடிப்பொடி டி.என். இராமச்சந்திரன் தம் மொழிபெயர்ப்பு நூலின் முன்னுரையில்,

“இந்நூலின் ஆசிரியர் ஜனாப் கவி கா.மு. ஷெரீப் அவர்கள் கடவுள் மற்றும் சமயப்பற்றுடைய சுயேச்சை எண்ணங்கள் கொண்ட முசுலீம் ஆகவும் விளங்குகிறார். இவர் ஒரு உண்மையான உலகக் குடிமகன். அதே நேரத்தில் வலுவான தமிழன். இக்காப்பியம் முன்கூட்டி உணர்த்துவது இவரது புகழையும் மேன்மையும் என்பேன்” என்று கவிஞரின் சர்வ சமய சமரச உணர்வைப் பாராட்டுகிறார்.

உலகத் தமிழராய்ச்சி நிறுவன இயக்குநர் அ. நா. பெருமாள் இந்நூலுக்கு வழங்கிய ஆய்வுரையில், “பாரதப் பெருங்கதை பாரத நாட்டுப் பாமரரும் நன்கு அறிந்த பழங்கதை. அதிலுள்ள ஒரு சிறு பகுதியை நறுக்கி எடுத்து நல்ல பல கருத்துக்களைப் புகுத்திக் காட்டும் கவிஞர் கா.மு. ஷெரீப் அவர்கள் தம் இலக்கியக் குழந்தையான ‘மச்சகந்தி’

வாயிலாகத் தமிழ் அன்னையின் அழகுக் கோலத்துக்கு அணியொன்று சூட்டிப் பெருமையடைகிறார் என்று சிறப்பித்துக் கூறலாம். கதையைச் சிறு துரும்பாகப் பெற்று அதற்குப் பொன் புனைவு செய்து இலக்கிய வளம் சிறந்த ஒரு காவியமாகத் தருகிறார்.

உருவில் சிறிய காவியத்தில் பெருகும் அறிவுக் கருத்துக்களைத் தேக்கி அதனை அரியதாகவும் பெரியதாகவும் ஆக்கிவிடும் கவிஞரின் ஆழ்ந்த புலமை மதிக்கத்தக்கதாக மலர்ந்துள்ளது. கவிதை உள்ளம், இலக்கியச் சிந்தனை, சமுதாய உணர்வு, தமிழ் மரபில் பற்று, கொள்கைப் பிடிப்பு, மனித நலம் நாடும் பக்குவ நிலை, நடுக்கண்டு நல்லது கூறும் நடுக்கற்ற நல்மனம் போன்ற பல்வகை இயல்புகளுடன் கவிஞர் இந்த இனிய காவியத்தை எளிமையாகவும் இனிமையாகவும் படைத்துள்ளார்.

கருத்துச் செறிவும், கனிவான மொழியும் இனிமையான நடையும் இசைவாக இணைந்து பயனுடன் மலர்ந்து மணப்பது கவிதை. இத்தகு செம்மைகளுடன் இயல்பாகக் கவிதை புனையும் ஆற்றல் மிக்க கவிஞர்களில் ஒருவராக மதிக்கப்படும் முற்றிய பாவலர் கா.மு. ஷெரீப் அவர்களின் கவிதை உள்ளம் ‘மச்சகந்தி’ வாயிலாகப் பளிச்சிடுகிறது என்று எடுத்துரைக்கிறார்.

- பேராசிரியர் உ.அலிபாவா, தலைவர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம் 

Pin It